Monday, 30 September 2013

அணமையில் படித்த புத்தகம் : நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்

அணமையில் படித்த புத்தகம் : நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்
நூலின் ஆசிரியர்             கவிஞர் இளம்பிறை
வெளியீடு                   பொன்னி, சென்னை-91
முதற்பதிப்பு                : 2007
மொத்த பக்கங்கள்          : 272  விலை ரூ 140

                                          இளம்பிறையின் கவிதைத் தொகுப்புகளான இளவேனில் பாடல்கள்(1990),மெளனக்கூடு(1993), நிசப்தம்(1998), முதல் மனுசி(2003),பிறகொரு நாள்(2005) ,2005க்குப்பின் பல்வேறு இதழ்களில் பிரசுரமான புதிய கவிதைகள் என இளம்பிறையின் 2007-வரையிலான முழுப்படைப்புகளும் தொகுக்குப்பட்டுள்ள நூல்.

                                       இளம்பிறையின்  இயற்பெயர் பஞ்சவர்ணம்.சென்னையில் ஆசிரியராக வேலை பார்க்கின்றார். பெற்ற விருதுகள் என முதல்பக்கத்திலேயே அவ்ரைப் பற்றிய தகவல்கள். கவிதைகளுக்கு முன்பாக எனத் தன் கருத்துக்களை பக்கம் 7 முதல் 10வரை இளம்பிறை கொடுத்துள்ளார். இயல்பாக இருந்த ஆர்வம், வயல் வேலைக்குச்சென்றபோது ,'நான் அதிகமான பாடங்களை அங்குதான் கற்றுக்கொண்டேன் ' எனக்கூறும் இளம்பிறையின் கவிதைகளில் கிராமத்து மண்ணின் மணம் கமழ்கின்றது. சிந்தனையாளர் மன்றம் என்ற அமைப்பால் தனக்குக்கிடைத்த வாய்ப்பு , அதனைத் தொடர்ந்த ஆர்வம், உதவியவர்கள், நன்றிக்குரியவர்கள் என ஒரு  பட்டியலைக் கொடுத்துள்ளார்.

                                    மொத்தம் 169 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 'மழைத்துளிகளோடு
என் கண்ணீர்த் துளிகளும்
வயலில் விழுந்ததை அறிந்ததுபோல் ' என அறிமுகப்படுத்தும் தனது அப்பாவிற்கும் 'உன் வயதையொத்த உன் நண்பர்களுக்கும்/இந்தப் புத்தகம் " எனக் காணிக்கையாக்குகின்றார். நான் பல கூட்டங்களில் கீற்று இணையதளத்தில் வந்த இளம்பிறையின் பேட்டியை குறிப்பிடுவதுண்டு. 'படிக்கப்போவியா? படிக்கப்போவியா ? ' என விளக்குமாத்தோடு இளம்பிறையின் அம்மா ,இளம்பிறையை விரட்டியதை....    'அம்மா' என்னும் இளம்பிறையின் கவிதை
                                                'வயது பத்தாகுமுன்னே
                                                வயலுக் கிழுத்தவளே...
                                                வாடி வயலுக்கென
                                                வம்பு செஞ்ச எந்தாயே ' என எந்தவிதப் பூச்சும் இல்லாமல் அம்மா செய்த வம்பை இயல்பாகப் பாடிவிட்டு ' காலுக்குச் செருப்பில்லாமே நான்
                      கஷ்டப்பட்டு நடக்குறேன்னு
                      மொட்டக்காலோடு நீ
                      முள்ளு வெட்டி வித்துப்புட்டு
                      மட்ட விலையில் ஜோடி
                      செருப்பு வாங்கித் தந்தவளே...' என்று அம்மாவின் தியாகத்தைப் பாடிவிட்டு
                       'நான் எங்க திரிஞ்சாலும் என்
                       இதயத்துலே வாழுகிற
                        உனக்குத்தான் மொதப்பாட்டு
                        என் உயிர் பாடும் தாலாட்டு ' எனத் தனக்கு தாலாட்டுப்பாடாத தாயை நினைவுகூறும் 'அம்மா' கவிதை வாசிக்கும் எவரையும் உருக்கும்.  

                           தாத்தாவின் பிணத்தருகே அம்மா அழுக, 'வெற்று ஊளையிட்டேன் நான் '  என எழுதும் இளம்பிறை எது எதற்காக அழுதேன் எனப் பட்டியலிடும் 'அழுத நினைவுகள் ' கவிதை கனமான கவிதை.
 'என் கூடு
 கொடூரமான
மெளனங்களால் ஆனது ' என்று பறை சாற்றும் 'மெளனக்கூடு ' கவிதையும், அதன் தொடர்பான சில கவிதைகளும் தலைச்சும்மாட்டை கொஞ்ச நேரம் இறக்கிவைத்து இளைப்பாறி மறுபடியும் சுமப்பதைப் போல , குடும்பத்தை சுமத்தலையும் அதனால் தவித்தலையும் மிக நுட்பமாக உணர்த்துகின்றன.
நீங்கள்
உங்களைத் தோண்டிச்செல்கையில்
அடியாழத்தில்
ஒரு மூலையில் கேட்கும்
அழுகுரலே...
உண்மைக்குரல்
கேட்டதுண்டா எப்போதாவது ?
என்னும் 'உண்மை' கவிதை(பக்கம் 44)யின் கருத்தைப் போலவே அடியாழத்தில் கேட்கும் அழுகுரலாய் பல கவிதைகள் இத்தொகுப்பில் .  'அறுவடைக்காலம்' என்னும் கவிதை என் தங்கைகளும், அக்காக்களும் கிராமங்களில், குடிகார கணவனைக் கட்டிக்கொண்டு, அடியும் மிதியுமாய் ஓடும் வாழ்க்கை அவலத்தை அப்படியே எழுத்தில் வடித்த கவிதை.
இந்தத் கவிதைப் புத்தகத்தின் தலைப்பாய் அமைந்திருக்கும் 'நீ எழுத மறுக்கும் எனதழகு' -உழைக்கும் மக்களை அல்ட்சியப்படுத்தும் ஊடகங்களுக்கும் , காமிராக்களும் நல்ல் இடி.

              கவிதைகள் கண்ணாடி(பக்கம் 75) , இப்பவும் என் கிராமத்திலே(95), தொட்டிச்செடி(99), அதுவரை(104) ,வி.ஐ.பி.பகுதி(171),விலகிச்செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும் (191)போன்ற கவிதைகளைப் பற்றி நிறைய எழுதலாம். 'இப்பவும் என் கிராமத்திலே' என்னும் கவிதை இன்ன்மும் புரையோடிப்போய்க்கிடக்கும் ஜாதியத்தை,மத்த்தை  வரிகளால் வறுத்தெடுக்கிறது

' நேத்து பொறந்த பய
  பேரு சொல்லிக் கூப்புடுறான்
 ஆளூ 'நடவாளு'னு
அப்பங்காரன் சொல்லித்தாரான்.

வேல கிடைச்சாலும்
வித்த பல கத்தாலும்
வாடகக்கி வீடு கேட்டா
சாதி கேட்டு இல்லேங்கிறான்

களத்த செதுக்குவோம்
காவடியுந் தூக்குவோம்
அம்மன குளிப்பாட்ட
ஆழ்கெண்றும் வெட்டுவோம்
அபிசேவம் பண்ணயில
வெளியிலதான் நிக்கிறோம்.

ஆண்ட நொழஞ்ச்சாதான்
கற்பூரம் காட்டுறாங்க
அவருக்கு மட்டுதாங்க
பிரசாதம் நீட்டுறாங்க
விபூதிய அள்ளிப்போட்டு
'வெலகு ...வெலகு'ங்கிறார்
கேவலத்த தாங்கிக்கிட்டு
கோவிலுக்குப் போயி வாரோம் .

கல்லு செலய வச்சி
காசு போட உண்டி வச்சு
எல்லாமே சாமிக்கென
சொல்லிப் பொழச்சிக்கிட்டு
அநியாயந்தான் பண்ணுறாங்க.

பட்டுச்சேலை கட்டுக்கிட்டு
பவளத்தோடு போட்டுக்கிட்டு
நெய்யும் பருப்புமா
நெதம் திங்கும் பொம்பளங்க
உடம்பு எளக்கனும்னு-கோயிலுக்கு
ஓயாம வந்து போறா...
அய்யருக்கும் ....சாமிக்கும்
அவளைப்புடிக்காம
கட்டிப்ப்ழஞ்சோறும்
சுட்ட மெளகாயும்
வேலைத்தளத்துலேயே
வெரசாக சாப்பிடுற
எங்களையா பிடிக்கும் ?
வெளியில நின்னுதாங்க- சாமிகிட்ட
வேதனைய சொல்லி வாரோம்.

புள்ளகள கூட்டிப்போயி
பள்ளிக்கூடம் சேக்கயில
எங்களையும் 'இந்து'  னுதான்
எழுதிக்கிறான் அவனாவே....
எதுக்குப்பின்னே ஏமாத்துறான் ? (பக்கம் 96)


பெயர் சொல்லி, சிலரைப் பற்றிய கவிதைகளும் இத்தொகுப்பில்  உள்ளது. திராவிடர் கழகத்தின் பிரச்சாரச்செயலாளர் தோழியர் அருள்மொழி பற்றி ஒரு கவிதை உள்ளது .

நட்பொளிரும் கண்களுடன்
நிழல்களிருந்து
சேகரித்து வந்த நினைவுகளைக்
கலந்து கொண்டிருக்கிறாள் காற்றில்
தனக்குக் கறுத்த நிறம் வாய்க்கவில்லையே !-என்று
மெய்யாகக் கவலைப்பட்ட ஒருத்தியை
அப்போதுதான் நேரில் பார்த்தேன்
எள்ளலுடன் குறைசுட்டிப் பேசும்
அவளின் பேச்சுமொழி புன்சிரிப்பில்
ப்ரியமுடன் கலக்கிறேன்.....
வாய்ப்பு கிட்டும் போதெல்லாம்
பார்வையாளர் வரிசையிருந்து(திராவிடர் கழக அருள்மொழி அவர்களுக்கு ) பக்கம் 219/
இதைப்போலவே இளங்கோ என்னும் பெயர் சுட்டி அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்.

                  இளம்பிறையின் கவிதைகளில் அழகியல் உள்ளது.உவமை உள்ளது. கவிதைக்கான இலக்கணம் அனைத்தும் உள்ளதோடு உண்மை நிலை உணர்த்தும் கவிதைகளாக இருப்பதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி. பத்து முறை படித்தால்தான் புரியும் என் கவிதை என்னும் பாசாங்குத்தனம் இல்லை. உள்ளது உள்ளபடி வெகு இயல்பாக கிராமத்தை சொல்லிச்செல்லும் இக்கவிதைத் தொகுப்பு, கிராமத்தில் பரவிக்கிடக்கும் ஜாதி நச்சையும் சொல்லிச்செல்லத் தவறவில்லை. பக்கம் 225 முதல் 270 வரை இளம்பிறை கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களும் மதிப்பீடுகளும் என்னும் பகுதி உள்ளது,கவிஞர் கந்தர்வன், எழுத்தாளர்கள்  சுஜாதா,வெங்கட்சுவாமி நாதன்,கவிஞர்கள் அறிவுமதி,ராஜ மார்த்தாண்டன்,ஞானக்கூத்தன் ,இந்திரன எனப்பலரும் எழுதிய இளம்பிறையின் கவிதைகள் பற்றிய மதிப்புரைகள் மிக நன்றாக உள்ளன. படித்துப்பாருங்கள்.                                             

Saturday, 28 September 2013

நிகழ்வும் நினைப்பும்(3)

நேற்று(27.9.13) வந்த ஒரு மின்னஞ்சல் மூலமாக journeyfree.org என்னும் வலைத்தளத்தைப் பார்த்தேன், படித்தேன். டாக்டர் மர்லின் வினெல் என்பவரின் வ்லைத்தளம் அது. மத நம்பிக்கைகளிலிருந்து அல்லது மதங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதில் சிறப்பு சிந்தனையாளர் அவர் . கடந்த 20 ஆண்டுகளாக மனித வள மேம்பாட்டுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அவர் மனித வள் மேம்பாட்டில் , அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்ட்ம் பெற்றிருக்கின்றார். பிறப்பால் கிறித்துவரான அவர் இளம் வய்தில் பைபிள் படிப்பிற்கு மற்றவர்களைப்போலவே அனுப்பப்பட்டிருக்கின்றார், படித்திருக்கின்றார். பிரச்சனைகள் வந்தபோது, கடவுளிடத்தில் ஒப்படைத்து விடு,பைபிளை இன்னும் நன்றாகப் படி என்ற சொன்னதால் மீண்டும் மீண்டும் பைபிளைப் படித்திருக்கின்றார்,.பிரச்சனைகள் தீரவில்லை.  பின்னர் பிரச்சனைகளின் தீர்வு கடவுள் நம்பிக்கையில்  இல்லை, மாறாக கடவுள் நம்பிக்கையால்தான், மத நம்பிக்கையால்தான் தனக்குப் பிரச்சனை என்று உணர்ந்திருக்கின்றார்.மெல்ல மெல்ல மத, கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளி வந்து நாத்திகராக மாறி, மனித நேயத்திற்கு , மனிதரை மனிதர் நேசிப்பதற்கு கடவுள் பற்றுத தடை என்று உணர்கின்றார். .தனது கடந்த கால கடவுள் நம்பிக்கை  ஒரு மன நோய் என்று உணர்கின்றார்.  

                                                           பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு பெண் , அதற்குப்பின் மனம் சார்ந்த தொல்லைகளுக்கு உள்ளாவதற்கு Rape Trauma Syndrome என்று பெயர் .பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதீதக் கொடுமையானது.  இந்தந்தொடர் எதற்கு பயன்படுகிறது என்றால் பாதிக்கப்பட்ட பெண் அந்த சூழலிருந்து மாறி, மறந்து வாழ்வதற்கான ஒரு சிகிச்சை முறை .. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணின் உடல்,செயல்,வித்தியாசமான நடவடிக்கைகளைக் கவனித்து அதிலிருந்து அவர்களை மாற்றுவது, அவர்களுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றுவது. அத்ற்குப் பெயர்  Rape Trauma Syndrome.

                                        டாக்டர் மர்லின் வினெல் , இதனைப் போலவே மத நம்பிக்கையால் ஒரு ஆண் அல்லது ஒரு  பெண் உடல், செயல், வித்தியாசமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய மன அழுத்ததிற்கு உள்ளாகின்றார்கள். அறிவியல் சொல்லும் உண்மைக்கு மாறான மதங்களை, அதன் சடங்குகளை மனதார ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் மத நம்பிக்கையிலிருந்து விடுபடவும் முடியவில்லை . அப்படிப்பட்டவர்கள் மதம் என்னும் நோயிலிருந்து, செயலிருந்து விடுபட்டு, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்காக பாடுப்டுகின்றார். மத நம்பிக்கையால் மனமுடைந்து , திகைத்து ,உண்மையா பொய்யா என குழ்ம்புகிறவர்களின் நிலைக்கு Religious Trauma Syndrome(RTS)  எனப் பெயர் கொடுத்திருக்கின்றார். அதிலிருந்து விடுபட பயிற்சியும் , சிகிச்சையும் அளிக்கின்றார். இன்னும் இந்த வலைத்தளத்தில் நிறைய இருக்கிறது. நேரமும், இணையமும் இருப்பவர்கள் படித்து இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம்.

Thursday, 26 September 2013

நிக்ழ்வும் நினைப்பும் (2)

நிக்ழ்வும் நினைப்பும் (2)                             
நேற்று(25.9.13) காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி நாங்கள் நடக்கும்   பூங்காவில். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அதீத ஒலியில் வடமொழி பக்திப்  பாடலை  ஒலிக்க விட்டுக்கொண்டிருந்தார். என்னைப் போன்ற நாத்திகர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் காலையில் நடைப்பயிற்சி எடுக்கும் நேரம்,இடம். அவருக்கு பக்திப்பாடல்  பிடிக்கிறது என்றால் , வீட்டு அளவில் வைத்துக் கேட்கலாம். மைக் செட் போட்டுப்பாடுவது போல அவ்வளவு சத்தம். காலையிலேயே எரிச்சல் வரவைப்பதாக இருந்தது.பக்திப் பாடல் என்றாலே அடுத்தவர்களைப் பற்றிக் கவலை இல்லை. ஏய்.பக்திமானா இருங்கப்பா, அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் என்று கத்தவேண்டும் போல் இருந்தது. மதுரையில் கோயில் விழா என்ற பெயரில் மைக் போட்டு , பெரிய பெரிய குழாயை வைத்து ,பெரிய அளவில் ,சத்தத்தில் ஒலி பரப்புகின்றார்கள். திருவிழாக்கள் இல்லாத மாதம் இல்லை. பிள்ளைகள் படிக்கின்றார்களே,ப்ரீட்சை நேரமே, ஒருவருக்கும் கவலை இல்லை. பக்தி வந்தால் புத்தி போய்விடும என்றார் பெரியார். புத்தி மட்டுமல்ல, பொது ஒழுக்கம், பொது விதிகள் எல்லாம் போய் விடுகின்றது. எவ்வளவு பெரிய களவாணிப்பயலும், அய்யப்பனுக்கு மாலை போட்டா சாமி ஆகி விடுகிறான் அல்லவா..பக்தி என்ற பெயரால் எவரும் எதுவும் செய்யலாம். எவனும் கேள்வி கேட்கக்கூடாது . நல்ல நாடடா,இந்த நாடு.   புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் - சிறிய அளவிலான புத்தகம்(பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர்- புதுவை மு.ந.நடராசன் அவர்கள் அன்பளிப்பாக அளித்தது ) கையில் இருந்தது. அதில்

"சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம்!
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால்?"  என்றும்

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத் தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப துண்டோ?
வேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே மேவி டாமே. " என்றும் இருந்தது. வேற்றுவரின் வடமொழி பக்திப்பாடல் கோயிலுக்குள் மட்டும் இருந்து அல்ல,   தமிழர்களின் வீட்டுக்குள்ளிருந்தும் அதிகாலையில் அதீத சத்தத்தில் ஒலித்து உயிரை எடுக்கிறது.

Wednesday, 25 September 2013

நிகழ்வும் நினைப்பும் : ...

நிகழ்வும் நினைப்பும் :

நேற்று (24.9.13) மாலை மதுரை பிரேம் நிவாஸ் ஹோட்டலில் ரோட்டரி கிளப்-கிழக்கு கிளையின் சார்பாக சிறப்புக்கூட்டம். பி,எஸ்.என்.எல்.மதுரையில் பணியாற்றும் ராமச்சந்திரன் அதன் தலைவர். 'புத்தகங்களும் வாழ்க்கையும் ' என்னும் தலைப்பில்  என்னை  உரையாற்ற அழைத்திருந்தார்கள். . புத்தகங்கள் -என்னை ஈர்த்த தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தகங்கள் சிலவற்றைப் பற்றியும் அவை சொல்லும் செய்தி பற்றியும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே , எங்கேயும் புத்தகஙகளைப் பற்றிப்பேசுவது என்றால் உடனே தயார் என்பது போல மனநிலை இருக்கிறது .பேசிட முடிகின்றது.

                         பேசி முடித்தவுடன் கேள்வி நேரம் இருந்தது. பேராசிரியர் வில்பர்ட், நூலகத்தைப் பற்றியும், வாசிப்பை நேசிப்பதைப் பற்றியும் பேசினீர்கள். நன்றாக் இருந்தது. ஆனால் கல்லூரிகளில் வைக்கப்படும் நூலகம் , வெறும் பாடம் சார்ந்து மட்டும் இருக்க வேண்டுமா? இல்லை பொது நூலகம் போல அனைத்தும் இருக்கவேண்டுமா ? எனக்கேட்டார். வெறும் பாடம் சார்ந்து இருப்பது என்பது எனக்கு உடன்பாடு அல்ல. நல்ல கவிதைகள், சிறுகதை, நாவல், க்ட்டுரை என்று அனைத்தும் இருக்க வேண்டும் என்று பதில் அளித்தேன்.

                        இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் ,பிள்ளைகள் மற்ற புத்தகங்களைப் படிப்பதற்கு நேரமிருக்கிறதா, ஆர்வம் இருந்தாலும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த வீட்டுப்பாடங்களைச்செய்வது என்பதனை எவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. தண்டிக்கப்படவேண்டிய ஆள். 'அவனை அழைத்து வந்து,ஆடடா ஆடு என்று ஆடவிட்டுப்பார்த்திருப்பேன் ; என்று கண்ணதாசன் சொன்னது போல, வீட்டுப்பாடம் செய்வதை முதலில் புகுத்திய ஆளைக் கூப்பிட்டு வந்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கவேண்டும். கொடுமையோ,கொடுமை-வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழ்ந்தைகளுக்கு. அதுவும் 10,12-ஆம் வகுப்பு என்றால் அத்தனை பாடங்களிலும் அம்புட்டு வீட்டுப்பாடம். பிள்ளைகள் தூங்கணுமா? வேண்டாமா? ஊகூம் எந்தக் கவலையும் இல்லை ஆசிரியர்களுக்கு. 50 பக்கம், 60 பக்கம் எழுதி வா, ஒவ்வொரு பாடத்திலும். என்பதும் , வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனில் வகுப்பை விட்டு வெளியில் போ, முட்டிக்கால் போடு என்று முட்டிக்கால் போடவைப்பதும் ....ஆசிரியர்கள் அடிப்பதில்லை, ஆனால் மறைமுகமான வன்முறை, வீட்டுப்பாடம் என்ற பெயரில் இருக்கிறது. ஆனால் இத்தனையையும் மீறி, பிள்ளைகளை மற்ற நூல்களைப் படிக்கவைக்க வேண்டும். நூல்களின் பெருமையை அறியச்செய்ய வேண்டும்.

                  நூலகத்தில்  நூல்களைத் தேடி,தேடி எடுத்து வர வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் தேடினாலும் நாம் தேடும் நூல் கிடைப்பதில்லை(மதுரை சிம்மக்கல் நூலகம்).. ஏன் நூலகத்திலேயே ஒருவர் என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு கிடைப்பதற்கு உதவி செய்தால் என்ன? அப்படி ஒரு நியமனத்தை நூலகத்தில் அரசு செய்தால் என்ன? மாணவ, மாணவிகள் அப்படி நூலகத்திற்கு வந்தால் அவர்களுக்கு இது ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே என்ற கேள்வியோடு கூடிய ஒரு கருத்து-ஆலோசனை கூறப்பட்டது.

              தாராளமாகச்செய்யலாம். இன்னும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, எந்த இடத்தில் புத்தகம் உள்ளது என்பது வரை கணிணியில் ஏற்றப்பட்டு ,கேட்பதை எடுத்துக்கொடுக்கலாம். இந்த இடத்தில் இருக்கிறது, உங்களுக்கு பயன்படும், எடுத்து படித்து வாருங்கள் என இளைஞர்களுக்குச்சொல்லலாம். ஆனால் நூலகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வு மாணவ,மாணவிகளிடத்தும் இல்லை, அவர்களுக்கு பாடம் எடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்களிடத்திலும் இல்லை. இதில் மாற்றம் வேண்டும் என்பதனை அரசும் உணரவேண்டும்.மக்களும் உணரவேண்டும்.

Monday, 23 September 2013

அண்மையில் படித்த புத்தகம் : இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்..சு.அறிவுக்கரசு

அண்மையில் படித்த புத்தகம் :    இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்
நூல் ஆசிரியர்                               :    சு.அறிவுக்கரசு
வெளியீடு                                       :   நாம் தமிழர் பதிப்பகம் சென்னை -5  செல் : 9790706549
முதற்பதிப்பு                                   : ஆகஸ்டு 2012,176 பக்கங்கள்  விலை ரூ70.

                                                    மதுரையில்  14.9.2013 - சனிக்கிழமை  பி.எஸ்.என்.எல். வாசிப்போர் களத்தில் நான் அறிமுகம் செய்த புத்தகம் . "இந்நூலை எழுதியிருக்கும் திரு.சு.அறிவுக்கரசு அவர்கள் மிகச்சிறந்த திராவிட உணர்வாளர்; சிறந்த பேச்சாளர்; வளமான சிந்தனையாளர்; நினைவாற்றல் மிக்கவர்; கருத்தோட்டமுள்ள எழுத்தாளர்; அரசுப் பணி அனுபவத்துடன் நல்ல நண்பர் குழாத்தை உடையவர் " என நூலாசிரியரைப்பற்றி பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர்.  " பொங்கும் கோபக்கனலோடு , தமது ஆய்வறிவையும் ,ஆழமான இலக்கியச்சிந்தனைகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள மிக அருமையான ஒரு புரட்சி நூல்தான் இது" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல புரட்சிக் கவிஞரைப் பற்றிய புதுமையான நூல் இது.

                                                       'எழுவாய்' என முதல் அத்தியாயம் தொடங்குகிறது. புரட்சிக் கவிஞரைப் பாராட்டிய தந்தை பெரியாரின் வரிகளோடு ஆரம்பித்து, பக்திப் பாடல் எழுதுபவராக இருந்த கனகசுப்புரத்தினம், தேசியப் பாடல் புனைபவராக மாறி , பின்பு 1928-ல் இருந்து சுயமரியாதைக் கவிஞராக மாறிய வரலாறு , கடவுளுக்கு கருணை மனுப்போட்டு முதலில் பாடிய அவர் பின்பு எப்படி ' இல்லை என்பேன் நானடா -அந்தத் தில்லை கண்டு தானடா ' என்று பாடுபவராக மாறினார் என்பதனை விளக்கமாக வரலாற்றுக் குறிப்புகளோடு கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
             
                                                'நம் மொழி பற்றி' என்னும் தலைப்பில் தமிழ் மொழி பற்றி புரட்சிக்கவிஞர் பாடியுள்ள பல்வேறு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார். " இந்தளவுக்குத் தம் மொழியைச் சிறப்பித்து பாடிய கவிஞர்கள் எவரேனும் இருப்பரோ என்பது அய்யமே. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனப்பாடி புலவர் பாரதி இனிமை என்று கூறினார். ஆனால் பாரதிதாசனோ தமிழைத் தமது உயிர் என்றே கூறி விட்டார் " (பக்கம் 25) என்பதனைக் குறிப்பிட்டு, 'தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் ' ,' தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர் ' என்றும் மற்றும் 'தமிழுக்கும் அமுதென்று பேர்...','கனியிடை ஏறிய சுளையும்...' போன்ற தமிழின் பெருமை சாற்றும் கவிதைகள், பின்பு தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை தமிழியக்கமாகப் பாடிய புரட்சிக் கவிஞரின் 'எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்...' போன்ற கவிதைகள் , தமிழ் ,தமிழரின் பற்றிய புரட்சிக் கவிஞரின் ஏக்கம், அந்த ஏக்கம் தவிர்த்திட என்ன செய்ய வேண்டும் என்பதனைச்சொல்லும் அவரின் கவிதை வரிகள் எனப் பல முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கான தரவுகளைப் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கின்றார் நூலாசிரியர் திரு சு.அறிவுக்கரசு. வழிகாட்டியை(பாரதியை) விஞ்சியிருக்கின்றார் தமிழ் மொழியைப் பற்றிப் பாடியதில் வழி நடந்தவர் (பாரதிதாசன் ) என்பதனை ஆய்வேடு போல நிருபித்திருக்கின்றார் இந்த இயலில்.

                                     இயற்கையைப் பாடாத எவரும் தன்னைக் கவிஞர் என அழைத்துக்கொள்ளத் தகுதியில்லை. 'இயற்கை எழில் பற்றி ' என்னும் தலைப்பில் சங்கத்தமிழுக்கு அடுத்து இயற்கை அழகை அழகுத் தமிழில் வடித்தவர் பாரதிதாசன் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் கூறுகின்றார் . 'குயில் கூவிக்கொண்டிருக்கும்....' நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து...'  பொதிகை மலை விட்டெழுந்து சந்தனத்தின் ...' விட்டுவிட்டுக் குழல் ஊதும் மெட்டு வைத்துக் குயில் பாடும் ...' போன்ற கவிதைகளை எடுத்து பாரதிதாசன் பாடியிருக்கும் இயற்கையின் எழிலை எடுத்து இயம்பும் அழகின் சிரிப்பாய் இந்த இயல் அமைந்துள்ளது.

                             'உவமை அழகு' என்பது அடுத்த இயல். உவமை என்றால் என்ன என்பதனை விளக்கிவிட்டு ' அத்தகைய உவமை நயத்தை மிகவும்  அழகுடனும் ஆற்றலுடனும் தம் கவிதைகளில் ஆண்டிருப்பவர் புரட்சிக்கவிஞர் ' (பக்கம் 42)  எனக்கூறும் இந்த நூலின் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் கையாண்டிருக்கும் உவமைகளின் பட்டியலை பட்டியலிட்டுக்கொடுத்துள்ளார். காதலியின் முகம் கண்டு பாடும் கவிஞன் போல , 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேடைதோறும் முழங்குபவர், புரட்சிக் கவிஞரின் பாடல்களிலேயே புழங்குபவர் என்பதாலோ என்னவோ, ஏழை வாழ்வுக்கு, மழலை மகிழ்வுக்கு, மூப்பின் கொடுமைக்கு, பகுத்தறிவைப் பற்றி, சமூகப்புரட்சிக்கு...,எனப் பட்டியலிட்டு 'இருட்டடிப்புச்செய்தாலும் மின்னுகிற ரேடியம் -புரட்சிக் கவிஞர் ' என் முடிக்கின்றார் இந்த இயலை. காதல் குறும்புகள், மானுடப்பற்று, பெண் உரிமை எனும் உள்தலைப்புகளில் புரட்சிக் கவிஞரின் தனித்தன்மையான கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                         உலகக் கவிஞ்ர்களோடு என்னும் தலைப்பில் இந்த நூலாசிரியர் சு.அறிவுக்கரசு அவர்கள் கொடுத்திருக்கும் தரவுகள் முனைவர் பட்டத்திற்கு தமிழ்- ஒப்பியல் இலக்கியத்தில் ஆய்வு செய்வோருக்கு உதவும் கருவூலங்கள். தமிழில் புரட்சிக் கவிஞர் என்பது போல ஆங்கிலத்தில் Poet of revolt என்று அழைக்கப்படும்  பைரனோடு ஒப்பிடுகின்றார். ' தம் காலச்சமுதாயத்தை விமர்சித்துத் தம் கவிதைகளைப் படைத்தவர் என்பதால் இப்பெருமை(பைரனுக்கு) . அத்தகு பெருமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் உண்டு' பக்கம் 75   என்று குறிப்பிடும் நூலாசிரியர் இருவருக்குமான ஒற்றுமைகளைக் குறிப்பிடுகின்றார். அதனைப்போல வால்ட் விட்மனோடு, கிளாட் மெக்கேயுடன், இராபர்ட் பிராஸ்ட்டுடன், வில்லியம் பட்லர் யேஸ்டுடன், செவ்சென்கோவுடன், இயற்கைக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த்துடன் என உலகின் போற்றத்தக்க கவிஞர்களின் கவிதையும் புரட்சிக் கவிஞர் கவிதையும் கருத்தளவில் எப்படி ஒத்துப்போகின்றது என்பதனைக் கொடுத்துள்ளார்.

                                அதனைப் போலவே சங்கம்புழ மற்றும் குமரன் ஆசான் போன்ற  மலையாளக்கவிஞர்கள், வங்காளக் கவிஞர் ஜீவானந்த தாஸ் போன்றவர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டு பிற  மாநிலக் கவிஞர்களோடு என்னும் தலைப்பில் நூலாசிரியர் கொடுத்துள்ளார். வெளி மாநிலங்களில், வெளி நாட்டில் வாழும் தமிழர்கள்  இந்தக் கவிஞர்களின் கவிதைகளையும் , புரட்சிக் கவிஞரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இன்னும் விரிவாக அளிக்கலாம்.

                                 தொழிலாளர் பற்றி என்னும் இயலில் ' கவித்துவத்தூவலில் மானுடப்பற்றை நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள் காலத்தை வென்று நிற்பதைக் காண்கிறோம். ' பக்கம் 115 எனக்குறிப்பிடும் இந்த நூலாசிரியர் தொழிலாளர்களைப் பற்றிய புரட்சிக்கவிஞரின் பாடல்கள் எத்தன்மை வாய்ந்தவை என்பதனைப் படித்து உணருங்கள்  எனச்சொல்லும் வண்ணம் பட்டியலிடுகின்றார். சோசலிசம், கமயூனிசம், கேப்டலிசம் போன்றவற்றிற்கு கவிஞர் தரும் விளக்கங்கள் எவ்வளவு எளிமையானவை , எவ்வளவு நுட்பமானவை   என்பதனைக் கவிதையைச்சுட்டி சுட்டுகின்றார். பொதுவுடமை இயக்கங்கள் பாரதியைக் கட்டி அழுதுகொண்டு, பாரதிதாசனை விட்ட மர்மம் என்ன என்பதனை விளக்கும் இயலாக இந்த இயல் உள்ளது. பொதுவுடமை இயக்கத்தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி இந்த நூலின் இப்பகுதி.

                                   எழுவாய் என இந்த நூலினை ஆரம்பித்த நூலாசிரியர் முடிவாய் எனப்பல செய்திகளைக் கூறி முடிக்கின்றார். பாரதியும், புரட்சிக் கவிரும் வாழ்ந்த வருடங்கள், பாடிய பாடல்களின் உள்ளடக்கங்கள், போன்ற பல செய்திகளைக் குறிப்பிட்டு புரட்சிக் கவிஞர் -பாரதிதாசன் அல்ல,பாரதியை விடப் பல நிலைகளில் விஞ்சியவர் என்பதனை ஆய்வேடு போல நிறுவுகின்றார். தோழர் தா.பாண்டியனே பாரதி தடுமாறும் இடங்களைப் பட்டியலிடுவதை சுட்டியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

                                 " எழுதுவதல்ல கவிதை; ஆழ்மனதில் படிந்து இருக்கும் இலட்சியக் கனல்கங்குகள் எழுவதுதான் கவிதை என்பதை எடுத்துக்காட்டிய எழுதிக்காட்டிய எழுச்சிக் கவிஞர் புரட்சிக்கவிஞர், ..." பக்கம் 167 எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அறிவுக்கரசு அவர்களின் இந்தப் புத்தகம் புரட்சிக் கவிஞரை பற்றி  பத்தோடு பதினொன்றாய் வந்துள்ள புத்தகம் அல்ல. பாரதியின் தாசன் அல்ல புரட்சிக் கவிஞர் , அவர் வேறு இவர் வேறு என்பதனை ஆய்வு நோக்கில் நிறுவும் புத்தகம். மேடைப்பேச்சாளர்கள் தங்கள் கைவசமும், திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் மனதிற்குள் மனனமும் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம். அனைத்து கருத்தோட்டம் உள்ளவர்களும் உண்மையில் பாரதிதாசன் யார் ? என்பதனை உணர்ந்து கொள்ள ,தெரிந்து கொள்ள ,படிக்க வேண்டிய புத்தகம்,. பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல  வேண்டிய புத்தகம். .

                                  இந்தப் புத்தகத்தை வாசிப்போர் களத்தில் அறிமுகம் செய்து விட்டு வெளியே வரும்போது தோழர் மு.சங்கையா, "புரட்சிக் கவிஞர் பாடல்கள் நாடி, நரம்புகளில் ஊடுருவும் தன்மை வாய்ந்தது" என்றார். "படிக்கும்போதே உணர்ச்சி ஊட்டும் கவிதைகள் அவரின் கவிதைகள்" என்றார். ஆம், புரட்சிக் கவிஞரின் பாடல்களில் ஏதேனும் ஒன்றிரண்டாவது படித்து, மனப்பாடம் செய்து பின்பு உங்களுக்கு நீங்களே சொல்லிப்பாருங்கள்.அப்போது நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள், புரட்சிக் கவிஞர்  பாடல் ஏற்றும் உணர்வு ஓட்டத்தை, மனதில் ஏற்படும் அதிர்வுகளை .

Thursday, 5 September 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆதலினால் காதலித்தேன்

அண்மையில் படித்த புத்தகம் : ஆதலினால் காதலித்தேன்
நூலின் ஆசிரியர் : பொள்ளாச்சி அபி
பதிப்பகம் : சிவச்சந்திரா பதிப்பகம் , புதுச்சேரி -3
முதல் பதிப்பு : 2012
மொத்த பக்கங்கள் : 184, விலை ரூ 120

எழுத்து.காம் என்னும் இணைய தளம் தமிழில் கவிதை, கதை எழுதுபவர்களின் வேடந்தாங்கல். பல நாட்டு பறவைகள் வந்து அடையும் வேடந்தாங்கல் போல , பல நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் படைப்புக்களைப் பதியவும், பதிந்ததைப் பலர் படித்து கருத்து கூறவும் தமிழர்களுக்கு மிக்க வாய்ப்பாய் அமைந்த பொது எழுத்து மேடை. இணையத்தின் நேர்மறையான பலனின் விளைச்சல் எழுத்து.காம் இணையதளம். அதில் நான் எழுதிய 'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே ' என்னும் சிறுகதை , சிறந்த சிறுகதையெனத் தேர்ந்த்டுக்கப்பட்டு அதற்காக தபாலில் சான்றிதழும் , அருமையான இரண்டு புத்தகங்களும் எனது வீடு நோக்கி வந்தன, அவற்றில் ஒன்று இந்த 'ஆதலினால் காதலித்தேன் ' என்னும் புத்தகம் மற்றொன்று அய்யா தி.அமிர்தகணேசனின் 'ழகரக்காரனின் முக நாக்கு ' என்னும் புத்தகம் .

ஆதலினால் காதலித்தேன் என்னும் நூல் தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் தன் வரலாறு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தத் தன் வரலாறு , அவரின் வாழ்க்கைப்போக்கில் குறுக்கிட்ட பெண்களின் வரலாறு. காதலிப்பது என்பதை அன்பு செலுத்துவது என்னும் பொருள் எடுத்துக்கொண்டு அவர் அன்பு செலுத்திய பெண்களையும், அவரிடம் அன்பு காட்டிய பெண்களையும் பற்றிய வரலாறு..இந்தப் புத்தகம் ' சாதி மதங்களை மறுத்து சமத்துவம் நாடி இரு மனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும் ' எனக் குறிக்கப்பட்டு இருக்கிறது முதல் பக்கத்திலேயே. 'ஈர்ப்பினோடு ஒன்றிவிடுவதான வெற்றியே காதல் ' என அரிய நாச்சியும், 'சரமாகத் தொடுக்கப்பட்ட சாராம்சங்கள் ' என சோழவந்தான் புலமி அம்பிகாவும் முன்னுரை அளித்திருக்கின்றார்கள். ' சுய அனுபவங்களின் உணர்வுகளும் உன்னதங்களும் கலந்த ஒரு கலவையாக இக்குறு நாவல் நம்மை நெகிழச்செய்கிறது ' என புலமி அம்பிகா குறிப்பிடுவது உண்மை..

உண்மையாக, நேர்மையாக எழுதப்படும் எதுவும் படிக்கும் வாசகனை ஈர்க்கும். தன் முனைப்பு இல்லாமல் , தன் வாழ்வின் நிகழ்வுகளை விவரித்துக்கொண்டு செல்லும் பாணியால் படிப்பவரை ஈர்க்கின்றார் இந்த நூல் ஆசிரியர். இந்த குறு நாவலில், பொள்ளாச்சி அபியின் தன் வரலாறு உண்டு, வர்ணனை உண்டு, கதை உண்டு, சில பக்கங்களின் நிகழ்வுகள் கவிதைகளாகவே உண்டு, அவர் எழுதிய திரை இசை மெட்டில் அமைந்த பாடல் உண்டு , காதலிப்பவர் படும் அவஸ்தைகள் உண்டு, காதலிக்க நினைப்பவர்கள் கருத வேண்டியவை எவை, எவை எனப் பட்டியல் உண்டு ,அனைத்தும் கலந்த் கலவையாக ஆனால் உண்மை என்பதே பக்கங்களைக் கோர்க்கும் நூலாக இருக்கின்றது. அதுவே இந்த குறு நாவலின் வெற்றியாக இருக்கின்றது. மொழியின் வாயிலாக தன் வாழ்வை மொழிந்து , இந்த அற்புதமான இலக்கியத்தைக் கொடுத்திருக்கின்றார் பொள்ளாச்சி அபி.

எழுத்து.காம் இணையதளத்தில்  எழுதும் பலரின் கவிதைகள், ஒரு அத்தியாத்தைத் தொடங்கும்முன் இருக்கும் தலைப்புக் கவிதைகளாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தன் சக எழுத்தாளர்களையும் மதிக்கும் மாண்பு தெரிகின்றது. அப்படி பாரதிராஜ்,அகாரா, முத்து நாடன், பிரபா பன்னீர்செல்வம், எஸ்.ராஜேந்திரன், நவீன்குமார்,சங்கரன் அய்யா, காளியப்பன் எசேக்கியல், இன்போ அம்பிகா, ரமேஷ் ஆலம், தூ.சிவபாலன், கவிதாயினி, கோமதி, நாணல், தம்பு, சி.பொற்கொடி, பொ.கவியமுதன், ஹரிஹரி நாராயணன், புலமி அம்பிகா, பாஷா ஜமீல், அனிதபாலா, நிலா சூரியன், ஜாவித் மியாண்டெட், ரெள்த்திரன், பொள்ளாசி அபி, அகன், அனுசரண், தமிழ்தாசன் எனப் பலரின் கவிதை வரிகள் முகப்பு வரிகளாக மின்னுகின்றன அத்தியாயங்களின் நுழைவு வாயிலில். அதனைப் போலவே ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் படங்களோடும் ஆரம்பிக்கின்றது.

தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக இருந்தது என்பதனை பொள்ளாச்சி அபி பல இடங்களில் குறிப்பிடுகின்றார். 'இப்போதெல்லாம் எனக்குப் பட்டறையில் இரவு நேரப்பணியும் கொடுக்கப்பட்டது. மிக் நீளமான அளவுள்ள் இரும்பு ராடுகளை , கட்டிங் மிஷின் மூலம் , குறிப்பிட்ட நீளமுள்ளவையாக அறுத்து வைப்பது ...' அதில் நேரத்தை தொழில் நேர்த்தியின் மூலம் மிச்சப்படுத்தி , ' அடுத்த் நாள் இரவுப்பணிக்குச்சென்றபோது , ஒரு நோட்டையும் எடுத்துச்சென்றேன். ஓய்வின்போது எதையாவது எழுதலாம் என்று நிறையக் கருத்துக்களை மனதில் அசை போட்டுக்கொண்டேன்.அதனைச்சிறியதும் பெரியதுமான கவிதைகளை நோட்டில் பதிவும் செய்தேன். அழுக்கும் , எண்ணெய்ப் பிசுக்கும் .மையின் நீலமும், எழுதாத இடத்தின் வெள்ளையுமாக , அந்த நோட்டே ஒரு சிறிய வானவில் போல எனக்கு மிகவும் ரசிக்கத்தக்க வண்ணம் காட்டியது. வாரம் ஒரு முறை அதனை வீட்டிற்கு எடுத்து வந்து, அதில் எழுதப்பட்டவற்றை விரித்தோ, சுருக்கியோ, திருத்தி மற்றொரு நோட்டில் எழுதி வைக்கவும் தவறவில்லை " (பக்கம் 50) - படாத பாட்டிலும் பொள்ளாச்சி அபியின் ஈடுபாடு எனக்கு மார்க்ச்சிம் கார்க்கியின் இளைய வயது வரலாற்றை ஞாபகப்படுத்தியது. பசியை ஆற்ற ஓடி ஓடி பல்வேறு தொழில்களை வேலைகளைப் பார்த்த மார்க்ச்சீம் கார்க்கி புத்தகத்திற்காகவும் ,எழுதவதற்காகவும் பட்ட பாடு , ஆனால் அவரின் ஆர்வம்தான் மார்க்ச்சீம் கார்க்கியின் ஏழ்மையைத் தொலைத்து , உலகப் புகழைத் தந்தது, தமிழில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எனப் பலரைச்சொல்ல முடியும். வயிற்றுப்பாட்டுக்கு படாத பாடு பட்டதோடு வாசிப்பையும் , எழுதுவதையும் கை விடாதவர்களை.. அவர்களைப் போல பொள்ளாச்சி அபி எனக்குத் தெரிகின்றார். விளிம்பு நிலை மக்களின் துயரத்தை தனது எழுத்துக்களில் பதியும் பொள்ளாச்சி அபி இன்னும் நிறைய எழுத வேண்டும்.

தான் எழுத வேண்டும் என்று முடிவுசெய்தபோது ' எழுதுவதை தாய், தந்தை, சகோதரி, இன்னும் யார் படிக்கக்கேட்டாலும் தைரியமாய் கொடுக்கும் வகையில் படைப்புகள் இருக்கவேண்டும் என்று எனக்குள் ஏற்பட்ட தீர்மானம் இறுகிக்கொண்டே வந்தது ' (பக்கம் 51) என்னும் நூல் ஆசிரியரின் முடிவு எழுத வேண்டும் என்று நினைக்கும் எல்லோரும் மனதில் எடுத்துக்க்கொள்ள வேண்டிய முடிவு.

உள்ளடக்கங்களைப் பற்றி எழுதினால் , பக்கம் பக்கமாக எழுத இயலும் என்றாலும் பெண்களின் நிலை பற்றிப் பேசும் பக்கங்கள் 54-55, சரோவினைப் பற்றிய பதிவுகள் 45-46...,தாகீராவிடம் ஏற்பட்ட காதல், அதனை எதார்த்தமாக இருவரும் எதிர்கொண்ட விதம்- 'அவ்வாறான தேவைகள் எதுவும் இப்போது எனக்கில்லை'பக்கம் 68 , நூலகத்திற்குச்சென்று படித்தது ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் 'தாய் , தந்தை , நட்பு, சினிமா,என்ற எல்லாமும் எனக்குக் கற்றுக் கொடுத்ததை விட புத்தகங்கள் மிக அதிகமாக- நாம் நன்றாகப் புரிந்து கொள்ளும்வரை , பொறுமையாய் நிறையக் கற்றுக் கொடுத்தது ' பக்கம் -73 , ' உடனடி பணப்பலன் கிடைக்கிறது என்பதற்காக நான் ஒரு சுமை தூக்கும் -கலாசித் தொழிலாளியாக மாறிப்போனேன்' பக்கம் 91 போன்ற செய்திகளைக் கொண்டே நிறைய எழுதலாம்.

பாட்டு பாடியதற்காக இன்னொரு முறை படகில் சுற்றி வரச்செய்து பாராட்டிய படகோட்டியின் பரிசு ' அந்த எளிமையான மனிதரின் வலிமையான செய்கை ' பக்கம்-127 , மாரிமுத்து என்னும் ஆசிரியரைப் பார்த்த்வுடன் .... 'ஆசிரியர்கள் எப்போதும் இரண்டாவது தாய் தந்தையர்கள் அல்லவா ? ' பக்கம் 151 போன்று நுட்பமான செய்திகள் நூல் முழுக்க பரவிக்கிடக்கின்றன. தொழிற்சாலை, அதில் தொழிற்சங்க ஈடுபாடு, தன்னைப் போலவே தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட பிரேமாவின் சந்திப்பு, இருவருக்கும் ஏற்படும் காதல், 'அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாமல் அநீதி களைய முடியாது ' என்பது தொழிற்சங்கக்கோஷம் என்றாலும் , ஆர்ப்பரித்துப் போராடி அநீதி களைந்ததற்காக அநியாயமாக முதலாளிகளால் வேலையை ராஜினாமா செய்யச்சொல்லப்பட, யாருக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களே அமைதியாக இருக்கும் எதார்த்தம் , பின்பு தனித்தொழில் , மத மறுப்புத் திருமணமாய் முடிந்த காதல் என மிக எளிமையான தன் வரலாற்று நூலாக அமைந்துள்ளது அருமை. அக்பரும், பிரேமாவும் ஒரு மனதாய் இணைந்தது மட்டுமல்ல, இல்லறத்தில் சிறந்த, நல்லறம் புரியும் பறவைகளாய் இருபது ஆண்டுகளுக்கும் மேலாய் சமூக பிரிவினைகளுக்கு சாட்டையடி இணையராய் வலம் வருவது வாழ்த்தலுக்குரியது, பாராட்டுக்குரியது. எழுத்து ஆற்றல் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, அவரை எழுதத் தூண்டி, அந்த எழுத்தை புத்த்கமாகக் கொண்டு வந்து,'ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாய் ' இப்புதின ஆசிரியருக்கு அமைந்த தோழர் அகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு இரண்டு மாத இடைவெளிக்குள் , தன்னுடைய மனதில் பதிந்த சுவடுகளை , வண்ணக் கோலமாய் வரைய நூல் ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு வாய்ப்பு அளித்த எழுத்து இணையதளம் மிகுந்த பாராட்டிற்கும் , நன்றிக்கும் உரியது. அதனைப் போலவே எழுத்துவில் பொள்ளாச்சி அபி எழுத , எழுத ஊக்குவிக்கும் அருமருந்தாய் அமைந்த பின்னூட்டங்கள், அதனை எழுதிய எழுத்துத் தோழர்கள், தோழியர்கள் அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நூல் எழுத்து.காம்- இணையதளத்தின் வெற்றி, அதில் இணைந்துள்ள தோழர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் . 'ஆதலினால் காதலித்தேன் ' புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள், வீட்டு நூலகத்தில் பாதுகாத்து வையுங்கள்.