Thursday, 24 February 2022

ஆழினி....

 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். -டாக்டர் கலைஞர் அவர்களின் உரை.

எனது மகன் சொ.நே.அன்புமணி,எனது மகள் சொ.நே.அறிவுமதி இருவரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதும்,எழுத்தில் தடம் பதிப்பதும் மிகுந்த மகிழ்ச்சி தருவதாகும். எனது மகன் அன்புமணி ஏற்கனவே அமேசான் இணையதளத்தில் தனது புத்தகங்களைப் பதிவேற்றி இருக்கின்றான்.

எனது மகள் சொ.நே.அறிவுமதி ,தமிழில் முதுலை முடித்துவிட்டு,முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்திருக்கின்றார். கொரனா காலகட்டத்தில் வீட்டில் இருந்த நேரத்தில்,அப்பா ஒரு கதை எழுதுகிறேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். ஆனால் முழுமையாக வாசித்துப் பார்த்தபிறகு எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.மேற்கோளாகக் காட்டியிருக்கும் குறள் நினைவுக்கு வந்தது. உறுதியாகச்சொல்கிறேன். இப்படி ஒரு நாவலை என்னால் எழுத முடியாது. அணிந்துரைக்காகக் கொடுத்தபோது, அய்யா முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களும்,சிங்கப்பூர் பேராசிரியர்(ஓய்வு) ஸ்ரீலட்சுமி அவர்களும் வெகுவாக அறிவுமதியைப் பாராட்டி அணிந்துரை கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.எமரால்டு/எழிலின் பதிப்பகத்தின் உரிமையாளர்கள் நல்லினி அவர்களும் அண்ணன் ஒளிவண்ணன் அவர்களும் படைப்பை பதிப்பிக்க ஒத்துக்கொண்டதோடு,பத்தே நாளில் மூன்று முறை திருத்திக்கொடுத்ததை செம்மைப்படுத்தி 'ஆழினி 'என்னும் அந்த நாவலை அழகிய நூலாக கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள்.

நாளை மாலை 5 மணிக்கு ,சென்னை புத்தகக்கண்காட்சியில் ,எப்-6 ,எம்ரால்டு/எழிலின் பதிப்பக அரங்கில், திராவிடர் கழகத்தின் பொருளாளர்,எங்கள் குடும்பத்திற்கு எப்போதும் நல்வழி காட்டிடும் நண்பராக இருக்கக் கூடியவர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் வெளியிட,வாருங்கள் படிப்போம் என்னும் குழுவின் மூலமாக வாரம் இரண்டு புத்தகங்களை நல்ல ஆளுமைகளை வைத்து விமர்சனக்கூட்டம் நடத்துகின்ற பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்கள் ஆழினி நூலை பெற்றுக்கொள்கிறார்கள்.பதிப்பாளர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்களும்,வாருங்கள் படிப்போம் குழுவில் உள்ள ஆளுமைகளும்,திராவிடர் கழகத்தினைச்சார்ந்த தோழர்களும் கலந்து கொள்ளும் இனிய நிகழ்வு இது. வாருங்கள்.புத்தகத்தை வாங்குங்கள்.படித்துப்பார்த்து உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.நன்றி.Tuesday, 22 February 2022

200 ஆண்டுகள் இளைஞராய் வாழ்க!....முனைவர்.வா.நேரு

                                 சிந்தனைக் களம் : 200 ஆண்டுகள் இளைஞராய் வாழ்க!

                                                                முனைவர்.வா.நேரு


இனி வரும் உலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்று சிந்தித்த தந்தை பெரியார் "சுகம் பெறுவதிலும், போக போக்கிய மடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும் ஆராய்ச்சியும், முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும்" என்றார். மனிதர்களின் பல நூற்றாண்டுக் கனவு நீண்ட நாள்கள் வாழ்வது. நீண்ட நாள்கள் வாழ்வது மட்டுமல்ல, இளமையாகவே வாழ வேண்டும் என்பதும் மனிதர்களின் நீண்ட நாள் கனவு ஆகும். அதற்கான ஆராய்ச்சி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது, இன்றைய காலகட்டத்தில்.


http://www.unmaionline.com/index.php/6423-sinthanaikkalam.html

வயது முதிர, முதிர இதய நோய் வருகிறது, மறதி நோய் வருகிறது, வாதம் உள்ளிட்ட பல நோய்கள் வருகின்றன. இதற்கு என்ன காரணம்? உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் உழைக்கும் காலம் என்று ஒன்று இருக்கிறது. 60 வயது ஆச்சா, இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை பண்ணியாச்சா? என்று இயல்பாகக் கேட்கும் அளவிற்கு மருத்துவம் இன்று வளர்ந்திருக்கிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. ஒருவரின் உடம்பில் இருக்கும் பழுதடைந்த இருதயத்தை எடுத்துவிட்டு, நல்ல செயல்படும் இருதயத்தைப் பொருத்துவதன் மூலமாக ஒருவரின் வாழ் நாளைக் கூட்ட முடிகிறது.

இயந்திரத்திற்கு என்ஜின் போல, நமது மனித செல்களின் அக ஒன்றியமாக வாழ்ந்தும், என்ஜினாகச் செயல்படுவதும், பரிணாம வளர்ச்சியில் நுண்ணுயிரின் நீட்சியாகவும் இருக்கின்ற 'மைட்டோகாண்ட்ரியா' ஆகும். ஆற்றல் காரணியான, `ஏ.டி.பி  (adenosine triphosphate = ATP)` எனும் வேதிப்பொருளை உருவாக்கி, அனைத்து செல்களின் செயல்-பாடுகளுக்கும் தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல், செயல்முறைகளை ஒருங்கிணைக்கும் தொடர்பு மய்யங்களாகவும், மைட்டோகாண்ட்ரியா செயல்படுகிறது.

வயதிற்கும், முதுமைப் பருவ தள்ளாமை நோய்களுக்கும் முக்கிய காரணம், நாளடைவில் குறையும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ.யின் அளவு, ஒருமைப்பாடு மற்றும் செயல்பாடு இவற்றின் பிறழ்வுகள்தான். இந்த சேதங்களை _ பல அடுக்குகளை துல்லியமாகத் தாண்டி சீரமைத்து, செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பதன் மூலம், முதுமைப் பருவ தள்ளாமை நோய்களைத் தடுக்கலாம்.

உடலின் ஒவ்வோர் உறுப்பிலுமுள்ள செல்களுக்கும், ஒரு டைமர்  (timer) கடிகாரம் உள்ளது. வயதாவதால் வரும் தோல் சுருக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தோல் செல்கள் தன்னைத்தானே புதுப்பிக்க பிரிந்து பெருகும் (cell division and proliferation) டைமர் அவகாசம் 60 முறை மட்டுமே!".

நம் தோல் செல்கள் 60 முறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்.அதற்குப் பின்பு அதற்கு சத்துப் போய்விடும். தோல் செல்களைப் புதுப்பித்துக்கொள்ள இயலாது.அது நமது 80 வயதில், 90 வயதில் நிகழலாம்.அப்படியென்றால் அந்த தோல் செல்களுக்கு சத்துக் கொடுப்பதன் மூலம், மறுபடியும் அந்தத் தோல் செல்கள் புதுப்பித்துக் கொள்ள இயலும். சுருங்கிய தோல்கள் விரியும். பழைய மாதிரி தோற்றமளிக்கும். இது குறித்தான ஆய்வுகள் நிறைய இப்போது நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

"இந்த செல் மறுஉருவாக்க முறை மூலம், பழுதான இயந்திர பாகங்களை மாற்றுவது போல, இயக்கம் இழந்த பழுதான உடல் பாகங்களை, மாற்று அறுவை சிகிச்சைக்கு, நன்கொடையாளர் அல்லது தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் இல்லாமல்கூட மாற்றி, ஆரோக்கிய ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்." என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட கணினி, இணையத் தகவல் தொடர்பு புரட்சியாலும், மரபணு ஆராய்ச்சியாலும் மனிதர்கள் நீண்ட நாள் வாழ முடியும் என்பது மட்டுமல்ல, இளமையாகவும் வாழவைக்க முடியும் என்ற ஆயிவின் முடிவு மனித குல வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.

நீண்ட காலம் வாழக்கூடிய மனிதர்கள், எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்னென்ன, உணவு முறைகள் என்னென்ன, உடற்பயிற்சி போன்றவை என்னென்ன என்பனவற்றின் மூலமாகத்தான், ஒரு மனிதர் நீண்ட நாள் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியும் என்பது சென்ற நூற்றாண்டின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், ஆராய்ச்சி முடிவுகள், ஒழுக்கமாக வாழும் சில மனிதர்கள் சீக்கிரம் இறந்து போவதையும், குண்டக்க மண்டக்க வாழும் சில மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் எடுத்துக் காட்டியது. அப்படியானால் நீண்ட காலம் வாழ்வதற்கான அடிப்படை என்ன என்பதனைப் பற்றிய ஆய்வுகளை உயிரியல் மற்றும் மரபியல் அறிவியல் அறிஞர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள்.

மனிதர்களை ஆய்வு செய்வது மட்டுமல்ல, நீண்ட காலம் வாழும் வேறு உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியையும் சில உயிரியல் அறிஞர்கள் செய்து வருகிறார்கள். மரபணு எனப்படும் ஜெனிட்டிக்ஸ் அறிவியலின் வளர்ச்சி பல ஆய்வுகளுக்கு வழி வகுத்துள்ளது. மனிதர்களை விட அதிக ஆண்டுகள் வாழும் விலங்குகளை, பறவைகளை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

வில்வித்தை திமிங்கலம் (Bowhead Whale), பெரிய ஆமை (Giant Tortoise), ஒரு வகை வவ்வால், ஆப்பிரிக்க யானை போன்றவை நீண்ட காலம் வாழ்க்கூடியவை. இந்த விலங்கினங்களின் மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கிறார்கள். நீண்ட காலம் வாழும் விலங்குகளில் இருக்கும் மரபணுக்களின் தனித்தன்மை என்ன என்பதையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மரபணு ஆராய்ச்சியில் டி.என்.ஏ. பற்றிய ஆராய்ச்சி பல புதிய பாதைகளைக் காட்டிக் கொண்டுள்ளது. "செல்லின் மூலக்கூறான டிஎன்ஏ (Deoxyribo nucleic acids - DNA), படங்களில் பார்ப்பது போல் அல்லாமல், நூல்கண்டு போல சுருண்ட குரோமோசோம் கட்டமைப்பு அவிழ்ந்து விடாமல் பாதுகாப்பது, அதன் முனைக்கூறு தொப்பிகள் (Telomeres). இதன் செயல்பாட்டை, ‘ஷூ லேஸ்’களின் (shoelace) முடிவில், அதன் நூல்கள் எளிதில் அவிழ்ந்து விடாமல் பாதுகாக்கும் பிளாஸ்டிக் தொப்பிகளோடு ஒப்பீடு செய்யலாம்.

ஒவ்வொரு முறை செல் பிரியும் போதும், இந்த தொப்பிகள் சுருங்குவதால், ஒரு கட்டத்திற்கு மேல் செல்கள் பிளவுபட முடியாமல், முதுமை அடையும் (cellular sensescence). அண்மைக்காலத்தில், இஸ்ரேல் விஞ்ஞானிகள், ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை (HBOT) எனும் நெறிமுறை மூலம், முனைக்கூறு தொப்பியின் நீளத்தை அதிகரித்து, செல்கள் முதிர்ச்சி அடையத் தேவையான டைமர் அவகாசத்தை மீட்டமைக்க (reset) முடியும் என்று மெய்ப்பித்து, நிரந்தர இளமை நோக்கிய பாதையை வகுத்துள்ளனர்."

உடலில் உள்ள செல் மறு உருவாக்க முறை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அல்டாஸ் லேப் (Altoslab) என்னும் அமைப்பு, ஜனவரி 19, 2022இல் தொடங்கப்பட்டுள்ளது. இது ஓர் உயிரியல் தொழில் நுட்ப நிறுவனம்

(Bio-Technology Company). பல ஆயிரம் கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் நோபல் பரிசு பற்ற பல அறிவியல் அறிஞர்கள். மருத்துவர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இணைந்துள்ளார்கள். இந்த அமைப்பின் நோக்கம், உடம்பில் உள்ள செல்கள் எப்படி மறு உருவாக்கம் செய்கிறது என்பதையும், அந்த செல்கள் மறு உருவாக்கத்தின் மூலமாக மனிதர்கள் நீண்ட காலம் இளமையாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்துவதும், நோய் வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தி மருத்துவத்தில் புரட்சி ஏற்படுத்துவதும் ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் (Altoslab.com) சென்று வாசித்தால், வாசிக்க வாசிக்க ஆர்வம் ஊட்டும் செய்திகள் நிறைய இருக்கின்றன.

அல்டாஸ் போன்ற நிறுவனங்களின் ஆராய்ச்சிகள் பெருமளவிற்கு வளர்கின்றபோது, நாம் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறும்போது, நூறு ஆண்டுகள் வாழ்க என்று கூறுவதற்குப் பதிலாக, 200 ஆண்டுகள் இன்று போல இளமையாக வாழ்க, வாழ்க என ஒரு 25 வயதுக்காரரை வாழ்த்தலாம். அப்படி ஒரு நாள் இனி வரும் உலகில் வரும் என்பதற்கான சாத்தியக் கூறுகள், அறிவியல் வளர்ச்சியால், அறிவியல் ஆராய்ச்சியால் தென்படுகிறது. நன்றி.


1)            பி.பி.சி.1.2.2022 ..அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம்...நமச்சிவாயம் கணேச பாண்டியன் அவர்களின் கட்டுரை.


2).          Altoslab.com


நன்றி : உண்மை மாதிமிருமுறை இதழ்- பிப்ரவரி 16-28

Sunday, 20 February 2022

இணைப்பு... சிறுகதை... வா.நேரு

 இணைப்பு...   சிறுகதை... வா.நேருஅலுவலுகம் 10 மணிக்கு. 9.45 க்கு  தன் சீட்டிற்குப் போன கதிர், தான் உட்காரப்போகும் நாற்காலியையும்,தனக்கு முன்னால் இருந்த மேசையையும்,மேசையின் மேல் இருந்த தொலைபேசியையும் அதற்கு அருகில்  இருந்த கணினினையும் துணியால் துடைத்தான். துடைத்து முடித்து விட்டு அமர்ந்து கணினியை இயக்க மின் சுவிட்களைப் போட்டான். அமர்ந்தவுடன் தன் பையில் இருந்த செல்பேசியையும் எடுத்து தொலைபேசி அருகில் வைத்தான்.

செல்பேசி அடித்தது. எதிர்முனையில் சூரியன் மில்லின் மேலாளர் பேசினார்.

"வணக்கம் சார் " என்றான் கதிர். "வணக்கம் சார் " என்ற மேலாளர் " சார் நாளை காலை 7 மணிக்கு எங்கள் மில்லின் சேர்மன் அவர்களுக்கு ஒரு வீடியோ கான்பரன்சிங் மீட்டிங் இருக்கிறது.பல மாநிலங்களிலிருந்து எங்கள் மில்லின் பங்குதாரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கியமான கூட்டம் .இணைய வழியாக நடைபெறும் கூட்டம்.இப்போது இண்டர் நெட் இணைப்பு  நன்றாகக் கிடைக்கிறது. நாளை காலையும் இப்படிக் கிடைப்பது மாதிரி செய்துவிடுங்கள் சார். மிக முக்கியமான கூட்டம் என்பதால் முன் கூட்டியே உங்களுக்கு சொல்கிறேன் சார் " என்றார்.

" சரிங்க சார் " என்ற கதிர் அப்போது தனது அலுவலகத்தில் இருக்கும் பழுது பார்க்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் செக்சனின் அதிகாரி,கமாலைக்  கூப்பிட்டுப் பேசினான்

"சார், இந்த மாதிரி சூரியன் மில்லில் அந்தச்சேர்மன் ஒரு முக்கியமான மீட்டிங் வைத்திருக்கிறார். இணையம் கிடைப்பதை சரி பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் " என்று சொன்னவுடன் உற்சாகமாக ,'அந்தப் பக்கம் நம் கேபிள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை சார், நானும் குறித்து வைத்துக்கொள்கிறேன் சார் " என்றார் கமால்.. சரி என்று போனை வைத்தான் கதிர்.


இந்த முப்பது ஆண்டுகளில் தான் வேலை பார்க்கும் தொலைதொடர்புத்துறையில் எத்தனை மாற்றங்கள்...இத்தனை மாற்றங்களைக் கண்ட வேறு துறை ஏதும் இருக்கிறதா எனக் கதிருக்குத் தெரியவில்லை.அதுவும் இப்போது புதிதாக வந்திருக்கும் ஆப்டிகல் பைபர் கேபிள் மிகப்பெரிய புரட்சியாகத் தெரிந்தது கதிருக்கு,சின்னதாக முடியைப் போன்ற வடிவில் இருக்கும் நீண்ட தூர இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்களை முதன்முதலில்  பார்த்தபொழுது கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது.அறிவியலால் எப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்கின்றன.இப்படிச்சிறிய வடிவத்தில் இருக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்கள் வழியாகத்தான் நாம் கணினி வழியாக இணையத்தின் வழியாக அனுப்பும் கோப்புகள்,படங்கள்,சினிமாக்கள் என அத்தனையும் கடத்தப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய முன்னேற்றம். 

பெரிய பெரிய கம்பங்களை ஊண்டி,காப்பர் வயர்களை இழுத்துக் கட்டி அதன் மூலமாக தொலைபேசி இணைப்புகள் கொடுத்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது எல்லாம் தரைக்கு கீழே செல்லும் கேபிள்கள்தான்.அதுவும் இந்தக் கண்ணாடி இழைக் கேபிள்கள் வந்தபிறகு தொலைபேசிகள் இல்லாமல் கூட கணினிகளுக்கு கண்ணாடி இழை கேபிள்களின் வழியாக இணைய இணைப்புக் கொடுக்கும் காலம் வந்து விட்டது.அதுவும் இந்த லீசுடு லைன் என்னும் இணைப்பு மூலம் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு,கல்லூரிகளுக்கு அதிவேக இணைய இணைப்புக் கொடுக்க முடிந்தது.அதன் மூலம் கதிர் வேலை பார்க்கும் அரசு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வருமானம் வந்து கொண்டிருந்தது.


மணி 10 அடித்தது. அலுவலகத்திற்குள் கதிரின் மேல் அதிகாரி சண்முகம் உள்ளே நுழைந்தார். கதிர் வணக்கம் வைத்தான்.சண்முகமும் உற்சாகமாக திரும்ப வணக்கம் வைத்தார். சண்முகம் ,கதிர் தனக்கு கீழே உள்ள அதிகாரி என்றாலும்  ஒரு நண்பரிடம் பழகுவதுபோலவே பழகினார்.நடந்து கொண்டார்.கதிர்,சண்முகம்,கதிருக்கு கீழே வேலைபார்க்கும் குமார்,நாதன் என ஒரு அருமையான குழுவாக அவர்களின் அலுவலகம் இருந்தது.

கதிரும் சண்முகமும் பல நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.அந்தக் காலங்களில் தங்கள் இளமைக் காலத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். சிறுவயதில் தான் கடலைக் காட்டில் அலைந்ததைப் பற்றியும் அதன் அனுபங்களைப் பற்றியும் கதிர் பகிர்ந்து கொண்டபோது,சண்முகம் தானும் சிறுவயதில் வயக்காட்டில் கடலை பயிரிட்டு அதனைச்சாகுபடி செய்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டார். " சார் எங்கள் பகுதிகளில் கடலைச்செடிகளைப் பிடிங்கிப்போட்டு,செடிகளில் இருக்கும் கடலையை ஆட்கள் ஆய்ந்து ஆய்ந்து போட்டு மொத்தமாகக் குமிப்பார்கள் " என்றான் கதிர். சண்முகமோ "சார் எங்கள் பக்கம் கடலைச்செடியை மொத்தமாகப் பிடிங்கிப்போட்டு, நெல்லை அடிப்பது போல அடித்துப் பிரிப்போம் " என்றார். "இப்படிப்பட்ட அரசு நிறுவனம் எல்லாம் இல்லை என்றால் நீங்களும் நானும் இப்படி பெரிய அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்க முடியுமோ சார் " என்பார் சண்முகம் கதிரிடம். ஆம் உண்மைதான், காட்டில் மேட்டில் வளர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் படிப்பால்,சமூக நீதித் தத்துவத்தால் பெரிய பெரிய அலுவலகத்தில் ,நல்ல பதவிகளில் அமர்ந்திருக்கிறோம் என்னும் உணர்வு கதிருக்கும் சண்முகத்திற்கும் இருந்தது. 

அவர் உட்கார்ந்தவுடன் கதிர் ,சண்முகத்திடம் சூரியன் மில்லில் மேலாளர் போன் பேசியதையும் தான் கமாலிடம் பேசியதையும் கூறினான். "சார் அந்தப் பக்கம் போடப்பட்டுள்ள பைபர் கேபிள் எல்லாம் புதுக்கேபிள்கள் சார். நல்ல ஆழமாகவும் தோண்டி போட்டிருக்கிறோம் .ஒன்றும் பிரச்சனை இல்லை சார்,பார்த்துக்கொள்வோம் " என்றார்.

திடீர் என யோசனை வந்தவராக "சார்,சூரியன் மில் சேர்மன் நமக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர். அவரது கல்லூரிகள்,மில்  என வருடத்திற்கு 50 இலட்சம் ரூபாய் நமது நிறுவனத்திற்கு வருமானம் வருகிறது.அவருக்கு கோபம் வருவது மாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது.நமது பொது மேலாளரிடம் போய்க் கொஞ்சம் சொல்லி வைத்து விடுவோம் "என்றார்.

கதிரும் சண்முகமும் இருவரும் இணைந்து போய் பொதுமேலாளரிடம் சொல்லி விட்டு வந்தார்கள்.தொடர்ந்து தொலை பேசிகள் வந்து கொண்டிருந்தன.மதிய உணவு இடைவெளியில் அலுவலகத்தின் கீழே சென்றபோது, அலுவலகத்தின் கழிப்பறையை சுத்தம் செய்யும் ஊழியர்கள், கடந்த 6 மாதமாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். கதிரும் அந்தக் கூட்டத்தில் ,அவர்களின் போராட்டம் வெற்றி பெற, வாழ்த்திப் பேசினான்.

மீண்டும் மேலே வந்த கதிர், சண்முகத்திடம் " என்ன சார், நாம் ஓர் அரசு நிறுவனம். நமக்கு போன இரண்டு  மாதச்சம்பளம் இன்னும் வரவில்லை. நாமாவது எப்படியோ சமாளிக்கிறோம். பாவம்,கூட்டுகிறவர்கள்,கழிப்பறையை சுத்தம் செய்பவர்கள் என்ன சார் செய்வாங்க ? இப்படி அவங்க வயித்துலே அடிக்கிறாங்களே ? ": என்றான்.

"அரசாங்கம் அதையும் காண்டிராக்ட் விட்டு விட்டார்கள். காண்டார்க்ட்காரர்களுக்கு பணம் டெல்லியில் இருந்து வரவேண்டும்.வரவில்லை...அவர்கள் சம்பளம் கொடுக்கவில்லை " என்றவர் தொடர்ந்தார்..

" நாம் அரசு நிறுவனமாக இருக்கும்வரை இந்தப் பிரச்சனைகளெல்லாம் இல்லை. எப்போது பொதுத்துறையை முழுவதும் விற்கவேண்டும் என்று தீர்மானித்தார்களோ அப்போதே இந்தப் பிரச்சனை ஆரம்பித்து விட்டது.முதலில் நாம் நமது மாவட்டத்தில் செலவு செய்தது போக மீதியை சென்னைக்கு அனுப்புவோம்.அவர்கள் அதனை டெல்லிக்கு அனுப்புவார்கள். இப்போது ஒரு ரூபாய் என்றாலும் உடனே டெல்லிக்கு போவது போல கணினியில் செய்து விட்டார்கள்.போன பணம் வரமாட்டிங்குது...நம்ம ஜி.எஸ்.டி., மாதிரி " என்றார்.

தொடர்ந்து வேலை ஓடிக்கொண்டிருந்தது. மாலை 4 மணியைப் போல சூரியன் மில் மேலாளரிடம் இருந்து போன் சண்முகத்திற்கு வந்தது. அவர் பேசி முடித்தவுடன் துள்ளி எழுந்தவர் கதிரிடம் "சார்,சூரியன் மில்லுக்கு இண்டர் நெட் இணைப்புக் கிடைக்கவில்லையாம், கடந்த 10 நிமிசமா " என்றார். "அய்யோ ,என்னவாயிற்று " என்று மற்றொரு அலுவலுகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "ஆமாம் சார், ஆப்டிகல் பைபர் கேபிள் கட் என்பது போல கணினியில் காட்டுகிறது. ஓ.எப்.சி.பிரேக் சார் " என்றார்.

அப்படியே கணினிகளை நிறுத்திய சண்முகமும் கதிரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்கள். நிறுவனத்தில் கார்கள் அனைத்தும் வெளியில் போயிருந்தன. மழை வேறு லேசாக தூறிக்கொண்டிருந்தது. கதிரை அழைத்த சண்முகம் "சார் நாம் வெயிட் பண்ணினால் நேரம் ஓடி விடும்.வாருங்கள் என் வண்டியில் போவோம் " என்று அவர் மோட்டார் பைக்கை எடுத்தார். தன் மோட்டார் பைக்கில் இருந்த ஹெல்மேட்டை எடுத்து ,சண்முகம் வண்டியில் பின்னால் உட்கார்ந்தான் கதிர்.பேசிக்கொண்டே,வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அழைப்புக்கு எல்லாம், இரண்டு செல்பேசியிலும் கதிர் பின்னால் இருந்து பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

அந்தச் சூரியன் மில்லிற்கும் ,அவனது அலுவலகத்திற்கும் சுமார் 20 கி.மீ.இருக்கும். போகும் வழியிலேயே ஓஎப்சி அதிகாரி கமாலிடம் பேசினான் கதிர். அவரும் பதறினார். " சார் நானும்,எங்களது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருகிறோம். நீங்கள் முன்னால் போங்கள் சார் " என்றார்.

"சார்,ஏதேனும் புயல் காற்று என்றால் நமது கேபிள்களுக்கு சேதம் வரும். வெறும் தூறல்தான் சார் தூறிக்கொண்டிருக்கிறது" என்று கதிரும் சண்முகமும் பேசிக்கொண்டே சூரிய மில்லுக்கு போய்ச்சேர்ந்தனர்.

அந்த மில்லின் நெடிய கதவுகள் பயமுறுத்தும் மலைப்பாம்பு போலத்தெரிந்தது கதிருக்கு. அந்தப் பிரமாண்டமான  மில்லின் முன்னால் நின்றிருந்த காவலாளியிடம் அடையாள அட்டைகளைக் காண்பித்து, யாரைப் பார்க்கப்போகவேண்டும் என்று சொன்னவுடன் அவர் அந்த மில்லின் மேலாளரிடம் போனில் பேசினார்.

பேசிவிட்டு " நீங்கள் போகலாம் சார்.நேரே போய் வலது பக்கமாக திரும்பி,வண்டியை நிறுத்தி விட்டு மேலாளர் அறைக்குச்செல்லுங்கள் " என்றார்.

"சரி" என்று சொல்லி விட்டு,வண்டியை நிறுத்திவிட்டு ,மேலாளர் அறைக்குச்சென்றனர்.

சண்முகம் மிகவும் கவலைப்பட்ட நிலையில் கதிரிடம் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார்.

எப்போதும் புன்னகையோடு வரவேற்கும் சூரியன் மில்லில் மேலாளர் கடுகடுவென இருந்தார். இருவரையும் பார்த்தவுடன் உட்காரக் கூடச்சொல்லவில்லை..."சார், நாளைக் காலையில் இண்டர் நெட் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் அவ்வளவுதான்,அத்தனை இணைப்புகளையும் புதிதாக வந்திருக்கும் தனியார் கம்பெனிக்கு மாற்றிவிட முதலாளி சொல்லி விடுவார்.அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டால் யாராலும் மாற்ற முடியாது.மொத்தமாக உங்கள் இணைப்புகள் அனைத்தும் வேண்டாம் என்று சொல்லி விடுவோம். ஏன் சார் இப்படி பண்றீங்க..." என்று தொடர்ந்து பேசினார்.

சண்முகம் அழுவது போல ஆகிவிட்டார். " சார்,நமது மில்லுக்காக தனியாக கேபிள் எல்லாம் கொண்டு வந்து கொடுத்திருக்கோம் சார்.வரும் வழியில் பார்த்துக்கொண்டு வந்தோம்.எங்கள் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.எங்களது ஆட்களை வரச்சொல்லியிருக்கிறேன்.இரவுக்குள் பார்த்து சரி பண்ணி விடுகின்றோம்.சார்...  " என்று கெஞ்சும் குரலில் சொன்னார்.

"காலையில் கிடைக்கவில்லையெனில் அவ்வளவுதான் " என்று சொல்லிக்கொண்டே மேலாளர் உள்ளே போய்விட்டார்.

கதிரைப் பார்த்த சண்முகம்,"வாருங்கள் நாம் ,எங்கே கேபிள் கட்டாகி இருக்கிறது என்று  தேடுவோம் " என்று சொல்ல,சண்முகமும் கதிரும் அங்கிருந்து வண்டியில் கிளம்பினர்.எந்த இடத்தில் இந்தக் கேபிள் கட்டாயிருக்கிறது என்று கண்டுபிடிக்க கருவி உண்டு. ஆனால் அந்தக் கருவி இப்போது கைவசம் இல்லை. அதற்கென இருப்பவர்களை வரச்சொல்லவேண்டும்." சார்,அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை ,வாருங்கள் நாமே தேடுவோம் " என்ற சண்முகமும் கதிரும்  ரோட்டின் ஓரம் முழுக்க தேடிக்கொண்டே வந்தனர்.

"சார் லைனில் எங்கோ கட் ஆகியிருக்கிறது, எந்த இடம் என்பது தெரியவில்லையே. 50 கி.மீ தூர தொலைதூர இணைப்பு இது. லீசுடு லைன் .வாடிக்கையாளருக்கு என்று தனியாக ஒரு அதிவேக பாதையை அமைத்துக்கொடுக்கும் அற்புதமான கண்டுபிடிப்பு. ஆனால் பழுதானால் நம் கண்ணு முழி பிதுங்கி விடுகிறது " என்றார் சண்முகம். "கட் ஆன இடத்தைக் கண்டுபிடித்து ஜாயிண்ட் அடித்தால் இணைப்பு  கிடைக்கும் " என்று சொன்னார் சண்முகம்.சண்முகமும்  கதிரும்  ஒவ்வொரு இடமாக மணல் குவித்திருக்கும் இடம் அல்லது எங்காவது ரோட்டு ஓரத்தில் தோண்டிக்கொண்டிருக்கிறார்களா என்று பார்த்த வண்ணம் போய்க்கொண்டிருந்தார்கள். கண்டு பிடிக்க இயலவில்லை. 

மாலை 7  மணியாகி இருந்தது. தூறல் வேறு அதிகமாக விழ ஆரம்பித்திருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. பை பாஸை தாண்டி ஊருக்குள் நுழையும் இடத்தில் அந்த வண்டி நின்றிருந்தது. அந்த வண்டியின் முன்னாலும் பின்னாலும் தோண்டிப் போடப்பட்ட மணல் கிடந்தது. மோட்டார் சைக்கிளை  நிறுத்தி,கதிரை இறங்கச்சொல்லிவிட்டு, விறுவிறுவென அந்த இடத்திற்கு ஓடினார் சண்முகம். கதிரும் பின்னாலேயே ஓடினான். 'சார், இங்கேதான் கேபிள் கட்டாயிருக்கு , கட்டாயிருக்கு " என்று கத்தினார் சண்முகம். கதிரும் பார்த்தான். கண்ணாடி இழை கேபிள் மேல் பெரிய எந்திரக்கரங்கள் முறுக்கி கிழித்த அடையாளங்கள் தெரிந்தன.அந்த ஜேசிபியின் வண்டிக்காரனைத் தேடி ஓடினார் சண்முகம்.  எக்ஸ்-ஒய் நிறுவனத்திற்கு கண்ணாடி இழை கேபிள் பதிப்பதற்காக தோண்டியவர்கள் சண்முகம் வேலை பார்க்கும்  அரசு நிறுவனத்தின் கண்ணாடி இழைக் கேபிள்களை சின்னாபின்னாப்படுத்திப் போட்டிருந்தார்கள்.


 அந்த எக்ஸ்-ஒய் நிறுவனம் தோன்றி 2,3 ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. 'கட்டின புருசனுக்கு சோறு போடாமல் , மாற்றானுக்கு  சோறும் கறியும் சமைச்சுப்போடுபவள் 'போன்ற' அரசின் பாகுபாட்டால் விறு விறுவென அந்த எக்ஸ்-ஒய் நிறுவனம் வளர்ந்துகொண்டிருந்தது. அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்ற இறுமாப்பில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்படுபவர்களாக  அவர்கள் இருந்தார்கள்.எக்ஸ்-ஒய் நிறுவனத்தின் ஜேசிபி வண்டிக்காரன் ஒன்றுமே தப்பே செய்யாதது போலப் பேசினான்.யார் அதிகாரி என்று கேட்டபோது ,எண்ணைக் கொடுக்க மறுத்தான். குழியை நாங்கள் வேறுபக்கமாகத் தோண்டிக்கொண்டிருந்தோம். உங்கள் கேபிள் வந்துவிட்டது என்றான். அவனோடு சண்டை போடும் நிலைமை இப்போது இல்லை. அறுந்து கிடக்கும் கேபிளை இணைத்து ஜாயிண்ட் அடித்து வேலை செய்ய வைக்க வேண்டும் என்னும் உந்துதலில் அங்குமிங்குமாக சண்முகம் ஓடினார். அதற்குள் கேபிள் சரி செய்யும் அதிகாரி கமால்   பணியாளர்கள் 3 பேரோடு  ஒரு காரில்  வந்து இறங்கினர்.

இருட்டி விட்டது. கமால் குழுவினர்  வந்த காரின்  முன் பக்க விளக்கு இல்லை.மதுரைக்குள் எப்படி முன் லைட் இல்லாமல் வந்தீர்கள் என்று சண்முகம் வினவ,"ஒரு உத்தேசமாக ஹாரன் அடிச்சுக்கிட்டு கவனமா வந்தேன் சார்.ஹெட்லைட் போயிருச்சு,அதனை மாற்றுவதற்கு பில் போட்டு மாற்றனும்.எங்க பொறுப்பு அதிகாரியும் எவ்வளவு நாளைக்குத்தான் கையில் இருந்த பணத்தைப் போடுவார்.இரண்டு மாதமா அவருக்கும் சம்பளம் வரவில்லை.இருந்தாலும் இது முக்கியமான வேலை என்பதால்,அனுசரிச்சு ஓட்டிட்டு வந்தேன் சார் " என்றார் டிரைவர். "அதெல்லாம் சரி,ஏதாவது விபத்து ஏற்பட்டால் நம்ம பிள்ளை குட்டிக தான பாதிக்கப்படும் "என்றான் கதிர்.

பேட்டரியால் இயங்கும் பெரிய விளக்கை எரிய விட்டு, கமால்  கண்காணித்துக்கொள்ள அவரோடு வந்த மூவரும் அந்தப் பள்ளத்தைத் தோண்ட ஆரம்பித்தனர். மூவரும் தற்காலிக ஊழியர்கள்.அவர்களுக்கு கடந்த 6 மாதமாகச் சம்பளம் வரவில்லை. அவர்களுக்கு வரக்கூடிய குறைந்த பட்ச சம்பளமும் அவர்களுக்கு வராமல் இருந்தது. கமால் தனது கைப்பணத்தைப் போட்டு அவர்களுக்கு சம்பளம் போல மாதா,மாதம் கொடுத்துக்கொண்டிருந்தார்.. ஜேசிபி வண்டிக்காரன் தோண்டி,கேபிளை அறுத்து அதற்கு மேல் மொத்தமாக மண்ணைக் கொட்டி வைத்திருந்தான். சண்முகம்,கதிர்,கமால் கூட வந்த 3 பேர் என அனைவரும் அந்த மண்ணை அள்ளி ஒரு பக்கமாகப் போட்டனர்.பின்பு குளிக்குள் உட்கார்ந்து கமால் கேபிள் ஜாயிண்டை அடிக்க ஆரம்பித்தார். தமிழில் அதற்கு கண்ணாடி இழைகள் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் பிசகினால் உடைந்த கண்ணாடி குத்துவது போலக் குத்திவிடும். அதற்கெனப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதனைச்சரி செய்ய இயலும். கமால் அந்தக் குழிக்குள் உட்கார்ந்து ஜாயிண்ட் அடிக்க ஆரம்பித்திருந்தார்.

நேரம் இரவு 9 மணி ஆகி இருந்தது.வயிறு கப,கப என பசிக்க ஆரம்பித்திருந்தது. வேலை நேரம் என்னவோ மாலை 6 மணி வரைதான். ஆனால் அதிகாரி என்று வந்துவிட்டால்,பொறுப்புகள் தலைக்கு மேலே வந்து குவிந்துகொள்கிறது. சண்முகம் சொன்னதன் அடிப்படையில் இரவு என்று பாராமல் அந்த கேபிள் டீம் வந்திருந்தார்கள்.அவர்களுக்குத் துணையாகப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே சண்முகம் கதிரும் நின்று கொண்டு,கேபிள்களை ஜாயிண்ட் அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இரவு பத்து மணிக்கு ஜாயிண்டை அடித்து முடித்திருந்தார் கமால். "சார்,அந்த மில் மேலாளரைக் கூப்பிட்டு ,இணைய இணைப்புக் கிடைக்கிறதா என்று செக் பண்ணச்சொல்லுங்கள்" என்றார் கமால் "இல்லை, நீங்கள் இங்கு இருங்கள்.அந்த மில்லின் மேலாளர் ஏற்கனவே மிகக் கோபமாக இருந்தார்.அவரை டெஸ்ட் பண்ணச்சொல்லி,கிடைக்கவில்லை என்றால் இன்னும் கோபப்படுவார். நானும் கதிரும் நேரே போகிறோம்"  என்று சொல்லி விட்டு மில்லுக்கு வண்டியில் விரைந்தார்கள்.

மேலாளர் முன் அறையில் இருக்க,மில் முதலாளி உள்ளே இருந்தார்.மேலாளிரிடம் சொல்லி,இணையம் கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று சொன்னபோது,"வாருங்கள் பார்ப்போம்" என்று உள்ளே அழைத்துச்சென்றார். இணைய இணைப்பு கிடைத்தது.உடனே கமாலைக் கூப்பிட்டு "இணைய இணைப்புக் கிடைக்கிறது.குழியை மூடிக்கொண்டிருங்கள். நாங்கள் வந்து விடுகிறோம்" என்று சொன்னபோது ,

"முதலாளி உங்களை அழைக்கிறார் "என்று அந்த மில்லின் மேலாளர் சொல்ல,என்ன சொல்லப்போகிறாரோ,ஒரு 6,7 மணி நேரம் இணைய இணைப்புக் கிடைக்காமல் போய்விட்டதே என்று                      தயங்கியவாறு கதிரும்,சண்முகமும் உள்ளே சென்றனர்.

"உட்காருங்கள் " என்று முதலாளி சொல்ல, "பராவ இல்ல " என்றனர் சண்முகமும் கதிரும். "முதலில் உட்காருங்கள் சார்." என்று முதலாளி மீண்டும் சொல்ல இருவரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தனர். 

"வாங்க சார்.மாலையில் இருந்து நெட் கிடைக்கவில்லை என எங்கள் மேனேஜர் சொன்னார். தனியார் நிறுவனத்திற்கு மாறி விட எங்கள் முதலாளி யோசிப்பார் என்று சொன்னதாகவும் சொன்னார்.கால்கள் கட்டப்பட்ட நீங்கள்,சுதந்திரமாக ஓடுகிற நிறுவனத்தோடு போட்டியிட்டு ஓடுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். அரசு நிறுவன அதிகாரிகள் இந்த நேரம்வரை இருந்து பழுது பார்த்து ,இணைப்புக் கொடுப்பது என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு " என்று சொன்னபோது கதிருக்கும் சண்முகத்திற்கும் மாலை முதல் பட்ட துன்பம் எல்லாம் ஓடிப்போனது போல இருந்தது.

Saturday, 19 February 2022

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்....

 வணக்கம் நண்பர்களே,உறவுகளே,

                                 புத்தகக் கண்காட்சி பற்றி கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில்,சிந்தனைக் களம் பகுதியில் பங்கேற்று,கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இணைப்பு. நன்றி. வா.நேரு


https://youtu.be/9e51gat6hrw
https://youtu.be/bKoPC3KTzj0


Tuesday, 15 February 2022

படைப்பாளர் என்ற முறையில் நான் அளித்த நேர்காணல் ...வா.நேரு


என்னுடைய நேர்காணல்...வா.நேரு

 https://youtu.be/-M9ATtDX0r4


முதலில் இன்றைய நிகழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த தோழர் அர்ஷா அவர்களுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.


விருந்தினர் படைப்பாளர் வா‌. நேரு அவர்கள் தனது சிறப்பான சிந்தனைகள்  மூலம் நமது எண்ணங்களை மிளிர வைத்துள்ளார். 


குறிப்பாக "மற்றவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அப்படி நான் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்." என்பது போன்ற கருத்துக்கள் மனதில் பதிந்தன. 


வட்டாரமொழி வழக்குகள், வாசிப்பு  பழக்கம், பெண்ணியம் பற்றிய  கருத்துக்கள் அருமை. வாசிப்பு பழக்கத்திற்காக நூலகத்தில் 9 டோக்கன்களை வைத்திருப்பது, குடும்பத்தில் இருப்பவர்களையும்  வாசிக்கத் தூண்டுவது கற்றுக்கொள்ள வேண்டியது. மேலும் நிறைய நூல்களைப் படிபவர்கள் அனைவரும் படைப்பாளியாகமுடியும் எனத் தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 


"வயலில் விடிந்தது போல" என்ற கவிதை இப்படித் துவங்கி


//கணினி முகத்தில்தான் 

எனது விடியல் 

எனது தாத்தா -பாட்டன் 

வயலில் விடிந்ததுபோல!

...

வயிற்றுப் பசி அடங்கியது 

என் காலத்தில்... 

அறிவுப் பசி தொடர்கிறது 

என் காலத்திலும்

என் பிள்ளைகள் காலத்திலும்!

...

இணையத்திற்குள் 

கருத்துக்களால்

இணையும் 

இளைஞர்களைப் பார்க்கிறபோதும்... 

ஒரு நாள் முழுதாய் விடியும் எனும் நம்பிக்கை வலுக்கிறது மனதில்!// வா.நேரு


இப்படியான சிந்தனைகளுடன் கவிதைகளைப் படைத்து நம்மிடம் உலாவ விட்டிருக்கிறார் தோழர் நேரு அவர்கள்.


பகுத்தறிவு பகலவனின் பாதையில் படைப்புகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியும் வரும் தோழர் நேரு அவர்களின் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்,  முனைவர் பட்ட ஆய்வேடுகள், எழுதிக்கொண்டுள்ள புதினம் ஆகியவை நூல்களாக வெளிவரவும், அவர் தம் எண்ணங்கள் எண்ணியபடி நடந்து பல வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்ளவும், விருதுகள் பல பெறவும் வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும் தோழர் சுனிதா , ஒளி, இளங்கோ மற்றும் கேள்விகள் கேட்ட நேச உறவுகள், கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


அன்புடன்,

வினிதா மோகன்.


------------------------------------------------------------------------------------------------------------


"தனக்கொரு பாதை;

தன்கொரு பயணம்; 

தனக்கொரு கொள்கை; அதற்கொரு தலைவன்!"

என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்ப, வள்ளுவர் வழியையும் பெரியார் நெறியையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அவர்களது அறச் சீற்றத்தைத் தன் குருதியோடு கலந்துகொண்ட அறிஞர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், படைப்பாளர் தோழர் நேரு அவர்கள், நமக்குக் கிடைத்த ஒரு போற்றத் தகுந்த ஆளுமை.


இந்தியச் சூழலைப் பொருத்தவரை, கடவுள் கொள்கை மனிதத்திற்கு எதிராக உள்ளது என்பதை அவர் தெளிவு படுத்திய விதம் இங்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை "கடவுளை மற; மனிதனை நினை!" என்பதுதான் என மாறுபாடின்றி வலியுறுத்துவதாக உள்ளது.


தோழி அர்சா, எங்கள் வீட்டுக்கு வந்து, எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடிச் சென்றார். 

ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வாசம் என்பது போல் நம் குழுவில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை! எல்லாமே மனதைக் கொள்ளை கொள்வதாக உள்ளன.


பயனுள்ள பொழுது! நன்றிகள்.

பேராசிரியர் மகாதேவன் அவர்கள் வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில்

----------------------------------------------------------------------------------------------------------


முனைவர் வா.நேருவுடன் கலந்துரையாடல் .  பணிச்சுமை காரணமாக  கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் youtube ல் கண்டு களித்தேன். மிக அருமையான உரையாடல். தேர்ந்தெடுக்கப்பட்ட தெளிவான கேள்விகளை தொடுத்தார் தோழி. அர்சா அதற்கு தன் வாழ்க்கை அனுபவம் மூலமும் கற்றறிந்த அறிவின் வாயிலாகவும் மெச்சத்தகுந்த பதில்களை அளித்தார் முனைவர்.                             12 வயதில் கிளை நூலகத்தில் தன் படிக்கும் பயணத்தை ஆரம்பித்து வளர வளர அனைத்து வகை இலக்கியங்களையும் படைப்புகளையும் தன் கைக்கொண்டு வாசித்து அவரும் வளர்ந்து வாசகனையும் வளர்த்த பாங்கு மிக அருமை. பேச்சில் தெளிவும் சரளமான வார்த்தைகளும் நிகழ்ச்சியை சுவையாக்கியது.  இந்த குழுவில் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் குழந்தையாய் உணர்கிறேன். 

மரு.அன்புச்செல்வன் திருமார்பன். அவர்கள் வாருங்கள் படிப்போம் வாட்சப் குழுவில்

------------------------------------------------------------------------------------------------------------

அர்ஷாவிற்கு  முதல் பாராட்டு. தெளிவான குரலில் தெளிவான கேள்விகள். நேரு அண்ணனை அறிமுகம் செய்த சுனிதாவிற்கு வாழ்த்துகள்.

நேரு அண்ணா...  

அண்ணனின் ஒவ்வொரு நேர்காணலுக்குப் பிறகும் அண்ணனின் உயரம் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. தனது படிக்கும் ஆர்வத்தின் மையப்புள்ளியான தனது அன்னையில் தொடங்கி, தோழர் முருகன் மற்றும் திராவிடக்கழகம், நூலகம் முதல் இன்று எழுதும் இளம் எழுத்தாளர்கள் வரை அனைத்தையும் பதிவுசெய்தது, முனைவராக காரணமான வழிகட்டி ஐயா ஞானசம்பந்தனை நினைவூட்டியது இப்படி தன்னை செதுக்கியவர்கள் அனைவரையும் வரிசை படுத்திவிட்டார்.

அதே போல் மற்றவர்கள் எழுத்தை பாராட்டுவதில்  அண்ணனுக்கு நிகர் அவரே....

செயற்கரிய செய்வார் பெரியர்... 

உண்மை அண்ணா... நீங்கள் பெரியர்..

நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு நன்றிகள்.


அண்ணன் லோ.குமரன் அவர்கள் வாட்சப் குழுவில்...

-------------------------------------------------------------------------------------------------------------

இவர்களுக்கும் இன்னும் வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவில் வாழ்த்திய,நிகழ்ச்சியைப் பாராட்டிய அத்தனை தோழமைகளுக்கும் நன்றி! நன்றி! 

தோழமையுடன் வா.நேரு


Thursday, 10 February 2022

அனைத்து ஜாதியினரும் நீதிபதிகளாய்.....வா.நேரு

 சிந்தனைக் களம் : அனைத்து ஜாதியினரும் நீதிபதிகளாய்


தந்தை பெரியாரின் 48-ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2021 ஆகும். தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் ஆனபோதிலும், தந்தை பெரியார் காண விரும்பிய புதிய உலகம் இன்னும் அமையவில்லை.கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, நாடாளு-மன்றத்திலே உரையாற்றிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்கள் நீதித்துறை பற்றி தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; ஆனால் அண்மை நிகழ்வுகள் மக்களிடம் சந்தேகங்களை எழுப்பி உள்ளன. அரசுக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு பதவிகள் வழங்கப்படுகின்றன. இத்தனை ஆண்டுகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 5 பேர்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துள்ளனர் என்று கூறிய தயாநிதிமாறன் மேலும் உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இதுவரை கிடைக்க-வில்லை எனவும் கூறினார்."


இந்தியா சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்-பட்டு 75 ஆண்டுகள் ஆன பிறகும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்கூட இருந்ததில்லை. பெண்களும், பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும் இல்லாத நீதிமன்றமாகத்தான் உச்ச நீதிமன்றம் செயல்-படுகிறது. 2021-லும் இதுதான் நிலைமை. தந்தை பெரியார் அவர்கள், சென்னை அய்க்கோர்ட்டில், 23.4.1957இ-ல் தாக்கல் செய்த 'ஸ்டேட்மெண்ட்' புத்தகம், அவரின் அளவற்ற துணிச்சலையும், நீதிமன்றங்கள் பற்றிய அவரின் கருத்துகளையும் தெளிவாகச் சொல்கிறது. புகழ்பெற்ற கலெக்டர் மலையப்பன் குறித்து தந்தை பெரியார் அவர்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லப்பட்ட நிலையில் அதனை மறுத்து தந்தை பெரியார் கொடுத்த ஸ்டேட்மெண்ட் இது.


"பார்ப்பனர் என்பது இந்து மதத்தின்படி வேத சாஸ்திர, புராணங்களின் தன்மையைப் பொறுத்தது. சம்பந்தப்பட்ட கனம் நீதிபதிகள் இருவரும் அந்த வேத சாஸ்திர இதிகாச புராணங்களின் தன்மைப்படி பார்ப்பனர்களாக இருப்பதோடு அவர்களது வாழ்விலும், தொழிலிலும் நடத்தையிலும் மத, வேத, சாஸ்திர, இதிகாச, புராண தத்துவங்களுக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது என்ற உறுதியுடையவர்கள். இவர்கள் மாத்திரம் அல்ல, இந்த நாட்டிலே தங்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்கிற எவரும் இந்தத் தன்மைக்கு மாறாக நடந்து கொள்வதாகக் கூறினால் அது இயற்கைக்கும், உண்மைக்கும் மாறானதாகும். அதே வேத சாஸ்திர புராணங்களின்படி, பார்ப்பனர் உயர்ந்த ஜாதி; மற்றவர்கள் குறிப்பாக இந்தப் புகார் சம்பந்தப்பட்ட தீர்ப்பினால் பாதிக்கப்-பட்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியார் ஆவார்கள். உயர்ந்த ஜாதிக்கும் தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்து சாஸ்திர -புராண -இதிகாசங்களில் பெரிய, கீழ், -மேல் பேதமும், பெருத்த இழிவும், பெருமையும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதை விட்டு-விடுவது என்பது எந்தப் பார்ப்பானானாலும் முடியாததும் விரும்பப்படாததுமான காரியமாகும். மற்றும் மேல் ஜாதிக்காரன் என்கின்ற பார்ப்பானுக்கு இந்த ஜாதி உணர்ச்சியை விடாமல் எந்தத் துறையிலும் காட்டிக்கொள்வதால் மேன்மையும் நல்வாழ்வும் இலாபமும் இருந்து வருகின்றன. அதை இழக்க எந்தப் பார்ப்பானும் சம்மதிப்பான் என்று நம்புவது இயற்கைக்கு விரோதமானதாகும். ஆகையால் இந்தப் பிரச்சனையில் நான் பேசியிருப்பது சம்பந்தப்பட்ட இந்த இரண்டு கனம் நீதிபதிகளையும் தனிப்பட்ட முறையில் குறித்து அல்ல என்பதையும், பார்ப்பனர்கள் எல்லோரையுமே கருத்தில் வைத்து அவர்களுடைய சுபாவத்தை நினைத்து, இதற்குப் பரிகாரம் தேட வேண்டுமென்கிற கருத்திலேயே பேசியிருக்கிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.


அய்யா தந்தை பெரியார் அவர்கள், நீதிமன்றங்களைப் பற்றியும், பார்ப்பன நீதிபதிகள் பற்றியும் பேசியிருக்கும் கருத்துகள் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க வியப்பைத் தருகிறது. அந்த ஸ்டேட்மெண்ட் முழுவதும் எதார்த்தத்தை அப்படியே இன்றைக்கும் இருக்கும் நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. "நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அவசியத் தேவை" என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், (ஜூலை 24, 2021)." "மக்களாட்சி - _ ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகள் 'அனைவருக்கும் அனைத்தும்' என்ற தத்துவத்தின் செயல்பாடாகவே அமைதல் வேண்டும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பலமுறை குறிப்பிட்டுள்ளதுபோல, 'அதிகாரம் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.'


அவ்வகையில் மிக முக்கியமான அமைப்பாக ஆட்சியின் மூன்று அங்கங்களில் ஒன்றாக நீதிமன்றங்களும் உள்ளன. சமூக நீதி கடைப்பிடிக்கப்-படுவது மிகவும் இன்றியமை-யாதது. அவற்றில் நாட்டின் உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற அமைப்புகளில் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சமூக நீதிக்கே அரசமைப்புச் சட்டம் முதலிடமும், முன்னுரிமையும் தந்துள்ளது.


நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் நிறைவேற்றப்-பட்டுள்ள சட்டங்கள் பற்றிய வழக்குகளில் சரியான பார்வையோடு தீர்ப்பு வழங்கிட வேண்டிய மிக முக்கியப் பொறுப்பான அமைப்புகளாக உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உள்ளன. அதோடு, தேவைப்படின் முக்கிய ஆலோசனைகளை அரசுக்குத் தரும் உயர்ந்த இடத்திலும் உச்ச நீதிமன்றம் உள்ளது. இந்நிலையில், சமூகநீதி உணர்வுக்கு உண்மையான செயல்வடிவம் நீதித்துறையிலும் கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமே உண்மையான அதிகாரப் பரவல் நிறைந்த ஜனநாயகக் குடியரசாக ஓர் ஆட்சி அமைய முடியும். பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை.


நாட்டின் உயர் நீதிமன்றங்கள் பலவற்றிலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களைச் சார்ந்த நீதிபதிகளை பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் காண்பது மிகவும் அரிதினும் அரிதாகவே இன்று இருக்கிற கொடுமைக்குப் பரிகாரம் இன்னும் கிடைக்கவில்லை." என்று குறிப்பிட்டிருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் "முன்னாள் தலைமை நீதிபதியான கஜேந்திர கட்கர் ஒருமுறை கூறினார்: 'நீதிபதிகளும், வகுப்பு உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூக அமைப்பின் காரணமாக அப்படிப்பட்ட நிலை இருக்கவே செய்கிறது' என்றார்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி, உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் இன்றைக்கும் இல்லை. இதற்குப் பரிகாரம் தேடவேண்டியதும், அதற்கான போராட்டங்-களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் தந்தை பெரியாரின் நினைவு நாளில் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகளில் ஒன்றாக அமையவேண்டும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் திசம்பர் 16-31,2021

கிரிப்டோ கரன்சி எச்சரிக்கை.....முனைவர் வா.நேரு

 பொருளாதாரம் : கிரிப்டோ கரன்சி எச்சரிக்கை

                 முனைவர் வா.நேரு


கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் நாணயம். டிஜிட்டல் என்றால் நம்மால் ரூபாய் நோட்டைப்போல, 5 ரூபாய் நாணயம் போல கையால் எண்ணிப் பார்க்க, தொட்டுப் பார்க்க இயலாது. 2008இ-ல் சதோசி நகடோமா, தான் உருவாக்கிய டிஜிட்டல் நாணயத்திற்கு பிட்காயின் (Bitcoin) என்று  பெயரிடுகிறார். அவரே தயார் செய்து வெளியிடுகிறார். அப்போது ஒரு பிட்காயின் மதிப்பு 1 சென்ட். 2009இ-ல் ஒரு பிட்காயின் மதிப்பு 27 டாலர்கள். இன்று (22.12.2021) ஒரு பிட்காயின் மதிப்பு 46,859 டாலர். இந்திய ரூபாயில் ஒரு பிட்காயினின் மதிப்பு 35,25,792. இதைப் போல பல கிரிப்டோ கரன்சி நாணயங்கள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டன. எந்த வகை அறிவியல் தொழில்நுட்பம் என்றாலும் அதனை யார் யார் பயன்படுத்துகிறார்கள்? எதற்காகப் பயன்படுத்து-கிறார்கள் என்பதுதான் அடிப்படை. இன்றைக்கு இந்த கிரிப்டோ கரன்சி பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.மதுரையில் ஒரு நபரிடம் ஒரு வீட்டுமனை இருக்கிறது. 1000 சதுர அடி இருக்கிறது. ஒரு சதுர அடி ரூ 1000 என்றால், 1000 சதுர அடி 10 இலட்சம் ரூபாய். மதுரையில் இருக்கும் நபரிடம் ஆன்லைனில் ஒருவர் வருகிறார். அவரிடம் இந்த மனையை 10 இலட்சம் என மதுரைக்காரர் விற்கிறார். வாங்கும் ஒன்றாவது நபர் இன்னொருவரிடம் அந்த மனையை 20 இலட்சத்திற்கு விற்கிறார். 20 இலட்சத்திற்கு வாங்கியவர் சில ஆண்டுகள் கழித்து 30 இலட்சத்திற்கு விற்கிறார். இப்படியே அந்த மனை விலை உயர்ந்து, உயர்ந்து கை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த நிலத்தைப் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. வாங்கி விற்பவர்களுக்கும் பணம் கிடைக்கிறது.


இதையே அப்படியே மதுரையில் இருக்கும் ஒரு நபர் கிரிப்டோ கரன்சியை உருவாக்குகிறார். கிரிப்டோ கரன்சி அசையாச் சொத்தும் அல்ல, அசையும் சொத்தும் அல்ல, அது ஒரு கற்பனை கரன்சி. நம்மூரில் ஏலத்தில் விடுவது போல இல்லாத கரன்சியை அவர் இணையத்தில் ரூ.1000க்கு விற்கிறார். ஏலத்தில் அதனை எடுப்பதுபோல வாங்கியவர் மறுபடியும் ஏலத்தில் விடுவது போல இணையத்தில் ரூ.2000க்கு விற்கிறார். இன்னொருவர் ரூ. 2000க்கு வாங்கி, 4000க்கு விற்கிறார்.  அப்படியே சங்கிலித் தொடராக மாற்றி மாற்றி விற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆயிரம், இலட்சம் என்று மதிப்பு உயர்கிறது. ஒரு கட்டத்தில் ஏலத்தை விடுபவரே ஏலத்தை முடிப்பது  போல கிரிப்டோ கரன்சியைத் தொடங்கியவரே கணக்கை முடித்தவுடன் ஒட்டு மொத்தமாக அந்தக் கரன்சியே முடிந்து விடுகிறது. ஒருவகையில் இது நாமாக ரூபாய் நோட்டை அச்சடிப்பது போலத்தான். ரூபாய் நோட்டு அடித்தால் கள்ள நோட்டு என்று பிடித்து விடுவார்கள். இது டிஜிட்டல் நோட்டு. ஒருவரும் ஒன்றும் செய்யமுடியவில்லை. கிரிப்டோ கரன்சியை உருவாக்குபவர் யார் என்று தெரியவில்லை, எப்படி விற்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் இதனை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்து பணம் பார்ப்பது போல சிலர் பணம் பார்க்கிறார்கள். பலர் கையில் இருக்கும் பணத்தை இதில் போட்டு விட்டு இழந்தும் நிற்கிறார்கள். குதிரைப் பந்தியத்தில் குதிரை மீது பணம் கட்டுவது போல இது ஓர் ஊக வணிகம். இது ஓர் ஒட்டு மொத்த ஏமாற்று வேலை. ஒரு மனிதன் அவனுடைய உழைப்பினாலே, அவனுடைய அறிவினாலே, ஆற்றலாலே அவனுடைய முயற்சியினாலே எதையும் அடையலாம். பகுத்தறிவாளர்கள் என்பவர்களுக்கு குறுக்கு வழியிலே நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு ‘அதிர்ஷ்டம்’ என்பதிலே நம்பிக்கை கிடையாது  என்று அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவார். டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் என்று வருகின்றன. ஆசை ஊட்டுகிறார்கள். இன்று நீங்கள் ரூ. 1 இலட்சம் முதலீடு செய்தால் நாளை மாலையில் உங்களுக்கு 1 இலட்சத்து 80000 கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆம் எனக்குக் கிடைத்தது என்று ஒருவர் சாட்சியாக அதில் பேசுகிறார். குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் என்று பிரார்த்தனைக் கூட்டங்களிலே சிலர் சாட்சி சொல்வதைப் போல கிரிப்டோ கரன்சி மூலம் எனக்கு இவ்வளவு லாபம் கிடைத்தது, அவ்வளவு கிடைத்தது என இணையத்தின் வழியாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். சீனாவில் கிரிப்டோ கரன்சியைத் தடை செய்து விட்டார்கள். நமது நாட்டில் ஒழுங்குபடுத்தப் போகிறோம் என்று சொல்கிறார்கள். கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்துவது என்பது இயலாத காரியம் என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சிறீநிவாசன்.


"இந்த கிரிப்டோ கரன்சியே   கோட்-பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்கும் ஆள்கள் இருக்கும்வரை இது தொடர்ந்து நடக்கும். பிறகு விலை இறங்க ஆரம்பிக்கும். இதனை ஒழுங்குபடுத்துவது குறித்துப் பேசுகிறார்கள். எப்படி இதனை ஒழுங்குபடுத்துவார்கள்? யார் இதனை இயக்குகிறார்கள் என்று தெரியாத-போது யாரை இவர்கள் ஒழுங்குபடுத்துவார்-கள்? அது நடக்காத காரியம்" என்கிறார் ஆனந்த் சிறீநிவாசன்.


தவிர, பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோ கரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் யார் இயக்குகிறார்கள், கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே உலகில் யாருக்கும் தெரியாது. ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து, அது வீழ்ந்து-விட்டால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார் ஆனந்த் சிறீநிவாசன்.


உதாரணமாக, அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்க்விட் கேமை மய்யமாக வைத்து, ஸ்க்விட் காயின் என்ற பெயரில் ஒரு க்ரிப்டோ கரன்சி வெளியானதையடுத்து நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிரிப்டோ கரன்சி துவக்கத்தில் ஒரு சென்ட் மதிப்பில் விற்பனையானது. பிறகு கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு காயினின் விலை 2,861 டாலருக்கு விற்பனையானது.


ஆனால், அன்றைய தினம் அந்த க்ரிப்டோவை உருவாக்கியவர்கள் அனைத்து காயின்களையும் விற்று, பணமாக மாற்றிக்-கொண்டு வெளியேறிவிட ஸ்க்விட் காயினின் மதிப்பு ஒன்றுமே இல்லாமல் போனது.


"இந்தியாவில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. சிலர் ரூபாய் ஆறு லட்சம் கோடி என்கிறார்கள். சிலர் 3 லட்சம் கோடி என்கிறார்கள். அரசு நினைத்தால், வங்கிகளில் இருந்து ஓரளவுக்கு மேல் க்ரிப்டோ முதலீடுகளுக்குச் செல்வதைக் கட்டுப்-படுத்தலாம்; அவ்வளவுதான் செய்ய முடியும்." என்கிறார் ஆனந்த் சிறீநிவாசன்.


இதுதவிர, கிரிப்டோ கரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். அதன் பின்னணிகளைச் சாதாரண முதலீட்டாளர் புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதனை மேலும் சிக்கலாக்குகிறது. உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018இல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோ சந்தையில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது.


ஆனால், முதலீட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டியது, கிரிப்டோ கரன்சி விளம்பரங்களின் கீழே சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தைத்-தான். "க்ரிப்டோ கரன்சிகள் ஒழுங்கு முறைப்படுத்தப்படாத டிஜிட்டல் சொத்துகள். சட்டபூர்வமாக எங்கும் பரிவர்த்தனை செய்யத்தக்கதல்ல. கடந்தகாலச் செயல்திறன் வருங்காலப் பலன்களுக்கு உத்தரவாதம் ஆகாது. முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்" என்கிறது அவ்வாசகம்.


புத்தாண்டில் கையில் இருக்கும் பணத்தை, பேராசைப்பட்டு, கிரிப்டோ கரன்சியில் நாம், பகுத்தறிவாளர்கள் போடப் போவதில்லை. ஆனால், நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் சொல்ல வேண்டும். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது பாதுகாப்பும் அல்ல, நன்மையும் அல்ல. கிரிப்டோ கரன்சி என்பது  ஒரு வகையான  சூதாட்ட முதலீடு. அதில் முதலீடு செய்வதோ அல்லது வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு கடன் வாங்கி அதில் பணத்தைப் போடுவதோ ஆபத்தில் முடியக்கூடும் என்பதை நாம் மற்றவர்களுக்கும் விளக்கிச் சொல்லவேண்டும்


நன்றி : உண்மை மாதமிருமுறை இதழ் ஜனவரி 1-15,2022

Sunday, 6 February 2022

சூரிய கீற்றுகள் - வா.நேரு......வாசுகி தேவராஜ்

 சூரிய கீற்றுகள் - வா.நேரு

*********************************
கவித்துவமான தலைப்புகளைக் கொண்ட 51 சூரிய கீற்றுகளை உள்ளடக்கிய நூல் இது!!
முதல் கீற்றே வயிற்றிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட காதர் மைதீனை தேடவைத்தது.
"ஓடும் வாழ்க்கை" வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் கீற்று. Do or die என்று சொல்லாமல் சொல்லும் கவிதை!!
சராசரி தேவையை கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கு என்ற உண்மை நிலையை உணர்த்தும் கவிதை "மறியலின் மாண்பு"
எத்தனை பெரிய எழுத்துகளை விடவும் "வாழ்ந்து காட்டுதல்" தான் சரியான வழிகாட்டுதல் என சொல்லும் கவிதை "அந்தக் கிழவி"
"ஒழுங்குபடுத்தலும் உழைப்பதுமே வாழ்க்கை" - ஒரு நச் வரி.
"தேவை அல்ல. மனத்தெளிவே" இலஞ்சத்தை ஒழிக்கும் ஆயுதம் என்று அழுத்தமாய் சொல்லும் கவிதை!!
"கெஞ்சியும் குழைந்தும்" பதவிக்கு வருவதற்கான காரணம்... சுளீர் சூடு! சொரனையுள்ளவர்கள் உணரட்டும்!!
"அன்றொரு நாள் கிடைத்த" செறிக்க மறுக்கும் உணவு சாதிய கெளரவ பேய் பிடித்த பெரிய மனிதர்களின் செயல்பாடுகளை உணர வைப்பது!!
"பள்ளிக்கு போகிறேன் நான்
என ஆசைப்படல் வேண்டும்!"
இன்றைய கல்விமுறையில் சாத்யப்படும் காரியமா இது என்று எண்ணுகையில்...
"சர்க்கஸ் கூடாரங்களாய்
கல்வி நிலையங்கள்
வேண்டாம்! வேண்டாம்!!"
உண்மை உமிழும் வரிகள்!!
எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும் சமூகத்தின் ஏளன தூற்றலுக்கு பலமிழந்து தான் போகிறாள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மூடநம்பிக்கைகளுக்கும் உடன்படுவது கொடுமைதான்!!
"அவளா இவள்"
"ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த நாள்
மற்ற நாட்கள் அனைத்தையும் ஆணமையற்ற நாட்களாக்கி விட்டதோ?"
எள்ளல் தொனி கேள்விக்கு பதில் தான் இல்லை!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் நபர்களிடம் கூட நேரம் ஒதுக்க முடியாத விசேச நாட்கள் சலிப்புத்தான்!
"சே! விசேச நாட்கள்!"
"படிப்படியாய் முன்னேறினால்
சிப்பாய் கூட
சிம்மாசானம் அடையலாம்"
என்று சொல்லித்தரும் செஸ் விளையாட்டு "யானை கூட வெட்டப்படலாம்" என்று எச்சரிக்கையும் செய்வது அபாரம்!!
"வலிமையாக ஓடி கொல்ல முடியாமல்
வஞ்சகமாய் வீழ்த்திவிட்டாயடா மனிதா"
எலியின் நிலையிலிருந்து மனிதனிடம் கேட்கும் கேள்வி.
நாட்டில் இருக்கும் பெருச்சாளிகளை பிடிக்க "பெருச்சாளி பேடு" செய்ய இயலுமா எனவும் கேட்பது அரசியல் நையாண்டி!
வார்த்தைகள் கொல்லும் என சொல்லும் "ஏன் திட்டினாய் தம்பி?"
பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வீடியோ காலில் பேசி மகிழ்ந்தாலும் பிள்ளைகள் அருகில் இல்லாத வெறுமையை வேதனையோடு படம் பிடித்து காட்டும் கவிதை "கருவி ஏதும் வருமா?"
வெளிநாட்டிலிருந்தே எரியூட்டவும் கருவி ஏதும் வருமா? என ஏங்குவது வேதனையின் உச்சகட்ட வெளிப்பாடு!!
கடவுளை அழைத்து, "நான் இருக்கும் இடம் இதுவென சொல்லித்தொலையேன். என் மனிதர்கள் கொஞ்சம் நிம்மதி கொள்ளட்டும்" என கடவுளை பகடி செய்யும் கவிதை "எங்கே கடவுள்"
விழா நாட்களில் கூட எல்லா மனிதர்களுக்கும் மகிழ்வை அளிப்பதில்லை என்று சொல்லும் யதார்த்த கவிதை "ஒலிக்கும் வெடிச்சத்தங்கள்"
White collar வேலையில் இருக்கும் மனிதர்களின் குணத்தை பொருட்படுத்தாமல் கொண்டாடும் சமூகம் கீழ்நிலை மனிதர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று வேதனையில் வெளிபட்ட "என்று மாறும் இந்நிலை" படித்துவிட்டு தலைகுனியத்தான் வேண்டியிருக்கு!!
"திணிக்காதீர் உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளின் மேல்!"
இன்றைய கல்வி முறையை சாடும் கனமான கவிதை "மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி..."
வெளிப்பகட்டு வேண்டாம் என்று சொல்வதற்கும் துணிவு வேண்டும். அப்படி துணிந்து சொல்வது தான் "சொல் போதும் எனக்கு"
அம்மாவுக்காக இதயம் தொடும் கவிதை "நிறைந்திருக்கிறாய் அம்மா"
"நிரம்பி வழிகின்றன" நாட்டின் ஏற்றத்தாழ்வு அவலங்களை சொல்லும் கவிதை.
"உலகில் பசிக்கும் குழந்தைகளெல்லாம் என் குழந்தைகள் என மதம் தாண்டி
நாடு தாண்டி
பாலூட்டும் சோறூட்டும் நாள்!"
பசியால் உலர்ந்து - சிலிர்ப்புடன்
தான் அடிமைப்பட்டு கிடக்கிறோம் தம் உணர்வுகள் நசுக்கப்படுகின்றன் என்ற அளவில் கூட புரிதல் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கான கவிதை "பெண் ஏன் அடிமையானாள்?"
"பொய்மை ஆடைகள்" கலைத்து நிர்வாணத்தை நேசிக்கும் நிதர்சனம் இவர் கவிதைகள்!!
"Fuse wire போட்டால் சரியாகும் மின்சாரமா உங்கள் கடவுள்?" என பகடியாக பகுத்தறிவை வித்தைக்கும் கவிஞர், ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் மூடநம்பிக்கையை ஒழிக்க என்ன விரதம் என்று கேட்கிறார்.
பாம்பு அழகாய் படமெடுத்தாலும் கொட்டப்போவதென்னவோ நஞ்சுதான்!!
"உள் மனதின் குரலே பல நேரங்களில் என் கவிதை என்று சொல்லும் இவரின் ஒவ்வொரு கவிதையும் சூரிய கீற்று தான்!!
வாழ்த்துகள் நேரு சார்!!
நேசமுடன்
வாசுகி தேவராஜ்

Saturday, 5 February 2022

துக்கம்.... ....சிறுகதை....வா.நேரு

 துக்கம்....


....சிறுகதை....வா.நேருஅலைபேசியில் பேசும்போதே அழுதுகொண்டேதான் சொன்னாள் தங்கம்.  


"மீராவா? நம்ம காந்தி  மகள் மீராவா??" செல்வம் திரும்பத் திரும்ப கேட்டான்.


 "ஆமாங்க..."


அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சியாக இருந்தது செல்வத்திற்கு. 


'சாகும் வயதா மீராவுக்கு? வயது 22,23 க்குள்தான் இருக்கும். அவளது திருமணத்திற்கு இப்போதுதான் போய் வந்தது போல் இருக்கிறது.ஒரு வருடம் இருக்கும். அதற்குள் இறந்து போனாளா?'  அதிர்ச்சியில் உறைந்த செல்வம் எப்படி இறந்தாள் என்று தன் மனைவி தங்கத்திடம் கேட்டான்.


"அந்தப் பிள்ளை மாசமா இருந்துச்சாம், இப்போத்தான் அவங்க வீடு நம்ம பக்கத்துல இல்லையே,இருந்தாலும் அடிக்கடி பார்த்திருக்கலாம்.மாசமா இருந்த பிள்ளைக்கு மஞ்சக்காமாலை உள்ளுக்குள்ளுயே இருந்திருக்கு,கவனிக்கல போல இருக்கு. சோர்வா இருக்கிறது மாசமா இருக்கறதுன்னாலே என்று நினைச்சுட்டு இருந்துருக்காங்க…

பின்னாடி  கண்டுபிடிச்சு மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்தும் காப்பாத்த முடியலையாம்…

இப்போதுதான் நம்ம ஆபிஸ் பிச்சை எனக்கு போன் பண்ணி சொன்னார்"


"சரி…"போனை வைத்தான் செல்வம். சென்னைக்கு வந்திருந்த செல்வத்திற்கு இன்னும் ஒரு மாதம் சென்னையில் வேலையிருந்தது. மதுரைக்குப் போனவுடன் காந்தியின் வீட்டிற்கு போக வேண்டும், மீரா இறந்த துக்கத்தை விசாரிக்க வேண்டும். காந்தியோடு சேர்ந்து தானும் கொஞ்ச நேரமாவது கதறி அழ வேண்டும் என்று செல்வத்திற்கு தோன்றியது.


மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வசித்தபோது அறிமுகமானவர் காந்தி.கோரிப்பாளையம் சின்னக்கண்மாய் தெருவில் இருந்த ஒரு காம்பவுண்டில் குடியிருந்தபோது அறிமுகமானவர்.சின்னக்கண்மாய்த் தெருவில் பல வீடுகளை வாடகைக்கு விடும் நோக்கில் கட்டப்பட்ட சில காம்பவுண்டுகள் இருந்தன. பக்கத்திலேயே தபால் அலுவலகம்,தொலைபேசி நிலையம்,மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,இராஜாஜி மருத்துவமனை  எனப் பல துறைகளில் வேலை பார்ப்பவர்கள் அந்தத் தெருவில் குடியிருந்தனர்.பக்கத்திலேயே மார்க்கெட்,மருந்துக்கடை,உணவு விடுதி என அந்தத் தெருவில் அருகிலேயே அனைத்தும் கிடைக்கும் தெரு அது.ஆதலால் சின்னச்சின்ன வீடுகளாக இருந்தாலும் பலரும் விரும்பி அந்த வீடுகளில் வாடகைக்கு குடியேறினர்.அப்படி ஒரு காம்பவுண்டில் குடியிருந்தபோது அறிமுகம் ஆனவர் காந்தி.

ஒரே அலுவலத்தில் வேலை,ஒரே காம்பவுண்டில் குடியிருப்பு என்பதால் குடும்பத்தோடு  நெருக்கமானவராக மாறினார் காந்தி. மிக வெளிப்படையான மனிதர். மனதில் எதையும் வைத்துக்கொள்ளத்தெரியாது.எல்லாவற்றையும் பேசிவிடுவார்.பக்கத்து வீடு,ஒரே அலுவலகத்தில் வேலை என்ற  நிலையில்  குடும்ப நண்பராக மாறிப்போனார் காந்தி. 


காந்தியின் மனைவி அரசியும் செல்வத்தின் மனைவி தங்கமும் நெருக்கமானார்கள்.அப்படித்தான் குழந்தைகளும் நெருக்கமானார்கள். செல்வத்தின் மகன் அரசன் தாய்த்தமிழ்ப் பள்ளியில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. படித்தான். அவன் படித்த பள்ளியில் அந்த வகுப்புகளுக்கு மொட்டு,மலர் என்று பெயர் வைத்திருந்தார்கள்.எல்லாவற்றையும் தனித்தமிழில் பேசும் அரசனை,பேச வைத்துக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்த்து.


அதில் மிக முக்கியமானவள் மீரா.செல்வத்தின் மகன் அரசனைவிட 6,7 வயது மூத்தவள்.அரசன் மொட்டு வகுப்பு படிக்கும்போது ,மீரா 6-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.மதுரையின் வடக்கு பகுதியில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற பள்ளியில் படித்த மீரா ,வீட்டில் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் செல்வத்தின் வீட்டில் இருப்பாள்.4 வயதாக இருக்கும் அரசனோடு பேசுவது மீராவுக்கு மிகவும் பிடிக்கும்.


அரசனக்கு ,க,கா,கி,கீ என்னும் உயிர்மெய் எழுத்துகளை வரிசையாகச்சொல்வதற்கு அவன் படித்த தாய்த்தமிழ் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். க என்று ஆரம்பிக்கும் அரசன் வரிசையாக அந்த 216 எழுத்துகளையும் வரிசையாக சொல்லித்தான் முடிப்பான். அரசன் அப்படிக் க,கா,கி,கீ,கு,கூ என்று 216 தமிழ் எழுத்துகளையும் சொல்லி முடிப்பதை கண்களை அகல விரித்து வைத்து  அவ்வளவு ஆர்வமாக மீரா கேட்டுக்கொண்டிருப்பாள். நிறையக் கேள்விகளை மீராவிடம் அரசன் கேட்பான். 


ஒரு நாள் ‘நாம் இருக்கும் தெருவுக்குப் பெயர் சின்னக்கண்மாய் தெரு, அப்படியென்றால் பெரிய கண்மாய்த் தெரு எங்கே இருக்கிறது? ‘ என்று மீராவிடம் கேட்டான்.

அதற்கு  அவள் முழித்த முழி இன்றைக்கும் கூட செல்வத்திற்கு நினைவில் இருக்கிறது. செல்வத்திடம் வந்து ,"மாமா,உங்க மகன் அரசன் ,கேள்வியாக் கேட்கிறான் "என்றாள். செல்வம் சிரித்துக்கொண்டே 'கேள்வி கேட்டால்,பதில் சொல்லு " என்றான்.  


அப்படித்தான் ஒரு நாள் மீராவிடம் சென்ற அரசன், ‘அக்கா ,எனக்கு அழிப்பான் வேண்டும் ‘ என்றான். மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. 


"என்னடா வேண்டும்?" 


 "அக்கா ,எனக்கு அழிப்பான் வேண்டும்" அரசன் மீண்டும் சொன்னான்.


அவள் ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

அதைப்பார்த்து விட்டு அரசன் அவளது பள்ளிக்கூடப் பையைக் கேட்டான். 

மீரா கொடுத்தவுடன் அதில் இருந்த பென்சில் பாக்கெட்டில் இருந்து ரப்பரை எடுத்தான்.


"அக்கா,இதுதான் அழிப்பான்,இது தெரியாதா உங்களுக்கு?" 


"டேய் இதுக்கு பேரு ரப்பர்டா" கலகலவென்ற  சிரிப்புடன் சொன்னாள் மீரா.


 "இல்லை,இல்லை இதுக்குப் பெயர் அழிப்பான்"  அரசன்  மீண்டும் மீண்டும் சொல்ல,அன்று முதல் அரசன் அவளுக்கு  அழிப்பானாகிப்  போனான். வீட்டிற்குள் வரும்போது ‘அரசன்  இருக்கிறானா? ‘என்று கேட்க மாட்டாள்.

’அழிப்பான் ‘ இருக்கிறானா என்று கேட்டுவிட்டுத்தான் வருவாள்.

மீராவுக்கு ஒரு தங்கை இருந்தாள்.தம்பி இல்லை.அரசனைத் தன் தம்பியாகவே நினைத்து அவ்வளவு அன்பு அரசன் மேல் செலுத்தினாள் மீரா.பெரும்பாலும் அரசன் வீட்டில் இருக்கும் நேரங்களில் மீராவும் உடன் இருப்பாள். காந்தியின் வீட்டிற்கும் அரசன் சென்று விளையாடி விட்டு வருவான். 


மீரா பின்பு 10வது படிக்கும் போது காந்திக்கு வெளியூருக்கு மாற்றல் வந்தது. மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றலாகி காந்தி போனபோது,தொடர்பு கொஞ்சம் குறைந்தது. 


எப்போதாவது,மதுரைக்கு வரும் காந்தி,வரும்போது போனில் பேசுவார். செல்வம் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு வருவார்.அரசனிடம் பேசுவார். 


‘அப்பா,அழிப்பானை பார்த்து விட்டு வாருங்கள் ‘ என்று மீரா சொல்லி விட்டிருக்கிறாள் என்று அரசனிடம் வம்பு இழுத்துக்கொண்டு இருப்பார் காந்தி.


கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு குறைந்தாலும்,இரண்டு குடும்பத்திற்கும் இடையே இருந்த அன்பு தொடர்ந்து கொண்டு இருந்த்து. தொலைபேசியின் வாயிலாகப் பேசிக் கொள்வது தொடர்ந்தது. 


சில வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார் காந்தி.மதுரையின் வடக்குப் பகுதியில் தபால் தந்தி நகரைத் தாண்டி புது வீடு கட்டினார். வளர்ந்து வரும் பகுதி அது.தனித்தனியாக வீடுகள். அங்கேயே குடி போனார்.காந்தி  செல்வம் எப்போதும் போல சின்னக்கண்மாய் தெருவிலேயே குடியிருந்து கொண்டு இருந்தான்.


பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்த  மீராவுக்கு சென்ற வருடம்தான் திருமணம் நடைபெற்றது. மீரா காதலித்த பையனுக்கே தன் பெண்ணை மணம் முடித்துக்கொடுத்தார் காந்தி. மதுரையில் நடைபெற்ற திருமணத்திற்கு தான்,தன் மனைவி,தன் பிள்ளைகள் என நால்வரும் சென்றிருந்தனர்.


மணமேடையில் அமர்ந்திருந்த மீரா,சிரித்துக்கொண்டே செல்வத்தின் பக்கத்தில் இருந்த அரசனைப் பார்த்து 

"வாடா,அழிப்பான் வாடா" என்றாள். 


தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மணமகனிடமும் அரசனைப் பற்றி ஏதோ கூற.. அவர் சிரிக்க,இப்போது வளர்ந்து 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அரசன் வெட்கப்பட்டுக்கொண்டு ,செல்வத்தின் பின்னால் வந்து ஒட்டி மறைந்து நின்றது எல்லாம் நினைவுக்குள் ஓடியது செல்வத்திற்கு.


மீராவைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்த்து செல்வத்திற்கு. குழந்தையை இழப்பது என்பது எவ்வளவு பெரிய துன்பம்? அய்யோ,இந்தத் துன்பத்தை காந்தியால் எப்படி தாங்க முடியும்?மீராவின் மேல் உயிரையே வைத்திருந்தாரே மனுசன்…எங்கே போனாலும்,சின்னப்பிள்ளையாக இருக்கும்போது மீராவைக் கூப்பிட்டுக்கொண்டே அலைவாரே,அவளின் படிப்பிற்காக தனிப்பயிற்சிக்காக எங்கெல்லாம் மனிதன் அழைத்துச்செல்வார் என்று மீராவைப் பற்றியும் அவரது தந்தை காந்தியைப் பற்றியுமே நினைவு ஓடிக்கொண்டிருந்தது செல்வத்திற்கு.


மதுரைக்குச்  சென்றவுடன்... காந்தி வீட்டிற்குச்செல்ல வேண்டும். இந்த இறப்பைக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தான் செல்வம்.அதே போல ஒரு மாதம் கழித்து  ரயிலில் வந்து இறங்கியவுடன்,வீட்டிற்கு வந்தவன் உடனே காந்தியின் வீட்டிற்கு கிளம்பினான்.தங்கத்தையும் அழைத்துக்கொண்டு,மதுரை தபால் தந்தி நகரில் இருக்கும் காந்தியின் வீட்டிற்குச்சென்றவன்,வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்து திகைத்தான்.


காந்தி ஒரு வருடத்திற்கு முன்புதான் ஓய்வு பெற்றிருந்தார்.அவர் ஓய்வு பெறும் மாதத்திற்கு முந்தைய மாத்த்தில்தான் மீராவுக்கு திருமணம் நடந்த்து. ஒரு மகளின் திருமணத்தையாவது,தன்னுடைய சர்வீஸ் காலத்திலேயே நட்த்தி விட்டோம் என்னும் திருப்தி காந்திக்கு இருந்தது.காந்தியின் பக்கத்து வீட்டில் விசாரித்தபோது,காந்தி தன் மகள் மீரா இறந்த 10 நாளிலேயே வீட்டைப் பூட்டி விட்டுச்சென்று விட்ட்தாகவும்,இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.


'சே,என்ன இப்படி ஆகிவிட்டது,ஒரு இறப்பைக் கூட உடனே வந்து நம்மால் கேட்க முடியவில்லையே' என்று நொந்துபோனான் செல்வம்.


'நீயாவது உடனே போய் கேட்டிருக்கலாம் அல்லவா?' என்று தன் மனைவி தங்கத்திடம் பாய்ந்தான். 


‘ஏங்க ,அந்த  நேரத்தில் எனக்கே மிகுந்த மனவேதனையாகத்தான் இருந்தது.அந்தக் கொடுமையை என்னத்த போய்க் கேட்க ? என்று நான் போகவில்லை’ தங்கத்திடமிருந்து வந்த பதில் இதுவாக இருந்தது.


காந்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை செல்வத்தால். அவரது அலைபேசி தொடர்பில் இல்லை என்று பதில் வந்தது. 


‘வேறு எண் மாற்றி விட்டாரோ,என்னவோ ? ‘என்றாள் தங்கம்.


மீரா இறந்த துக்கத்தைப் போலவே காந்தியைப் பார்க்க முடியாததும் மிகப்பெரிய துயரமாக இருந்தது செல்வத்திற்கு.


போன முறை ,தான் பிறந்த கிராமத்திற்குப் போனபோது,செல்வத்தின் தாய் மாமன்,’டேய் ,அந்த வீட்டு இறப்பைக் கேட்டு விட்டாயா?’ என்றார்.

’இல்லை மாமா, நாளாகிப் போச்சு,இப்போ போய் கேட்டா ஒரு மாதிரி இருக்காதா?’ என்று கேட்டான் இவன்.

’அவர் இறந்தபிறகு இப்போதுதானே ஊருக்கு வர்ற,போய்க் கேட்டு வந்திரு, நல்லதுக்கு வரலைன்னாலும் பரவாயில்லை,கெட்ட்துக்கு வந்திரணும்.வர முடியலைன்னா,வர்ற சமயத்திலே கேட்டுறனும் ‘என்று சொன்னார்.அதனைப் போலவே அந்த இறப்பு வீட்டில் போய் இழவைக் கேட்டு வந்தான் செல்வம்.


எப்போதோ ஒரு புகழ்பெற்ற பேச்சாளர்,தனது ஒரே மகனைப் பறிகொடுத்த அந்தப் பணக்காரரை தான் ஆறுதல்  படுத்திய விசயத்தை செல்வத்திடம் பகிர்ந்து இருந்தார். 


பெரிய பணக்காரர்.வீடு,வாசல்,நில புலன் என்று மிகச்செல்வாக்கு உள்ள மனிதர்.அவரது ஒரே மகன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி ,உயிரிழந்த போது அப்படியே கவலைப் படுக்கையில் படுத்து விட்டார். 

நான் இலக்கிய எடுத்துக்காட்டுகளைச்சொல்லி அவரைத் தேற்றினேன் என்று அந்தப் பேச்சாளர் சொல்லியதெல்லாம்  நினைவுகளில் ஓடியது செல்வத்திற்கு. 


காந்தியைப் பார்த்தவுடன் அவரிடம் என்னவெல்லாம் சொல்லி அவரை எப்படியெல்லாம் தேற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தான் செல்வம்...


ஒருநாள் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் உள்ள வங்கியின் முன்னால் காந்தி நிற்பது  தெரிந்தது செல்வத்திற்கு. 


மதுரை கீழமாசி வீதிக்குப் போகவேண்டும் என்று போய்க்கொண்டிருந்த செல்வம், டக்கென்று மோட்டார் சைக்கிளை ஓர் ஓரமாக நிப்பாட்டி விட்டு ,காந்தி நின்ற இடத்தில் பார்த்தான்.காந்தியைக் காணவில்லை.


'இப்போதுதானே பார்த்தோம்? அதற்குள் காணவில்லையே…'  என்று சுற்றி முற்றி,சுற்றி சுற்றிப் பார்த்தான். பின்பு தான் பார்த்தது வேறு ஆளாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.


அன்றைக்கு திருமங்கலம் டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து,மதுரை தல்லாகுளத்திலிருந்து  திருமங்கலத்திற்கு போய்க்கொண்டிருந்தான்.மதுரை பெரியார் பேருந்து  நிலையத்தில் பேருந்து நின்றது. அடுத்த பிளாட்பார்மில் காந்தி நிற்பது  தெரிந்தது செல்வத்திற்கு. 


திருமங்கலம் போவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு,அரக்க பரக்க இறங்கி,அடுத்த பிளாட்பாரத்திற்கு ஓடினான் செல்வம். கண நேரத்தில் காந்தியைக் காணவில்லை.சுற்றி சுற்றிப் பார்த்தான்.காணோம்.செல்வம் இறங்கிய திருமங்கலம் வண்டி ஏற்கனவே போயிருந்தது.அடுத்த பேருந்தைப் பிடித்து திருமங்கலத்திற்குப் போனான்.


இன்றைக்கு மதுரை காந்தி மியீசியத்திற்குப் போயிருந்தான். அங்கு இருக்கும் நூலகம் செல்வத்திற்கு எப்போதும் பிடிக்கும்.மாதம் ஒரு முறை நூல் அறிமுகம் செய்வார்கள்.காந்தியாரின் நினைவுச்சொல்லும் பெரும் பரப்பிடம் அது. தூரத்தில் காந்தி  நிற்பது போலத் தெரிந்தது செல்வத்திற்கு.


பின்னால் இருந்து பார்த்த செல்வத்திற்கு,அவர் காந்தி மியூசித்தைப் பார்த்தவண்ணம் ,முன்னால் பார்த்தவாறு இருப்பதுபோலத் தெரிந்தது.எதுவும் சொல்லாமல் காந்தியின் அருகில் சென்ற செல்வம் ‘காந்தி ‘ என்று சொல்லி மெல்லக் காந்தியைத் தொட்டான்.


பின்னால் திரும்பிப் பார்த்த காந்தி செல்வத்தைப் பார்த்தவுடன் ஓவென்று அழுதுவிட்டார்.


 "ஏய்யா,என்னை இப்படித் துரத்தித் துரத்திக் கொல்ற,என் மகள் இறந்த துக்கத்திலிருந்து என்னாலே விடுபடவே முடியலை.வேறு வீடு மாறி,2,3 மாதம் வீட்டுக்குள்ளேயே கிடந்தேன்.இப்போத்தான் வெளியில வர்றேன்… உன்னையைப் பாத்தா என் மகள் ஞாபகம்தான் வருது.ஒவ்வொரு இடத்திலயும் உன்னையைப் பார்த்துப் பார்த்து ஒளியறனே,என்னையை விடாம துரத்திரயே இப்படி" அழுதுகொண்டே, நிறுத்தியிருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார் காந்தி. திகைத்து நின்றான் செல்வம்.

Thursday, 3 February 2022

”திராவிடப் பொழில்” இதழில் வைக்கம் போராட்டம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை....

 வணக்கம்,


நான் வாருங்கள் படிப்போம் குழுவில் உள்ளேன். ”திராவிடப் பொழில்” இதழில் வைக்கம் போராட்டம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.


எனக்கு மிகவும் பிடித்த மனிதரை பற்றிய ஒரு கட்டுரை என்பதால் உடனே வாசிக்க ஆரம்பித்தேன்.


வைக்கம் போராட்டத்தைப் பற்றி இதற்கு முன்பு வாசித்திருந்தாலும், அதைப் பற்றிய ஒரு விரிவான பார்வை இந்த கட்டுரையின் மூலமாக கிடைத்தது. அதற்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு வரலாற்று நிகழ்வினை முழுமையாக புரிந்து கொள்வதற்கு, அன்று இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல் மற்றும் அச்சமூகத்தின் வரலாற்று போக்கு ஆகியவையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பது எனது புரிதல். 


எனவே இக்கட்டுரையின் முதல் பகுதியில் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தின் வரலாறு மற்றும் அன்று அங்கு இருந்த சமூக சூழல் மற்றும் மக்களின் சாதிய கட்டமைப்பை விளக்கி இருப்பது இப்போராட்டம் தோன்றுவதற்கான காரணங்களை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவியாக இருந்தது.


இந்தியாவில் நடந்த பல சமூக நீதி போராட்டங்களுக்கு வைக்கம் போராட்டமும் அதில் தந்தை பெரியாரின் பங்கும் ஒரு முன்னோடியாக இருந்தன என்று  நீங்கள் குறிப்பிடிருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.


அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இப்போராட்டம் ஒரு உத்வேகத்தை அளித்தது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருந்தது. இதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.


பெரியாரின் வாழ்க்கை போராட்டமும், பிரச்சாரமும் இணைந்த வாழ்க்கை என்று விளக்கியிருப்பது சிறப்பு. அதை வைக்கம் போராட்டத்தின் மூலமாகவும் உணர முடிந்தது. 


அன்புடன்,

சிபி மாறன்.

https://dravidapozhil.pmu.edu/