Saturday, 29 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்
 
நூலின் தலைப்பு         :  திருப்புமுனைகள் .
ஆசிரியர்             :   என்.சொக்கன்.
பதிப்பகம்                :   மதி நிலையம் , சென்னை-86,
முதல் பதிப்பு         :   டிசம்பர் 2011 , 288 பக்கங்கள்
 விலை               :   ரூ 160
                                      வெற்றி அடைந்த 50 சாதனையாளர்களை எடுத்துக்கொண்டு , அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டுகிற புத்தகம் இந்தப் புத்தகம் .முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தொடங்கி , பாட்டுக்கோட்டையாக தமிழகத்தில் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை வரை பட்டியலிட்டுக் காட்டுகிறது.

             முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர், கபில்தேவ் தன்னுடைய 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிப்பதற்காக வந்த இடத்தில், விளையாடும் அணியில் ஒருவர் குறைவதால் விளையாட்டை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள். சிறுவன் கபில்தேவ் ஏன் விளையாட்டை ஆரம்பிக்க தாமதம் ஆகின்றது எனக்கேட்க, ஒருவர் குறைகிறார், தம்பி நீ விளையாட வருகிறாயா எனக் கபில்தேவிடம் கேட்க , சரி என கிரிக்கெட்  விளையாட்டு மைதானத்தில் இறங்கியதுதான் கபில்தேவ் வாழ்க்கையில் நடைபெற்ற திருப்புமுனை. கிரிக்கெட் விளையாட்டு  என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய பரம்பரையில் யாரும் விளையாட விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற கபில்தேவ் வாழ்க்கையில் தானாகக் கிடைத்த வாய்ப்பு, அதனை எப்படி கபில்தேவ் வசப்படுத்திக் கொண்டார் என்பதனை பக்கம் 11முதல் 15 வரை நன்றாக சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் திரு.என்.சொக்கன்.

                             எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்த சிறுவன் வில்லியம்ஸ், எதை எடுத்தாலும் 'போரடிக்கிறது ' என்று சொல்லி வாழ்க்கையை நொந்து கொண்டிருந்த சிறுவன் வில்லியம்ஸ் வாழ்க்கையில் , அவனது பள்ளியில் வந்து இறங்கிய கம்யூட்டர்கள் திருப்பு முனையாக மாறுகின்றது. புத்திசாலிப் பையனான வில்லியம்ஸ், எந்தப் பாடத்தையும் அதிவேகத்தில் கிரகித்துக்கொள்ளும் வில்லியம்ஸ் கம்ப்யூட்டரைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபின் போரடிக்கிறது என்ற வார்த்தையைக் கூறவில்லை. அலாவுதினின் அற்புத விளக்கைப் போல அற்புதங்கள் பல செய்யும் கருவியாக கண்னியை மாற்றுகின்றான் சிறுவன் வில்லியம்ஸ் , அவர்தான் பில் கேட்ஸ் என்று சொல்லி விளக்கம் கொடுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். " நம்முடைய இலக்கு எது, பாதை எது என்று தெரியும்வரை வாழ்க்கைப் பயணம் போரடிப்பது போல்தான் தோன்றும்.ஆனால் ,பில் கேட்ஸிக்கு கம்ப்யூட்டர் போல் நமது வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் அந்தத் திருப்புமுனை, எப்போது ,எப்படி எதிர்ப்படுமோ தெரியாது. அந்த நேரத்தில், அதைச்சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வது, நம்முடைய சமர்த்து என்று சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் என். சொக்கன் பக்கம் 19-.

            கோபக்குதிரைகள் என்ற தலைப்பில் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை புத்தக ஆசிரியர் பக்கம் 35 முதல் 39 வரை விவரிக்கின்றார். யாராலும் அடக்க முடியாத முரட்டுக்குதிரையை அடக்க சிறுவன் அலெக்சாண்டர் அவனது தந்தையிடம் கேட்பது, அவர் அரைகுறை மனதோடு சரி எனச்சொல்வது, கோபக்குதிரையான பூசெபைலஸ் குதிரையிடம் சென்ற அலெக்ஸாண்டர் , தன் நிழலைப் பார்த்து குதிரை பயப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதன் நிழல் படியாமல் சூரியனுக்கு நேராக நிறுத்தி, பின் குதிரையில் சவாரி ஏறி குதிரையை அடக்கியது என்னும் நிகழ்வைத் தொகுத்து தந்துள்ளார்.  " நாம் சந்திக்கும் தினசரிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் பூசெபைலஸ் போன்ற கோபக்குதிரைகள்தான். அவற்றை அடக்கி ,ஜெயிக்க விரும்பினால் ,வெறும் வீரம் மட்டும் போதாது. பிரச்சனையின் வேர் எது என்று கண்டறிய வேண்டும், குதிரையின் நிழல்போல, அந்தப் பிரச்சனை வேர்களை வெட்டி எறிந்து விட்டால் , வெற்றி தானாக மடியில் விழும் " என்கின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 39. ஆம் உண்மைதான், வீரமும் விவேகமும் இணைந்தால் மட்டும்தானே வெற்றி .

                    வெற்றிக்கும் விடாமுயற்சிக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டப் பலரும் பயன்படுத்தும் வாழ்க்கை வரலாறு அறிவியல் அறிஞர் தாம்ஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வரலாறு. அவரது வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை அவரது மனித நேயச்செயல் என விவரிக்கின்றார் நூல் ஆசிரியர் பக்கங்கள் 40 முதல் 45 வரை 'வெளிச்சம் ' என்னும் தலைப்பில் . ரெயில் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தண்டவாளத்தில் ஒரு ரெயில் வருகிறது, அந்தச்சிறுவனை யாரும் கவனிக்கவில்லை. " யாரோ ஒரு பையன் அடிபடப்போகிறான், நமக்கென்ன ? " என்று சும்மா இருந்து விடாமல் , பாய்ந்து சென்று அந்தப்பையனைக் காப்பாறுகின்றார் தாமஸ் ஆல்வா எடிசன். தனது காலில் அடிபட்டு, சிராய்ப்புகள் , சின்ன அடிகள் பட்டாலும் உயிரைப் பயணம் வைத்து அந்தச்சிறுவனைக் காப்பாற்றி விடுகின்றார். அந்தச்சிறுவனின் தந்தை , மோர்ஸ் தந்தி அடிப்பது எப்படி என்பதனை நிறையப் படிக்காது தாமஸிக்கு சொல்லித் தருகின்றார். தந்தி அடிப்பதைக் கற்றுக்கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் அதில் வல்லுநராகி, அதில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்கின்றார், அந்த சிறு விபத்தில் அந்தச்சிறுவனைக் காப்பாற்றியதுதான் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை சுவை படச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.
 
                                  " குரு " என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை சுட்டிக்காட்டுகின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 51 முதல் 55 வரை . 1935 திருப்பூர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களோடு நிகழ்ந்த முதல் சந்திப்புதான் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை  என்பதனை விவரிக்கின்றார். " ஒருவர் எத்தனை பெரிய திறமைசாலி, உழைப்பாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் கூட , தங்களுடைய முழுத்திறமையை வெளிப்படுத்தி ஜொலிப்பதற்கு ஒரு சரியான ஆசிரியர் ,வழிகாட்டி தேவைப்படுகிறார். தனது வாழ் நாள் முழுவதும் , தந்தை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையை, தமிழகம் 'அறிஞர் அண்ணா ' என்று அன்போடு அழைக்கிறது. தந்தை பெரியாரையும் , அறிஞர் அண்ணாவையும் இணைத்த அந்த முதல் சந்திப்பு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயததுக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது " என்று பக்கம் 55-ல் குறிப்பிடுகின்றார்.

                                                               கனவு காணுங்கள் என்று சொல்கின்றோம், ஆனால் காணும் கனவு அவ்வளவு எளிதில் வசப்பட்டு விடுகிறதா என்ன? உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் 'தி மாங்க் கூசோல்டு ஹிஸ் பெர்ராரி " என்னும் புத்தகத்தை எழுதிய ராபின் சர்மாவின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை, காணும் கனவை வசப்படுத்தும் வழிமுறையைச் சொல்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞராக , இலட்சக்கணக்கில் வழக்கறிஞர் தொழிலில் பணம் சம்பாதித்த ராபின்சர்மா, எழுத்தாளர் ஆவது என முடிவு செய்து வழக்கறிஞர் தொழிலை விட்டு விடுகின்றார். நிறையப் படிக்கின்றார்.  எழுதத் தொடங்குகின்றார்.'தி மெகா லிவிங் எனப் புத்தகம் எழுதுகிறார், , தானே அச்சடித்து வெளியிடுகின்றார். வாங்க ஆளில்லை, தளராமல் அடுத்த புத்தகம் எழுதுகிறார், தானே பதிப்பிக்கின்றார், விற்கவில்லை, அப்போதுதான் ஒரு நண்பர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுங்கள் எனச்சொல்ல, பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகின்றார். இன்று உலக மொழிகள் பலவற்றில் அவரது புத்தகம்.  புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த ராபின்சர்மா அதனை விட்டுவிட்டு எழுதுவது என முடிவெடுத்து எழுத்துக் களத்தில் இறங்கியதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை அழகுற பக்கம் 190 முதல் 194 சொல்லுகின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

                பெரும்பாலும் மனிதர்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைவது நல்ல மனிதர்களிடம் ஏற்படும் தொடர்பு அல்லது படிக்கும் நல்ல புத்தகங்கள் எனலாம், அதனை நிருபிக்கும் விதமாக புகழ்பெற்ற மனிதர்கள் , புகழ் பெறுவதற்கு முன்னால் சந்தித்த மனிதர்களால் ஏற்பட்ட திருப்புமுனைகளை பல்வேறு அத்தியாயங்களில் இந்த நூலின் ஆசிரியர் என்.சொக்கன் சுட்டிக்காட்டியுள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் முதன்முதலாக பாரதியார் அவர்களை சந்தித்த நிகழ்வு , பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்களால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாட வாய்ப்பு பெற்ற நிகழ்வு,முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் சுவாமி சிவானந்தர் அவர்களைச் சந்தித்த நிகழ்வு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் இசை அமைப்பாளர் திரு எம்.எஸ்.விசுவநாதன் அவர்களைச் சந்தித்து முதன்முதலாக வாய்ப்பு பெற்ற நிகழ்வு  எனப் பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனைகள் விரிவாக தனித்தனி அத்தியாயங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. "இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள 50 பேரில் ஒரு சிலரைத் தவிர , மற்ற யாரும் ஏற்கனவே புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையில் , அது குழந்தைப் பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமைப் பருவத்திலோ ஏதோ ஒரு தருணத்தில் - ஒரு சிறு பொறி தட்டியது என்று சொல்வார்களே அதுபோல் வாழ்க்கையையே மாற்றிய சம்பவத்தால் இன்று சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் ". படித்துப்பார்க்கலாம். இளைஞர்கள், மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய புத்தகம். வரும் திருப்புமுனைகளைப் புரிந்துகொண்டு வாழ்வில் உயர  , இந்தத் திருப்புமுனைகள் பயன்படும்,

Sunday, 23 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

நூலின் தலைப்பு : மோகினி (ரஷ்ய நாவல்)
ஆசிரியர்                : டால் ஸ்டாய்
தமிழில்                   : ஆர்.வி.
வெளியீடு              :  தையல் வெளியீடு, சென்னை -12
முதல்பதிப்பு         : 2004
மொத்த பக்கம்     :  64  விலை ரூ 25
மதுரை மைய நூலக எண் : 166368.


                                          உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால் ஸ்டாயின் நாவல் இது. மோகினி (The devil)  என்னும் இந்த நாவல் ஒரு ஜமின்தாரைப் பற்றியது. யுஜின் இர்ட்டினேவ் என்னும் அந்தக் கனவான் திருமணத்திற்கு முன்பே ஒரு மணமான பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததும், ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து நல்ல நிலையில் வாழும் போதும், பழைய பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தடுமாறுவதும், பின்பு அது தவறு எனத் தெரிந்து அந்த நினைப்பிலிருந்து மீண்டும் வருவதும் தொடர்கதையாவ்தை அவருடைய பாணியில் சொல்லிச்செல்கிறார். உணர்ச்சிக்கும் நேர்மைக்கும் நடக்கும் போராட்டம். கடைசியில் அந்த நினைப்பிலிருந்து மீள முடியாமல் , குடித்தவன் மீண்டும் மீண்டும் உறுதி மொழி எடுத்தபின்பும் சாராயக் கடைக்கே திரும்பிப்போவது போலத் தன் மனம் மீண்டும் மீண்டும் தடுமாறுவதால் , யுசின் இர்ட்டினேவ் தற்கொலை செய்து கொள்கிறான், அவன் ஏன் இறந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை, நல்ல மனைவி, குழந்தை, நல்ல வருமானம், நல்ல அந்தஸ்து போன்றவற்றோடு இருந்த அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு  என்ன பிரச்சனை என்பது யாருக்கும் புரியவில்லை, தெரியவில்லை என முடிகின்ற்து. அவனுக்கு ஏதாவது மூளைக் கோளாறு , பைத்தியம் புடித்து விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள் என முடிக்கின்றார் டால் ஸ்டாய் . "  யுசினுக்கு மூளைக் கோளாறு என்றால் ஒவ்வொருவருக்கும் மூளைக் கோளாறுதான்; பைத்தியந்தான், தங்க்ளிடம் உள்ள பைத்தியக்காரத்தனத்தைத் தெரிந்து கொள்ளாமல் பிறரிடம் அந்தக் குணங்களைக் காண்பவர்கள்தான் பெரும்பாலான பைத்தியக்காரர்கள் " என்று புத்தகம் முடிகின்றது.

                                                " நெறியும் நேர்மையும் முரண்படும்போது உண்டாகும் போராட்டமே இந்தக் கதையின் உரு. புலனடக்கம் இல்லாதவன் இச்சைக்கு அடிமையாகி விடுகிறான். அதிலும் உடல் சம்பந்தமான உறவு வைத்துக்கொள்பவன் , பிசாசு போன்ற மிருக உணர்ச்சிக்குப் பலியாகி விடுகிறான். இதுதான் கதையின் கரு ...டால்ஸ்டாயின் கதைகளும் கட்டுரைகளும் மனித உள்ளத்தை வளப்படுத்தி,உயர்த்தக் கூடியவை; இலக்கியத்தின் நயத்தையும் மேம்பாடுகளையும் உணர்த்தக்கூடியவை " என்று சொல்கின்றார் முன்னுரையில் மொழி பெயர்ப்பாளர் ஆர்.வி.உண்மைதானே ...

Wednesday, 19 December 2012

சாகப்போகும் விவசாயிகளே!


கடன் வாங்கி
நாத்து விதைத்து
மீண்டும் கடன் வாங்கி
நாத்தை நட்டு
பயிராகிப் பார்த்தவேளை
பருவ மழை பொய்த்துப்போனது !

கண்மாய் பெருகிவிடும்
கன மழை பெய்துவிடும்
பயிரெல்லாம் நெல்லாகி
அம்பாரம் குவிந்துவிடும்
அடைத்து விடலாம்
கடனை என்றெண்ணி
நம்பி விதைத்த பயிரெல்லாம்
சருகாகி காய்ந்து போக‌
வானம் பார்த்த விவசாயம்
வயிற்றைக் காயப் போட்டதடா !

கண்மாயில் தண்ணியில்லை
பக்கத்து கிணத்து மோட்டாரிலே
இன்னும் கொஞ்சம் கடனை
வாங்கியாவது காப்பாத்திடலாம்
பயிரையென்னு
விடிய விடிய உட்கார்ந்திருந்தும்
வீணாப்போன கரண்ட் இல்லே

கரண்டில்லை ,தண்ணியில்லை
அன்பார்ந்த விவசாயிகளேன்னு
அகில இந்திய வானொலி
காலையிலே கொட்டி முழக்கும்
கூத்துக்கு மட்டும் குறைவில்லே!

சேற்றில் நெட்டியைப் போட்டு
மிதித்தற்கு காசு வேணாம்
வரப்பு வெட்டி வாய்க்கால் வெட்டி
ஒத்தாசையா நின்னு
உழைத்ததுக்கு காசு வேணாம்
இராப் பகலா
மோட்டை அடைச்சு
தண்ணீர் பாய்ச்சி
நாத்தை வளர்த்ததற்கு காசு வேணாம்

செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன் போல‌
கருகின பயிரைப் பார்த்து
மனதுக்குள் கதறி அழும்வேளை
வட்டிக்கு கடன் கொடுத்த
பணக்காரன் வாறானே !
அவனுக்கு கொடுக்க காசு வேணுமே
என்ன செய்ய ?

பாறைக்குள்ளிருக்கும்
தண்ணியெடுத்து
பயிரை விளைய வைக்கிறோம்ன்னு
இத்தாலிக்காரன் சொல்லுகிறான்

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே!
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற‌
திட்டம் ஏதுமில்லே!

பின்னே எதுக்கு
அன்பார்ந்த விவசாயிகளே!
இனிமே சொல்லுங்கடா
அரசாங்க வானொலியில்
சாகப்போகும் விவசாயிகளே!
                                                      வா. நேரு .

எனது கவிதையை வெளியிட்ட எழுத்து.காம் -ற்கு நன்றி .

Sunday, 16 December 2012

உலகம் அழியும் நாளில் ...?

பால் குடித்தார்
பிள்ளையார்
ஒரு நாள் புரளி
ஓரிரு நாளில் முடிந்தது

அழியப் போகிறது
உலகம் !
சில நாளாய்
புரளி கொடி கட்டிப்பறக்கிறது!

உலகம் அழியும் நாளில்
நாம் அழியாமல்
தப்பிப்பது எப்படி ?
பிரார்த்தனை வகுப்புகள்
ஒரு மதத்தால்

உலகம் அழியும் நாளில்
தப்பிக்க
பரிகாரங்கள்
பட்டியலிடும்
இன்னொரு மதத்து
ஜோதிடர்கள் !

பியூஸ் வயர் போட்டால்
சரியாகும் மின்சாரமா
உங்கள் கடவுள் ?
பிரார்த்தனையும்
பரிகாரமும் பியூஸ் வயரா?

அழியாது ! அழியாது என
உரத்துச் சொன்னாலும்
கேட்காத இவரெல்லாம்
இருபத்தி இரண்டு தேதியில்
தற்கொலை செய்து கொள்வாரோ!

இல்லை தன்னிடத்தில்
உள்ள சொத்தையெல்லாம்
இருபதாம் தேதியே
ஏழைகளுக்கு கொடுத்து விடுவாரோ!

கொள்ளை சிரிப்பு வருகுதே!
இந்தக் கோமாளித்தனங்களைப்
பார்த்து ! பார்த்து !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-16 15:10:57
நன்றி : எழுத்து.காம்

உலகம் அழியும் என்று பீதி கிளப்பியவர்கள் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 டிசம்பர், 2012 - 17:02 ஜிஎம்டி
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புவிப் படம்
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புவிப் படம்
இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் பொலிசார் இவர்களைக் கலைத்துள்ளனர் என்றும் அரசு ஊடகங்கள் கூறுகின்றன.
மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் ஆரூடத்தின்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்பி இணையத்தில் எச்சரிக்கைகளைப் பரப்பிவருகின்ரனர்.
ஹொங்கொங்கிலும் இந்த காரணத்துக்காக 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாத வேறு பல நாடுகளிலும் பயத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அடிப்படையற்ற தகவல்கள் இணையத்திலும் வேகமாக பரவி வருகின்றன.
nantri - bbc news -tamil -16-12-12

Wednesday, 12 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : காற்றில் அலையும் சிறகு


நூலின் தலைப்பு : காற்றில் அலையும் சிறகு
ஆசிரியர்             : சுப்ர பாரதி மணியன்
வெளியீடு           :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
முதல் பதிப்பு      : டிசம்பர் 2005
மொத்த பக்கங்கள் : 130, விலை ரூ 50

                                          காற்றில் அலையும் சிறகு என்னும் இந்தப் புத்தகம் 16 சிறுகதைகளின் தொகுப்பு.ஆனந்த விகடன், தாய், பாக்யா, குங்குமம் போன்ற பல இதழ்களில் வந்த சிறுகதைகள் நம் கையில் மொத்தமாய், புத்தகமாய். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் , தொலைபேசித்துறையில் உதவிக் கோட்டப்பொறியாளர், இப்போது கோட்டப்பொறியாளர் ஆகியிருக்கக்கூடும் . 6 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறு நாவல் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள் என அவர் எழுதியிருக்கும் நூல்களின் தொகுப்புகள் நம்மை மலைக்க வைக்கின்றன. பல பரிசுகளை அவர் இலக்கியத்திற்காகப் பெற்றிருப்பது, அவரது துறையைச் சேர்ந்தவன் என்ற வகையில் பெருமையாக இருக்கின்றது.

                                                                                  16 கதைகள் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன. 'இந்தப் புத்தகத்தின் தலைப்பான காற்றில் அலையும் சிறகு, எப்படி எப்படியோ இருப்பவர்கள் , இப்படி எப்படி ஆனார்கள் என்னும் கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றது. நிதானத்தை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரன், ருசிப்பதை, எதையும் ரசிப்பதை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரனின் மாற்றமும், அவன் கடன் வாங்கி , கடன் வாங்கி  நோயாளியாக மாறுவதையும் கடைசியில்  உணவகத்தில் இரை கண்ட மிருகம் போல அள்ளி அள்ளி சோற்றை விழுங்குவதையும் அழகுற விவரித்துள்ளார் சுப்ரபாரதி மணியன் .இரவிச்சந்திரனைப் பற்றிப் படிக்கும் போது இறந்த போன எனது நண்பன் ஞாபகம் வருகின்றது. ஒரு கதாபாத்திரத்தில் நம்மை ஒன்ற வைப்பதும் அதில் நம்மை இணைத்துப் பார்க்குமளவுக்கு எழுதுவதும்தானே எழுத்தாளனின் வெற்றி.

                                                                பல கெளரவக் கொலைகளுக்கு அடிப்படையான , அண்ணன்களாலும் அப்பாக்களாலும் கொல்லப்பட்ட பல பெண்கள் செய்த தவறு திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாதல்.  ஆனால்   திருமணத்திற்கு முன்னே  கர்ப்பமாகிப் போன தன் பெண்ணை கர்ப்பக்கலைப்பிற்கு அழைத்துப்போகும் அப்பாவின் கதை, இந்த சிறுகதைத் தொகுப்பில்  "வழி". செத்துப்போ என்று சொன்னாலும் , வளர்த்த பாசமும், ஏமாந்து போன தனது மகளின் நிலையும் கடைசியில் "செத்து மட்டும் தொலைச்சுராதே" என்று சொல்லும் அப்பாவின் குரலும் திருப்பூரிலிருந்து ஒலிப்பது எதார்த்தமான குரல்தான். 

                                            பெரிய உணவு விடுதிகளின் முன்னால் பிச்சையெடுக்கும் முதியவர்களைக் கேட்டுப்பாருங்கள், அவர்கள் முன்னால் கிராமத்து கூலி விவசாயிகளாக இருப்பார்கள், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். காட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஆதிவாசிகள், பழங்குடியினரைப் பற்றி மறைந்த பிரதேசம் சிறுகதை பேசுகின்றது.

                                           வேலையற்ற பட்டதாரி இளைஞனைப் பற்றிப் பேசும் 'எல்லோருக்குமான துயரம் " நமக்கும் துயரத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை அவமானங்களைச் சகித்துக்கொண்டு அவர்கள் துயருற வாழ்கிறார்கள் எனபதனைப் பேசும் சிறுகதை. ஆம், இந்த நாட்டின் துயரம்தான் இது, படித்தவனுக்கு வேலை இல்லை என்பது...

                                          இதைப் போல ஒவ்வொரு கதையையும் சொல்லமுடியும் என்றாலும் தனி மனித அவலங்களை, சமுக அவலங்களை சுட்டிக்காட்டும் கதைகளாக இக்கதைகள் இருக்கின்றன. துறவி என்று ஆனாலும் குடும்பக்கடமைகள் விடாது துரத்தும் , உறவினர்கள் விடாது பொருளாதார ஆதரவுக்காக துறத்துவர் என்பத்னை துறவி கதை சொல்கின்றது. மகளின் திருமணத்திற்காக சிறுநீரகத்தை பணத்திற்க்காக விற்கப்போய் ஏமாந்து வெறுமனே சிறுநீரகத்தை இழ்ந்து வந்த கதை என்று வாழ்வின் எதார்த்தை சுட்டுவதாக பல கதைகள் உள்ளன.

                                             "கதை எழுதறுதும் ,சாப்பிடறதும் ஒண்ணுதான். நிதானமானது ரெண்டும்." ( பக்கம் 9) .ஆம்,உண்மைதான். சுப்ரபாரதிமணியன் கதைகள் நிதானமாக சாப்பிடும் சாப்பாடாகவே இருக்கின்றன. கதைகளில் மிகப்பெரிய திருப்பங்கள், சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் நம்மைச்சுற்றி நிகழும் அவலங்கள் இருக்கின்றன-. ஏன் இந்த அவலங்கள் என்னும் கேள்வியை எழுப்புகின்றன. படித்து , யோசித்து யோசித்து அசை போடும் பல விசயங்கள் சில பக்கங்களில் சிறுகதையாகக் கொடுக்கப்பட்டுள்ளன். படித்து அசை போட்டுப் பாருங்கள்.