Friday 10 September 2021

வேறு என்ன விருது வேண்டும் ஒரு ஆசிரியருக்கு

 காலங்கள் உருண்டோடி விடுகின்றன. உடன் படித்த,மிக நெருக்கமாக பழகிய நண்பர்கள் கூட கால வெள்ளத்தில் மறைந்து போகிறார்கள். நாமும் அவர்களை மறந்து போகிறோம். ஆனால் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது ,ஏற்படும் மகிழ்ச்சியும்,குதுகாலமும் சொற்களால் சொல்லிவிட இயலாதது.

எனது மாமா மகன்,மணிமாறன் எனது ஊரான சாப்டூருக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டையில் விடுதியில் தங்கிப்படித்தான். இன்று படித்து முடித்து சாப்டுவேர் துறையில் பணியாளராக சென்னையில் பணியாற்றுகிறான். 3 ஆண்டுகளுக்கு முன்னால்,சென்னைக்கு போகும் வழியில்,மாமா,எங்கு இருக்கிறீர்கள்,உங்களைப் பார்க்கவேண்டும் என்றான். நான் அன்று மதுரை புத்தகச்சந்தைக்குள் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் புத்தகச்சந்தைக்குள் இருக்கிறேன் என்றவுடன், மாமா, நான் அங்கேயே வந்து விடுகின்றேன் என்றான். வந்தான் சந்தித்தோம். அப்போது ஒரு பள்ளிக்கூடத்தின் கலை நிகழ்ச்சிகள் அங்கு நடந்து கொண்டு இருந்தது.அதைப் பார்த்த அவன், மாமா, நான் படித்த கோட்டைப்பட்டி பள்ளிக்கூடத்து மாணவ,மாணவிகள்தான் இங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.வாருங்கள் போய் பக்கத்தில் பார்ப்போம் என்றான். இருவரும் போனோம்,அப்போது மேடையில் ஒரு ஆசிரியர் நிகழ்வுகளின் இணைப்புரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

மணிமாறன்,மாமா அவர்தான் குணசேகரன் ஆசிரியர் என்றான். மிக நல்ல ஆசிரியர் என்றான். நான் படிக்கும் காலத்தில் எனக்குப் பலவகையிலும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார் என்றான். அறிவியல் ஆசிரியர். அவர் வகுப்பிற்குள் வருவதே அவ்வளவு நன்றாக இருக்கும் என்றான். அமைதியாக வகுப்பிற்குள் வருவார். வந்து கரும்பலகையில் தேதியை முதலில் மாற்றுவார்.பின்பு இன்று நான் என்ன பாடம் நடத்தப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லி விடுவார்.சொல்லிவிட்டு எங்களுக்குப் புரியும்படி நடத்துவார். 9-ம் வகுப்பு,10 வகுப்பு அவர்தான் எங்களுக்கு அறிவியல் பாடம் நடத்தினார். சரியாகப் படிக்காத மாணவ,மாணவிகளிடம் மிகுந்த அக்கறை காட்டுவார். எல்லோரையும் குறைந்தபட்சம் 60 மார்க் அறிவியலில் எடுக்கவைக்கவேண்டும் என்பது அவர் நோக்கமாக இருக்கும்.அவரது வகுப்பை எல்லா மாணவ,மாணவிகளும் விரும்பிக் கேட்போம் என்றான்.நான் விடுதியில்தானே தங்கிக் படித்தேன். சில சேட்டைகள் அப்போது செய்வேன். அதற்கு கண்டிப்பார். அந்த கண்டிப்பு எங்களைத் திருத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும் என்றான்.

அப்பா ஒருமுறை,என்னைப் பார்க்க வந்தார். குணசேகரன் சார் அவரிடம் பேசினார். "உங்கள் பையன் மிக நன்றாகப் படிக்கிறான். சின்ன சின்ன சேட்டைகள் இருக்கிறது.அந்தச்சேட்டைகளை மட்டும் விட்டுவிட்டால், மிக நல்ல மார்க் எடுத்து, நல்ல நிலைக்கு வருவான் " என்று சொல்லியிருக்கிறார். அப்பா வந்து என்னிடம்,டேய்,உங்க வாத்தியார் உன்னையைப் பத்தி மிக நன்றாக சொல்கிறார். அவர் சொல்படி நட " என்றார் என்று அவரை மேடையில் பார்த்தவுடன் வரிசையாக மணிமாறன் சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு வயது அப்போது 34,35 இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்னால் அவனுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்.அவரைப் பார்த்தவுடன் இவ்வளவு செய்திகளைச்சொல்கிறானே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.


நிகழ்வு முடிந்தவுடன் கீழே இறங்கி வந்தவுடன்,மணிமாறன் அவரிடம் சென்று பேசினான்.மணிமாறன், என்னை அவரிடம் அறிமுகப்படுத்தத் தொடங்கினான். 'நேரு ' என்று கூவுவதுபோல குணசேகரன் குறிப்பிட, நான் குணசேகரன் பெயரைச்சத்தம் போட்டுச்சொல்ல,மணிமாறன்,"மாமா, எங்க வாத்தியாரை முன்னரே தெரியுமா "என்றான்.இருவரின் உடல்களிலும் பல மாற்றங்கள். நாங்கள் இருவரும் கல்லுப்பட்டி,காந்தி நிகேதனில் +1,,+2 ஒன்றாகப் படித்தவர்கள் என்று சொன்னவுடன் அவனுக்கும் மகிழ்ச்சி. பார்த்து 30,35 ஆண்டுகளுக்குப் பின் ,பள்ளித்தோழரைப் பார்த்ததும், பேசியதும் அன்று முழுவதும் மனதில் ஓடியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மாணவனால், நல் ஆசிரியர் என்று புகழப்படும் குணசேகரன் இன்னும் எத்தனை மாணவர்கள் மனதில் ஆழமாய் பதிந்து இருப்பார் என்று வியந்தேன். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது அந்த நாள்.  ஒரு மாணவன்,இன்று நான் மிக நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம் இவர் என்று ஒரு ஆசிரியரை சுட்டி, மகிழ்ந்து போற்றுவதை விட வேறு என்ன விருது வேண்டும் ஒரு ஆசிரியருக்கு....


Wednesday 8 September 2021

முதல் ஹைக்கூ

 பறவைகள் உற்சாகஒலியால்

வளாகம் நிரம்புகிறது

கல்லூரி திறப்பு...

                                       ..


                             வா.நேரு,09.09.2021.