Tuesday 1 August 2017

அடையாளம் காண்பவரே நல்லாசிரியர் !

விழிகளில் நீர்
வழியாமல்
அழுகும் குழந்தைகளை
அடையாளம் காண்பவரே
நல்லாசிரியர் !.....

போதிய உணவு இன்றியோ
கிழிந்த டவுசரை
மறைக்க எண்ணியோ
வீட்டில் நிகழும்
சூழலை எண்ணியோ
வகுப்பினை கவனியாமல்
வானம் பார்த்து
வெறித்து உட்கார்ந்திருக்கும்
மாணவனை...மாணவியை
பாடம் நடத்துதல் தாண்டி
பரிவோடு கவனிக்கும்
கண்களை உடையவரே
கண்கள் உடைய ஆசிரியர்
மற்றவர்
முகத்தில் புண்கள் உடையவரே!.....

அரசுப் பள்ளியின்
ஆசிரியர் மட்டும்
புண்களாய் இல்லாது
கண்கள் உடையவராய்
இருந்து விட்டால்
வாழ் நாளெல்லாம்
மனதில் வைத்து
கொண்டாடும் மாணவர்கள்
கைவசம் !

எங்களுக்கும் கூட
அப்படி ஒரு
தலைமை ஆசிரியர் இருந்தார்....
மின்னல் போல வந்து
ஆறுமாதங்கள் மட்டுமே
சாப்டூரில் பணிபுரிந்து
மாற்றலாகிப் போனார் !

மனதில் நிற்கும்
பணிகளுக்கு
ஆண்டுகள் பல
தேவையில்லை ....
மாணவர்கள் நலன்
மட்டும் மனதில் இருந்தால்
சுய ஒழுக்கமும்
தவறுகளை சுட்டிக்காட்டும்
நெஞ்சுரமும் இருந்தால்
சில மாதப் பணியால்
என்றைக்கும் இருப்பர்
மாணவர்கள் மனதில்
என்பதற்கு எடுத்துக்காட்டாய்
எனது தலைமை ஆசிரியர்
வீரி(செட்டி) அவர்கள்........

                                                                வா.நேரு....02.08.2017