Sunday 30 April 2023

சமத்துவ சமுதாயம் படைக்க

                                 சமத்துவ சமுதாயம் படைக்க



நாட்டில் உள்ள செல்வந்தர் எல்லாம்

நன்றி செலுத்துகிறான் கடவுளுக்கு...

அவன் அப்படி

செல்வந்தனாய் இருக்கக் கடவுள்

காரணமென அவன் நினைக்கிறான்...

அவன் கும்பிடுகிறான்..


அடுத்த வேளை உணவுக்கு

அல்லாடும் உனக்கு எதற்கு

கடவுள் நம்பிக்கையும்...

கடவுளுக்கு நன்றி சொல்லலும்

என்று கேட்டார் பெரியார்...


நியாயமாக உழைத்து ஓடாய்த்

தேயும் மாந்தருக்கு எல்லாம்

கடவுள் மேல் கோபம் வரவேண்டும்..

அப்படி ஒருவன் இருப்பதாக எண்ணினால்

அவனை வசைபாடிக் குவிக்க வேண்டும்..

எத்தனை வேறுபாடுகள் 

உழைக்கும் எங்களுக்கு உள்ளே..

எல்லாம் வந்தது உன்னாலே

எனும் ஆத்திரம் வரவேண்டும் அவன்மேலே...


கடவுள் என்னும் கட்டு

எப்படித் தொழிலாளர்களைக்

கட்டிப்போட்டு இருக்கிறது

என்பதனை இந்தியாவில்

கண்டுபிடித்தவர்கள் அண்ணலும் அய்யாவும்..


ஆதலால்தானோ புரட்சிக்கவிஞர்

'கடவுள் என்னும் கட்டறுக்க

தொழிலாளரை ஏவுவோம்' என்றார்


உழைக்கும் தொழிலாளி 

ஓராயிரம் ஜாதிகளாய்ப்

பிரிந்து கிடக்கிறான் இங்கே...

புரட்சி வரல் இந்த நாட்டில்

சாத்தியமில்லை என்றார் அண்ணல்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே...


இன்றைய நவீன அறிவியலும்

மிகத்தெளிவாகச்சொல்கிறது..

மரபணுக்களின் வழியே

ஆய்ந்து அறிந்து சொல்கிறது..

எல்லா ஜாதிகளும் கலப்புகள்தான்

தூய ஜாதி என எதுவுமில்லை என்று...


மே நாளில் உறுதியேற்போம்..

உழைக்கும் தோழர்களைப் பிரிக்கும்

ஜாதியை சவக்குழிக்கு அனுப்புவோம்..

சமத்துவ சமுதாயம் படைக்க

உழைக்கும் அணியில் நாமும் 

இணைந்து உழைப்போம்...

'மே தினம் வாழ்க!வாழ்க!

உழைப்போர் வாழ்க! வாழ்க!


                              வா.நேரு,

                              01.05.2023


Saturday 29 April 2023

அறிவுச்சுடர் வலைக்காட்சியில்....புரட்சிக் கவிஞரைப் பற்றி



நம் மனதெல்லாம் நிறைந்திருக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று ..ஏப்ரல் 29,2023.புரட்சிக் கவிஞரைப் பற்றி ஒரு 10 நிமிட உரை.அறிவுச்சுடர் வலைக்காட்சியில். கேட்டுப்பாருங்கள்.நன்றி.



https://youtu.be/6BhlrSU4ig0

Thursday 27 April 2023

மனதில் நிறுத்துங்கள்....

                 மனதில் நிறுத்துங்கள்....


நமுக்குள் சின்னச்சின்ன

முரண்கள் இருக்கும்

இயக்கத்திற்குள் எப்போதும்

போட்டிகள் இருக்கும் 

பொறாமைகள் இருக்கும்

எது எது இருப்பினும்

நம் பொது எதிரி

நாணயமில்லாதவன்

நய வஞ்சகன்

என்பதை மட்டும் 

மனதில் நிறுத்துங்கள்..


அவனது கண்ணை 

தமிழ்நாடு எப்போதும்

உறுத்துகிறது...


ஒரு நூற்றாண்டாய்

இந்தி வேண்டாம் போடா

என எதிர்க்குரல் எழுப்பி

போர்க்குணம் குறையாமல்

இருக்கும் குணம்

கண்ணை உறுத்துகிறது..


பல மதங்கள் எனினும்

தமிழ் நாட்டிற்குள்

இழையோடும் மனிதநேயம்

அவர்களுக்கு

இடைஞ்சலாக இருக்கிறது...


ஆத்திகனும் நாத்திகனும்

ஒன்றாய் இணைந்து

சமூக நீதி வேண்டும் 

என எழுப்பும் குரல்...

அதை இந்தியா முழுமைக்கும்

பரப்பும் குரலாய் விரிவது

அவர்களின் இருப்பிற்கு

மிகப்பெரும் ஆப்பு 

எனப்புரிகிறது அவர்களுக்கு..


எந்த மதமாக இருந்தால் என்ன

எந்தச்சாதியாக இருந்தால் என்ன

நாம் மனிதர்கள்

என்னும் உணர்வை ஊட்டிய

பெரியாரின் பெயரைக் கேட்டாலே

திகுதிகுவென எரிகிறது....


பெண்ணுரிமைத் தத்துவம்

மனுநீதிக் காவலாளிகளின் 

மண்டையைக்  குடைகிறது...


தொலைபேசி அலைபேசி

எதுவாயினும் 

நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும்

கண்காணிக்கப்படுகிறது...

பதிவு செய்யப்படுகிறது...


எவரையேனும் திட்டவேண்டுமா..

நேரில் செல்லுங்கள்

திட்டித் தீர்த்துவிட்டு 

திரும்பி விடுங்கள்

சில நேரம் உறவு முறியலாம்

சில நேரம் உறவு 

இன்னும் கூட நெருக்கமாகலாம்...!


நம் பரம்பரை எதிரிகள்

நாணயமில்லாதவர்கள்...

தன் கட்சிக்காரனையே

...  ...  ...

கூடுவதைப் படம் எடுத்து

பயமுறுத்துபவர்கள்....

இது கேமிராக்களின் காலம்..

ஒட்டுக்கேட்கும் கருவிகளின் காலம்!


நமக்குள் ஏதும் பிணக்கு வராதா?

பிளவுகள் ஏதும் நேராதா?

எனப் பிணம் தின்னக் 

காத்திருக்கும் கழுகுபோலக் 

காத்துக்கிடப்பவர்கள்!அதற்காகக்

காதைத் தீட்டிக் கொண்டிருப்பவர்கள்...

அவர்களின் காதுகளுக்கு தீனியாய்

எதையேனும் கொடுத்து விடாதீர்கள்..


நம் பரம்பரை எதிரிகள்

இட்டுக் கட்டி எழுப்பும்

பொய்ப்பரப்புரைகளுக்கும் 

இரையாகி விடாதீர்கள்...

உண்மை போலத்தோன்றும்

பொய்கள்தான் அவர்களின் மூலதனம்..

நம் பொது எதிரி

நாணயமில்லாதவன்

நய வஞ்சகன்

என்பதை மட்டும் 

மனதில் நிறுத்துங்கள்.


                     முனைவர்.வா.நேரு,

                       27.04.2023








.




Tuesday 25 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(9).... முனைவர்.வா.நேரு

 

                                            கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்பதே...


23.04.2023... உலகப்புத்தக நாள். எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்களிடம் பகிர்ந்துகொண்ட புத்தகங்கள்,அதன்மூலமாக பகிர்ந்துகொண்ட கருத்துகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.அருப்புக்கோட்டை கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த பேரா.ச.மாடசாமி அவர்கள் 'எனக்குரிய இடம் எங்கே ?' என்னும் நூலை எழுதியிருக்கின்றார்.தான் பணியாற்றிய அனுபவங்களை வைத்து புனைவுகளையும் இணைத்து சொல்லப்பட்ட ஓர் அருமையான நூல் அது.கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும்,ஒவ்வொரு மாணவிக்கும் 'அவர்களுக்குரிய இடத்தைக்' காட்ட வேண்டியது ஓர் ஆசிரியரின் கடமை என்பதையும்,நன்றாகப் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு மட்டுமே வகுப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்படுவதையும் குறிப்பிட்டு எழுதியிருப்பார். நன்றாகப் பாடத்தைப் படிப்பவர்கள் மட்டும்தான் நல்ல மாணவர்களா? இசையில்,ஓவியத்தில் ,விளையாட்டில்,கவிதை,கதை,கட்டுரை எழுதுவதில் எல்லாம் வல்லவர்கள் நல்ல மாணவர்கள் இல்லையா என்னும் கேள்வியை எழுப்பியிருப்பார்.அவர்கள் எல்லாம் அடையாளம் காணப்படாததால்,ஆசிரியர்கள் அவர்களுக்குரிய இடத்தைக் காட்டாததால் நிகழும் நிகழ்வுகளை அந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருப்பார்.

பேரா.ச.மாடசாமி அவர்கள் 'வகுப்பறையில் கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்பதுதான் ஓர் ஆசிரியரின் வேலை ' என்று குறிப்பிட்டிருப்பார்.


கலங்கிய கண்களை அவ்வளவு எளிதாகக் கண்டு பிடிக்க முடியுமா? கலங்கிய கண்களுக்கு தன் ஆசிரியர் ஆறுதலைக் கொடுப்பார் என்னும் நம்பிக்கை வரவேண்டும். தனக்கோ தன் குடும்பத்திற்கோ இருக்கும் பாதிப்பை தனது ஆசிரியரிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்னும் எண்ணம் வருமளவிற்கு மாணவனுக்கோ மாணவிக்கோ தன் ஆசிரியரிடம் பிடிப்பும் அன்பும் வ்ரவேண்டும்.ஒரு முழுமையான ஜனநாயகப்பண்பு உள்ள வகுப்பறைக்குள்தான் இவையெல்லாம் சாத்தியம்.அன்றைய வகுப்பறைகள் எப்படி இருந்தன?..மாற்றம் எப்படி ஏற்பட்டது..

(அவர் வேலை பார்த்த தேவதானப்பட்டி பற்றி இன்றைய இணையதளம் தரும் செய்திகள்)

தேவதானப்பட்டி (ஆங்கிலம்:Devadanapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது வத்தலகுண்டு - பெரியகுளம் நெடுஞ்சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,952 மக்கள்தொகையும், 6 உட்கிடை கிராமங்களும் கொண்ட தேவதானப்பட்டி பேரூராட்சி, 14 சகிமீ பரப்பும், 4298 குடியிருப்புகளும், 18 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்தப் பகுதி தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர்.

இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.

இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு தொடக்கப்பள்ளியும், ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியும் , இன்னொரு தனியார்  தொடக்கப்பள்ளியும் உள்ளன . இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவையும் உள்ளன. இங்கு வாரந்தோறும் கூடும் சந்தையில் காய்கறிகளும், மளிகை சாமான்களும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன.


நான் பெரியகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்தபொழுது தேவதானப்பட்டிபோயிருக்கிறேன்.பெரியகுளம்,தேவதானப்பட்டி,வத்தலக்குண்டு எல்லாமே பச்சைப்பசேல் என்று இருக்கும் வயல்களால் நம்மை வரவேற்கும் பூமி.கொடைக்கானல் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்...அந்த இடத்தில் 70களின் தொடக்கத்தில் வேலை பார்த்த அனுபவம் இதோ என் தலைமை ஆசிரியர் மொழியில்


" தேவதானப்பட்டிக்கு அருகில்தான் எனது சொந்த ஊர்.நத்தத்திலிருந்து தேவதானப்பட்டிக்கு மாறுதல் கேட்டிருந்தேன்.கொடுத்து விட்டார்கள்.அப்போதுதான் எனது துணைவியாருக்கும் பணி வாங்கினோம்.தேவதானப்பட்டியிலேயே அவர்களும் கணித ஆசிரியராக இருந்தார்கள்.அங்கே எப்படி இருந்தது என்றால் ஆக மோசமாக இருந்தது.இடம் இல்லை.நாடார் பேட்டையில்தான் பள்ளிக்கூடத்தை வைத்து இருந்தார்கள்.ஒரு சத்திரம் மாதிரி இருந்தது.வகுப்புகளை பிரிப்பதற்கு ஊடே ஊடே மூங்கில்தட்டிகள்தான் பார்ட்டிசன்...தரையில்தான் பிள்ளைகள் அனைவரும் உட்காரவேண்டும்.பர்னிச்சர்கள் எல்லாம் இல்லை.

பண்ணைக்காடு,நத்தத்தில் எல்லாம் மாணவ,மாணவிகள் அமர்வதற்கு பர்னிச்சர் இருந்தது.இங்கு இல்லை.நான் நத்தத்திலேயே பணியைத் தொடர்ந்திருந்தால்  அந்தப் பள்ளியை இன்னும் நன்றாகக் கொண்டு போயிருக்கலாம்.நத்தத்தில் நிறைய முஸ்லீம்கள்.பள்ளியின் மேல் அவ்வளவு ஈடுபாடு,மரியாதை.எல்லோருமே பெரிய,பெரிய பணக்காரர்கள்.நான் முழுமையாக என் ஆற்றலைப் பயன்படுத்தும் அளவிற்கு தேவதானப்பட்டி பள்ளி இல்லை..

இருந்தாலும் கூட நாங்கள் பணியாற்ற ஆரம்பித்த காலத்தில் இருந்த நிலைமையைக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.கல்லூரிப் படிப்பை முடித்த பலரும் விழிப்புணர்வு அடைந்தார்கள். படிப்பின் மேன்மையை உணர்ந்தார்கள்.கல்லூரிப் படிப்பை முடித்து கிராமங்களில் போய் பணியாற்ற ஆரம்பித்தார்கள்.தாங்கள் பெற்ற விழிப்புணர்வை கிராமங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள்.பட்டதாரி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் எல்லோருமே மனச்சாட்சிக்கு உண்மையாக இருந்தார்கள்,பணியில் மிக உண்மையாக இருந்தார்கள்.

எப்படிப்பட்ட பின் தங்கிய ஊராக,கிராமமாக இருந்தாலும் கூட பட்டதாரி ஆசிரியர்கள் நன்றாக இருந்தார்கள்.அவர்களிடம் இருவழிப்பாதை இருந்தது. தாங்கள் மட்டும் பேசுவது வகுப்பு அல்ல,மாணவர்களும் பேசவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தினார்கள்.எப்படி என்றால் மாணவர்கள் வகுப்புகளில் கேட்கலாம்,என்னனாலும் கேட்கலாம்.பாடம் தெரியலைன்னு கேட்கலாம்.'நீங்க இப்படி எல்லாம் செய்றீங்களே சார்-ன்னு கேட்கலாம்.கல்லூரியில் படித்த மெஜ்ஜூரிட்டி இருந்ததால்,அது அந்தப் பக்கம் கிராமத்திற்கும் வந்துவிட்டது.எப்படி கல்லூரியில் எங்களை ஆசிரியர்கள் கேள்வி கேளுங்கள்,கேள்வி கேளுங்கள் என்று ஊக்கப்படுத்தி கேள்வி கேட்க வைத்தார்களோ அது போல, பட்டதாரி ஆசிரியர்கள் கிராமப்புற மாணவ,மாணவிகளைக் கேள்வி கேட்கத்தூண்டினார்கள்.

மாணவர்களுடைய கேள்விகள் ,எங்களுக்கு நம்முடைய குறை என்ன என்பதனை தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.மாணவர்களைக் கேட்கலாம் என்று அனுமதித்தால் " சார், நேற்று நீங்கள் இதைச்சொல்லிக் கொடுத்தீங்க,விளங்கவே இல்லை சார்" என்று எந்திரிச்சு சொல்லிடுவான் . இது எப்போ? படிப்பறிவே வராத காலம் அது(1966-67) அதுவுரை வகுப்பறைகள் ஒரு வழிப்பாதையாக இருந்தது. ஆசிரியர் மட்டும்தான் பேசுவார்.ஆசிரியர் சொல்வதுதான் சரி என்று துவக்கப்பள்ளி முதல் இருந்தது.நாங்கள்தான்,பட்டதாரி ஆசிரியர்கள்தான் இதனை உடைக்கின்றோம்.அவனைக் கேள்வி கேட்க வைக்கிறோம்.கேள்வி கேட்பதை அனுமதிக்கிறோம்.கேட்பதை பகைமையாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை." என் கீழேதாண்டா ,நீங்கள் இருக்கணும் ' என்று நாங்கள் நினைக்கவில்லை.அது ஒரு மிகப்பெரிய மாற்றம்.எழுச்சி.அரசாங்கம் அதனை எதிர்பார்த்தார்களோ இல்லையோ,அது ஒரு மிகப்பெரிய புரட்சி.

அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் இல்லாமல் தேவதானப்பட்டி பள்ளி இருக்கிறது.அதோடு அப்போதெல்லாம் உயர் நிலைப்பள்ளியை ஊருக்குக் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் பணம் கட்டவேண்டும்.அந்தப்பணம் கூட கட்டாமல் இருக்கிறது அந்த ஊரில்.அங்கு இருக்கிற எல்லோருமே ஏழைகள் இல்லை.பணக்காரர்களும் அந்த ஊரில் இருக்கிறார்கள்.அரசாங்கத்திடம் இருந்து அந்தப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியருக்கு ஓலை வந்துவிட்டது.இந்த ஆண்டு மார்ச்சு மாதத்திற்குள் பணம் கட்டவேண்டும்,இல்லையெனில் ஒன்பதாம் வகுப்பு மூடப்படும் என்று ஓலை வந்துவிட்டது.அப்போது இருந்த தலைமை ஆசிரியரும் நானும் மீட்டிங் போட்டுப்பேசினோம்.

பணம் கட்ட என்ன செய்யுறது?மக்கள் கிட்ட போகத்தைரியம் இல்லை.போனால் என்ன ஆகுமோ?ஏது ஆகுமோ? இப்படி எல்லாம் ஒரு பயம்.தலைமை ஆசிரியரிடம் நான் பேசினேன். " சார்,வாங்க,பஞ்சாயத்துத் தலைவர்,பெரிய பணக்காரர்.அவர்தாம் ஊர் மக்களை எல்லாம் ஆளுமை செய்பவர்(கட்டி மேய்ப்பவர்).அவரை வீட்டிலேயே போய் எல்லோருமாகச்சேர்ந்து பார்ப்போம்.என்ன சொன்னாலும் சரி,அதனை எதிர்கொள்வோம்.அரசாங்கத்திடமிருந்து வந்த அந்தத் தபாலையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவரைப் போய்ப் பார்த்தோம்.


                                                                                                                                (தொடரும்)

Saturday 22 April 2023

புத்தகமும் நானும்(2)...முனைவர் வா.நேரு

புத்தகம் படிப்பது மகிழ்ச்சி என்பது மனதில் மிக அழுத்தமாக சிறு வயதில் இருந்தே ஒட்டிக்கொண்டது. நல்ல புத்தகம் நம்மை உயர்த்தும் என்பது என் வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது. " ஒரு கதையோ கவிதையோ படிப்பதற்கு முன் இருந்ததை விடவும் படித்து முடித்ததற்குப் பிறகு வாசகர் தன் மனதளவில் ஓரலங்குலமாவது வளர்ந்திருப்பாரேயாகில் அந்தப் படைப்பு,அந்த எழுத்து நல்ல எழுத்து என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம் " என்று ஒரு நூலில் எழுத்தாளர் திலகவதி கூறியிருப்பார். உலகப்புத்தக நாளில் நல்ல புத்தகங்கள் பற்றியும் புத்தகங்களை நேசிக்கும் மனிதர்களைப் பற்றி நினைப்பதும் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.2017-ல் புத்தகமும் நானும் என்று எழுதிய கட்டுரைக்கு பலர் கொடுத்திருந்த பின்னோட்டம் உற்சாகம் கொடுத்தது.2023-ல் இரண்டாவது கட்டுரை. 

 கடந்த 6 ஆண்டுகளில் புத்தகமும் நானும் என்று சிந்திக்கும்போது,முதலில் நினைவுக்கு வருபவர்கள் தோழர் அகனும் தோழர் பொள்ளாச்சி அபியும்.இருவருமே படைப்பாளர்கள். 'எழுத்து' என்ற இணையதளத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள்.இருவரும் தாங்கள் எழுதுவது மட்டுமல்ல, எழுதுகின்ற மற்றவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுப்பவர்கள். தோழர் பொள்ளாச்சி அபியின் ;எங்கேயும் எப்போதும் 'என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் தோழர் அகன் அவர்களின் முயற்சியால் வெளிவந்தது.பலரின் பாராட்டைப் பெற்றது. தோழர் அகன் அவர்கள் அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் மாணாக்கராய்,அவரைப் பற்றிய நூல்களை,கவிதைகளைத் தொகுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.அவரும் படைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.மகிழ்ச்சி. 

 தோழர் அகன் அவர்கள் 'வல்லினச்சிறகுகள் 'என்னும் மின் இதழை ஆரம்பித்தார். உலகம் முழுவதும் எழுதிக்கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்து பெண் ஆளுமைகளை ஆசிரியர் குழுவில் இணைத்தார்.முழுக்க முழுக்கப் பெண்களின் படைப்புகள்தான் நூற்றுக்கு 90 சதம் அந்த இதழில் இடம்பெற்றன.என்னிடம் நூல் மதிப்புரைகள் நீங்கள் இந்த 'வல்லினச்சிறகுகள் 'இதழில் எழுதவேண்டும் என்றார்.மகிழ்ச்சியாக எழுத ஒப்புக்கொண்டு தொடர்ந்து எழுதினேன்.பல பெண் எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதினேன்.'சங்கப்பலகை; என்னும் தொகுப்பு நூலாக அவரே பதிப்பித்தும் கொடுத்தார்.அது தவிர 'சொற்களின் கூடுகளுக்குள் 'என்னும் அடுத்த கவிதைத் தொகுப்பு நூலும் அவரே பதிப்பித்துக்கொடுத்துள்ளார்.மகிழ்ச்சியான தோழமை. 

 அதைப்போல இயக்கத்து தோழராக இருந்தாலும் எப்படிப்பட்ட புத்தக நேசிப்பாளர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்தக் காலகட்டத்தில் அமைந்தது. எனது சிறுகதைகளைத் தொகுத்து 'நெருப்பினுள் துஞ்சல் ' என்னும் சிறுகதைத் தொகுப்பாக அவரின் எழிலினி பதிப்பகம் சார்பாக வெளியிட்டார். கொரோனா காலகட்டத்தில் அவர் சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு இரண்டு அருமையான சிறுகதைத் தொகுப்புகளை கொடுத்துள்ளார். 'வாருங்கள் படிப்போம் ' என்னும் குழுவினை பேரா.உமா மகேசுவரி அவர்களுடன் இணைந்து ஆரம்பித்து,தொடர்ந்து அருமையான புத்தகங்களை சூம் வழியாக வாரந்தோறும் நூல் திறனாய்வுகளைக் கேட்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்..

 வாருங்கள் படிப்போம் என்னும் குழுவின் மூலமாக பல எழுத்து ஆளுமைகளை அறிந்துகொள்ளவும்,அவர்களின் எழுத்துகளை வாசிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. 'வாருங்கள் படைப்போம்' என்னும் குழுவை தோழர் வினிதா மோகன் அவர்களுடன் இணைந்து அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் ஆரம்பித்து,வாரம் ஒரு படைப்பாளர் என்ற முறையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அருமையாக நடந்து கொண்டுள்ளது.'வாருங்கள் படைப்போம் ' குழுவில் படைப்பாளராக என்னை தோழர் அர்ஷா அவர்கள் பேட்டி எடுத்ததும்,பல விடயங்களை மனம் விட்டுப்பேச முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. சக எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள்,அவர்கள் எண்ணம் என்ன?...எழுத்தை எழுத எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்,எப்படி அதனை விளம்பரப்படுத்துகிறாகள்,எழுத்தாளர்களுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று பல கோணங்களில் புரிந்து கொள்ள உதவும் நேரம் இந்த படைப்பாளர் நேரம்.அண்ணன் எல்.குமரன்,இளங்கோ,தோழர்கள் சுனிதா,வினோத் பரமானந்தன்,தங்கைகள் மலர்விழி,சித்ராதேவி எனப்பலர் இந்தக் குழுவின்மூலம் அறிமுகமானவர்கள்.தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் குமரேசன் போன்ற ஆளுமைகளை எல்லாம் நெருக்கமாக உணர்ந்து கொள்ள உதவிடும் குழு இது. 

 திராவிடப்பொழில் என்னும் ஆராய்ச்சி இதழ் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் வேந்தர்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,அந்த இதழின் ஆசிரியர் குழுவில் என்னை இணைத்து அறிக்கை வெளியிட்டார்கள்.வாழ்வில் மிக்க மகிழ்ச்சியான தருணம் அது.2021 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த ஆராய்ச்சி இதழ் மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன்,பாரிஸ் பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான் இரவிசங்கர்,பழனி பேரா.ப.காளிமுத்து,பேரா.நம்.சீனிவாசன்,சிங்கப்பூர் பேரா.சுப.திண்ணப்பன்,முன்னாள் துணைவேந்தர் பேரா.ஜெகதீசன்,முன்னாள் திட்டக்குழுத்தலைவர் அய்யா முனைவர் நாகநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருக்கும் அந்தக் குழுவில் இருந்து செயல்படுவது பல புதிய வெளிச்சங்களை எனக்குக் காட்டியுள்ளது.  

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல்,ஆய்வுக்கட்டுரைகளை எழுத்தாளர்களிடமிருந்து வாங்குதல் எனப் பல புதிய அனுபவங்களைக் கொடுப்பதாக திராவிடப்பொழில் இதழ் அனுபவம் அமைந்திருக்கிறது.தோழர் மு.சங்கையா,தோழர் ஓவியா,அண்ணன் ஆ.செல்லப்பாண்டியன்,பேரா.மு.சு.கண்மணி எனப்பலரின் கட்டுரையைப் பெற்றதும் அது திராவிடப்பொழில் இதழில் வெளிவந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. 

 மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 2010-ல் முனைவர் பட்டம் கொடுத்தது. அப்போதே அந்த ஆய்வேட்டை புத்தகமாக ஆக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.என்னுடன் வேலை பார்த்த அண்ணன் சு.கருப்பையா அவர்கள் ,ஆய்வேட்டைப் புத்தகமாக கொண்டுவர முயற்சி எடுங்கள் என்றார். இந்த ஆண்டு எனது ஆய்வேட்டின் நூலாக்கம் 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும் தலைப்பில் வந்துள்ளது.எழிலினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.நண்பர் கவிஞர் இரவி அவர்களும்,திருமங்கலம் அய்யா பார்த்தசாரதி அவர்களும் இந்த நூலுக்கு நூல் மதிப்புரை எழுதி அனுப்பி உள்ளார்கள்.எனது 6-வது புத்தகமாக வந்துள்ள இந்தப்புத்தகம் பலராலும் விரும்பிப் படிக்கப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

 வாசிப்போர் களம் மதுரை,தேடித்தேடிப் படிக்கும் பல ஆளுமைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.அண்ணன் செளந்தர் அவர்கள்,அண்ணன் சு.கருப்பையா,தோழர் சங்கையா,தோழர் காமராஜ்,தோழர் சுந்தரராஜன்,திரு.எஸ்.சுப்பிரமணியம் சார்,எழுத்தாளர் பாலகுமார் விஜயராகவன் எனப் பலரும் புத்தகங்களை விரும்பி விரும்பி படிப்பவர்கள்..இதில் சிலர் புத்தக ஆசிரியர்கள்..புத்தகங்களை எழுதி வெளியிட்டவர்கள்.பல அரிய புத்தகங்களை அறிந்துகொள்ள தூண்டுதலாக திரு.எஸ்.எஸ். சார்,அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் நட்பு எப்போதும் உதவுகிறது. அதிலும் திரு எஸ்.எஸ். சார் அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. 

 கொரோனா காலம் தொடங்கியவுடன்,புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தலைவர் அய்யா நடராசன் அவர்களும் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்களும் சூம் வழியாகப் புத்தகங்களைப் பற்றிப்பேசுங்கள் என்றனர்.திராவிட இயக்கத்துத் தலைவர்களின் தன் வரலாற்று நூல்களை அதில் பேச ஆரம்பித்தேன். அய்யா சுப.வீ அவர்களின் தந்தை அய்யா காரைக்குடி இராம.சுப்பையா,அம்மா திருமகள் இறையன்,அய்யா டர்பிடோ ஜனார்த்தனம் எனப் பல தலைவர்களைப் பற்றியும் இயக்க நூல்களைப் பற்றியும் அதில் தொடர்ச்சியாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. புதிய தோழர்கள் பலர் நண்பர்களாகக் கிடைத்தார்கள்.தங்கை வீ.இளவரசி சங்கர்,கவிஞர் ம.கவிதா,குடியாத்தம் தோழர் தேன்மொழி,தோழர் இசையின்பன்,தோழர் உடுமலை வடிவேல்,இளவல் பிரின்ஸ் என்னாரசு பெரியார்,மதுரை பழக்கடை அண்ணன் அ.முருகானந்தம்,அய்யா பொ.நாகராசன் எனப் பல இயக்கத்தோழமைகள்,வாசிப்பை உயிராக நேசிக்கும் தோழமைகள் கிடைத்தனர்.இதில் பலர் படைப்பாளிகள். 

 பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள்,அவரின் உடன்பிறப்பு அய்யா பேரா.சோம.வேலாயுதம்,அம்மா டாக்டர் சரோஜா இளங்கோவன்,தங்கை அன்புடன் ஆனந்தி,கவிஞர் கனிமொழி என வெளிநாட்டில் வாழும் ,புத்தகங்களை நேசிக்கும் பெரியவர்கள்,தோழர்களின் தொடர்பும் உற்சாகம் அளிக்கிறது.அறிவுவழிக் காணொலி வழியாகவும் பல புத்தகங்களைப் பற்றிப்பேசவும்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தும் காணொலி கூட்டங்களில் புத்தகங்களைப் பற்றிப்பேசவும் வய்ப்புக்கிடைத்தது.

 வாரந்தோறும் ஒரு பகுத்தறிவு சம்பந்தப்பட்ட நூலை தோழர்கள்,தோழியர்கள் பேசுவதும்,பெரும்பாலும் நூலை எழுதிய நூல் ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்துவதுமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கூட்டங்கள் நடந்து வருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களும் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம் அவர்களும் நிறையக் கவிதைகளைப் படைக்கிறார்கள்.கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகின்றார்கள். கவிக்கோ துரை.வசந்தராசன் வாசகர் வட்டம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தி அய்யா கவிக்கோ துரை.வசந்தராசன்,கவிஞர் வெற்றிப்பேரொளி,கவிஞர் முனைவர் ரேவதி எனப் பல ஆளுமைகள் வாரந்தோறும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். நானும் வாய்ப்பு இருக்கும்போது அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றேன். 


இந்தக் கால கட்டத்தில் படித்த புத்தகங்கள் போலவே கேட்ட புத்தகங்களும் அதிகம்.இணையமும் சூமும் அதற்கான வழியைக் கொடுத்திருக்கின்றன. எழுத்தாளர் பாவண்ணன் ஒரு இடத்தில் கூறியிருப்பார். "விதைகளைப் பறவைகள் தூவிக்கொண்டே இருக்கின்றன.ஈரம் இருக்கும் இடத்தில்,வலிமை இருக்கும் விதைகள் முளைத்துக்கொள்கின்றன' என்று. அப்படித்தான் புத்தகங்களும்..புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்போம். நல்ல புத்தகங்களைப் பரப்பிக் கொண்டே இருப்போம்.நல்ல புத்தகங்களைப் பகிர்வோம்.அனைவருக்கும் 2023 புத்தக நாள் வாழ்த்துகள்...

                                                               முனைவர் வா.நேரு,23.04.2023.




புத்தகமும் நானும்.......உலக புத்தக நாளை முன்னிட்டு(1).........வா.நேரு


Thursday 20 April 2023

உலகப் புத்தக நாள் – ஏப்ரல் 23 மிகப்பெரிய ஆயுதம்…முனைவர்.வா.நேரு

 


                                         உலகம் முழுவதும் உலகப் புத்தக நாளாக ஏப்ரல் 23 கொண்டாடப்படுகிறது. திராவிட இயக்கத்தைப் பொறுத்த அளவில் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29,அவரின் நினைவு நாள் ஏப்ரல் 21 என்று அந்த மாபெரும் கவிஞரை நினைக்கும் அவ்விரு நாள்களின் இடையில் உலகப் புத்தக நாள் வருகின்றது. “புத்தகங்கள் தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


புத்தகங்கள் தரும் பெரும் உதவியை இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் விதமாக உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28ஆவது மாநாட்டில்தான் உலகப் புத்தக நாள் பற்றிய தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.” “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக நாளாகக் கொண்டாடப்படும்” என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.


கொரோனா காலத்தில் புத்தகங்கள் தந்த உதவி என்பது மிகப்பெரிய உதவிதான். புத்தகம் என்பது ஒரு வகையில் நமக்கு ஆசிரியராகவும் ,மற்றொரு வகையில் நமக்கு வாசிப்பதன் மூலம் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.


புத்தகங்களைப் பார்த்து மூட நம்பிக்கை-யாளர்கள் அன்று முதல் இன்றுவரை பயப்படுகிறார்கள்.உலகம் உருண்டை என்று சொன்ன புரூனோவை எரித்ததோடு அவர் எழுதிய புத்தகங்களையும் சேர்த்து மதவாதிகள் எரித்தார்கள் என்பது பழைய வரலாறு என்பது மட்டுமல்ல, அண்மையில் கவுரி லங்கேசு,நரேந்திர தபோல்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் எழுதும் எழுத்துகளுக்குப் பதில் சொல்லமுடியாத இந்து மதத் தீவிரவாதிகள் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு.

உண்மையான எழுத்து என்பது எப்போதும் ஆதிக்கவாதிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. உலகப் புத்தக நாள் என்பது வெறுமனே புத்தங்களைக் கொண்டாடுவது மட்டுமல்ல; புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களையும் சேர்த்துக் கொண்டாடுவதாகும். உண்மையைக் கூறும் புத்தகங்களை எழுதியதற்காக வீரமரணம் அடைந்த தீரர்களையும் நினைவில் கொள்ளும் நாளுமாகும்.

சுருங்கக் கூறின் புத்தகங்களோடு தொடர்புடைய அனைத்தையும், அனைவரையும் கொண்டாடுவது, நினைவில் கொள்வது எனலாம். ஒரு புத்தகத்தைப் பதிப்பது என்பது இன்றைக்கு எளிதாக மாறியிருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பதிப்பிக்கக்கூடியவர்களாக, புத்தகத்திற்கான கணினி வேலையைச் செய்பவர்களாக, புத்தகத்தின்அட்டைக்கு அழகிய ஓவியத்தை வரைந்து  அல்லது கணினியில் வடிவமைத்துத் தருபவர்களாக இருக்கிறார்கள்.

சிலர் புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கு முன் பிழைகளைத் திருத்தி,புத்தகம் செம்மையாக வர உதவி செய்கிறார்கள்.சிலர் புத்தகங்களைத் தெருத் தெருவாக வண்டியில் வைத்து விற்பனை செய்து கொடுக்கிறார்கள்.’ திருவிழாக்களை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்பாடு செய்து ,நாம் புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும்,வாங்கிக் கொள்ளவுமான ஓர் அருமையான ஏற்பாட்டைச்செய்து தருகிறார்கள்.

உலகப் புத்தக நாளில் பல்வேறு மொழி புத்தகங்களை, மொழி பெயர்ப்பு செய்யும் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. இன்னொரு மாநிலத்தின்,இன்னொரு நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, மனிதர்களின் மன ஓட்டங்களை, வித்தியாசமாக இருக்கும் சில நடைமுறைகளை எல்லாம் அறிந்து கொள்வதற்கு நமக்கு மொழி பெயர்ப்பு புத்தகங்கள்தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கின்றன.

பல மொழிகளைத் தெரிந்து அதன் மூலம் இலக்கியத்தைக் கடத்தும் மொழி பெயர்ப்பாளர்களை இந்தப் புத்தக நாளில் நாம் அங்கீகரிப்பதும் அவர்களுக்கு உரிய பாராட்டையும் தெரிவிப்பதும் அவசியமாகும்.மராட்டிய மொழியில் எழுதிய காண்டேகர், மலையாள மொழியில் எழுதிய தகழி சிவசங்கரன், வங்காள மொழியில் எழுதிய சரத்சந்திரர் எனப் பலமொழிகளில் எழுதிய ஆசிரியர்களைத் தமிழில் நாம் அறிந்து கொள்ள வழி செய்த அந்த மொழி பெயர்ப்பு ஆசிரியர்களை, மொழி பெயர்ப்பு நூல்களை நாம் நினைவில் கொள்ளும் நாள் உலகப் புத்தக நாள்.



‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு நூலை நமக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்த அய்யா கு.வெ.கி. ஆசான்,...  ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்னும் தோழர் பகத்சிங்கின் புத்தகத்தை, ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்னும் அண்ணல் அம்பேத்கர் புத்தகத்தை இன்னும் இவை போன்ற பல அறிஞர்களின் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்துத் தரக் காரணமாக இருந்த தந்தை பெரியாரை நினைவில் கொள்ளும் நாள் உலகப் புத்தக நாள்.


நல்ல புத்தகங்களைப் படித்து, நம்மோடு அதனை வைத்துக்கொள்ளாமல் அதனை மற்றவர்களுக்குப் பரப்பும் விதமாக புத்தக மதிப்புரை எழுதுதல்,புத்தகத்தைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அல்லது இணையவழியாக(சூம்) வழியாகப் பேசுதல், முக நூல்,வாட்சப் போன்ற ஊடகங்கள் வழியாக சுருக்கமாக எழுதிப் பரப்புதல் போன்றவற்றைச் செய்யும் தோழர்களையும் நினைவில் கொண்டு பாராட்டும் நாளாகவும் இந்தப் புத்தக நாளை நாம் வடிவமைத்துக்கொள்ளலாம்.


அறிவைப் பரப்புவதற்குமான கருவியாக மட்டுமல்லாது, அறியாமையைப் பரப்பும் கருவியாகவும் சில புத்தகங்கள் இருக்கின்றன. எது நல்ல புத்தகம்,எது தேவையான புத்தகம்,எது நாம் பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு மதிப்பு உள்ள புத்தகம் என்பதைப் பற்றியெல்லாம் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் நாளாகவும் நாம் உலகப் புத்தக நாளை அமைத்துக்கொள்ளலாம்.


பகுத்தறிவாளர்களாகிய நமக்கு மிகப்பெரிய ஆயுதம் புத்தகம். புத்தகத்தின் வலிமையை, ஆற்றலை உணர்ந்தவர்கள் நாம். 2021 ,ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “பரப்புவீர் பாரெங்கும் பகுத்தறிவு நூல்களை” என்று தலைப்பிட்டு ஒரு சிறப்பான அறிக்கையை விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதில்

*ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளையொட்டிய நம் வாழ்த்துகள் அனைவருக்கும்!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து புத்தகங்கள் மூலம் புத்தறிவை -_- பகுத்தறிவை, அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் பணி நமது வாழ்நாள் பணி அல்லவா?.

ஏராளமான புது வெளியீடுகளும், பழைய வெளியீடுகளும் அச்சில் மீண்டும் வந்து வாசகர்களின் கையில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பல வெளியீடுகளும் இவ்வாண்டு நல்ல கலவையாக- வழக்கம் போல் 50 விழுக்காடு தள்ளுபடி சலுகையாக – (சரிபாதி- தள்ளுபடி) வாசகர்களுக்கு உலகப் புத்தக நாளில் வழங்கி, புதியதோர் உலகு செய்ய புத்தகமே புத்தாக்க அறிவாயுதங்கள் என்பதால்." எனக்குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டும்(2023) 50 சதவீதத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.வாங்குவோம்...பாதுகாப்போம்.மற்றவர்களுக்கும் வழங்குவோம்.

நன்றி : உண்மை மாதமிருமுறை இதழ் ஏப்ரல் 16-30,2023

அனைவருக்கும் உலகப்புத்தக நாள் வாழ்த்துகள்..



Tuesday 18 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்:(8).....முனைவர் வா.நேரு

 

                                                'வெள்ளைக்காரப் பசங்க'

.:

நத்தம் அரசு உயர் நிலைப்பள்ளியில் வேலை பார்த்த அனுபவத்தைத் தொடர்ந்தார் எனது தலைமை ஆசிரியர் " இதில் என்ன ஆகிவிட்டது என்றால்,2-ஆம் ஆண்டு பெற்றோர்கள் இந்த ஆசிரியர் ஆங்கிலப்பாடம் எடுக்கின்ற வகுப்பில்தான் என் பிள்ளையைச்சேர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் குவிந்துவிட்டார்கள்.அவர் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார்.அப்படி ஒரு நிலைமை அங்கே இருந்தது.


எதற்காக பெற்றோர்கள் அப்படி என் வகுப்பில்தான் தங்கள் குழந்தைகளைச்சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்றால் ,மாணவர்களை ஆங்கிலம் பேசவைத்தேன்.ஆங்கில வகுப்பிலும் சரி வெளியிலும் சரி என்னிடத்தில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று வைத்தேன்.எங்கு பேசினாலும் ,எதைப் பற்றிப்பேசினாலும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்.நத்தத்தில் காய்கறி வாங்க கடைக்குப்போவேன்.ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பதற்காக பயந்துகொண்டு என் பக்கத்திலேயே வராமல் இருந்தார்கள்.பின்பு தைரியமாக வந்தார்கள்.பேசினார்கள்.வாக்கியத்தில் பேச வேண்டியதில்லை,எப்படி வேண்டுமானாலும் பேசு என்றேன்.Bus not come,Hospital going இப்படித்தான் முதலில் பேசினார்கள்.பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சி அப்படி ஒரு மகிழ்ச்சி.1964-களில் கிராமத்தில்..இதை எல்லா ஆசிரியர்களும் செய்யலாம்தானே..வேற கிளாஸ் பையனுக எல்லாம் என் கிளாஸ் பையனுங்கள 'வெள்ளைக்காரப் பசங்க ' என்று கிண்டல் செய்வார்கள்.

கணிதத்திலும் அப்படித்தான்.ஆனால் கண்டிப்பு அதிகம்.வீட்டுப்பாடம் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன்.ஏனோ,தானோ என்பது இல்லை. " சார்,எனக்கு வேற வேலை இருந்துச்சு,உடம்புக்கு முடியலை" என்று சொன்னால் மட்டும்தான் விட்டுவிடுவேனே தவிர,வீட்டுக்கணக்கு செய்யாமல் வந்தால் அன்றைக்கு அடிதான்.எனக்கு வகுப்பு இருக்கிறது என்றால் ,மணி அடிப்பதற்கு முன்பே வெளியே நிற்பேன்.மணி அடித்து ஆசிரியர் வெளியே வந்தவுடன் உள்ளே போய்விடுவேன்.அதைப்போல மணி அடித்தவுடன் ,வகுப்பை முடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறி விடுவேன்." என்றார்.

ஆங்கில மொழி என்பது ஒரு கருவி.ஒரு சிற்பியின் கையில் இருக்கும் உளி போன்றது ஆங்கிலம். ஒரு மனிதனின் முன்னால் அழகிய,உறுதியான கல் இருக்கலாம்.அவன் மனதிற்குள் இப்படிச் சிற்பம் வடிக்கவேண்டும் ,அப்படிச்சிற்பம் வடிக்கவேண்டும் என்று ஆயிரமாயிரம் எண்ணங்கள்,நோக்கங்கள் இருக்கலாம்.ஆனால் கையில் உளி இருக்கவேண்டும்,சிற்பத்தை நன்றாக உருவாக்க அந்த உளியை எப்படி  லாவகமாகப் பயன்படுத்தவேண்டும் என்னும் திறமை இருக்கவேண்டும்.அந்தத் திறமை பொத்தென்று வானத்தில் இருந்து குதித்துவிடாது. முயற்சியும் பயிற்சியும் இணைந்த கடுமையான உழைப்பு வேண்டும்.அப்போதுதான் அழகிய சிற்பத்தை வடிக்கமுடியும்.அப்படித்தான் ஆங்கிலமும்.தாய்மொழியில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் தெரியும் ஒருவருக்கு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும்.


தமிழ் நாட்டில் இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்த எனது தலைமை ஆசிரியர் அதனை மேம்படுத்துவதற்கு தன்னுடைய பணிக்காலம் முழுவதும் பணியாற்றி இருக்கிறார்.தன்னைப் பற்றிச்சொல்லும்போதே தான் எப்படி ஆங்கிலத்தில் புலமை பெற்றேன் என்பதைச்சொல்லுவார்.மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில்(1955-1959) ஆரம்பித்தது ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் வேண்டும் என்னும் ஆசை என்பார்..கல்லூரியில் நல்ல ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பேசுவார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துவார்கள். என்பார் ஆங்கிலத்தில் கல்லூரியில் சொற்பொழிவுகள் நடக்கும்.காங்கிரசுகாரர்கள் எல்லாம் அன்றைக்கு கல்லூரிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள்.திரு.இராஜாஜி அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேசினார்.அருமையான ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் யார் பேசினாலும் நான் கேட்கப்போய்விடுவேன் என்பார். ஒரு பக்கம் அற்புதமான மேடைத்தமிழில் அறிஞர் அண்ணா,நாவலர் நெடுஞ்செழியன்,பேரா.அன்பழகன்,சி.பி.சிற்றரசு,நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் எல்லாம் தியாகராசர் கல்லூரியில் பேசினார்கள். வட மாநிலத்து காங்கிரசு தலைவர்கள் எல்லாம் கல்லூரிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பார்.


தொடர்ச்சியாக ஆசிரியராக வேலைபார்த்த காலங்களில் 25 வருடங்களுக்கு மேலாக 'The Readers Digest' என்னும் பத்திரிக்கையின் சந்தாதாரர் என்றார்.வீட்டிற்கு அந்தப் பத்திரிக்கையை வரவைத்து விடாமல் படித்திருக்கிறார்.தன்னுடைய ஆங்கில அறிவு வளர்ச்சிக்கு அந்தப் பத்திரிக்கையின் பங்கும் உண்டு என்பார்.தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு வரும் 'The Science Digest ', 'The Mirror ' போன்ற பத்திரிக்கைகளைத் தொடர்ச்சியாகப் படிப்பேன் , 'The Times Of India' என்னும் பத்திரிக்கை அப்போது இலண்டனில் இருந்து வரும்,அதனையும் தியாகராசர் கல்லூரி நூலகத்தில்  படிப்பேன் என்பார்.அதைப்போல நூலகத்தில் இருந்த பல புத்தகங்களை,ஆங்கிலப்புத்தகங்களை தொடர்ச்சியாக எடுத்துப்படித்தேன் என்றார்.அப்போது படித்ததுதான் 'ஜவஹர்லால் நேரு எழுதிய 'The Discovery of India 'போன்ற பல புத்தகங்கள் என்பார்.


தன்னுடைய வாழ் நாள் முழுவதும் ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டே இருந்தார். கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.தன்னுடைய இறுதிக்காலம்வரை ஆங்கில இந்து பேப்பரை முழுமையாகப் படித்தார்.நடுப்பக்கக் கட்டுரைகள் முக்கியமான தலைப்புகளில் வந்திருந்தால்,போனிலேயே கூப்பிட்டுச்சொல்லி விடுவார்.நேரு இது உங்களுக்குப் பயன்படும்,படியுங்கள் என்பார்.நானும் படித்துவிடுவேன்.ஆங்கில இந்துப்பேப்பரைப் படித்துவிட்டு,அன்றைய செய்தித்தாளில் வந்திருந்த அவருக்குத் தெரியாத ஆங்கில சொற்களை எல்லாம் பேனாவில் கோடிட்டு வைத்துவிடுவார். பின்பு அத்தனை சொற்களையும் நோட்டிலோ தான் வைத்திருக்கும் டைரியிலோ எழுதிவிடுவார். பின்பு ஆக்ஸ்போர்டு டிக்சனரி எடுத்துத் தெரியாத சொற்களின் பொருள் பார்ப்பார்,பின்பு ஒலிப்பு உச்சரிப்பை(Phonetic Symbol) எழுதுவார்.ஒரு பத்து சொற்கள் அந்த நாளில் முழுமையாகப் படித்து மனதில் பதிய வைத்துவிடுவார். பின்பு அந்தச்சொல்லைப் பேச்சில்,எழுத்தில் பயன்படுத்துவார்.


இந்த நேரத்தில் நான் படித்த இன்ஸ்பயரிங் இளங்கோ என்பவர் எழுதிய 'ஜெயிப்பது நிஜம் '  என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. பிறப்பால் அவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்குவேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது. அது எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆங்கில மொழி மீது அவருக்கு ஏற்பட்ட காதல்,விருப்பம். ஆங்கில மொழி உனக்கு வராது என்று ஏகடியம் பேசியவர்களுக்கு முன்னால்,அந்த ஆங்கிலத்தை வைத்தே நான் ஜெயித்துக்காட்டுகிறேன் என்று மனதில் எடுத்த வைராக்கியம்., எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-மூலம் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கும் இன்ஸ்பயரிங்க் இளங்கோ,தன்னைப் பற்றி எழுதிய புத்தகம் 'ஜெயிப்பது நிஜம்'.மிக அருமையான புத்தகம்.இதை வாசிப்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் அந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.


என்னுடைய தலைமை ஆசிரியரும் ஆங்கிலம் தெரியாததால் கல்லூரி புதுமுக வகுப்பில் அல்லது இளம் அறிவியல்-கணிதம் பட்டப்படிப்பில் அவமானம் பட்டிருக்கலாம்.மனதில் துன்பப்பட்டிருக்கலாம்.தெரியவில்லை.அதைப்பற்றி அவர் சொல்லவில்லை.ஆனால் ஆங்கிலத்தை மிகக் கெட்டியாகத் தன் வாழ்வில் பிடித்துக்கொண்டார்.மற்றவர்கள் பிடித்துக்கொள்ளவும் வழிகாட்டினார்.ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால்,தங்கு தடையில்லாமல், உயர்தர ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தால்,அவரைப் போல யாரும் எழுத முடியாது என்ற அளவிற்கு எழுதினார்.மற்ற ஆசிரியர்கள் நலனில் அக்கறை காட்டினார்.அதுமட்டுமல்ல,நினைத்துப்பாருங்கள்,1964-65களில் நத்தம் போன்ற கிராமப்புற பள்ளிக்கூடத்தில்,அந்தப் பிள்ளைகளை ஆங்கிலத்தில் பேசவைக்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான்,அவரது வகுப்பில் என் பிள்ளை படிக்கவேண்டும் என்று பெற்றோர் கேட்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது...


தான் நத்தத்தில் வேலை பார்த்ததைத் தொடர்ந்த எனது தலைமை ஆசிரியர் "அன்றைக்கும் இதே உடைதான்.வெள்ளை வேட்டி,வெள்ளைச்சட்டைதான்.கீழேயிருந்து மேலேவரை எல்லோரும் பேண்ட் போட்டுத்தான் பள்ளிக்கு வருவார்கள்,என்னைத்தவிர.இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டோம் என்றால் எளிமை,தரக்குறைவானதோ,இழிவானதோ அல்ல.நடத்தையும்,பணியாற்றும்தன்மையும் அதாவது செயல் திறனுமே ஒரு மனிதனைத் தீர்மானிக்கிறது,மதிக்க வைக்கிறது." என்றார்.உண்மைதானே..தனது வாழ்க்கையையே ஒரு பாடமாக நமக்கு வழங்கிச்சென்றிருக்கிறார்.


(தொடரும்)...






Friday 14 April 2023

வாருங்கள் தோழர்களே இன்று மாலை 6.30 மணிக்கு.







"ஜாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல் சுவரோ கம்பி வேலியோ அல்ல; ஜாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மன நிலை. எனவே, ஜாதியை ஒழிப்பது என்பது ஒரு பவுதீகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் #எண்ணத்தில்மாற்றம்ஏற்படுத்தும் செயல்.

மூன்று காரணங்களுக்காக பவுத்தத்தை நான் விரும்புகிறேன்.

1) மூடநம்பிக்கைகள்- மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி என்பது போன்றவற்றை வெறுக்கும் பகுத்தறிவை பவுத்தம் போதிக்கிறது.

2) கருணையை பவுத்தம் போதிக்கிறது.

3) சமத்துவத்தை பவுத்தம் வலியுறுத்துகிறது.

ஒரு நல்ல வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கும் மனிதனுக்கு இவை தான் தேவை. கடவுளோ ஆத்மாவோ சமூகத்தை ஒருபோதும் காப்பாற்றாது."

-அண்ணல் அம்பேத்கர்.

ஒரே நேர்கோட்டில் பயணித்த இரு பெரும் தலைவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் என்பதால் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அவர்கள் இருவரும் என்று சொல்லக்கூடிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்தளித்த "#பெரியார்- #அம்பேத்கர்_நட்புறவு_ஒருவரலாறு" எனும் நூலாய்வு இன்று.

நாமும் அறிந்து பலரும் அறியப்படுத்த வேண்டிய  அரும் தகவல்களைத் தர வருகிறார் எழுத்தாளர்- பேச்சாளர்- வாசிப்பின் நேசிப்பாளர் முனைவர்  
வா. நேரு அவர்கள்.

வாருங்கள் தோழர்களே இன்று மாலை 6.30 மணிக்கு.👇

#சமத்துவநாள் #ஏப்ரல்14

நன்றி : தோழர் கவிஞர்.ம.கவிதா அவர்களுக்கு


Tuesday 11 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(7)..... முனைவர் வா.நேரு

 

                                 பள்ளிக் கட்டடங்களை எல்லாம் தன் பணத்தில் கட்டிக்கொடுத்தவர்....


மதுரைக்கு மிக அருகில் இருக்கும் ஊர் நத்தம்.ஆனால் அது திண்டுக்கல் மாவட்டத்தைச்சார்ந்தது.." நத்தம் பற்றி இணையத்தில் தேடினால் நிறைய செய்திகள் வருகின்றன. நத்தம் ஊர் பற்றி அ.சையது முகமது அவர்கள் எழுதிய 'நத்தம் ஊர் வரலாறு ' என்னும் நூல் பற்றிய செய்தி இருக்கிறது.அந்த நூலின் ஆசிரியர் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். மற்றும் நத்தம் சட்டமன்றத்தொகுதி பற்றி  " கரந்தமலை, சிறுமலை என மலைகள் சூழ்ந்த பகுதியாக நத்தம் தொகுதி உள்ளதால் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். மா, புளிய மரங்கள் அதிகம் உள்ளது. இவை ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு கணிசமான வருவாயைக் கொடுக்கிறது. காய்கறிகள் பயிரிடுவது முதல் அனைத்து விவசாயங்களும் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகவும் நத்தம் தொகுதி உள்ளது. நத்தம் பேரூராட்சியை தவிர அனைத்தும் சிறிய கிராமங்கள்.மலைகிராமங்களுக்கு சாலை வசதி கோரிப் பல ஆண்டுகளாக மக்கள் போராடிவருகின்றனர். லிங்காவடி மலையூர் மலை கிராமத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துமவனைக்கு கொண்டு செல்ல டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் அவலம் இன்றும் நீடிக்கிறது.

மாம்பழம் அதிக விளைச்சல் உள்ளதால் கூடுதலாக மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை மா விவசாயிகளிடம் உள்ளது. நத்தம் தொகுதியில் உள்ள சந்தனவர்த்தினி ஆறு மணல் திருட்டால் உருக்குலைந்து போய் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கிணறுகள் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமலையில் இருந்து வரும் தண்ணீரை தடுக்க சந்தனவர்த்தினி ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்ற கோரி்க்கையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கிராமங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது உயர்கல்வி படிக்க ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை"என்று ஒரு தேர்தல் பற்றிய செய்தியோடு நத்தம் ஊரைப் பற்றிய செய்தி உள்ளது...நத்தத்திற்கு நான் போயிருக்கிறேன்.நத்தமும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் அமைந்த ஊர்தான்..2005-ல் உருவாக்கப்பட்ட என்பிஆர் கல்லூரி இப்போது அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் கல்வியைக் கொடுக்கும் பொறியியல் கல்லூரியாகவும்,கலை அறிவியல் கல்லூரியாகவும் திகழ்கிறது..பி.எஸ்.என்.எல்.அதிகாரியாக,அதிவேக பைபர் இணைய இணைப்பு சம்பந்தமாக அந்தக் கல்லூரிக்குப் போயிருக்கிறேன்.மலையை ஒட்டி அமைந்திருக்கும் அழகான,மிகப்பரந்த இடவசதி உள்ள கல்லூரி அது.(கொஞ்சம் சுயபுராணத்திற்கு பொறுத்துக்கொள்க) 

தன் முதல் ஆசிரியப்பணி பண்ணைக்காட்டில் ஆரம்பித்ததை விவரித்த எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்கள் அடுத்த ஊரின் அனுபவத்தைச்சொல்ல ஆரம்பித்தார். " "பண்ணைக்காட்டிலிருந்து எனக்கு மாறுதல் நத்தத்திற்கு.நத்தமும் மலைப்பகுதிதான்..நான் பண்ணைக்காட்டிலிருந்து மாறுதல் வேண்டும் எனக்கேட்டிருந்தேன்.நத்தத்திற்கு மாறுதல் கிடைத்தது.எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.எனது மனைவி பட்டம் முடித்திருந்தார்கள்.வேலைக்குப் போகவில்லை."


நத்தத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன்.ஆரம்ப காலம் அது.எனது உன்னதமான பணிக்காலம் இந்த இரண்டு ஆண்டுகள்...நத்தம் பள்ளியும் கோ-எட் பள்ளி அதாவது ஆண்களும் பெண்களும் படிக்கும் இருபாலர் பள்ளி.ஆசிரியர் பணிதான் எனக்கு. அப்போதே 1500 பிள்ளைகள் படித்தார்கள்.நத்தத்தைச் சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள்.கிராமத்துப் பிள்ளைகள் எல்லாம் படிக்க வந்துவிட்டார்கள்.அதில் முஸ்லீம்கள்தான் அதிகம்.ஒரு வகுப்பில் 40 மாணவ-மாணவியர்கள் இருந்தால் அதில் 25 பேர் முஸ்லீம்கள்.அன்றைக்கே(1963-64) நாங்கள் 30 ஆசிரியர்கள் பணியாற்றினோம்.நத்தம் என்பது நகர்ப்புறச்சூழல். ஆனால் மாணவ,மாணவியர்கள் அனைவரும் கிராமப்புற மாணவ-மாணவியர்கள்.

இங்கும் நான் ஆங்கிலமும் கணக்கும் பாடம் எடுத்தேன்.பண்ணைக்காட்டைவிட மாணவர்களிடம் ஒரு தெளிவு இருந்தது.ஆசிரியர்கள் மத்தியில் பண்ணைக்காட்டைப் போலவே நாம்தான் என்ற உணர்வு இருந்தது.பெற்றோர்களைப் பற்றி விமர்சனம்தான் செய்தார்களே தவிர பெற்றோர்களுடைய  உதவி தேவை: என்பதனை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.இங்கே இருந்த தலைமை ஆசிரியர் கெட்டிக்காரர்.

நத்தம் பள்ளிக்கூடத்தில் அனைத்து வசதிகளும் இருந்தது.பள்ளியின் இடம் மட்டும் அரசு இடம்.அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த அனைத்துக்கட்டடங்களையும் ஒரே ஒரு மனிதர் கட்டிக்கொடுத்திருக்கின்றார்.அவரது பெயர் துரைச்சாமிப்(பிள்ளை).மலேசியா வாழ் தமிழர்.அந்தக் காலத்திலேயே பட்டதாரி அவர்.அவர்தான் அவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டிக்கொடுத்திருந்தார்.எவ்வளவு பெரிய தொகை?எவ்வளவு பெரிய மனது?...எத்தனை ஆயிரம் பிள்ளைகள் படிப்பதற்கான அடித்தளம் அந்தக் கட்டடம். இப்போது எல்லாம் கோயிலுக்கு எழுதி வைக்கிறோம்ன்னு சொல்றாங்களே தவிர பள்ளிக்கூடத்திற்கு செலவழிக்க நினைப்பதில்லை...

அவரே ஒரு பெரிய கேணி(கிணற்றைத்) தோண்டிக் கொடுத்திருந்தார்.வற்றாத தண்ணீர்.அந்தக் கட்டிடங்களைக் கட்டும்போதே உடற்பயிற்சிக்கென்று இரண்டு தனி அறைகள் கட்டித் தந்திருந்தார்.ஆசிரியர்களுக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்ட கட்டிடம்.அந்தப் பள்ளியில் இருந்து ஆண்டுதோறும் மாநில அளவில் விளையாட்டுப்போட்டிக்கு போவார்கள்.வெற்றி பெறுவார்கள்.அந்த அளவிற்கு நத்தம் பள்ளியில் கட்டமைப்பு இருந்தது. பயிற்சியும் கொடுத்தார்கள்.

அங்கேயும் என்னுடைய பணியைச்செய்தேன்.நானாக எந்த வகுப்பும் வேண்டும் என்று கேட்பதில்லை.தலைமையாசிரியர் போடும் வகுப்பில் போய்ப் பாடம் எடுத்தேன்.மேல் வகுப்பிற்கு அந்தப் பள்ளியில் '4' செக்சன் இருந்தது.'A'செக்சன் அல்லது 'B"செக்சன்தான் எனக்குத் தலைமை ஆசிரியர் போடுவார்.அந்தப் பள்ளியில் என்னையும் சேர்த்து 5 பேர் கணித ஆசிரியர் இருந்தோம்.நான்தான் அதில் ஜூனியர்.என்னைக் கொண்டு போய் மேல்வகுப்பில் போட்டார். ஒருவர் தலைமை ஆசிரியரோடு சண்டைக்குப் போய்விட்டார். " என்ன சார்,நான் சீனியர் இருக்கிறேன்.இத்தனை வருடம் சர்வீஸ் ஆச்சு.நேற்று வந்தவருக்கு மேல் வகுப்பில் கொடுத்திருக்கின்றீர்களே,நியாயமில்லை,மாற்றிக்கொடுங்கள்". என்று தலைமை ஆசிரியரிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். நான் கையெழுத்துப்போடப் போகின்றேன்.சண்டை நடந்து கொண்டு இருக்கிறது.நான் பேசாமல் கையெழுத்துப்போட்டுவிட்டுப் போய் விட்டேன்.

போய் விட்டுப் பிறகுவந்து தலைமை ஆசிரியரிடம் சொன்னேன்." சார்,எனக்கு 6-ஆம் கிளாஸ் கூடப்போடுங்கள்.எனக்கு வேலை மட்டும்தான் முக்கியம்.எதுக்கு அவர்களுக்கு  வருத்தம்,நீங்கள் மாத்தி அவர்களுக்கே மேல் வகுப்பைக் கொடுத்து விடுங்கள் " என்றேன்."முடியாது சார்,முடியாது " என்றார் தலைமை ஆசிரியர். " சார் எனக்கு ஒன்றுமில்லை,ஆறாம் வகுப்பு என்றாலும் பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு என்றாலும் ஒன்றுதான். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் " என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லிவிட்டேன்..

அப்புறம் அந்தத் தலைமை ஆசிரியர் என்ன செய்துவிட்டார் என்றால் அந்த வாத்தியாரைக் கூப்பிட்டு " நான் இந்த வகுப்பிற்குப் போகமாட்டேன் என்று சொல்லி எழுதிக்கொடுங்கள்" என்று கேட்டுவிட்டார்.எப்ப்டி எழுதிக்கொடுப்பார்.பிறகு அந்தப் பிரச்சனை இல்லை.

நான் ஆசிரியர் வேலை பார்த்துக்கொண்டே  மற்ற பள்ளிக்கூட வேலைகளையும் செய்வேன்.அன்றைக்கே அந்தப்பள்ளிக்கு 2 கிளார்க்குகள்.அவர்களுக்குத் தனி அறை.அவர்களும் ஏதாவது பணிக்கு என்னைக் கூப்பிடுவார்கள்.நான் போய் உதவி செய்வேன்.எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.ஏதாவது பள்ளியில் வளர்ச்சிப்பணி செய்யவேண்டுமென்றால் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்பார்.ஆசிரியர்கள் கூட்டத்திலேயும் கருத்துக்கேட்பார்.நான் சொல்லுவேன்.".

நத்தம் அனுபவத்தைத் தொடர்ந்து சொன்னார் எனது தலைமை ஆசிரியர்.அடுத்த கட்டுரையில் சந்திப்போம்



                                                                     தொடரும்...



Saturday 8 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(6).....முனைவர் வா.நேரு

                           பள்ளியில் விளக்கேத்தி வைத்துவிட்டீர்கள்....

தன்னுடைய முதல் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணியைப் பற்றி ,பண்ணைக்காட்டில் வேலை பார்த்த அனுபவம் பற்றித் தொடர்ந்து கூறிய எனது ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்...

"அந்த ஊரில்(பண்ணைக்காட்டில்) உள்ள ஒரு ஹோட்டலில்தான் நாங்கள்,ஹைவேஸ்,பி.டபுள்.யூ.டி. மற்றும் பல்வேறு துறைகளைச்சார்ந்தவர்கள் சாப்பிடுவோம்.பி.டபுள்.யூ.டி.யில் வேலை பார்க்கும் ஒருவர்,என்னைப் பார்த்து மகிழ்ச்சியோடு " வாங்க சார்,நீங்கள்தான் அந்த ரிபல்(Rebel) லீடரா ?" என்று கேட்டார்.திடீரென்று அந்த ஊரில் எனக்குப் பட்டம் கொடுத்துவிட்டார்கள்.

"அப்படி இல்லை,நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை "என்றேன்."பள்ளியில் விளக்கேத்தி வைத்துவிட்டீர்கள்"என்றார்.(மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது).அந்த ஊரில் எங்கு சென்றாலும் மரியாதை,ஹோட்டல் மற்றும் சென்ற இடங்களிலெல்லாம் அவ்வளவு மரியாதை ஆசிரியர்களுக்கு இருந்தது.

ஆனால் அன்றைக்கு ஆசிரியர்களுக்கு எனக்கு உட்பட ஒரு மனநிலை இருந்தது.நாம் சொல்வதை மாணவர்கள்,பெற்றோர்கள் கேட்கவேண்டும்.எதிர்த்துப்பேசக்கூடாது.ஒரு சர்வாதிகார மனப்பான்மை எங்களுக்குள் இருந்தது.ஒரு சம்பவம் பண்ணைக்காட்டில் நடந்தது..இரண்டு ஆசிரியர்கள் பெற்றோர்களைத் தவறாகப் பேசிவிட்டார்கள்.பொதுமைப் படுத்தி பேசிவிட்டார்கள்.ஊர்ப் பொதுமக்கள் ஒன்று திரண்டு கூட்டமாக வந்து விட்டார்கள்.இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை.சமாதானப்படுத்தி அனுப்பவேண்டும்.ஆசிரியர்கள் செய்தது தவறு என்பதனை உணர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெற்றோர்களிடம் பேசினோம்.அடிக்காத குறைதான்.அவ்வளவு கோபமாக இருந்தார்கள்.எல்லோரையும் சமாதானப்படுத்தி,பேசிய ஆசிரியர்களை மன்னிப்புக் கேட்கச்சொல்லி,இந்த ஒருமுறை மன்னித்து விடுங்கள்,இனிமேல் இப்படி நடக்காது என்று சொன்னபின்புதான் பெற்றோர்கள் போனார்கள்.

இந்த நிகழ்வும் எனக்கு ஒரு விழிப்புணர்வைக் கொடுத்தது.பெற்றோர்கள் உதவி இல்லாமல் நிர்வாகம் நடத்த முடியாது.மிகவும் சின்சியராக இருப்பதோடு வெளியில்- சமுதாய நடவடிக்கைகளில் மிகவும் ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும்.அதிலே ஆரம்பித்ததுதான் எனது ஆசிரியர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம்.பெற்றோர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது.பெற்றோர்கள் உதவியோடு எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக பண்ணைக்காடு பள்ளிக்கூட அனுபவம் அமைந்தது "என்றார்.

பண்ணைக்காடு பள்ளிக்கூடம் பற்றி எனது ஆசிரியர் திரு.வீரிசெட்டி அவர்கள் மேற்கண்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.வேலைக்குப் போய் புதிதாகச்சேர்ந்து பணியாற்றிய நிலையிலேயே தனக்கு சரியெனப்பட்டதை பயப்படாமல் பேசியிருக்கிறார்.திரும்பத் திரும்ப அவர் சொன்ன ஒரு விசயம்,அரசுப்பள்ளியில் பெற்றோர்களின் பங்களிப்பு என்பது மிக மிகத் தேவையான ஒன்று.அண்மைக் காலங்களில்,பத்திரிக்கையாளர்கள்,ஊடகங்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் அன்புப்  பிணைப்பை உடைப்பதில்,உடைத்து நொறுக்குவதில் பெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள் என்பதைச்சொல்லுவார். கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுவார்.

அண்மையில் ஒரு வாட்சப் குழுவில் ஒரு ஆசிரியர் பேசியது வந்தது. "ஆசிரியர்களே " என ஆரம்பித்த அந்த உரை,தூத்துக்குடியில் நடைபெற்ற,ஒரு ஆசிரியரை ஒரு மாணவனின் பெற்றோரும் தாத்தாவும் துரத்தித் துரத்தி அடித்த ஒரு கொடுமையை விவரித்தது.உண்மையிலேயே மிகவும் கண்டிக்கப்படவேண்டிய செய்திதான். ஆனால் அந்த நிகழ்வைச்சுட்டிக் காட்டிப் பேசிய அந்த ஆசிரியர் தனது பெயரைக் குறிப்பிடாமல்,நாம்(ஆசிரியர்கள்) எல்லாம் கிராமத்தில் வேலை பார்க்கின்றோம், நாம் எவ்வளவு உயர்ந்த விலை உடை அணிகிறோம்,ஆபரணங்கள் அணிகிறோம்,எந்த வண்டியில் வருகின்றோம் என்பது வரை ஊர்க்காரர்கள்,கிராமத்துக்காரர்கள் கவனிக்கிறார்கள்.நம் மீது பொறாமைப்படுகிறார்கள்.தயவு செய்து உங்கள் வேலை நேரத்தில் மட்டும் முடிந்த அளவிற்கு பாடம் நடத்துங்கள்.வீட்டில் கொண்டு வந்து பேப்பர் திருத்துகிறோம்,மற்ற பள்ளிக்கூடத்திற்கான வேலைகளைச்செய்கிறோம் என்று செய்யாதீர்கள்,பெற்றோர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பள்ளிக்குள் விடாதீர்கள் ...என்பது போன்ற பல கருத்துக்களைப் பேசியிருந்தார்.அவரது உணர்வைப் புரிந்துகொள்கின்ற அதே நேரத்தில் அவரது முடிவு,தானுண்டு,தன் பணி நேரத்தில் ஏதோ என்னால் செய்ய முடிந்த வேலையைச்செய்வேன் என்பது சரியான முடிவு அல்ல என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளைப் போல சாதாரணப் பணி அல்ல.அதற்கு ஒரு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. உளவியல் தேவைப்படுகிறது.உயர்ந்த நோக்கம் தேவைப்படுகிறது.நிறைவாக ஆசிரியர் பணி செய்தவரின் அனுபவம் என்பது சொற்களால் வடிக்க இயலாததது.இரவும் பகலும் மாணவ,மாணவியர்களின் நலன் பற்றிச்சிந்திப்பதும்,தான் பணியாற்றும் பள்ளியில் கட்டமைப்புகளை (Infrastructure) மேம்படுத்துவதன் மூலமாக எவ்வாறெல்லாம் மாணவர்களின் கல்வி மேம்படும் என்பதனைச் சிந்திப்பதும்,தான் சிந்தித்ததின் அடிப்படையில் மற்றவர்களை அணுகுவதும் ,செயல்படுவதும் எல்லோரும் செய்யும் செயல் அல்ல.ஏதோ பள்ளிக்கு வந்தோமா,பாடங்களைப் பிள்ளைகளுக்குப் புரிந்தும் புரியாமலும் நடத்தினோமா,மாதத்தின் முதல் தேதியில் சம்பளத்தை வாங்கிச் செலவழித்தோமா என ஏனோ,தானோ என்னும் போக்கில் வேலை பார்க்கும் எந்த ஆசிரியரும் மாணவர்களின் மனதில் படிக்கும் காலத்திலேயே நிற்பதில்லை.படித்து முடித்து பல ஆண்டுகள் ஆன பின்பும் ,அந்த ஆசிரியரால் நான் உயர்ந்தேன் எனச்சொல்லும் சில மாணவர்கள் ஒரு ஆசிரியருக்கு கிடைப்பதே அரிது.ஒரு ஆசிரியரிடம் படித்த பல மாணவர்களும்,மாணவியர்களும் காலம் கடந்தும் தங்களுடைய 'கனவு ஆசிரியர்களாக' நினைவில் வைத்திருப்பது சிலரைத்தான்.அப்படி பல மாணவ,மாணவியர்களின் நினைவில் நிற்கும் 'கனவு ஆசிரியர்' தான் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்.

இந்த நேரத்தில் நான் படித்த 'கனவு ஆசிரியர்' என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது.இந்தக் 'கனவு ஆசிரியர்' என்னும் புத்தகம்,திரு.க.துளசிதாசன் அவர்களைத் தொகுப்பு ஆசிரியராகக் கொண்டு,பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமாகிய 'புக்ஸ் பார் சில்ரன்' என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் பிசினஸ் லைன் என்னும் பத்திரிக்கையைச்சுட்டிக் காட்டி அதில் 8-க்கு 6பேர் அதாவது 75 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக பள்ளி ஆசிரியரைத்தான் சுட்டுகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியிருப்பார்.அந்த நூல் பற்றிய எனது வலைத்தள முகவரி http://vaanehru.blogspot.com/2013/10/blog-post.html.விரும்புகிறவர்கள் படித்துப்பார்க்கலாம். 

பள்ளிப்பருவம் என்பது இன்னமும் எழுதப்படாத சுவராக இருக்கும் பருவம்.எது நல்லது,எது கெட்டது என்பதனைப் பிரித்து உணரத் தெரியாத பருவம்.படிப்பு என்பதன் முழுப்பயன் தன்னை எவ்வளவு தூரம் உயர்த்தும்,தன்னைச்சுற்றி இருப்பவர்களை எவ்வளவு தூரம் பெருமைப் படுத்த உதவும் 'அறிவு'க் கருவி என்பதனை அறியாத பருவம்.இந்தப் பருவத்தில் படிக்க வரும் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போல் பாவித்து,அன்பும் அரவணைப்பும்,கண்டிப்பும் செலுத்தும் ஆசிரியர்களே 'கனவு ஆசிரியர்'களாக மிளிர முடியும்,ஒளிர முடியும்...

அடுத்த கட்டுரையில் அவர் நத்தம் பள்ளியில் பணியாற்றிய அனுபவங்களைப் பார்ப்போம்...


Wednesday 5 April 2023

ஜா‘தீய’ உணர்வை எப்படி மாற்றுவது?....முனைவர் வா. நேரு

 ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள்.. நாமெல்லாம் கொண்டாடும் திருநாள். என் தலைவர் என்று தந்தை பெரியார் அவர்களால் கொண்டாடப்பட்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.இந்திய நாட்டில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் எல்லாரும் உயரவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அம்பேத்கர் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்குப் பதில் அளிக்குமாறு டுவிட்டரில் பி.பி.சி.தமிழ் நிறுவனத்தார் 2021 திசம்பர் 6 அன்று கேட்டிருந்தார்கள். பலர் பதில் அளித்-திருந்தனர்.அவற்றுள் சில…


‘‘ஜாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’’,


‘‘சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம். அதை இழந்து வாழ்வது மிகப்பெரிய அவமானம்.’’


‘‘சமூக நீதி’’, ‘‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்… சட்டமேதை..’’,


‘‘உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்ற பெரும் தலைவரை ஜாதிச் சாயம் பூசி, அவரை நாம் கொண்டாடாமல் போனது பெரும் துயரம். இனி வரும் தலைமுறைக்காவது சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பற்றிப் போதியுங்கள்’’.


‘‘வாசிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!’’


“நீலம்….. அவர் வாழ்நாளில் படித்த புத்தகங்கள்… தனி நபர் நூலகம்…”, “இந்திய அரசியலமைப்பு சட்டம்’’,


‘‘ஆகப் பெரிய படிப்பாளி.’’, ‘‘பார்ப்பனியப் பொறுக்கித்தனத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்’’.


“நாகர்கள், சட்டம், நீதி, சமத்துவம், அறிவு, கல்வி, இரட்டை வாக்குரிமை”, புரட்சி”,


“அவர் யாருக்காகப் போராடினரோ அவர்களே(BC,OBC)) அவரது சிலையை உடைக்கின்றனர்…. புரிதல் இல்லாத சமூகம்…”,


“தேசத் தந்தை”,


“கல்வி மறுக்கப்பட்ட நிலையை அடித்து நொறுக்கி தான் படித்த பட்டப் படிப்புகளை எவராலும் நினைவில்கொண்டு பட்டியலிடமுடியாத அளவுக்குப் படித்த படிப்பு.”


“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள், எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள், எனக்கு மேல் ஒருவரும் இல்லை _ -எனக்குக் கீழும் ஒருவரும் இல்லை என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள் என்ற அண்ணலின் முழக்கமே”,


“1.கிராமக் கட்டமைப்பை உடைத்து, சூத்திரர்கள் உள்பட சாதாரண மனிதனுக்கும் சட்டத்தின் மூலம் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது.

2. ஹிந்து சனாதனக் கோட்பாடுகளைப் படித்து, ஆராய்ந்து அதன் புரட்டுகளை உலகறியச் செய்தது.

3. ரிசர்வ் வங்கி உருவானது, பெண்ணுரிமைகள், 8 மணிநேர வேலை என்ற சட்ட.ம்

4 “சாகும்போது இந்துவாகச் சாக மாட்டேன்” என்ற வாக்குறுதி”, “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்று இப்படி அவரைப் பற்றி சுருக்கமாக பதிவு செய்தவை அனைத்தையும் ‘‘பி.பி.சி. தமிழ்’’ பதிவு செய்திருக்கிறது.


மேற்கண்ட பலரின் பதிவுகள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பல்வேறு பரிமாணங்களை எடுத்து இயம்புகிறது.



அண்ணல் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் புரிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமைவது ஜாதி ஒழிப்புக் குறிக்கோள் ஆகும். இருவரும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் ஜாதி ஒழிப்புக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்.ஜாதி என்னும் அமைப்பு தோன்றுவதற்கும் இன்றைக்கும் அந்த அமைப்பை அழிந்து போகவிடமால் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனிய இந்து மதம் அழிய வேண்டும் என்று விரும்பியவர்கள்.அதற்காக உழைத்தவர்கள்.தியாகங்கள் பல செய்தவர்கள். தாங்கள் போராடிய போராட்டங்களையே தங்கள் வாழ்க்கைச் செய்திகளாக விட்டுச்சென்றவர்கள்.


“ஜாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல் சுவரோ கம்பி வேலியோ அல்ல; ஜாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மன நிலை. எனவே, ஜாதியை ஒழிப்பது என்பது ஒரு பவுதீகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ என்றார் அண்ணல் அம்பேத்கர்.


சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய நாட்டில் உள்ள மக்களின் எண்ணத்தில் ஜாதி பற்றிய மன நிலை மாறியிருக்கிறதா? என்றால் மிகக் குறைந்த சதவிகித எண்ணிக்கையிலான மக்களின் மன நிலை மாறியிருக்கிறது.இன்னும் 90 சதவிகித மக்கள் மனதில் ஜாதிஉணர்வு இருக்கத்தான் செய்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்த உணர்வை எப்படி மாற்றுவது என்ற எண்ணம்தான் நமக்கு மேலோங்குகிறது.


இன்னும் வேங்கைவயல் நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. .மனிதர்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கலக்கும் கொடூரமான மன நிலை இருக்கிறது. பெற்ற பெண்ணாக இருந்தாலும், வேறு ஜாதிப் பையனோடு காதல் கொண்டாள்,திருமணம் முடித்துக்கொண்டாள் என்று சொல்லிக் கொலை செய்யும் கொடுமை இருக்கிறது.ஜாதி என்னும் கொடுமையை ஒழிப்பதற்காகப் பாடுபட்ட தந்தை பெரியாரின் மண்ணிலும் பட்டியல் இனத்தவருக்குச் செய்யப்படும் கொடுமைகள் அதிகமாக இருக்கின்றன என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.ஜாதிக்கொரு சுடுகாடு என்பது இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. இதனை எப்படி மாற்றுவது?


கிராமங்கள் மறைய வேண்டும், தொழில் நகரங்கள் அமையவேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் விரும்பினர். இன்றைக்கும்கூட ஜாதியை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நிலமாக கிராமங்கள் இருக்கின்றன.கோவில்,திருவிழா,பாரம்பரியம் என்னும் பெயர்களில் ஜாதி பாதுகாக்கப்படுகிறது.


இந்திய மனிதர்கள் நாடு கடந்து கடல் கடந்து வேறு நாடுகளில் போய் வாழும் நிலையிலும் மனதிற்குள் ஜாதிய மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்த அமெரிக்க நாட்டின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது.42 இலட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஜாதி அடிப்படையிலான பாகுபாடு தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும் அதனை மாற்றுவதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் சியாட்டில் சட்டம் இயற்றியோர் கூறியுள்ளனர்.


அண்ணல் அம்பேத்கர் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும்,அறிந்து கொள்ளவும், அவரின் கொள்கை வழி நடந்திடவும் திராவிடர்

கழகம் தந்தை பெரியார் காலம் முதல் இன்றுவரை

பாடுபடுகிறது.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ‘ஜாதியை ஒழிக்க வழி’ நூலினை முதன் முதலில் தந்தை பெரியார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ‘‘தவறாகப் பூஜிக்கப்படும் கடவுள்” என்று அருண்ஷோரிகள் அவதூறுகளை அள்ளி வீசியபோது திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறுப்பு உரைகளை நிகழ்த்தி, அந்த உரைகள் நூலாக வெளிவந்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அய்யா ஆசிரியர் அவர்களின் ‘அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ‘புத்தக் காதலும் புத்தகக் காதலும்” நூல் உதவுகிறது.


திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாளை ‘‘சமத்துவ நாள்’’ என்று அறிவித்தது மட்டுமல்லாமல், அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளைத் தமிழில் மொழி பெயர்த்திட

ரூ. 5 கோடி நிதியினை அண்மையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்க அறிவிப்பு. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளைத் தேடித் தேடிப் படித்திடுவோம்; பரப்பிடுவோம். ஜாதிகள் ஒழிந்த சமத்துவ சமுதாயம் காண உறுதி ஏற்போம்.


அண்ணல் அம்பேத்கர் வாழ்க! அவர்தம் புகழ் ஓங்குக! 


நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ் ஏப்ரல்(1-15),2023



Tuesday 4 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(5)....முனைவர்.வா.நேரு

 


                                                இரவு நேர ஸ்டடிக்கு வந்த இருபால் மாணவர்கள்...


என்னுடைய  ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் தனது பண்ணைக்காடு அனுபவத்தைத் தொடர்ந்தார்.

"தலைமை ஆசிரியர் சமூக அறிவியல் பாடம் 11-ஆம் வகுப்பிற்கு எடுக்க வேண்டும்.மேப்-எல்லாம் காட்ட வேண்டும்.சரியாக நடத்துவதில்லை,மேப் எல்லாம் காட்டுவது இல்லை என்று என்னிடம் மாணவர்கள் சொன்னார்கள்.பண்ணைக்காடு அரசுப் பள்ளியில் பெரிய ஆய்வகம் இருந்தது.12 பீரோ முழுக்கப் புத்தகங்கள் இருந்தது.நூலகம் இருந்தது.குளோப்,அட்லஸ்,ஏராளமான புத்தகங்கள் என இன்றைக்குத் தனியார் பள்ளியில் உள்ள அத்தனை வசதிகளும் இருந்தது.ஆனால் அவை மாணவ-மாணவியர்களுக்குப் பயன்படவில்லை.தலைமை ஆசிரியரிடம் தனியாகப் பேசப்போனேன்.உட்காரச்சொன்னார்.முதலில் எல்லாம் நிற்க வைத்துத்தான் பேசுவார்.பாடம் நடத்தாமல் இருப்பதைச்சொன்னவுடன் 'ஆமாம்' என்றார். ' எனக்கு நிர்வாகம் பார்க்கத்தான் நேரம் இருக்கிறது."என்று சொன்னார்.இன்னொரு சமூக அறிவியல் ஆசிரியரும் அந்தப் பள்ளியில் இருந்தார்."அவரையும் கொஞ்சம் நிர்வாக வேலையைப் பார்க்கச்சொல்லுங்கள்.அவரையும் கொஞ்சம் பாடம் நடத்தச்சொல்லுங்கள் " என்று சொன்னேன்.ஏற்றுக்கொண்டார்.மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தப்பட்டது.

பண்ணைக்காடு பள்ளிக்கு அன்றைக்கு மின் இணைப்பு இல்லை.என்னிடம் தலைமை ஆசிரியர் கேட்டார்.அரசுக்கு எழுதச்சொன்னேன்.அரசுக்கு,அலுவலகப் பணியாளர்களுக்கு 90 சதவீத தலைமை ஆசிரியர்கள் அடிமைகளாக அன்றைக்கு இருந்தார்கள்.ஏதாவது வேண்டும் என்று கேட்டு எழுதுவது குற்றம் என்று நினைத்தார்கள்.இல்லை அது குற்றம் இல்லை, நமக்குத் தேவையானதை நாம் மேலே இருப்பவர்களுக்குத் தெரியப் படுத்தவேண்டும்,அப்போதுதான் அந்தத் தேவை நிறைவேற்றப்படும் என்பதைச்சொன்னேன்.ஆசிரியர்களுக்காக கட்டப்பட்ட டாய்லெட் டேங்க் எல்லாம் நிரம்பிவிட்டது.தலைமை ஆசிரியரை விடாமல் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதச்சொன்னேன்.எழுதினார். உடனே அது சரி செய்யப்பட்டது.

மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் விளையாட்டு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தோம்.கல்லூரி வரை நான் கற்றுக்கொள்ளாத இரண்டு விளையாட்டுக்களை பண்ணைக்காட்டில் நான் கற்றுக்கொண்டேன்.ஒன்று பேட்மிட்டன்.அற்புதமான பொழுதுபோக்கு.வேறு எங்கும் போகவேண்டாம்.உடற்பயிற்சி ஆசிரியர் கெட்டிக்காரர்.விளையாடுவதற்கு மைதானத்தை சரி செய்தார்.சுத்தமாகி விட்டது. எல்லோரும் விளையாடினோம்.

பண்ணைக்காட்டில் நிறையக் ஃகாபி விளைகிறது.ஃகாபி விற்பனை மேனேஜர் ஒருவர் பண்ணைக்காட்டில் இருந்தார்.கேரளத்துக்காரர்.ஓய்வு நேரத்தில் பள்ளிக்கு பேட்மிட்டன் விளையாட வருவார்.ஒரு நாள் எங்களை எல்லாம் வற்புறுத்தி அவர் இருக்குமிடத்திற்கு அழைத்துச்சென்றார்.பட்டதாரி ஆசிரியர்கள் அங்கு போனோம்.

அவர் தங்கியிருந்த வீடு பெரிய வீடு.200 அடி நீளம் ,30,40 அடி அகலம் உள்ள ஒரு பெரிய அறையின் ஒரு பகுதியில் டேபிள் டென்னிஸ் போட்டு வைத்திருந்தார்.அவர் கூட விளையாட யாருமில்லை.எங்களை அழைத்துச்சென்று காண்பித்து விளையாட வரச்சொன்னார்.கற்றுக்கொண்டேன்.காலையில் டேபிள் டென்னிஸ்,பகலில் பள்ளிக்கூடத்தில் வகுப்புகள்,மாலையில் பேட்மிட்டன் எனப் பொழுது அற்புதமாகப் போனது.

பள்ளி ஆண்டு விழாவிற்கு அந்த மேனேஜரைக் கூப்பிட்டோம்.வந்தார்.நான் ஒரு கோரிக்கை, பேசும்போது வைத்தேன்.டேபிள் டென்னிஸ் இங்கே பள்ளிக்குக் கொடுத்தால் பையன்களும் விளையாடுவார்கள் என்று சொன்னேன்.கொடுத்துவிட்டார்.அன்றைக்கு அது ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புப் பெறும்.காஸ்ட்லி.அவரே ஆட்களை வைத்து கொண்டு வந்து பள்ளியில் மாட்டிவிட்டார்.தலைமை ஆசிரியரும் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வந்து கலந்து கொள்ள ஆரம்பித்தார்.எல்லோரும் மாணவர்கள் உட்பட பலர் கற்றுக்கொண்டனர்.விளையாடினோம்.

மாணவர்களின் நன்மைக்காகக் கேட்போம்.கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்.கொடுக்கவில்லையெனில் பரவாயில்லை,நாம் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை என்னும் மனப்போக்கு உண்டாவதற்கு காரணமாக அந்த நிகழ்வு அமைந்தது.

மின்சாரம் இணைப்பு வேண்டும் என எழுதிக் கேட்டதால் ,மின் இணைப்பு பள்ளிக்குக் கிடைத்தது 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஸ்டடி வைக்கவேண்டும் ' என்று ஆசிரியர்கள் கூட்டத்தில் நான் தான் சொன்னேன்.பொதுத்தேர்வுக்கு படிக்கவைப்போம் என்றேன்.உள்ளூர் ஆசிரியர்களுக்கு இதில் விருப்பம் இல்லை.சிலர் 50 ஏக்கர்,60 ஏக்கர் ஃகாபித் தோட்டம் வைத்திருப்பவர்கள்.பிள்ளைகள் வருவார்களா?பெற்றோர்கள் ஒத்துக்கொள்வார்களா? என வினாக்களை எழுப்பினார்கள்.

'ஸ்டடி வைத்தோம்'.பிள்ளைகள் எல்லோரும் வந்தார்கள்.கோ-எஸுகேசன்,இருபாலர் படிக்கும் பள்ளி. இருபாலரும் ஸ்டடிக்கு வந்தார்கள்.பண்ணைக்காட்டில் 3 மாதம் இரவும்,பகலும் மழை பெய்யும்.மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு ஸ்டடிக்கு வந்தார்கள்.பள்ளி மாலையில் முடிந்தவுடன் ,ஒரு மணி நேரம் நாங்கள் விளையாடுவோம்.அந்த நேரத்தில் பிள்ளைகள் வீட்டிற்குப் போய்விட்டு ஸ்டடிக்கு வந்து விடுவார்கள்...."

இந்த நேரத்தில் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சாரின் அணுகுமுறையைச்சொல்ல வேண்டும். எவரிடமும் எதனையும் சொல்லத் தயங்க மாட்டார்.பயப்பட மாட்டார். ஆனால் அதனைச்சொல்லும் விதம் மிகவும் பணிவாகவும் ,எந்த விதமான உள் நோக்கம் இல்லாததாகவும் இருக்கும். யாரிடமும் பொது நலன்,மாணவர்கள் நலன் கருதிப் பேசலாம்,அணுகலாம் என்பதே அவரின் அணுகுமுறையாக இருந்தது.

1961-62-களில் இந்த இரவு நேர ஸ்டடி என்பதை ஆரம்பித்த எங்கள் வீரிசெட்டி சார்,ஆசிரியர் தனது ஆசிரியர் பணி முழுவதும் இதனைத் தொடர்ந்திருக்கின்றார்.1979-ல் அவரிடம் மாணவனாகப் படித்த நான் இன்றும் ,2023-ல் அவரை நினைவில் வைத்திருப்பதற்குக் காரணம் இந்த இரவு நேர ஸ்டடிதான்.காலையில் மாடுகளுக்குத் தீவனம் போடுவது,அதன் சாணியை அள்ளிப்போடுவது என்று மாடு சார்ந்த வேலைகள்,பின்பு காட்டு வேலைகள்,வீட்டு வேலைகள் என்று படிப்பதோடு சேர்த்து பல வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.எங்கள் வீட்டில் கரண்ட் இணைப்பு இல்லாத காலம். வீட்டில் ஹரிக்கேன் லைட்டுகள் இருந்த காலம். அப்போது.அந்தக் காலத்தில் மின் விளக்குகளை எங்கள் ஊர் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் ஏற்படுத்தி,தினமும் இரவு 7 மணி முதல் 9 வரை படிக்கும் நேரம் என்று எங்களைப் பழக்கப்படுத்தியவர் எங்கள் தலைமை ஆசிரியர்.எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல்,அவரின் மேற்பார்வையில்,இரவு நேரத்தில் தினந்தோறும் பாடங்களைப் படித்த பலனாகத்தான் நல்ல மதிப்பெண்களை நான் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கமுடிந்தது. என்னோடு படித்த எங்கள் ஊர் நண்பர்களும் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற அடிப்படையாக அமைந்தது

இந்த இரவு நேர ஸ்டடி என்பது முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் சார்ந்தது.வகுப்புகள் முடிந்தபின்பு, மாணவர்களோடு 2,3 மணி நேரம் செலவழிப்பது,எந்த விதமான பணபலனும் எதிர்பார்க்காமல்  எத்தனை பேரால் முடியும் என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண் மாணவர்களும்,பெண் மாணவிகளும் வந்து பண்ணைக்காட்டு அரசுப் பள்ளியில் இரவு நேர ஸ்டடியில் படித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய செய்தி. எத்தனை பேருக்கு ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொடுப்பதாக,அதிக மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பாக  இந்த இரவு நேரப் படிப்பு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது....

(தொடரும்)





Saturday 1 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(4)....முனைவர்.வா.நேரு

 

                              ஆப்செண்ட் போட்டால் வேலை போய்விடும்...


தொடந்து எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி அவர்கள் தன் பண்ணைக்காடு பணி அனுபவத்தைச்சொல்ல ஆரம்பித்தார்." பண்ணைக்காட்டில் 10-ஆம் வகுப்பிற்கு ஆங்கிலமும்,9,10,11 ஆம் வகுப்புகளுக்கு கணக்கும் பாடம் எடுத்தேன்.பண்ணைக்காட்டில் 2 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.அப்போதே 10-ஆம் வகுப்பில் 40 மாணவ,மாணவிகள் இருந்தார்கள்.இருபாலர் பள்ளி.90 சதவீதம் மாணவ,மாணவியர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.10 சதவீதம் தொலை தூரத்திலிருந்து மலைப்பகுதி கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள்.

ஆசிரியர்கள் தங்குவதற்கு குவார்ட்டர்ஸ்(வீடுகள்) இருந்தது.ஊருக்குள் வீடு எளிதில் கிடைக்காது.பஞ்சாயத்து யூனியன் தண்ணீர் பைப் இருந்தது.அந்தப் பள்ளியைக் கட்டியவர்கள் தொலை நோக்குப்பார்வையோடு கட்டியிருந்தார்கள்.பக்கத்திலேயே பிரைமரி ஹெல்த் செண்டர் இருந்தது.அவர்களுக்கும் ஸ்டாப் குவார்ட்டர்ஸ் இருந்தது.ஆசிரியர்கள் நாங்கள் அந்த ஊரிலேயே குவார்ட்டர்ஸ்ஸில் தங்கினோம்.பாடங்கள் நடத்தினோம்."


படித்து முடித்தவுடன் வேலைக்கு வருவது.சம்பளம் வாங்கி செலவழிப்பது போன்ற அனுபவம் மிக இனிமையான அனுபவம்.எனக்கும் கூட அந்த அனுபவம் கிடைத்தது.பசுமை நிறைந்த பல நினைவுகள், நம் எண்ணக் கூட்டுக்குள் புதைந்து கிடக்கும் நினைவுகள் அவை.இப்படி தனது அனுபவங்களை விவரித்த எனது தலைமை ஆசிரியரிடம் " மாணவர்களைச்சமாளிப்பது என்பது எளிதாக இருந்ததா?அன்றைக்கு இருந்த மாணவ-மாணவிகளிடம் கீழ்ப்படிதல் இருந்ததா? " என்ற கேள்விகளைக் கேட்டேன். மிக லேசாகச்சிரித்துக்கொண்டே " மாணவர்களைக் கையாளுவது மிக எளிதாக இருந்தது.அன்றைக்கு மாணவர்கள் 10-ஆம் வகுப்பு,11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 1/2 அடி,6 அடி இருப்பார்கள்.ஆனால் ஆசிரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு கீழ்ப்படிவார்கள் " என்றார்.


இந்தக் கேள்வியை நான் கேட்டதிற்கு எனக்கு ஒரு அனுபவம் உண்டு.எனக்குத் தெரிந்த  பெண் ஒருவர்.அவர் ஏதாவது ஒரு வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்ற கட்டாயம். கணவரைப் பிரிந்து தனியாக இருந்த நிலையில் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குப் போகவேண்டும் என்ற முடிவெடுத்த அந்தப் பெண் " நீங்கள் எனக்கு ஒரு வேலை பாருங்கள். ஆனால் தயவுசெய்து என்னை ஆசிரியர் வேலைக்கு மட்டும் போகச்சொல்லி விடாதீர்கள்.என்னால் பிள்ளைகளைச்சமாளிக்க முடியாது' என்று கையெடுத்து கும்பிட்டுச்சொன்னார். அந்தப் பெண் பட்டம் பெற்றவர். நன்றாகப் படிக்கக் கூடியவர்.நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்.என்னால் மாணவ,மாணவிகளைச்சமாளிக்க முடியாது என்ற எண்ணம்,தன்னம்பிக்கை இன்மை அவரது உள்ளத்தில் இருந்தது.இப்படிப்பட்ட சிலரையும் நம்மைச்சுற்றிப் பார்க்கிறோம்.

ஆசிரியர் தொழிலில் பயம் இல்லாமல் பணியாற்ற என்ன செய்யவேண்டும் என்று எனது தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது " கற்றுக்கொண்ட பாடத்தில் தெளிவு இருக்கவேண்டும்.கணிதம் நடத்துகிறோம் என்றால் கணித அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.மாணவர்கள் நம்மிடம் இப்படிக் கேள்வி கேட்டால் என்ன பதில் கொடுப்பது என்று நமக்கு நாமே ஒத்திகை பார்க்கவேண்டும்.நமக்குத் தெரிந்ததை மாணவ,மாணவிகள் புரிந்து கொள்கிற மாதிரி சொல்வது என்பது ஒரு கலை..அது ஆசிரியர் வேலைக்கு போனவுடன் வராது.பழகப் பழக,நாம் தயாரித்துப் போக போக வந்துவிடும் " என்றார்.


"நீங்கள் பண்ணைக்காட்டில் வேலை பார்த்தபொழுது மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டாங்க சார் ?" என்ற கேள்வியை நான் கேட்டவுடன் " ஆமாம்.உண்டு, உண்டு" என்றார்." ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பொறுத்துத்தான் அந்தப் பள்ளி சரியாக இருக்கமுடியும்.பண்ணைக்காட்டில் ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார்..கடமையாக சரியாகச்செய்ய வேண்டும்,வளர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.இது எல்லாம் சரிதான்.ஆனால் சுயநலம் கடுமையாக இருந்தது.அதற்கு ஓர் உதாரணம்.,


ஒருமுறை திங்கட்கிழமை.ஒரு இடை நிலை ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை.விடுப்பு கடிதமும் கொடுக்கவில்லை.அப்போது கையொப்பம் இடுகிற ஏட்டிலே நாங்கள் எல்லாம் கையெழுத்துப்போடும்போது,அந்த இடை நிலை ஆசிரியரின் பெயருக்கு நேரே ஆப்செண்ட் என்று எழுதிவிட்டார்.இப்படி எழுதினால் கண்டிப்பாக அவருக்கு வேலை போய்விடும்..ஆமாம்,தலைமை ஆசிரியர் ஆப்செண்ட் என்று போட்டுவிட்டால் ,வராத ஆசிரியரின் வேலை போய்விடும்.அந்தக் காலத்தில் அன்றைக்கெல்லாம் ஆசிரியர்களுக்கு கோர்ட்டுக்கு எல்லாம் போகத்தெரியாது.ஆப்செண்ட் போட்டுவிட்டார்.நான் அப்போதுதான் வேலைக்கு வந்திருக்கிறேன்.இருந்தாலும் ஒரு அநியாயம் நடப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.


தலைமை ஆசிரியரிடம் வாதிட்டேன்." அய்யா,இது ஒரு மலைப்பகுதி.வெள்ளிக்கிழமை முடிந்து ஊருக்குப் போய்விட்டால் ,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரில் என்ன நடந்ததோ,நடக்கவில்லையோ நமக்குத் தெரியாது.(அன்றைக்கு தந்தி ,டெலிபோன் வசதி எல்லாம் கிடையாது.) அவர் போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது.விடுப்புக் கடிதம் கொடுத்து விட முடியவில்லை.நீங்கள் அவர் வந்தவுடன் விடுப்புக் கடிதம் வாங்கிக்கொள்ளலாமே,நீங்கள் அதனை விடுப்பு என்று குறித்தால் என்ன " என்று நான் சொன்னேன். அதெல்லாம் முடியாது,ஆப்செண்ட் போட்டது ஆப்செண்ட் போட்டதுதான் என்று சொல்லிவிட்டார்.


நான் விடவில்லை.கையெழுத்துப்போட்டுப் போன ஆசிரியர் நண்பர்களையெல்லாம் அழைத்தேன்."இப்படிச்சொல்கின்றார் தலைமை ஆசிரியர் -என்ன செய்யலாம்? " என்று கேட்டேன்.அப்போதுதான் அவர்களுக்கு 'ஆப்செண்ட் ' என்று போட்டதின் சீரியஸ்னஸ் தெரிகின்றது.நாளைக்கு அவர்களுக்கும் அது வரலாம்." சார்,அவர் சொல்வது சரி.அவர் வந்தபிறகு நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுங்கள் " என்று அனைவரும் தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள். "அதெல்லாம் உங்கள் வேலை இல்லை,நீங்கள் போங்கள் " என்று கடுமையாகச்சொன்னார்.போய்விட்டோம்.ஒரு மணி நேரம் கழித்து என்னை அழைத்தார்."வீரிசெட்டி,நீங்கள் சொன்னதை நான் உணர்ந்திட்டேன்.லீவுன்னு போட்டுட்டேன் " என்றார்.


அது மட்டுமல்லாமல் பணியாற்றும் இடத்தில் அவர் செய்யும் தவறுகளை நான்தான் சுட்டிக்காட்டுவேன்.குறிப்பாக பள்ளிக்கூடத்திற்கென வரும் நாளிதழ்,மாத இதழ்,வார இதழ் எல்லாம் அவர் வீட்டிற்குப் போய்விடும்.அடுத்தவாரம்தான் பள்ளிக்கூடத்தில் வந்து போடுவார்.இது ரொம்ப நாளாக அந்த ஊரில் நடந்து கொண்டு இருந்திருக்கின்றது.ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.என்னிடம் சொன்னார்கள்.'நமக்கு ஒரு லீடர் கிடைச்சுட்டாண்டா' என்ற மகிழ்ச்சி ஆசிரியர்களுக்கு. தலைமை ஆசிரியரைத் தனியே பார்த்துச்சொன்னேன்." பத்திரிக்கைகளை,இதழ்களைப் பள்ளி நேரத்தில் இங்கு கொண்டு வந்து போட்டு விடுங்கள்.பிறகு எடுத்துக்கொண்டு போய் வீட்டில் போட்டுக் கொள்ளுங்கள் "என்று சொன்னேன்.ரைட்,ரைட் என்று ஏற்றுக்கொண்டு அதனைச்செய்தார்.

(தொடரும்)