Sunday, 13 June 2021

மனு தர்ம நூலில் 'திராவிடம்' என்னும் சொல்....

 திராவிடன் மாடல் ..புத்தக விமர்சனம்.....அய்யா ஆசிரியர் கி.வீரமணி

            (வாருங்கள் படிப்போம்...2  அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை தொடர்ச்சி)

வர்ணம் பிறவி அடிப்படையிலே நிர்ணயிக்கக்கூடியது.வகுப்பகளிலிருந்து வெளியேறலாம்.உள்ளே போகலாம்.முன்னேறலாம்.கீழ்பபடி நிலைக்கு வரலாம்.ஆனால் வர்ணம் என்பது இருக்கிறதே,ஒரு முறை அந்த ஜாதியிலே பிறந்துவிட்டால், மதங்கள் மாறுவதற்கு கூட உரிமை உண்டு,ஜாதி மாறுவதற்கு உரிமை கிடையாது.அந்த ஜாதியிலே உயர் ஜாதிக்காரனுக்கு வசதி உண்டு,அந்த ஜாதியின் காரணமாக தாழத்தப்பட்டு,பிற்படுத்தப்பட்டு,ஒடுக்கப்பட்டு,அடிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய மற்றவர்காளுக்கு அந்த வருண தர்மம் எனபதிலே எது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ,அதிலிருந்து அவர்கள் நகரக்கூடாது. என்று ஒரு காலங்காலமாக நிலைந்த ஒரு சமூக அநீதியை எதிர்த்துத்தான் சமூக நீதி என்ற போர்க்கொடி தூக்கப்பெற்றது.அந்த சமூக நீதிக்கொடியை உயர்த்திய இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.அந்த திராவிடர் இயக்கத்தின் முன்னனி என்பது இருக்கிறதே அது மிக முக்கியம்.

இங்கு 1967-லிருந்து 50 ஆண்டுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.அதற்கு அடுத்த தலைப்புகளையும் சொல்லிவிட்டு அடுத்த செய்திகளுக்குச்செல்லலாம் .நேரம் குறுகிய காலம்.அடுத்தது “Broadening Growth and Democratising Capital “.அதே மாதிரி வளர்ச்சி என்பது இருக்கிறதே அது ஒரு பக்கத்திலே மட்டும் வளர்ச்சியடைந்தால் அது வளர்ச்சி அல்ல,அது வீக்கம்.அதைப் பரவலாக்க வேண்டும்.வளர்ச்சி வேறு.வீக்கம் வேறு.அதுதான்.பணமே-அது அதிக அளவிற்கு வரும்போது பணவீக்கம்,.Inflation  என்பதற்கு   என்ன சொல்லைத் தமிழிலே பயன்படுத்துகிறோம் என்றால் பணவீக்கம் என்றுதான் சொல்கின்றோம்.பண வளர்ச்சி என்று அதற்குப் பொருள் அல்ல.Growth என்பது வளர்ச்சி.வீக்கம் என்பது இருக்கிறதே அது வித்தியாசமானது.உடல் முழுவதும் வளர்ந்தால் அது வளர்ச்சி.ஒரு குறிப்பிட்ட பாகம் மற்றும் வளர்ந்தால் அது வீக்கம்.ஆகவேதான் அதனை தெளிவாகச்சொல்லி ,வளர்ச்சி வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்,என்ன செய்திருக்கிறார்கள்,என்பதற்கு அடையாளமாக பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டு,மிக அருமையான அளவிற்கு சொல்லுகிற தலைப்பு "Broadening Growth and Democratising Capital " என்பதாகும்..

அடுத்தபடியாக நமது நாட்டிலேயே நகரம்,கிராமம் வேறுபாடு.இதைக்கூட தந்தை பெரியார் கிராம சீர்திருத்தம் என்ற அற்புதமான ஒரு சிறிய நூலிலே தெளிவாகச்சொன்னார். நகரம்,கிராமம் என்ற பேதம் இருக்கிறதே அது பிராமணன் ,சூத்திரன் என்ற பேதம் இருக்கிறதே அது மாதிரியானது,உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் என்ற பேதம் மாதிரியானது ,ஒருவர் உழைப்பிலே இன்னொருவர் வாழக்கூடிய அந்தச் சூழல் என்பது தவறு,எனவேதான் இந்த பேதமே நகரம்,கிராமம் என்ற பேதமே இருக்க்க்கூடாது என்று மிக  நீண்ட காலத்திற்கு முன்னரே பெரியார் இந்தத் தத்துவத்தை எடுத்துச்சொன்னார்.எனவே “Transforming Rural Relations”,என்பது,அதனை மாற்றிக்காட்டவேண்டும் சமுதாய அடிப்படையிலே என்று எடுத்துக்காட்டுவதுதான் இந்த இயல்..

ஏழாவது  இயல் "Popular Interventions and Urban Labour "….அதன் மூலம் எப்படியெல்லாம் இடையூறுகள் ஏற்பட்டு ,மிக முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்று சொல்லி அதிலே எப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படக்கூடும் .இடையூறுகள் அல்லது அளவீடுகள் அதற்கு எல்லைக்கோடுகள் இவைகள் எல்லாம் என்னென்ன நிகழ்வுகள்,வரக்கூடிய வாய்ப்புகள் இவைகளை எல்லாம் கடைசியாக @Fissures,Limits and Possible Futures  என்று எட்டாவது தலைப்பிலே எழுதியிருக்கிறார்கள்.

எனவே  நண்பர்களே,இதிலே மிக முக்கியமானது,சுட்டிக்காட்ட வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள் என்றாலும்,இந்த நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த நூல் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிறது அறிமுகம் என்பதன் மூலமாக ஒரு தொடர்பைக் காட்டுகிறோம். எனவே நூலுக்குள்ளே போய் ஒவ்வொன்றாக ஆய்வு  செய்வதென்றால் அவ்வளவு ஆழமான செய்தி இருக்கிறது.நீங்கள் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும். ஆங்கில அறிவும் வாய்ப்பும் உள்ளவர்கள் படிக்கவேண்டும்..நிச்சயமாக இது தமிழிலே வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.விரைவில் இது தமிழில் கிடைக்கும்.கிடைக்க வேண்டும்.அதற்கு வேண்டிய முயற்சிகளைச்செய்யவேண்டும். என்பதும் என்னுடைய அன்பான  வேண்டுகோள் ஆகும்.

அருமை நண்பர்களே,முதலில் ஒரு செய்தியைச்சொல்லவேண்டும்.அது என்ன..திராவிடியன் மாடல்..முதல் கேள்வியே அதுதான் இந்தப்புத்தகத்தில்.திராவிடியன் மாடல் என்னும் பெயர் ஏன் வந்த்து?ஏப்படி வந்தது?.திராவிட மாடல் என்றால் அப்போது இன்னொரு மாடல் என்ன என்று வருகின்றபோது நண்பர்களே,வித்தியாசம் இருக்கிறது.நம்முடைய நாட்டிலே திராவிட என்ற பெயரைக்கேட்டாலே சில பேருக்கு ஒவ்வாமை.சில பேருக்கு அவசரம்.சில பேர் அதனை திசை திருப்புவதற்கு.காலம் காலமாக நமது பாரம்பரியம் நாகரிகம் எல்லாம் திராவிடம்தான்..பார்ப்பனரல்லாதார் இயக்கம்  முதலில் சவுத் இந்தியன்  லிபரேசன்பெடரேசன் என்று 1916களில் அந்த அமைப்பு நடந்தபோது,அந்த  அமைப்பு நடத்திய ஒரு பத்திரிக்கை ‘ஜஸ்டிஸ்’.அந்தப் பத்திரிக்கை பெயரிலேயே நீதிக்கட்சி..நீதிக்கட்சி என்னவென்றால் திராவிடர் கட்சி.அதற்கு முன்னாலேயே அதனை உருவாக்கியவர்கள்.காலங்காலமாக கல்வியிலே அதன் மூலமாக அரசுப்பணிகளிலே ,மற்ற இடங்களில் எல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அதன் மூலம் பொருளாதாரத்திலே அவர்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையைப் பெறமுடியாதவர்களாக ,பெரும்பாலான மக்கள்,அதுவும் இந்த மண்ணுக்கு உழைக்கின்ற மக்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து,அவர்களுக்கு கல்வியைக் கொடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்காக முன்னோடிகளாகத் துவக்கியவர்கள்.

ஒரு உதாரணத்தை,புத்தகத்தின் உள்ளே மிக அழகாக எடுத்து சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.1912-லே நீதிக்கட்சி ஆரம்பிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னால்,டாக்டர் சி.நடேசனார் திராவிடன் ஹோம்,திராவிடன் இல்லம் என்று ஒன்றை ஆரம்பித்தார்.திராவிடர் இல்லம் என்பது ஒரு விடுதி.திருவல்லிக்கேணியிலே ஆரம்பிக்கப்பட்டது. .அதிலே வாய்ப்பு இல்லாதவர்கள் எல்லாம் தங்கிப் படித்தார்கள்.சர்.ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் அங்கே இருந்தார்கள்.பிற்காலத்திலே உலகம் புகழும் பொருளாதார நிபுணராக வந்தவர் ஆர்.கே.சண்முகம்.அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலே இருந்து வரக்கூடியவர்கள்,படிக்கக்கூடாதவ்ரகள் என்று சொல்வதற்கு டிப்படை  மனுதர்மம்.மனுதர்மத்தின் அடிப்படையில் வரக்கூடியது.எனவேதான் ஜாதி என்னும் அடிப்படையில் ஏன் என்பதனை முதலிலேயே இந்த நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.ஜாதி அடிப்படையில் ஒரு சமுதாயம் ஏற்கனவே இருக்கிறது..திராவிட மாடலுக்கு எதிரான ஒன்றைச்சொல்லவேண்டுமென்றால் அது மனு.திராவிட மாடல் சமதர்மம்,அது குல தர்மம்.இதுதான் மிக முக்கியமானது.குலம் என்று சொல்கின்ற நேரத்திலே ,அதனை நாம் உருவாக்கவில்லை.திராவிட்த்திற்கு அது நேர் எதிரானது.இதிலே நாம் திராவிடம் என்று சொல்கின்றபோது சில பேர் ஒவ்வாமை கொண்டவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்,?.அது என்ன்ங்க திராவிடம் என்பது ,ஒரு கிறித்துவர் வந்தாரு,கால்டுவெல் வந்தாரு,அவரு திராவிடம் என்ற பெயரைக் கொடுத்தார் ,அதைப் பிடிச்சுகிட்டு இவங்க திராவிடம்,திராவிடம் என்று சொல்கிறார்கள் என்று இங்கு இருக்கும் சிலர்,புரியாமல் குழப்பவாதிகள் சொல்கிறார்கள்.

திராவிடம் என்பது வெறும் இனப்பெயர் என்று மட்டும் நினைக்கக்கூடாது.மொழி,பண்பாடு,கலாச்சாரம்,உரிமை வேட்கை,சமூக நீதி,சமுத்துவம் இவை.எல்லாவற்றையும் உள்ளடக்கியது திராவிடம்.எனவே இது திடீரென்று யாரோ கொடுத்த பெயர் அல்லது பெரியார்  கொடுத்த பெயர் என்று நினைத்துக்கொண்டு,பெரியார் மீது இருக்கிற கோபத்திலே இதைப் பேசுகிறார்கள்.அல்லது திராவிட இயக்கத்தின் மீது ,அறிஞர் அண்ணாவின் மீது அல்லது மற்றவர்கள் மீதோ இருக்க்க்கூடிய அந்த வெறுப்பிலோ,கோபத்திலோ,எரிச்சலிலோ சொல்கிறார்கள்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திராவிட மாடல் என்ற ஒரு அருமையான தலைப்பை எடுத்து மிகச்சிறப்பான வகையிலே கொடுத்திருக்கிறார்கள்.தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே,அதற்குத்தான் சொன்னேன்,துணிவு வேண்டும் என்று.

தகவலுக்காகச்சொல்கின்றேன்,ஏனென்றால் பலபேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.திராவிடம் என்ற சொல்,முதன்முதலில் கால்டுவெல் அவர்களால்தான் சொல்லப்பட்ட்து என்று சொல்கிறார்களே,அந்தக் கூற்று உண்மையா?.அருள் கூர்ந்து புரிய வேண்டும்.திராவிட மாடல் என்று சொல்வதற்கு முதலில் திராவிடம் என்று சொல்கின்றபோது  மொழி,பண்பாடு,கலாச்சாரம்,நாகரிகம்,சமூக அமைப்பு என்று எல்லாமே இருக்கிறது என்றாலும் இந்தத் திராவிடம் என்ற சொல் வரலாற்று ரீதியாக இருக்கிறது.அதுதான் தந்தை பெரியார் சொன்னார்.பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று  சொல்லப்பட்ட அந்த நேரத்திலே பெரியார் தான் சொன்னார்.அது என்னய்யா ,100க்கு 3 பேரா பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்,அதனை ஏன் நாம் நெகட்டிவ்  டெபனிசனாக  கொடுக்கவேண்டும்.பெரும்பான்மையான மக்களுக்கு என்று ஒரு முகவரி இல்லையா?..அதனுடைய ஆழமான கருத்து என்னவென்றால் பண்பாடு,கலாச்சாரம்,நாகரிகம்-சிந்து வெளி நாகரிகத்திலிருந்து திராவிட நாகரிகம்,திராவிட மொழிக்குடும்பம், என்று மொழி பண்பாடு என்று எல்லாவற்றிலுமே இருக்க்க்கூடிய அந்த வாய்ப்புகள் பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் இருக்கிறது என்பதைச்சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.திராவிடம் என்பது வெறும் வரலாற்றில் மட்டுமல்ல,நீங்கள் எழுதிவைத்திருக்கிற புராணத்திலும் மனு தர்மத்திலுமே இடம் பெற்றிருக்கிறதே என்று சொன்னார்.இது பலபேருக்குத் தெரியாது.

இதோ என் கையில் இருப்பது மனுதரும சாஸ்திரம்.இந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் வந்தது.1919-ல் வெளிவந்த நூல்.102 ஆண்டுகள் ஆகிவிட்ட்து.அதனை அப்படியே எடுத்து அசல் மனுதர்ம்ம் என்ற பெயரிலே வெளியிட்டு இருக்கிறோம்.பல பதிப்புகள் கண்ட நூல் இது.இந்த அசல் மனுதர்ம்ம் நூலிலே இருக்கக்கூடிய 10-வது அத்தியாயத்தில் 44 சுலோகத்திலே  சொல்கின்றார்கள்.

"பெளத்திரம்,அவின்றம்,திரவிடம்,கம்போசம்,யவனம்,சகம்,பாரதம்,பால்தீகம்,சீனம்,பிராதம்,கஷ்டம் ..என்று.மேற்கண்ட தேசத்தில் ஆண்டவர்கள் எல்லோரும் சூத்திர்ர்கள் என்று ஆகிவிட்டார்கள் என்று சுலோகம் சொல்கிறது.ஆகவே இது  மனுதர்ம காலத்திலிருந்து வந்திருக்கிறது.மனு எப்போது ஆரம்பித்து வந்தது என்பதற்கு அவர்களே பதில் சொல்லட்டும்.ஆகவே இதை எதற்காகச்சொல்கிறேன் என்று சொன்னால் யாரையும் சங்கடப்படுத்த அல்ல.திராவிடம் என்பது வரலாற்று ரீதியாகவும் இருக்கிறது.புராண ரீதியாகவும் இருக்கிறது.இன்னும் கேட்டால் பாகவத புராணங்கள் போன்றவற்றில் திராவிடம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தத் திராவிட மாடல் என்று சொல்கிறபோது ,அதற்கு என்ன தனித்தன்மை?.”அனைவர்க்கும அனைத்தும் “ அதுதான் தனித்தன்மை.இதிலே பிரிப்பது இல்லை.’பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’,’யாதும் ஊரே,யாவரும் கேளிர்’, எல்லோரும் உறவினர்,அந்த உறவு,இதிலே பேதப்படுத்துவதில்லை.பேதப்படுத்துவதற்கு,வேற்றுமைப்படுத்துவதற்கு இடமேயில்லை.இப்போது எல்லாம் மிக நாகரிகமாக ,அறிவார்ந்து பேசக்கூடிய ஆங்கில புலமை படைத்தவர் என்று சொல்கிறபோது,வளர்ச்சி என்று சொல்கின்றபோது inclusive growth, exclusive growth என்று இரண்டைச்சொல்கிறார்கள்.அதாவது எல்லோரையும் ஒருங்கிணைத்து,அரவணைத்து செல்லக்கூடிய ஒரு வளர்ச்சி.அது inclusive growth. மக்களைப் பிரித்து ,மக்களை ஜாதிகளால்,மதத்தால்,மற்றவைகளால் பிரித்து,பிரித்து அதன் மூலம் கிடைக்க்க்கூடிய வளர்ச்சி அது exclusive growth. Dravidian model is an inclusive philosophy.Dravidian growth itself is a humanist.Human approach,humanisation.இதிலே யாரும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று இல்லை. ‘எல்லோருக்கும் எல்லாமும்’.Equal Opporunity,Equality..சமத்துவம் என்பதுதான் திராவிடத்தத்துவம்.அந்த சமத்துவத்தை அடிப்படையாக்க் கொண்டு செயல்பட்ட்து திராவிட மாடல்.இதற்கு முன்னால் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.அதுக்கு பெரிய அளவிற்குப் போகவேண்டாம்.இந்தப் புத்தகத்தில் இருக்கிற இரண்டே இரண்டை எடுத்துக்கொள்ளலாம் நேரத்தைக் கருதி.

                    (தொடரும்)


தொகுப்பு : மதுரை வா.நேரு

நன்றி விடுதலை 31.05.2021 


Saturday, 12 June 2021

வாருங்கள் படிப்போம்..... அய்யா ஆசிரியர் அவர்கள் உரை (1).....மதுரை வா.நேரு

வாருங்கள் படிப்போம் ' என்னும் வாட்சப் குழு ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் மற்றும் பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சனிக்கிழமை தோறும் ,மாலையில் நூல் விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் குழுவின் 50-வது வார நிகழ்வுக்கு,சிறப்பு அழைப்பாளராக ,'தி திராவிடன் மாடல்' என்னும் நூல் பற்றி உரையாற்றுவதற்காகத் திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு,அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.நிகழ்வின் தொடக்கத்தில் முதல் வாரம் தொடங்கி,49 வாரங்கள் வரை ,விமர்சனம் செய்யப்பட்ட நூல்கள்,நூல் விமர்சனம் செய்த ஆளுமைகள், இந்தக் குழுவிற்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள்,விமர்சனம் செய்யப்பட்ட நூல்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் என்று வெகுசிறப்பாக,கணினி பவர்பாயிண்ட் மூலமாக, இந்தக் குழுவில் உள்ள திருமதி ரேணுகா குணசேகரன் அவர்களின் வடிவமைப்பில் திரையில் காட்டப்பட்டது. தொடர்ந்து இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்கள் தமிழர் தலைவரையும், மற்றவர்களையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து அறிமுக உரையினை கோ.ஒளிவண்ணன் நிகழ்த்தினார்.


கோ.ஒளிவண்ணன்


இந்த 50வது ஆண்டு விழாவிற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று இந்தக் குழுவினர் நினைத்தோம். ஒரு மனதாக அய்யா ஆசிரியர் அவர்களை அழைப்பது என முடிவு செய்தோம்.நான் சிறுவயதில் 7,8 வயதாக இருக்கும்போது ,எனது தந்தை கோபாலகிருஷ்ணன் அவர்களோடு பெரியார் திடலுக்குப் போயிருக்கிறேன். அங்கு சிங்கம் போல அமர்ந்திருந்த தந்தை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பின்பு அய்யா ஆசிரியர் அவர்கள்தான் எல்லாம்.ஏதாவது ஒரு கூட்டத்தில் அய்யா ஆசிரியர் பேசுகிறார் என்றால்,5,6 புத்தகங்கள் அவர் பக்கத்தில் இருக்கும். பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்தப் புத்தகங்களை எடுத்து,ஆதாரங்களைக் காட்டுவார்.பேசிக்கொண்டிருக்கும்போதே புத்தகத்தை எடுப்பது,புத்தகத்தைப் புரட்டுவது,குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து ஆதாரத்தைக் காட்டி பேசுவது மிக லாவகமாக இருக்கும்.பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.


புத்தகங்கள் மீது எனக்கு காதல் வருவதற்கு எனது தந்தையார் கோபாலகிருஷ்ணன் ஒரு காரணம் என்றால்,அதே அளவிற்கு எங்கள் சமூகத்தந்தை அய்யா ஆசிரியர் அவர்களும் ஒரு காரணம்.அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் சிறப்பு.சென்ற ஆண்டு இதே காலகட்ட்த்தில் பேரா.உமா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஏன்,நாம் வாருங்கள் படிப்போம் என்னும் ஒரு குழுவை ஆரம்பிக்க்க்கூடாது என்பது பற்றிப்பேசினோம்.ஆரம்பித்தில் ஆரம்பித்தபோது மிக்க்குறைவானவர்கள்தான் இருந்தார்கள். நேரு அவர்கள்,குமரேசன் அவர்கள்,சபாரத்தினம் அவர்கள் என்று இப்படித்தான் ஒரு சிறு குழுவாக ஆரம்பித்தோம்.இன்றைக்கு நூறு பேர் இதில் இணைந்துவிட்டு,இன்னும் 50 பேர் இணைவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்தக் குழு பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது.இதற்கு மிக முக்கிய காரணம் இதன் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா அவர்களின் ஈடுபாடும் ஒருங்கிணைப்பும்தான் காரணம்.வாரவாரம் சனிக்கிழமை தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஒரு அமைப்பின் மேன்மை அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது என்று சொல்வார்கள்.கோலகலமாக ,சிலர் ஆரம்பிப்பார்கள்,அதனைத் தொடர்ந்து நடத்தமாட்டார்கள்.அந்தவகையில் தொடர்ச்சியாக  ஒரே வகையான பிரிவாக இல்லாமல்,பல்வேறு வகையிலான பிரிவுகளில் எடுத்து,ஜீலை மாதம் வரை திறனாய்வு செய்வதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது என்று சொன்னால் பேரா.உமா மகேஸ்வரி அவர்களின் ஈடுபாட்டிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அய்யா ஆசிரியர் அவர்களையும் புத்தகத்தையும் எப்போதுமே பிரிக்கமுடியாது. எப்போதுமே அவர் புத்தகக் காதலர்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து மதுரைக்குப்போனோம். ஒரு 5,6 பேர் போனோம்.நாங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் எங்களோடு பயணித்த மருத்துவர் ஷாலினி அவர்க்ள் எங்களிட்த்தில் ஒரு புத்தகம் கொடுத்தார். ஆசிரியரிடமும் கொடுத்தார்.’கொஞ்சம் டார்வின்,கொஞ்சம் டாக்கின்ஸ்’ என்னும் புத்தகம்.மருத்துவர் ஷாலினி எனது பக்கத்தில்தான் விமானத்தில் அமர்ந்திருந்தார்.விமானம் புறப்பட்டவுடன் நான் தூங்கி விட்டேன்.மதுரைக்கு வந்தபோதுதான் விழித்தேன்.ஷாலினி அவர்கள் என்ன தோழர் இப்படி தூங்கி விட்டீர்கள் என்றார்.தூங்கினால்தான் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றேன் அவரிடம்.அவர் சிரித்துக்கொண்டார்.விமானத்தில் இருந்து இறங்கி,வாகனத்தில் பயணித்தபோது,ஆசிரியர் ஷாலினியிடம்,’அம்மா,இந்தப் புத்தகத்தை நான் படித்துவிட்டேன்’என்றார். எனக்கு பெரிய அதிர்ச்சி. அவரோடு ஒப்பிடும்போது நான் சின்னப்பையன்.நம்ம வயதுக்கு நாம தூங்கிட்டு வரணும் என்று நினைத்தோம். அய்யா ஆசிரியர் அவர்கள் இந்த வயதில் படித்துவிட்டு வந்திருக்கிறாரே என்று நினைத்து வெட்கப்பட்டேன்.. படித்த்து மட்டும் இல்லாமல், அந்தப் புத்தகத்தில் குறிப்பு எல்லாம் எடுத்து வைத்திருந்தார்.அதைப் பற்றி விவாதித்தார்.


அதைப்போல இன்னொரு நிகழ்வு.சில ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் பன்னாட்டு மையம் அமைப்பின் சார்பாக ஜெர்மனியில் குளோன் நகரத்தில் ஒரு மாநாடு நடந்தது.அந்த நகரத்தின் பல்கலைக்கழகத்தில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். ஒரு பேப்பரை நானும் பேசி அளித்தேன்.அந்த மாநாடு முடிந்து எல்லோரும் அங்கிருக்கும் நதியில் ஒரு குரூஸ் போகலாம் என்று முடிவுசெய்தார்கள். நானும் சென்றேன்.அய்யா ஆசிரியரும் வந்திருந்தார்.. நாங்கள் போய்விட்டு ஊரையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வரும்போது நேரம்,4,4.30 இருக்கும்.அவ்வளவு அசதி.வந்தவுடன் பார்த்தேன்.அய்யா ஆசிரியர் அவர்கள் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். 8,9 மணி வரை படுத்து தூங்கிவிட்டு,கீழே வந்து பார்த்தால்,ஆசிரியரும் அவரோடு பேசிக்கொண்டிருந்தவரும்,வெளியில் சென்று விட்டு  உள்ளே வருகிறார்கள். நான் கேட்டேன். ‘அய்யா எங்கே போயிருந்தீர்கள் என்று ?”” என்னய்யா, நீங்க வரமாப் போயிட்டிங்க,இங்கே ஒரு அருமையான புத்தக்க் கடை இருக்கிறது. போய்விட்டு வந்தோம்’ என்றார். ஒரு பதிப்பாளர்,எழுத்தாளர் என்ற முறையில் நான் ஆசிரியர் முன்னால் மீண்டும் வெட்கப்பட்டேன். அவர் புத்தகத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை பலமுறை அறிந்திருக்கிறேன்.அவரின் இளமையின் ரகசியமே,புத்தகங்கள்தான். இண்றைக்கு 88 முடித்து 89 நடந்துகொண்டிருக்கும் வேளையில்,ஒரு 50 ஆண்டுகள் குறைந்த வயதுடைய இளைமையோடு இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சியைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தக் குழுவின் 1000-மாவது நிகழ்விலும் அய்யா உற்சாகமாக கலந்து கொள்வார்கள்  “ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அய்யா ஆசிரியர் அவர்கள் உரை:


                  மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் நடைபெறக்கூடிய ‘வாருங்கள் படிப்போம்’ என்று ஒரு அற்புதமான குழுவினை அமைத்து,ஒவ்வொரு வாரமும் மிகச்சிறப்பான வகையிலே அயர்வில்லாமல்,சோர்வில்லாமல், அதுவும் இந்தக் கொரனா காலகட்டத்திலே மன அழுத்தத்தாலும்,தனியே இருக்கக்கூடிய காலகட்டத்திலும்,மிகச்சிறப்பான ஒரு மாமருத்துவத்தைப் போல,இதனை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்க்க்கூடிய அனைவருக்கும் பாராட்டுகள்.குறிப்பாக தோழர் உமா மகேஸ்வரி அவர்களுக்கும் அதேபோல தோழர் ஒளிவண்ணன் அவர்களுக்கும்,அந்தக் குழுவினைச்சார்ந்த தோழர்களுக்கும் என்னுடைய மனம் உவந்த நன்றியை,மகிழ்ச்சியைப்,பாராட்டினை தெரிவித்துக்கொள்கின்றேன்.


அருமை நண்பர்களே,புத்தகங்கள் நமக்கு புத்தாக்கங்கள்.கற்பது,படிப்பது,வாசிப்பது எனப் பல  நிலைகள் இருக்க்க்கூடிய நிலையிலே நாம் படிக்க்க்கூடிய புத்தகங்களை வாசிப்பதும் சுவாசிப்பதும், அடுத்த கட்ட்த்திலே நாம் படிக்கக்கூடிய புத்தகங்களைக் கற்பதும்,’கற்பவை நிற்க அதற்குத் தக ‘என்பதைப் போல அதைப் பின்பற்றக்கூடிய வகையிலே வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்கும் ,நம்மை நாமே செதுக்கிக் கொள்வதற்கும் புத்தகங்கள் நிச்சயமான ஒரு அறிவு முனைகள்,ஏவுகணைகள். எனவேதான் புத்தகங்களைப் படிக்கிறபோது நமக்கு அயர்வில்லை.சோர்வில்லை.பயணங்களைச்சுருக்கி விடுகிறது.சோர்வுகளை நீக்கி விடுகிறது.உற்சாகத்திற்கு அது புதுவழிவகையை ஏற்படுத்துகிறது.அந்த வகையிலே எனக்கு புத்தகங்களைப் படிக்கிறபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.ஏராளமாகச்சொல்லிக்கொண்டு போகலாம்.ஆனால் இங்கு இருக்கிறவர்களுக்குத் தேவையில்லை.இது அறிவார்ந்த ஒரு அவை.இந்த அவையிலே வெளியிலே நின்றுகொண்டும்,பிற இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும் பெருமக்களுக்கு அன்பார்ந்த வணக்கமும் நன்றியும்.


இன்றைக்கு நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட, புத்தகம் 'தி திராவிடன் மாடல்'.அவர்கள் கேட்டபோது அண்மையிலே ஒரு சிறப்பான முறையிலே ,பொருளாதாரத்திலே  சிறப்பாக வெளியிட்டிருக்கூடிய திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு ,பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-லே ஆட்சியியை அமைத்த பிற்பாடு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு,திராவிடர் ஆட்சி ஒரு மாட்சி என்று சிறப்பாக அமைந்த நேரத்திலே, அதை மையப்படுத்தி ,மிக ஆழமாக,இதுவரை செய்யாத ,ஒரு சிறப்பான ஆய்வினை,மிகச்சிறப்பான வகையிலே நம்முடைய தமிழ் நாட்டிலே இருக்கக்கூடிய சிறப்பான டெவலப்மெண்ட் ஸ்ட்டிஸ் என்று சொல்லக்கூடிய ,அதிலே ஆய்வாளர்களாக இருக்க்க்கூடிய இரண்டு பேராசிரியப் பெருமக்கள் அதிலே இருந்து தயாரித்து கனடா நாட்டினுடைய அந்த சிறப்பிலும் பங்கேற்று அதிலும் ஆய்வு செய்யக்கூடிய  நூலாசிரியர் பேராசிரியர் கலையரசன் அவர்களுக்கு சிறந்த ஆய்வாளர் என்ற வகையிலே நம் நெஞ்சம் நிறைந்த நமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் கலையரசன் அவர்கள்,இந்த நூலாசிரியர் அவர்கள் எப்படி சிறப்பான வகையிலே உருவாக்குவதற்கு  அவருக்கு அடித்தளமாக,வழிகாட்டியாக இருக்க்க்கூடிய அருமை பேராசிரியர் விஜயபாஸ்கர் அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்.இந்த இரண்டு பேரும் இணைந்து இந்த் ‘திராவிடன் மாடல் ‘என்ற அற்புதமான நூலை உருவாக்கி, 16.04.2021 சிறப்பாக ஒரு மாத்த்திற்கு முன்னாலே  இதனை மிக நன்றாக வெளியிட்டபோது ,இந்த அழைப்பிதழை பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்கள் என்னை அழைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு ,அந்த நூல் எப்போது கிடைக்கும் என்று சொன்னபோது ,நூல் அன்று மாலையே கிடைத்த்து.அதை விரைந்து படித்தபோது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.


ஏனென்றால் மற்றவர்கள் இதுவரை செய்யாத பணி என்பது மட்டுமல்ல,செய்யத் துணியாத ஒரு பணியை,இதன் மூலமாக இதனுடைய ஆசிரியர் ,பொருளியல் அறிஞர் ஆய்வாளர் கலையரசன் அவர்களும்,அவர்களை வழி நட்த்தி சிறப்பான வகையிலே அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த பேராசிரியர் விஜயபாஸ்கர் அவர்களும் மிகுந்த அளவிற்கு ஒரு அற்புதமான வரலாற்றுப்பூர்வமான ஒரு  நூலை ,இதுவரை இல்லாத அளவிற்கு ,இது பொருளாதார சம்பந்தப்பட்ட நூல் என்று சொன்னாலும் திராவிட இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தக்கூடிய அளவிற்கு அளித்திருக்கிறார்கள்..அப்படிப்பட்ட நிலையிலே இந்த அமைப்புகளைப் பற்றிப் பொதுவாக பேசிவிட்டுப்போகிறவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆழமான ஆய்வு அறிஞர் ,இதற்கு முன்னாலே வெளி நாட்டவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.ஹாட் பிரே சூனியர் என்பவர் திராவிடர்  ஆய்வு என்பதை முதன் முதலில் மிகச்சிறப்பாகச்செய்தார்கள்.அதுபோல ரிஷி கவர்ன்ஸ் செய்தார்.பெரியார் அவர்களைப் பற்றி ஈசா விஸ்வ நாதன் அவர்கள் நம் நாட்டிலே இருந்து ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்திலே அதனைச்செய்தார்கள்.அதைப்போல மற்றவர்கள் இப்போது சிறப்பாக செய்துகொண்டு வரும் நேரத்திலே பல செய்திகளை எல்லாம் முன்னாலே எடுத்து இதில் அவர்கள் தொகுத்துச்சொல்லி ஒரு குறிப்பிட்ட செய்திகளை எடுத்து ,ஆழமாகத் தொடுத்து ,ஆதாரபூர்வமாக புள்ளி விவரங்களோடு இந்தச்செய்திகளைச்சொல்கிறார்கள்.இதிலே இந்தப் புத்தகத்தை மதிப்பாய்வு செய்வது,நூல் மதிப்புரை செய்வது ,புத்தக விமர்சனம் செய்வது போல நான் செய்யவில்லை.


இந்தப் புத்தகத்தினுடைய தேவை என்ன? இந்தப்புத்தகத்திற்கு ஏன் அந்த்த் தலைப்பு வந்த்து?அந்த்த் தலைப்பு எவ்வளவு பொருத்தமானது?அந்த்த் தலைப்புக்குப் பின்னால் இருக்க்க்கூடிய இலட்சிய வெற்றிகளும்,போராட்டங்களும்,அதனைநிகழ்த்தியவர்களுடைய சாதனைத் திறன்களும் எப்படிப்பட்ட்து என்பதையெல்லாம் மிகத்தெளிவாகச்சுட்டுக்காட்ட வேண்டும்.இந்த அறிவார்ந்த அவையிலே,இது ஒரு ஆங்கிலப்புத்தகம் என்ற காரணத்தால்,இதிலிருந்து பல பகுதிகளைப் படித்தால் அது நேரத்தையும் எடுத்துக்கொள்ளும்.பலருக்கு சலிப்பும் தட்டும்.எனவேதான் இந்த நூலை அறிமுகப்படுத்துகிறபோது, இந்த அறிவார்ந்த அவையிலே ,இந்த நூலைப் பற்றி பலபேர் அறிந்திருப்பார்கள்.இந்த நூல் எளிதிலே எங்கு கிடைக்கும் என்று சொல்கிறபோது,பெரியார் புத்தக நிலையத்திலே கூட, பெரியார் திடலிலே அதனை வாங்கிப் பரப்பவேண்டும் என்ற எண்ணத்திலே அதனை நாங்களும் வாங்கி அதனை அளித்துக்கொண்டிருக்கின்றோம்.ஆகவே நான் இந்த நூலைப்பொறுத்தவரையிலே அங்கே அந்த வாய்ப்புகள் இருக்கிறது.ஆங்கிலத்திலே படிக்க்க்கூடிய வாய்ப்புள்ளவர்கள் இந்த நூலை வாங்க்க்கூடிய சூழலைப் பெறலாம்.படிக்கலாம்.


அடுத்து நண்பர்களே,இந்த நூலைப்பொறுத்தவரையிலே ,அவர்கள் அமைத்த முறையினை,தலைப்புகளிலேயே ரொம்ப ஆழமான தலைப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.’தி திராவிடன் மாடல்’ என்று சொல்வது இருக்கிறதே,இதற்கு ஒரு துணிவும் தெளிவும் வேண்டும்.இந்த நூலாசிரியர்கள் தெளிவோடு எழுதியிருக்கிறார்கள்.துணிவோடு அந்த முயற்சியிலே இறங்கியிருக்கிறார்கள்.இதுதான் மிக முக்கியமானது.துணிவு என்று சொல்வதற்கு என்ன காரணம்? புத்தகங்கள் எழுதுவதற்கு என்ன துணிவு என்று கேட்டால்,ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன துணிவு என்று கேட்டால்,நிச்சயமாக துணிவுதான்.ஆராய்ச்சியாளர்கள் எது சிக்கல் இல்லாத,எது பிரச்சனைக்கு உள்ளாகாத பொருள் என்று எடுத்துக்கொண்டு,அவர்கள் அதனைச்செய்வார்கள்.ஆனால் இதிலே எந்த இட்த்திற்கு மற்றவர்கள் போகவில்லையோ ,போக அஞ்சி இருக்கிறார்களோ,அந்த இட்த்திற்கு இவர்கள் துணிந்து இருக்கிறார்கள்.துணிந்த்து மட்டுமல்ல,அதனை வெற்றிகரமாகச்செய்திருக்கிறார்கள் என்பதுதான் ,நடுவு நிலைமையிலிருந்து எங்களைப் போன்றவர்களின் கருத்தாகும். அந்த இயக்கத்திலே ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களை ஒப்படைத்துக்கொண்டுள்ள ,அந்த இயக்கத்திலே பணியாற்றக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.ஏற்கனவே பல புத்த்கங்களிலே அறிவு ஆசான் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராசர் ஆட்சி,அதனுடைய விளைவாக வந்திருக்க்க்கூடிய திராவிட மாடல்,அதே போல ஆற்றல்மிகு கலைஞர்,தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன் ‘என்று ஆக்கிக்கொண்டு 5 முறை சிறப்பாக  முதலமைச்சர் ஆக இருந்து அவர் செய்த சாதனைகள்,இவைகளெல்லாம் அதேபோல எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி,ஒரு கட்ட்த்திலே அம்மையார் ஜெயல்லிதா அவர்களின் ஆட்சி என்று இப்படி எல்லாவற்றையும் வேகமாக வந்தாலும் திராவிட இயக்கம் என்ற சிறப்புதான் அவர்களுக்கு.


எனவே திராவிடியன்  மாடல் என்று வருகின்றபோது,இந்த 50 ஆண்டுகால வரலாற்றை,அரை நூற்றாண்டு கால வரலாற்றை,நீங்கள் 50வது நிகழ்வை நட்த்துகிறீர்கள். இந்த 50வது நிகழ்விலே,50 ஆண்டுகள் வரலாற்றை சொல்லும் நூலை ஆய்வு செய்வது மிகப்பொருத்தமானது.அந்த வகையிலே அவர்கள்,இந்த நூலை எப்படிப்பிரித்திருக்கிறார்கள் என்பதை மட்டும்,இந்த அவையில் இருப்பவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்ற காரணத்தால்,இந்த தலைப்புகள் ஒவ்வொன்றையும் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவசியமில்லை.அந்த வகையில்தான் 8 தலைப்புகளில் சிறப்பாக இந்தக் கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள்.ஒரு ஆய்வாக இருந்தாலும், அது ஒரு ஆற்றொழுக்காக,வரலாற்றை படிப்பது போல,அதுவும் பொருளாதாரத் த்த்துவங்களை சொல்லக்கூடிய  ஒரு புத்தகம் என்று சொல்கின்றபோது,அந்தப் பொருளாதாரத்த்த்துவங்கள் வாசிப்பாளர்களுக்கு ஒரு சங்கடத்தை ,நெருடலை உருவாக்கும்.ஏனென்றால் எல்லோரும் அந்த ஆய்வு முறையிலேயே கலந்துகொள்ளக்கூடிய நிலையிலேயே வருகின்றபோது,ஏனென்றால் அடிக்கடி அந்த ஆய்வாளர்கள் இடையிலே தங்கள் ஆய்வை நிலை நிறுத்தி ,நாங்கள் தரவுகளோடு எழுதுகிறோம்,தானாக எழுதவில்லை என்று சொல்லக்கூடிய அந்த நிலையை உருவாக்கி காட்டுவது அவர்கள் பணியாகும்.அந்த வகையிலே முதலில் எடுத்தவுடன் ‘The Dravidian Model – An Intoduction “ திராவிட மாடல் ஓர் அறிமுகம் .இரண்டாவதாக ‘Conceptualising Power in Caste Society’..அடிப்படையிலேயே திராவிட மாடலுக்கு மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால்


பிறவியினாலே ஒருவன் உயர்ந்தவன்,பிறவியினால் இன்னொருவன் தாழ்ந்தவன் ,பிறவியினால் உயர்ந்தவன் மட்டும்தான் படிக்கவேண்டும்.பிறவியினாலே தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற உரிமைகள் அற்றவர்களாக,அடிமைகளாக விலங்குகளை விடக்கீழே இருக்கவேண்டும் என்பதைக் காலங்காலமாக ஒரு வர்ண தர்ம்மாக ,பிறவி அடிப்படையில் ஒரு சமுதாயக் கொடுமையை நிலை நாட்டியிருக்க்க்கூடிய ஒரே நாடு,ஒரே சமுதாயம்,நம்முடைய நாடு.இதனை எதிர்த்துத்தான் திராவிட இயக்கமே பிறந்த்து.இந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்காகத்தான் திராவிடர் இயக்கம் உருவாயிற்று.அதற்கு அரசியல் அதிகாரம் இருந்தால்தான்,அந்த வாய்ப்புகளைப் பெறமுடியும்,கல்வி உரிமைகளைப் பெறமுடியும் .கல்வியிலே,உத்தியோகத்திலே வாய்ப்புகளைப் பெறமுடியும் என்று கருதிய காரணத்தினால்தான் திராவிடர் இயக்கம் என்ற ஒன்று பிறக்கவேண்டிய அவசியம்,நெருக்கடி ஏற்பட்ட்து.இதை மற்றவர்கள் ஏற்படுத்தினார்கள்.அதற்கு ஈடு கொடுத்தார்கள்.அதை அழகாக இந்த இட்த்திலே ஒவ்வொரு தலைப்பின் ஊடாக ,வெகு லாவகமாக ஏனென்றால் இது ஒரு ஆய்வு நூல்.இது ஒரு பிரச்சாரக் களமல்ல.ஒரு இயக்கத்தின் சார்பாக வெளியிடக்கூடிய நூலோ,மற்றதோ அல்ல.ஆய்வு அறிஞர்கள் வெளியிடக்கூடியது என்று சொல்கின்றபோது அந்த நிலையிலிருந்து கொஞ்சம் கூட வழுவாது,நழுவாது ,மிகத்தெளிவாக இதிலே அவர்கள் செய்திருக்கிறார்கள்.


மூன்றாவதாக “Democratising Education “.கல்வியைப் பொதுமைப்படுத்துவது.எல்லோருக்கும் எல்லோமும்.தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது ,தன்னுடைய இயக்கம் எதற்காகத் தோடங்கப்பெற்றது ,அதனுடைய இலக்கு என்ன?,நோக்கம் என்ன? என்று சொல்கின்றபோது இரண்டே சொற்களிலே,சமூக  நீதி ,எல்லா நீதிகளையும் வலியுறுத்தினார்கள்.இரண்டே இரண்டு சொற்கள்.வள்ளுவருடைய குறள கூட ஏழு சொற்கள் வரும்.”அனைவர்க்கும் அனைத்தும்”,அவ்வளவுதான்.இந்த அனைவர்க்கும் அனைத்தும் என்பது இருக்கிறதே அதுதான் Democratising Education. அந்தப் பின்னணியில்தான் இந்த்த் தலைப்புகளைப் பாருங்கள்.”Democratising Care “.மக்கள் நல்வாழ்வு என்பது இருக்கிறதே ,அது கூட வசதி உள்ளவர்களுக்கு,வாய்ப்பு உள்ளவர்களுக்கு ,உயர் ஜாதிக்கார்ர்களுக்கு,அல்லது வேறு சிலகார்ர்களுக்கு என்ற ஒரு சமூக வாய்ப்பிலே இருந்த ஒரு சமுதாயத்திலே அடித்தட்டிலே இருக்க்க்கூடிய மக்களுக்கும் கிடைக்க்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கீழ்மட்ட்த்திலே இருக்க்க்கூடிய,மிகப்பெரிய அளவிலே இருக்க்க்கூடிய உயர்ந்த தகுதியிலே இருக்க்க்கூடியவர்கள் என்பது அல்ல, ஏனென்றால் இதிலே அதற்குத்தான் முதலில் எடுத்தவுடன் சொல்கிறார்கள்,மற்ற நாடுகளிலே வகுப்புகள்,அதாவது வர்க்கங்கள் உண்டு.அதாவது கிளாஸ்..ஆனால் நம் நாட்டிலே  வருணம் உண்டு.வகுப்புகள்,வருணம்.வகுப்புகள் பிறவி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

                                                    (தொடரும்)


நன்றி : விடுதலை  29.05.2021


 


 


 

Friday, 4 June 2021

அடிமனதின் சொல்லால்......

அவர் இறந்து 

ஒரு மாதம் கழித்துத்தான்

இறந்த செய்தியே தெரிகிறது...
எப்போதும் முகத்தில்

மெலிதாய் ஒரு புன்னகை!

தோளில் கைபோட்டுப்

பழகும் நண்பன் போல

ஊழியர்களிடம் பழகும் பாங்கு..


அவருக்கு கீழே 

வேலை பார்த்தபொழுது

அதிகாரியாய் நான்

பார்த்ததில்லை என்றும்..

எங்களிடம் தன் அதிகாரத்தை 

என்றும் காட்டியதுமில்லை....


நிறைய வேலை செய்திருக்கிறேன்

அவருக்குக் கீழ்...

என்னங்க எவ்வளவு 

வேலை கொடுத்தாலும்

செய்து விட்டு 

அடுத்த வேலை என்னென்ன

கேட்கிற ஆளா இருக்கிறீங்க

என்றார் ஒரு நாள்...


வேலை செய்வதிலும்

வேலை செய்ய வைப்பதிலும்

அப்படி ஓர் ஆனந்தம்

அவருக்கு....


உங்கள் நண்பர்ன்னு

நம்பி வேலையைக் 

கொடுத்துப்போட்டு

அப்பப்பா...வேலையை 

முடிச்சுக்கொடுக்க

வைக்கிறதுக்குள்ள 

படாத பாடு பட்டுப்போனேன்

போங்க...அவரை 

உங்க நண்பர்ன்னு 

நான் சொல்ல மாட்டேன் 

என்றார் ஒரு நாள்...


ஆவேசமாய் கத்திய

ஊழியர் ஒருவரிடம்

'என்னங்க உங்களுக்கு 

எனக்கும் 

வாய்க்காத் தகராறா!

வரப்புத் தகராறா!

என்ன பிரச்சனைன்னு 

சொல்லுங்க...

தீர்க்க முயற்ச்சிப்போம்"

என்று ஆரம்பித்த அவரின்

அன்றைய உரையாடல்

என்றும் நினைக்கும்போதே

புன்னகைக்க வைக்கும்..


ஏதேனும் தேவை என்றால்

எழுதி உடனே 

வாங்கித் தந்திடுவார்...

நன்றாய் வேலை பார்க்கும்

ஊழியருக்கு 

பதக்கம் வாங்கிக் கொடுக்க

பல முறை எழுதிடுவார்..

அவர் எழுதி நல் ஊழியர்

பதக்கம் பெற்றோர் பலர்...


சொல்லில் சுத்தம்

பணியில் 'கை 'சுத்தம்

எல்லோர் மனதிலும்

பதிந்து விட்ட 

எங்கள் மேல்அதிகாரி

ஈஸ்வரமூர்த்தி 

கரோனாவில் கறைந்துவிட்டார்

எனும் செய்தி 

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..

அப்பேர்ப்பட்ட மனிதருக்கு

ஓர் அஞ்சலி கூட 

நேரில் செலுத்த இயலவில்லை

என்பது பெருந்துயரமாகத்தான்

இருக்கிறது...

சடங்குத்தனமான 'ஆழந்த இரங்கல்' அல்ல...

அடிமனதின் சொல்லால்

ஆழந்த இரங்கலும் வருத்தமும்...

                     வா.நேரு...04.06.2021 

(மதுரை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் பணியாற்றிய திரு.எஸ்.ஈஸ்வரமூர்த்தி(AGM Rtd) அவர்கள் மறைந்தார் என்னும் செய்திகேட்டு)
சிந்தனைக் கட்டுரை : ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்....முனைவர் வா.நேரு

முழுமையாக ,படங்களுடன் வாசிக்க உண்மை இணையதளம்:

http://www.unmaionline.com/index.php/6079-oru-nutrandil-eluthu-satsiyam.html 


தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பதித்த  கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைந்திருக்கின்றார். நூறு ஆண்டுகள் தொட்டுவிட ஒரே ஓர் ஆண்டும் சில மாதங்களும்  இருந்த நிலையில் கி.ரா. இயற்கை எய்தியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்’ என்று தலைப்பிட்டு, எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவிற்கு மிகச் சிறப்பான இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். (‘விடுதலை’ 18.5.2021). புதுச்சேரியில் மறைந்த கி.ரா. அவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தி, உடல் தமிழகத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கி.ரா. அவர்களின் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில், குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு அவருக்கு இறுதி நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு கோவில்பட்டியில்  சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; “கி.ரா படித்த இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அவருடைய படைப் பாளுமையை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்“ என்றும் மாண்புமிகு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓர்  எழுத்தாளன் என்கிற வகையில், ஓர் எழுத்தாளர் கி.ரா.விற்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரிய மனநிறைவை நமக்கு அளிக்கிறது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், கி.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஒப்பிடும் போது சில ஒற்றுமைகளைக் காண்கின்றோம். இருவரும் 35 வயதிற்கு மேல் தாங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்கு வந்தவர்கள். தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு பிறந்தவர். 1915-களுக்குப் பிறகுதான் பொது வாழ்வுக்குள் வருகின்றார். ஆனால் 95 ஆண்டு காலம் வாழ்ந்து யாரும் எட்ட முடியாத பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகப் புகழ் பெற்றார். தொண்டு புரிந்தார். மக்கள் மனதில் நின்றார். அதனைப்போலவே 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் பிறந்தவர் கி.ரா. அவர்கள். தன்னுடைய முதல் கதையை 1958இல் தான் எழுதுகிறார். அன்றைய ‘சரஸ்வதி’ இதழில்  வெளிவருகிறது. 1958இல் தொடங்கி தனது இறுதிவரை எழுத்துப் பணியை அவர் நிறுத்தவேயில்லை. தனது பணி எழுத்து என்று எடுத்துக் கொண்டபின், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்திருக்கின்றார். தந்தை பெரியார் தனது இறப்புக்கு முந்தைய சில நாள்களுக்கு முன் கூட எப்படி பேசிக் கொண்டிருந்தாரோ, அதனைப் போலவே எழுதிக் கொண்டும், இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தவர் கி.ரா.  ஆவார்.

தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். கி.ரா. படித்தது 4ஆம் வகுப்பு வரை என்றும், ஏழாம் வகுப்பு வரை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எப்படி இருந்தபோதிலும் அவர் ஏழாம் வகுப்பைத் தாண்டவில்லை என்பது உறுதியாகிறது. தந்தை பெரியார் தன்னைச்சுற்றி இருந்த சமூகத்தைப் படித்தார். இதற்கான காரணம் என்ன என்பதனைச் சிந்தித்தார். இதனைச் சீர்படுத்த பிரச்சாரமும் எழுத்துமே தனது வழி எனத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்த பிறகு தன்னுடன் யார் வருவார், தன்னை விட்டு யார் போவார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்  எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக இரவும் பகலும் பாடுபட்டார். ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ நிலைக்குத் தந்தை பெரியார் உயர்ந்தார்.

கி.ரா. அவர்கள் தனது 35ஆம் வயதில் எழுத ஆரம்பிக்கிறார். 99ஆம் வயதில் மறைந்திருக்கும் அவரின் படைப்புப் பட்டியல் நம்மைத்  திகைக்க வைக்கிறது. கண்ணிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு உள்ளிட்ட 24 தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர் என்னும் மூன்று நாவல்கள் வெளியிட்டிருக்கிறார். கிடை, பிஞ்சுகள் என்னும் தலைப்பில் குறுநாவல்கள். ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா. இசை மகா சமுத்திரம். அழிந்து போன நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி என்னும் தலைப்புகளில் அவரது கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. இது தவிர நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு, இதனைத் தவிர கரிசல் வட்டார வழக்கு அகராதி என்னும் சிறப்பான அகராதியினைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.


தந்தை பெரியார் படாத உடல் நோவு இல்லை. ஆனால், அந்த உடல் நோயினை உள்ளத்தில் எடுத்துக்கொண்டவர் இல்லை. தனது கடைசிக் கூட்டத்தில், சென்னையில் 19.12.1973 அன்று உடல் நோயினால், வலியினால் துன்பப்பட்டாலும், அந்தத் துன்பத்தை கண நொடியில் தாண்டிவிட்டு, இன இழிவினை ஒழிப்பதற்காக அவர் முழுங்கிய முழக்கம், எம்மைப் போன்று ஒலி நாடாவில் கேட்பவர்களின் கண்களிலேயே கண்ணீரை வரவைத்து, உணர்ச்சி மேலோங்கி நிற்கச் செய்கிறது. தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்கள், அன்னை மணியம்மையார் போன்றவர்கள், அந்த நிகழ்விலே தந்தை பெரியாரின் உடன் இருந்தவர்கள் உள்ளத்திலே எத்தனை வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் கூட நமக்காக அந்த வேதனையிலும் கர்ச்சனை செய்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கத்தின் குரல் நம்மை “இன்னும் வேலை செய்!’’ என்று அன்புக் கட்டளை இடுவதாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். உயர்ந்த நோக்கத்திற்காக தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு நோய் அஞ்சத்தான் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. எழுத்தாளர் கி.ரா. அவர்கள் காச நோயால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு திருமணமான போது அவருக்கு வயது 19. அவரது துணைவியார் பெயர் கணவதி அம்மாள். 19- வயதில் கி.ரா.வுக்கு திருமணம்  நடந்தபோதே அவருக்கு காச நோய் இருந்திருக்கிறது. காச நோய் உள்ள கி.ரா.வை. தைரியமாக மனமுவந்து திருமணம் முடித்துக் கொண்டதாக கணவதி அம்மாள் தெரிவித்திருக்கிறார். அன்னை நாகம்மையார் தனது கணவர் தந்தை பெரியாருக்கு செய்த பணிவிடைகள் போல கி.ரா.விற்கு கணவதி அம்மாள் பணிவிடைகள் செய்திருக்கிறார். காதலால் கசிந்துருகிக் கவனித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நன்றாகக் கவனித்து  விருந்தோம்பல் செய்திருக்கிறார். தன் கணவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற நேரத்தில், தனி ஆளாக நின்று சமாளித்து, தனது இரு பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார். (நன்றி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்).


தன்னுடைய வாழ்க்கையிலிருந்து, தன்னுடைய இலட்சியத்தை அமைத்துக் கொண்டவர் தந்தை பெரியார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தனது வீட்டிற்கு வந்தடையும் பார்ப்பனர் களையும் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை, செல்வாக்கை உள்வாங்கிய தந்தை பெரியார் ஏன் எனச் சிந்தித்தார். பின் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். கி.ரா.வைப் பொறுத்தளவில் அவர் ஒரு விவசாயி. இடைச்செவல் கிராமத்தில் நாற்பது வயதான நிலையில் தனது நிலத்திற்கு வரிகட்ட, தாசில்தார் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஏன் இந்தக் கதவு தனியாக நிற்கிறது என்று கேட்டிருக்கிறார். ஒரு விவசாயி கிஸ்தி (நில வரி) கட்டவில்லை. அதற்காக, அவரது வீட்டில் இருந்து கதவு பிடுங்கப்பட்டு இங்கு வந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதனை வைத்துத்தான், ‘அந்தக் கதவு’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அந்தக் கதைக்கான அடித்தளம் வாழ்வில் ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட நிகழ்வு. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்து கதைக் கருவை எடுத்துக் கொண்டவர் கி.ரா. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மொழிகளை, தனது கதைகளின் மொழியாக எடுத்துக்கொண்டவர் கி.ரா. அவரது  கதை மாந்தர்கள் கள்ளங் கபடமற்றவர்கள்.  எதார்த்தவாதிகள். பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால், பெரிய மனதுக் காரர்கள். வட்டார வழக்கில் எழுதுவது எப்படி என்பதற்கான அகராதி கி.ரா ஆவார். இன்று பலர் வட்டார வழக்கு என்று எழுதுகின்றனர். ஆனால், அவையெல்லாம் கி.ரா.வின் வட்டார வழக்கு எழுத்துக்கு முன்னால் மிகச் சாதாரணமாக இருப்பதைப் படிக்கும்போது உணர்கின்றோம். அவரின் முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்‘ நாவலைப் படித்து முடித்தவுடன் அந்தக் கதைக்குள் இருந்து நாம் விடுபட நாள்கள் ஆகும். அப்படித்தான் அவரின் ஒவ்வொரு நாவலும் சிறுகதையும். 

இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் மூட நம்பிக்கையைப் பரப்புவதிலேயே குறியாய் இருக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரே கூட, பி.ஜே.பி.யைச் சார்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர், மாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா சரியாகிவிடும் என்றும், குஜராத்தில் மாட்டுச் சாணியில் குளியல் எடுத்தால் கரோனா சரியாகி விடும் என்றும் பொய்கள் பரப்பப் படுவதைப் பார்க்கின்றோம். மனிதர்களுக்கு ஏற்படும் கரோனாவைப் போல மாடுகளுக்கு ஏற்படும் தொற்றான கணை நோய் பற்றியும், தங்களுடைய கடவுள் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட்டு மாடுகளுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடும் மருத்துவர்களை, மனிதர்களைக் கேலி பேசும் அயிரக்கா, தொட்டணன் பாத்திரப் படைப்பும், எப்படி பாதிக்கப்படும் மக்களிடத்தில் மூட நம்பிக்கையைச் சிலர் பரப்புகிறார்கள் என்பதனைக் கதையாகச் சொல்லும் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கி.ரா.வின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இந்தக் கரோனா காலத்தில், கரோனா பாதித்த தாயை வீட்டிற்குள் விடமாட்டேன் என்று சொல்லி, மகளும் மருமகனும் கதவைப் பூட்டிக்கொண்ட செய்தி சில நாள்களுக்கு முன் செய்தித்தாளில் வந்தது. அந்த நிலையில் மனிதர்கள், தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்குக்கூட எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள், ‘குடும்பத்தில் ஒரு நபரா’க நினைக்கிறார்கள் என்பதனை விவரிக்கும் கதை ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கதை.

தந்தை பெரியார், “தாகம் எடுப்பது போல, பசிப்பது போல, பாலியலும் ஓர் உணர்வு’’ என்றார். ஒரு உணவு விடுதியில் சென்று சாப்பிடுவது போல அது தனிப்பட்டவரின் விருப்பம் என்றார். கி.ரா. தனது  கதைகளில் பாலியல் என்பதும் ஒரு பசி என்பதனை மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் விரசமில்லாமல் மிக நளினமாகவும் எடுத்துச் சொன்னவர். அவரின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும் ‘ என்னும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு இதனை விரிவாகப் பேசும்.


திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல “தமிழகத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் என்னும் கிராமத்தில் பிறந்து, அம்மக்களின் பண்பாட்டை, வாழ்வியலைக் கதைகளாக்கி உலகெங்கும் உலவ விட்டவர். கரிசல் எழுத்துகளுக்கென்று களம் அமைத்தவர். தமிழின் மிகச் சிறந்த படைப்பாளியாகவும், படைப்பாளிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பெரும் பங்காற்றியவராகவும் அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டம், இடதுசாரி இயக்கம் என்று அரசியல் பாதைகளிலும் பயணம் செய்தவர். இறுதி வரைக்கும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியமாகத் திகழ்ந்தவர்” என்று சிறப்பாகக் குறிப்பிட்டு, அந்த ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம் தந்தை பெரியார் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதையும் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிக்கையில் குறிப்பிடுகின்றார். “திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீதான சிலரின் வன்மைப் பார்வைக்கு பார்ப்பனிய சிந்தனையே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காதவர். தந்தை பெரியாரின் மனித நேயத்தையும் சமூகப் பணியையும் போற்றி, ‘புதிய வழிகாட்டி’ என்று விளித்து மதித்தவர். மனதில் பட்டதை மறைக்கும் தன்மையின்றி உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்” என்று கி.ரா. அவர்களைப் பற்றி புகைப்படம் போல விவரித்திருக்கின்றார்.

சில நாள்களுக்கு முன்னால், கோ.ஒளிவண்ணன் அவர்கள் நடத்திய ‘வாருங்கள் படிப்போம்‘ நிகழ்வில் கலந்து கொண்டு, கி.ரா. அவர்கள் கருத்துகளைத் தெரிவித்தார். அவருடைய ‘கிடை’ குறு நாவல், அவருடைய 96ஆம் வயதில் எழுதப்பட்டது. அதற்குப் பின் அவருடைய ‘மிச்சமிருக்கும் கதைகள்’ நூல் வெளிவந்தது. இப்படி இறுதிவரை இலக்கியம் குறித்து பேசிக் கொண்டும், இலக்கியப் படைப்புகளை அளித்துக் கொண்டும் இருந்தவர் கி.ரா. அவர்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனக்கு பேராசிரியர் பதவி கிடைத்தபோது, வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் துணைவேந்தர் நேரிடையாக வந்து கேட்டுக் கொண்ட பின்பு ஏற்றுக்கொண்டு, நாட்டுப்புற இலக்கியம் குறித்து பல மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டினார்.

ஓர் எழுத்தாளரைப் போற்றுவது என்பது, அவரது எழுத்துகளை வாசிப்பது. ஓர் எழுத்தாளரை நினைவில் கொள்வது என்பது அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது படித்து மனதில் இருத்துவது. அந்த வகையில் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கும், தன்னுடைய எழுத்தால் ஒரு நூற்றாண்டின் சாட்சியமாகத் திகழ்ந்து மறைந்திருக்கும் கி.ரா. அவர்களின் படைப்புகளைப் படிப்பதோடு, மற்றவர்களுக்கும் அதனை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆண்டாகவும் இந்த ஆண்டை அமைத்துக் கொள்வோம்.


நன்றி உண்மை 01-06-2021

Tuesday, 18 May 2021

எங்கள் கி.ரா.வே....

 எத்தனை 

எழுத்து விளைச்சல்கள்...

எத்தனை 

எழுத்து உழவர்கள்....

கரிசல் காட்டு மண்ணில்...


கடலை மிட்டாய்க்குப் 

பெயர் பெற்ற

கோவில்பட்டி வட்டாரம்

கதை சொல்லலுக்கும்

பேர் பெற்றது உன்னால் அன்றோ....

உனது பரம்பரையாய்

தொடர்ந்திட்ட கரிசல் மண்

கதை சொல்லிகளால் அன்றோ...


முன்னெத்தி ஏராய்

முதல் எழுத்து உழுவராய்

ஆழ உழுது விளைவிக்கும்

அற்புத உழவன் போல

உள்மனது உணர்வுகளை

எழுத்து உழவால்

எடுத்து இயம்பிய

இடைச்செவல் 

கிராமத்துப் பெருசே....

.

சிக்மண்ட் பிராய்டைப்

பின்னர்தான் அறிந்தேன்...

முதலில் உன் கதைகள்தான்

பாலியல் உணர்வுகளும்

பசிதான் என உணர்த்தின...


..மழைக்குத்தான் நான்

பள்ளிக்குள் ஒதுங்கினேன்

ஆனாலும் நான் 

மழையைப் பார்த்து

அதிசயத்து நின்றதால்

பள்ளிக்கூடத்தைப்  பார்க்கவில்லை என்றாய்


நீ பள்ளிக்கூடத்தைப் 

பார்க்கவில்லை என்றால் என்ன?

பல்கலைக்கழகங்கள் எல்லாம்

தங்கள் பாடங்களின் வழியே

உன்னைப் பார்த்தது...


ஏழாம் வகுப்பு மட்டுமே

படித்த உனக்கு

உனது படைப்பு 

பேராசிரியர் பதவியை

வாங்கித்தந்தது....

எத்தனை படைப்பாளிக்கு 

கிடைத்தது இந்த அங்கீகாரம்?


இரண்டு மாநிலங்கள் தரும்

அரசு மரியாதையோடு

இறுதி மரியாதை 

நிகழவிருக்கும் படைப்பாளியே!

எங்கள் கி.ரா.வே....

இன்னும் ஓர் ஆண்டில்

உன்னோடு உனது

நூற்றாண்டைக் கொண்டாடுவோம்

என நினைத்தோம்.....

நினைவுகளோடு 

கொண்டாடிக்கொள் என

நீத்தாராய் ஆகிக்கொண்டாய்....


சரி...உன் நினைவுகள்

எல்லாம் உனது

படைப்புகள்தானே!

உடல் நீங்கும்...

நிலைத்து நிற்கும்

உணர்வாய் உனது 

படைப்புகள் நிற்கும் என்றும்....


                         வா.நேரு,

                         தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,18.05.2021.

.


Monday, 17 May 2021

பயமுறுத்தப் பழகுவோம்...

கரோனாவின் 

முதல் அலை முழுக்க

முகக்கவசம் அணிய

மறுத்தவர் அவர்....


இயல்பாக இருக்கும்

எதிர்ப்புச்சக்தி

எல்லா வைரசையும்

அழித்துவிடும் விடுங்கள்

என்றார்......

 நான் அன்று

முகக்கவசம் அணியச்

சொன்ன போது....


இரட்டை முகக்கவசம்

அணிந்திருந்தார் இப்போது...

ஏன் இந்த மாற்றம் என்றேன்...

சுற்றி நிகழும் இறப்புகளும்

இடுகாட்டில் வரிசையில்

காத்திருந்து எரிக்க 

நேரிடும் கொடுமையும்

பயமுறுத்துகிறது....என்றார்...


அளவு கடந்த அலட்சியமும்

அதே நேரத்தில் 

அளவு கடந்த பயமும் ஒன்றுதான்...

இரண்டும் எதிர்

விளைவுகளைத்தான் தரும்....


நம்மைச்சுற்றிப் பலர்...

நண்பர்கள் தோழர்கள்

எனப்பலர் சாகின்றனர்

உண்மைதான்...மறுக்கவில்லை...

நம் இதயத்தைப் பிழியும் 

இறப்புகள் பல

நமது துன்பத்தைக் கூட்டுகின்றன,,,,

ஆனாலும் இதனை நினைத்து

அஞ்சி நடுங்கினால்

ஆபத்து நீங்காது...கூடும்..


அறிகுறிகள் தென்பட்டும்

தெரிவிக்கப் பயந்து

திணறிப் பயந்து ஒளிந்து

பின்பு முற்றியபின்பு

முறையிடும் மனிதர்கள்

பலர் மாட்டிக்கொள்கின்றனர்

கொடும் கரானாவிற்கு...


அச்சமின்றி இருப்பதும்

தடூப்பூசி போடுவதும்

கரோனா அறிகுறிகள் 

ஏதும் தென்பட்டால்

உடனடி மருத்துவமும்தான்

இன்றைய தேவை....

அச்சம் அல்ல,,,,

பயத்தை நாம் 

பயமுறுத்தப் பழகுவோம்...


                     வா.நேரு, 17.05.2021    
Sunday, 16 May 2021

கல்வி நிலை : கல்வியும் மாநிலங்களும்.....

 உண்மை -இணையதளத்திற்குள் சென்று வண்ணப்படங்களுடன் படிக்க ;;;இணைப்பை கிளிக் செய்க

http://www.unmaionline.com/index.php/6059-kalviyum-manilangalum.html


திராவிடம் வெல்லும்’ என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது தலைமையில் பதவி ஏற்றிருக்கும் அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் கல்வி. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே” என்னும் நயவஞ்சகத்தால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு தடுக்கப்பட்ட கல்வியை வழங்குவதற்காகத் திராவிட இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. ஒரு நூற்றாண்டு காலப் போராட்டம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்காக திராவிட இயக்கம் பட்ட பாட்டை, எடுத்துக்கொண்ட முயற்சியை, இடையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்படுத்தியிருக்கும் தடைகளை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன் வயதில் இருக்கும் மற்ற இளைஞர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பாக வெளியிடப்படும் புத்தகங்கள் காலத்தின் தேவையாகவும், கலங்கரை வெளிச்சத்தை மக்களுக்குக் கொடுப்பதாகவும் அமைகின்றன. கல்வியில் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, நீட் தேர்வினால் அனிதா போன்றவர்களின் இழப்பு என்று கடந்த சில ஆண்டுகளாக நாம் படும் துன்பங்கள் பல. தந்தை பெரியாரும் இன்றைய திராவிடர் கழகத்தலைவரும் ஒரு பிரச்சனையின் ஆணிவேரை ஆராய்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்பவர்கள், செய்பவர்கள். அந்த வகையில் கல்வியில் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கான காரணம், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, வஞ்சகமாக பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதுதான். அதனை 2011இல் காங்கிரசு மத்திய அரசாக இருந்த காலத்திலேயே சுட்டிக்காட்டி, அதற்காக ஒரு மாநாட்டினை (25.09.2011) நடத்தி, என்ன செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த மாநாட்டில் உரையாற்றிய சிறப்பு அழைப்பாளர்களின் உரைகளை யெல்லாம் தொகுத்து திராவிடர் கழகம் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ என்பதாகும்

100 ஆண்டுகளுக்கு முன், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நமது கல்வி நிலையைப் பற்றிய புள்ளி விவரங்களை நமது இளைஞர்கள் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைக்கும் வட இந்திய மாநிலங்கள் கல்வியில் பின் தங்கியிருக்க, அன்று மதராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பகுதிகள் கல்வியில் சிறந்து இருப்பதற்கான காரணம் என்ன என்பதனை உணர வேண்டும். நீதிக்கட்சி ஆட்சியில், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க உணர்வால் எழுந்த மாற்றங்களை உள்வாங்க வேண்டும். கதர் சட்டைக்குள் ஒரு கருப்புச்சட்டை என்று ஆனந்த விகடனால் அடையாளம் காட்டப்பட்ட பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், அவரைத் தொடர்ந்த திராவிட ஆட்சிகளில் கல்விக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், திட்டங்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வட இந்திய மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்ததற்கும், இன்று உலகம் முழுக்க மென்பொருள் போன்ற துறைகளில் பல தமிழர்கள் சாதனை புரிவதற்கும் அடிப்படை கல்வியே ஆகும். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’  எனத் தேடித்தேடிப் படிப்பதற்கான வசதிகளை, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம் ஆகும்.


ஆனால் இன்றைக்கு இந்திய அரசின் ‘புதிய கல்விக் கொள்கை’ போன்ற கொள்கைகளால் மிகப் பெரும் ஆபத்தினை எதிர் நோக்கியிருக்கிறோம். கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தி போல எந்த நேரமும் நம்மைப் போன்றோர் பெற்ற கல்வி வாய்ப்பினை நமது அடுத்த, அதற்கடுத்த தலைமுறை பெறமுடியுமா? என்னும் பெரும் கேள்விக்குறி நம்முன் நிற்கிறது. 3ஆவது வகுப்பில் தேர்வு, 5ஆம் வகுப்பில் தேர்வு, 8ஆம் வகுப்பில் தேர்வு, 10,11,12ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என மத்திய ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். உலகமெங்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வில் தோல்வியென்று சொல்லி, தேர்ச்சி பெறாமல் ஆக்குவது குற்றம் என்னும் கொள்கை வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் அதற்கு நேர் எதிரான மனப்பான்மை கட்டி அமைக்கப்படுகிறது. வடிகட்டி, வடிகட்டி மாணவர்களை, மாணவிகளைக் கல்வி பெறுவதில் இருந்து தடுத்து அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இத்தனை தேர்வுகளுக்கான அடித்தளம் என்பதாகும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், கொசு உற்பத்தியாகும் இடத்தை அழிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும் என்பது போல, பார்ப்பனியத்தை உள்வாங்கிய மத்திய அரசின் இத்தகைய போக்குகளை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் ஆழ்ந்து படியுங்கள் என்று தலைப்பிட்டு அய்யா ஆசிரியர் அவர்கள் “மாநில அதிகாரங்களைப் பறிப்பது என்பது அரசியல் சட்ட வரைவுக் குழுவினர்களிடமே - அப்போதே மேலோங்கிய எண்ணமாக இருந்திருக்கிறது’’ என்பதனை விரிவாக விளக்கியுள்ளார். “மருத்துவக் கல்லூரிகள் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள் நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்தக் கரோனா காலத்தில் உத்தரப் பிரதேசத்திலும் ஏன் தலைநகர் தில்லியிலும் கூட மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதனை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுகாதாரத்திற்காக 17 சதவிகிதம் தனது பட்ஜெட்டில் அமெரிக்கா ஒதுக்கியிருக்க, இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பதோ வெறும் 3 சதவிகிதம். அதிலும் கரோனா சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே வைத்திருந்த நடுவண் அரசு இப்போது, சுகாதாரம்  மாநிலப் பட்டியலில் வருகிறது என்று கூறுவதும், தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவுவதும் எவ்வளவு பெரிய கொடுமை. சுகாதாரத்தை அந்தந்த மாநிலங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்லும் நடுவண் அரசு கல்வியை அப்படிச் சொல்ல மறுப்பது ஏன்? எனும் கேள்வி எழுகிறது.

இன்றைய பி.ஜே.பி. அரசு, 2014இல் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அவர்களின் தத்துவம் அப்படி. தத்துவத்தில் கோளாறு. ஆனால், கரோனா தொற்று பரவ ஆரம்பித்த சென்ற வருடத்தில், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கால்நடையாகச் சென்று உழைக்கும் தோழர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் என்றே அழைக்கப் பட்டார்கள். ஒரு நாட்டிலிருந்து  இன்னொரு நாட்டிற்கு செல்பவர்கள்தாம் புலம் பெயர்ந்தோர் என்று அழைக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வேறுபாடு மாநிலத்திற்கு மாநிலம் காணப்படுகிறது. அய்யா ஆசிரியர் அவர்கள், “டில்லியில் உட்கார்ந்துகொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?” என்ற ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளார். பொதுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், மத்திய அரசுப் பட்டியல்களில் என்னென்ன இருக்கின்றன என்பதையும், எவையெவை மாநில அரசுப் பட்டியலில் இருந்தவை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பதையும் அய்யா ஆசிரியர் அவர்கள் விரிவாக ஓர் ஆவணமாக இந்த நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். நமது கழகப் பேச்சாளர்கள் ஆவணமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ எனும் நூலில் அய்ந்து ஆளுமைகளின் உரைகளின் தொகுப்பு இருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள், தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், மேனாள் துணைவேந்தர் முனைவர் அ.இராமசாமி அவர்கள், தமிழ்நாடு திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் அவர்கள்  என்னும் இந்த அய்ந்து ஆளுமைகளின் உரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ என்பதற்கான அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைத்து, இந்திய ஒன்றிய அரசிடம் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

புள்ளி விவரப் பட்டியல் அடிப்படையில் பெண் கல்வி என்று எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதன்மை மாநிலங்களாக கேரளா, தமிழ்நாடு வருகிறது. மிக மோசமாக பெண் கல்வி உள்ள மாநிலமாக பிகார் உள்ளது. அதைப்போல ஆண்கள் கல்வி மிக மோசமாக உள்ள மாநிலமாக இராஜஸ்தான் உள்ளது. வட மாநிலங்கள் கல்வியில் முன்னேறி வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பெண்களுக்கான கல்வி என்பது மிக மோசமாக வட மாநிலங்களில் உள்ள நிலைமையில் அவர்களை முன்னேற்றுவதற்குப் பதிலாக, கல்வியில் நல்ல நிலைமையில் உள்ள தமிழ் நாட்டினைப் போன்ற மாநிலங்களைப் பின்னே இழுக்கும் வேலையை இந்திய ஒன்றிய அரசு செய்கிறது. இதனைத் தடுப்பதற்கு  மாநிலப் பட்டியலுக்கு கல்வி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்விதான் முன்னேறுவதற்கான ஏணிப்படி என்பதனை திராவிட இயக்கம் உணர்ந்து செயல்படுத்தியது. ஜாதி ஒழிப்பிற்கான முதன்மை வழியாக சமூக நீதியை நடைமுறைப்படுத்தியது. கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதை அடிப்படையாக வைத்து சமூக நீதியையும், அனைவருக்கும் தரமான கல்வி என்பதையும் குழிதோண்டிப் புதைக்கும் வேலையில், ‘புதிய கல்விக்கொள்கை’ என்பதனை இந்திய ஒன்றிய அரசு எடுத்திருக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தி.மு.கழகத்தின் கொள்கையாகும். ஆகஸ்ட் 1, 2020இல் இன்றைய முதல்வர், தி.மு.க.வின் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்ற  மாவட்டச் செயலர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏ.க்கள், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இன்றைக்கு தமிழ்நாட்டின் தேர்தல் முடிவும், மேற்கு வங்காளம், கேரளா தேர்தல் முடிவும் இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டும் தலைவராக உயர்ந்து நிற்கின்றார். அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து ‘கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர ‘முயற்சிகள் எடுப்பார் என்னும் நம்பிக்கை நமக்கு இருக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இந்தியாவின் பல மாநிலத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அழைக்கப்பட்டு, 2011இல் நிகழ்த்தியது போலவே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?” என்னும் மாநாடு ஆங்கிலத்தில் நடத்தப்படலாம். அதன் மூலம்  “திராவிடம் வெல்லும்! அதனை எதிர்காலமும் சொல்லும்!’’ என்பதனை உணரலாம். 


நன்றி :உண்மை மே-1-15,2021


Friday, 14 May 2021

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் பசி ( நாவல்)....ஆத்மார்த்தி

 அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் பசி ( நாவல்)

 நூல் ஆசிரியர்              : ஆத்மார்த்தி

வெளியீடு                   :  தமிழினி ,சென்னை-51

முதல் பதிப்பு               : டிசம்பர் 2020

மொத்த பக்கங்கள்          :  184 , விலை ரூ 180            


இந்த மிட்டாய்பசி,ஒருவனின்  கால் நூற்றாண்டுக் கால  வாழ்க்கையைச்சொல்லும் நாவல். நாவல் என்னும் வடிவத்தின் சிறப்பே கால் நூற்றாண்டு,அரை நூற்றாண்டுக் கதைகளைச்சொல்ல முடியும் என்பதுதான்.அந்த வகையில் இந்தக் கதையின் நாயகன் ஆனந்திற்கு நடக்கும்  நிகழ்வுகளின் விவரிப்புத்தான் இந்த நாவல். துன்பங்கள்  எப்படி ஏற்படுகிறது,எதனால் ஏற்படுகிறது என்பது அவனுக்கே புரியாத நிலையில் நடப்பதும்,அதனால் அவன் நலிவதும் மீள்வதுமான வாழ்க்கையின் கண்ணாமூச்சி விளையாட்டுத்தான் இந்த நாவல்.இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை அழகாக நாவலாக ஆக்கி நம் கையில் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஆத்மார்த்தி..

உடலால்,சொற்களால் நிகழும் வன்முறைகளுக்கு முன்னால் ,அந்த வன்முறை நிகழ்த்துபவனின் மனதுக்குள் நிகழ்கிறது.உடனடி கோபத்தினால் விளையும் வன்முறை அந்தக் கணத்தில் நிகழ்ந்துவிடும். கோபமும் குறைந்துவிடும். ஆனால் மனதுக்குள் ஏற்படும் வன்மம்,காலம்,இடத்திற்காகக் காத்திருக்கிறது,மனதுக்குள் மீண்டும் மீண்டும் நிகழப்போகும் வன்முறையை ஒத்திகை பார்த்துக்கொண்டே இருக்கிறது.

மதுரை மூன்று மாவடியில் வசிக்கும்,பெரிய ஆதரவு எதுவும் இல்லாத,அப்புராணியாய் வளரும் செல்லம்மா,மாரிஸ் என்பவனால் ஈர்க்கப்படுகிறாள்.செல்லம்மாவின் தோழி ஜெகா,செல்லம்மா-மாரீஸ் திருமணம் நடைபெறக் காரணமாக இருக்கிறாள். இவன் தான் இனி நம் உலகம் என மாரீஸிடம் முழுமையாக செல்லம்மா தன்னை ஒப்படைக்கிறாள்.ஆனால் மாரீஸ் அப்படி இல்லை,அவனுக்கு ஜெகாவிடம் தொடர்பு இருக்கிறது என்பதனை அறிந்தபோது,ஏமாற்றமடைந்த செல்லம்மாள் தன் கணவன் மாரீஸ் மேல் வன்மம் கொள்கிறாள். மனம் முழுவதும் படர்ந்திருக்கும் வன்மத்தோடு மாரீஸோடு குடும்பம் நட்த்துகிறாள். அழகான ஆண்குழந்தை,கணவனைப் போலவே பிறக்கிறது. கணவனிடம் இருக்கும் வன்மம்  ,அவனைப் போலவே இருக்கும் மகன் ஆனந்திடமும் பரவுகிறது.
கணவனை இழந்த மாரீஸின் அக்கா திலகா, செல்லம்மா குடும்பத்தோடு இருக்கிறாள்.செல்லம்மா கவனிக்காத அவளது குழந்தை ஆனந்தை ,திலகா கவனிக்கிறாள்.செல்லம்மாவின் வன்மம் அறியாத திலகா,ஏன் தன் தம்பி மனைவி ,அவளது குழந்தையின் மேல் அன்பு செலுத்த மறுக்கிறாள் என யோசிக்கிறாள்.ஒரு விபத்தில் செல்லம்மாவின் கணவன்,மாரீஸ் இறந்து விடுகின்றான்.கணவன் இறந்தபின்பும்,அவன் மேல் இருந்த வன்மம்  மகனின் மேல் செலுத்தும்  வன்மமாகத் தொடர்கிறது.

சிறுவன் ஆனந்திற்கு ,தனது அம்மா ஏன் தன் மீது அன்பு செலுத்த மறுக்கிறாள் என்பது புரியவில்லை. அன்புக்கு ஏங்குகிறான்.புதூரில் இருக்கும் அலோசியஸ் பள்ளிக்குச்செல்கிறான்.. தன் நண்பன் சபரிக்காக,இன்னொரு மாணவன் மகேசை ஆனந்த் அடிக்கிறான். மனதிற்குள் வன்மம் வைத்து,இன்னும் இரண்டு மூன்று மாணவர்களை வைத்து ஆனந்தை வம்புக்கு இழுத்து,ஆசிரியரிடம் மாட்டவைக்கிறான் மகேசு. பள்ளிக்கு வரும் செல்லம்மா,தன் மகனைத்திட்டுகிறாள்.டி.சி.கொடுத்துவிடுவேன் எனத் தலைமை ஆசிரியர் மிரட்டுவதற்காகச்சொல்ல, செல்லம்மா டி.சி.யைக் கொடுத்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்கிறாள்.” இந்த அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்? எங்கே என்ன நடந்தாலும் தன்னை இகழ்ந்தபடி இப்படியா இருப்பாள்?” என்று ஆனந்த பொருமுகிறான்.அம்மாவை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று ஆகிறது.

மகன் ஆனந்தை ,மதுரையில் இருக்கும் தூய வளனார் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்துவிடுகிறாள் செல்லம்மா.பிரமாண்டமாக இருக்கும் புதிய பள்ளி,ஆனந்திற்குப் பிடிக்கவில்லை. அங்கு  இருக்கும் சூழலும்,ஆசிரியர்களும் ஆனந்திற்குப் பிடிக்கவில்லை.தன்னை இந்தப்பள்ளியில் சேர்த்துவிட்ட,தனது அம்மாவின் மீது வன்மம் கொள்கிறான் ஆனந்த்.  அம்மாவுக்கும் பிள்ளைக்குமாக ஏற்படும் இந்த வன்மத்தை இப்படிச்சொல்கிறார் நாவல் ஆசிரியர்.

.’எல்லாவற்றின் முன்பாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட உபவழியாக வன்மம் இருந்துகொண்டே இருக்கிறது.பசியும் தாகமும் சோர்வும் தளர்ச்சியுமாக வீழ்ந்து போய்ப் பாதியில் மடிந்து முடிந்துபோயிருக்கவேண்டிய பல பிரயாணங்களைக் கடைசிவரைக்கும் உயிர்ப்புடன் வழி கூட்டிச்செல்வதன் பெயர்தான் வன்மம்.ஓயாத மேஸ்திரியாகத் தன் கைச்சவுக்கைக் கீழிடாமல் முன்னால் செல்வதைக் கடைசிவரைக்கும் கருணையின்றிச்செலுத்துவது வன்மத்தின் வெளிப்பாடு …சின்ன்ஞ்சிறிய வயதில் எந்த முகாந்திரமும் இன்றி அங்கே ஒரு பகை உருவானது.ஒரு புறம் பெற்றவள்.இன்னொரு பக்கம் ஒரே மகன்….தாய் மகன் என்பதை மறந்து அங்கே ஒரு ஆட்டம் நிகழத் தொடங்கியிருந்தது”.(பக்கம் 46)

தாயின் மீது ஏற்பட்ட வன்மத்தால்,பிடிக்காத பள்ளிக்கூடத்தை மிகவும் பிடித்ததாகத் தன் தாயிடம் கூறுகின்றான்.அந்தப் பள்ளியில் வகுப்பு லீடராக இருக்கும் ராஜீ என்பவன் ஆனந்தின் மீது வன்மம் கொள்கின்றான். அவனை அஞ்சாமல் எதிர்க்கும் ஆனந்த் சண்டைக்கு அழைத்து அவனது ஆணவத்தைக் கொல்கிறான். ,அவர்களின் ஒத்தைக்கு ஒத்தை சண்டையைப் பற்றி விவரிக்கும் அத்தியாயம் 10 எனக்கு மிகப் பிடித்திருந்த்து.மிகவும் இரசித்து வாசித்த பகுதி இது.ஆனந்தின் அம்மா செல்லம்மா,ஒரு கட்ட்த்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ,மும்பைக்கு சென்று விடுகின்றாள்.அவள் ஆனந்திற்கு என்று பணத்தை வங்கியில் போட்டு விட்டுச்செல்கின்றாள்.இப்போது அத்தை திலகா மட்டுமே ஒரே ஆதரவு ஆனந்திற்கு.

இந்த மாணவன் இப்படிப்பட்டவன்,இவன் தவறு செய்யக்கூடியவன் என்று முன் முடிவு எடுக்கும் ஆசிரியர்களால் நிரம்பியிருக்கிறது ஆனந்த் படிக்கும் பள்ளி.ஆனந்த அவதியுறுகிறான்.ஒரு கட்ட்த்தில் தேறி, படிப்பது என்று முடிவெடுத்து படிக்க ஆரம்பிக்கிறான்.இவனது ஆசிரியர் அருள் ஜெபத்துரை. நல்லவர். நன்றாகப் பாடம் நடத்துபவர்.அவர் மீது ராம்பிரபு என்னும் பணக்கார வீட்டு மாணவன் வன்மம் கொள்கிறான்.ஆசிரியரைச்செங்கலால் மறைந்திருந்து ராம்பிரபு தாக்க முனைகிறான்.செங்கல் தவறி,ஆசிரியருக்குப் பின்னால் சென்ற ராஜீ மீது பட்டு,மண்டை உடைந்து ராஜீ விழுகின்றான்.ஆசிரியர் மேலே பார்க்கும் நேரம் ராம்பிரபு மறைந்துகொள்ள,ஆனந்த் கண்ணில் படுகின்றான். அருள்ஜெபத்துரை ஆனந்துதான் எறிந்திருக்கிறான் என்று சொல்ல,வாட்ஸ்மேன் சாட்சி சொல்ல,உண்மையான குற்றவாளிக்குப் பதிலாக கொலை செய்த்தாக ஆன்ந்த சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகின்றான்.உண்மைக்குற்றவாளியான ராம்பிரபு மீது ஆனந்திற்கு வன்மம் படர்கிறது. சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் இருக்கும் தயா,ராம்பிரபுவின் கழுத்தை அறுக்கவேண்டும் ,அதற்கு நான் துணை நிற்கிறேன் என்று சொல்கின்றான்.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து விடுதலையாகும் ஆனந்த்,ராம்பிரபுவை வஞ்சம் தீர்க்க வழி தேடி அலைகின்றான். உதவுவதாகச்சொன்ன தயா,வெறி நாய் கடித்து  பொசுக்கென்று இறந்து போய் விடுகின்றான்.திக்கற்று நிற்கும் ஆனந்த் ,கால் போன போக்கில் அலைகின்றான்.. கேரளா,சென்னை,மும்பை ,டில்லி என்று ஒவ்வொரு இடமாகச்சென்று ஆனந்த வேலை பார்ப்பது ,அங்கு அவனின் அனுபவங்கள் என இந்த நாவல் விரிகிறது.  ஒரு 184  பக்கங்களுக்குள் நூல் ஆசிரியர் காட்டும் வெவ்வேறு களங்களும்,வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றிய விவரிப்புகளும் இப்படியான மனிதர்களுக்குள்தான் இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனை உணர்த்துகிறது.


மும்பையில் இருக்கும்போது தன் தாய் செல்லம்மாவைப் பார்க்,கின்றான்.அவள் இவனைப் பார்க்கவில்லை. அவள் போக்கில் அவள் வாழட்டும் என்று ஆனந்த் விட்டுவிடுகின்றான்.அம்மாவின் மீதான வன்ம்ம் இப்போது இல்லை,பக்குவப்பட்டிருக்கிறான்.டில்லியில் ஒரு  நட்சத்திர ஓட்டலில் 5 வருடங்களாக ஆனந்த் வேலை பார்க்கிறான்.அவனுக்கு கேரளாவும்,மும்பையும்,டில்லியும் நிறையக் கற்றுக்கொடுக்கிறது.டில்லியில் வேலை பார்க்கும் இடத்தில் நம்பிக்கைக்கு உரியவனாகவும்,மதிப்பிற்குரியவனாகவும் மாறியிருக்கிறான் ஆனந்த். அந்த நேரத்தில் இவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்வதற்குக் காரணமாக இருந்த ராம்பிரபு ,ஆனந்த் வேலை செய்யும் ஓட்டலில் வந்து தங்குகிறான்.’ அவனது கழுத்தை அறு ‘என்று ஆனந்துக்கு தயாவின் குரல் உள்ளத்திற்குள் கேட்கிறது. ஆனாலும் ஆனந்த் பேசாமல் இருக்கிறான். ராம்பிரபு ஆன்ந்திடம் வந்து ‘என்னை மன்னித்து விடு ‘ என்று கேட்கிறான்.அவனிடம் ஆனந்த் ‘இந்தா பார் ராம், நான் உன்னை மறக்கலை.நீ செஞ்சதெதுவுமே மன்னிக்கவே முடியாதுன்றதும் உனக்குத் தெரியும் ….” என்று சொல்லும் கடைசிப்பக்கமும் ,அதற்கு முந்தைய பக்கமும் இந்த நாவலின் மிக முக்கியமான பக்கங்கள்.

தான் அறிந்த மதுரையை மிக விரிவாகவே இந்த நாவலில் ஆத்மார்த்தி கொடுத்திருக்கிறார்.மூன்று மாவடி,புதூர்,புதூர் அலோசியஸ் ஸ்கூல்,தூய வளனார் மேல் நிலைப்பள்ளி என அவை பற்றிய விவரிப்புகளோடு கதையும் நகர்ந்து செல்வது படிக்கத்தூண்டுவதோடு மதுரையில் வசிக்கும் எனக்கு மிக  நெருக்கமாகவும்  தோன்றுகிறது.சென்னை,மும்பை,டில்லி,கேரளா பற்றிய விவரிப்புகளும் இப்படியே  இருக்கக்கூடும். அந்த ஊர்களில் வசிப்பவர்கள் இன்னும் கூடுதலாகச்சொல்ல முடியும்.

இந்த நாவலின் சிறப்பாக நான் கருதுவது,நாவலுக்கு இடையே சொல்லப்படும் கருத்துகள் என்பவைதான். பயிர்களுக்கு இடையே விதைக்கப்படும் ஊடுபயிர் போல, நாவலின் கதை ஓட்டத்திற்கு மட்டுமல்ல,படிப்பவனின் சிந்தனைக்கும் கூட இந்தக் கருத்துகள் வளம் சேர்க்கின்றன.  ‘சின்னதொரு பார்வை பல்லாயிரம் உளிகளுக்குச்சமம்…வெற்றி  தோல்வியற்ற சம நிலை எந்த இடத்திலும் நன்மை பயக்காது.சொல்லப்போனால் தோல்வி கூட மனதை  ஆற்றிவிடும்.வெற்றி தரவேண்டிய சமாதானத்தை ஒரு போதும் சம நிலை அளிக்காது.மாறாக இதற்கு நீ தோற்றே இருக்கலாம் என்றுதான் கூக்குரலிடும்.சம நிலை என்பது இருபுறமும் தோல்வி என்றால்கூடப் பொருந்தும்’ என்று சொல்லிவிட்டு ‘செல்லம்மா மற்றும் ஒரு பெண்ணாகத் தன் மனத்தைக் கொன்றாள்.அவளுக்கென்று இருந்த குறிப்புகளற்ற கனவுப்பாடல் ஒன்றின் எல்லாச்சொற்களையும் கண நேரத்தில் கிழித்தெறிந்தாள்…’(பக்கம் 17) என்று நாவல் ஆசிரியர் சொல்லிச்செல்வது கவித்துவமாகவும்,தத்துவமாகவும்,கதையை நகர்த்தும் உத்தியாகவும் பயன்படுகிறது. இப்படியான உத்திதான் இந்த நாவல் முழுக்கக் காணப்படுகிறது. நிறையத் திருப்பங்களோடு நல்ல வாசிப்பு அனுபவம் தந்த நாவல் இது. படித்துப்பாருங்கள்

Wednesday, 12 May 2021

மாட்டுக்கும் கீழாய் ஆக்காதீர்

காற்றில் நஞ்சினை

உமிழும் நாகமாய்

நாட்டில் கரோனாத்

தொற்று நடமாட்டம்...


ஒன்றாம் அலை 

இரண்டாம் அலையென

அலை அலையாய்

மனித உயிர்களை

அள்ளிச்செல்கிறது.கரோனா


திகைத்து நிற்கிறது தேசம்...

அறிவியல் வழியாய்

தீர்வுகளை முன்வைக்கும்

அறிஞர்களின் சொல்படி 

நடக்க நாடு முனைகிறது.....


ஆனால் ..என்ன சொல்ல?

விஞ்ஞானிகளுக்கு

எதிராக அஞ்ஞானிகள்

அணிவகுத்து நிற்கிறார்கள்....


அரசியலில் நஞ்சினைக்

கலப்பது போல

மதத்தினைக் கலந்தவர்கள்...

அறிவியல் வழிமுறைக்கு

எதிராகவும் மதத்தினைக்

கலக்குகிறார்கள்....


மாட்டுச்சாணத்தை 

உடலில் பூசு....

மாட்டுக் கோமியத்தை

மடக்கு மடக்கு என்று குடி....

பூசிய மாட்டுச்சாணத்தை நீக்க

பசுவின் பாலை ஊத்திக்குளி...

கரோனாவை விரட்டிட

இது குஜராத் மாடல்...பார்ப்பனர்கள் வேதம் ஓத

பதினோரு லிட்டர் பாலை

சிவலிங்கத்தின்மேல் ஊற்றி

அருகம்புல்லை அரைத்துஅதன்

ஐந்து லிட்டர் நீரையும் ஊற்றி

சிவனுக்குப் பூசை செய்து பின்

மாடுகளுக்கு உணவு அளித்து...

கரோனாவை விரட்டிட

இது உ.பி.,மாடல்


உ.பி.மாடலைச்செய்தவர் 

மடத்து அதிபதி என்றால்

அது அவர் விருப்பம் ..

மூட நம்பிக்கை நிகழ்வு

எனச்சுட்டி விட்டுவிடலாம் ...

ஆனால்...செய்தவர் 

மாநிலத்து முதலமைச்சர்.

அனைத்து மக்களுக்குமான

முதலமைச்சராய் உ.பி.யில்

அமர்ந்திருக்கும் சாமியாரின் 

செயல் இது சரிதானா? சிந்திப்பீர்...


கோயிலோ..மசூதியோ...

சர்ச்சோ....

வழிபாட்டுத்தலம் எதுவும்

கரோனா தடுப்புக்கு

வழிகாட்டப்போவதில்லை...


அறிவியல் வழிமுறையாய்

தடுப்பு மருந்துகள்.....

நோய் வந்துவிட்டால் நம்

உயிர்க்காக்கும் மருந்துகள்

என மருத்துவர்கள் 

சொல்வதை மட்டும் கேட்போம்....


நாட்டு மக்களுக்கு 

நன்மை செய நினைத்தால்

மருத்துவக் கட்டமைப்பை

கூட்டுங்கள்..அதற்காக

கூடுதல் நிதி ஒதுக்குங்கள்..

மாடுகள்கூட உண்ணமறுக்கும்

மாட்டுக் கழிவுகளை

உண்ணச்சொல்லி 

மனிதர்களை மாட்டுக்கும்

கீழாய் ஆக்காதீர்....

மத ஆட்சியாளர்களே...


                    வா.நேரு 12.05.2021

Sunday, 9 May 2021

துணை நிற்போம் வாரீர் ! வாரீர்!

கூனிக்குறுகி நெளிந்து

குனிந்து தவழ்ந்து

காலில் விழுந்து எழுந்து

பதவிகள் பெற்று

மாநிலத்தின் உரிமையை 

எல்லாம் 

மத்திய அரசுக்கு 

அஞ்சி நடுங்கி 

அடகுவைத்த 

கொடுமையைக்  கண்டோம் 

சில ஆண்டுகளாய்...


இருளை அகற்றப் பிறந்த

சூரிய ஒளியாய்

கைவிரல்களில் வைத்த மையால்

புதிய ஆட்சி உதித்தது...


திறமை மிகு

அதிகாரிகள்

தலைமைப் பதவிகளில்..


நேர்மை மிகு 

அதிகாரிகள்

உயர் பதவிகளில்


உள்ளம் இனிக்கிறது

உவகை பிறக்கிறது

திராவிடத்தின் வெற்றி

திசையெங்கும் ஒலிக்கிறது....


ஓட்டுக்கு பணமா?

ஊகும்....கிடையாது

தொடர்ச்சியாய் 

இருமுறை வெற்றி...

தொகுதிக்கு ஒதுக்கும் பணத்தின்

வரவு செலவுத்திட்டம்

எங்கும் இல்லை இப்படி...

வட நாட்டுப் பத்திரிக்கை

எல்லாம் வியந்து பார்த்த

சட்டமன்ற உறுப்ப்பினர் அவர்...


உலகம் சுற்றிவந்த

பொருளாதார நிபுணர்

உண்மையை எங்கும்

சொல்லஞ்சா மனிதநேயர் அவர்...

எதையும் எதிர்பார

பெருமை மிகு 

குடும்பத்தின் வாரிசு...

இந்த ஆட்சியின் நிதியமைச்சர்...


மெத்தப்படித்தவர்கள்...

மேன்மைமிகு குணமுடையோர்

களப்பணியால் பெருமைபெற்றோர்

கற்றறிந்த சான்றோர் 

அடங்கிய அமைச்சரவை ....

கொடுமையான கரோனாவை

எதிர்கொள்ள

ஏற்றமிகு படையாய்

இணைந்து நிற்கும்

அதிகாரிகளும் அமைச்சர்களும்....

அறிவியலும்

மனிதநேயமும் இணைந்த

அறிவிப்புகள் 

வருகிறது நாள்தோறும்...


"எல்லார்க்கும் எல்லாம்"

திராவிட இயக்கம்

நோக்கம் நோக்கி 

இணைந்து நடப்போம்

வாருங்கள் என அழைக்கிறார்

நம் முதல்வர் ஸ்டாலின்...

வாருங்கள் இணைவோம்...

வளமிக்க தமிழ் நாட்டை 

அமைக்க அவருக்கு

துணை நிற்போம் வாரீர் ! வாரீர்!


                          வா.நேரு...09.05.2021Friday, 30 April 2021

பகுத்தறிவுப் பாவேந்தர் : உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

http://www.unmaionline.com/index.php/6025-ulaga-manudam-kanatha-oppatra-kavingar.html


தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பொது நிலையில் உள்ள இளைஞர்களும் இன்று தேடிப் படிக்கும் தத்துவம் பெரியாரியல் ஆகும். வலதுசாரி எண்ணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை எதிர்க்க நினைக்கும் எல்லோரும் இன்றைக்குத் தந்தை பெரியாரைப் படிக்கிறார்கள். தந்தை பெரியாரைப் படிக்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தவறாமல் படிக்க வேண்டிய படைப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைகளாகும். புரட்சிக்கவிஞரின் கவிதைகள் பத்தோடு பதினொன்றல்ல. அவரது கவிதைகள் தனித்துவமானவை. தன்மானத்தையும் இனமானத்தையும் படிப்பவர்க்கு  ஊட்டுபவை. உணர்ச்சியை, எழுச்சியை படிப்பவரின் உள்ளத்தில் புகுத்தும் கவிதைகள் புரட்சிக்கவிஞரின் கவிதைகளாகும்.இணையத்தின் வளர்ச்சி எழுத நினைப்பவர்கள் எல்லோரும் எழுதுவதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. இன்று வலைத்தளம், முகநூல் பக்கங்களில் நிறையப் பேர் கவிதைகள் எழுதுகிறார்கள். பலர், கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள், தங்கள் கவிதைகள் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது. நோக்கத்தோடு, இலட்சிய வெறியோடு இருக்கும் போதுதான் மகத்தான படைப்புகள் உருவாகின்றன. படைக்கும் ஆர்வம் உள்ள இருபால் இளைஞர்கள், புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் படிக்க வேண்டும். முடிந்தால் எவ்வளவு கவிதைகளை மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவு மனப்பாடம் செய்ய வேண்டும். அந்தக் கவிதைகளை உணர்ச்சியோடு சொல்லிப் பழகவேண்டும். அப்படி சொல்லச்சொல்ல, படிக்கப் படிக்க புரட்சிக்கவிஞரின் கவிதைகள் தரும் உணர்ச்சியை, எழுச்சியை படிப்பவர்கள் உணர முடியும். படைக்கும் ஆற்றல் தானே பெருகும். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது எளிதாக மற்றவர்களுக்குப் புரியும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் ஏப்ரல் 29. அவரது நினைவு நாள் ஏப்ரல் 21. ஏப்ரல் மாதம் என்றாலே அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நமக்கு நினைவுக்கு வருவது போல, நமது நினைவுக்கு வரவேண்டிய மாபெரும் ஆளுமை புரட்சிக்கவிஞர். புரட்சிக் கவிஞரின் கவிதைகள் புகழுக்காகவோ, பொருளுக்காகவோ படைக்கப்பட்டவை அல்ல. கொள்கைக்காகப் படைக்கப்பட்டவை.

தந்தை பெரியார் கொள்கை அடிப்படையில் பாடப்பட்டவை. ஆகையால் எப்போதும் சிறப்பானவை. எவ்வளவு சிறப்பானவை என்றால் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்க மேடைகளில் தொடர்ந்து பேசப்படும், பாடப்படும் கவிதைகள் புரட்சிக்கவிஞரின் கவிதைகள்தாம். அவருக்குப் பின்னால் பாரதிதாசன் பரம்பரை என்று பல கவிஞர்கள் படைப்புகளை அளித்தார்கள் என்றாலும், பல நூறு கவிஞர்கள் வந்தார்கள் என்றாலும், புரட்சிக்கவிஞரின் இடத்தைப் பிடித்தவர் எவருமில்லை. அவருக்கு இணையாகக் கவிதைகளைப் படைத்த தமிழ்க் கவிஞர்கள் அவருக்குப் பின்னர் எவருமில்லை. எப்படி திருக்குறளுக்கு இணையாக வேறு ஒரு நூல் வரவில்லையோ, அதனைப் போல புரட்சிக்கவிஞரின் கவிதைகளுக்கு இணையாக வேறு கவிதைகள் இல்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாடு கல்வியில் முன்னணி வகிக்கிறது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 50 சதவிகிதம் உயர்கல்வியை அடைய வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால், இப்போதே அந்த நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் திராவிட இயக்கம் - தந்தை பெரியாரும் அவரது கொள்கைகளும் ஆகும். அந்தக் கொள்கையை உள்வாங்கிக் கொண்ட புரட்சிக்கவிஞர் கல்விக்கு - அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து பாடியிருக்கும் பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கவை.

"பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்  உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்  கல்வியைப் பேணுதற்கே!"

என்றார் புரட்சிக்கவிஞர். “என்னருந் தமிழ் நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?’’ என்று எல்லோரும் கல்வி கற்று இன்புற வேண்டும் எனக் கனவு கண்டவர் புரட்சிக்கவிஞர். அதனை நிறைவேற்றிட பல்வேறு முயற்சிகளை, திட்டங்களைத் தீட்டி கடந்த 50 ஆண்டுகளில் திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட. அனைவருக்கும் கல்வி என்னும் நோக்கத்தில் தமிழகம் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

ஆத்திகராக இருந்தவர்தான் பாரதிதாசன். ஆனால், 1933இ-ல் நடந்த சுயரிமரியாதை  மாநாட்டில் கலந்து கொண்டு ‘நான் ஒரு நிரந்தர நாத்திகன்’ என்று கையொப்பம் இட்ட காலம் முதல், நாத்திகத்தை ஏற்றுக் கொண்டு, நாத்திகமே உலகம் உய்ய வழி என்பதனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த வழியில் இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர் என்பது  மட்டுமல்ல; இன்றைக்கும் நாத்திகத்தை வீரியமாய் மேடைகளில் சொல்வதற்கு கவிதைகளைத் தந்தவர் பாரதிதாசன்.

“கடவுள் கடவுள் என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்

கடவுள் என்ற நாமதேயம் கழறிடாத நாளிலும்

உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்ததாம்

கடையர் செல்வர் என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே!"

எனக் கவிதையின் வாயிலாகக் கேட்டவர். ஏழை, பணக்காரன் என்னும் வேற்றுமையை விதைத்தது கடவுள் என்னும் பெயர் வந்த பிறகுதான் என்பதனை மிக எளிமையாகச் சொல்லிச் செல்வார்.

“பிணக்கு ஏற்படுத்தும் கடவுளைக்

கணக்குத் தீர்த்தல் மனிதர்தம் கடமையே’’ என்றவர்.

“கடவுள்வெறி சமயவெறி

கன்னல் நிகர் தமிழுக்கு

நோய்! நோய்! நோயே!’’ என்றவர்.

"உடை வெளுக்கும் தோழரைக்

கழுதை முன்னேற்றுமா?

கடவுள் முன்னேற்றுமா?"

எனக் கேட்டவர் பாரதிதாசன். மீண்டும் மீண்டும் மேலே இருக்கும் கவிதை வரிகளைச் சொல்லிப் பாருங்கள். எளிய சொற்கள். மிக வலிமையான கருத்துகள். இதுதான் புரட்சிக்கவிஞரின் மொழி ஆளுமை.

‘கரும்பு தந்த தீஞ்சாறே,

கனி தந்த நறுஞ்சுளையே’

என்று ஆரம்பித்து செந்தமிழை அவர் பாடியிருக்கும் சொற்களுக்காய் மீண்டும் மீண்டும் படிக்கலாம். அப்படிப்பட்ட தமிழின் நிலையைக் கண்டு வருந்தி அதனை மாற்றுவதற்கு 24 பாடல்களைக் கொண்ட அற்புதமான நூலான ‘தமிழியக்கம்’ என்னும் நூலைப் படைத்தார். ஒவ்வொரு இளைஞரின் நெஞ்சத்திலும் மனப்பாடமாய் இருக்க வேண்டிய கவிதைகள் அதில் உள்ள கவிதைகள்.

‘உயிர் போன்ற உங்கள் தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்’ என்று ஆரம்பித்து கடவுளுக்கு தமிழில் வாழ்த்து சொன்னால் புரியாதா, வடமொழியில் சொன்னால்தான் புரியுமா? என்று கேட்கும் அவர் கருத்து வீச்சினை தமிழியக்கப் பாடல் ஒவ்வொன்றிலும் காணலாம். தமிழை அப்படிப் பாடிய புரட்சிக்கவிஞர்தான்,

“இனப்பெயர் ஏன் என்று பிறன்எனைக் கேட்டால்

மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.

நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!’’

என்று பாடினார். தமிழ் உயர, திராவிடன் என்னும் இனச்சொல்தான் பயன்படும் என்பதனை, இன்றைக்கு ‘தமிழ் தேசியம்’ எனப் பேசிக்கொண்டு திராவிட இயக்கத்திற்கு எதிராக உளறும் துரோகிகளுக்கு உறைக்கும் வண்ணம் பாடியிருக்கிறார். தமிழுக்கும், தமிழருக்கும் பகைவர் பார்ப்பனர். எனவே, நாம் திராவிடராய் ஒன்றிணைந்து, நமது இன எதிரிகளாம் பார்ப்பனர்களை வெல்லவேண்டும் என்னும் நோக்கத்தைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார்.. "பார்ப்பான் பால் படியாதீர்..." என்னும் கவிதையெல்லாம் இன்றைய இளைஞர்களே படியுங்கள், உணர்வீர்கள்.

இதனைப் போல ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு மிக அருமையான கவிதை வரிகளைத் தந்தவர் புரட்சிக்கவிஞர் ஆவார். அதனால்தான் ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டார். “இருட்டறையில் உள்ளதடா உலகம், - சாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே..’’ என்றார் புரட்சிக்கவிஞர். இன்றைக்கும் ‘துக்ளக்’ ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி போன்றவர்கள் ஜாதி வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் ஆமாம் என்று சொல்லிக்கொண்டு சில ஒடுக்கப்பட்டவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

“பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்

பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை’’ என்று பாடினார் புரட்சிக்கவிஞர்.

“சாதி என்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி

சேதி அப்படி தெரிந்துபடி

தீமை வந்திடுமே மறுபடி’’ என்று பாடியவர். திட்டமிட்டு இந்துத்துவவாதிகள் சாதிப்பெருமை பேசச்சொல்லும் இந்த நாட்களில் புரட்சிக்கவிஞரின் சாதி ஒழிப்புப் பாடல்கள் பெரும் அளவில் பயன் கொடுக்கும்.

சங்க இலக்கியத்திற்குப் பின் இயற்கையைப் பாடிய கவிஞர். பொதுவுடைமைக் கருத்துகளை, பொது உரிமைக் கருத்துகளைப் பாடியவர். ‘அவர்தாம் பெரியார், பார் அவர்தாம் பெரியார்’ என்னும் பாடலை நமக்குக் கொடுத்து ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்பதனை பல பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர். இன்றைய நடைமுறையில் அதனைக் காண்கின்றோம்.

‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ என்னும் நூலை எழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அந்த நூலில், அவர் படித்த கல்லூரிக்கு ஒன்றாக வந்து மேடையில் அமர்ந்த தந்தை பெரியாரையும் புரட்சிக் கவிஞரையும் பற்றிக் குறிப்பிடும்போது “இரு சூரியர்கள் ஒரு வானில் ஒரு பொழுதில் வந்தது போல- மேடையில் தந்தை பெரியாரும் புரட்சிக்கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்.’’ எனக் குறிப்பிடுவார். அது மட்டுமல்ல தந்தை பெரியார் அருகில் இருக்க புரட்சிக்கவிஞர் அவர்கள் “இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழனுக்கு தலைவன் இல்லை. இதோ! தலைவன் உங்கள் முன்னால்! இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்... நீங்கள் விரும்பும் தமிழ் மீளும். தமிழ்நாடு வாழும்! முண்டங்களாய், முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும், இன்னும் அப்படி இருக்க வேண்டுமா? உங்களுக்குள் இருக்கும் தமிழனை மதங்கள், சமயங்கள், வேதங்கள், வியாக்கியானங்கள் எல்லாம் அழுத்தி அழுத்தி அவமானச் சேற்றில் புதைத்து விட்டன. உங்களுக்குள் இருக்கும் தமிழனை, உங்கள் ஜாதிகளே வீழ்த்தி விட்டன. தமிழனை விடுதலை செய்ய, தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர இவரை விட்டால் நாதி உண்டா? என்று உரை நிகழ்த்தியதை அருகில் இருந்து பார்த்த ஈரோடு தமிழன்பன் அவர்கள் அந்த நூலில் உணர்ச்சியோடு பதிவு செய்திருப்பார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை உணர்ச்சிமிக்க கவிதைகளாக புரட்சிக்கவிஞர் தந்த காரணத்தினால்தான் திட்டமிட்டு, புரட்சிக் கவிஞரின் கவிதைகள் மறைக்கப் பட்டன. வானில் இருக்கும் கருப்பு மேகங்கள் எத்தனை நேரம் சூரியனை மறைக்க இயலும்? தகதகக்கும் சூரியனாய் புரட்சிக்கவிஞர் இன்று சுடர் விடுகின்றார். சென்ற ஆண்டு புரட்சிக்கவிஞரின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு அறிக்கை கொடுத்திருந்தார்கள்

புரட்சிக்கவிஞர் - உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!

புகழுக்கோ, பணத்திற்கோ, செல்வாக்குப் பெற்ற பதவிக்கோ என்றும் அடிமையாகா சுயமரியாதை ஆளுமையின் வணங்காமுடி!

அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்த நம் அய்யா அறிவு ஆசான் தந்தை பெரியாரை - அந்நாளிலேயே சரியாகப் புரிந்து, நெறியாக சிக்கென்று பிடித்து, இறுதிவரை உறுதி காட்டிய கொள்கைக் கோமான்!

2020ஆம் ஆண்டில் கொடுமை தரும் கரோனா தொற்று காரணமாக கூடி மகிழ்ந்து கொண்டாட இயலாவிடினும், அவர்தம் கவிதைகளை, அவர் உருவாக்கிய ஈரோட்டுப் பூகம்பக் கவிதைகளைப் படித்து -- பரப்பி - - அவர் வழி -- அதுதானே அய்யா பெரியாரின் ஈரோட்டுப் பாதை -- அதன் வழி நடக்க சூளுரை மேற்கொண்டு, - சுயமரியாதைச் சூடேற்றுவோம் உலகிற்கு.

செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்

இவ்வுலக மக்களில் என்ன பேதங் கண்டாய்?

சுயமரி யாதைகொள் தோழா! - நீ

துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!

சுயமரி யாதைகொள் ...

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ

உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;

துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று

சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!

அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்

ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்

பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்

பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!

சுயமரியாதைகொள் ...

புதியதோர் உலகு செய்வோம்!

இப்படி கவிஞரின் இலக்கியத் தோட்டத்தின் சுயமரியாதை மணத்தில் சொக்கி மகிழ்ந்து அவரை வாழ்த்தி, அவர் விரும்பிய அறிவு ஆசான் இலக்காகிய ஜாதியற்ற, பெண்ணடிமையற்ற, மூடநம்பிக்கையற்ற சமத்துவமும், பகுத்தறிவும், சமதர்மமும் ஆளும் புதியதோர் உலகு செய்வோம்!

“இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்! வாரீர்! வாரீர்!’’ என்று அழைப்பு விடுத்திருந்தார். புரட்சிக்கவிஞரைப் பற்றி பல நூறு நூல்கள் வந்துள்ளன. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் புரட்சிக்கவிஞரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை யெல்லாம்விட புரட்சிக்கவிஞரின் கவிதைகளை உள்ளத்தில் ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியம். பரம்பரைப் பகைவர்கள் பல்வேறு நரித்தனமான சூழ்ச்சி வலைகளைப் பின்னும் இக்காலத்தில், அச்சூழ்ச்சி வலைகளை நறுக்கிட நமக்கு கைவசம் இருக்கும் ‘வாட்கள்’ புரட்சிக்கவிஞரின் கவிதைகள். அவரது கவிதைகளை இன்னும் வீச்சாய் இளைஞர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்போம். மறுவாசிப்பு, கட்டுடைப்பு என்னும் சொற்களால் இன்று சிலர் பழமைச் சிலம்பம் ஆடும் இக்காலத்தில் புதுமைக் கவிதைச் சிலம்பம் ஆட நமக்கு பயிற்சி அளித்த புரட்சிக் கவிஞரை நினைவில் கொள்வோம். அவர் விரும்பிய “புதியதோர் உலகம் செய்ய’’ அவரது கவிதைகளைத் துணையாகக் கொள்வோம்.

நன்றி : உண்மை 16-30 2021Thursday, 29 April 2021

நாய் எரிக்கும் இடத்தில்........

 

நாய் எரிக்கும் இடத்தில் 

நாட்டுக் குடிமக்களை

எரித்துக்கொண்டிருக்கிறார்கள்

எதற்கு இத்தனை 

ஆயிரம் கோயில்கள் நம் நாட்டில்

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


பரந்து கிடக்கிறது பிரபஞ்சம்

இருண்டு கிடக்கிறது 

சாதிகளால்,மதங்களால்

இந்தியனின் மனம்...

ஒட்டு மொத்தமாய்

ஒரே வண்டியில் 

22 சடலங்கள்....

வர்ணப்படி-சாதி பார்த்து 

அடுக்கினாயா இறந்த உடல்களை?

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப்

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


அரசு இடத்தை எல்லாம்

ஆக்கிரமித்து

வழிபாட்டுத்தலங்கள் 

அமைத்தார்கள்...

அமைக்கிறார்கள்....

எல்லா வெற்று இடங்களையும்

சடலம் எரிக்கும் சுடுகாடுகளாய்

மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

நம் தலைநகர் வாசிகள்..

எது தேவை மக்களுக்கு 

கரோனா நமக்குப்

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது..


மற்ற நோயாளிகளுக்கு

மருத்துவமனைகளில்

குருதியே கிடைக்கவில்லை....

எந்த மதமானால் என்ன?

எந்த சாதியானால் என்ன?

எனது உறவின் உடம்பில்

ஓடுவதற்கு 

அவர் உயிர் பிழைப்பதற்கு

கொஞ்சம் உங்கள் குருதி

கொடுக்க இயலுமா?

வேண்டுகோள்கள் வந்தவண்ணம்....

எது தேவை மக்களுக்கு?

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.. 


செத்து விழுகிறார்கள் மக்கள்...

இந்த நிலையில் 

தேவையா  ஐ.பி.எல்.

கிரிக்கெட்டு விளையாட்டுகள்?

விளையாடிய வீரரே

வெறுத்துப்போய் வெளியேறுகிறார்..

எது தேவை மக்களுக்கு?

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.


ஐ. நா.வின் உதவிகள்

எங்களுக்கு வேண்டாம்..

சீனாவின் ஒத்துழைப்பு

எங்களுக்கு வேண்டாம்...

இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

வெளிநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம்

திமிர்பிடித்த....

திறனற்ற மோடி அரசென

விமர்சித்திருக்கின்றன....


அகண்ட பாரதக்கனவு காணும்

ஆட்சியாளர்கள்

நாட்டின் அவலங்களைத் 

திரையிட்டு மறைக்க நினைக்கிறார்கள்...

ஆக்ஸிஜன் தேவை எனக் ககறியவர்

மேல் வழக்குப் பதிவு

சாமியார் ஆளும் உ.பி..யில்..

எப்படிப்பட்ட  ஆட்சி 

தேவை மக்களுக்கு.?..

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...உடை வெளுக்கும் தோழரைக்

கடவுள் முன்னேற்றுமா?

அவர் வளர்க்கும்

கழுதை முன்னேற்றுமா ?

எனக் கேட்ட புரட்சிக்கவிஞரின்

பிறந்த நாள் இன்று....

கடவுளின் பெயரால் 

கலகம் செய்து

ஆட்சியைப் பிடித்தவர்கள்

வெறும் காட்சியாளர்களாய்...

மூட நம்பிக்கை முடைநாற்றம்

வீசுகின்ற பழமைவாதிகளாய்...

எப்படிப்பட்ட  ஆட்சி 

தேவை மக்களுக்கு.?..

கரோனா நமக்குப் 

பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...


                                  வா.நேரு,

                                         29.04.2021
Sunday, 25 April 2021

பகடி செய்கிறாயே!

 திடீரெனத் 

தரையில் போடப்பட்ட

மீன்களாய் கரோனா

நோயாளிகள் .....

ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன்

எனும் அழுகுரல்

இந்திய நகரங்கள் பலவற்றின்

வளிமண்டலத்தை நிரப்புகிறது...

..


கோமியத்தால் 

எல்லாவற்றையும் 

குணமாக்கிவிடலாம் என 

எண்ணும் குணக்கொழுந்துகள்

மத்திய ஆட்சியில்

அமர்ந்திருக்கிறார்கள்...

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

வாங்கவா ? வேண்டாமா?...

எவரிடம் வாங்குவது?....

முடிவெடுக்க மோடி அரசு 

.எட்டு மாதங்கள் எடுத்திருக்கிறது...


முடிவெடுக்க எடுத்த தாமதத்தால்

மருத்துவமனைகள் கதறுகின்றன...

மருத்துவர்கள் அழுகிறார்கள்...

கரோனா நோயாளிகள் 

மூச்சுத்திணறி சாகிறார்கள்.....

அவலம் நெஞ்சைப் பிழிகிறது...


பதினான்கு மாநில

மக்கள் அழுகுரலைத் தடுக்க,,

பி.எம்.கேர் நிதியிலிருந்து 

வெறும் 200 கோடி கொடுத்திருந்தால்

ஆக்ஸிஜன் இருந்திருக்கும்...

வல்லுநர்கள் சொல்கிறார்கள் 


மராட்டிய அரசு 

கரோனா தடுப்பில் தோற்றுப்போய்விட்டது...

அறிவிப்பவர் மத்திய 

சுகாதாரத்துறை அமைச்சர்...

அட அறிவிலிகளா!

உத்தரப்பிரதேசத்தில் என்ன வாழ்கிறது?

வரிசையாய் வீடுகள் எரியும் நேரம்

பக்கத்து வீட்டுக்காரன் அணைக்கவில்லை

என்று பகடி செய்கிறாயே!

உன் வீடும்தானே எரிகிறது?...


அனைத்தையும் தீர்த்துவைக்கும்

அரிய சஞ்சீவி என்று

மோடியைப் புகழ்ந்துகொண்டிருந்த்

சங்கிகள் ஒன்றும்

மாறுவதாகக் காணோம்.....

எல்லாம் பண்டிதர் நேரு

ஆட்சியால்தான் என்று

மந்திரம் போல டுவிட் 

செய்து கொண்டிருக்கிறார்கள்...


அறிவியல் மனப்பான்மை 

இல்லா ஆட்சியாளர்கள்

அழிவைத்தான் தருவார்கள்....

மதவெறி அடிப்படை

ஆட்சி நாட்டு 

மக்களை மாண்டு

போகத்தான் செய்யும்.


கும்பமேளா எனும் கரோனா மேளா

நடத்திவிட்டு  

கை மீறிப்போய்விட்டது எனக்

கையைப் பிசையும் ஆட்சியாளர்களே

ஆட்சிக் கட்டிலிலிருந்து

கீழே இறங்குங்கள்.....

மதத்தையும் அரசையும்

பிரித்து ஆட்சியை நடத்துவர்கள்

இனியாவது இந்தியாவை

ஆளட்டும்...... 

...


                               வா.நேரு

                                26.04.2021


இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும்.....

 அன்பு நண்பர் நேரு அவர்களுக்கு,

செல்லாத பணம் பற்றி *உங்கள் பார்வையில்* எழுதப்பட்ட உங்களது மதிப்புரை மிகச் சிறப்பு. குறை ஒன்றும் இல்லை. எனினும் என்னுடைய பார்வையில் அந்தப் புத்தகம் பற்றிய மதிப்பீடு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபட்டது.

2019 லேயே அந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை நமது குழுவில் பதிவு செய்துள்ளேன். அந்தப் பதிவின் பிரதி என்னிடம் இப்போது இல்லாததாலும், புத்தகத்தை வாசித்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும் என் நினைவிலிருந்து எழுதுகிறேன். 

கதையின் நாயகி படித்தவள். ஓரளவு வசதியான குடும்பத்தைச் சார்ந்தவள். படித்த இந்தக் காலத்துப் பெண்கள் ஓரளவேனும் தெளிவான முடிவெடுக்கக் கூடியவர்கள் (என்று நம்புகிறேன்). அப்படிப்பட்ட நாயகி ஆட்டோ ஓட்டும் ஒரு ஆணாதிக்க வெறியுள்ள குடிகார, பொறுக்கியைக் காதலனாக வரிப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தமிழ் சினிமாவில் மட்டுமே இது நடக்கும். யதார்த்தம் அப்படியில்லை. அந்தக் குடிகார, பொறுக்கி காதலனுக்காக தனக்குக் கிடைத்த அரிதான வேலை வாய்ப்பை உதறிவிட்டு அவனைக் கரம் பிடிக்கிறாள். யாருடைய அறிவுரையாலும் அவள் முடிவை மாற்ற முடியவில்லை. சரி, கல்யாணம்தான் ஆகிவிட்டது; அதற்குப் பிறகும் அவன் திருந்தவில்லை. நாயகியின் மீது வன்முறை பிரயோகம் அதிகமாகிறது. அப்போதாவது அவனைப் பிரிந்து வந்து விடலாம். செய்யவில்லை. கணவனே கண் கண்ட தெய்வம்? வன்முறையின் உச்சமாக அவள் தீயில் கருகி உயிருக்குப் போராடி மரணம் அடைகிறாள். மரண வாக்குமூலத்தில்கூட அந்தப் பொறுக்கிக்கு நல்ல சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டு இறக்கிறாள். என்னே பதிவிரதா மகிமை! 

நாயகியை ஒரு படிக்காத தற்குறியாய், பத்தாம்பசலியாய் படைத்து அவளின் குடும்பம் வறுமையில் வாடுவதாய்க் காட்டியிருந்தால் ஒருவேளை அவளின் தவறான முடிவிற்கும், திருமணம் ஆகியபின் தொடரும் அதீத வன்முறையைச் சகித்துக் கொண்டு பிறந்தவீடு வராமல் இருப்பதற்கும் ஒரு நியாயம் இருப்பதாகக் கருதலாம். அப்படியும் தீயில் வெந்து சாகும் தருவாயில் கொடுக்கும் மரண வாக்குமூலத்தில் கணவனைக் காப்பாற்ற முயல்வது அபத்தத்தின் உச்சம். ’நாடகக் காதல்’ என்று சில அரசியல் தலைவர்கள் சொல்லுவதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது.

காலம் காலமாய், திருவள்ளுவர் முதற் கொண்டு (தெய்வம் தொழாள்…) பெண்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட  அடிமைத்தனத்தை அவர்களுக்குத் தரும் கல்வி விலக்கும் என்று பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வளர்த்த நம்பிக்கையைத் தகர்த்து, என்னதான் படித்தாலும் பெண் அடிமையாக, கையாலாகத்தனம் உள்ளவளாக, புழுவினும் கேவலமாகத் தான் இருக்கிறாள் என்று இந்தக் கதையில் இமையம் நிறுவுகிறாரா? அநீதி கண்டு பொங்கி எழாமல் அதற்கு பணிந்து போவதுடன் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதுபோல் நாயகி நடந்து கொள்வது அயற்சியையும் கோபத்தையும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு உண்டாக்குகிறது. இதை இமையம்தான் எழுதினாரா என்று வியக்க வைக்கிறது. மற்றபடி மருத்துவமனை நிகழ்வுகள் மனம் கலங்கும்படி இருக்கின்றன.

சாகித்ய அகடாமி விருதுக்கு இமையம் 100 சதம் தகுதியானவர் என்பதில் துளியும் ஐயமில்லை. அதற்காகத் தேர்ந்தெடுத்த நாவல்தான் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு விருதும் சமூக நீதி, பெண் விடுதலை, சமூக முன்னேற்றம், சமுதாய முன்னெடுப்பு, மனித நேயம் ஆகியவற்றைப் பிரச்சார நெடியின்றி, யதார்த்தமாக, மக்கள் மனதில் படும்படி எழுதப்பட்ட படைப்புகளுக்கே தரப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த வகையில் இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும் என்பதே என் எண்ணம்.

மேலே சொன்னவை ஒரு வாசகனாய் என் சொந்தக் கருத்து. இதில் பல வாசகர்கள் மாறுபடலாம்.


திரு.எஸ்.எஸ். அவர்கள், 'வாசிப்போர் களம் ' வாட்சப் குழுவில் என்னுடைய 'செல்லாத பணம் ' நூல் விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதியது.