Wednesday, 26 November 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-ச.தமிழ்ச்செல்வன்

அண்மையில் படித்த புத்தகம் : ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
ஆசிரியர்                                          :  ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு                                        :  பாலம் , ' the book meet' , சேலம்-4.
இரண்டாம் பதிப்பு                        :   ஏப்ரல்- 2007 , மொத்த பக்கங்கள் 176 விலை ரூ 80 / =
மதுரை மைய நூலக எண்        : 174164


                                                            ஒரு தொழிற்சங்கவாதியின் அனுபவம், படிப்பினை, போராட்டம், எண்ணம், எழுத்து என விரியும் தளங்களைக் கொண்ட  புத்தகம் இந்த 'ஜிந்தாபாத் , ஜிந்தாபாத் ' என்னும் புத்தகம். தனக்கு மனதிற்கு சரியெனப்பட்டதை நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் ஒரு பதிவாக இந்தப்புத்தகம் எனக்குப்படுகின்றது.

                                              ஜிந்தாபாத் என்றால் என்னவென்றே அர்த்தம் தெரியாத , ஆனால் ஏற்ற இறக்கங்களோடு அம்முழக்கத்தை எழுப்பும் 'நம்பி' வாத்தியாரிலிரிந்து ஆரம்பித்து, இராணுவத்தில் தான் சேர்ந்தது , ' வசந்தத்தின் இடிமுழக்கம் ' என்னும் பத்திரிக்கை தனக்கு தபாலில் வந்ததால் இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது , பின்பு 1978-ல் அஞ்சல்துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தது, தொழிற்சங்க இயக்கங்களை ஆரம்பகாலத்தில் நக்கலடித்தது   என்று இந்த நூலுக்கான அடித்தளத்தை முதல் சில பக்கங்களில் சுட்டுகின்றார் ச.தமிழ்ச்செல்வன்.

                           எடுத்தவுடன் தொழிற்சங்க இயக்கம் பற்றிப்பேசாமல் , தனக்குப் பிடித்த இலக்கியம் பற்றி முதலில் பேசினார்கள் என்பதனை 'பால்வண்ணம் '  என்னும் தோழரின் அறிமுகத்தின்மூலம் சுட்டுகின்றார். பால்வண்ணமும் ,அதனைப்போல வீரணன் என்னும் தொழிற்சங்கத்தோழரும் இந்த நூல் முழுவதும் ச.தமிழ்ச்செல்வனுடன் உடன் வருகின்றார்கள். பல இடங்களில் அவர்கள் பற்றிப்பேசுகின்றார். கோவில்பட்டிபற்றியும் அங்கிருந்து  உருவாகிய இலக்கிய படைப்பாளிகள் பற்றியும் இந்த நூலில் நிறையக்குறிப்பிடுகின்றார். (எத்தனை கோவில்பட்டிக்காரர்கள் இந்தப்புத்தகத்தைப் படித்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை- )  கோவில்பட்டிபற்றியும் ,அங்கிருக்கும் காந்தி பொட்டல் பற்றியும் முடிவில் கோவில்பட்டியிலிருந்து பந்தமடை போனவுடன் பட்ட பாடுபற்றியும் , ஏன் தொழிற்சங்கவாதிக்கு இப்படிப்பட்ட ஊர் செண்டிமண்ட் எல்லாம் இருக்குமா என்று கவிஞர் சமயவேல் இவரது தம்பி கோணங்கியிடம் கேட்டது பற்றியெல்லாம் எழுதியிருக்கின்றார்.

                          தொழிற்சங்க இயக்கத்தில் பங்கெடுப்பு, கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பில்  பங்கெடுப்பு, வீதி நாடகங்கள் போட்டது, நிஜ நாடகங்களை அந்தந்த இடங்களிலேயே தயாரித்து நடித்தது, வீதிகளில் நின்று ஏற்ற இறக்கங்களோடு கோஷம் போட்டது எனப் பல நிகழ்வுகளை அவருக்கே உரித்தான பாதையில் சொல்லிச்செல்கின்றார். தபால்துறை, தொலைபேசித்துறையும் இணைந்து இருந்த நிலையில் ஒன்பது சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது, அதன் பொதுச்செயலராக தோழர் ஓ.பி.குப்தா இருந்தது , ச.தமிழ்ச்செல்வன் ஓ.பி.குப்தா அணியினருக்கு எதிரணியாக இருந்த 'கே.ஜி.போஸ் ' அணியில் இருந்தது, கே.ஜி.போஸ் கலைக்குழு என்ற பெயரில் கலைக்குழுவாக ஊர் ஊராகச்சென்றது, தொலைபேசித்துறையைச்சார்ந்த தோழர் மோகன்தாஸ் என்பவரது அமைதி, மார்க்சிய அறிவு போன்றவற்றைத் தொடர்ந்து எழுதிச்செல்கின்றார்.

                            தீக்கதிர் பத்திரிக்கை போடும் சங்கரப்ப நைனா மனதில் நிற்கின்றார். அவர் ச.தமிழ்ச்செல்வனிடம் சொன்னதாக வரும் " ஊர்ல கட்சிக்காரன் 100 பேர் இருக்கான். 20 தீக்கதிரை கொண்டு தள்ளுறதே பெரும் போராட்டமா இருக்கு. ஒழுங்கா துட்டும் தரமாட்டேங்குறான்.எனக்கு இதுதான் பெரிய டென்சன் .பயக சொல்றாப்பிலே நான் கோபப்பட்டு பேசறதனாலே எனக்கு வியாதியே கிடையாது. துட்டு பிரியலேங்கிறது கூட ஒரு விசயமில்லே .'துண்டு விழுந்தா பால்வண்ணம் குடுப்பாரு.சமாளிக்கலாம்.ஆனா பத்திரிக்கை படிக்கிற எண்ணிக்கையைப் பாருங்க. பத்திரிக்கைதான் கட்சி ஊழியருக்கு ஆசிரியன் அப்படின்னு லெனின் சொன்னார். இப்படி அக்கறையில்லாம எனக்கென்ன'ந்னு அலையிறானே , தீக்கதிர் படிக்காம எப்படி இயக்கம் வளரும் ? நம்ம லைன் என்னான்னு தெரியாம எப்படி வேலை செய்யப்போறான் ? " பக்கம்  59.

                      "உண்மையில் சோவியத் யூனியன் சிதறியபோது எனக்கேற்பட்ட அதிர்ச்சி ஒருபக்கம் இருக்க சங்கரப்ப நைனாவின் தலைமுறையைச்சேர்ந்த (கீழ்மட்டங்களில் பணியாற்றிய)  தோழர்கள் எப்படி அதை எதிர்கொண்டார்கள் என்பதைப்பார்ப்பதுதான் எனக்கு அன்று பெரிய துயர்தருவதாக இருந்தது.கோர்பசேவ் இப்படிப்பண்ணிட்டானே தோழர் என்று கதறி அழுத தோழர்களை நான் பார்த்திருக்கிறேன். சொந்த வீட்டில் இழவு விழுந்துவிட்டதுபோல வாயில் துண்டை வைத்து அழுத தோழர்கள் உண்டு. ....அவர்கள் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வீழ்ச்சி அது. தான் வேறு தன் சர்வதேச இயக்கம் வேறு என்கிற பேதம் அற்ற ஒரு சொந்த வாழ்வை அவர்கள் கொண்டிருந்தார்கள். மரம் செடி கொடிகள் பூப்பதையும் காய்ப்பதையும் போல இயக்க வேலைகள் என்பது அவர்களுக்கு உயிரியல் சார்ந்ததாக இருந்தது." என்று அடிமட்ட இயக்கத்தொண்டர்களின் உள்ளக்குமுறலை எடுத்துக்காட்டுகின்றார்.

                     குபதா அணி * போஸ் அணி க்கும் இடையில் ஏற்பட்ட தொழிற்சங்க மோதல்களை நிறையக் குறிப்பிட்டுள்ளார். போஸ் அணிப்பக்கமான நியாயங்களை சுட்டியுள்ளார். எனக்கு இதில் மாறுபட்ட கருத்து உண்டு. தொழிற்சங்கப் பணியில் அல்லது பொதுப்பணியில் இருக்கும் தோழர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் இன்னல்களை எடுத்துக்காட்டியுள்ளார். அவரவர் குடும்பங்களை அவரவர் சந்திக்கும் வலிமை இல்லை என்று சொல்கின்றார் .உண்மைதான். குடும்பத்தில் கணவனும் மனைவியும் பொதுப்பணியில், புரிதலோடு இருந்தால் பிரச்சனை இல்லை. சர்வதேசப்பிரச்சனையெல்லாம் மேடைகளில் முழங்கும் தோழர் , சொந்த வீட்டில் செல்லாக்காசாக மதிக்கப்படும் எதார்த்தத்தைப்   பேசுகின்றார்.

                  " தொழிலாளி வர்க்கத்தின் அறியாமை என்னும் வண்டுதான் நாம் தேடி அளிக்க வேண்டிய ஒன்று. அது எளிதான காரியமல்ல. ஏழுமலை, ஏழு கடலெல்லாம் இருக்கிறது . பள்ளிக்கூடம் ஏற்படுத்தியுள்ள 'அறிவு' என்னும் கடலைத்தாண்டி , தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தாண்டி, மீடியாக்களைத் தாண்டி, சாமிகளைத் தாண்டி, சாதிகளைத் தாண்டி, ஆதிக்கக் கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள அழுத்தமான பொதுப்புத்தியை(common sense) த் தாண்டி ,வர்க்க சமரசத் தலைவர்களைத் தாண்டி நாம் அந்த வண்டைத் தேடிப் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால் இன்று பெரும்பாலான தொழிற்சங்கங்கள் போராடும் குணம் மட்டும் போதும் என்கிற நினைப்பில் மெத்தனமாக இருப்பதால்- இருந்ததால்தான் மிகப்பெரிய பின்னடவை சந்திக்க நேர்ந்துள்ளது. தொழிற்சங்கப்பணி என்பது அவ்வளவு லேசானதல்ல. சந்தா பிரிப்பதும் ஸ்டிரைக் பண்ணுவதும் மட்டுமல்ல, வலி மிகுந்த நீண்ட நெடிய பயணம் அது " பக்கம் 69 -உண்மைதான்.  தொழிலாளி வர்க்கத்தை பிடித்துக்கொண்டிருப்பது அறியாமைதான். அந்த அறியாமையில் தலையாய அறியாமை சாதி உணர்வு. 1930-களில் அண்ணல் அம்பேத்கர் , 'சாதியை ஒழிக்க வழி ' என்னும் கட்டுரையில் , இந்தியாவில் புரட்சி வராது, உழைக்கும் தோழர்களை சாதிப் பெருமித உணர்வு ஒன்று சேரவிடாது என்றார். 100 ஆண்டுகள் கடந்த பின்பும் அதுதான் எதார்த்தமாக இருக்கின்றது. இன்று நவம்பர் -26. அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை என்று இருக்குமிடத்தில் சாதி என்று ஆக்கி, சாதியை இந்தியாவில் ஒழிப்பதற்காக தந்தை பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் 1957-ல் அரசியலமைப்புச்சட்டத்தை எரித்து சிறையேகிய நாள்:. 18 தொண்டர்களை பெரியார் இயக்கத்தினர் சாதி ஒழிப்புக்காக பலிகொடுத்த இயக்கத்தை துவங்கிய நாள். இன்னும் சாதிஉணர்வு ஒழிந்தபாடில்லை. உழைக்கும் தொழிலாளிகள் அனைவரும் ஒன்றிணைந்தபாடில்லை.

            தோழர் பால் ராமச்சந்திரன் என்பவரை பக்கம் 84-85 களில் அறிமுகப்படுத்துகிறார். நெல்லையில் ந்டைபெற்ற ஒரு பயிற்சிப்பட்டறையில் கேரளத்திலிருந்து வந்த டாக்டர் எம்.பி.பரமேஸ்வரன் நடத்திய பாடம் பற்றியும் ச,தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகின்றார்.
" தோழர் பாலச்சந்திரனும் அப்பட்டறையில் இருந்தார். கடவுள் இல்லை என்பது அன்று ரொம்பத்தெளிவாக எல்லாருக்கும் விளங்கிவிட்டது. பால்ராமச்சந்திரனுக்கும் அது புரிந்துவிட்டது. ஆனால் அதை அவருடைய உடம்பே ஏற்க மறுத்தது. வியர்த்துக்கொட்டியது அவருக்கு. ஒரு துண்டால் துடைத்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி தண்ணீர் குடித்தார். நிறையக் கேள்விகள் கேட்டார். ஒரு பதிலிலாவது ' கடவுள் இருப்பதற்கு சிறிய வாய்ப்பு இருக்கிறது '  என்று பரமேஸ்வரன் சொல்லிவிடமாட்டாரா என்ற ஏக்கம் அவருடைய ஒவ்வொரு கேள்வியிலும் இருந்தது. பெளதீக சக்தியாக அவரைப் பிடித்திருந்த கடவுள் எனும் கருத்து, சந்திரவிலாஸ் ஓட்டலில் உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்ததை நான் பின்னால் உட்கார்ந்து கண்ணாரக் கண்டு கொண்டிருந்தேன்." (பக்கம் 85 ). ஒரு நம்பிக்கை அறிவியல் அடிப்படையில் நொறுங்கும்போது ஏற்படும் மாற்றத்தை மேற்கண்ட வரிகளில் மிகத் தெளிவாகக் கொடுத்துள்ளார் ச.தமிழ்ச்செல்வன்.

                                    இந்தப் புத்தகத்திலேயே மிகவும் பிடித்த பகுதியாக சில சுய விமர்சனங்கள் இருக்கின்றன. அதனை இயல்பாகச்சுட்டிச்செல்கின்றார். தொழிற்சங்க இயகத்தில் கடவுள் மறுப்பு இருக்க வேண்டுமா ? என்னும் கேள்வி பலருக்கு எழுவதில்லை. கடவுள் பிரச்சனையைப் பேசவேண்டியதில்லை என்பதுதான் தொழிற்சங்கத்தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. பெரும்பாலான தொழிற்சங்கத்தலைவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், இருப்பதால் அந்தக் கேள்வி எழவில்லையா? எழுப்பப்படவில்லையா ? என்னும் கேள்வி என்னைப் போன்றோருக்கு உண்டு. " நடவு செய்த தோழர் கூலி நாலாணாவை ஏற்பதும், உடலுழைப்பு இல்லாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுளானை என்றுரைத்த கயவர் கூட்டமீதில், கடவுள் என்னும் கட்டறக்க தொழிலாளரை ஏவுவோம் " என்றார் புரட்சிக்கவிஞர் . " உடை வெளுக்கும் தோழரைக் கடவுள் முன்னேற்றுமா ? கழுதை முன்னேற்றுமா ? " எனக்கேட்டார். ச.தமிழ்ச்செல்வன் இந்தப்புத்தகதில் தொழிற்சங்கங்களும் கடவுள் நம்பிக்கையும் என்பது பற்றி மிகத்தெளிவாகப் பேசுகின்றார்.

" இன்றுவரை தொழிற்சங்க இயக்கங்கள் தங்கள் ஊழியர்களை கடவுள்களிடமிருந்து மீட்டெடுக்க எந்த முயற்சியும் அக்கறையுடன் எடுக்கவில்லை. இது பெரிய ஆபத்து என்று என் மனம் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. என்னிடம் ரெண்டுபேர் அகப்பட்டாலும் கடவுள் இல்லை என்பதை அவர்கள் மண்டையில் ஏற்றியே தீருவது என்று கடந்த இருபது ஆண்டுகளாக வைராக்கியமாக இருந்து வருகிறேன். தினசரி ஒரு ஆளையாவது குழப்பிவிடுவது என்கிற துடிப்பு இன்று வரை இருக்கிறது. .....கடவுள் மறுப்பை தொழிற்சங்க இயக்கம் கையில் எடுத்தே தீரவேண்டும் என்பது என் அழுத்தமான கருத்து. (பக்கம் 86) . இது மிக முக்கியமான கருத்தெனக் கருதுகிறேன். அரசு அலுவலங்களுக்குள் பிள்ளையார்கோவில் கட்டுவது , அதில் உயர் அதிகாரிகள், தொழிற்சங்கத்தலைவர்கள் கலந்து கொள்வது போன்ற சம்பவங்களையெல்லாம் சுட்டிக் காட்டுகிறார். மத விழாக்களுக்குப் பதிலாக கலச்சார விழாக்கள் தொழிற்சங்க இயக்கங்களால் நடத்தப்படவேண்டும் என்று சுட்டுகின்றார்.

                  சில தோழர்களின் குணங்களை, நோய்களைப் பற்றியும் பதிந்துள்ளார். ஊத்துமலை ராமகிருஷ்ணன்( அத்தியாயம் 15), சி.சுப்பிரமணியன்( அத்தியாயம் 12), வயித்த வலி வி.எஸ்.கண்பதி( அத்தியாயம் 9),தோழர் பால்கந்தன் (அத்தியாயம் 18), தோழர் வானு போன்றவர்கள் நமது நினைவுகளில் நிற்கின்றார்கள். தன்னுடைய புத்தகத்தின் மூலம் தொழிறசங்க இயக்கத்திற்காகப் பாடுபட்ட பலரை வரலாறாக ச,தமிழ்ச்செல்வன் பதிந்திருப்பது பாராட்டத்தக்கது.

                 அம்பாசமுத்திரம் சென்றது, தியாகராசன் என்னும் தோழர் , முதல் போராட்டம், தயாரிப்பு என தன் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதிச்செல்லும் ச.தமிழ்ச்செல்வன் அறிவொளி இயக்கத்திற்கு சென்ற 5 வருடத்தில் ஒரு நாள் கூட தொழிற்சங்கப்பணி பார்க்கவில்லை என்று எழுதியிருக்கின்றார். பின்பு தொடர்ந்தது, நெல்லைக்கு மாற்றலாகிச்சென்றது, பேரா.தொ.ப. போன்றவர்களிடம் தொடர்பு ஏற்பட்டது என்பதையெல்லாம் எழுதிவிட்டு , மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள்  பிரச்சனையில் அநியாயமாக 17 தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் பிணமாக மிதந்தது தன்னை எவ்வளவு பாதித்தது என்பதனை மிக உருக்கமாக எழுதியுள்ளார். முடிவில் விருப்பஓய்வு கொடுத்து விட்டு 2002-ல் அஞ்சல் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்ததை எழுதியுள்ளார்.

              தன் வரலாறு என்றாலும் இந்தப்புத்தகம் ச.தமிழ்ச்செல்வனின் வரலாறு என்ற அளவில் நின்றுவிடவில்லை. பல விவாதங்களை எழுப்பியுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் தொழிலாளர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது என்பது இன்றைய மிகப்பெரிய சவால் என்று எழுதியிருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் அது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இலக்கியம் தொழிற்சங்கத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது, இன்னும் சொல்லப்போனால் இலக்கியவாதியாக இருக்கும் தொழிற்சங்கவாதி , இன்னும் கொஞ்சம் மேம்பட்டவனாக இருப்பான் என்று சொல்கின்றார்.
" மனித மனங்களை வெல்லுவதற்கான போராட்டம்தானே தொழிற்சங்கப்பணியும் ....தொழிலாளிகளை அரசியல்படுத்துவது என்பதின் மிக முக்கியமான பகுதியாக அவர்களை இலக்கியப்படுத்துவதை நாம் பார்க்க வேண்டும். மதவெறிக்கருத்துக்கள் எவ்வளவு அழகாக எவ்வளவு எளிதாக மக்கள் மனங்களில் பாய்கின்றன என்ப்தை உற்று நோக்க வேண்டும். ...." Writers and  artists are the Engineers of the Minds "  என்று ஸ்டாலின் சோவியத் நாட்டில் அன்றுபேசியதை  இத்தோடு இணைத்துப்பார்க்க வேண்டும். எழுத்தாளர்கள் தொழிலாளி வர்க்கத்தோடு இரண்டறக்கலப்பது அவசியம்.அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சங்க இயக்கம் இது குறித்தும் கவனம் கொள்ள வேண்டும். புத்தகங்களோடும் வாசிப்போடும் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பை தொழிலாளி வர்ககத்துக்கு ஏற்படுத்துவது நமது கடமை " பக்கம் 105.

             " ஜிந்தாபாத் , ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத்.
                வீரவணக்கம் ! வீரவணக்கம் !
                சிக்காகோவின் தெருக்களிலே
                இரத்தம் சிந்திய தோழர்களே !
                 வீரவணக்கம் ! வீரவணக்கம் "    போன்ற முழக்கங்கள்தான் 1984-85 களில் கல்லூரியிலிருந்து வந்த என்னைப்போன்ற தோழர்களை தொழிற்சங்கப் பணிகளின் பக்கம் இழுத்தது. இன்னும் வேறு தொழிற்சங்கத்தைச்சார்ந்தவர்கள் அலுவலகத்திற்கு முன்னால் நின்று ஜிந்தாபாத் , ஜிந்தாபாத் என்றால்கூட  நம்மையும் அறியாமல் , மனது அந்த முழக்கத்தைத் திருப்பிச்சொல்லும். உணர்வாய்க் கலந்த அந்த வார்த்தைகளைத் தலைப்பாக வைத்து, தொழிற்சங்கப்போராட்டத்தை, தொழிற்சங்கம் செய்ததை, தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டியதை சொல்லும் புத்தகம் இந்த "ஜிந்தாபாத் , ஜிந்தாபாத் " என்னும் புத்தகம் . கட்டாயம் படிக்கலாம். ச.தமிழ்ச்செல்வனின் நல்ல பதிவாக இந்தப் புத்தகம் உள்ளது. 

Tuesday, 25 November 2014

நிகழ்வும் நினைப்பும் : 26 - வாசிப்போர் களம்

நிகழ்வும் நினைப்பும் : 26 - வாசிப்போர் களம்

                                            மதுரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும் தோழர்கள் இணைந்து , தங்களின் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொது மேடையாக வாசிப்போர் களம்(http://vasipporkalam.blogspot.in/) - மதுரை தொடங்கப்பட்டது. வாசிப்போர் களம் மதுரை தொடங்கப்பட்டதுமுதல் திரு.சு.கருப்பையா , AO ,BSNL, அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகத் திறம்பட பணியாற்றி வருகின்றார்.

                                          மதுரை வாசிப்போர் களத்தில் 'தென்திசை' என்னும் வலைத்தளத்தில் பதிந்து வரும் பதிவர் திரு.வி.பாலகுமார் அவர்களை வாசிப்போர் களத்திற்கு முன் தெரியும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிகாரி எனத்தெரியும் , ஆனால் அவர் ஒரு இலக்கியவாதி எனத் தெரியாது, வாசிப்போர் களத்தின் மூலம் அறிமுகமாகி அவரின் வலைத்தளமான 'தென்திசை'சென்று படித்தபோது  வியந்து போனேன். அவ்வளவு பதிவுகள் , மிக ஆழமான கவிதைகள்,  சிறுகதைகள், சமூக அவலங்களை நக்கலடிக்கும் கட்டுரைகள், துறை சார்ந்த தொழில் நுட்ப விளக்கங்கள் எனப்  பதிவுகள். ,அவரோடு இலக்கியரீதியாக பழகும் வாய்ப்பு வாசிப்போர் களத்திற்குபின்னர்தான் கிடைத்தது .   ஓய்வு பெற்ற அதிகாரியும் தொழிற்சங்கத் தலைவருமான திரு மு.சங்கையா, தொழிற்சங்கத் தோழர் பி.செளந்தர், திரு G.சுந்தரராஜன், எழுத்தாளர் கவிஞ்ர் சமயவேல், திரு பாலசுப்பிரமணியன், திரு. தேவேந்திரன்  எனப்பலர் வாசிப்போர் களத்தில் உறுப்பினராக உள்ளனர். கவிஞர் சமயவேல் இதுவரை  ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் வாழும் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவராக உள்ளார். தினந்தோறும் அவரைச்சந்திப்பது வழக்கம் என்றாலும் கூட அவரது இலக்கிய ஆளுமை தெரியாமலேதான் இருந்திருக்கின்றேன்.  மாதம் ஒரு நாள் மாலை சந்திப்பது, இருவர் தங்களின் வாசிப்பு அனுபவங்களை, நூல் அறிமுகமாக பகிர்ந்து கொள்வது , அந்த அனுபங்களின் அடிப்படையில் கேள்விகள், விவாதங்கள் , தங்களின் கருத்துக்கள்  எனப் புத்தக அனுபவப்பகிர்வு என்பது மிக ஆரோக்கியமாகவும் , மன நிறைவாகவும் இருக்கின்றது.

                                                நூல் அறிமுகம் செய்தவர்களின் அறிமுகம் வாசிப்போர் களம் வலைத்தளத்தில் பதிவிடப்படுகின்றது. அங்கங்கே உள்ள நமது தோழர்கள், புத்தக விரும்பிகள் இதைப் போன்ற் அமைப்புகள், கூட்டமைப்புமூலம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.ஏதோ ஒரு மூலையில் , நாம் தனியாக அமர்ந்து நாமே படித்து நாம் மட்டும் இன்புறுவதற்கு பதிலாக பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களும் இன்புறவும் பயன்பெறவும் வழிவகுக்கலாம். இன்னும் கேட்டால் வாசிப்பது என்பது அவரவர் சார்ந்த விருப்பத்தின்மேல்தான் அமைகின்றது. எனக்குத் தெரிந்த சிலர் மிக அதிக அளவில் விரும்பி புத்தகம் படிப்பவர்கள். கட்டுரை மட்டும்தான் படிப்பார்கள். சிறுகதை, நாவல் படிக்கமாட்டார்கள். அதனைப் போலச்சிலர் கவிதை மட்டும் படிப்பார்கள். சிலர் மொழி பெயர்ப்பு நாவல்கள், சிறுகதைகள் மட்டும் படிப்பார்கள். இப்படி ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை உள்ளவர்கள் (Everybody is unique) என்று சொல்வதைப்போல அவர்கள் விரும்பிப்படிக்கும் நூல்களும் தனித்தன்மை உள்ளவையாக இருக்கின்றன. அதனை பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது நூல் விமர்சனம் செய்பவர்களுக்கும் , கேட்பவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.

                       சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை காரல் மார்க்ஸ் நூலகத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபாகரன் அவர்கள் நூல் விமர்சனத்திற்க்காக அழைத்திருந்தார்.  நான்  பேரா. மாடசாமி அவர்கள் எழுதிய "' எனக்குரிய இடம் எங்கே ? " என்னும் நூல் பற்றிப் பேசினேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று அந்தப்புத்தகம் .கல்லூரி மாணவ,மாணவிகள் பற்றிய புத்தகம். படிப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தகம் .  ஏறத்தாழ 45 நிமிடங்கள் அந்தப்புத்தகத்தைப் பற்றி மட்டுமே பேசினேன். பேசி முடிக்கும்வரை, அந்தப்புத்தகத்தை எழுதிய பேரா.மாடசாமி அவர்கள் கேட்போர் கூட்டத்தில் இருக்கின்றார் என்று தெரியாது. அவர் எனக்கு அறிமுகமும் இல்லை. பேசி முடித்தபின்பு , இப்போது ஒருவரை பேச்சாளருக்கு அறிமுகப்படுத்துகின்றேன் என்று சொல்லிவிட்டு பேரா.மாடசாமியை திரு.பிரபாகரன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். பின்பு பேரா.மாடசாமி பேசினார். பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்த அவர் தான் எழுதிய நூலில் , பேச்சாளருக்கு பிடித்த பகுதிகள் என்பதனைக் குறிப்பிட்டு நான் எழுதும்போது இப்படியெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால் விமர்சனத்தின்மூலமாக இப்படியும் யோசிக்கலாம் என்று எனக்கு புலப்பட்டிருக்கிறது என்றார். மிகப்பெரிய பகிர்தலாக, புரிதலாக அந்த நிகழ்வு அமைந்தது.  

                                  நல்ல  புத்தகங்களை நேசிப்பவர்கள் இந்த சமூகத்தையும் நேசிக்கின்றார்கள்.     இந்தச்சமூகம் உய்வுபெற நல்ல புத்தகங்கள் தவிர வேறு வழியில்லை. நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டு கொண்டவர்கள், அதனால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் அதனை அடையாளம் காட்ட வேண்டிய தேவையும் கடமையும் இருக்கிறது. மதுரையில் உள்ள சில கல்லூரிகளில் வாசிப்போர் அமைப்பினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். புத்தக விமர்சனத்தை மாணவர்களே செய்கின்றார்கள் என்னும் செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. இது பரவலாககப்படவேண்டும். ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் மன மகிழ்மன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் மாதம் ஒரு நாள் புத்தக விமர்சனங்கள் அந்த அலுவலகத்தைச்சார்ந்தவர்களால் நடத்தப்படவேண்டும். அதனைப்போல கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் நடத்தப்படவேண்டும். ஊடகங்கள் இந்த நூல் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். .

                                                      

Friday, 21 November 2014

நிகழ்வும் நினைப்பும்(25) : அதீத நெற்றிக்குறியீடும் உள்ளுணர்வும்

நிகழ்வும் நினைப்பும்(25) : அதீத நெற்றிக்குறியீடும்  உள்ளுணர்வும்

                                 சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் எனது மகள் தனியாக பள்ளி சென்று வந்தார். நேற்று அப்பா , நான் பள்ளியிலிருந்து சேர் ஆட்டோவில் வந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இன்னொரு பெண் உடன் இருந்தார். பின் நான் மட்டும் தனியாக ஆட்டோவில் வந்தேன். நம்முடைய  பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்பே , மூன்று ஸ்டாப்புகளுக்கு முன்னாலேயே இறங்கி விட்டேன் என்றார். ஏன் ஆட்டோ ஓட்டுகிற ஆள் ஏதும் தேவையில்லாமல் பேசினானா? எனக்கேட்டேன். இல்லைப்பா, அதெல்லாம்  ஒன்றும் இல்லை. " நெத்தி நிறைய பட்டை, கழுத்திலே ஒரு உத்திராட்சக் கொட்டை,அதில குங்குமப்பொட்டு வேறு பெரிசா நெத்தியிலே " பார்த்தாலே பெரிய ஏமாற்றுக்கார ஆள் மாதிரி இருந்துச்சு, அதுவும் வர்ற வழியல கோயில்கிட்டே ஆட்டோவை நிப்பாட்டி நிப்பாட்டி சாமி கும்பிட்டுக்கிட்டே வந்தாரு, அதனாலே இறங்கிட்டேன்  என்றார். சரி , நீ விபரம் தெரிந்த பெண், உனது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி செய், நல்லதுதான் நீ இறங்கியது என்றேன் நான்.

                                       என் மகள் சொன்ன செய்தியைக் கேட்டதும் இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது. 1988-89 களில் பெரியகுளத்தில் தங்கியிருந்தபோது , விடுதி போன்று ஒரு வீட்டில் அறைகளில் தங்கியிருந்தோம். எனது அறைக்கு பக்கத்து அறையில் எல்.ஐ.சி-யை சார்ந்த வளர்ச்சி அதிகாரி (D.O) காளிமுத்து தங்கியிருந்தார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம் . அவருடைய கிராமத்துக் கதை, என்னுடைய கிராமத்துகதை என்று ஓடிக்கொண்டிருக்கும். ஒரு அறையில் நான் முதலில் இருந்து இருக்கிறேன் என்றால் அந்த அறைக்கு யாரும் புதிதாக வந்தால் , நான் அவரிடம் வாடகை வாங்கிக்கொள்ளலாம் . ஆனால் வீட்டுக்காரரிடம் மொத்த வாடகையை நான் தான் கொடுக்கவேண்டும். ஒரு நாள் பக்கத்து அறைக் காளிமுத்து, சார் எனது ரூமூக்கு புதிதாக ஒருவர் வந்திருக்கின்றார். இப்போ இருக்கிற பணப்பிரச்சனைக்கு வாடகையை பகிர்ந்துகொள்ள ஒருவர் வந்து விட்டார் என்றார். நான் பக்கத்து அறையில் போய்ப்பார்த்தேன். ஆள் நெற்றி நிறையப்பட்டை, குங்குமப்பொட்டு என்று வித்தயாசமான கெட்டப்பில் இருந்தார். பக்கத்து சர்க்கரை ஆலையில் வேலை பார்ப்பதாகச்சொன்னார்.

                            தனியாக  நண்பர் காளிமுத்துவிடம் , " சார் ,ஆள் ஒரு மாதிரியா இருக்கிறார். வாடகை அட்வான்ஸ் பணம் வாங்குங்கள் , கொஞ்சம் கவனமாக இருங்கள் " என்றேன். உடனே  காளிமுத்து' " சார், நீங்க தி.க.காரங்களே இப்படித்தான் சார். பக்திமானா இருக்கிறவங்க எல்லாம் நல்ல்வங்க இல்லையா ? " என்றார். எனக்குத்தெரிந்தே நிறையப் பேர் இருக்கின்றார்கள். எனது ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர் போன்றவர்கள் எல்லாம் பக்திமான்கள்தான். பல பேரை வாழ்க்கையில் உயர்த்தி விட்டவர்கள். ஆனால் பக்திமான் வேறு, பக்திமான் மாதிரி நடிக்கிறவன் வேறு. அதீத நெற்றிக்குறியீடு என்றாலே ஆபத்து என்பது எனது எண்ணம் " என்று சொல்லிவிட்டு சில விளக்கங்கள் சொன்னேன். ஆனால் அவர் ஏற்கவில்லை, கடுமையாக விவாதித்தார்.

                          முதல்மாதம் முடிந்தது. புதிதாக குடி வந்த ஆள் வாடகை கொடுக்கவில்லை. "சார் , ஏதோ அவங்க கம்பெனியில சம்பளம் லேட்டா போடுவாங்களாம், சம்பளம் போட்டவுடன் கொடுத்து விடுகின்றேன் என்று சொல்கின்றார்  " என்று காளிமுத்து சொன்னார். சரி, அவர் பாடு, அவரது புது பார்ட்னர் பாடு என்று இருந்து விட்டேன். பின் சில நாள் கழித்து  " சார் , என் பையில் இருந்த வாட்சைக் காணாம் சார், பணம் 1000 காணாம் சார் " என்றார். அதற்குப் பின் அந்தப் பட்டை அடித்த ஆள் வரவும் இல்லை, அவரைப் பற்றி விவரமும் தெரியவில்லை. பக்கத்து ஊர் சர்க்கரை ஆலையில் கேட்டதற்கு அப்படி ஒரு பெயரில் ஒரு ஆளும் இங்கு வேலை பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்:. பாவம் காளிமுத்து நொந்து போனார். பின்பு பார்க்கும் நேரங்களில் கேட்பார் , "எப்படி சார் பார்த்தவுடன் சொன்னீர்கள் " என்பார். நான் சிரித்துக்கொண்டே," யார் அதீதமாக நெற்றிக்குறி ,பட்டை, குங்குமப்பொட்டு வைத்திருக்கின்றார்களோ, அவர்களை நம்பாதே  என்பது எங்கள் கருத்து"  என்று சொன்னதாக ஞாபகம். அந்த நாள் ஞாபகத்தை நினைவு படுத்திய எனது மகளுக்கு நன்றி.

                                     

Sunday, 16 November 2014

அண்மையில் படித்த புத்தகம் : ராசம்மா-மு.அம்சா(சிறுகதைத் தொகுதி)

அண்மையில் படித்த புத்தகம் : ராசம்மா (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்                                          : மு.அம்சா
பதிப்பகம்                                         : காவ்யா பதிப்பகம் , சென்னை-24
முதல் பதிப்பு                                  : 2005 , மொத்த பக்கங்கள் 106, விலை ரூ 60
மதுரை மாவட்ட மைய நூலக எண் : 164635


                                                           பத்து சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுதி இந்தப் புத்தகம் . நூல் ஆசிரியர் மு.அம்சாவின் முதல் சிறுகதைத் தொகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. " இச்சிறுகதை தொகுப்பு என் முதல் முயற்சி. ஆனால் சிறுகதைக்கு நான் புதியவள் அல்ல .ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன் " என்று என்னுரையில் மு.அம்சா குறிப்பிடப்பட்டுள்ளதுபோல இந்தக் கதைகள் புதிய எழுத்தாளரின் கதைகளாக இல்லை, ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரின் கதைகளாகவே இருக்கின்றன.

Monday, 10 November 2014

' மன இறுக்கம் போயே போச்சு ' என்னும் நூல் பற்றி....

மதுரையில்  கல்லூரியில்  படிக்கும் எனது மகன் சொ.நே.அன்புமணி , மதுரை நூலகத்தில் இருந்து எடுத்து வந்த நூல் ' மன இறுக்கம் போயே போச்சு ' என்னும் நூல் பற்றி, தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார். வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம், புத்தக் விமர்சனத்தையும், புத்தகத்தையும்.
http://ukkam.blogspot.in/2014/11/measures-to-reduce-tension.html#more

Sunday, 2 November 2014

மறக்க முடியாத மனிதநேய நிகழ்வாக...

மறக்க முடியாத மனிதநேய நிகழ்வாக...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
முனைவர் வா. நேரு    
தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்
ஆனந்தரங்கம்பிள்ளை மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு பள்ளி, பிள்ளையார் சாவடி, புதுச்சேரி
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா என்பது நாம் கொண்டாடும் தனிப்பெரும் விழா. அறிவு பெற்றோம், உரிமை பெற்றோம், கல்வி பெற்றோம் , வாழ்வில் அனைத்தும் பெற்றோம் உன்னால் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் கொண்டாடி மகிழும் திருவிழா நாள் தந்தை பெரியார் பிறந்த நாள். தந்தை பெரியாருக்குப் பின் நம்மை இன்று வழி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக மெங்கும் மகிழ்ச்சி பொங்கும் நன்றித் திருவிழா நாளாக தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. தந்தை பெரியாரின் 136-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  ஆண்டு தோறும் நடத்தப்படும்  பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டியில் இந்த ஆண்டு ஒரு புதுமை புகுத்தப் பட்டது. அது பார்வையற்ற மாணவ-மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்துவது என்பது. திராவிடர் கழகத் தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலில் ,திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களால் திட்ட்மிடப்பட்டு, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக உயராய்வு மையமும், பெரியார் பிஞ்சு இதழின் சார்பிலும்  நடத்தப்பட்ட போட்டி இது. மதுரையில் இரண்டு பள்ளிகளில் இந்த வினாடி வினாப்போட்டி நடத்தப்பட் டது. மதுரைக்கு நான் வந்து 20 ஆண்டுகள் ஆகின்றது என்றாலும் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் நேரில் சென்றதில்லை. கேள்விப்பட்டிருக்கின் றேன், நேரில் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். ஆனால் செல்லவில்லை. மிகப்பெரிய வாய்ப் பாக பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி அமைந்தது.
மதுரையில் சுந்தரராஜன்பட்டியில் அமைந்துள்ள இந்தியப் பார்வை யற்றோர் சங்கப்பள்ளிக்கும் மற்றும் பரவையில் உள்ள செண்ட் ஜோசப் பள்ளிக்கும்  முதலில் பார்வையற்ற மாணவ., மாணவிகள் படிக்கக் கூடிய வகையில் பிரெயில் முறையில் அமைந்த புத்தகங்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் உயராய்வு மையத்தின் சார்பாக அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டன. வாழ்க்கையில் சாதியாலோ, மதத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படுபவர்கள் தந்தை பெரி யாரின் மனித நேயத்தத்துவத்தைக் கேள்விப்பட்டவுடன் நன்றாகப் பற்றிக் கொள்வதுண்டு. தந்தை பெரியார் கொள்கை வழியில் தொடர்வதுண்டு. அதனைப்போலவே மாற்றுத் திறனாளி களாக ஆனால் தன்னம்பிக்கை மிகுதி யாக உள்ள பார்வையற்ற மாணவ-மாணவிகள் தந்தை பெரியாரின் கருத்துக்களை கற்பூரம் தீயில் பற்றிக் கொள்வதுபோல பற்றிக் கொண் டார்கள் என்பது அவர்கள் பதில் அளித்த முறையில் தெரிந்தது. பார்வை யற்ற மாணவ-மாணவிகளுக்கு எழுத்துத் தேர்வில் வழிகாட்டுபவர் களாக  வந்த சின்னையாபுரம் தேவ சகாயம் -அன்னத்தாயம்மாள் மேல் நிலைப்பள்ளி மற்றும் மதுரை -பசுமலை தேவசகாயம் மெட்ரிகுலேசன் பள்ளி களிலிருந்து வந்த ஆசிரியப் பெருமக்கள் , தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளென்றும், மிகப்பெரிய வாய்ப்பு என்றும், பார்வையற்ற மாணவர்கள் தங்களை பெரியாரின் பேரப்பிள்ளைகள் என்றும் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என்றும் மற்றும் அந்த மாணவ, மாண விகளின் ஒழுங்குமுறை, தன்னம் பிக்கை, ஜெயித்துக் காட்டுவோம் என்ற திண்ணிய எண்ணத்தோடு வாழும் அவர்களின் நேர்முக மனப்பானமை போன்றவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி அந்தப் பள்ளி களின் தாளாளர் திராவிடர் கழகத்தின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் அய்யா தே.எடிசன்ராசா அவர்களுக்கும், இந்தப் போட்டியை நடத்திய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கும், பெரியார் தொண்டர்களுக்கும் தங்கள் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
மதுரை சுந்தரராஜன் பட்டியில்....
14.09.2014 அன்று காலையில் 10 மணியளவில் மதுரை சுந்தரராஜன் பட்டி மற்றும் பரவையில் உள்ள செய்ண்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளிகளில் பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை பரவையில் உள்ள செண்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளியில், மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சுப.முருகானந்தம் தலை மையில் , இயக்க தோழர்களும், இயக்கத் தோழர்களின் குழந்தைகளும், தேர்வு எழுதிய 25 பேருக்கும் வழி காட்டிகளாக இருந்தார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.சதீஷ் அவர்கள் பல்கலைக் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு தேர்வினை நடத்தினார். . கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பெருமை கொண்டார்கள், உவகை கொண்டார்கள். அதனைப் போல மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கப் பள்ளியில் சின்னையாபுரம் மற்றும் பசுமலை பள்ளியைச்சார்ந்த ஆசிரியர்களும், விடுதலை வாசகர் வட்டச்செயலாளர் அ.முருகானந்தம் தலைமையில் பத்து பேரும் மற்றும் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தோழர் சண்முகசுந்தரம் , பா.சடகோபன், சொ.நே. அன்புமணி ஆகியோரும் தேர்வு எழுது பவர்களுக்கு உறுதுணையாக செய லாற்றினர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் எழிலரசன் அவர்கள் தேர்வினை நடத்தினார்.  தேர்வு எழுதிய 51 மாணவ மாணவி யர்கள், பிரேயலி முறையில் கொடுத்த தந்தை பெரியார் பற்றிய புத்தகத்தை கரைத்துக் குடித்திருந்தார்கள். கேள்வி களை ஒருமுறை கேட்டவுடனேயே டக் டக் என்று பதில் கொடுத்தனர். உதவியாக இருந்த அனைவரும் அவர்களின் ஆற்றல் கண்டு வியந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் பேசிய மாணவ, மாணவி கள் பலரும் பெரியார் பற்றி, இந்தத் தேர்வு பற்றியும்  தங்கள் கருத்துக்க்ளைக் கூறினர் ,பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் திரு. ரமணி அவர்கள், தந்தை பெரியாரின் தத்துவம் என்பது மனித நேயத்தத்துவம், எங்கள் மாணவர்கள் தந்தை பெரியாரை எளிதில் உள்வாங்கிக் கொள்வார்கள், சாதாரணமானவர்களிடம் தந்தை பெரியார் பற்றிச்சொன்னால் 10க்கு ஒருவர் அதனை ஏற்கலாம், ஆனால் இவர் களிடம் தந்தை பெரியார் பற்றி 10 பேரிடம் சொன்னால், 9 பேர் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் 136- ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பார்வையற்ற மாணவ- மாணவிகளிடம் பெரியார் ஆயிரம் வினாவிடைப் போட்டியை நடத்த வேண்டும் என்று நமது தலைமை முடிவு செய்தது எவ்வளவு தொலை நோக்கு என்பது அப்போது எனக்குப் புரிந்தது.
பரிசளிப்பு விழா
16.09.2014 மாலை 5 மணியளவில் , மதுரை பரவையில் உள்ள செண்ட் ஜோசப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள், அந்த மாணவ -மாணவிகளிடம் தேர்வு பற்றியும் , தந்தை பெரியார் பற்றியும் சில கேள்வி களைக் கேட்டார். மிகவும் ஆர்வமாக அந்தக் குழந்தைகள் பதில் கூறினர். தேர்வில் கலந்து கொண்ட அனை வருக்கும் தந்தை பெரியாரின் 136-ஆம் நாள் பிறந்த நாள் விழா என்று அச்சிடப் பட்ட அழகிய பைகள் வழங்கப் பட்டன. அந்தப் பள்ளியில் பயிலும் 90 மாணவ - மாணவிகள், ஊழியர்கள் 20 பேருக்கும் என அனைவருக்கும் இனிப்புப் பொட் டலங்கள் , திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே. எடிசன் ராசா அவர்களால் வழங்கப் பட்டன.  அடுத்த ஆண்டு இன்னும் அதிகம் பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வோம் என்று உற்சாகமாக் அந்தக் குழந்தைகள் கூற அடுத்த பள்ளியை நோக்கிப் பயணித் தோம்.
16.09.2014 மாலை 6 மணியளவில், மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்தில் பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா நடை பெற்றது. பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரமணி அவர்கள் 30 ஆண்டுகளுக் கும் முன்னால் திரு.ஜின்னா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பிரமாணடமாக நடைபெறும் பார்வையற்றோர் பள்ளி யின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன் னார். . திராவிடர் கழக்த்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா அவர்கள் தனக்கும் இந்தப் பள்ளிக்குமான தொடர்பு 25 ஆண்டுகளுக்கும் மேலானது என்று சுட்டிக் காட்டி உரையாற்றினார்.  தந்தை பெரியார் பற்றியும் , நடந்த தேர்வு பற்றியும் , அடுத்த ஆண்டு இதனைப் போல நடத்த வேண்டும் என்று கேட்டும் மாணவ, மாணவிகள் உரையாற்றினர். போட்டியில் பங்குபெற்ற மாணவர்களின் சார்பாக பாண்டியராசன் என்னும் மாணவர் "14.09.2014, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரியார் ஆயிரம் போட்டித் தேர்வு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத் தது. இந்தத் தேர்வுக்கு முன்னதாகப் பெரியாரைப் பற்றி நிறையத் தெரியாது. இப்போது முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பெண் கல்விக்கும், கல்விக்கும் எவ்வளவு முக்கி யத்துவம் கொடுத்தவர் பெரியார் என் பதும், மனிதநேயத் தலைவர் பெரியார் என்பதையும் அறிந்து கொண்டோம்.
நாங்களெல்லாம் பெரியாரின் பேரப் பிள்ளைகள். பெரியார் வழியான மனித நேயத்தைப் பின்பற்றுவோம். பிராமணர் கள்  நம்மைக் கல்வி கற்க அனுமதிக்க வில்லை. ஜாதி ஏற்றத்தாழவு நம்மை இழிவுபடுத்துகிறது. வைக்கம் வீரர் பெரியார் சாதியை ஒழிக்கப்பாடுபட்டார். இந்தத் தேர்வு மிக நன்றாக இருந்தது. எங்கள் புத்தகமான பிரேய்லி மொழி யில் படிக்க வாய்ப்புக் கொடுத்தீர்கள். நன்றி. ஆண்டுதோறும் இந்தப் போட் டியை நடத்த வேண்டும்" என்றார். மாணவர் ரோசன்  "தடம் பார்த்து நடப்பவன் மனிதன், ஆனால் தடத்தைப் பதிப்பவர் மாமனிதர். அப்படிப்பட்ட மாமனிதர் பெரியார். மனித நேயமிக்க மாமனிதர் பெரியார். அவர் வழி நடப்போம். இந்தத் தேர்வு நடத்தியதற்கு நன்றி" என்றார். மாணவி ஷாலினி "எங்களுக்கு இப்படிப்பட்ட தேர்வு நடப்பது அபூர்வம். நடத்தியதற்கு நன்றி . இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு புது அனுபவமாக இருந்தது. பெரியார் அவர் களைப் பற்றி அறிந்து கொண்டோம்." என்றார். எல்.பாண்டிச்செல்வி என்னும் மாணவி "இந்தப் போட்டி நடத்தியதற்கு. நன்றி, நன்றி. மதத்தை, ஜாதியை வெறுத்தவர் பெரியார். அவர் போல நாமும் நடப்போம்" என்றார், எஸ்.விக் னேஸ் என்னும் மாணவர் "மாநிலம் முழுவதும் எங்களைப் போன்றவர் களுக்கு நடத்தியிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பகுத்தறிவாளர் களாக நாங்கள் மாற வழி காட்டியிருக் கின்றீர்கள். தொடர்ந்து பெரியாரைப் படிப்போம் . போட்டி நடத்தியதற்கும், பரிசு அளித்தற்கும் மிக்க நன்றி " என்றார்.  நிகழ்வினை திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார். பரிசுத்தொகையினை திரு.வீ.அன்புராஜ், தே.எடிசன்ராசா, பொறியாளர் சி. மனோகரன், முனைவர் வா. நேரு  ஆகியோர் வழங்கினர். முடிவில் பள்ளியில் பயிலும் 335 மாணவ, மாணவிகள், 75 ஊழியர்கள் உள்ளிட்ட அனைவ்ருக்கும் இனிப்பு பொட் டலங்கள் வழங்கப்பட்டன. பங்கு பெற்ற அனைவருக்கும் பெரியார் பட்டம் போட்ட பள்ளிப் பைகள் வழங்கப் பட்டன. முடிவில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுனுத்தாய் நன்றி கூறினார். இந்தப் பள்ளியின் நிறுவனர் ஜின்னா அவர்களின் மறைவிற்குப் பின்னும் மிக நன்றாக பார்வையற்றோர் பள்ளியை நடத்திவரும் திருமதி ஜின்னா, ஜின்னாவின் மகள் ஆகி யோரை சந்தித்து திரு,வீ.அன்புராஜ் அவர்கள் உரையாடி நன்றி தெரி வித்தார்.
மனிதநேயம் என்றால் பெரியார்!
மனிதநேயம் = பெரியார் என்ப தனை நாம் அறிவோம். ஆனால் பெரியாரின் மனித நேயத்தை பெரி யாரின் தொண்டர்கள் வழியாக மற்றவர்கள் அறிவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பார்வையற்றோர்களுக்கான பெரியார் ஆயிரம் போட்டி அமைந்தது. தமிழகம் முழுக்க 12 பார்வை யற்றோர் பள்ளிகளில் இந்தப் போட்டி நடந்துள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு சென்ற நேரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் அழகிரிசாமி அவர்களும், பகுத்தறி வாளர் கழக மாவட்டப் பொறுப் பாளர்கள்  கோபு.பழனிவேல், காமராஜ், அழகிரி ஆகியோர் தஞ்சை மாவட் டத்தில் நடந்த பெரியார் ஆயிரம் வினாவிடைப் போட்டியில் 6000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டதை,
மாநிலத்திலேயே தங்கள் மாவட்டம் முதன்மை என்று  உற்சாகமாக கூறி னார்கள். அதற்காகத் தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைக் கூறினார்கள். பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் வெற்றிப் பெருமிதமும், தந்தை பெரியாரின் கருத்துக்களை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல களப்பணியாற்றியிருக்கிறோம் என்ற  உணர்வும் தெரிந்தது. மன்னார் குடியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் வேதாரணியத்தை சார்ந்த மண்டலத் தலைவர் அய்யா  முருகையன் அவர்கள் நாம் பத்து கூட்டம் போட்டு வரும் பலனை விட ஒரு பள்ளியில் நடத்தும் பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி அதிகப்பலனைத் தருகின்றது என்றார். உண்மைதான் அதிக விளைவைத் தரும் அருமை யான திட்டமாக பெரியார் ஆயிரமும், பெரியார் ஆயிரம் பார்வையற்ற மாணவர்களுக்கான போட்டிகளும் .. ஒவ்வொரு மாவட்டமும் போட்டி போட்டு மாணவ-மாணவிகளை பெரியார் ஆயிரம் வினா-விடை எழுத வைத்திருக்கின்றார்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அத்தனை தோழர்களுக் கும். மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து நிகழ்வினை வெற்றியாக ஆக்கி யிருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் அய்யா நல்.இராமச்சந்திரன் அவர்களுக்கும், கல்வியாளர் திருமதி பர்வீன் அவர் களுக்கும் மற்றும் இந்த நிகழ்வில் வெற்றிச் சங்கிலித் தொடரில் ஒவ்வொரு கண்ணியாக இருந்து பணியாற்றிய அத்தனை பெருமக்களுக்கும்  நமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு நடத்துவ தற்காக ஒவ்வொரு ஊருக்கும் வ்ந்த  பேராசிரியர்கள் மிகச்சிறப்பாக தேர்வினை நடத்தினார்கள். மிகப் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் கூட கடந்த 32 ஆண்டுகளாக, 1983-லிருந்து இயக்கத்தின் பல்வேறு செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், மிகவும் பெருமைப் படத்தக்க, மறக்க முடியாத மனித நேய நிகழ்வாக , பார்வையற்ற மாணவ், மாணவிகளுக்கு நடத்திய பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி அமைந்திருந்தது என்றால் மிகை யில்லை.
நன்றி : விடுதலை 01-11-2014