Monday 26 February 2024

நிகழ்வும் நினைப்பும் 2024-4 புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய 116-வது சிறப்புக் கூட்டம்

 புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய 116-வது சிறப்புக் கூட்டம் (25.02.2024- ஞாயிற்றுக்கிழமை)தோழர் கலைமாமணி அகன் என்ற தி.அமிர்தகணேசன் அவர்களின் படைப்புலகம் பற்றிய சிறப்புக் கூட்டமாகவும் நூல் வெளியீட்டு விழாக் கூட்டமாகவும் நடைபெற்றது.  அனைவரையும் வரவேற்று வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ,இந்த நிகழ்வுக்கு எல்லாமுமாக இருந்து உழைத்த எழுத்தாளர் மு.கீதா அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்கு  வழிகாட்டியது மட்டுமல்லாது எப்போதும் தோழமைகளை வழிநடத்தும் தோழர் கவிஞர் ந.முத்துநிலவன் அவர்கள் தலைமை வகித்து பாடலுடன் கருத்து மிக்க தலைமையுரையை ஆற்றினார்.முனைவர் சம்பந்தம் ஏகாம்பரம் எழுதிய 'நீடு வாழ்க நிகழ்காலத்திலே' ,கோவை கவிஜி எழுதிய ' பச்சைமலைப்பூவும் உச்சி மலைத்தேனும் ', தஞ்சாவூர் உமா மஹேஸ்வரி பால்ராஜ் எழுதிய 'எழுதித் தீராத வலி',கலைமாமணி அகன் எழுதிய 'எது கவிதை? என்ன செய்யும் அது ?','வீதி 100 தொகுப்பு முதலிய 5  நூல்கள்  வெளியிடப்பட்டன. நூல்களின் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை அவையில் எடுத்து வைத்தனர்.




தோழர் அகன் அவர்களின் படைப்புகளில்  ‘பயணங்களில் அகன் ‘ என்னும் தலைப்பில் நானும், 'உரைநடைகளில் அகன்' என்னும் தலைப்பில் கவிஞர் வித்யா மனோகர் அவர்களும்,'கவிதைகளில் அகன்' என்னும் தலைப்பில் தோழர் அ.ந. சாந்தாராம் அவர்களும் …உரையாற்றினோம்.தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் அவர்களும் அகனின் படைப்புகள் என்னும் பொதுத்தலைப்பில் அருமையான பாடல்களுடன் உரை நிகழ்த்தினார்.


ஏற்புரையை தோழர் அகன் ஆற்றினார். மிக நல்ல நிகழ்வாக அமைந்தது.படைப்பாளிகள் கோவை கவிஜி,புதுக்கோட்டை சோலச்சி,'எழுதித் தீராத வலி 'நூலின் ஆசிரியர் உமா மகேஸ்வரி பால்ராஜ் என்று பலரையும் பார்ப்பதற்கான,உரையாடுவதற்கான நிகழ்வாக இன்று அமைந்தது. எழுதித் தீராத வலி நூலுக்கு நானும் அணிந்துரை வழங்கி இருந்தேன்.அந்த நூல் ஆசிரியரை இங்குதான் சந்தித்தேன். எழுத்தாளர் சோலச்சி அவர்கள் தனது முதல் நாவலான 'முட்டிக்குறிச்சி ' நூலைக் கொடுத்தார்.வாசிக்க வேண்டும்.தோழர் அகன் 'மகாகவி ' என்னும் தொகுப்பைக் கொடுத்தார். பலரும் தங்கள் வீட்டு  நிகழ்வுக்கு செலவழிப்பது போல நினைத்து, மனமுவந்து  நன்கொடை தந்து அதன் மூலம் நடைபெறும் நிகழ்வாக 'வீதி; இருக்கிறது ..வீதி கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.கீதா அவர்கள் செலவுகள் போக இன்னும் ரூ 5000 மீதம் இருக்கிறது என்று மேடையிலேயே அறிவித்தார்கள்.

நல்ல முயற்சி. படைப்பாளிகள் பலரும்,வாசகர்கள் பலரும் இணைந்து இந்த வீதி அமைப்பை மிக வீச்சாக புதுக்கோட்டையில் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய இளம் படைப்பாளிகள் பங்கு கொண்டதும் பங்களிப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது .இன்று நடந்தது 116வது கூட்டம்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கூட்டம் காலையில் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்கள். தொடரட்டும் இந்த இலக்கியப்பணி   

Thursday 22 February 2024

நிகழ்வும் நினைப்பும் -2024 (3) 'பிரார்த்தனை மோசடி '





பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வாரந்தோறும் நூல் அறிமுகம் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணிவரை நடக்கிறது.தவிர்க்க முடியாத சில வாரங்களில் வியாழக்கிழமை. திராவிட இயக்க கொள்கைகள் பேசும் நூல்கள்தான் பெரும்பாலும் இந்த இணையவழிக் கூட்டத்தில் பேசப்படுகின்றன.இன்று(23.02.2024)  திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'பிரார்த்தனை மோசடி ' என்னும் நூலைப் பற்றிப் பேச இருக்கிறேன். மும்பை திராவிடர் கழகத்தைச்சார்ந்த அய்யா மும்பை கணேசன் அவர்க்ள் இன்று (23.02.2024) காலையில் மும்பையிலிருந்து  செல்பேசியில் அழைத்தார். 'பிரார்த்தனை மோசடி ' என்னும் புத்தகத்தைப் பற்றிப் பேசப்போகிறீர்களா? என்றார்.ஆமாம் என்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத  நூல் இது என்று சொல்லிவிட்டு நூலில் இருக்கும் பல்வேறு செய்திகளை,பெயர்கள் உள்ளிட்டவைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.இந்த நூலைப் பற்றி அப்படி ஒரு உற்சாகத்துடன் ,மகிழ்ச்சியுடன் பேசினார். .உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு நூல் இவ்வளவு தூரம் ஒரு தொண்டரின் வாழ்க்கையில்,நினைவில் ஊடுருவ முடியாமா? என்று.ஆமாம் அப்படிப்பட்ட ஒரு நூலைப் பற்றிப்பேசும் ஒரு வாய்ப்பு எனக்கு இன்றைக்கு .கேட்பது உங்களுக்கும் கூட  ஒரு வாய்ப்பாக அமையலாம். வாருங்கள் மாலை 6.30 க்கு 


 

Tuesday 20 February 2024

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

 


ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணம் செய்கிறது என்னும் வெளிநாட்டுப் பத்திரிகையின் செய்தி கண்ணில் பட்டது.

“ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் பயணம் செய்யும் பாதையைத் தவிர்த்துத் தமிழ்நாடு வேறு வழிகளில் பயணம் செய்து வெற்றி பெற்று வருகிறது என ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தமிழ்நாட்டைப் புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், தொழில் மயமாக்கலை பொறுத்தவரை தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அதிலும், பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் மற்றும் சர்க்கரை போன்ற உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. அண்மையில், தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்று திரும்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே தொழில்துறையில் சாம்பியனாகச் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் கார் உற்பத்தித் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் dye-casting மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடைத் தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் நிபுணத்துவம் பெற்றவை.” என்று விரிவான செய்தியை பி.பி.சி. தமிழ் வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு செய்தி, இந்திய ஒன்றியம் முழுவதும் வளர்ச்சி – பின்பு பகிர்ந்து அளித்தல் என்னும் கோட்பாட்டைக் கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும் பகிர்ந்து அளித்தல், அதன் மூலம் வளர்ச்சி என்னும் கோட்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இதனை விளங்கிக்கொள்ள ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய ஒன்றிய அரசு அதானி,அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று நினைக்கிறது. அதற்காகப் பெருமுதலாளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அளிக்கிறது.பொதுவுடைமை வங்கிகளின் மூலமாக இலட்சக்கணக்கான கோடிகளை அவர்களுக்குக் கடனாக அள்ளித் தருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தக் கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது. பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில், அவர்களின் வளர்ச்சிதான் இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி என நினைக்கிறது. பெரும்பாலும் இப்படி இந்தியாவின் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாம் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அதில் நிரவ் மோடி போன்றவர்கள் பல்லாயிரம் கோடி கடனை வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொண்டு சலுகை பெற்று,வெளி நாட்டில் சொத்துகளை,பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலிருந்து தப்பிப் போய் வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற பெரும்முதலாளிகளுக்குச் சலுகைகள் அளிப்பதன் மூலமே இந்தியா வளரும் என்பதுதான் இன்றைக்கு ஆளும் பி.ஜே.பி.அரசின் கொள்கை.அவர்கள் ஆளும் மாநிலங்களின் கொள்கை.

ஆனால், தமிழ்நாடு இவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்தது. இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளித்தது தமிழ்நாடுதான்.மற்ற மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்தாத காலத்திலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தமிழ்நாடு அரசாங்கம் அமைத்தது.இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு வங்கிகள் மூலமும் தமிழ்நாடு அரசாங்கத்தின் மூலமும் கடனும் உதவிகளும் வழங்கப்பட்டன.கடன் பெற்றவர்கள் முறையாகக் கடனைத் திருப்பிக் கட்டினர். மீண்டும் அதிக அளவில் கடனைப் பெற்றுத் தொழில்களை மேம்பாடு செய்தனர். அலையென எழுந்த பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றனர். விழிப்புணர்வு பெற்றனர். தங்கள் மகன்களை,மகள்களை உயர்கல்வி பெறக் கல்லூரிகளுக்கு அனுப்பினர்.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கும்,மலை வாழ் பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக தமிழ்நாட்டுத் திராவிட இயக்க அரசுகள் இயங்கின; இன்றைக்கும் இயங்குகின்றன.

ஜாதி ஒழிப்புச் சிந்தனையை மக்கள் மனதில் ஆழமாகச் சுயமரியாதை இயக்கம் விதைத்தது. அண்மையில் அறிவுச்சுடர் காணொலியில் பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் அவர்கள்,திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார்.அந்தப் பேட்டியில் திராவிட இயக்கம் எப்படி மக்கள் மனதில் 95 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி ஒழிப்பு சிந்தனையை விதைத்தது, ஒவ்வொரு ஜாதியிலும் பிறந்தவர்களில் பலரை எப்படி ஜாதி ஓழிப்பு முற்போக்காளர்களாக மாற்றியது என்பதை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.ஆம். அதனால்தான் தமிழ்நாடு ஜாதிச்சண்டைகள் இல்லாத,மதச்சண்டைகள் இல்லாத ஒரு மாநிலமாக,அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.அதனால் சமூக முன்னேற்றமும்,கல்வி முன்னேற்றமும் ,பெண்கள் முன்னேற்றமும், தொழில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல; தந்தை பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்புக்குக் கிராமங்களை ஒழிக்க வேண்டுமென்றார்.கிராமங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், குலத்தொழில் ஜாதியாக முடிவெட்டுதல்,துணிகளை வெளுத்தல்,பிணங்களை எரித்தல் போன்ற தொழில்களைச் செய்பவர்களை கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு வரச்சொன்னார். ஜாதி இழிவிலிருந்து வெளியேறி, குலத்தொழிலை விட்டுவிட்டு, கல்வி கற்று, பொருளாதார ரீதியாக, சுயமரியாதையோடு வாழ்வதற்கான வழியைத் தந்தை பெரியார் சொன்னார். திராவிட இயக்க ஆட்சிகள் அதற்கான பாதைகளை அமைத்துக்கொடுத்தன.பெரும் பாய்ச்சல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பல நூல்கள் இப்போது வருகின்றன. அப்படி வந்த ஒரு புத்தகம் ‘”Dravidian Years” என்பது. அதன் ஆசிரியர் எஸ். நாராயணன் அவர்கள்..
“”அரசியல், வளர்ச்சி, நிருவாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஓர் உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அந்த நூலைக் குறிப்பிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,

“இதுதான் ‘திராவிட மாடல்.’ எல்லாச் சமூகங்
களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும்
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்தப் பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

“மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய அய்ந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இது குறித்துத் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டீன் கூறுகையில், “நம்முடைய முதலமைச்சர் மறைமுகமாகச் சொல்ல வருவது என்னவென்றால், இது பெரியாரின் பூமி என்பதைத்தான்! பெரியார் எதையெல்லாம் இந்தச் சமூகத்தில் மாற்ற வேண்டுமென நினைத்தாரோ அதன் அடிப்படையில் அமைந்த அரசுதான் இந்த அரசு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர். ஆகவே, தற்போது கிடைத்த வெற்றியை இந்த அரசின் திட்டங்களுக்கு, பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறார். பிறப்பொக்கும் எல்லாரும் சமம்; எல்லோருக்கும் சமவாய்ப்பு. அதைத்தான் திராவிட மாடல் பாணி அரசு என முதல்வர் குறிப்பிடுகிறார்” என்கிறார்.”(பத்திரிகைச் செய்தி)

“நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகையின் செய்தி பற்றிப் பேசிய தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் “எங்கள் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் நாங்கள் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை” என்று கூறினார். தொழிலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிடுகிறோம். ஸ்காண்டிநேவிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கு மோடி தலைமையில் அமைந்த ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டுகளைப் போடுகிறது. தமிழ்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய முறையான நிதிப்பங்கீட்டைக் கொடுக்க மறுக்கிறது. பெரிய அண்ணன் தோற்றத்தைக் காட்டுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தமிழ்நாடு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 5 சதவிகிதம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய தொழிற்சாலை பெண் ஊழியர்களில் 43 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய வெற்றி. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும்,’அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் திராவிட மாடலின் நோக்கம் முழுமையாக அடையப்படவில்லை என்றாலும் அதை நோக்கிய வெற்றிகரமான பயணமாக தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் பயணம் இருக்கிறது. வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.
தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்!

நன்றி : உண்மை இதழ் -பிப்ரவரி 16-29 ,2024

Saturday 17 February 2024

பழனியில் 'பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? 'நூல் ஆய்வுக் கூட்டம்…

 

நிகழ்வும் நினைப்பும் 2024-2

 பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? நூல் ஆய்வுக் கூட்டம்

 

 நேற்று(16.02.2024)  பழனியில் இருக்கும், என்னோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த் தொழிற்சங்கத்  தோழர்  பழனிக்குமார் அவர்கள் இனிய நண்பர்.பழகுவதில் நகைச்சுவையும் உற்சாகமுமாய்ப் பழகும் தோழர்.30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரிந்தவர்.அவரது இணையர் பஞ்சவர்ணம் அவர்களும் எங்கள் துறை சார்ந்தவர்.எங்களைப் போலவே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சில நாட்களுக்கு முன்னால், தான்  பழனிக்கிளையின்  தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர்கள் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருப்பதாகவும்,  தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் எழுதிய பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? என்ற நூலின் விமர்சனம்,சிறப்புரையாகத் தாங்கள் வந்து பழனியில் பேசவேண்டும் என்று கேட்டிருந்தார். சரி என்று சொல்லித் தயார் செய்திருந்தேன்.

 

 15.02.2024 அன்று ஓர் இறப்பு செய்தி.எனது இணையரின் அக்கா திருமதி சந்திரா முருகையா அவர்கள்,மிக அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவர். செங்கோட்டையில் இறந்து விட்டார் என்று தகவல் வர, நானும் எனது இணையரும் 15-ந்தேதி மாலை கிளம்பி செங்கோட்டை சென்றோம்.அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு ,துக்கம் விசாரித்துவிட்டு அங்கேயே எனது இணையரை இருக்கச்சொல்லிவிட்டு அதிகாலையில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு வந்து பின்பு தயாராகிப் பழனிக்கு கிளம்பினேன்.நிகழ்ச்சிக்கு எப்படியும் சென்று விடவேண்டும்,தேதியைக் கொடுத்துவிட்டு வரமுடியவில்லை என்று சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.

 

  நேற்று மதியம் ஒரு இரண்டு மணி அளவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நானும் தோழர் சோழ.நாகராஜன் அவர்களும்  இணைந்து பேருந்தில் பழனிக்குக் கிளம்பினோம் மிக எளிமையா தோழராக ஆனால் அதே நேரத்தில் தந்தை பெரியாரை மார்க்சியத்தை மிக நன்றாகப் புரிந்து இருக்கும் ஒரு தோழராக எனக்கு இவர் தென்பட்டார் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை என்னோடு பேருந்தில் பகிர்ந்து கொண்டு வந்தார் தன்னுடைய தந்தை வங்கிப் பணியாளராகப் பணியாற்றியது, வங்கித் தொழிற்சங்கத்தில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தது இயல்பான ஒரு தொழிற்சங்கத் தலைவராக தன்னுடைய பிள்ளைகளுக்கு அவர் கொடுத்த ஜனநாயகம் அதன் விளைவாக வீட்டில் கிடைத்த ஒரு சுதந்திரம் என்பதைப் பற்றியும் தன்னுடைய அம்மா எவ்வளவு தூரம் வாசிக்கக் கூடியவராக இருந்தார் என்பதையும் கையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் உடனடியாக வாசிக்கக் கூடிய ஒரு அம்மாவாக அவர் இருந்தார் என்பதைத் தோழர்  பகிர்ந்து கொண்ட போது  நெகிழ்வாக இருந்தது. என்னுடைய தாயார் திருமதி முத்துகிருஷ்ணம்மாள்  அவர்களும் கூட அப்படித்தான் என்று நானும் என்னுடைய நினைவுகளைச் சொன்னேன். ஆசிரியர் பணி,மாடுகளைப் பார்ப்பது,பிள்ளைகளுக்குச் சோறு ஆக்குவது, பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய பணி என்று தொடர்ச்சியாக வேலை இருந்த நேரத்திலும் கிடைத்த சிறுசிறு மணித் துளிகளை வாசிப்பதற்காக எனது அம்மா செலவிட்டதுதான் எனக்கு வாசிப்பின் மீதான ஈர்ப்பு வந்ததற்குக் காரணம் என்ற எனது கருத்தையும் சொன்னேன்


 

அதற்குப் பிறகு தோழர் சோழ. நாகராஜன் அவர்கள்  தன்னுடைய தந்தையார் ஊர் ஊராக வங்கிப் பணிக்காக மாற்றலாகி கொண்டே போனதையும், தான் பழகிய நண்பர்கள் எல்லாம் விட்டு பிரிந்து பிரிந்து போனதையும் எண்ணி அழுத நேரங்களை எல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார் இரண்டு வருடத்திற்கு ஒரு மாறுதல் பழகிய நண்பர்கள் பிரிவு ,மீண்டும் புதிய நண்பர்கள் என்று மாறிக்கொண்டே இருந்தேன் இந்த வாழ்க்கை என்பது எனக்கு மிகத் துன்பமாக இருந்தது அதனால் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது அப்பாவுக்கு மாறுதல் வந்த போது என்னைத் திருச்சியிலேயே விடுதியில் சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன் என்று சொன்னார். உடனே வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் விடுதி  என்றாலே ஏதோ ஒரு ஜெயில் என்பதைப் போலப் பார்த்து வேண்டாம் என்று சொன்னதையும் தான் பிடிவாதமாக இல்லை நான் திருச்சியிலேயே படிக்கிறேன் என்று பள்ளியின் விடுதியில் தங்கிய அனுபவங்களையும் சொன்னார் பள்ளியின் விடுதியில் நடந்த பல சம்பவங்களை மிகவும் சுவைபட … தான் அசைவம் சாப்பிடப் பழகிய தருணங்களை எல்லாம் நினைவில் கொண்டு வந்து சொன்னார்.

 

ஒரு பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தான் பூணூல் போடாமல், இருந்ததை,  தன்னுடைய தந்தையார் இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் வற்புறுத்தலினால் அணிந்து விட்டு பின்பு  அதைக் கழற்றி எரிந்ததையும் சொல்லிக் கொண்டே வந்தார்.தைப் போல எழுத ஆரம்பித்தது, 1986ல்  தனது முதல் புத்தகம் வெளிவந்தது என்று சொல்லிவிட்டுத் திருப்பங்குன்றத்தில் இருந்த தமிழ்க்கூத்தன் அவர்களைத்  தெரியுமா என்று கேட்டார் மிக நன்றாகத்  தெரியும் என்பதையும் ,தமிழ்க் கூத்தன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பில் இருந்ததையும், அவர் இறப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் திராவிடர் கழகத்தில்  இணைந்து பணியாற்றிய தோழர் அவர்   என்பதையும் சொன்னேன். தமிழ்க்கூத்தன் அவர்கள் சொன்னது இப்போது  எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பொதுவுடமை இயக்கங்களில் மாறி மாறி இருந்ததற்குப் பதிலாகத் திராவிடர் கழகத்திலேயே இருந்து பணியாற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று என்னிடம் நேரடியாக ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது .அது மட்டுமல்ல மிகத்  தீவிரமான ஒரு கொள்கைவாதி அவர்.மிக எளிமையானவர் .தோழர் தமிழ்க்கூத்தன்  அவர்கள்  ஒரு முறை இரயிலில் பதிவுசெய்யப்படாத பெட்டியில்   வந்தேன் என்று சொன்னார். ஒரே கூட்டமாக இருக்குமே ,எப்படி வந்தீர்கள்? “ என்று நான் கேட்டேன். இல்லை தோழரே, நான் இரயிலில் எப்போதும் பதிவு செய்யப்படாத (Unreserved)  பெட்டியில்தான் வருவேன் “ என்று சொன்னார் வியப்பாக இருந்தது மேலும் “ நான் எப்பொழுதும் ரயில் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து எல்லாம் செய்து கொண்டு போவதில்லை மக்களோடு மக்களாக அந்தப் பதிவு செய்யப்படாத வண்டியில் சென்று தான் எனக்குப் பழக்கம் என்று தமிழ் கூத்தன் அவர்கள் சொன்னது என் நினைவுக்கு வருகிறது திருப்பரங்குன்றம் அண்ணன் மறைந்த திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அழகர்சாமி அவர்கள் மூலமாக எனக்கு அறிமுகமானவர் .திருக்குறள் பற்றிக் குறிப்பாகப் பரிமேழகர் உரையைப் பற்றி காட்டமாக,மிக விளக்கமாகப் புத்தகங்கள் போட்டிருக்கிறார் என்று அவரைப் பற்றிச்சொன்னேன்.

 

தோழர் சோழ. நாகராசன் அவர்கள், நான்,இன்றைய பாரளுமன்ற உறுப்பினர்  தோழர் சு.வெங்கடேசன் எல்லாம் அவரால் இலக்கியரீதியாக உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்லிவிட்டு தோழர் தமிழ்க்கூத்தன் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். திருப்பரங்குன்றத்தில் ஒரு மிகப்பெரிய குழு இருந்தது என்பதையும் இலக்கிய ரீதியாக அந்தத்  தோழர்கள் எழுதியது, அதை அவர்கள் எழுதக்கூடிய கதைகளை, கவிதைகளை எல்லாம் வாசிப்பதற்கான ஒரு தளமாக திருப்பரங்குன்றத்தை மாற்றியது என்று தோழர் தமிழ்க்கூத்தனின் செயல்பாடு என்பது மிகத் தொடர்ச்சியாக இருந்தது என்று தோழர் சோழ.நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.



 

 பழனியிலே இறங்கி தோழர் பழனிக்குமார் அவர்களையும் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் பாரதி புத்தகலாயத்தில் இருந்த தோழர்களையும் சந்தித்துப்பேசினோம். அங்கிருந்து பேராசிரியர் மோகனா அவர்களை அவருடைய இல்லத்தில் சென்று சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது

படத்தில் தோழர் சோழ.நாகராஜன்,நான் ,தோழர்.பேரா.மோகனா அவர்கள்.


 

பேராசிரியர் மோகனா அவர்கள் தான் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கொடுத்தார்கள் அதில் ஒன்று அவருடைய தன் வரலாறு. கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்று எடுத்து வைத்திருக்கிறேன் விரைவில் படிக்க வேண்டும்.135 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்றார்.வியப்பாக இருந்தது.

 

அங்கிருந்து கூட்டம் நடக்கும் மண்டபத்திற்குச்சென்றொம். திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் அருண்குமார் அவர்களையும்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைச்செயலாளர் தோழர் தமிழ் ஓவியா அவர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு அய்யா பேரா. இ.கி.இராமசாமி அவர்களின் மாணவர் பேரா.அயோத்தி அவர்களையும் அவரது இணையர் பேரா.வாசுகி அவர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு நிறையப் புது முகங்கள், அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் என்று   இந்தக் கூட்டம் அமைந்தது.

 

பெரியார் பிராமணர்களின் எதிரியா? ‘ என்னும் இந்தப் புத்தகத்தை பற்றி 40,45 நிமிடம் நான் பேசினேன்.மிக அருமையான புத்தகம்.ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம்.தொடர்நது  தோழர் சோழ. நாகராஜன் அவர்கள் ஏற்புரையாக ஒரு 15 நிமிடம் உரையாற்றினார்.(முழுமையாக நூல் விமர்சனம் எனது உரையோடு பதிவிடுகிறேன் விரைவில்). கூட்டத்தை முடித்து  அதற்குப் பிறகு இரவு உணவு முடித்துவிட்டுப் பழனியில்  இருந்து பத்தரை மணிக்கு புறப்பட்டு வீட்டுக்கு வந்பொழுது இரவு ஒன்று முப்பது. செங்கோட்டையில் இருந்து திரும்பி,தூக்கத்தில் இருந்த எனது இணையரை எழுப்பி வீட்டைத் திறக்கச்சொல்லி பின்பு உறங்கச்சென்றேன். இரண்டு நாளும் தொடர்ச்சியாக பேருந்தில் மதுரை-செங்கோட்டை,செங்கோட்டை-மதுரை,மதுரை-பழனி,பழனி-மதுரை என்று  இரவு வந்த பொழுது உடல் களைப்பாக இருந்தாலும் புதிய தோழர்களை சந்தித்தது, புதிய புத்தகங்களைப் பெற்றுக் கொண்டது என்று உற்சாகமாகத்தான் அமைந்தது.



 

பேருந்தில் வரும்போதும்  நானும்  தோழர் சோழ.நாகராஜன்  அவர்களும் உரையாடிக் கொண்டே வந்தோம்.  பல்வேறு தகவல்களை எனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவருடைய மகனுக்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணம், அது எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றி எல்லாம் மிகச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தார். நான் சொன்னேன்,” தோழர் நீங்கள் என்னிடம் சொன்ன சில தகவல்களே மிகச் சிறப்பாக இருக்கிறது .ஏன் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பங்களை இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கக்கூடாது ?”  என்று. ஏற்கனவே மற்ற தலைப்புகளில் 7 புத்தகங்கள் வந்திருக்கிறது ,எழுதவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றார்.

 

சுய ஜாதிப் பற்றை உதறவுதே ஒரு மேன்மையான நிலை. சுய ஜாதிகள் மற்றவர்களுக்கு செய்த,செய்கிற கொடுமைகளைச்சொல்வது,எழுத்தில் கொண்டு வருவது இன்னும் மேன்மையான நிலை.அப்படித்தான் இந்த நூலைத்  தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்.தோழர் அருள்மொழி அவர்கள், தன்னுடைய அணிந்துரையில் மிகச்சிறப்பாக இந்த நூலில் அதைத்தான் எழுதியிருக்கிறார். இன்னும் நிறையப் புத்தகங்களைப் படைப்பார் என்று நினைக்கிறேன் நல்ல படைப்பாளி. தந்தை பெரியாரை ஆழமாகப் புரிந்து கொண்டு ,தந்தை பெரியாரைப் பார்ப்பனர்களும்,மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் மிகச்சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார்,தன்னுடைய சொந்த வாழ்வில்  மகனுக்கும்,மகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை  நடத்தி/நடத்த இருக்கிறார்.

 ‘பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா?’ இந்தப் புத்தகத்தை இன்னும் வாங்கிப் படிக்கவில்லையா? வாங்கிப்  படியுங்கள்.வாங்கிப் படித்து விட்டீர்களா? இந்தப் புத்தகத்தைப்  பற்றிப் பேசுங்கள்,எழுதுங்கள்.