Wednesday, 24 September 2014

அண்மையில் படித்த புத்தகம் : பழஞ்சோறு- சிறுகதைத் தொகுப்பு-அமல நாயகம்

அண்மையில் படித்த புத்தகம் : பழஞ்சோறு - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்                                :  அமல நாயகம்
பதிப்பகம்                                : அமர பாரதி பதிப்பாளர் மற்றும்                                         விற்பனையாளர் ,திருவண்ணாமலை
                                                                                          ;  9444867023 ,9443222997
முதற்பதிப்பு                             : 2008, மொத்த பக்கங்கள் 179, விலை ரூ 90
மதுரை மைய நூலக எண்                                      : 185214

                                25 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் பழஞ்சோறு என்னும் நூல்,. எல்லாமே கிராமத்தில் வாழும் மனிதர்கள் பற்றியவை. எந்தப் பூச்சும் இல்லாமல், பகட்டு, பம்மாத்து இல்லாமல், என் இனிய கிராமத்து மக்களே என்னும் விவரிப்பு எல்லாம் இல்லாமல் , கிராமத்தில் உள்ள மனிதர்கள் எப்படி இருக்கின்றார்களோ , அப்படியே படைக்கப்பட்ட படைப்பாக, அவர்களின் உரையாடல் மொழிகளிலேயே படைக்கப்பட்ட படைப்பாக இருப்பது இந்தக் கதைகளின்  நூலின் சிறப்பு.

                             சில்லறை மாத்தப்போறேன்னே பொண்டாட்டி ராமாயி கிட்டே சொல்லிட்டிப்போயி , சில்லரை கிடைக்கலன்னு சாராயக் கடையிலே போயி சில்லறை மாத்தப்போயி, ஒரு கிளாஸாவது சாராயம் வாங்கினாத்தான் சில்லறை கொடுப்பேன்னு கடைக்காரன் சொல்ல, சாராயத்தைக் குடிச்சிட்டு , தெருக்கூத்துப் பாட்டுப்பாடும் தாவீதோட போட்டி போட்டிப் பாட, கூட்டம் கூட, சராயக்கடை களை கட்ட, போலீஸ் வர, மத்தவனெல்லாம் ஓடிப்போக , போட்டிப் பாட்டு பாடிக்கிட்டு இருந்த தாவீதையும் ஏழுமலையையும் போலீஸ் அள்ளிக்கிட்டப்போக, ராமாயி போயி பிறகு ஏழுமலையை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து மீட்டு வர்ற கதை. கடைசியிலே பய்ந்துகிட்டே பெண்டாட்டி பின்னால போற ஏழுமலை பத்தி " அவருக்கென்ன தெருவரைக்கும் கொண்டாந்து வுட்டுட்டுப் போயிடுவாரு, ராத்திரி நடக்கப்போற, ராமாயி காளி அவதாரத்தில என்னென்ன நடக்குமோ, உப்பத்தின்னவன் தண்ணிக் குடிச்சுத்தான் ஆவனும்னு மனசை தேத்திக்கிட்டு , நொண்டி வீரன் கோயில்ல வெட்டுப் படபோற ஆடு மாதிரி பின்னாடியே நடக்குறாரு ஏழுமலை " பக்கம் 13

                           காதலித்த சின்னசாமி- மலர்க்கொடியையும் பிரித்துவைத்து, என்னடா கண்டங்கே ? என்று  ஊர்க்காரர்களைக் கேள்வி கேட்கும் சின்னசாமி-,மலர்க்கொடி சிறுகதை, கல்லுளி மங்கனா ,எதிலும் காசு பார்க்கும் சமர்த்தியசாலி, சின்ன சின்ன திருட்டைச்செய்துவிட்டு, திருடிய வீட்லேயே போய் அடமானம் வச்சிருக்கேன், போய்ப் பணத்தை கட்டி வாங்கிக்கொள் என்று சொல்லி , அடித்தவர்களிடமே சட்டப்பிரிவைச்சொல்லி பணம் வாங்கும் ஒட்ட மண்டையன் , மகன் பெத்த பேரப்பிள்ளைக்குத்தான் இந்த சிங்கப் பொம்ம என்று சொல்லி மகள் பிள்ளை பேரனுக்கு கொடுக்க மறுத்து, பின் மருமகள், மகனின் கொடுமை தாங்காமல் மகள் பெத்த பேரனுக்கு வந்து கொடுக்கும் தாத்தாவைப் பற்றிய கதையான சிங்கப் பொம்ம போன்றவை நடப்பை பேசும் கதைகளாக இருக்கின்றன. கிராமத்தில் நான்  வாழ்வில் சந்தித்த சில மனிதர்களை  ஞாபகப்படுத்துகின்றன.

                          கிராமத்திலிருந்து படித்து வேலை பார்க்கும் ஊர்க்காரர்கள் வீட்டில் வேலைக்காரியாக வந்து சேரும் ல்ட்சுமி,  தான் பட்ட வேதனையை தன் தங்கை படப்போகிறாள் என்று தெரிந்தும் தடுக்க இயலாத லட்சுமி, குடிகாரத்தந்தைக்கு குடிக்க கிடைத்தால் போதும்  என்ற எதார்த்த நிலையைச்சொல்லும் 'மஞ்சப்பை' சிறுகதை, அரசியல் கட்சியில் சேர்ந்து அவதியுறும் கிறுக்கன் ராமலிங்கம் பற்றிய கதையான பலி ஆடுகள் சிறுகதை, கிராமத்துப் பள்ளிகள், வாத்தியார் பற்றிய கதையான 'விசாரணை ' போன்ற கதைகள் நினைவில் நிற்கின்றன.

                                விவசாயின் வேதனை சொல்லும் " அதாண்டா மாப்ள சரி, பேரிச்சம் பழம் வித்தவங்கூட இன்னைக்கு பணக்காரனாயிட்டான். வெவசாயம் பார்த்தவன் கடனாளியாத்தான் நிக்கிறான். வூர்ல இருக்கிறவன்ல பாதி பேராவது, இனிமே வெளி வேலைக்குப் போயிடணும். அப்பத்தான் உசுரு பொழைக்கலாம் " பக்கம் 105 - படித்தபோது எங்கள் கிராமத்தில் விவசாயம் செய்தவர்களில் நிறையப் பேர் திருப்பூருக்கும் , சிவகாசிக்கும் பஞ்சம் பிழைக்கப்போய், நன்றாகவே இருப்பது ஞாபகம் வந்தது.

                          பெத்த தாயையும், தந்தையையும் பங்கு போடும் பாகப்பிரிவினைக் கதை வலிக்கிறது என்றாலும் அதுதான் இன்றைய நடப்பு. நடக்காத கற்பனை விசயங்களைக் கற்பனை செய்து அழகுற எழுதுவதை விட, எதார்த்தங்களை சமூக நோக்கோடு விமர்சனம் செய்வதுதான் இன்றைய தேவை, இந்த நூல் ஆசிரியர் அமல நாயக்ம் மிக அருமையாகவே பல கதைகளில் அதைச்செய்திருக்கின்றார்.

                            இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிக, மிகப் பிடித்த கதை என்றால் அது 'மாறும் காலம்' என்னும் சிறுகதை.பாவாட முடிவெட்டுறவரு என்று ஆரம்பித்த முடிவெட்டும் தொழிலில் ஈடுபடும் பாவாட, அவரின் மகன், அவரின் பேரன் என்று மாறும் நிலைமைகளை மிக எதார்த்தமாக சித்தரித்துள்ளார். வீடு வீடாகப் போய் சில நேரம் கடன் சொல்லி விரட்டும் ஊர்க்காரர்களுக்கு முடி வெட்டும் பாவட, பயந்து பயந்து சாகும் பாவட , அவரின் மொவன் வீரப்பன் பெங்களூக்குப் போய் வந்து அந்த ஊரில் சலூன் கடை வைத்தபோது ஊரே வியந்து பார்க்கிறது. முதலில் ஒருவரும் வரவில்லை, பின்பு இளைஞர்கள் எல்லாம் கடைக்கு வர, காசு கொடுக்காமல் எவனும் முடிவெட்ட முடியாது என்னும் நிலைமை ஏற்படுகிறது. வீரப்பன் தன் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கிறான் என்று சொல்லி விட்டு,
 " பாவாட முன்னமாதிரி ஊருக்குள்ளே முடிவெட்டப்போறதுல்ல. மொவன் வூட்டுப் பிள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கிட்டுப்போயி, கூட்டிக்கிட்டு வர்றதுதான் வேல.
பேரன் ஒரு நாள் கேட்டான் ,
" லீவு நாளானா, நாங்களும் கடைக்கு வர்றோம் தாத்தா."
" நீங்கல்லாம் கடைக்கு வரக்கூடாது நல்லாப்படிச்சு கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்குற வேலைக்குப் போவணும் "
" முடி வெட்டுறங்கல்லாம் கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்குற வேலைக்குப் போயிட்டா அப்புறம் யாருதான் தாத்தா முடிவெட்டுறது ? "
" முடி வெட்டுறவன் முடியேதான் வெட்டுணுமா ? முடிவெட்டுறவன் பேரன் கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்கற வேலைக்குப் போனா கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்குறவன் பேரன் முடிவெட்ட வரட்டுமே "
இந்தப் பெரியார் படத்த பத்திரிக்கையில பாத்ததுக்கே இப்படிப்பேசுறாரே, இவரல்லாம் நாலு எழுத்து படிச்சிருந்தா இன்னும் என்னென்ன பேசுவாரோ.... பக்கம் 172  . மாறும் காலத்தை , பெரியார் ஊட்டிய உணர்வால் மாறும் தலைமுறையை அழகாகப் படம் பிடித்திருக்கும் சிறுகதை 'மாறும் காலம் 'சிறு கதையாகும்.

                     கிராமத்து மொழி, கிராமத்து மாந்தர்கள், கிராமத்து காடு,வயல், முந்திரித்தோட்டம், மனிதர்களின் சண்டைகள் சச்சரவுகள், எல்லாம் தெரிந்தமாதிரி பேசும் எதுவும் தெரியாத சில கிராமத்து மனிதர்கள், கிராமத்தில்தான் சண்டை போட்டார்கள் என்று படிக்கவைத்தால் படித்த பின்பும் மல்லுக்கட்டும் படித்தவர்கள் என  அப்படியே படம் பிடித்ததுபோல சிறுகதைகளின் வாயிலாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார் அமல நாயகம்

                        " என் கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள்.இனிமையானவர்கள்; உண்மையானவர்கள்,உணர்ச்சியானவர்கள்; எதை நம்பினார்களோ அதையே வாழ்பவர்கள் எதை வாழ்கிறார்களோ ,அதையே சொல்கிறவர்கள். அவர்களிடம் பொய் முகங்கள் அதிகம் இல்லை. இந்தப் பழஞ்சோறு எம் மக்களைப் பற்றிய மறுபதிவு .உயர்வையும் ,தாழ்வையும், வெற்றியையும் ,தோல்வியையும் , முற்போக்கையும் ,பிற்போக்கையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம் " என்று முன்னுரையில் இந்த நூலின் ஆசிரியர் அமல நாயகம் குறிப்பிடுகின்றார்.உண்மைதான். நல்ல எதார்த்தமான, கிராமத்து மனிதர்களை சிறுகதை வாயிலாகக் காண விரும்புகிறவர்கள் கட்டாய்ம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பாக இந்தப் 'பழஞ்சோறு ' நூல். இந்த நூல்  வெளிவரக் காரணம் எழுத்தாளர் பவா.செல்லத்துரை, கவிஞர் அறிவுமதி, கரிகாலன், வம்சி புகஸ் கே.வி. ஷைலஜா என நன்றியோடு இந்த நூலின் ஆசிரியர் அமல் நாயகம் குறிப்பிடுகின்றார். அண்ணன் கவிஞர் அறிவுமதியின்  கரங்கள் எப்போதும் உதவி செய்யும் -படைப்பாளிகள் தோழமை கொள்ளும் கரங்களாகவே இருக்கின்றன. கடலூர், மஞ்சக்குப்பம், முகவரியிலிருந்து வந்திருக்கும் இந்த நூல் நம்மைப் போன்ற தோழர்களின் கவனத்திற்குரியது , படிப்பதற்குரியது, பரப்புவதற்குரியது.


   
                               

Sunday, 21 September 2014

அண்மையில் படித்த புத்தகம் : பாஷோவின் கரும்பலகை ஆசிரியர் : வஸந்த் செந்தில்

அண்மையில் படித்த புத்தகம் : பாஷோவின் கரும்பலகை
ஆசிரியர் : வஸந்த் செந்தில்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், சென்னை -83
முதல்பதிப்பு : 2004  மொத்த பக்கங்கள் 62 விலை ரூ 20
மதுரை மைய நூலக எண : 157863
   
                             நூலகத்தில் இந்தப் புத்தகத்தை எடுக்கலாமா எனப் புரட்டியபோது " சிறிய நூல், பெரிய கருத்து, அரிய் உண்மை, எளிய நடை - வேலன் " என எழுதியிருந்தது. படித்து முடித்த போது அவ்ர் எழுதியிருந்தது உண்மைதான் எனப்புரிந்தது. இந்தப் புத்தகம்  ஜப்பானின் பாஷோவின் கருத்துக்கள் அல்ல, நூல் ஆசிரியர் வஸந்த் செந்திலின் கருத்துக்கள்- அதனை நூல் ஆசிரியரே அறிமுகம் பகுதியில் கூறிவிடுகின்றார்.

                                ஒரு சின்ன கதை, கதை முடிவில் ஒரு கருத்து - கரும்பலகையில் எழுதியிருப்பது போலக் கட்டமிடப்பட்டு. புதிய சிந்தனை, புதிய முயற்சி. உதவி என்னும் தலைப்பில் கதை , அதனை அடுத்து  கரும்பலகையில் " பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட , உதவி செய்யும் கரங்களே சிறந்தவை. நீங்கள் என்ன் கொடுக்கிறீர்களோ அதை மட்டுமே திரும்ப அடையமுடியும் ". என்னும் வாசகங்கள். நம்பிக்கை, மாற்றம், தேவை, நடத்தை, வெற்றி, வெற்றியின் வரையறை, ஆசை, நீங்கள் யார், மூன்று கேள்விகள், பழக்கம் , நேரம், நல்ல வேலை, பற்று, கவனம்,தடை, சிறியதும்- பெரியதும் போன்ற தலைப்புகளில் நிகழ்வுக் கதைகளும் , கரும்பலகை வாசகங்களும் மிக நன்றாக இருக்கின்றன.

                                   நூலின் கடைசியில் பாஷோவின் கரும்பலகையிலிருந்து சில விதிகள் என்று சில விதிகளைக் கொடுத்திருக்கின்றார். வெற்றி வாய்ப்பு விதிகள் - வெற்றி பெற வேண்டுமென்றால் 100 சதவீதம் வேலை செய்தே ஆகவேண்டும். வெற்றிகரமான செயலின் விதிகள் , முன்னுரிமைச்செயல்களின் விதிகள், பணம் சேருவதற்கான விதிகள், மனிதர்களைக் கையாள்வதற்கான விதிகள், விமர்சனங்களை எதிர்கொள்கிற விதிகள், கனவை அடைவதற்கான விதிகள், வெற்றிகரமான காதலின் விதிகள், வெற்றிகரமான பேச்சின் விதிகள், வெற்றிகரமான குறிக்கோள்களின் விதிகள் எனப் பல விதிகளை 5, 6 வரிகளில் கொடுத்திருக்கின்றார்  நூல் ஆசிரியர். அவை நம்மை ஈர்க்கின்றன .

                                        இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு , நன்றாக இருக்கிறது படித்துப் பார் என்று கல்லூரியில் படிக்கும் எனது மகன் சொ. நே.அன்புமணியிடம் கொடுத்தேன். ஆர்வமாக நூலைப் படித்துவிட்டு, அப்பா , நன்றாக இருக்கிறது, நூலகப் புத்தகம் இது, இந்தப் புத்தகத்தை பதிப்பகத்தில் போன் செய்து வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்றான். உண்மைதான்.வாங்கி வைக்க வேண்டும். நீங்களும் வாங்கிப் படிக்கலாம்.