Monday, 14 September 2020

பற்றி எரியும் நெருப்பாய்,படைத்த படைப்பாளி பேரறிஞர் அண்ணா

 பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று..'நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், அது தந்தை பெரியார் ' என்றுரைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. நான் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் இந்தக் காலம் எனது வாழ்வின் வசந்த காலமல்ல,மாறாக கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து,பகுத்தறிவுப்பகல்வன் தந்தை பெரியாரோடு இணைந்து பகுத்தறிவு பிரச்சாரம் ஆற்றிய காலமே, எனது வாழ்வின் வசந்த காலம் என்று எழுதிய  பேரறிஞரின் பிறந்த நாள் இன்று.அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் வாழ்த்துகள்

திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் முகநூலில் நேற்று(14.09.2020) முதல் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை பட்டியலிட்டு வருகின்றார். எத்தனை சிறுகதைகள்(120),எத்தனை நாவல்கள்(36),எத்தனை நாடகங்கள்..ஓரங்க நாடகங்கள்(12,60), எத்தனை கடிதங்கள்(290), எத்தனை கவிதைகள்(63),எத்தனை கட்டுரைகள்(1960) எனப் பட்டியலிட்டு தமிழில் மட்டுமா, ஆங்கிலத்தில் இத்தனை என அய்யா கொடுக்கும் பேரறிஞர் அண்ணாவின் படைப்பு பட்டியலை இளைஞர்கள் ஊன்றிப்படிக்கவேண்டும். தலைவாருவது பற்றிக்கவலையில்லை,படுத்து உறங்க மெத்தை கேட்டதில்லை,மாபெரும் தலைவராக பவனி வந்த நேரத்திலும், தொண்டன் கொடுத்த பாயில், கையை தலையணாக வைத்து படுத்து உறங்கிய அந்த மக்கள் தலைவரின் படைப்புகளின் எண்ணிக்கையே  படிப்பவருக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது. எழுதுவதற்கு எனக்கு மனநிலை நன்றாக இருக்கவேண்டும், நல்ல இடம் வேண்டும்,சுற்றுலாத்தலம் போன்ற இடங்களில் இயற்கை கொஞ்சும் சூழலில் அமர்ந்தால்தான் எனக்கு எழுதவரும் என்று சொல்லக்கூடியவர்கள் மத்தியில், நாள்தோறும் தொண்டர்களைச்சந்திக்க பயணித்துக்கொண்டே இருந்த ஒரு தலைவர்,மாபெரும் இயக்கத்தின் தலைவராக இயங்கிக்கொண்டே இருந்த தலைவர், இவ்வளவு படைப்புகளை எழுதிக்குவித்திருக்கிறார் என்று சொன்னால்,எப்படி விளைந்தன இத்தனை படைப்புகள்?


அன்பினால் விளைந்த படைப்புகள் பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள். நாடாண்ட தமிழன், இப்படி நமது நாட்டிற்குப் பிழைக்கவந்த நாடோடிக்கூட்டத்தால்,ஆரிய வஞ்சகத்தால் அடிமைப்பட்டு கிடக்கிறார்களே என்னும் ஆற்றாமையால் விளைந்த படைப்புகள் அவை.நமது மக்கள் வீரத்தில் குறைந்தவர்களா? அறிவில் குறைந்தவர்களா? ஆற்றலில் குறைந்தவர்களா?, எதில் குறைந்தோம் நாம்? ஆனால் ஆண்டாண்டு காலமாக 'நாங்கள்தான் அறிவிற்கு முதன்மையானவர்கள்' என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட பரதேசிகள்,நம்மைப் பழிக்கிறார்களே என்னும் கோபத்தில் விளைந்த படைப்புகள் அவை.உண்மையை நமது மக்களுக்குச்சொல்லவேண்டுமே என்னும் உணர்வில் விளைந்த எழுத்துகள் அவை.


மேன்மையான நோக்கம் இருக்கும்போது,பற்றி எரியும் நெருப்பாய் ,மனதிற்குள் கொடுமைகளைக் கண்டு குமுறும் எரிமலையாய் சிந்தனைகள் இருக்கும்போது., சுற்றி நிகழும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் தத்துவமும், ஆட்சி செய்பவர்களின் அதிகார மமதையை எழுத்துகளால் வடிக்க வேண்டும் என்னும் வேகம் இருக்கும்போது மகத்தான இலக்கியப்படைப்புகள் பிறந்திருக்கின்றன..மக்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன.


'தாய்' என்னும் நாவலைப் படைத்த மகத்தான எழுத்தாளன் மார்க்சிம் கார்க்கி எழுதியது பணத்திற்காக அல்ல, புகழுக்காக அல்ல. இத்தனை மொழிகளில் தனது நாவல் மொழி பெயர்க்கப்படும் என்னும் எதிர்பார்ப்பில் அல்ல. மாறாக மக்களோடு மக்களாக இருந்த மார்க்சிம் கார்க்கி, தன்னைச்சுற்றி இருக்கும் உழைக்கும் மக்களின் வேதனைகளைப் பார்த்து, உழைத்து உழைத்து ஓடாய்ப்போகும் அவர்களின் நிலையைப் பார்த்து தனக்கு பிழைப்புக்காக கிடைத்த அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டு, அடிபட்டு,மிதிபட்டு,அல்லல்பட்டு ,வாழ்வின் வேதனைகளை முழுமையாக உணர்ந்த நிலையில்,அன்றைய ரசியாவின் ஜார் மன்னனின் கோமாளித்தனத்தையும் ,அதிகாரத்திமிரையும் உள்வாங்கி அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கதாபாத்திரங்களை உள்ளடக்கி மகத்தான நாவலைப் படைத்திட்டான். உலக மக்களின் உள்ளத்திலே நிலைத்திட்டான். 


திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் வெறும் பொழுது போக்கு இலக்கியமல்ல.கும்பகோணத்தில், காவிரிக்கரையில் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டு, கரைபுரண்டு ஓடும் காவிரியைப் பார்த்துக்கொண்டு,ஒருத்தியை மோகித்து, மோகத்தின் முள்ளினை  நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதி 'இதற்குத்தானா?' என்று கேட்கும் இலக்கியங்கள் முதல்தரமான இலக்கியங்கள் தமிழகத்தில் இருக்கும் சில விமர்சகர்களுக்கு...ஆனால் உள்ளத்தில் பற்றி எரியும் ,கொடுமைகளுக்கு எதிரான கருத்துத்தீயை எழுத்துக்களாக கொட்டிய எழுத்துகள் மூன்றாம் தர இலக்கியங்கள் சிலருக்கு...வாங்கடா வாங்க, எங்கள் திராவிட இயக்கத்து எழுத்தாளர்களை மட்டுமல்ல, உங்களையும் வாசித்துவிட்டுத்தான் நாங்கள் எழுதுகிறோம்..


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்னும் தத்துவத்திற்கு மாற்றாக, கடவுளின் முகத்திலே பிறந்தவர்கள்,தோளிலே பிறந்தவர்கள், தொடையிலே பிறந்தவர்கள், காலிலே பிறந்தவர்கள் என்று கதை கட்டி ,பெரும்பான்மையான மக்களை மயக்கத்திலே ஆழ்த்திய சதிகாரர்களுக்கு எதிராக களமாடிய எழுத்துகள் திராவிட இயக்க எழுத்துகள்.


பேரறிஞர் அண்ணாவை ,பொருளாதார நிலையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து நிற்கும் நிலைக்கு அடித்தளம் இட்டதற்காக,'தமிழ் நாடு' என்னும் பெயர் வைத்தற்காக, இரு மொழிதான் ஆட்சி மொழி என்று உறுதி செய்தற்காக,, சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக ஆக்கியதற்காக என்று அறிந்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்..அதே வேளையில், தனது பேச்சாற்றலால் உலகத்தை ஈர்த்த பல்வேறு பேச்சாளர்களை வரலாற்றில் படித்திருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லோரையும் மிஞ்சிய பேச்சாளராக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்கணக்கில் காத்திருந்து, பொறுத்திருந்து கேட்ட பேச்சாளராக பேரறிஞர் அண்ணாவை அறிந்திருக்கின்ற இளைஞர்கள், எழுத்தாளர் பேரறிஞர் அண்ணாவை முழுமையாக அறிய வேண்டும். அவரது படைப்புகளை நாவல்களை,சிறுகதைகளை, கவிதைகளை,கடிதங்களை எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் நாடகங்களைப் படிக்கவேண்டும். இன்றைய நிலையோடு பொருத்திப்பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் ,மற்ற மொழிகளில் புலமையுள்ளவர்கள் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும்.திருக்குறளை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க தமிழக அரசே முயற்சி எடுப்பதுபோல, பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை வேறு மொழிகளில் கொண்டு செல்ல தமிழக அரசே முயற்சி எடுக்க வேண்டும்.இளைஞர்கள் மத்தியில் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை கொண்டு செல்ல , இந்த நாளில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

               வாழ்க பேரறிஞர் அண்ணா! வாழ்க பேரறிஞர் அண்ணா புகழ்...