Monday 17 February 2020

தலையில் அடித்துக்கொண்ட காவல்துறையினர்....

பகுத்தறிவுவாதிகளுக்கு எதிராக இந்து தீவிரவாதிகள் கொதிக்கின்றனர், குமுறுகின்றனர், கொலை செய்யவும் துணிகின்றனர். கொலை செய்து விட்டு அதிகாரத்தின் துணையோடு வெளியில் திரி கின்றனர்.  உண்மையைச் சொல்லும் பகுத்தறிவாளர் களைக் கண்டால் கோடி கோடியாக அடித்து குவிக்கும் கார்ப்பரேட் சாமியார்கள், அவர்களுக்கு துணை நிற்கும் அரசியல்வாதிகள் எனப் பதை பதைக்கின்றனர். பக்தி நாட்டில் வெள்ளெமெனக் கரை புரண்டு ஓடுகிறது. கரை புரண்டு ஓடும் பக்தி மேலும் ஓட ஊடகங்கள் தங்கள் ஊடகங்களில் இந்தக் கோயிலில் இந்தக் கடவுள் அருள் பாலிக்கிறார், அந்தக் கோயிலில் அந்தக் கடவுளிடம் போய் முறையிட்டால் அத்தனை பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும் என ரீல் ரீலாக ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்பாவி மக்கள் மட்டுமல்ல, அனைத்தும் தெரிந்தவர்களும்கூட இந்தப் பக்திப் பரவசத்தில் மூழ்கி தங்கள் உடை மையை, அறிவை இழப்பது நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்களுக்கு, மனித நேயர்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. கீழே இருக்கும் செய்தியைப் பாருங்கள்.



"தெய்வீக அட்சயப் பாத்திரம் என சாதாரண அட்டைப் பெட்டியைக் காட்டி ரூ.2.10 கோடிக்கு விற்பனை செய்து, திருப்பத்தூர் (வேலூர்) தொழி லதிபரை நூதன முறையில் ஏமாற்றிய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்கிறது அந்தச் செய்தி!

மனித மனம் எதிலும் எளிதில் திருப்தி அடைவ தில்லை. பைக் சொந்தமாக இருந்தால் கார் இருந்தால் நலம் என நினைக்கிறது. ஆசைகள் அடுத்தடுத்துத் தாவும் குணம் கொண்டவை. ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையைத் தூண்டு என 'சதுரங்க வேட்டை' படத்தில் ஒரு வசனம் வரும். அதேபோன்று ஒருவரின் ஆசையைத் தூண்டி ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

திருப்பத்தூர் தொழிலதிபரின் ஆசையைத் தூண்டிய ஒரு கும்பல், கோடிக்கணக்கில் அவரை ஏமாற்றிவிட்டு அட்சயப் பாத்திரம் என வர்ண காகிதம் ஒட்டப்பட்ட அட்டைப் பெட்டியைக் கொடுத்துச் சென்றுள்ளது.

'சுவாரசியமான இந்த வழக்கில் தொழிலதிபரின் நிலையைப் பார்த்து நூதன முறையில் ஏமாற்றிய நபர்களை ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் பிடித்துள்ளனர்.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் நவீன். இவர் பெரும் தொழிலதிபர். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நவீனை 9 பேர் கொண்ட ஒரு கும்பல் சந்தித்தது. அதற்கு முன் அவரிடம் அட்சயப் பாத்திரம் என்கிற பாத்திரம் உள்ளதாகவும், அதை பூஜை அறையில் வைத்து பூஜித்து குறித்த காலம் கழித்துத் திறந்தால் தங்கப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் என்று அந்த கும்பல் கூறியது.

அது குறித்து அறிந்து ஆசைப்பட்ட நவீன், ''அட்சயப் பாத்திரம் கிடைக்குமா?'' என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ''கிடைக்கும். ஆனால், அதுபற்றி நீங்கள் உங்கள் மனைவியிடம் கூட கூறக்கூடாது. அப்படி வெளியில் சொன்னால் அதன் சக்தி போய்விடும்'' என பில்டப் கொடுத்துள்ளனர்.

பின்னர் வர்ண காகிதங்கள் ஒட்டப்பட்ட சிறப்பாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அட்சயப் பாத்திரம் எனக் கூறி, சித்தூர் ஏரியாவில் ஒருவர் வீட்டில் வைத்து அவரிடம் ரகசியமாகக் காட்டி யுள்ளனர்.

அதிலிருந்து வரும் சிக்னலை வைத்து தங்கப் புதையல் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கிலோ கணக்கில் தங்கமாக எடுக்கலாம் எனக் கூறி மாதிரிக்கு திறந்து அதிலிருந்து வரும் சிக்னலைக் காட்டுவது போன்று அவரை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அட்சயப் பாத்திரம் சிக்னல் செய்யவும் அங்கே தோண்டி ஏற்கெனவே புதைத்து வைத்த தங்க நகைகளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

அதைப் பார்த்து பிரம்மித்துப்போன நவீன், ''இந்த அட்சயப் பாத்திரம் தனக்கு வேண்டும்'' எனக் கேட்டுள்ளார். ''அவ்வளவு எளிதில் கொடுத்து விட மாட்டோம். இதற்கென தனி பூஜை அறை அதை வைத் துக்கொள்ளும் தகுதி உங் களுக்கு இருக்கிறதா? என்று பார்ப்போம்'' எனக் கூறி அட்ச யப் பாத்திரத்தின் மார்க்கெட்டை ஏற்றியுள்ளனர்.

எப்படியாவது அதை வாங்கி பூஜை அறையில் வைத்து அவ் வப்போது தங்கமாக எடுத்து இந்தியாவிலேயே பெரிய பணக் காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை வற் புறுத்தியுள்ளார் தொழிலதிபர் நவீன். முதலில் பெரிய தொகை ஒன்றைக் கூறியுள்ளனர். அவ்வளவு என் னிடம் இல்லை என்றவுடன், கடைசியில் ரூ.2 கோடியே 10 லட்சத்துக்குப் பேசி சித்தூருக்கு அழைத்துச் சென்று அதே வீட்டில் வைத்து ரகசியமாக ரூ.2.10 கோடியைப் பெற்றுக்கொண்டு அட்சயப் பாத்திரத்தை (அட்டைப் பெட்டியை) கொடுத்துள்ளனர்.

வாங்கிய பின்னர், தனது வீட்டில் ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து பூஜை செய்து சில நாட்கள் பொறுத்து நகைகள் இருக்கும் புதையலைக் காட்டும் என்கிற எண்ணத்துடன் பயபக்தியுடன் திறந்து பார்த்துள்ளார் தொழிலதிபர் நவீன்.

உள்ளே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச் சியடைய வைத்துள்ளது. உள்ளே வெறும் மரத் துண்டுகள் சிலவும் பேட்டரி, லைட்டுகளும் கிடந் துள்ளன. தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அப்போதுதான் உணர்ந்துள்ளார் நவீன்.

சித்தூர் அருகே குடிபள்ளியில் உள்ள வீட்டில் வைத்து அட்சயப் பாத்திரத்தை வாங்கியதால் அந்த ஏரியா காவல் நிலையத்தில் தாம் ஏமாற்றப்பட்டதாக நவீன் புகார் கொடுத்துள்ளார். உடனடியாக களம் இறங்கிய குடிபள்ளி காவல்துறையினர் அவர் கூறிய அங்க அடையாளத்தை வைத்து 9 பேரையும் தேடி வந்துள்ளனர்.

இந்த மோசடியில் தொடர்புடைய ஆந்திரா மற்றும் கருநாடகாவைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கட்டுக்கட்டாக கைப்பற்றிய பணத்தை செய்தியாளர்கள் முன் பார் வைக்கு வைத்த காவல்துறையினர் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தனர். ('தி இந்து' தமிழ் இணையதளச் செய்தி 12-02-2020)

நமது திருப்பத்தூரைச் சார்ந்தவர் - பெரிய தொழிலதிபர். இப்படியெல்லாம் விவரித்துச் செல்கிறது அந்த நாளேட்டின் செய்தி. 'பக்தி வந்தால் புத்தி போகும்,புத்தி வந்தால் பக்தி போகும் ' என்று சொன் னால் பகுத்தறிவாதிகளுக்கு எதிராக முறைக்கின்றனர். 'சுவாரசியமான இந்த வழக்கில் தொழிலதிபரின் நிலையைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட காவல் துறையினர்' என்று செய்தி வெளிவந்துள்ளது. தலையில் அடித்துக் கொள்ளும் காவல் துறையினர் என்ன செய்ய வேண்டும்? நாடு முழுக்க திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கூட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது தாராளமாக அனுமதிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு பகுத்தறிவு வந்துவிட்டால், இந்த மாதிரி விசயங்களில் அவன் ஏமாறப்போவதில்லை. மறைந்த சாய்பாபா ஒரு லட்டை எடுத்துக் காட்டிய போது, அவருக்கு தனது கையைச்சுழற்றி இரண்டு லட்டுகளை எடுத்துக்கொடுத்த மந்திரமா? தந்திரமா நிபுணர் போல, மக்கள் தெளிவாக இருந்தால் அட்சயப் பாத்திரத்தால் தங்கம் கிடைக்கும் என்று சொன்னால், "வா, உன்னை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன். தங்கம் விலை எக்குத்தப்பாக ஏறிக் கொண்டிருக்கிறது, நிறைய தங்கம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். உனது அட்சயப் பாத்திரத்தை அரசாங்கத்திடம் கொடு, அங்கு தங்கமாய் கொட்டட்டும்" என்று அழைத்துப் போயிருப்பார்கள். காவல்துறையிடம் முன்னரே மாட்டியிருப்பார்கள். இதைப்போல ஏமாறும் ஏகப்பட்ட நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே யார் முன் வர வேண்டும்? நாங்கள் இந்துமதக் காவலர்கள், இந்து மதத்தைக் காப்பற்றவே பிறந்தவர்கள் என்று சொல் பவர்கள்தானே முன் வர வேண்டும். அவர்கள் தாங்கள் வராமல், உண்மையை விளக்கும், உண் மையைச் சொல்லும் பகுத்தறி வாளர்கள் மேல் பாய் கிறார்களே, வன்முறையால் பகுத்தறிவாளர்களின் செயல்பாட்டை முடக்கி விட  நினைக்கிறார்களே? இது சரியா? இது முறையா? இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொதுவானவர்களே சொல்லுங்கள்.

மகாராட்டிரா மாநிலத்தைச் சார்ந்த நரேந்திர தபோல்கர் ஆகஸ்ட் 20, 2013-இல் நடைப்பயிற்சியில் நடந்துகொண்டு இருந்தபொழுது சுட்டுக் கொல்லப் பட்டார். அவர் கடவுள் இல்லை என்று சொன்னவரல்ல. மூட நம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கையை அழிக் கிறது என்று சொன்னார். அறிவியல் மனப்பான்மை வேண்டும் என்று சொன்னார். சமூகம் முன்னேற மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று சொன் னார். 'அற்புதமான சாமியார்களின், சாமியாரிணிகளின் ஆன்மிக சக்தியை நரேந்திர தபோல்கரின் அமைப்பு கேள்வி கேட்கிறது. அதனை தடைசெய்யவேண்டும்' என்று சட்டசபையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

நவீன் மாதிரி ஏமாறும் ஆட்களின் செய்திகளை நாம் பத்திரிகையில் படிக்கும்போது தந்தை பெரியார் நினைவுக்கு வரவேண்டும். அயராது தந்தை பெரி யாரின் கொள்கைகளை கொண்டு செல்லும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவுக்கு வர வேண் டும். நாட்டில் அறிவியல் மனப்பான்மை வேண்டும், மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும், கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் சாதாரண மனிதர்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும், நாட்டில் எவ ருக்கும் அற்புத சக்தி என்றெல்லாம் ஒன்றும் இல்லை, நம்மை ஏமாற்றுவதற்கு அற்புத சக்தி உள்ள சாமியார் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்னும் எண்ணமும் இந்தக் கருத்துக்களை சொன்ன திற்காக கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களின் நினைவும் வரவேண்டும். துணிந்து திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழகத் தோழர்களோடு இணைந்து உண்மை களை உரக்கச் சொல்வோம் என்னும் உந்துதல் வரவேண்டும்.

நன்றி : விடுதலை 17.02.2020

Wednesday 12 February 2020

'ஜாதியற்ற கேரளம் ' என்னும் முழுக்கத்துடன் நடைபெற்ற கேரளா யுத்திவாதி சங்கத்தின் 31-வது ஆண்டு மாநில மாநாடு

செவ்வாய், 11 பிப்ரவரி 2020 

  .


கேரளா யுக்திவாதி சங்கத்தின் 31ஆவது மாநில மாநாடு கேரள மாநிலம் ஆலப்புழா நகரில் டிசம்பர் 2019 - 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் மதமற்ற கேரளம், ஜாதியற்ற கேரளம் என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்றது.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனை வர் வா.நேரு மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
27ஆம் தேதி காலையில் நடைபெற்ற சார்பாளர்கள் கூட் டத்திற்கு பின்பு கேரளா யுக்திவாதி சங்கத்தின் மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் கே.என். அணில் குமார் அவர்கள் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டிய கேரளா மாநில நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் அய்சக் அவர்கள் வராத நிலையில், மாநாட்டின் தொடக்க  உரையாற்றும்படி பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேருவை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வா. நேரு தொடக்க உரையாற்றினார்.
அவர் தனது உரையில்: இந்த 31-ஆம் ஆண்டு கேரளா யுக்தி வாதி சங்கத்தின் ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். சென்ற ஆண்டு கேரளா தொடுபுழாவில் திரு. நரேந்திர நாயக், கே.எஸ்.பகவான் அவர்களோடு சேர்ந்து 30-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு எங்களது பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் அழைக்கப்பட்டு , அவர்கள் வர இயலாத நிலையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
எங்களது தலைவர் டாக்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமெரிக்க மனித நேய சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர் அவர்களைப் பொறுத்தவரை விருதுகளும் , விழுப்புண்களும் ஒன்றுதான். அவரைக் கொலை செய்ய பல முறை முயற்சி நடந்திருக்கிறது. பல விருதுகளும் வழங் கப்பட்டிருக்கிறது. இருதய அறுவைச்சிகிச்சைக்களுக்குப் பின்னும் அயராமல் உழைக்கும் தந்தை பெரியாரின் முதன் மைத் தொண்டர் எங்களை வழி நடத்தி சென்று கொண்டி ருக்கிறார். எனவே அந்த இயக்கத்தின் சார்பாக கலந்து கொள்வதிலே மிக்க மகிழ்ச்சி.
மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது
கேரளா யுக்திவாதி சங்கம் தொடர்ந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. இப்போதுதான் தமிழகத்தில் பகுத்தறி வாளர் கழகத்தின் பொன்விழா தொடக்க மாநாடு விருது நகரில் நடைபெற்றது. உங்கள் இயக்கத்தின் சார்பாக தோழர் கள் கலந்து கொண்டனர். இன்று கேரளாவில் நடைபெறும் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்றோம். தந்தை பெரியார் அவர்கள் எதிர் நீச்சல் போட்டு உண்மைகளை மக்களுக்கு உணர்த்தியவர். அந்த வழியில் கேரளா யுக்தி வாதி சங்கம் உண்மையை உணர்த்துவதற்காக, மகரஜோதி எப்படி மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்னும் உண்மையை உணர்த்துவதற்காக, மகர ஜோதி தோன்றும் நேரத்திலேயே மேலும் சில ஜோதிகளை மலை உச்சியிலிருந்து காட்டிய வர்கள். அதற்காக கடுமையாக தாக்கப்பட்டவர்கள். உண் மையை உணர்த்திய உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். அதனைப்போல தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரி மையை சட்டமாக்கி, முதலில் செயல்முறைப் படுத்தியது கேரளா அரசு.எங்களது மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்....
மனித உரிமை போராட்டம்
மனித நேயத்திற்காக பாடுபடும் இயக்கங்கள் நாம்.தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த அளவில் மனித நேயத்தின் அடிப்படையில்தான் அவரது கொள்கைகளும் போராட் டங்களும் அமைந்தன.சமூக நீதி, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு என அவரின் அனைத்து கொள்கை களும் மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்தவை. கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டம் மனித உரிமைப் போராட்டம். நீங்கள், கேரள மக்கள் அறிந்த போராட்டம்.தெருவில் ஆடு நடக்கலாம், மாடு நடக்கலாம், பன்றி நடக் கலாம், ஆறறிவு படைத்த மனிதன் நடக்கக்கூடாதா எனக் கேள்வி கேட்டு பெரியார் தலைமையில் நடந்த போராட்டம்.அது மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்த போராட் டம்.
விதவைத் திருமணங்கள்
பெண்ணுரிமைக்காகப் பெரிதும் போராடியவர் தந்தை பெரியார். ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் இருந்தால் பெண்ணைப் படிக்கவையுங்கள் என்றார்.7,8 வயது என இருந்த விதவைக்குழந்தைகளைப் பார்த்து மனம் நொந்தார். விதவைத் திருமணங்களை நடத்திவைத்தார்.பெண் உரிமை என்று வருகின்றபோது நீங்கள் உங்கள் மனைவிமார்களை மட்டும் வைத்துக்கொண்டு யோசிக்காதீர்கள். உங்கள் தாயை, சகோதரியை,மகளை நினைத்துக்கொண்டு பெண் உரிமையை யோசித்துப்பாருங்கள் என்று பளிச்சென்று புரியும்படி சொன்னவர் பெரியார்.பெண் உரிமை என்று பேசப்படும் இடமெல்லாம் பெரியார் நினைக்கப்படுகிறார்.
மதம் மனிதத்திற்கு எதிரானது
மதம் மனிதத்திற்கு எதிரானது. இடி தாங்கியை கண்டு பிடித்த பெஞ்சமின் பிராங்கிளின் மதவாதிகளால் கண்டிக்கப் பட்டார். இந்த இடத்தில் இடி விழ வேண்டும் என்பது கடவுள் ஏற்படுத்துவது, நீ ஒரு கருவி கண்டுபிடித்து அதனைத் தடுப்பதா எனக்கேட்டார்கள், தேவாலயத்தின் மூலம் கண்டித்தார்கள். வெறி நாய்க்கடி என்பது கொடிய நோய். வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயில் பாஸ்டர் கண்டிக்கப்பட்டார். உலகம் உருண்டை என்று சொன்ன புரூனோ அவரது புத்தகங்களோடு சேர்த்து எரிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். இப்படி வரலாறு முழுக்க அறிவியலுக்கு எதிராக மதவாதிகள் நடந்து கொண்டதை நாம் பார்க்கமுடியும். அறிவியல் மாநாடுகளிலேயே நமது நாட்டில் அஞ்ஞானத்தை விதைக்கிறார்கள். ஆனால் நாத்தி கம் என்பது, பெரியாரியல் என்பது கேள்வி கேள் என்பது. திருக்குறள் சொல்வது போல,
'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பதனைத் தொடர்ந்து சொல்பவர்கள் நாம்.
உலகத்தில், மதம், கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுப்பதற்காக ஒவ் வொரு மதத்தைச்சார்ந்தவர்களும் தங்கள் மதத்தைச் சார்ந்த வர்களுக்கு வெறியூட்டுகிறார்கள். நாம், நம்மைப் போன்ற அமைப்புகள் அறிவை ஊட்டுகிறோம். யோசிக்க சொல்கி றோம். அறிவியல் வழியில் நடக்கச்சொல்கின்றோம். அந்த வேலையை நாம் தொடர்ந்து செய்வோம். சாதாரண மக்களி டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். சாமியார்களின் பொய்களை அம்பலப்படுத்துவோம். இனி வரும் உலகம் நமக்கான உலகம். மனித நேயத்தில் அமைந்த உலகம் .அது அமைய நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம். மாநாடு சிறக்கவும், புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக் களையும் கூறி விடைபெற்றுக்கொள்கிறேன்." என்று உரை யாற்றினார்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் உரையாற்றினார். மேலும் முன்னாள் அய்அய்டி மாணவர், உலகளாவிய சிந்தனையாளர் தொழில் முனைவர் சிறந்த கருத்துரையாளர் முரளி குமார், கேரள யுக்தி வாதி சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர் கலந்து கருத்துரை ஆற்றினர். மதிப்பிற்குரிய முரளி குமார் கேரள மக்கள் மிக்க வளர்ச்சியடைந்துள்ளனர் என்றாலும் சமூக மாற்றம் மந்தப்பட்டும் நிலையற்றதாகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவிவருவதாக பதிவிட்டார். மக்களின் வளர்ச்சி குழுக்களாக பிரிந்திருப்பதால் ஒட்டு மொத்த சமூக மாற்றம் நிகழ்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகநூல் குழுக்களில் இயங்குபவர்கள் அந்த எல்லைக்குள்ளே அடங்கிவிடுவதால் சமூக மாற்றத்தின் தாக்கம் திசை மாறிப் செல்கிறது என்று பதிவிட்டார். மேலும் இந்திய விஞ்ஞானிகள் மதப்பித்து பிடித்து பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டிகளாக வாழ்வதை பதிவு செய்தார்.தொடர்ந்து மதிப்பிற்குரிய கேரள யுக்தி வாதி சங்கத்தின் புரவலர் கலாநாதன் உணர்ச்சிகரமான நீண்ட சொற்பொழிவு ஆற்றினார். மானமிகு அ.தா.சண்முகசுந்தரம் காலையிருந்து மலையாளத்தில் அனைவரும் பேசியதால்   மேலும் நீண்ட சொற்பொழிவுக்கிடையில் மாற்றம் வேண்டி எளிய ஆங்கி லத்தில் நிதானமாக கருத்துரை ஆற்றினார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாபுலே அவர்களின் தொண்டினை நினைவுபடுத்தும் முகமாக அறிமுக உரை யாற்றிவிட்டு காலையிலிருந்து பல்வேறு பேச்சாளர்கள் பேசிய கருத்துக்களை நினைவூப்படுத்திவிட்டு வந்திருக் கின்ற தோழர்கள் செய்ய வேண்டிய அடுத்த கட்ட கடமை களை தொகுத்துரைத்தார். குறிப்பாக உணர்ச்சிகரமான பேச் சுக்களுக்குப் பின்னால் குடும்பங்களை பகுத்தறிவாளர்களாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்திய விஞ்ஞானிகள் தங்கள் நிலையை மாற்றுவதன் கட்டாயம் பற்றி எடுத்துரைத்தார். பதவி மோகம், அரசியல் சார்ந்த பதவி வழங்கல் போன்றவற்றால் இந்திய விஞ்ஞானிகள் மாட்டிக்கொண்டு அரசியல்வாதிகளை திருப்திபடுத்தும் வழியில் நடப்பதனை எடுத்துரைத்தார். இன்னும் நூறு வருடங்களுக்கு நாத்திகவாதிகள் விஞ்ஞான கழகங்களின் தலைவர்கள் ஆக முடியாது என்பதை எடுத்துரைத்தார்.மனிதன் சமுதாய விலங்கு என்பதையும் சார்புவாழ்வின் தத்துவத்தையும் எடுத்துரைத்தார். உடலியலின் மரபுவழி கோட்பாடு பற்றியும் எடுத்துரைத்தார்.
கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பேரணி, ஆலப்புழா படகு வீட்டில் கேரளா யுக்திவாதி சங்கத்தினர்  படகு சவாரியோடு கேள்வி-பதில் என வெகு உற்சாகமாகவும், எழுச்சியாகவும் மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாள மனோராமா போன்ற பத்திரிக் கைகள் படங்களோடு செய்திகளை மிக விரிவாக வெளியிட்டதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.
நன்றி : விடுதலை 11.02.2020



Sunday 9 February 2020

பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திலிருந்து விருப்ப பணி நிறைவு : வா.நேருவுக்கு பாராட்டு விழா

பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திலிருந்து விருப்ப பணி நிறைவு : வா.நேருவுக்கு பாராட்டு விழா


மதுரை, பிப் 9-:பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலிருந்து விருப்ப பணி நிறைவு பெற்ற பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேருவுக்கு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக விருப்ப பணி நிறைவு பாராட்டு விழா 02.02.2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மதுரை யானைக்கல் எஸ்.ஏ.எஸ்.அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சுப.முருகானந்தம் தலைமை ஏற்றார். நிகழ்வினை திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார். 

விழாவில் அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் அ.முருகானந்தம் வரவேற்றார்.விழாவிற்கு திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சே.முனியசாமி,மதுரை மண்டலத்தலைவர் நா.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






 விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொழிலாளர் அணிச்செயலாளர் மகபூப்ஜான்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னணி வழக்கறிஞர் இராம.வைரமுத்து மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேரா.இ.கி.இராமசாமி,அருப்புக்கோட்டை பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ந.ஆனந்தம்,பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தலைவர் சு.கருப்பையா,வா.நேருவின் +2 வேதியியல் ஆசிரியர் முத்துராமலிங்கம்,திராவிடர் இயக்கத்தமிழர் பேரவையினைச்சார்ந்த ஊடகவியலாளர் உமா, திராவிடர் கழக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் நா.கணேசன் ஆகியோர் உரையாற்றிய பின்பு புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் " பி.எஸ்.என்.எல்,எம்.டி.என்.எல். நிறுவனங்களிலிருந்து ஒரே நாளில்(31.01.2020) 92,000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேறி இருக்கிறார்கள்.இது ஒரு வகையில் கட்டாய ஓய்வு.நேருவைப் பொறுத்த அளவில் அவருக்கு விருப்ப ஓய்வு என்றாலும் மற்றவர்களுக்கு அப்படி அல்ல. அரசாங்கம் கொடுப்பதாக சொல்லியிருக்கும் சலுகைகள்,நிறுவனத்தில் தொடர்ந்து கொடுக்கப்பட்ட மறைமுக நெருக்கடி, தொழிற்சங்கங்களின் இயலாமை போன்ற எல்லாம் இணைந்து இத்தனை பேர் வெளியேறி இருக்கிறார்கள்.அரசியல் அமைப்புச்சட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் கட்சியில் இருக்கக்கூடாது என்று இல்லை. கட்சி சார்பு இல்லாமல் எப்படி வாக்களிக்க முடியும்.வாக்களிக்கும்போது ஒரு கட்சி சார்ந்துதானே அரசாங்க ஊழியரும் வாக்களிக்கின்றார். அரசியல் கட்சியில் இருப்பது என்பது அரசாங்க ஊழியர்களின் உரிமை. ஆனால் இதுவரை எந்த தொழிற்சங்கமும் அந்த உரிமைக்காகப் போராடியது இல்லை.நானும் இஸ்ரோ என்னும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்தவள்தான். இன்று நான் தொடர்ந்து இருந்திருந்தால் உயர்ந்த கிரேடு1 அதிகாரியாக இருந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் திட்டமிட்டு எனக்கு பதிவு உயர்வு கொடுக்காமல் புறக்கணித்தார்கள். நான் விருப்ப ஓய்வில் வெளியேறினேன்." எனக்குறிப்பிட்டு   பேசுவதற்கு நாட்டில் குடியுரிமை பதிவேடு, பணமதிப்பு வீழ்ச்சி, நீட், புதிய கல்விக்கொள்கை அதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை பாதிப்பு போன்ற எத்தனையோ விசயங்கள் இருக்க, நாளைய முதல்வர் கனவில் இருக்கும் நடிகரின் பெரியார் பற்றிய தரக்குறைவான பேச்சு மூலம் மக்களைத் திசை திருப்பும் செயலை வன்மையாகக் கண்டித்தும், இன்றைக்கு நாட்டில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு சிறப்பாக உரை யாற்றினார்.

விழாவில் கழகத்தோழர்களும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வா.நேரு அவர்களுடன் பணியாற்றிய சக தோழர்களும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மதுரையில் அண்மையில் கே.பி.என்.ஜானகி அம்மாள் விருதுபெற்ற இராக்கு தங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.முடிவில் பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத்தலைவர் செல்ல.கிருட்டிணன் நன்றி கூறினார்.

நன்றி : விடுதலை 09.02.2020


Sunday 2 February 2020

விட்டு விடுதலையாகி......வா.நேரு


விட்டு விடுதலையாகி
வா(ங்க) நேரு
என்று முக நூலில்
அழைத்திருக்கிறார்
அய்யா சு.அறிவுக்கரசு.....
அதனை ஆமோதித்து
வழி மொழிந்திருக்கிறார்
அய்யா பெல் ஆறுமுகம்...

விட்டு விடுதலைதான்
முப்பத்தி ஆறு ஆண்டுகள்
பணியாற்றி அதில்
4 ஆண்டுகள் காந்தி கணக்கில் போக
மீதம் 32 ஆண்டுகள் நேருவின் கணக்கில்
பணி முடித்து விட்டு விடுதலையாகி
வந்ததென்னவோ மகிழ்ச்சிதான்
என்றாலும் இனம் புரியாத
சோகம் மனதிற்குள் ஓடுகிறது...


இரண்டு மாதங்களாக சம்பளம் கூடக்
கொடுக்காமல்...
பணி நிறைவன்று
எந்தப் பணமும் பணிப்பலனும் கொடுக்காமல்
ஒருவர் இருவரல்ல
எழுபத்து எட்டு ஆயிரம் ஊழியர்களை
விருப்ப ஓய்வு எனும் பெயரில்
அரசு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது...

அதிசயமாகத்தான் இருக்கிறது...
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...
வெகுண்டெழுந்து போராடும் சென்ற
தலைமுறையைச்சார்ந்தவர்கள்தான்
விருப்ப ஓய்வில்
எந்த வித எதிர்ப்பும் இன்றி
எப்படி இவ்வளவு பேரும் விருப்ப ஓய்வில்.

காட்டில் மேட்டில் கம்பம் நட்டு
மழையில் குளிரில் கம்பி இழுத்து
அன்றைய தொலைபேசி சேவையை
அளித்தவர்கள் இவர்கள்...
தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில்
அன்றைய அரசுகள்
காட்டிட்ட அக்கறையால்
ஆலமரமாய் வளர்ந்த
பி.எஸ்.என்.எல். வளர்ச்சியில்
தங்களையும் பிணைத்துக்கொண்டு
தாங்களும் வளர்ந்து
நிறுவனத்தையும் வளர வளர வைத்தவர்கள்...
இன்றைக்கு விருப்ப ஓய்வில் ...

முடியாதவர்கள் அல்ல, இயலாதவர்கள் அல்ல..
எதனையும் அறியாதவர்கள் அல்ல
அரசு தருவதாகச்சொன்ன
வாக்குறுதிகளால் மட்டும்தானா
இத்தனை பேர் விருப்ப ஓய்வு?...
இல்லை ! இல்லை !

அரசு மாறியபோது அனைத்துமே
மாறுவதை மெல்ல மெல்ல உணர்ந்தார்கள்...
தனியாருக்காக அரசு நிறுவனம்...அரசாலே
மெல்ல அழிக்கப்படுவதை உணர்ந்தார்கள்...

மின் கட்டணம் கட்டாமல் அரசாங்கமே
தொலைபேசி சேவையை
முடக்கி வைக்கும் கொடுமை ஏன்?ஏன்?..
என மனதிற்குள் வினவினார்கள் .....
எல்லோருக்கும் கொடுத்தபின்பும்
அரசு நிறுவனத்துக்கு 4ஜி
தர மறுப்பது ஏன் எனப்புலம்பினார்கள்...
எட்டாயிரம் கோடி பத்தாயிரம் கோடி
எனக் கடன் பெற்று
பணக்காரன் பலபேர் நாட்டை விட்டே
பறந்து செல்வதைப் பார்த்தவர்கள்
அரசு நிறுவனத்திற்கு அரசு வங்கிகள்
கடன் கொடுக்கக் கூடாது எனும்
அரசின் கட்டளையைப் பார்த்து
பார்த்துத் திகைத்தார்கள்

என்று வரும் போனமாதச்சம்பளம்
என ஊழியர்களைப்  புலம்ப விட்ட
நரித்தனத்தை நன்றாகவே உணர்ந்தார்கள்...
பழுதினைச் சரி செய்ய ஆட்கள் இல்லை
சென்று வர வாகனம் இல்லை
தற்காலிக ஊழியராய்
ஆழக்குழி தோண்டி தடம் பதிக்கும்
தோழனுக்கு ஏழு எட்டு மாதங்களாய்
ஊதியம் இல்லை....அட!
கழிப்பறையைக் கழுவிச்சுத்தம் செய்யும்
தோழியருக்கும் ஏழெட்டு  மாதங்களாய்
ஊழியம் இல்லை..


கொலை செய்ய முடிவெடுத்தவன்
மெல்ல மெல்ல கொல்லச்செய்யும்
கொடும் நஞ்சை அளிப்பது போல
அரசே கொடுக்கும் கொடும் நஞ்சை
பார்த்துப் பார்த்துச் சலித்தவர்கள்
கூட்டமாக வேடனுக்கு எதிராக
பறந்து சென்ற புறாக்கள் போல
ஒட்டு மொத்தமாக ஓய்வு பெற்றிருக்கிறார்கள்..
எங்களின் சம்பளத்தால்தானே
இழப்பு என்றாய் அரசாங்கமே...
இலாபத்தைக் காட்டு வருவாயைக் கூட்டு
என அறைகூவல் விடுத்திருக்கிறார்கள்....

                                                                                வா.நேரு,03.02.2020



?