Wednesday, 31 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : பெண் விடுதலை இன்று ...க.வி.இலக்கியா

அண்மையில் படித்த புத்தகம் : பெண் விடுதலை இன்று
ஆசிரியர்                   : க.வி.இலக்கியா
பதிப்பகம்                  : விடியல் பதிப்பகம்
முதல் பதிப்பு              : 2016, 60 பக்கங்கள்,விலை ரூ 60

                              சென்ற சனிக்கிழமை 27.10.2018 மாலை,தூத்துக்குடி ஏ.பி.சி. கல்லூரிக்கு முன்னால் உள்ள பெரியார் மையத்தில் உண்மை வாசகர் வட்டம் சிறப்புக்கூட்டம். தூத்துக்குடி மண்டலச்செயலாளர் மானமிகு அய்யா பால்.இராசேந்திரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 'திராவிட இயக்க சிந்தனைகள் ' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். சனிக்கிழமை இரவு அங்கு முடித்து விட்டு தூத்துக்குடி-கோவை துரித வண்டியில் பயணம் செய்து ,மறு நாள் (28.10.2018) காலை பொள்ளாச்சியில் த.மு.க.எ.சங்கத்தின் சார்பாக தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். வரவேற்புரையில் ஆரம்பித்து நன்றியுரைவரை ஒவ்வொருவரும் முத்திரை பதித்த நிகழ்வு(விரிவாக எழுத நினைத்திருக்கின்றேன்). வாசகன் வைரமுத்து அவர்கள் 'பரியேறும் பெருமாள் ' திரைப்படம் பற்றியும், தோழர் கலைக்கோவன் அவர்கள் எனது முதல் சிறுகதைத்தொகுப்பான 'நெருப்பினுள் துஞ்சல் 'பற்றியும் ,அடுத்து மெளனம் ரமேசு அவர்கள் 'நானும் ஆட்டத்தில் இருக்கேன்' என்னும் கவிதைத் தொகுப்பு பற்றியும் விமர்சனம் செய்தார்கள். தோழர் கலைக்கோவனின் விமர்சனம் மிக சிறப்பாக, சிறுகதைகளையும் அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளையும் இணைத்து அருமையாக அமைந்தது.                          நிகழ்வு முடியும் நேரத்தில் நான் பேசலாமா எனக் கேட்டு ஒரு பெண் பேச ஆரம்பித்தார். உள்ளத்தில் இருந்தும், கோபமாகவும் அவரது உரை இருந்தது,தெளிவாகப் பேசினார், ஆனால் சமூக நீதி பற்றியோ,உண்மையான பெண் விடுதலை பற்றியோ,சாதிக்கொடுமைகள் பற்றியோ முழு புரிதல் இல்லாமல் இருப்பதாக இருந்தது. அவரது கேள்விகளுக்கு தோழர் கலைக்கோவன் நன்றாக விளக்கம் அளித்தார். நான் தந்தை பெரியாரை, அம்பேத்கரைப் படியுங்கள் என்றேன். நான் அதனைச்சொன்னவுடன் அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. பெரியாரை நான் படித்திருக்கின்றேன்.அம்பேத்கரை படிக்கின்றேன். கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல், பெரியாரைப் படியுங்கள், அம்பேத்கரைப் படியுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டார். பின்பு கூட்டம் முடிந்து கீழே இறங்கும்போது,தூத்துக்குடி கூட்டத்திற்கு போகும்போது படிப்பதற்க்காக நான் கொண்டு சென்ற 'பெண் விடுதலை இன்று 'என்ற புத்தகத்தை அவரிடம் கொடுத்து ,இதனைப் படியுங்கள், நன்றாக இருக்கிறது, உங்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என்று சொல்லி எனது தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு வந்தேன்.

                            இன்று 31.10.2018 தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த தோழியர் ,தோழர் மிக்க நன்றி. அந்தப்புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டேன். இந்தப்புத்தகத்தைப் படித்தபின்பு எனது பார்வை முழுவதுமாக மாறியிருக்கிறது. ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. நீங்கள் கொடுத்த புத்தகம் பற்றி பேஸ்புக்கிலும் எழுதியிருக்கின்றேன் என்றார். அவரது அனுமதியோடு அவரது புத்தக விமர்சனத்தை அப்படியே கீழே கொடுத்திருக்கின்றேன்.பேஸ்புக்கில் "முகில் நிலா தமிழ் " என்னும் பெயரில் அவர் எழுதியிருப்பது

"இன்று வாசித்த நூல். இந்நூலின் ஆசிரியர் க.வி. இலக்கியா.. பெண் விடுதலை இன்று என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரை நூல் இது.

இந்நூல் பொருளாக்கம், பண்டமாக்குதல், என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்கிறது..

பொருளாக்கத்தில்
கலாச்சாரப்பொருளாக்கம், சுயபொருளாக்கம், பாலியல் பொருளாக்கம் என்னும் மூன்று கூறுகளை உள்ளடக்கி அலசி ஆய்கிறது...!

கலாச்சாரப்பொருளாக்கம்

இத்தலைப்பினை அடியொட்டி குறிப்பிடப்படுபவற்றில் மிக முக்கியமாய் நான் கருதுவது " மதங்களும்.,சாதிகளுமே பெண்ணை அடிமையாக்கிய முதல் காரணி என்பதே"

இந்ததலைப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள மனுதர்மம் பெண்ணை மனுசியாககூட கருதவில்லை என்பதை ஆசிரியர் குறிப்பிட்டுக்காட்டுகிறார்...

பார்ப்பானிய கோட்பாடுகளான பிரதிலோமா, அனுலோமா, பித்ர சவர்ணயா,மத்ர சவரணயா முறைகளின் மூலம் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பதை விவரிக்கும் ஆசிரியர்

பெரியார் கோரிய பெண் உரிமைகளனெ மணவிலக்கு, கல்யாண விடுதலை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுப்பு, சுயமரியாதைத் திருமணம், சொத்துரிமை ஆகியவை பெண்களை விடுதலை செய்வது மட்டுமல்லாது, சாதியக்கட்டமைப்பையும் அசைத்துப்பார்க்கும் என்ற நம்பிக்கை பற்றியும் அது இன்று நடவாமல் போனதற்கான காரணிகள் குறித்தும் விவரிக்கிறார்...

அதில் தாழ்ந்த சாதியை சார்ந்த வாரிசுகள் உயர்சாதியில் ஊடுருவாமல் தடுக்கவே கெளவரவக்கொலைகள் நிகழ்த்தப்படுகிறதென்ற நிதர்சனத்தையும் முன் வைக்கிறார்..

சுயபொருளாக்கம்
என்னும் தலைப்பின் கீழ். பெண்களின் ஆடை,அணிகலன், சொத்துசேர்த்தல் ஆகிய காரணிகளால் பெண் படித்தும் இன்றும் வீட்டைவிட்டுமட்டுமே வெளிவந்திருக்கிறாள் என்பதையும். பொருளாதார சுரண்டலுக்கு அப்பெண்ணே அதீத காரணியாகிறாள் என்பதையும் விளக்கிக்கூறுகிறார்

ஆணாதிக்கத்திலிருந்து மீண்டும் தனக்குதானே விலங்குகளைப் பொறுத்திக்கொண்டு பெரும் சுமைதாங்கியாய் அவள் வாழ்கிறாள் என்ற நிதர்சனத்தை முகத்தில் அறையும்படி விளக்குகிறார்

சமூக வேறுபாடுகளை உருவாக்குவதில் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிமுக்கிய காரணியாவதை வருத்தத்தோடு தெரிவிக்கிறார்...
தனிவுடமைக்கு எப்படி பொதுநலனை பாதிக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்குறார்..

பாலியல் பொருளாக்கம்

என்னும் தலைப்பின் கீழ்

பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதில்லை என்பதையும்., அதன் பின்னனியில் இருக்கும் சமூக வன்முறைகளான வறுமை, வேலையின்மை, பொருளாதார நிலையின்மை, பெரும் அளவிலான மக்களின் இடப்பெயர்வு, சமூக விழுமியச் சீரழிவு, அந்நியமாதல், அதிகரிக்கும் குடிப்பழக்கம், இயற்கை பேரழிவுகள், பாலியல் வன்முறைகள், அதிகரிக்கும் உடல்-உளம் சார்ந்த நோய்கள், கையறுந்த நிலையில் வாழ்க்கை, செயலற்றுக் கிடக்கும் அரசு இயந்திரம் என மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் சமூகக்கட்டமைப்பின் உருக்குலைவே காரணியென்கிறார்..

பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில் இருந்து விலகி அது ஒரு சமூக நோய் என்ற கண்ணோட்டத்தில் பார்வியடச் சொல்கிறார்...

அடுத்ததாக
பண்டமாக்குதல்

அடிப்படைத்தேவைகளான உணவு, உடை ,இருப்பிடம் ஆகியவை பண்டமாக்குதலில் நுகர்வியமாகவும், தனிச்சொத்தாகவும் மாறியதால் இந்த பண்டமாக்குதலை சுற்றயே கல்வி,வேலைவாய்ப்பு, திருமணம், குடும்பம், உடல்நலம், அரசியல், மொழி, தேசியம், கலாச்சாரம், மதம், விழுமியம்,அறிவியல் என அனைத்தும் பின்னப்பட்டுள்ளதை விவரிக்கிறார்.

காரல்மார்க்ஸ், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் நூல்களை மூலமாக்கி இக்கட்டுரையை எல்லோருக்கும் புரியும்வண்ணம் எழுதியுள்ள ஆசிரியர் க.வி.இலக்கியா அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை...

இந்நூல் வாசிப்பின் மூலம் சமூகத்தோடான எனது அணுகுமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

இந்நூல் என் கரங்களுக்கு வரக்காரணியான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டமும், அதில் நான் பேசிய தத்துபித்து உளர்களும், அதற்கு வாய்ப்பளித்த பொள்ளாச்சி அபி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்...

இதை வாசியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடைகிடைக்குமென எனக்குக் கொடுத்த வா.நேரு அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்

பெண் விடுதலை என்பது சமூகவிடுதலையும் சேர்ந்ததுதான் என்பதையும்.. சமூக நோய்களுக்கு தீர்வு காணாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்பதையும். இன்பமும்,திருப்தியுமாய் வாழ்வதற்கான வழிகளை உண்டாக்க வேண்டியது பெண்களுக்கும் கடமை என்பதையும் அறிந்துகொண்டேன்."

         நான் இந்த வாரம் இந்தப் புத்தகத்தைப் பற்றித்தான் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் முகில் நிலா தமிழ் புத்தகத்தை முழுமையாக வாசித்து ,உள்வாங்கி எழுதியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் க.வி.இலக்கியா அவர்களுக்குப் பாராட்டுகள். 'பெண் விடுதலை இன்று' என்னும் தலைப்பில் உள்ள இந்தப்புத்தகம் இன்றைய சூழலை, பெண் விடுதலையை தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர்,காரல்மார்க்ஸ் கருத்துக்களின் மேற்கோள்களோடு கொடுக்கப்பட்டுள்ள புத்தகம். படித்துப்பாருங்கள். படிக்கச்சொல்லுங்கள்.  

Sunday, 21 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : இந்தியக் குடிசை...பெர்னார்தன் தெ.சென்பியர் (பிரஞ்சு மொழி)....

அண்மையில் படித்த புத்தகம் : இந்தியக் குடிசை
நூல் ஆசிரியர்              : பெர்னார்தன் தெ.சென்பியர் (பிரஞ்சு மொழி)
தமிழில் மொழி பெயர்ப்பாளர் : தேசிகப்பிள்ளை
வெளியீடு                  : திராவிடர் கழக (இயக்க ) வெளியீடு,பெரியார் திடல்,சென்னை-7
                            தொலைபேசி எண்: 044-26618163
முதல் பதிப்பு               : 1967 (சிந்தனை பதிப்பகம்) ,இரண்டாம் பதிப்பு 2014
மொத்த பக்கங்கள்           :68 விலை ரூ 35                            இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்தியக் குடிசை என்னும் தலைப்பிற்கு கீழ் (224 ஆண்டுகளுக்கு முன்பு ரூசோவின் மாணவர் 1790-ல் எழுதிய இந்திய சமூகம் பற்றிய புதினம்) என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.அடுத்து சிந்தனைப் பதிப்பகம் வெளியிட்ட அட்டைப்படம். அதற்குப் பின்னால் பெர்னார்தன் தெ சென்பியர் பற்றிய அறிமுகம்.பெர்னர்தன் தே சேன்பியர்(Bernardin de Saint -Pierre) பிரெஞ்சு நாட்டின் புகழ் மிக்க எழுத்தாளர்.பொறியியல் வல்லுநர்.இயற்கை விஞ்ஞானி;பகுத்தறிவாளர், நூலாசிரியர்....கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

பதிப்புரையினை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்திருக்கின்றார்.அவர் தனது பதிப்புரையில் "இந்தியத் துணைக்கண்டத்தின் சமுதாயச்சீரழிவிற்கு மூல முதற்காரணம் பார்ப்பனியம் என்பதை புத்தரில் தொடங்கி இராமலிங்கர் வரை பலர் நீண்ட காலந்தொட்டு வெளிப்படுத்தி வந்துள்ளனர்.....இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் நமக்குப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சு நாட்டுக்காரர் எழுதிய இந்த புதினம்(நாவல்) ஏராளமான செய்திகளைத் தருகிறது.....இந்நூலை இந்த தலைமுறைக்கு வெளிச்சமூட்டும் வகையில் பெரியார் ஆவணக்காப்பகம் வெளியிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்தப்புத்தகம். 

                              இந்தப் புத்தகத்தினை நான் இரண்டு மூன்று முறை வாசித்திருந்தாலும் கூட ,மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் அ.முருகானந்தம் அவர்கள் இந்தப் புத்தகம் பற்றி மிகச்சிறப்பாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.பத்தாம் வகுப்புத்தான் படித்தவர் என்றாலும் கூட உலக அனுபவத்தோடு இணைத்து அவர் சொன்ன விதம் எனக்கு மிக ஈர்ப்பாக இருந்தது. அவரது மொழியிலேயே இனி இந்தப் புத்தகத்தின் கதை  பற்றி....                                      

"ஆங்கில நாட்டில் ஆங்கில எழுத்தாளர்கள் சங்கம் என்று ஒன்று இருக்கிறது. நமது நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருப்பதுபோல. அதில் இருக்கும்  20 மெம்பர்கள் உலகம் முழுவதும் போகின்றார்கள். அந்த நாட்டு அரசாங்கம் அதற்கு பண உதவி செய்கின்றது. உலகத்தில் உள்ள எல்லா பகுதிக்கும் போய் ஆய்வு செய்வதுதான் நோக்கம்.ஒவ்வொருவர் கையிலும் 3500 கேள்விகள். அதற்கு அவர்கள் பதில் பெற வேண்டும். அதன் மூலம் உண்மை அறிய வேண்டும். அதில் ஒருவர், ஒரு பண்டிதர்  இந்தியாவிற்கு வருகின்றார். அவர் எடுத்தவுடன் இந்தியாவிற்கு வரவில்லை .முதலில் ஆலந்து நாடு, பின்பு பிரான்ஸ் நாடு, துருக்கி,எகிப்து அரபு நாட்டிற்கெல்லாம் சென்றுவிட்டு கடைசியில் இந்தியாவில் இருக்கும் .காசி நகரத்திற்கு வருகின்றார். அங்கு ஒரு இடத்தில் தங்குகின்றார்.அங்கு இருக்கும் அந்தணர்களோடு கலந்து உரையாடுகின்றார். அவர் இதுவரை சேமித்த ஆவணங்கள் மலைப்பை உண்டாக்குகின்றன.  90 சாக்குகளில் எடுத்து வந்த ஆவணங்கள் ஏறத்தாழ  9550 பவுண்டுகள் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு கொண்டுவந்தும் இதில் உண்மை இருக்கிறதா,இல்லையே என்பது அவருக்கு சோர்வைத் தருகின்றது. 

ஆவணங்களில் நிறைய தகவல்கள் இருக்கு.வரலாறுகள்,சிற்பங்கள்,ஆறுகள், தத்துவங்கள் என எல்லாவற்றைப்பற்றியும் தகவல்கள் எல்லாம் இருக்கு ஆனா எல்லாமே  முரண்படுது. உலகத்தில் எதுவுமே உண்மை இல்லையோ என்று நினைக்கின்றார். முரண்பாடுகளின் குப்பையாக தகவல்கள் இருக்கின்றதே எனப் பார்க்கின்றார். ஒரு நாட்டில் ஒரு மதம் என்று சொல்கிறான்.ஆனால் உண்மை இல்லை.இரண்டு மனிதர்கள் இருக்கிறாங்கே..அவர்களிடம் ஒற்றுமை இல்லை..எல்லாமே தவறா? ...எல்லோமே குப்பையா எனும் கேள்வி குடைகின்றது ...3500 கேள்விகள் கொண்டுவந்தால் கிட்டத்தட்ட 17500 பதில்கள். ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. ஒரு கேள்விக்கு 5 பதில்கள்...இதைக்  கொண்டுபோய் இலண்டனில் கொடுத்தால், எத்தனை பேர் வேலையை கெடுப்பது அவர்கள் வேலையைக் கெடுத்து .இந்தப் பண்டிதரைப் போல இன்னும் 19 பேர் இருக்காங்களே..அப்ப எவ்வளவு தீர்வுகள்... 3.5 இலட்சம் பிரச்சனைகள். இந்தப்பிரச்சனைகளுக்கு யாரிடம் தீர்வு கேட்பது ....என்று காசியில் உட்கார்ந்து அந்தப் பண்டிதர் புலம்புகின்றார். அப்போ அந்தக் காசியில் இருக்கும் இரண்டு அந்தணர்கள்,  அவர்கள் சொல்கிறார்கள். எங்க நாட்டிலே, ஒரிசா கோவிலில் இருக்கும் தலைமை.அந்தணர் பெரிய அறிவாளி-அவருகிட்டே கேள்விகேட்டா உங்கள் சந்தேகமெல்லாம்  தீர்ந்து விடும் என்று சொல்கிறார்கள்...

உடனே அந்தப் பண்டிதர் இந்திய நாட்டில் இருக்கும் ஆங்கிலேயர்களுக்கான சங்கத்தை அணுகுகின்றார். அவர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்து தருகின்றனர். அப்ப எல்லாமே நடைதான்.கார்,பஸ் எல்லாம் கிடையாது. நடக்க முடியவில்லையென்றால் பல்லக்கில் தூக்கிப்போவார்கள். அந்தப் பண்டிதர் போகும்  பல்லாக்கைத் தூக்கிட்டு போக 4 பேர். மாத்து கைக்கு 4 பேர். காசியிலிருந்து கல்கத்தா போய், கல்கத்தாவிலிருந்து ஒரிசாவில் இருக்கும் அந்தப் பூரி ஜெகனாதர் கோவிலுக்குப் பல்லாக்கிலே போகின்றார். 11-வது நாள்தான் போய்ச்சேருகின்றார். பல்லக்குத் தூக்க ஆள்,சமைக்க ஆள், ஒட்டகம், 25 பேருக்கு மேல் ஆட்கள் எனப் படையோடு போவது போல போகின்றார். அங்கே போனா அவ்வளவு எளிதாக அந்த தலைமை அந்தணரைப் பார்க்க முடியவில்லை.நீ பேண்ட் சர்ட்.போட்டு வந்திருக்க..சூ போட்டிருக்க .பரங்கி இனத்தை சேர்ந்தவன். உன்னை நாங்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கின்றார்கள்.எப்படியாவது நான் அவரைப் பாக்கணும்ன்னு பண்டிதர் கெஞ்சுகின்றார்.அப்ப எல்லாத்தையும் கழட்டு..நாங்க சொல்ற மாதிரி உடையை உடித்திக்கிட்டு உள்ளே வா என்று சொல்ல ஆடையை மாத்திக்கிட்டு ,காவி வேட்டியைக் கட்டிக்கிட்டு உள்ளே போகின்றார். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னாலேயே அவரை உட்காரவைத்து விடுகின்றார்கள். எங்க நாட்ல் அந்தணர்க்கு முன்னால் எவ்வளவு எவ்வளவு தூரத்தல ஒவ்வொருத்தரும் உட்காரணும்ன்னு நடைமுறை இருக்கு, அதனாலே நீ அப்பாலே உட்காரு என்று சொன்னவுடன் அந்தப் பண்டிதர் .குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் உட்கார்கின்றார்.

தலைமை அந்தணர்க்கு இருக்கும் வசதி நம்ம நாட்ல மன்னருக்குக் கூடக்கிடையாதே என்று பண்டிதர் நினைக்கும் அளவிற்கு அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள்.தலைமை அந்தணருக்கும் இந்தப் பண்டிதருக்கும் இடையில் திரைகள் இருக்கு. ஆனாலும் பண்டிதருக்கு எப்படியாவது உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தலைமை அந்தணரிடம் கேள்விகளைக் கேட்கின்றார். முதல் கேள்வி உலகில் எல்லாமே பொய்யாத் தெரியது. அப்ப, உண்மையை எந்த வழியாக அறிந்து கொள்வது ? பதில்: அந்தணர்கள் வழியாகத்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.அடுத்த கேள்வி : .உண்மையை எங்கே போய்த்தேட முடியும் ? பதில் : வேதங்களில்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் அது அந்தணர்களுக்குத்தான் தெரியும்.சரி, கேட்ட பதிலை  யார் கிட்ட சொல்றது? பதில் : யார் கிட்டேயும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உண்மையை தெரிவிக்காத கடவுள் குற்றவாளிதானே ? என்று பண்டிதர் கேள்வி கேட்கின்றார் பதில் இல்லை,பேசாம இருக்கின்றார்கள்.யார் கிட்டேயும் சொல்லாமல் மறைத்து வைத்துத்திருக்கிற அந்தணர்கள் குற்றவாளிகள்தானே என்று கேட்க பண்டிதரை அடிக்க அந்தணர்கள் பாய்கின்றார்கள். தாக்கப்பாய்கின்றார்கள்.குழப்பம் ஏற்படுகின்றது.உடனே தலைமை அந்தணர் பண்டிதரை வெளியேறச்சொல்கின்றார்.

இரவு ஆகிவிட்டது. இப்போது இந்த இருட்டில் எங்கே போவது. இரவில் தங்கி பகலில் போகிறேன் என்று சொல்கின்றார். இல்லை நீ மிலேச்சன். கோயிலுக்கு அருகில் நீ தங்கக்கூடாது என்று சொல்கின்றார்கள். விதிப்படி தங்கக்கூடாது என்று சொன்னதால் பண்டிதர் கிளம்பி விடுகின்றார். அப்போது மின்சாரம் கிடையாது. இரவோடு இரவா மறுபடியும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல்லக்கில் அவரை உட்காரவைத்து தூக்கிச்செல்கின்றார்கள். போகும் வழியில் பயங்கர மழை...இடி மின்னல்...சூறாவளிக்காற்று .... ஒதுங்க எங்கேயாவது இடம் கிடைக்குமா என்று பார்க்கின்றார்கள். பாதுகாப்பான ஒரு இடம் போலத்தெரிய அடர்ந்த செடி,கொடிகளை அகற்றி விட்டு..ஒரு பாறைக்குக் கீழே போறாங்க .அதற்கு கீழே ஒரு சமவெளி இருக்கு . விளக்கு தெரியுது ...ஆள் நடமாட்டம் இருக்கிற.மாதிரி இருக்கு தூரத்திலே..சரி அங்கே போனா இந்த மழைக்குத் தப்பிக்கலாம் என்று எண்ணி நிற்கின்றார்கள். தூரத்தில் இருக்கும் நிலைமையைப் பார்த்துவர பல்லாக்கு தூக்கி ஒருத்தன் போறான்.

போனவன் திடுத்திடுவென அலறி அடிச்சுடிக்கிட்டு வர்றான். ஏதோ மிருகம்தான் இருக்கு போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு பண்டிதர் துப்பாக்கியை தயார் செய்கின்றார். ஓடி வந்தவன் 'அய்யோ, அங்கே பறையன் இருக்கான், பறையன் இருக்கான், குடும்பத்தோடு இருக்கிறான் " என்று அலறுகின்றான். பண்டிதன் கேட்கிறான் ' பறையன் என்றால் யார்? அவனும் மனுசன் தானே,அவனும் இந்தியன்தானே ' என்று கேட்கின்றான். ஆமாம், அவனும் இந்தியன்தான், ஆனால் அவன் பார்க்கக்கூடாதவன், தீண்டப்படதகாதவன் என்று சொல்கின்றான். அவனைத் தொட்டால் ஒன்பது  பிறவி அளவிற்கு எந்தக்கோவிலுக்குள்ளும் போகக்கூடாது . அவனைத்தொட்டால் அந்தப்பாவத்தை போக்க ஒன்பது தடவை கங்கையில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அந்தணர் கொடுக்க ,தலையில் இருந்து கால்வரைக்கும் மாட்டு மூத்திரத்தை வைத்து கழுவிக் குளிக்க வேண்டும்" என்று பலவிதமாகச்சொல்கின்றான். நாம் அங்கு போகக்கூடாது என்று அனைவரும் சொல்கின்றார்கள். ஆனால் பண்டிதர் நான் போகின்றேன் என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் தன்னந்தனியாக அந்த குடிசை இருக்கும் இடத்தை நோக்கிப்போகின்றார். 

அங்கே குடிசையில் இருக்கும் மனிதரைப் பார்க்கின்றார். பண்டிதரைப் பார்த்து பயப்படுகின்றான். நான் விருந்தினரை உபசரிக்கும் தகுதியில்லாதவன் என்று சொல்கின்றார். பண்டிதர் மறுத்து அவனோடு இணக்கமாகப் பேசுகின்றார்.அந்த குடிசை மனிதன் மிகச்சிறப்பாக .பழங்கள்,சாப்பாடு எல்லாவற்றையும் அளித்து அவனது மனைவி பரிமாற சாப்பிடச்செய்கின்றான். இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இரவு கட்டிலைக் கொடுத்து பண்டிதரைப் படுக்கச்சொல்ல நன்றாக உறங்கி விடுகின்றார். காலையில் பார்த்தால் குடிசை மனிதனும் அவனது மனைவியும் இடம் இல்லாமல் ஓரமாக உட்கார்ந்திருக்கின்றார்கள். அவர்களின் பெருந்தன்மையையும்விருந்து உபசரிப்பையும் பார்த்து வியக்கின்றார். பின்பு குடிசை மனிதனோடு பண்டிதர் பேச ஆரம்பிக்கின்றார். 

.உண்மையை எங்கே தேடுவது என்ற கேள்வியை பண்டிதர் கேட்க , குடிசைவாசி  நான் படிக்காதவன். உண்மையை அறிவைக் கொண்டு தேடாதே .நல்ல உள்ளத்தோடு தேடு. அறிவு உணர்ச்சி வசப்படும். ஆனால் நல்ல உள்ளம் அப்படி உணர்ச்சி வசப்படாது..நல்ல எண்ணத்தோடு கேள்.நல்ல உள்ளத்தோடு தேடு. உண்மை கிடைக்குமென்று சொல்கின்றார். உண்மையை ..எங்கே தேடுறது.?...இயற்கையில்தான் தேடவேண்டும். இயற்கை மட்டும்தான் உண்மை.நீ சாக்கு சாக்காக வைத்திருப்பது எல்லாம் பொய். முரண்களால் ஆக்கப்பட்ட புழுகு மூட்டைகள்..இயற்கையை கண்ணுக்கு முன்னால் பார்க்கிற..அதில் உண்மையைத்தேடு.எழுது வைத்திருக்கிற எழுத்துக்கள் எல்லாம் மாறும் .இயற்கை இருந்தது...இயற்கை இருக்கிறது. இயற்கை இருக்கும்.இதைப் படித்தவுடன் அய்யா சொன்ன கருத்துக்கள்  ஞாபகம் வந்தது. நான் சொன்னேன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே, சிந்தி, ஒப்பிட்டுப் பார், உண்மை என்று உணர்ந்து கொண்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டு விடு என்றார். அப்படி அந்தக் குடிசையில் இருப்பர் சொல்கின்றார். பண்டிதர் . கண்ட உண்மையை அனைவரிடமும் கூறலாமா ? என்று கேட்க நன்மக்களிடம் கூறலாம் என்று சொல்கின்றார். பண்டிதர் வியந்து போகின்றார்

 எல்லாமே வேதத்தில் இருக்கிறது, ஆனால் அது அந்தணர்களுக்கு மட்டும்தான், அடுத்தவர்களுக்கு சொல்லமாட்டோம் என்று சொல்லும் அந்தத் தலைமை அந்தணர் அவ்வளவு செல்வாக்காக, மன்னரை விட அதிக அதிகாரம் படைத்தவராக இருக்கின்றார்கள். நீ அறிவில் அற்புதமாக இருக்கிறாய் ? நீ ஏன் இப்படி காட்டிற்குள் இருக்கின்றாய் என்று கேட்டபோது அந்தக் குடிசை வீட்டில் இருக்கும் பறையன் தன் வரலாறை சொல்ல ஆரம்பிக்கின்றார். நீ சொன்ன அந்த அந்தணர்கள் மிகத்தந்திரமாக சில ஏற்பாட்டை செய்துகொண்டார்கள். அவர்கள் பிரம்மா என்னும் கடவுளின் தலையில் இருந்து பிறந்ததாகவும், நாங்கள் எல்லாம் காலில் இருந்து பிறந்ததாகவும் எழுதி வைத்துக்கொண்டார்கள்.பின்பு எங்களைக் கடவுளின் பேரைச்சொல்லி ஒதுக்க ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல பிரம்மா என்னும் கடவுள் ஒரு தடவை உணவு கேட்டபோது மனித சதையைகடவுளுக்கு நாங்கள் படைத்ததாக சொன்னார்கள். பொய்யை திருப்பித்திருப்பி சொல்ல, சமூகம் அதனை நம்ப ஆரம்பித்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் நான் இயற்கையோடு நடந்தேன். நகரத்தை விட்டு வெகுதூரம் வந்து இங்கு வந்து வசிக்கின்றேன். நாங்கள் இன்பமாக நிம்மதியாக இருக்கின்றோம். என்று சொல்ல இந்தப் பெண் என்று பண்டிதர் கேட்கின்றார்.

            எங்களை பகலில் பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்ததால் இரவில் மட்டும் வெளியே வந்தேன். எனக்கு நகரத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அப்படி ஒருமுறை நகரத்திற்கு சென்று அரண்மனைக்குச்சென்றேன். அங்கு மாட மாளிகை, கூட கோபுரம் இருக்கிறது. ஆனால் அங்கு இருக்கும் அரசனுக்கோ மக்களுக்கோ நிம்மதி இல்லை. என்னை அறிந்துகொண்டு எனக்கு உணவு கொடுக்க மறுத்துவிட்டார்கள். ஆதலால் சுடுகாட்டில் தங்கினேன். பிணத்திற்கு வைக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டு அங்கு வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு,மூன்று இரவுகளில் இந்தப்பெண் மட்டும் தனியாக வந்து அழுதுகொண்டிருப்பதைப்பார்த்தேன். இந்தப்பெண் பார்ப்பணப்பெண். இவளது கணவன் இறந்துவிட்டான். அந்தக் கணவனின் இறந்த உடலோடு இந்தப்பெண்ணையும் சேர்த்து எரிக்க இருந்தார்கள். ஆதலால் சாகப்போவதை எண்ணி, ஏற்கனவே தனது அப்பாவின் சிதையோடு உயிரோடு எரிக்கப்பட்ட அம்மாவின் சாம்பலைப் பார்த்து, பார்த்து இந்தப்பெண் அழுதுகொண்டிருந்தாள். நான் இவரிடம் என்னோடு நீ வந்தால் உயிரோடு வாழலாம், இன்பமாக வாழலாம் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சரி என சம்மதித்தார். இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து வெகுதூரம் வந்து இங்கு அடர்ந்த காட்டிற்குள் இன்பமாக ஒரு குழந்தையோடு வாழ்கின்றோம் என்று தெரிவிக்கின்றார். அந்த இன்பமான சூழலைப் பார்த்து பண்டிதர் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றார். அந்தக் குடிசைவாசி, அவனது மனைவி, அவர்களின் குழந்தை, ஒரு நாய், ஒரு பூனை அருகருகில் என மகிழ்ச்சி பொங்கும் இல்லமாக அந்தக் குடிசை இருப்பதை பண்டிதர் காணுகின்றார்.

 தன்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் சரியான விடை கிடைத்ததால் குடிசைவாசிக்கு ஏதாவது பரிசு கொடுக்க பண்டிதர் விரும்புகின்றார். எதையும் வாங்குவதற்கு மறுக்கும் குடிசைவாசி, புகைக்குடி குழாயை மட்டும் பெற்றுக்கொள்கின்றார். பிரிய முடியாமல் பிரியும் மன நிலையில் பண்டிதர் அந்த இந்தியக் குடிசையை விட்டு வெளியே வருகின்றார்.ஜெகந்னாத்து கோவிலில் இருக்கும் அந்த அந்தணரைவிட ஆயிரம் மடங்கு இன்பம் உள்ளவனாக, அறிவு உள்ளவனாக நீ இருக்கிறாய் . நீ துன்பத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்று சொல்கின்றாய். கேள்விகளுக்கு விடை சொன்னாய்...உலகம் முழுவதும் தேடினேன்...உன்னிடம்தான் எனக்கு பதில் கிடைத்தது என்று மகிழ்ந்து குடிசைவாசியை கட்டித்தழுவி விடைபெறுகின்றார். அவரது நாட்டிற்கு சென்று இந்த பதில்களை ஆங்கில எழுத்தாளர் சங்கத்தில் சமர்ப்பிக்கின்றார். தன்னிடம் வருபவர்களுக்கு, குடிசைவாசி சொன்ன பதில்களையே அறிவுரையாகச்சொல்கின்றார்.

        மிகச்சின்ன புத்தகம். ஆனால் ஏகப்பட்ட விசயம் உள்ளே இருக்கு. படிக்க, படிக்க நமக்கே வியப்பாகவும், உண்மையை தெரிஞ்சுக்கிற வாய்ப்பாகவும் இருக்கு " என்று அ.முருகானந்தம் ஏறத்தாழ 35 நிமிடங்கள் இந்தப்  புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.


 68 பக்கங்களே உள்ள இந்தப் புதினத்தைப் பற்றி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூடப்பேச இயலும். ஒரு தாழ்த்தப்பட்டவரும், பார்ப்பனப்பெண்ணும் இணைந்து எவ்வளவு இன்பமாக,வாழ்கின்றார்கள் என்பதனை ஒரு 220,230 ஆண்டுகளுக்கு முன்னால் கதையாகச்சொன்ன புத்தகம் மிக மிக முக்கியமான புத்தகம். பார்ப்பனர்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும் புத்தகம்.திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக,பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற,அம்பேத்காரிய பொதுவுடமைத் தோழர்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள்.
 மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லுங்கள்.

Friday, 19 October 2018

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (1).....

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (1).....


5.8.2018 அன்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் மதுரை முனைவர் வா. நேரு அவர்கள், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 240 பக்கங்கள் கொண்ட 'காக்கைச் சோறு' என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை - எனக்கு வழங்கினார்.

படித்தேன் - சுவைத்தேன் - கவிக்கோவின் இலக்கியச் செறிவும், தமிழ்அறிவும் காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகங்கள். காலம் அவரை 'இயற்கையின் கோணல்' புத்தி காரணமாக பறித்துக் கொண்டது என்பது கொடுமையோ கொடுமை!

நல்ல பேராசிரியராக அவர் இருந்து அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்றும் புகழ் பெற்ற பேச்சாளர்கள் - கவிஞர்கள் - எழுத்தாளர்கள் ஒளி வீசுகிறார்கள்.

கவிக்கோவின் முதல் கட்டுரையே இன்றைய தமிழ்ப் பாட புத்தகங்களில் உள்ள குறைபாட்டினைச் சுட்டி 'கடிதோச்சி மெல் எறிதலை'ச் செய்வதாக உள்ளது!

பள்ளிகளில் நம்மில் பெரும்பாலோருக்குப் பாடமாக அமைந்ததையே ஆசிரியர் அப்துல் ரகுமான் அக்கட்டுரையில் சுட்டி, நெற்றியடிக் கேள்வியை நேர்மையுடன் கேட்கிறார்.

புத்தாக்கச் சிந்தனைகள் இளைய தலைமுறைக்கு வர, பாட புத்தகங்கள் அறிவை, விரிவு செய்து, தூண்டத் துணை நிற்க வேண்டும்.

இன்று...? அப்படி இல்லையே! இதோ சில எடுத்துக்காட்டுகள்.

எடுத்துக்காட்டு ஒன்று (பக்கம் 12)

'பூதகியின் பால்' என்ற முதல் கட்டுரையின் முதல் பகுதி இன்று (நாளை மறுபகுதியைப் பார்க்கலாம்).

"கஸபியான்கா கதையை ஒரு நாள் வகுப்பில் சொன்னேன்.

கஸபியான்கா ஒரு மாலுமியின் மகன். அவனுக்குக் கப்பலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவன் தந்தை ஒருநாள் அவனை அழைத்துச் சென்று கப்பலைச் சுற்றிக் காட்டினார்.

அப்போது திடீரென்று கீழ்த் தட்டிலிருந்து "தீ... தீ..." என்று கூக்குரல் எழுந்தது. கஸபியான்கா வின் தந்தை அவனை மேல் தட்டில் ஓரிடத்தில் நிற்க வைத்து, "ஏதோ தீ விபத்துப் போலிருக்கிறது. நான் கீழே சென்று பார்த்து வரும் வரை இங்கேயே நில். இங்கிருந்து அசையாதே" என்று சொல்லி விட்டுக் கீழே போனார்.

போனவர் திரும்பி வரவில்லை. தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். தீ மேலே பரவி கஸபியான்காவைச் சூழ்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் "சீக்கிரம் நீரில் குதி. அப்போதுதான் தப்பிக்க முடியும்" என்று அவனைப் பார்த்துக் கத்தினர். அவனோ "உயிர் போனாலும் பரவாயில்லை. தந்தை சொல்லைத் தட்டக் கூடாது" என்று அங்கேயே நின்றான். அதனால் அவனும் தீயில் சிக்கி உயிரிழந்தான். 'தந்தை சொல்லைத் தட்டாத தனயன்' என்று எல்லோரும் அவனைப் பாராட் டினார்கள்.

நான் இந்தக் கதையைக் கூறிவிட்டு "இந்தக் கதையின் மூலம் நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்?" என்று மாணவர்களைக் கேட்டேன்.

ஒரு மாணவன் சொன்னான்: "தந்தை சொல் கேட்டால் ஆபத்துத்தான்" மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

அந்த மாணவன் சொன்னதில் தவறேதுமில்லை. ஒரு பரிசோதனையாகத்தான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த பதிலைத்தான் மாணவன் சொன்னான்.

இது கதை கூட அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம். உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தந்தை வாக்கை மீறக் கூடாது என்று தன் உயிரையும் தியாகம் செய்த கஸபியான்காவின் உறுதி பலரை மனம் உருகச் செய்திருக்கிறது. அதனால்தான் இந்தச் சம்பவம் பல நாடுகளுக்கும் பரவி நம் நாட்டிலும் பாடப் புத்தகங்களில் இது தவறாமல் இடம் பெறுகிறது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் ஓர் எதிர்மறையான விளைவை  ஏற்படுத்தும் சாத்தியம் இதில் இருப்பதை உணரலாம்.

மனிதன் எதையும் அதன் பலனைக் கொண்டுதான் மதிப்பான்.

இந்தச் சம்பவம் எதை உணர்த்துகிறது?

தந்தை சொல் தட்டாத தனயனின் தியாகத்தை மட்டுமா? தந்தை சொல் கேட்டதால் அல்லவா அவன் அநியாயமாக உயிரிழக்க நேர்ந்தது? இப்படியும் எண்ண இடம் இருக்கிறதல்லவா?

ஏற்கெனவே தந்தை சொல் கேட்காத தனயர்கள் பெருகி வரும் இக்காலத்தில் இத்தகைய கதைகள் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி விடாதா?

தந்தை சொல் கேட்டதால் ஒருவன் ஆபத்திலிருந்து தப்பினான் என்பதாகக் கதை அமைந்திருந்தால் அல்லவா படிப்பவனுக்கும் தந்தை சொல் கேட்பது நல்லது என்ற எண்ணம் ஏற்படும்? எதிர்மறையான அல்லது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும் பல கதைகளைப் பாடங்கள் என்ற பேரில் நாம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கெ()டுத்துக் கொண்டிருக்கிறோம்".

நமது பாடத் திட்டங்கள் விழிப்புணர்வு பெறும் வகையில், சமயோசிதமாக நடந்து கொள்ளும் முறையில் இன்று பெரிதும் சொல்லிக் கொடுக்கப்படு கின்றனவா? இல்லையே; அவர் கேட்கும் கேள்விப்படி அறிவை, தன்னம்பிக்கையுடன் சரியான முடிவுகளை எடுக்க விடாமல் கெடுத்துக் கொண்டும் - தடுத்துக் கொண்டும் தானே உள்ளது!

பழைய காக்கை - நரிக் கதையை....

(நாளை பார்ப்போம்)

நன்றி : வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்....விடுதலை 20.10.2018(வெளியூர்)

Sunday, 14 October 2018

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

ஆசிரியர்கள்               : சி.லட்சுமணன் &கோ.ரகுபதி..

வெளியீடு                 : புலம், திருவல்லிக்கேணி, சென்னை-5 98406033499

முதல்பதிப்பு              : ஜூன் 2016, மொத்த பக்கங்கள் 120 , விலை ரூ 100....


அண்ணல் அம்பேத்கர். “சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல்சுவரோ, கம்பி வேலியோ அல்ல; சாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ எனக் கூறினார்.அந்தச் சாதிய  மனநிலை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா...இல்லை,இல்லை, இடை நிலைச்சாதியினர் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை கூற இயலும். அந்த சாதிய மனநிலை ஒடுக்கப்படுகிற மக்களாகிய பட்டியல் இனத்தவரிடம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் தரும் புத்தகமாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதுதான் 'தீண்டாமைக்குள் தீண்டாமை : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் " என்னும் புத்தகம்.அண்மையில் வெளிவந்துள்ள புத்தகங்களுள் மிக முககியமானது என நான் நினைக்கின்றேன்.கள ஆய்வுகளாக பல்வேறு ஊர்களில் வசிக்கும் புதிரை வண்ணார் சாதியில் பிறந்தவர்களின் பேட்டியும் மனக்குமுறலும் நடைமுறையில் உள்ள சாதியக்கொடுமை விவரிப்பும்...எழுத்தாளர் இமையம் அணிந்துரையில்  சொல்வதைப்போல " தமிழக, இந்திய சாதிகளைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் வெளிச்சத்தைத் தந்துள்ள " புத்தகம் இது..சாதி ஒழிப்பில் விருப்பம் உள்ள அனைவரும் படிக்கவேண்டிய ,மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய புத்தகம் இது.

"இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் அதெல்லாம் ஒரு காலத்தில்தான் இருந்தது' என்று ஒருவர் சொன்னால் அவர் நடிக்கிறார் என்று பொருள்.பள்ளர், பறையர், அருந்ததியர் எங்கே குடியிருக்கவேண்டும் , எந்தப்பாதையில் நடக்கவேண்டும் , எந்தப்பாதையின் வழியாகப்பிணத்தை எடுத்துச்செல்லவேண்டும், எந்தத்தெருவில் தேரை ஓட்டவேண்டும் , எங்கே நின்று சாமி கும்பிடவேண்டும் , எங்கே பிணத்தைப்புதைக்க வேண்டும், எங்கே தண்ணீர் எடுக்கவேண்டும் , எந்தப்பள்ளியில் படிக்கவேண்டும் , எந்த ரேஷன் கடையில் பொருள் வாங்கவேண்டும்  என்பதெல்லாம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த வரையறையின்படிதான் சமூகம் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறது.உயர் வகுப்பினரும் இடைநிலை.வகுப்பினரும் பறையர், பள்ளர், அருந்ததியர்களுக்கு என்னென்ன விதமான சமூகக் கட்டுப்பாடுகளை ஒழுக்கவிதிகளை , வரையறைகளை வகுத்துள்ளனரோ, எவற்றையெல்லாம் பின்பற்றக் கட்டாயப்படுத்தப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் அப்படியே புதிரை வண்ணார் சமூகத்தினர் பின்பற்றவேண்டும் என்று பறையர், பள்ளர், அருந்ததியர் சமுகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர்...தாழ்த்தப்பட்டவர்கள்கூட , பிறப்பின் அடிப்படையிலான நிரந்தரமான அவமானத்தைச் சந்திக்கிறவர்கள்கூட , மற்றவர்களைப் பிறப்பின் அடிப்படையில் அவமானப்படுத்துவதில் , இழிவு செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை...ஒடுக்குவது,சுரண்டுவது,இழிவு செய்வது இதுதான் சாதிக்குரிய பெருமைகளாக,அடையாளங்களாக இருக்கின்றன  " என இமையம் தொடர்ந்து எழுதுகின்றார். மிகவும் கவனித்தில் கொள்ள வேண்டிய அணிந்துரை இமையத்தின் அணிந்துரை.மிக விரிவாக அணிந்துரை அளித்திருக்கின்றார்.

இந்த நூலின் முன்னுரையில் ஆய்வுகளை எதன் அடிப்படையில் மேற்கொண்டோம் என்பதனை நூல் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். முதல் அத்தியாயம் " அதிகாரமற்றோரின் படிநிலை- 'அதிகார நிலைப்பாடு' என்னும் தலைப்பில் உள்ளது. இதில் புதிரை வண்ணார் என்ற சாதியின் படிநிலை பற்றியும் அவர்களின் வாழ்நிலை பற்றியும்,அடிமை போன்ற வாழ்க்கை பற்றியும் -'குடும்ப ஒழுங்கு,ஊர் ஒழுங்கு, அடிப்படை உடமைகள், கொத்தும் ஊர்ச்சோறும், அடிமை முறைக்கு ஒப்பான இணைப்பு என்னும் தலைப்புகளின் கீழ் மிக விரிவாக ஆய்வாளர்கள் நேர்முகப்பேட்டிகளோடு கொடுத்துள்ளனர்.

அடுத்த அத்தியாயம் ' தீண்டாமையும் ஒடுக்குமுறையும் சேரியும் வண்ணாக்குடியும் ' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,புதிரை வண்ணார்கள் நடமாட்டமே தடை செய்யப்பட்ட வெளிக்குள் இருந்தது,பண்பாட்டு ஒடுக்குமுறை,தண்ணீரும் தீண்டவண்ணாரும்(புதிரை வண்ணார்),பொருட்களைத் தொட்டாலும் தீட்டு,மரியாதையின்றி அழைத்தல்,பாலியல் ஒடுக்குமுறை,சொத்துரிமை மறுப்பு போன்ற தலைப்புகளில் வரும் செய்திகள் புதிய செய்திகள் மட்டுமல்ல ,சாதி என்பது எவ்வளவு கொடூரமானது என்பதனை புரிந்துகொள்ள உதவும் செய்திகள்.

மூன்றாவது அத்தியாயமாக இருப்பது ' இயக்கமும் போராட்டமும் ' என்னும் தலைப்பில் இருக்கிறது. புதிரை வண்ணார்களுக்கென ஒரு சங்கம் 1940-களில் தொடங்கப்பட்டது என்னும் செய்தி தொடங்கி சாதிச்சான்று பெறுவதற்கு இன்றும் கூட அந்த புதிரை வண்ணார் சாதியைச்சார்ந்தவர்கள் படும் துன்பங்கள் விரிவாக, கள ஆய்வுகளோடு தரப்பட்டிருக்கின்றன.சாதிச்சான்று தருவதற்கு வருவாய்த்துறையைச்சார்ந்த அதிகாரிகள் " உன் வீட்டில் வெள்ளாவி இல்லை, கழுதை இல்லை, துணிகள் இல்லை, நீ வண்ணான் என்று கூறினால் நாங்கள் எப்படி நம்புவது ? " (பக்கம் 66) என்று கேட்டார்கள் என்பதுவும் அதனைத் தொடர்ந்து குலத்தொழில் செய்பவர்களுக்கு மட்டும்தான் புதிரை வண்ணார் என்னும் சாதிச்சான்றிதழ் தருவோம் என்று சொல்வதையும் ஆதாரங்களோடு புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றார்கள். " ஒருவர் சாதிச்சான்று பெறுவதற்கு அடிப்படையான தகுதி அந்தச்சாதியில் பிறந்திருப்பதா? அல்லது தன்னுடைய பாரம்பரியத் தொழிலைச்செய்வதா ? " பக்கம் 72 என்னும் கேள்வியையும் எழுப்பியிருக்கின்றார்கள். " சான்றிதழ் பெறுவது என்பது அவர்களின் சாதி அடையாளத்தை மீட்கும் செயல் அல்ல.மாறாக அது ,உயிர் வாழ்வதற்கான போராட்டம் " எனக்குறிப்பிடுகின்றார்கள்.

தொடர்ந்து மதமாற்றம்,இடம் பெயர்வு, வெளி மாநிலம் சென்று பிழைத்தல், வெளி நாடு சென்று பிழைத்தல் போன்றவைகள் மூலமாக எப்படி அவர்கள் அந்தச்சாதி இழிவிலிருந்து மாறிவிட நினைக்கின்றார்கள், அது எவ்வளவு தூரம் சாத்தியமாயிருக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகளோடு கொடுத்துள்ளார்கள்.மறைமுகப்போராட்டம்,நிலரிமைப்போராட்டம்,அரசியல் பங்கேற்பு,உற்பத்தி மாற்றம் ஏற்படுத்திய தாக்கம் போன்ற பலவித தலைப்புகளில் கொடுத்துள்ள தகவல்கள் சாதியின் தாக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடிகின்றது.

காந்தியார் " நாமே துவைக்க வேண்டும், நாமே முடி திருத்திக்கொள்ள வேண்டும் :" போன்று சொன்னபோது தந்தை பெரியார் அனைத்திற்கும் எந்திரங்கள் வரவேண்டுமென்றார். வாசிங்மெசின் என்னும் இயந்திரம்  பல வீடுகளில் வந்தபிறகு புதிரை வண்ணார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை எண்ணத்தக்கவை. மேல் ஜாதிக்கு வெளுக்கும் வண்ணார்கள் ஆற்றில் மேல்பகுதியில் துவைக்கவேண்டும், அவர்கள் துவைக்கும் பகுதியிலிருந்து வரும் தண்ணீரில்தான் தீண்டவண்ணார் துவைக்க போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன என்பதெல்லாம் நான் அறியாத செய்திகள். இப்படி நிறைய செய்திகள் இந்த நூலில் உள்ளன.

முடிவாக ஒரு கருத்தை அழுத்தமாக சொல்கின்றார்கள். சாதி இந்துக்கள் தாங்கள் செய்யும் சாதியை அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு இந்த மாதிரியான புத்தகங்களை பயன்படுத்த பார்ப்பார்கள். அவர்களுக்கு " படிநிலை வர்ணாசிரம முறையில் இருக்கின்ற ஒடுக்குமுறையும் (அல்லது தலித் அல்லாத பிற சாதிய அமைப்புகளிடம் உள்ள படி நிலை ஒடுக்குமுறையும் ) தலித் இனக்குழுவில் உள்ள ஏற்றத்தாழ்வும் சமமானதல்ல.அப்படிச்சமமாகப் பார்க்கவும் கூடாது,பார்க்கவும் முடியாது.ஏனெனில் தலித்துகள் மீது தலித் அல்லாதவர்கள் கொண்டுள்ள ஆதிக்கமும்,ஒடுக்குதலின் தன்மையும் வீரியமும் மிகக் கொடுமையானது " பக்கம்(104) எனக்குறிப்பிடுகின்றனர். உண்மைதான் இந்தப்புத்தகம் சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக சாதி அமைப்பை, அதன் படி நிலைத்தன்மையை புரிந்து கொள்வதற்கு உதவும் புத்தகம்.

பின் இணைப்பாக ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்கள் எழுதிய 'சவ ஊர்வலம் ' என்னும் சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலின் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கு அந்தச்சிறுகதை உதவுகிறது. மிகுந்த துயரத்தோடுதான் கதையை வாசித்து முடிக்க நேர்கிறது. இதுதான் எதார்த்தமான நிலை. இந்தச்சாதி என்னும் இழிவை நமது மக்கள் எப்போது முழுமையாக புரிந்துகொள்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறிதான் என்றாலும் அந்தக் கேள்விக்குறிகளுக்கு பதில் இது மாதிரியான புத்தகங்களே எனச்சொல்லலாம். 

பார்ப்பனர்களுக்கு பிறப்பிலேயே உயர்வைத்தரும் இந்த சாதி அமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என குருமூர்த்தி போன்ற அய்யர்கள் தவிக்கிறார்கள்.ஆயிரம் உண்டிங்கு சாதி என பம்மாத்தாய் எழுதுகிறார்கள்.இழித்தவாயனாய் கிடைக்கும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்கள் சிலரை வைத்து சாதி வேண்டும் எனச் சொல்லவைக்கின்றார்கள்.எந்த நிலையிலும் மக்கள் தொகையில் 80,90 சதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து விடக்கூடாது என மிகக் கவனமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் " ஒடுக்குமுறையை மட்டுமே மேற்கொள்கிற ஒரே சாதி பார்ப்பனர்கள்தான் " என்பதனைப் புரிந்துகொள்ளவும் "ஆதிக்கத்திற்குள்ளாகின்ற சாதியே மற்றொரு புறத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவும் இருக்கிறது " என்பதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைவதற்கான புரிதலையும் இதைப் போன்ற புத்தகங்கள் கொடுக்கின்றன.படிக்க வேண்டிய புத்தகம்.

Sunday, 7 October 2018

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்...சுப.வீரபாண்டியன்

அண்மையில் படித்த புத்தகம் : குடும்பமும் அரசியலும்
ஆசிரியர்                                          : சுப.வீரபாண்டியன்
வெளியீடு                  : வானவில் புத்தகலாயம்,சென்னை-17. 044-24342771
முதல்பதிப்பு                                  : 2004 ஐந்தாம் பதிப்பு  : 2014
மொத்த பக்கங்கள்                      : 40 விலை ரூ 30

                            உருவத்தால் மிகச்சிறிய புத்தகம் ஆனால் உள்ளடக்கத்தால் மிகக் கனமான புத்தகம். முதல் பதிப்பின் பதிப்புரையை தமிழ் முழக்கம் செ.சாகுல் அமீது அவர்களும் 4-ஆம் பதிப்பின் பதிப்புரையை சுப.புகழேந்தியும் எழுதியிருக்கின்றார்கள்.முதல் பதிப்புக்கான முன்னுரையையும் 4-ஆம் பதிப்புக்கான முன்னுரையையும் நூலின் ஆசிரியர் அய்யா சுப.வீ. எழுதியிருக்கின்றார். 'என்ன காரணத்தினாலோ இச்சிறு நூலை மட்டும் நான்கு முறை எழுத நேர்ந்தது, இப்பொழுதும் இதனை ஒரு விவாத மேடையில்தான் வைக்க விரும்புகிறேன் " என்று முன்னுரையில் அய்யா சுப.வீ  எழுதுகின்றார். உண்மைதான் ஒரு விவாதத்தின் தொடக்கமாகத்தான் இந்த நூல் அமைந்திருக்கிறது, அதனால் தான் நூலே கேள்வி பதில் அமைப்பில் உள்ளது எனலாம். 

              " அரசியலையும் குடும்பத்தையும் பிரிக்க முடியாது;பிரிக்கவும் கூடாது " என்று முதல் பக்கத்து  பதிலிலேயே நூல் ஆசிரியர் கூறி விடுகின்றார். குடும்பத்து உறுப்பினர்கள் அரசியலற்று இருந்தால் அவர்களை நாம் ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? என்னும் கேள்விக்கு " அரசியலற்று இருப்பதே ஒரு விதமான அரசியல்தான். " என்று விளக்கம் கொடுக்கின்றார். நம் அரசியல் எது? எனும் வினாவிற்கு "தமிழின உணர்வு,சாதி மறுப்பு,மதவெறி எதிர்ப்பு,பொருளியல் சமத்துவம்,பகுத்தறிவு,பெண் விடுதலை ஆகியனவற்றை முன்னிறுத்தித் தொண்டாற்றுவதே நம் அரசியல் .சுருங்கக் கூறின் 'மானமும் அறிவும் 'கொண்ட மக்களாய்த் தமிழின மக்களை ஆக்குவதே நம் நோக்கம் " என நறுக்குத் தெரித்தாற்போல் பதில் இருக்கிறது. 

                 ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சின் சாரமாக பக்கம் 12-ல் " வீட்டைத் திருத்திய பின்பே வெளியில் வந்து பேசவேண்டும் என்னும் அறிவுரை நியாயமானதுதான்.ஆனால் நடைமுறைச்சாத்தியமற்றது...அரசியலில் உள்ள சுதந்திரம் ,சமூகக் கருத்தியலிலும் உண்டுதானே " என்று குறிப்பிடுகின்றார். அடுத்த கேள்வியில் " வீட்டைத் திருத்தி முடித்தபின் தான் நாட்டைத் திருத்த முயற்சிக்க வேண்டும் என்னும் வாதம் மட்டுமே இங்கு  மறுக்கப்படுகின்றது " என்று குறிப்பிடுகின்றார். இருப்பதிலேயே குடும்பம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு. எனது உடன் பிறந்த தம்பி மிகத்தீவிர பக்தன் .என்னை விட 4 வய்து இளையவன். இருபதுகளில் அவனைத் திருத்த முயற்சித்துவிட்டு பின்பு விட்டுவிட்டேன். கால் நூற்றாண்டிற்கு மேல் ஓடிவிட்டது.  அவனைத் திருத்திவிட்டுத்தான், மாற்றி விட்டுத்தான் நான் நாத்திகம் பேசுவேன் என்று முடிவெடுத்திருந்தால்  வாழ் நாள் முழுக்க நான்  நாத்திகமே பேசியிருக்க முடியாது. இதனை ஆத்திகர்கள் மிகக் கவனமாகச்செய்கின்றார்கள், உனது வீட்டிலேயே பக்தன் இருக்கிறான், நீ நாத்திகம் பேசுகிறேயே என்று கேள்வி கேட்கும்போது தடுமாறத்தேவையில்லை, ஆமாம் அவன் வேறு, நான் வேறு என்று சொல்வது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளில் வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் உடன் பிறந்தவர்கள்,ஒரே குடும்பத்தில்  இருக்கின்றார்கள், அவர்களை யாரும் கேட்பதில்லை, ஆனால் சமூகக் கருத்தியலில் இருப்பவர்களை நோக்கி இப்படிச்சொல்வது அவர்களைச்செயல்பட விடாமல் ஆக்குவதற்கான ஒரு தந்திரம் என்பதனைக் குறிப்பிடுகின்றார் எனக்கொள்ளலாம். " Every body is unique " ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதுதான் உளவியலின் அடிப்படை. 

               " குடும்பம் ,சமூகம் ஆகிய இரு தளங்களிலும் ஒரே நேரத்தில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதே நம் எண்ணம். ஒன்று முடித்து இன்னொன்று என்பது நடைமுறைக்கு உகந்ததன்று. இன்னொன்றையும் நாம் எண்ணிப்பார்க்கலாம். நம் குடும்பம் என்பதும் சமூகத்தின் ஓர் அங்கம்தான்.எனவே சமூக அளவில் நம் அரசியல் மேலோங்கும்போது ,குடும்பத்திற்குள்ளும் அது ஏற்கப்படும்." எனக் குறிப்பிட்டு விளக்குவது ஏற்புடையதாகவே இருக்கின்றது. 

               " போராட்டம்தான் வாழ்க்கை. தொடர்ந்து வீட்டிலும்,வெளியிலும் போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒரு போராட்டத்தில் தோற்று விட்டதால் ,இனி நாம் எந்தப்போருக்கும் தகுதியற்றவர்கள் என்று ஏன் கருத வேண்டும் " என்னும் கேள்வியும்(பக்கம் 16)  அதற்கு முன்னதாக தோழர் வாழ்வில் ஏற்பட்ட உறுத்தலும்,விலகலும் அதனை மாற்றுவதற்கான ஆசிரியரின் விவாதங்களும் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கவை...." குறைகளைச்சுட்டிக் காட்டித் திருத்த முயல்வது ஒரு வகை விமர்சனம். குறைகளைப் பெரிதுபடுத்தி ,கொள்கையிலிருந்தே விரட்டியடிப்பது இன்னொரு வகை. " என விமர்சனங்களை விவரிப்பது மனதில் கொள்ளத்தக்க விமர்சனம். 

                  அரசியல் பணியை எப்படித்தொடங்க வேண்டும்?,செயல்பாடுகளின் தொடக்கம் எப்படி அமைய வேண்டும்?, பெயர் மாற்றம், தமிழில் கையெழுத்திடுவது, சாதி ஒழிப்பு,தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது சாதி அரசியல் ஆகாதா? போன்ற கேள்விகளுக்குப் பதில்களை மிக நேர்மறையானதாகக் கொடுத்திருக்கின்றார். "சமூக அரசியல் கொள்கைகள் தங்கள் மனைவி /கணவனுக்கு உடன்பாடில்லை என்றால் ,குடும்ப நிகழ்வுகளை எந்த அரசியலின் அடிப்படையில் நடத்திச்செல்வது ? " என்னும் கேள்வியும் அதற்கான பதிலும் மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டும் . ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்ட  வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொண்ட இணையர்கள் கூட விவாகரத்து பெற்றுக்கொள்வதை நாம் அறிவோம். இதில் சிக்கல் எங்கே நிகழ்கிறது? வெவ்வேறு கொள்கை உடையவர்கள் கணவன், மனைவியாக வாழ்வதில் உள்ள பிரச்சனைகள், அன்பு செலுத்துதல் , தேயாத கற்களாய் இருந்தால் என்ன செய்வது போன்றவற்றை ஆசிரியரின் பார்வையில் கொடுத்திருக்கின்றார். இன்னும் விரிவாக, பெண்கள் நிறையப் பேர் கலந்துகொண்டு விவாதிக்கும் விவாதக் களமாக இந்தத் தலைப்புகள் மாறவேண்டும். 

                 "நம் பெற்றோர்களிடமும், நம் பிள்ளைகளிடமும் நம் அரசியலைக் கொண்டு செல்வது எப்படி? " என்னும் கேள்வி கேட்டு அதற்கான விடையை விரிவாகவே கொடுத்திருக்கின்றார். பிள்ளைகள் நம் அரசியலுக்கு வருவதில் மிக முக்கியமான பண்பாக நமது நேர்மையும், நமது கொள்கை பிடிப்பும் அமையும் என்பது எனது கருத்தாகும். " மதிக்கப்படும்,நேசிக்கப்படும்,நம்பப்படும் இளைஞர்களே முதிர்ச்சியும் ,பொறுப்பும் மிக்க குடிமக்களாக உருவெடுப்பார்கள் .அத்தகைய பிள்ளைகளோடு ,நம் கொள்கைகள் குறித்து பேசுவதும், அவர்களிடம் கொள்கைப் பிடிப்பை உருவாக்குவதும் எளிய செயலாக இருக்கும் " எனக்குறிப்பிடுகின்றார்.

                 " ஒத்த அரசியல் கருத்துடைய குடும்பத்தினர்,ஒருவரோடொருவர் கலந்து உறவாடுதல் நல்ல பயன்களைத் தர வாய்ப்புண்டா ? " என்னும் கேள்விக்கு " மிக நல்ல பயன்களை விளைவிக்கும் " எனக் குறிப்பிட்டு பல்வேறு செயல்பாட்டு திட்டங்களைக் குறிப்பிடுகின்றார். திராவிடர் கழகத்தால் நடத்தப்படும் குடும்ப விழாக்கள் தரும் பலன்கள் மிக அதிக அளவிலானவை. " எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் பள்ளி நாட்களில் நான் என உறவினர் வீடுகளுக்குச்சென்று வந்ததை விட ,திராவிடர் கழகக் குடும்பங்களுக்குச்சென்று வந்ததுதான் மிகுதி " எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். அதனால் விளைந்த பலன்களைக் குறிப்பிடுகின்றார்.இன்றைய நிலைமையை அது மாற்றும் என்பதையும் குறிப்பிடுகின்றார். 

முடிவாக 
              " குடும்பங்களில் நம் அரசியல் வளரட்டும் !
                இயக்கங்களே நம் குடும்பம் ஆகட்டும் " எனப் புத்தகத்தை முடிக்கின்றார்.

குடும்பம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டுதான் சமூகப்பணி ஆற்றுகின்றோம். குடும்ப உறுப்பினர்கள் நமக்கு கொடுக்கும் சான்றிதழ் என்பது இன்றியமையாதது.செலுத்திய அன்பு மட்டுமே நற்சான்றிதழுக்கு அச்சாரமாக அமையும்.  குடும்பத்திற்குள் நேர்மறையான விவாதங்களும், வெளிப்படைத் தன்மையான பண நிர்வாகமும்,ஒருவருக்கொருவர் கொடுக்கும் சக மரியாதையும், ஒழுக்கமும் நம் சமூகப்பணி தொய்வின்றி தொடர உதவும் " குடும்பமும் அரசியலும் " என்னும் இந்தப்புத்தகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் நூலின் ஆசிரியர் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே பெரும்பாலான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருப்பதும்,அந்த எடுத்துக்காட்டுகளை விரிவாக விளக்குவதும் படிப்பவரை அடுத்த கட்ட சமூகப்பணிக்கு ஆயுத்தப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் அமைந்திருக்கிறது. " சாதியும் நானும் " என்னும் தலைப்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பல்வேறு அனுபவக் கட்டுரைகளை வாங்கி இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கியிருப்பதுபோல , 'எனது குடும்பமும் எனது அரசியலும் ' என்னும் தலைப்பில் தோழர்களிடம் கட்டுரைகளை வாங்கி ஒரு புத்தகமாக ஆக்கலாம். அந்தப் புத்தகம் வெவ்வேறு அனுபவங்களை,எதார்த்தமாக  கூறுகின்றபோது இந்தத் தலைப்பு இன்னும் செழுமையாகும் என்ற எண்ணம் இந்த நூலை வாசித்து முடித்தவுடன்  எனக்குத் தோன்றியது.