Tuesday, 18 February 2014

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு வாழ்த்து -

ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !

ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?

வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?

எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !

தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !
எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !


                        வா. நேரு -
நன்றி : எழுத்து.காம்- 18.2.2014

Tuesday, 11 February 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்-பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர்                                          :  பாவண்ணன்
பதிப்பகம்                                         : காலச்சுவடு
முதல் பதிப்பு                                  : டிசம்பர் 2004 , 242 பக்கங்கள், விலை ரூ 140
மதுரை மாவட்ட மைய நூலக எண்: 167300

                                                                    படித்து முடித்தவுடன், கட்டாயம் விலைக்கு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம். தான் படித்த, தன் மனதைப் பாதித்த ஒரு எழுத்தாளரின் சிறுகதை, அச்சிறுகதையோடு தொடர்புடைய தன்னுடைய வாழ்வில் நிகழந்த நிகழ்வு, இரண்டையும் இணைத்து  ஓர் ஆழமான இலக்கியத் தேடல் பயணமாக இந்த நூலைக் கொடுத்துள்ளார் பாவண்ணன். நல்ல முயற்சி, அருமையான சிறுகதைகளின் கதைச்சுருக்கமும், அக்கதைகளை எழுதிய ஆசிரியர் பற்றிய குறிப்புகளும் , அந்தச் சிறுகதைகள் சொல்லும் சேதியை தன் வாழ்வோடு  பொறுத்திப்பார்க்கின்றபோது எழும் சிந்தனைகளும், அதை நேர்த்தியோடு சொல்லும் விதமும்  அருமை, அருமை, பாவண்ணன், அருமை.

                                               தமிழகத்தைச்சேர்ந்த 25 எழுத்தாளர்களின் கதைகள், அயல் தமிழ்ச்சிறுகதைகள் எனத்  தமிழ் ஈழம்-இலங்கையைச்சேர்ந்த 8 எழுத்தாளர்களின் கதைகள், பிறமொழிக் கதைகள் என இந்தியாவின் பிற மாநில மற்றும் அயல் நாட்டைச்சேர்ந்த 10 எழுத்தாளர்களின் கதைகள் என மொத்தம் 43 கதைகள். பொறுக்கி எடுக்கப்பட்ட கதைகளாக உள்ளன. ' சிறுவனாக இருந்த காலம் முதல் இன்றுவரை படிப்பதில் என் ஆர்வம் தணியாத ஒன்றாகவே இருக்கிறது. படிப்பதை அசைபோடும் தருணங்களில் ஒன்றை இன்னொன்றுடன் இணைத்தும் வேறொன்றுடன் மாறுபடவைத்தும் யோசிப்பதும்கூடப் பழகிவிட்டது' என்று தன் முன்னுரையில் பாவண்ணன் கூறுகின்றார். ஆனால் அவரின் பழக்கம், பதிவாகி ,புத்தகமாகி கையில் வந்தபோதுதான் அது எவ்வளவு பெரிய நல்ல பழக்கம் எனப்புரிகின்றது.

                                                          ஜாதி உணர்வை விடமறுக்கும் மனிதர்களைப் பற்றிய கதையான அ. .மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்' பற்றிச்சொல்லி வெட்ட வெட்ட முளைக்கும் புல், களை போலவே மனிதர்களின் மனங்களில் ஜாதி உணர்வு இருப்பதைச்சுட்டுகின்றார். பி.எஸ்,இராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'  கதையோடு தன் மகனுக்கும் தனக்கும் நடந்த்  கடவுள் பற்றிய உரையாடலை பாவண்ணன் காடுகின்றார். த. நா. குமாரசாமியின் 'சீமைப்பு ' கதைக் கருவோடு தன் நணபர் கிராமத்தில் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தையும் அதனைப் பார்த்துக்கொள்ள குடிசையோடு அமர்த்தப்பட்ட அவரின் தம்பியையும் ஒப்பிடுகின்றார். இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் அவரின் விவரிப்பும் ஒப்பிடலும் மிக இயல்பாக உள்ளன். படிக்கும் நமக்கும் , நாம் படிக்கும் ஒவ்வொரு கதையையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டு, மேலும் உணர்வதற்கும் பிறருக்கு உணர்த்துவதற்கும் தூண்டுகின்றன.

                                                            ஒவ்வொரு சிறுகதையையும் விவரித்துச்சொல்ல ஆசைதான் . மொத்தம் 43 பாராக்கள் ஆகிவிடும்.  உண்மையிலேயே 'ஆழத்தை அறியும் பயணம்'தான் இந்தப் புத்தகம். வாங்கிப் படிக்கலாம். படித்து படித்து இரசிக்கலாம். வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும்.

Sunday, 9 February 2014

நிகழ்வும் நினைப்பும் (18) :இறையன்புவின் படைப்புலகம்

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 'இறையன்புவின் படைப்புலகம் '; என்னும் தலைப்பில் நிகழ்ந்த ஆய்வரங்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாழும்போதே படைப்பாளி, தனது படைப்புகள் குறித்த பாராட்டுக்களையும் , விமர்சனங்களையும் நேரிடையாக்க் கேட்பது அரிது. அதிலும் யூ.சி.ஜி. யும் , ஒரு கல்லூரியும் இணைந்து, படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆய்வரங்கம் நடத்துவது அரிது, அரிது. எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுகளுக்கு முன்னால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்புகள் பற்றி நடந்தது. அதனைப்போல திரு. வெ.இறையன்பு அவர்களின் படைப்புகள் பற்றி 8, 9 நாட்களில் நடந்த ஆய்வரங்கம் குறிப்பிடத்தக்க நிகழ்வு.

                                        சென்னையில் 8.2.2014 அன்று நடந்த கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு  தொடங்கி வைத்திருக்கின்றார். ம்துரையில் திரு. பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையேற்று ஆய்வரங்கத்தை முடித்து வைத்தார்கள். காலை 10 மணிக்கு திரு.வெ.இறையன்பு அவர்கள் 'வையத் தலைமை கொள் ' என்னும் தலைப்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கு  அருமையான உரையை நிகழ்த்தினார். தலைமைப் பண்பு என்றால் என்ன. ஒரு நிர்வாக்த்தில் தேவைப்படும் தலைமைப்பண்பு, புதிதாகக் கண்டு பிடித்தவர்கள் எல்லோருமே 35 வயதிற்குள்தான், நிறுவனங்கள் இன்று அனுபவசாலிகள் தேவை என்று கேட்பதில்லை, அனுபவசாலிகள் புதிதாக சிந்திப்பதில்லை, மாற்றி யோசிப்பதில்லை என்பதையெல்லாம் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். பின்பு மாணவ , மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு மாணவன் தேர்வில் இப்படிக்கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள் என்று ஒரு புதிரைக் கேட்க, புதிரெக்கல்லாம் பதில் சொல்லி , தேர்வாகி வந்து விட்டோம் , அய்.ஏ.எஸ்.தேர்வு குறித்து , படைப்புகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்றார். உண்மைதான், என்ன கேள்வி கேட்பது என்பது புரிந்தாலே , பல விசயங்கள் எளிதாகப் புரிந்து விடும். நான்கு அறைகளில், கட்டுரையாளர்கள் 'இறையன்புவின் படைப்புகள்' பற்றி
 கட்டுரைகள் வாசித்தார்கள். மொத்தம் 190 கட்டுரைகள், மூன்று பாகங்களாக புத்தகங்கள் 'இறையன்புவின் படைப்புலகம்' என்னும் தலைப்பிலே வெளியிடப்பட்டது.

                                    190 கட்டுரையாளர்கள், பல துறை சார்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்கள் சார்ந்தவர்கள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர் மதிப்பிற்குரிய நல்.ராமச்சந்திரன் அவர்கள். , கவிஞர் வைரமுத்து அவர்கள், பேரா. டாக்டர். கு.ஞானசம்பந்தன் அவர்கள்,முன்னாள் நீதிபதி சந்துரு    போன்றவர்கள் இறையன்புவின் படைப்புகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பதிந்துள்ளார்கள். 190 கட்டுரையாளர்களில் நானும் ஒருவனாக எனது கருத்தினைப் பதிந்து, கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். அந்த வகையில் சார்பாளராகவே கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பேரா. டாக்டர். கு.ஞானசம்பந்தன் அவர்கள், தனது கட்டுரையில் எனது முனைவர் பட்ட ஆய்வினை, 'இறையன்புவின் படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும் தலைப்பில், அவரது நெறியாளுகையில் மேற்கொண்டதைக் குறிப்பிட்டிருந்தார்.

                                            திரு.பொன்ன்மபல அடிகளாரின் உரை ஆற்றொழுக்காய், ஆழ்ந்து இறையன்புவின் படைப்புகளை படித்து உள்வாங்கியதன் அடையாளமாய் அருமையாக அமைந்தது. தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ம.திருமலை அவர்கள், எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்  போன்றோர் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் உரையைத் தந்தனர்.முனைவர் ம.திருமலை அவர்கள், இந்த நிகழ்வுக்குக் காரணம் பேரா. நம்.சீனிவாசன் அவர்கள் என்பதனையும், அவரின் தனித்தன்மையையும் மிக அருமையாக பதிவு செய்தார்.

                                    பேரா. நம்.சீன்வாசன் அவர்கள் தனித் தன்மை வாய்ந்தவர். நேர்மையின் வடிவமாகத் திகழ்பவர். தன் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவர்களின் அன்பினைப் பெற்றவர்(அரங்கில் நம்.சீனிவாசன் என்றவுடன் எழுந்த கைதட்டல இதனை நிருபித்தது).திராவிடர் கழகத் த;லைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். எதைச்செய்தாலும் முழுமையாகச்செய்ய வேண்டும் என மெனக்கிட்டுச் செய்பவர். மிக அபூர்வமான ,ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் மன்னர் கல்லூரியில் நடைபெறக் காரணமாக இருப்பவர். கல்லூரி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பினை தனது அணுகுமுறையால் பெற்றுக் கொள்பவர். கல்லூரியின் செயலாளர் அய்யா விஜயராகவன், மற்றும் மற்ற  நிர்வாகிகளின் மதிப்பினைப் பெற்றவர்.  நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருந்து, தனது பெயர் இருந்தாலும் ,இல்லையென்றாலும் கவலைப்படாதவர். மிக அருமையான தமிழ்ப்பேராசிரியரை, தமிழ்ப்பல்கலைக் கழக்த்தின் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்கள் உளமாற , மனதர்ரப் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது. பெரியாரியலை வாழ்வியலாகக் கடைப்பிடிக்கும் பேரா. நம்.சீனிவாசன் அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டு , நம் எல்லோருக்கும் கிடைக்கும் பாரட்டுதானே!. முடிவில் திரு வெ.இறையன்பு அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.  உணர்ச்சியும் எழுச்சியுமாக , அவர் ஆற்றிய உரை , கேட்டவர்களின் மனதில் ஆழமாய்ப் பதிந்த உரை. முழு நாள் முழுவதும் மதுரை ஆடிட்டர் திரு சண்முகசுந்தரம் அவர்கள், கோடைப் பண்பலை வானொலி இயக்குநர் திரு.சுந்தர.ஆவுடையப்பன் அவர்கள் , தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.பசும்பொன் அவர்கள், திராவிடர் கழக மண்டலச்செயலாளர் திரு.மீ.அழகர்சாமி மற்றும் நண்ப்ர்களோடு .ஒரு மாறுபட்ட அனுபவமாக அமைந்த நிகழ்வாக , எனக்கு  இந்த நிகழ்வு அமைந்தது.

Wednesday, 5 February 2014

நிகழ்வும் நினைப்பும்(17):மாட்டுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் படித்த துணைவேந்தர்

மதுரையில் எனது மகன் சொ.நே.அன்புமணி படித்த பள்ளியின்(சி.இ.ஓ.ஏ) ஆண்டு விழா இன்று (5.2.2014) நடைபெற்றது. அந்தப் பள்ளியில் படித்து மாநில, மாவட்ட ரேங்க்(+2, 10) எடுத்தவர்கள், பாடங்களில் 100க்கு நூறு எடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை அந்தப் பள்ளியில் வழங்கினார்கள். ஏறத்தாழ 20 ல்ட்சம் ரூபாய் வழங்கினார்கள். எனது மகன் பெற்ற பரிசை வாங்க நான் போயிருந்தேன்.    நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் கலந்து கொண்டார். தன்னுடைய உரையில் தான் படித்த காலத்திற்கும் இன்றைக்கும் இருக்கின்ற பள்ளிக்கூட கட்டமைப்பு வசதிகள் பற்றிக் குறிப்பிட்டார். மதுரையில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில், பெரிய பெரிய கட்டங்களோடு இந்தப் பள்ளி இயங்குகிறது. 50,60 ஆண்டுகளுக்கு முன்னால், அருப்புக்கோட்டை அருகில் உள்ள பந்தல் குடியிலிருந்து எங்கள் ஆசிரியர் , எங்கள் கிராமத்திற்கு வருவார். அவர் பெயர் தெரியாது, ஆனால் எல்லோரும் பந்தல்குடி வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். எங்கள் ஊரின் செல்வந்தர் ஒருவர் , தன்னுடைய மாட்டுக் கொட்டகையின் ஒரு பகுதியை பாடம் நடத்த, பள்ளிக்கூடமாக அனுமதித்திருந்தார். பள்ளிக்கூடம் தொடங்கும் வரை மாடுகள் இருக்கும். மாணவர்கள் வந்தவுடன், மாடுகள் மேயப்போய் விடும்,மாலையில் மாணவர்கள் போனவுடன் மாடுகள் வந்து விடும். மழை வந்து விட்டால், மாடுகள் மேயப்போகாது, நாங்களும்(மாணவர்களும்) , மாடுகளும் ஒரே இடத்தில்தான் இருப்போம் ,ஆனால் பாடம் நடக்கும். அப்படிப்பட்ட நிலைமை அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் மாற்றத்தை நினைக்கின்றபோது பெருமிதமாக இருக்கிறது. இன்றைக்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளவு வசதி, வாய்ப்புக்கள் இருக்கின்றது  என்றார்.

அன்று ஒவ்வொரு வீட்டிலும் சில குழந்தைகள் சாகும். சாதாரணமாக ஒரு பெண்ணிடம் , உனக்கு எத்தனை குழ்ந்தைகள் என்றால், ஒரு நாலு குழந்தை செத்துப்போச்சு, மீதம் 8 இருக்கு என்பார்கள். 6-வது குழ்ந்தை பெயர் என்ன்வென்றால் , பட்டென்று சொல்ல மாட்டார்கள். யோசித்துத்தான் சொல்லுவார்கள். அப்பாவிடம், உனது 6-வது பிள்ளை எத்தனாவது வகுப்பு படிக்கிறது என்று கேட்டால், தெரியாது என்பார்கள். என்னமோ, ப்ள்ளிக்கூடம் போறான், வர்றான், என்ன படிக்கிறான் என்றெல்லாம் தெரியாது என்பார்கள்.குழ்ந்தை பெற்றுக்கொண்டே இருப்பார்கள். கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்பார்கள் . இன்றைக்கு அப்படி இல்லை. பையனின், பெண்ணின் படிப்பைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார். சாதாரண கிராமத்தில் பிறந்து , பகுதி நேர மாட்டுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் படித்த நான், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, படிப்பால்,உழைப்பால் உயர்ந்திருக்கிறேன் என்றால், நீங்கள் எல்லாம் இவ்வளவு வசதி இருக்கும் காலத்தில் உழைத்தால் எவ்வளவு தூரம் உயர முடியும் என்பதனை உணருங்கள் என்றார். மிக எதார்த்தமான உரையாக, ஆனால் மாணவர்களின் மனதில் சுருக்கெனத் தைக்கும் உரையாக அவரின் உரை இருந்தது.

Monday, 3 February 2014

நிகழ்வும் நினைப்பும் (16) நமது தோழர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம்

01.02.2014   இரவு  9 மணியளவில் , திராவிடர் கழக மாணவரணி மாநிலச்செயலாளர் தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். அய்யா, கூட்டத்திற்கு சென்ற இடத்தில், ஒட்டன்சத்திரம் அருகில் தலைமைக் கழகப்பேச்சாளர் பெரியார் செல்வம் அவர்களுக்கு, உடல் நிலை சரியில்லை, மாரடைப்பு என்று சொல்கின்றார்கள், மதுரைக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சம் என்னவென்று பாருங்கள் என்றார். பதற்றம் தொற்றிக் கொண்டது.  திராவிடர் கழக் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்களிடம் பேசினேன். அண்ணன், திண்டுக்கல் வீரபாண்டி பேசினார், முதல் உதவி சிகிச்சை ஒட்டன்சத்திரத்தில் செய்திருக்கின்றார்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள் , அங்குதான் நான் போய்க் கொண்டிருக்கின்றேன் என்றார்.

                                            இன்று(2.2.2014)  ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் , 3 அடைப்புக்கள் இருக்கின்றன, அதிலும் மாரடைப்பு வரக்காரணமான ஒரு அடைப்பிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டிரி செய்ய வேண்டும் என்று மருத்துவனை மருத்துவர்கள் சொல்ல், ஆஞ்சியோ பிளாஸ்டிரி செய்யப்பட்டு, இப்போது நலமாக மருத்துவமனையில் இருக்கின்றார். தோழர் பெரியார்செல்வத்தின் அம்மா, துணைவியார் மற்றும் உறவினர்களோடு திராவிடர் கழகத் தலைமைக் கழகச்சொற்பெருக்காளர் முனைவர் அதிரடி அன்பழகன், அண்ணன் வே.செல்வம்,  மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா, பா.சடகோபன் க.அழகர்,.அ.வேல்முருகன் மற்றும் பல தோழர்கள் வநது பார்த்த வண்ணமும் அருகிலும்  உள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றார். கழகப் பொதுச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக உறுப்பினர் அய்யா தே.எடிசன்ராசா அவர்கள், தோழர்கள் பெரியார் செல்வத்திற்கு செய்யும் உதவி, இப்போது அவரைத் தொந்தரவு படுத்தாமல் இருப்பதே,தய்வு செய்து அவரை ஓய்வு எடுக்க விடுங்கள்  என்றார். உண்மைதான். ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இது.

                                            தோழர் பெரியார் செல்வன் பேசாத திராவிடர் கழகக் கிளை உள்ள ஊர் தமிழகத்தில் கிடையாது என்ற அளவிற்கு சென்ற 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேசி வரும் தோழர். ஆளே கூடாத  இடத்தில் பேசச்சொன்னாலும், தன்னுடைய பேச்சால் போவோர் , வருவோரை எல்லாம் நிறுத்தி , 500 1000 மென ஆட்களை சேர்த்து, தான் சொல்லும் கருத்தை கேட்க வைக்கும் அருமையான பேச்சாற்றல் உள்ள தோழர். எடுத்துக்கொண்ட கருத்தை சொல்வதற்கு பல்வேறு உதாரணங்களை அடுக்கடுக்காக அடுக்கும் தோழர். பள்ளிகளில், கல்லூரிகளில் சென்று மாணவ மாணவிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரை சார்ந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் தனித் தன்மை உடையவை.    தொடர் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்.மதுரையில் 3 நாள் தொடர் கூட்டங்கள் என்றாலும், முதல் நாள் பேசிவிட்டு இரவு பத்தரை மணிக்கு சாப்பிட்டு விட்டு, தஞ்சாவூருக்கு பேருந்தில் போய் 3, 4 மணிக்கு வீட்டுக்குப் போய் மறுபடியும் பயணம் செய்து மதுரை வந்து பேசிவிட்டு மறுபடியும் தஞ்சாவூர் போய் வந்து கொண்டிருப்பார். இயக்கப் பேச்சாளராகவும்  அதே நேரத்தில் குடும்பத் தலைவராகவும் தனது பணிகளைச்சரியாகச்செய்ய வேண்டும் என நினைக்கும் தோழர்.கூட்டத்தில் தனது பேச்சை முடிக்கும் நேரத்தில் , ஒரு ஐந்து மணித்துளிகள் உச்ச கட்ட குரலில், உரத்த குரலில்  தொகுத்து உணர்ச்சி பிழம்பாய் மாறி  தனது பேச்சை முடிப்பார் .

                                    கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து விட்டு, மறுபடியும் பேச வருவார் பெரியார் செல்வம். . தமிழர் தலைவர், அய்யா ஆசிரியர் அவர்கள், 40 வயதில் செய்ய் வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை , வரிசையாக வாழ்வியல் சிந்தனைகளில் எழுதி இருக்கின்றார். 'இதயம் காப்போம் ' என்று தனி நூலே எழுதியிருக்கின்றார். அவர் காட்டும் வழியில் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஊர் ஊராகச்சொல்லும் ஆற்றல் மிக்க பேச்சாளர் இவர். ஆனால் உடல் பரிசோதனை எதுவும் செய்ததில்லை போலும். 50 வயதிற்கு கீழேதானே என்று இருந்திருக்கின்றார். உடனடி மருத்துவ வசதியால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கின்றது. பெரியார் செல்வத்தின் துணைவியாரிடம் , மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இதற்கு முன் தெரிந்ததா எனக் கேட்டபோது , இல்லை அய்யா என்றார். அவரே ஒரு செவிலியர். நமது தோழர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். முறையாக சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால், ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் . . வருமுன்ன்ர் இன்னல்களைத் தவிர்க்கலாம்.
 

Saturday, 1 February 2014

நிகழ்வும் நினைப்பும்(15) : எங்கள் ஊரின் நடமாடும் முரசொலி ...

நிகழ்வும் நினைப்பும்(15) : எங்கள் ஊரின் நடமாடும் முரசொலி ....

                                 மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூர் திராவிட முன்னேற்றக்கழகக் கிளையின் அவைத் தலைவர், அருமைக்குரிய அய்யா ஜோதி(நாடார்) அவர்கள் இன்று(31-1-2014) மறைந்தார். தி.மு.க. ஆரம்பித்த 1949 முதல் தி.மு.க.வின் உறுப்பினர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்களின் மேல் வற்றாத பாசம் கொண்டவர். சின்னக் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்றுவரை , தி.மு.க. என்னும் கட்சியை சாப்டூரில் வளர்ப்பதற்கும், காப்பதற்கும் ஒரு தீரராய் , ஒரு தனி இராணுவம் போல  செயல்பட்டவர் திரு. ஜோதி அவர்கள்.

                                 ஆரம்ப காலப் பேச்சாளராக இருந்த காலத்தில்  நாஞ்சில் சம்பத் பலமுறை சாப்டூரில் வந்து பேசியிருக்கின்றார். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், கண்மணி தமிழரசன், கோவை மு,.இராமநாதன் போன்ற தி.மு.க.வின் முக்கிய பேச்சாளர்களையெல்லாம் வரவழைத்து, அவர்களைப் பேச வைத்து, கிராமத்தில் தி.மு.க.வை வளர்த்தவர். வருகின்ற பேச்சாளர்களைத் தன் வீட்டில் உணவளித்து, கூட்டம் முடிந்த பின் திரும்பிச்செல்ல பேருந்து இல்லாமல் போவதால் அவர்களை தனது வீட்டில் தங்கவைத்து மறு நாள் காலை வழிச்செலவிற்கு பணம் கொடுத்து உபசரித்து அனுப்பும் வழக்கம் உள்ளவர்.
திரு. சேடபட்டி முத்தையா அவர்கள் அ.தி.மு.க.வில் சபாநாயகராக இருந்த காலத்தில்,ஊரில் இருந்த பெரும்பாலோர் அவருக்கு ஆதரவாக இருந்த நிலையிலும், இரும்பு போன்ற உறுதியோடு இயக்கம் காத்தவர், தி.மு.க.வை வளர்த்தவர்.

                           பத்திரிக்கையின் வாயிலாகத்தான் கருத்துக்களை கொண்டு செல்ல முடியும் என்று உணர்ந்ததாலோ என்னவோ, கையில் முரசொலி பத்திரிக்கையை வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள நாலைந்து டீக்கடைகளில்,முக்கிய இடங்களில் எல்லாம் முரசொலியை ஒவ்வொருவரிடம் கையில் கொடுத்து படிக்கச்சொல்லி, அதில் வந்திருக்கும் முக்கியமான செய்திகளை, கட்டுரைகளை எல்லாம் விவாதிக்கும் இடமாக அந்த இடத்தை மாற்றி , நடமாடும் முரசொலியாக திகழ்ந்தவர் திரு.ஜோதி அவர்கள். மறைந்த பண்பாளர் அய்யா பி.டி.ஆர் பழனிவேல்ராசன் போன்றவர்கள் எல்லாம், இவரைப் பார்த்தவுடன் 'என்ன ஜோதி நன்றாக இருக்கின்றீர்களா ' என்று கேட்கும் அளவுக்கு மூத்த தலைவர்கள் அனைவரிடமும்  அறிமுகமானவர்.ஆனால் அதனை வைத்து தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளாதவர். 

                      தேர்தல் நேரத்தில் அவரின் பணி தனித்தன்மையாக இருக்கும் . ஊரின் வோட் லிஸ்ட்டை மனப்பாடமாக வைத்திருப்பார். அந்த லிஸ்டில் தி.மு.க. வோட் எது, எது என்று  தெளிவாகத் தெரியும். முதலில் ஒவ்வொரு வார்டாக, தி.மு.க. வின் வோட் எல்லாம்  பதிவாகி விட்டதா என்று பார்ப்பார். விடுபட்ட பெயர்களை கட்சிக்காரர்களிடம் சொல்லி, அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று பார், காட்டில் இருந்தால் வந்து ஓட்டுப் போட்டு போகச்சொல் என்று ஒவ்வொரு ஓட்டையும் பதியச்செய்வார். ஊரில் 4000 ஓட்டு இருக்கிறது, அதில் தி.மு.க.வின் ஓட்டு 1600 என்றால், முதலில் அந்த 1600 ஓட்டையும் தி.மு.க. வேட்பாளருக்கு விழவைக்க வேண்டும் என்று திட்டம் இருக்கும். அதற்கு மேல் வரும் ஓட்டு நமக்கு வாய்ப்பு, ஆனால் உறுதியாகத் தெரிந்த ஓட்டு , பதிவாகாமால் போகக்கூடாது என்பதே அவரின் முதல் நோக்கமாக இருக்கும்.

                       தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குப் போயிருக்கின்றார். மதுரை திராவிடர் கழகத்தைச்சேர்ந்த அய்யா பாடகர் துரைராசு அவர்களோடு சிறையில் இருந்தபோது கிடைத்த அனுபவங்களை எல்லாம் நகைச்சுவையாகச்சொல்வார். தத்துவார்த்த அடிப்படையில் திராவிடர் கழகக் கூட்டம் எவ்வளவு அதிகமாக நடக்கின்றதோ, அவ்வளவு தி.மு,.க.விற்கு நல்லது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.  ஆதலால்  அடிக்கடி தி.க. கூட்டம் ஊரில் போடுங்கடா என்பார் எங்களிடம். மேடையில் நிறையப் பேசமாட்டார். ஆனால் களப்பணி, களப்பணி, அப்பப்பா...

                       எனது அம்மா மறைந்த திருமதி. முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர். எளிதாக யாருக்கும் நன்கொடை கொடுக்க மாட்டார். கோவில் என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லி விரட்டி விடுவார். ஆனால் திரு. ஜோதி அவர்கள் வந்து கேட்கும் போதெல்லாம் , மாநாடு போன்றவைகளுக்கு மறுக்காமல் கொடுப்பார். "டேய், ஜோதி அண்ணனே வந்து கேட்டு விட்டாரடா, இல்லை என்று எப்படி சொல்ல முடியும்"என்பார் எனது அம்மா. (எங்கள் குடும்பத்திற்கும் அவரின் குடும்பத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எனது அம்மாவும் , திரு.ஜோதி அவர்களின் இணையர் திருமதி சரசு அவர்களும் வகுப்புத் தோழிகள். அதனைப் போல எனது மூத்த அண்ணன் ஜெயராஜூ-ம் அவரின் மூத்த மகன் அண்ணன் மதிவாணன் அவர்களும் வகுப்புத் தோழர்கள். எனது இரண்டாவது அண்ணன் தமிழ்ச்செல்வனும், அவரின் மகள் அக்கா தமிழ்ச்செல்வியும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நானும் அவரது 3-வது மகன் இராஜேந்திரனும் வகுப்புத் தோழர்கள். எனது தங்கை சாராதாவும், அவரது 4-வது மகன் கருணாநிதியும் ஒரே வகுப்பு, எனது தம்பி சிவக்குமாரும் அவரது 5-வது மகள் தங்கை பூங்கோதையும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். எல்லோரும் எங்கள் கிராமத்தில் ஒன்றாக, ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால் மிக நன்றாக எங்களை அறிந்தவர். தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்க்கையிலும் நாங்கள் உயர வேண்டும் என்று விரும்பியவர். அவரின் இழப்பு தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய இழப்பே.  )

                      நேற்று பெய்த மழையில் முளைத்த விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம், திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று கனவு கண்டு பிதற்றிக் கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க. அழிந்து போகும் என்று சு.சாமி போன்ற ஆட்கள் எல்லாம் உளறிக்கொண்டிருக்கும் வேளையில் , தன்னை முன்னிறுத்தாத ஆனால் இயக்கத்தை , இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்தி அதற்காக தனது உழைப்பை, உதிரத்தை, எண்ணத்தை  செல்வழிக்கும் ஆயிரக்கணக்கான ஜோதிகள் ஊர்தோறும், தமிழகம் தோறும் இருக்கின்றார்கள்.அவர்கள்தான் திராவிட இயக்கத்தின் விழுதுகள், வேர்கள்.. எல்லாம்.   திராவிட என்று தனது கட்சியில் பெயரை வைத்துக்கொண்டு, திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு , வேரில் நீர் ஊற்ற நிறையப் பேர் கிளம்பி இருக்கின்றார்கள். காணாமல் போவார்கள் விரைவில் உறுதியாய்.  காசு கொடுத்து வளர்ந்த இயக்கம் அல்லடா திராவிட இயக்கம். உதிரத்தில், உணர்வில் கலந்த கொள்கை உத்வேகத்தில் உண்ணாமல், உறங்காமல் உழைத்த,உழைக்கும்  தீரர்களின் கூடாரமடா திராவிட இயக்கம்.

                             வீர வணக்கம்! வீர வணக்கம். எங்கள் ஊரின் நடமாடும் முரசொலியாய் திகழ்ந்த  அய்யா ஜோதி அவர்களுக்கு வீரவண்க்கம்.