Sunday, 30 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி

அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை
ஆசிரியர்                   : தருமி
வெளியீடு                  : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு               : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள்           :  328,  விலை ரூ 350 .

                                கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.                                நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.

                               ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.

                  கிறித்துவமத நம்பிக்கைகளை  கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு  இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.

                             இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல '  என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.

                          எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.

                          யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ்  காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

                          கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

                        இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம்  மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.

                     இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.

                     கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.

                  12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.

                  கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                 இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..

   

    

Tuesday, 25 September 2018

அண்மையில் படித்த பிடித்த கட்டுரை ...புத்தகங்களின் காட்டில் முகத்தைத் தொலைத்தேன் ....ப..திருமாவேலன்ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் ‘நான் விரும்பும் தலைவர்' என்ற கட்டுரை கேட்கப்பட்டு இருந்தது. நான் விரும்பும் தலைவராக தந்தை பெரியார் பற்றி எழுதினேன். அதன் தொடக்கம் இப்படி அமைந்திருந்தது.

"யாராலும் அப்படி வாழ முடியாது! வாழ்ந்ததாக வரலாறு இல்லை. தமிழகத்தின் நீண்ட வாழ்க்கையை உடைய தலைவர்.

வரலாற்று நிகழ்ச்சியாகவே நிரம்பியவர். வரலாறுகள் யாவும் போராட்டங்களாகவே கண்டவர். அறிவா... அது நாட்டுக்காக! உழைப்பா... அது மக்கள் முன்னேற்றத்துக்காக என்றிருந்தவர்.

கிழடு பட்டாலும் தளராத வலிய நெஞ்சு! கால் தளர்ந்தாலும் தளராத கருத்துத் தெளிவு! தாடி தான் நரைத்தது, சிந்தனை நரைத்ததில்லை. மருத்துவர்கள் கூறும் உணவுக் கட்டுப்பாடுகளே இல்லாதும் நீண்ட ஆயுள்! தளராத உடல்! தமிழகத்தின் உந்து சக்தி!

பரம்பரை அடிமைகளின் பாசமுள்ள தலைவன்! ஏழைகளின் காசில்லாத வக்கீல்!

நீதிமன்றங்கள் அவருக்கு விவாத மேடைகள்! குற்றவாளிக் கூண்டுகளோ அவருக்குக் ‘குளு குளு அறைகள்!' சிறைச்சாலைகள் அவருக்கு மருத்துவமனைகள்! மேடைகள் அவருடைய நூல் நிலையங்கள்! ஊர் சுற்றும் உழைப்பே அவருக்கு உற்சாகம்!

போராடுவதுதான் இந்த அரசரின் பொழுது போக்கு! சாதி என்பதே அவருக்குத் தையல் கிழியாத செருப்பு! தன்மானமே அவருக்குக் கைத்தடி! கடவுள் எதிர்ப்பே அவரின் கருப்புக் சட்டை! பண்பாடு அவரின் வெண் தாடி!

அவருடைய புன்சிரிப்பு எதிரிகளுக்குப் புகையும் எரிமலை! அறிவா.. அதற்குக் கூர்மையா... அதை அவரின் ஒளிமயமான கண்களில் அல்லவா காண வேண்டும்!

வீரமா... 'வெங்காயம்' என்று அவர் வெகுண்டு திட்டும்போது வெளிப்படும் நெருப்பல்லவா? இப்படி எழுதிக் கொண்டே போகலாம்! அதனால் தான் அவர் நான் விரும்பும் தலைவர்! - என்று எழுதி இருந்தேன். பதினான்கு வயதில் தந்தை பெரியார் குறித்த ஆழமான புரிதலுடன் நான் எழுதி இருக்கிறேன் என நினைத்து விடா தீர்கள். "அதனால்தான் அவர் நான் விரும்பும் தலைவர்' என்பது மட்டும்தான் எனக்குச் சொந்தமானது. மற்ற அனைத்து வரிகளுக்கும் சொந்தமானவர் பேராசிரியர் அ. அறிவொளி!

நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை, முகத்தில் தாடி, உடல் முழுக்க காவி வேட்டி என்ற உருவம் தான் அ.அறிவொளி என்றால் நினைவுக்கு வரும். பட்டிமன்றப் பேச்சாளராக உள்ளே நுழைந்து, ஆன்மிக சொற்பொழிவா ளராக மறைந்துபோன அவர், தனது தொடக்க காலத்தில் எழுதிய நூல்; 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்!''

அன்பரசி வெளியீட்டகம், வடக்குத் தெரு, பொருள்வை, சிக்கல் என்ற முகவரியில் இருந்து 1979ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் அதன் பிறகு மறுபதிப்பு கண்டதாக நான் அறியவில்லை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராக அறிவொளி அப்போது இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நிர்வாகத்துடன் அவர் நடத்திய உரிமைப் போராட்டத்தின் காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எனது தந்தையாருக்கு நல்ல நண்பர். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆண்டு விழாவில் ஆண்டுதோறும் பங்கெடுக்கும் முகங்களில் அறிவொளியும் ஒருவர். அந்த வகையில் அப்பா மூலமாக என் கைக்கு இந்தப் புத்தகம் வந்து சேர்ந்தது.

இந்தப் புத்தகத்தை நான் படித்தது எனது ஒன்பதாம் வகுப்பில். எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, திருச்சியில் இருந்து ஒரு மாணவன் புதிதாக வந்து எங்கள் இலக்குமி ஆலை மேனிலைப்பள்ளியில் சேர்ந்தான். அவன் பெயர்: கா.திருமாவளவன். 'திருமா'க்கள் பெயர் ஒற்றுமையால் ஒன்று சேர்ந்தார்கள். திருச்சி பேராசிரியர் க.நெடுஞ்செழியன் - சக்குபாய் ஆகியோரின் நெருங்கிய உறவினர் இவர். திராவிடர் கழகக் குடும்பம். திருச்சி அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கும் நெருக்கமான வர்கள். திருமாவளவன் மூலமாக மூன்று புத்தகங்களைப் பெற்றேன். கடவுளர் கதைகள், சங்கராச்சாரி யார்?, இன்னொரு புத்தகம். இம்மூன்றும் தான் என்னுள் ஒரு விதமான திராவிட ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி யவை. அதுவும் 'கடவுளர் கதைகள்' என்ற நூல் புராண ஆபாசங்களை அம்பலப் படுத்தியது. சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பற்றாளர், தமிழுக்கு விரோதி என்பது மட்டுமே அன்றைய எனது எதிர்ப்பின் புரிதல். இந்த அடித்தளத்தில் இருந்த எனக்கு, அறிவொளியின், 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும்' நூல் ஈர்ப்பானதாக இருந்தது. ஈர்ப்பின் முதல் காரணம், தலைப்பு.அந்த வயதில் அதில் இருந்த பல விமர்சனங்கள், சொற்கள், தர்க்கங்கள் புரியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் அழகான மொழிநடை, வர்ணனை ஆகியவை பிடித்திருந்தன. பெரியாரை விமர்சிக்கிறது இந்நூல், ஆனால் அழகாக. பெரியாரை சில இடங்களில் நிராகரிக்கிறது இந்நூல், ஆனால் மரியாதையாக. அதனால் தான் இது பிடித்தமானதாக இருந்தது.

பெரியாரை விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக அன்று நான் நினைத்திருந்த காலம் அது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட வராக நான் இன்று நினைக்கவில்லை. பெரியார் மட்டுமல்ல, எவரும் விமர் சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அப்படிக் கொண்டுபோய் இருத்தி விடுவது அவர்களுக்கே பெருமை சேர்க்காது. இன்னும் சொன்னால் அந்த மகுடத்தை அவர்களே விரும்பமாட்டார்கள்.

மார்க்ஸ், ‘அயோத்திதாசர், ம.வெ.சிங்கார வேலர், அம்பேத்கர், பெரியார் என்ற சிந்தனையாளர்கள் நேரடியாய் எழுதியதை, பேசியதைவிட மற்றவர்களுக்கு மறுப்பாய், எதிர்வினையாய் எழுதியது, பேசியது தான் அதிகம். அந்த வகையில் இந்த நூல் அன்று (1980களில்) பிடிக்காமல் இருந்தது. பின்னர் (2000ஆம் ஆண்டுகளில்) பிடித்தது. எது பிடித்தது, எது பிடிக்காமல் போகிறது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபாடு இருக்கும். பெரியாரின் செயல்பாடுகளுக்கு மனோ தத்துவ இயல் அடிப்படையிலும், ராசி அடிப்படையிலும் செய்யப்பட்ட விமர்சனங் களை மட்டும் புறக்கணித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

பெரியார் சராசரி மனிதர் அல்ல. சராசரி தலைவரும் அல்ல. சராசரி தத்துவவாதியும் அல்ல. அதை அறிவொளி ஒப்புக் கொள்ளக் கூடியவராக இருந்துள்ளார். அதனால்தான் பெரியாரைப் பார்த்துப் பிரமித்துப் போய் நிற்கிறார். "பெரியார் சுயநலவாதியாகவோ, சூழ்ச்சி வஞ்சகம் உடையவராகவோ இளமை முதல் இருந்ததற்கான சாட்சி யங்கள் எங்குமே கிடைக்கவில்லை. இத னால் அவரிடம் பகைவரையும் மதிக்கும் பண்பாடு மிகுதியாக இருந்தது.

மேடையும் எழுது கோலும் அவருடைய உண்மையான இதயத்தைப் படம் பிடித்து விடவில்லை. அவரின் உண்மையான இதயம் அப்பழுக்கற்ற பண்பானது. (பக்.19)

உண்மைதான்! பெரியாரின் பேச்சுக்களின் மூலமாக அவர் எழுதிய கட்டுரைகளின் மூலமாக மட்டுமே பெரியாரை இனம் கண்டுவிட முடியாது. பேச்சும், எழுத்தும் கட்டுப்படுத்தப்பட்ட கருத்து வடிவங்களே. செயலும், நடத்தையுமே பரிபூரணமானது. வரிவானது. அத்தகைய செயல்கள், நடத் தைகள் கொண்ட பெரியாரின் பரிபூரண வாழ்க்கை வரலாறு இன்னமும் எழுதப்பட வில்லை . தானே எழுதிய சுயசரிதையில் சில நிகழ்வுகளைப் பெரியார் குறிப்பிடுவார். அதேபோல் ஏன் காங்கிரசை விட்டு வெளியேறினேன் என்பதை விளக்குவார், தன்னை நோக்கி அழைத்தது யார் என்று விவரிப்பார், 'மாட்டுக் கொட்டகையில் நடந்த மகத்தான விருந்து' என்றொரு கட்டுரை, தனது தாயாரைப்பற்றி எழுதியது, மனைவி நாகம்மாள் பற்றி எழுதியது - இது போன்ற தரவுகள் மூலமாகத்தான் பெரியாரின் உண்மையான இதயத்தை உணர முடியும். இது புரியாமல் எழுத்தில், பேச்சில் சில சொற்களை முன்னும் பின்னும் வெட்டி எடுத்துக் கொண்டு கட்டுரையாக்கும் விமர்சனப் புலிகள் மலிந்து போன இந்தக் காலத்தில் அறிவொளி வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.

தேர்தல் அரசியலில் இருந்து பெரியார் விலகி இருந்ததைத் தான் அவர் செய்த பெரும் தவறு என்கிறார் அறிவொளி. 29 பதவிகளை வகித்தவர் பெரியார். காந்தியாரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 29 பதவிகளையும் தூக்கி எறிந்தவர். இரண்டு முறை கவர்னர்கள் சந்தித்து, சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றபோது பெரியார் மறுத்தார்.

பதவிக்குப் போனவன் மனதில் பட்டதை பேச முடி யாது, வாக்கு, வாங்குவதற்காக மக்களுக்கு பிடித்ததைத் தான் பேச வேண்டும் என்ற பெரியார், பதவிக்குப் போனவர்கள் யோக்கியர்களாக இருக்க முடியாது என்றும் சொன்னார். உச்சகட்டமாக, 'நானோ, அம்பேத்கரோ கூட பதவிக்குப் போய் விட்டால் யோக்கியமாக இருக்க முடியாது' என்றார். அரசியலை பணநாயகம் என்றும் விமர்சித்தார். ஆனால் பெரியாரைப் போன்றவர்கள் அரசியலை விட்டு ஒதுங் கியதால் தான் அரசியல் பணமயமானது என்று திருப்பிப் போடுகிறார் அறிவாளி.

''கை சுத்தமானவர்களே ஆளமுடியு மென்ற காலத்தில் இவர் ஆட்சி செய்திருந்தால் அரசியல் சாக்கடைகள் சந்தனச் சந்தையாகியிருக்கக் கூடுமே?

இவரைப் போல் தியாகமே தலை மைக்குத் தேவையானதென்றால் முட்டாள் களும் படிப்பை விலைபேசும் பச்சோந்தி களும் போட்டியிடாமல் அரசியலை விட்டே விலகியிருப்பார்களே! நம்மி டையே ஒரு லெனின் பிறந்திருந்தார். அவர் ஆட்சியைப் பிடிக்கத் தவறியதால் 'பெரியார்' என்ற பெயரோடு முடிந்து போய்விட்டார்..." (பக். 73-76) என்கிறார் அறிவொளி. தேசிய விடுதலை அரசியலில் இருந்த காங்கிரஸ் தியாகிகளுக்கு இரட்டை யாட்சி முறை ஆட்சி அதிகாரத்தை சுவைக்க ஏற்பட்ட தவிப்பும் சமூக விடுதலை அரசியலில் இருந்த நீதிக் கட்சிப் பெரிய மனிதர்களில் சிலர் பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த சுயநலமும்தான் தேர்தல் அரசியலை பெரியார் புறக் கணிக்கக் காரணம். அதிகாரத்தில் இருந்து செய்ய முடிந்ததைவிட வெளியில் இருந்து மிரட்டிச் செய்ய வைப்பதே சரியானது, போதுமானது என்று பெரியார் நினைத்தி ருக்கிறார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காக இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அவரது இறுதிச் சாதனைச் சட்டமாக ஆக்கப் பட்டதும் தேர்தலில் நிற்காமலேயே பதவியில் உட்காராமலேயே பெரியார் நிகழ்த்திய சாதனைகள்.

பெரியாரின் போராட்டங்களைப் 1979 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் இது. நான் படித்தது 1984-85ஆம் ஆண்டு களில் இன்றளவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக  பார்த்துத் தான் அறிவொளி அதிகம் மலைத்திருப்பார்.

அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.

காற்றினால் சுழற்றப்படும் காற்றாடி, காற்றையே எதிர்க்கிறது. எதிர்ப்பதனா லேயே மதிக்கப்படுகிறது.

அப்படித்தான் ஒரு போராட்டத்தாலே தலைவரான இவர் பல போராட்டங் களைச் செய்தார். அது தான் அவரின் இயல்பாகி விட்டது. (பக். 115) என்பார். அறிவொளி. பெரியாரை அன்று பலரும் எதிர்க்கவும், மதிக்கவும், இன்று பலரும் எதிர்க்கவும் மதிக்கவும் அவரது போர்க் குணமே காரணம். அதனால்தான் இறுதியில் அறிவொளி...

"அவரை யார் வேண்டுமானாலும் குறை கூறலாம்!

அவரை யார் வேண்டுமானாலும் திறனாய்வு செய்யலாம்.

ஆனால் அவரை அவமதிப்பதை மட்டும் யாரும் ஒப்புக் கொள்ள முடியாது. ஏன்! அவரை மதிக்காமல் இருப்பது கூடத் தவறல்லவா? (பக். 124)இருக்கக் காரணம் கருத்தில் தெளிவும் அதன் மொழிநடையும். கொஞ்சம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நமக்கு எதிரான கருத்துகளையும், 'சரிதானே' என்று மயக்கிவிடும் சொற்கோவைகள்.

கடந்த 30 ஆண்டு காலத்தில் பெரியார் குறித்த எத்தனையோ புத்தகங்களைப் வாசித்தாலும், பெரியாரின் எழுத்து களை புத்தகங்களாக படித்திருந்தாலும், குடி அரசு மற்றும் விடுதலை இதழ்களில் அவரது படைப்புகளை நேரடியாக வாசித்திருந் தாலும் முதலில் படித்த 'பெரியார் செய்ததும் செய்யத் தவறியதும் 'நூல் இன்று வரை நினைவில் இருந்து நிழலாடுவதாக இருக்கிறது. இப்படித் தரப்பட்ட தன்மை ஒரு சில நூல்களுக்குத் தான் இருக்கும்'.

இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதை யாருக்குப் படைத்துள்ளார் தெரியுமா? இராஜாஜிக்கு!

பெரியார் இராஜாஜியை 'அன்பான எதிரி' என்பார். அறிவொளியும் அப்படித் தான்!

- நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது’ செப். 2018, ப. 24-27)
நன்றி: விடுதலை ஞாயிறு மலர் 22.09.2018

Sunday, 23 September 2018

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம்..சுப்ரபாரதி மணியன்

அண்மையில் படித்த புத்தகம் : வேறிடம் (குறு நாவல்கள் தொகுப்பு )
நூலின் ஆசிரியர்             : சுப்ரபாரதி மணியன்
வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98.
முதல் பதிப்பு                : டிசம்பர் 2011, 208 பக்கங்கள், விலை ரூ 125 /-
மதுரை மாவட்ட மைய நூலக எண் : 215669                           
                            தமிழில் சிறுகதைத் தொகுப்புகள் உண்டு,நாவல் உண்டு ஆனால் இந்த நூல் குறு நாவல்கள் தொகுப்பு என இருந்தது. ஒவ்வொரு குறு நாவலும் சுமார் 35, 40 பக்கங்களில் ஏழு தலைப்புகளில் இருக்கும் நூல். கடைசிக் கதையான மரபு சிறுகதை வடிவில்தான் உள்ளது. ஒவ்வொரு குறு நாவலும் வெவ்வேறு களங்களை, தளங்களை தன்னகத்தே கொண்டு தனித்தன்மையாக விளங்குகின்ற தொகுப்பாக இந்த நூல் இருக்கின்றது.
.
                           தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் தான் நம்முடைய கட்சி வாக்குகள் பெற முடியும், செல்வாக்கு பெறமுடியும் என்று கருதி , சில தறுதலைகள் தலைவர்கள் என்னும் பெயரில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், முதல் கதையான 'நகரம்'90 ' தனித்துவம் பெறுகின்றது. எளிய மனிதர்களின் வாழ்வில் மதக்கலவரம் எவ்வளவு துயரங்களைக் கொண்டுவரும் என்பதனைத் தனது அனுபவத்தின் மூலமாகவே உணர்ந்த காரணத்தால் துயரம் தோய்ந்த எழுத்துகளால் இந்தக் கதையை எழுதியுள்ளார் போலும்.ஓய்வு பெற்ற வாழ்க்கை வாழும் மல்லேஸ், அவளின் மகள் சாந்தா,அவரின் மகன் பிரகாஷ்,அவரின் மனைவி சரஸ்வதி என செகந்தராபாத்தில் வாழும் ஒரு நடுத்தரக் குடும்பத்தை நமது கண் முன்னால் கொண்டுவரும் கதையாசிரியர் அடுத்தடுத்து பழைய நகரத்திலும் புதிய நகரத்திலும் மதக் கலவரம் பரவும் விதத்தை விவரிக்கின்றார். இரண்டு மதத்தவரும் கொன்று குவித்த மனிதர்கள். எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் தாங்கள் பிறந்த மதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்ட மனிதர்கள் என அவர் விவரிக்கும் விதம் கொடுமையாக இருக்கின்றது.

" கும்பலா வர்றாங்களாம்வீட்டுக்குள்ள புகுந்து கொழந்தைக,பெரியவங்க வித்யாசம் பாக்காமே குத்துறாங்களாம்.ஒரு குத்துன்னு இல்லை, சாகுறவரைக்கும் ..பேப்பர்ல போடறான் பாருங்க,கோரம் "
ரத்தத்தில் மிதக்கும் பிணங்கள்.மொத்தமாய் பிணக்குவியலாய் வீடுகளில் கிடந்தவர்கள்.தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகள், வீடுகள்..யாரின் வேலை? எந்த மிருகம் தன் விசுபரூபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறது ? " பக்கம் 9.....கடைசியில் மல்லேஸ் வீட்டிலும் கத்திக்குத்து விழுகின்றது. "சரஸ்வதிக்கு வயிற்றில் குத்து. பிரகாஷ்க்கு தலையில் வெட்டு .மல்லேஸ்ஸேன் வலது கை சதை தொங்கிக்கொண்டிருந்தது. சாந்தாவுக்குப் பின்புறத்தில் குத்து,குப்புற ரத்தத்தில் இருந்தாள். அஜ்மத் அலி அசைவற்றிருந்தான் " என அனைவருக்கும் நிகழ்ந்த கொடுமைகளை விவரிக்கும் கதை ஆசிரியர், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கலவரம் அடங்கியதைக் குறிப்பிடுகின்றார். மருத்துவமனையில் படுத்திருக்கும் மல்லேஸ் உள்ளிட்ட நோயாளிகளைப் பார்க்க புது முதலமைச்சர் வருகின்றார். " இத்தனை பலி எதுக்குடா? உனக்கு நாற்காலி வேணுமுன்னுதானா? ? " உரத்துக்கேட்க வேண்டும் என நினைத்தார் மல்லேஸ்(பக்கம் 38 ) ......நிகழ்காலத்தில் சமூகப் பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கதை இது. மத வெறி அமைப்புகளை, எந்த மதமாக இருந்தாலும் ஊக்குவிப்பது என்பது நல்ல பாம்பை வீட்டிற்குள் வரவைப்பது போன்றது என்பதனை இக்கதையை வாசிப்பவர்கள் உணரலாம்.                     சாகப்போகும் சீனிவாசன், தன் நிலையிலிருந்து மாறி சாகப்போகும் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றும் நிகழ்வைச்சொல்லும் குறு நாவல் 'வாழ்வின் தீர்வு'. எளிமையான மனிதர்கள், ' சீனிவாசா...சீனிவாசா .." " கடவுளைக் கூப்பிடுகிறாயா ..." இல்லை, அவன் செத்தே பல நூற்றாண்டுகள் ஆகின்றன. என் பெயர்தான் சீனிவாசன்.என பெயரை நானே சொல்லிக்கொள்கிறேன்.இதில்தான் எத்தனை சந்தோஷம் " (பக்கம் 45) ....நிறைய உரையாடல்கள் தனக்குள்ளும் சுற்றி இருப்பவர்களுடனும் சீனிவாசன் நிகழ்த்துகின்றான். அதில் கேலி,கிண்டல்,தத்துவம், ஞானம் என அனைத்தும் கலந்ததாக இருக்கின்றது. 

                   "இருள் இசை" என்னும் தலைப்பே இருண்மையைக் குறிப்பிடுவது போல கதையும் எதிர் விளைவைச்சொல்லும் கதைதான். புல்லாங்குழல் வாசிப்பையும், பாடல் பாடுவதையும் தொழிலாகக்கொண்ட ஜெகன் , தான் பிறந்த ஊரில் தனக்கென யாரும் இல்லாத நிலையில் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போவதும் அங்கு பழைய நினைவுகளையும் இன்றைய எதார்த்தையும் இணைத்து பார்ப்பதையும் கதையாக ஆக்கியிருக்கின்றர் சுப்ரபாரதி மணியன்.கால் நூற்றாண்டாக சொந்த ஊருக்குப் போகாமல் இருப்பது என்பதே தனிமைப்பட்டு போவதுதான்.கிராமத்தில் நிலவும் சாதி, அதன் அடுக்குமுறை, அதில் தன்னை சாதிப்படிக்கட்டில் ஒரு இடத்தில் நிறுத்திப் பார்க்கும் உடன் படித்தவர்கள் என விவரிக்கின்றார். வித்தியாசமான கற்பனையும் எதார்த்தமும் கலந்து படைக்கப்பட்ட குறு நாவல் 'இருள் இசை'.

                   பண்ணையாரின் ஆசை நாயகி என்று பெயர் எடுத்த பெண்ணைப் பற்றியும் அவளின் வாழ்க்கை பற்றியும் கடைசியில் பஞ்சம் வந்தபோது பண்ணையார் அனுப்பி வைத்த நெல் மூட்டையை அவிழ்த்துக்கூடப்பார்க்காமல், பண்ணையாரின் மனைவியால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணைப் பற்றிய கதை 'கவுண்டர் கிளப்' .

                  சிக்கல்களாக இருக்கும் வாழ்க்கை, சின்னச்சின்ன விசயங்களில் கூட ஏற்படும் மனத்தாங்கல்களை ,கோபத்தைக் கூட வெளியே காட்டிக்கொள்ள இயலாமல், கோபத்தை விழுங்கி வாழும் வாழ்க்கையில் தீர்வாக குடிப்பதும் ,புகை பிடிப்பதும் ஆகிவிடுமா என்னும் கேள்விக்கு விடையாக விவரிக்கும் குறு நாவலாக ,இந்த நூலின் தலைப்பான 'வேறிடம் ' என்னும் அமைந்திருக்கின்றது.

                  அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களாக வளரும் அடியாட்கள், அவர்களின் அடிதடிகள், அதில் ஒரு ஓவியக்காரனின் மனதில் பதிந்த நிகழ்வு, அந்த நிகழ்வினை வரைந்த ஓவியக்காரன், அதனால் ஏற்படும் இன்னல்கள் என விவரிக்கும் கதை 'வர்ணங்களில் ' என்னும் கதை.

                  கலவரம், கலவரத்திற்கு காவலாக வரும் ஒரு போலிஸ்காரனிடம் அநியாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சுகந்தி, அவளுக்கு துணையாக நியாயம் கேட்க துணை நிற்கும் அவளின் கணவன் என விவரிக்கும் கதை 'இன்னொரு நாளை '.

                   "முன்பெல்லாம் நூலுக்கு பற்றாக்குறை இல்லாமல் கைத்தறி துணிகளுக்கு கிராக்கியும் இருந்த போது இப்படி அந்தத் தெருவில் நடந்து போகிறபோது  தெருமுழுதும் பாடுகிற மண் புழுதியும் ,தூசியும், கற்களும் மொத்தமாய் தெருவும் சடக் சடக் என்கிற நெய்கிற தறிகளின் சப்தத்தை எதிரொலிக்கும்.ஆனால் அந்தச்சத்தம் நின்று போயிருந்தது முழுவதுமாய் " என நெசவையும் , நெய்யும் மனிதர்களைப் பற்றியும் விவரிக்கும் கதை 'மரபு '.இந்தக் கால்தா, இந்தக் கைதா என்னும் குரலினைக் கேட்கும் நடேசு அழுவதை நூலாசிரியர் விவரிப்பதை வாசிக்கும்போது " கை வீசம்மா, கை வீசு, மிட்டாய் வாங்கலாம் கை வீசு " எனப் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அழுதுகொண்டே பாடுவதைக் கேட்பது போல இருந்தது.

                மொத்தத்தில் இந்தத் தொகுதியில் உள்ள கதைகள், உற்சாகமூட்டும் கதைகள் இல்லை, ஆனால் உண்மையைச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன. அலங்கார வார்த்தைகள் இல்லை, ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மனிதர்களைப் பற்றிய விவரிப்புகள் உள்ளன. பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் துணைக்கோட்டப்பொறியாளராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றிருக்கும் சுப்ரமாரதி மணியன் இதுவரை 7  நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு பயண அனுபவக்கட்டுரைகள் என 35 புத்தகங்களை எழுதியிருக்கின்றார் என்பது பாரட்டிற்குரியது.

             நூலின் ஆரம்பித்தில் உல்ள 'சுப்ரபாரதி மணியன் : சில விமர்சனக்குறிப்புகள் " என்னும் பகுதி, பல்வேறு இதழ்கள், எழுத்தாளர்கள் பார்வையில் சுப்ரமணிய பாரதி- எனும் எழுத்தாளரைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. மிக அருமையான குறிப்புகள் இவை. முதன் முதலில் சுப்ரமணிய பாரதி என்னும் எழுத்தாளரை வாசிப்பவருக்கு அவரைப் பற்றிய ஒரு புரிதலை இந்தப் பகுதி தரும்.

           பதிப்பகத்தார் தங்கள் பதிப்புரையில் " கதைகளில் வரும் ஒவ்வொரு வரியிலும் மனித உணர்வுகளை உயிரோட்டமாகப் பின்னிக் காட்டுகிறார் நூலாசிரியர்.இவை போன்ற கதைகள் மனித இதய வாசலைத் திறந்து காட்டி ,மனித நேயம் என்கிற வாசனையை வீசச்செய்யும் என்று நம்பலாம். மனித வாழ்க்கையின் கூர்மையை சுய நலக்காரர்கள் மழுங்கடித்துக்கொண்டிருந்தாலும் எழுத்தாளர்கள் தங்கள் பேனா முனையால் கூர் தீட்டவே முனைத்து நிற்கிறார்கள் " என்று குறிப்பிடுகின்றார்கள்.உண்மைதான். சில கதைகளில் விவிரிப்பு கொஞ்சம் கூடுதலாகவே  இருந்தாலும், சுப்ரபாரதி மணியன் தன்னுடைய பேனா முனையால் மனித நேயத்தை கூர் தீட்டவே இக்கதைகளை எழுதியிருக்கின்றார் எனலாம். 

               

Sunday, 16 September 2018

எங்க ஆத்தக் காணோம்.......

எங்க ஆத்தக்  காணோம்.......
                வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தன்னுடைய கிணற்றைக் காணவில்லை,கண்டு பிடித்துக்கொடுங்கள்  என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நகைச்சுவை புகழ்பெற்றது. அதனைப் போல பார்ப்பனர்கள் தங்களுடைய ரிக் வேதத்தில் சொல்லபட்டிருக்கும் 'சரஸ்வதி ' ஆற்றைக் காணவில்லை என்று ரொம்ப காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிலையத்தில சொல்லிட்டாக,ஐரோப்பாவில் இருக்கிற அறிவியல் அறிஞர் எல்லாம் சொல்லிட்டாக,இப்படி ஒரு நதி இந்தியாவிலே இருந்துச்சு,ஓடுச்சுன்னு சொல்லிட்டாக, ஆனா அந்த 'சரஸ்வதி ' ஆற்றைக் காணலையே, அந்த 'சரஸ்வதி ஆற்றைக்காணலியேன்னு சொல்லிப் பார்ப்பனர்கள் புலம்பியது மட்டும் இல்லாமல், 2014-ல் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் 'நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சுட்டோம், நாங்க சரஸ்வதி நதியைக் கண்டுபிடிச்சிட்டோம்'ன்னு சொன்னாங்க. அந்த சரஸ்வதியைக் காணாம்ன்னு தேடியதைப்பற்றி ஒரு 20 நிமிடம் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று  நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இணையதளத்தில் வந்திருக்கிறது.(21.07.2018) - தமிழ் இந்து பத்திரிக்கையில் ந. வினோத் குமார் என்பவர் எழுதியிருந்த 'எங்கே போனாள் சரஸ்வதி' என்னும் கட்டுரையைப் படித்தவுடன் அந்த இணைய தளத்திற்குச்சென்று பார்த்தேன். 

               நம் விடுதலை இணையதளமான viduthalai.in என்னும் இணையதளத்திற்குள் சென்றாலே, periyar.tv என்னும் இணையதளமும் வரும். அதில் உள்ளே சென்றால் நமது கழக நிகழ்வுகளை, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையில் ஆற்றிய உரையின் வீடியோவைப் பார்க்கலாம். அப்படி newyork times என்னும் இணையதளத்திற்குள் சென்றால் op docs என்னும் இணையதளம் வருகின்றது.அந்த இணையதளத்திற்குள் சென்றால் நூற்றக்கணக்கான ஆவணப்படங்கள் இருக்கின்றன.உலகம் முழுவதும் இருப்பவர்கள் அனுப்பக்கூடிய ஆவணப்படங்களைப் பார்த்து , அதில் வெளியிடத்தக்கது என்று நினைக்கும் ஆவணப்படங்களை அப்பத்திரிக்கையின் இணையதள இணைப்பில் வெளியிடுகின்றார்கள்.அதற்கான விண்ணப்ப படிவம் அந்த இணையதளத்திலேயே இருக்கின்றது. அந்த இணைப்பின் நோக்கமே ஆவணப்படத்தின் மூலமாக நேர்மறையான விவாதத்தை ஆரம்பித்து வைப்பது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 'Searching for Saraswati 'என்னும் ஆவணப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். சிர்லி ஆபிரகாம்,அமித் மாதேசியா ஆகியோர் இந்தக் ஆவணப்படத்தை இயக்கியுள்ளனர்.

             ஹரியானாவில் 2015-ஆம் ஆண்டு 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்ததாக அந்த மாநிலத்தின் அரசாங்கமே அறிவித்தது நமக்கு நினைவிருக்கும். அந்த ஆற்றுக்காக உடனடியாக 50 கோடி ஒதுக்கினார்கள். கண்டு பிடித்த நதி இப்போது ஓடுகின்றதா? எனும் கேள்வி கேட்பார் இன்று யாருமில்லை. எதற்காக அந்த 'சரஸ்வதி ' நதியைக் கண்டுபிடித்தார்கள்,அவர்களின் நோக்கமென்ன, மூட நம்பிக்கையை ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விளக்குவதுதான் இந்த 'சரஸ்வதியைத் தேடி ' என்னும் ஆவணப்படம். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன் இத்தனை நாட்கள் குடிக்காத பிள்ளையார், இப்போ எப்படி திடீரென்று பால் குடிக்கிறார் என்னும் கேள்வி கேட்கும் ஞானமின்றி, பிள்ளையாருக்கு பால் கொடுக்க பக்தர்கள் பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலத்தில் , சென்னையில் தமுக்கு அடித்து பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு இலட்சம் பரிசு என்று வீதிக்கு வந்து நின்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரின் தொண்டர்களாகிய என்னைப்போன்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இப்படம் பார்த்த அனுபவம் இருந்தது. 

            பழங்கால சரஸ்வதியைத் தேடும் பயணம் முடிவில் ஹரியானாவில் முடிந்தது என்றுதான் இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.இது ஒரு அதிசயம்(miracle). நீங்கள் படித்த சரஸ்வதி நதி உங்கள் கண்முன்னால் இருக்கின்றது.பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்த நதித்தேடலை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. ஹரியானா மாநிலம் இதற்கென 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது.முகாவலி என்னும் கிராமத்தில் சரஸ்வதி நதியைத் தோண்டும் பணி ஆரம்பித்திருக்கின்றது. எனும் டைட்டிலோடு ஆரம்பிக்கின்றது. இந்துத்துவப் பார்ப்பனர்களின் சூதுவினை அறியாத சகிராம் காசியப் என்னும் விவசாயி,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய சரஸ்வதி தன்னுடைய வயலில் தோன்றப்போவதாக நம்புகின்றார். சரஸ்வதி நதி மீண்டும் தோன்றும்வரை கிணற்றுக்குப்பக்கத்திலேயே பூசை செய்யப்போவதாக அறிவிக்கின்றார். 

           அங்கே கோபல தாஸ் என்னும் பார்ப்பன பூசாரி வருகின்றார். நான் இந்து. அதனால் சரஸ்வதி நதி தோன்றப்போகும் இடத்தை வணங்க வந்திருக்கின்றேன் என்று சொல்கின்றார்.அரசாங்கம் இங்கு சரஸ்வதி நதி ஓடப்போவதாக அறிவித்திருக்கின்றது.நம் பகுதியில் இதற்காக நாம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சொல்லும் கோபாலதாஸ் என்னும் பார்ப்பனர் அதற்கான திட்டங்களைச்சொல்கின்றார்.ஊர் மக்களைத் திரட்டுகின்றார். புனிதமான சரஸ்வதி நதி மீண்டும் தோன்றுவது நாம் செய்த பாக்கியம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அமெரிக்காவை உலகத்திற்கு தலைமையாக ஆக்குவேன் என்று சொல்கின்றார், நாம் கங்கை-யமுனை, சரஸ்வதி நதிகளின் மூலமாக இந்தியாவை உலகத்தின் தலைமையாக ஆக்குவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றார்.தோண்டப்பட்ட கிணற்றிலிருந்து பாட்டிலில் எடுக்கப்பட்ட தண்ணீரை சரஸ்வதி நதியின் தண்ணீர் என்று மக்கள் மேல் தெளிக்கின்றார்கள்.மக்கள் மண்பானைகளில் தெய்வத்தின் தண்ணீர் என்று பூக்களைச்சூட்டி வங்குகின்றார்கள். சரஸ்வதி, கங்கை, யமுனை என்று மூன்று பெண்களை வேடமிட வைத்து ஊர், ஊராக பிரச்சாரம் செய்கின்றார்கள்.பண வசூல் செய்கின்றார்கள். மக்கள் பணத்தை தட்டுகளில் வந்து கொட்டுகின்றார்கள்.சரஸ்வதி நதியின் தண்ணீர் தீராத நோயை எல்லாம் தீர்க்கிறது,இருதய நோய், தொழு நோய் எல்லாம் இந்தத் தண்ணீரைக் குடித்ததால் சரியாகி விடுகின்றது,ஒரு பெண் வந்தார், அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. இந்தத் தண்ணீரைக் கொடுத்தேன். இதய ஓட்டை சரியாகி விட்டது. மருத்துவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படிப்பட்ட மருந்து  என்று சொல்வதைக் காட்டிவிட்டு , அடுத்து அந்த நீரில் தவளை மற்றும் பல பூச்சிகள் செத்துக்கிடப்பதைக் காட்டுகின்றார்கள்.அந்த இடத்தில் உணவு தயாரித்து பலருக்கும் கொடுக்கின்றார்கள். இந்த நிலையில் அந்த இடத்திற்கு ஜர்னல்சிங் என்னும் விவசாயி மற்றும் பி.பி கபூர் எனும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இருவரும் வருகிறார்கள்

           அவர்களிடம் இந்த இடத்தில் சரஸ்வதி நதி தண்ணீர் வருவதாக சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இங்கு வரும் தண்ணீரை விட பக்கத்தில் இருக்கும் கிணற்று ஊற்றில் நிறையத் தண்ணீர் வருகின்றது. ஆனால் சரஸ்வதி நதியினை ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுதான் சரஸ்வதி நதி நீர் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்கின்றார்கள். ஜர்னல்சிங் எங்கே அந்த அறிக்கை இருக்கிறது  என்று கேட்கின்றார். அவர்கள் தங்களிடம் அறிக்கை இல்லை என்று சொல்கின்றார்கள்.புனித நூலில் இருக்கிறது. உயர்ஜாதி பிராமணர்களாகிய நாங்கள் இதனை நம்புகின்றோம் என்று பதில் சொல்கின்றார்கள்.இல்லை, இது சரஸ்வதி நதியின் நீர் இல்லை என்று அழுத்தமாக ஜர்னல்சிங்க் சொல்கின்றார். கபூர் இஸ்ரோ உட்பட பல நிறுவனங்களுக்கு 10 முதல் 15 கிலோ வரை கடிதங்கள் அனுப்பியிருப்பதாகவும், அவர்கள் அனுப்பியுள்ள பதில்களில் அப்படி ஒரு நதி இல்லை என்றே வந்திருப்பதாகவும் சான்றுகளுடன் காட்டுகின்றார்.கற்பனையான சரஸ்வதி நதியை அரசாங்கம் கொண்டுவந்தால், அடுத்து கற்பனையான இராமன், இராவணனை எல்லாம் அரசாங்கம் உயிரோடு கொண்டுவருமா ? என்று ஜர்னல்சிங் கேட்கின்றார். அதற்கு அந்த கோபாலதாஸ் எனும் பார்ப்பனபூசாரி கடவுள் தன் ரகசியங்களை அறிய அனுமதிப்பதில்லை எனக்கூறி கல்பனா சாவ்லா இறந்ததை உதாரணம் காட்டுகிறார், கடவுளின் ரகசியங்களை அறிந்து வந்த கல்பனா சாவ்லா பூமிக்கு வரும்முன் இறக்கும் படி கடவுள் செய்து விட்டாராம். இவர்களெல்லாம் சரஸ்வதி வந்து விட்டால் உலகின் முதன்மை விண்வெளி நிறுவனமாக உள்ள நாசாவை,அமெரிக்காவை முந்தி விடுவார்களாம்.

               அரசு அதிகாரிகள் ஒன்றும் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்கு எப்படியெல்லாம் பேசுகின்றார்கள்.சரஸ்வதியின் கதை அறிவியலின் கதை என்று பிரச்சாரப்பயணம் போகின்றார்கள்.மனிதர்களால் நதியை உருவாக்க முடியுமா? என்று கேட்கின்றார்கள் .ஆனால் அவர்களுக்கு அடுத்த ஆண்டு சரஸ்வதி நதிக்கரையில் பூசைகள் நடைபெறும் என்று அறிவிக்கின்றார்கள். உணமையாக நடந்த பல நிகழ்வுகளை, பேட்டிகளை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள். அரசு அதிகாரிகள், தலைவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு நன்றாக சிரிக்கலாம், அப்படிப்பட்ட பேச்சுக்களை இந்த ஆவணப்படத்தில் இணைத்திருக்கின்றார்கள்.கடைசியில் ஜர்னல்சிங், சகிராம் காசியப்பிடம் கேள்விகளாகக் கேட்கின்றார். நோயெல்லாம் இந்த நீர் தீர்த்துவிடுமென்றால், இந்த நீரை அப்படியே மருத்துவமனையில் வைத்து எல்லா நோயையும் தீர்த்து விடலாமே, எதற்கு மருந்தும் அறுவை சிகிச்சையும் எனக் கேட்கின்றார்.

              சென்னை முதல் சேலத்திற்கு எட்டு வழிச்சாலை என்று இன்று தமிழகத்தில் விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துதல் போல ஹரியானா அரசாங்கம் 10 கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்த நிலங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆறுபோல வெட்டி அதில் மோட்டாரைப் போட்டு நிலத்தடி நீரை எடுத்து , சரஸ்வதி என்னும் பெயரில் இருக்கும் ஓடையில் விடுகின்றார்கள். இதனால் அந்தப் பத்து கிராமங்களில் இருக்கும் நிலத்தடி நீர் கீழே போயிருக்கின்றது. விவசாயம் செய்ய முடியவில்லை அவர்களால் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றார்கள்.

             தொல்பொருள் துறையோ மற்ற துறைகளோ சொல்லாத நிலையில் அரசாங்கமே இப்படி ஒரு நதியைத் தோண்டுவதாக சொல்வதற்கு நோக்கம் இருக்கின்றது. வேலை வாய்ப்பு இல்லை, புதிய தொழில்கள் இல்லை,உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. இதனை மறக்கச்செய்வதற்கு இப்படிப்பட்ட செயல்களை, பொய்மைகளை இந்துத்துவாவாதிகள் செய்கின்றார்கள் என்பதனை கடைசியில் இந்த ஆவணப்படத்தில் விவரிக்கின்றார்கள். அரசாங்கம், அரசு அதிகாரிகள் பொன்றவர்களைப் பயன்படுத்தி  இந்துவத்தைப் பரப்புவதற்கான ஒரு திட்டமாக பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்த சரஸ்வதி நதி தோன்றியதாக எப்படி அறிவித்தார்கள்  எப்படியெல்லாம் பொய்களால் பரப்பினார்கள், எப்படி பரப்புகின்றார்கள் என்பதனை நறுக்கென்று சொல்லும் ஆவணப்படம் இப்படம். யூ டியூப்பில் சென்று 'Searching for Saraswati " என்று  டைப் செய்து படத்தைப் பாருங்கள்...தமிழில் நல்ல ஆவணப்படம் எடுக்கும் தோழர்கள், தோழியர்கள் இந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.