Sunday, 19 August 2018

.மனித நேயம் வளர்ப்போம்.......மனித நேயம் வளர்ப்போம்
( முனைவர்.வா.நேரு)
மானுடத் துயர் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் இழப்பு.  உயிர் அழிப்பு பொருள் அழிப்பு,உடமைகள் அழிப்பு என மனிதர்களுக்கு அழிவினை ஏற்படுத்தும் அனைத்துமே  மானுடத்துயர்தான்.அந்த மானிடத்துயர் இயற்கைச்சீற்றங்களால்,சாதி, மதச்சண்டைகளால்,நாட்டிற்கிடையே நடைபெறும் போர்களால், இனங்களுக்கிடையே ஏற்படும் கலவரங்களால் நிகழலாம். எப்படி நிகழ்ந்தாலும் மானுடத்துயர் என்பது துயரமும் துன்பமும் மிக்கது. நடைபெறும் கலவரங்களில், போர்களில் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான். எந்தவிதமான குற்றமும் இழைக்காத இலட்சக்கணக்கான பொதுமக்கள் மானுடத்துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். சொல்லொண்ணாத் துயரத்தினை அடைகின்றார்கள்.அகதிகளாக நாடு விட்டு நாடு புலம் பெயர்கின்றார்கள். குழந்தைகள் பெற்றோர்களை இழக்கின்றார்கள். பெண்கள் மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றார்கள். கொல்லப்படுகின்றார்கள். இப்படிப்பட்ட துயரங்களை  தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

கலவரங்களுக்கு நடுவே மனித நேயர்கள் களப்பணியாற்றுகிறார்கள்.காயம் பட்டு குருதி வழிந்து  கிடப்பவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கத்தெரிந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு மனித உயிர்தான் முக்கியம். அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம். எனது சாதியா,எனது மதமா, எனது இனமா, எனது நாடா எனப்பார்க்காமல் ஒரு மனிதஉயிர் தன்னுயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறது. அந்த உயிரைக் காப்பாற்ற மருந்து கொடுக்க வேண்டும்,தன்னுயிரைக் கொடுத்தாவது உயிருக்கு போராடும் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உன்னத நோக்கத்தை மட்டும் கொண்டு களப் பணியாற்றுபவர்கள். அவர்களை நினைவு கூறும்  நாள்தான் மனிதநேய  நாள் ஆகஸ்டு 19 ஆகும். 

2003ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19ம்நாள் ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்  நகரத்தில் ஐக்கிய நாடு சபைகள் சார்பாக களப்பணியாற்றிக்கொண்டிருந்த ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி திரு.  செர்சியோவெய்ரா டீமெல்லோ(SérgioVieira deMello ) என்பவரும் அவரோடு இருந்த 21 ஐ.நா.சபை ஊழியர்களும் குண்டுவெடிப்பால் கொல்லப்பட்டனர். செர்சியோவெய்ரா டீமெல்லோ பிரேசில்    நாட்டைச்சார்ந்தவர்.வங்காளம்,சூடான்,மொசம்பியா,பெரு,கம்போடியா,யூகோஸ்லிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச்சென்று  30 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துயர்  நீக்கியவர்.. அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் ஆகஸ்டு 19, 2003 அன்று கொல்லப்பட்டார். அவரை சிறப்பிப்பதற்காக  இறப்பிற்கு பின்பு அவருக்கு மனித நேய விருது ஐ.நா.சபையால் அளிக்கப்பட்டது.

 விருதினைப் பெற்றுக்கொண்ட செர்சியோவெய்ரா டீமெல்லோ அவர்களின் குடும்பத்தினர் அவரது பெயரால் ஒரு அறக்கட்டளையை(Sergio Vieira de Mello Foundation) நிறுவினர்.குடும்பத்தினை மறந்து கலவர பூமிகளில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்களை,துடைப்பவர்களை  நினைவுகூறும் ஒரு நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கவேண்டும் என விரும்பினர். அதற்காக 2004-ஆம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் செய்தனர். 2008-ஆம் ஆண்டு மெல்லோ அறக்கட்டளையின் சார்பாக ஒரு தீர்மான வரைவினை ஐ.நா.சபையில் அளித்தனர்.அந்த தீர்மானத்தினை நிறைவேற்றித்தருமாறு பிரான்சு,சுவிட்சர்லாந்து,ஜப்பான்,பிரேசில்  போன்ற நாடுகளைக் கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்துநாடு ஐக்கியநாடுகள் சபையில் A/63/L.49 என்ற தீர்மானத்தைக்  கொண்டுவந்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஐக்கியநாடுகள் சபை டிசம்பர்-11,2008-ஆம்ஆண்டு , ஆகஸ்டு 19-ந்தேதியினை உலக மனிதநேயநாளாக அறிவித்தது.. 

உலகம் முழுவதும் இருக்கும் ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளிலும் ஆகஸ்டு 19-அன்று மனித நேயநாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த  நாளில்  கலவர பூமிகளில் பணியாற்றும் மனிதநேயர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. கலவர பூமிகளில் பணியாற்றி மறைந்த மனிதநேயர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்படுகின்றனர். 2003-ல் மெல்லோ அவர்கள் கொல்லப்பட்டதிற்கு பின்பு இந்த நாள்வரை 4076- மனிதநேயர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் நினைவை,செயலைப் போற்ற வேண்டும் என்பதற்கான நாளே உலக மனிதநேய நாளாகும்.
இந்த ஆண்டு மனிதநேயநாள் முழக்கம்" பொதுமக்களை குறிவைக்காதீர்கள் ". போராளிகளோ, அரசாங்கமோ போரிடும்போது 'பொதுமக்களை குறிவைக்காதீர்கள் ' என்பதுதான் இந்த ஆண்டின் கருத்துருவாக்கம்..2010-ல் " நாங்கள் மனிதநேய வேலைக்காரர்கள் " என்னும் முழக்கம், 2011-ஆம்ஆண்டு " உலகில் இன்னும் என்ன அதிகம் வேண்டும் ?" என்னும் முழக்கத்தினை வைத்தனர். உலகில் இன்னும் என்ன அதிகம் வேண்டும் என்னும் கேள்விக்கு, அன்பு,கருணை,சுகாதாரம்,உணவு,சகிப்புத்தன்மை எனப்பல விடைகளை பார்வையாளர்கள் அளித்தனர். இதன் மூலம் உலகம் அமைதிப்பூங்காவாக மாறுவதற்கு என்னவெல்லாம் தேவை என்பதனைப் பட்டியலிட்டனர். இப்படிப்பட்ட முழக்கங்களின் மூலமாகவும் பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரை மூலமாகவும் போர்களை நீக்கிய உலகத்தினைப் படைக்க இந்த நாள் பயன்படும் என நம்புகின்றனர். 
'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ' என்றார் திருவள்ளுவர். மனித நேயப்பணியாளர்களின் பணி பெரும்பணி. சக மனிதர்களின் மேல் அன்பு சுரக்கும் அற்புதபணி. எந்தவித எதிர்பார்ப்புமின்றி கல்கத்தா நகரின் தெருக்களிலே தொழு நோயால் படுத்துக்கிடந்த மனிதர்களை தன்னுடைய கருணையால் மருத்துவம் அளித்த அன்னை தெரசா போன்றவர்கள் மனித நேயப்பணியாளர்கள். " தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்;தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்;தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே; சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே " என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.ஆம் தாயுள்ளம் கொண்ட மனித நேயப்பணியாளர்களை  நாமும் நினைவில் கொள்வோம். அவர்களைப் போற்றுவோம். அவர்களுக்கு உதவி செய்வோம்.இன்று ஆகஸ்டு 19 உலக மனித நேய நாள்
.


நன்றி : தினத்தந்தி 19.08.2018

.
.


Tuesday, 14 August 2018

வாட்சப்பால் மன நோயா ?.......

நடு இரவில்
தொடர்ச்சியாக
அனுப்பப்பட்ட
வாட்சப் செய்திகள்.......
காலையில் பார்த்தவுடன்
அயர்ச்சிதான்....

ஓய்வுபெற்று
ஓய்வில் இருக்கும் அவரின்
நடு நிசிச்செய்திகளாக
நிறைய வாட்சப் செய்திகள்

இத்தனை செய்திகளை
நடு இரவில்
அனுப்பியிருக்கிறீர்களே!
அவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்ததாக
எதுவும் இல்லையே ? என்றேன்

எவன் படித்தான்....
எவன் பார்த்தான்....
நூற்றுக்கணக்கில் வரும்
வாட்சப் செய்திகளில்
ஏதேனும் பத்தை
பத்து பேருக்காவது
அனுப்பிவைத்துக்கொண்டே
இருக்கிறேன் ....என்றார்

அர்த்தமும் இல்லாமல்
பொருத்தமும் இல்லாமல்
அர்த்த ராத்திரியில்
தூங்காமல்.......

இது ஒருவகை
மன நோயோ?
வாட்சப்பால் மன நோயா ?
மன நோயால் வாட்சப்பா ?

                                                                        வா.நேரு,14.08.2018


                                   

Tuesday, 7 August 2018

பெரியாரியத்தின் வெடிப்பு ........

எழுதுவதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே....எங்கள் கலைஞரே..
பேசுவதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே ...எங்கள் கலைஞரே...
உழைப்பதை நிறுத்திக்கொண்டாய்
தலைவரே....எங்கள் கலைஞரே....சட்டசபையில் நான்
நாலாம்சாதியென்றாய்
வாழ்நாளெல்லாம் மனுதர்மத்தால்
நாலாம் சாதியாய்
ஐந்தாம் சாதியாய் ஆக்கப்பட்ட
மக்களுக்காகத்தான்
அதற்கும் கீழ் வரிசையில்
வைக்கப்பட்ட பெண்களுக்கும்
சேர்த்துத்தான்
எழுதினாய் பேசினாய் உழைத்தாய்
தலைவா ....அனைத்தையும்
நிறுத்திக்கொண்டாயே தலைவரே....

பாராட்டிப்போற்றி வந்த
பழமை லோகம் ஈரோட்டுப்
பூகம்பத்தால் இடிகுது பார்
எனக் கவிதை உரைத்தாய்
பழமைலோகத்தை இடிப்பதற்காய்
ஆட்சியில் இருந்தபோதினும்
எதிர்க்கட்சியில் இருந்தபோதினும்
எழுதினாய் பேசினாய் உழைத்தாய்
தலைவா...அனைத்தையும்
நிறுத்திக்கொண்டாயே தலைவரே
எங்கள் கலைஞரே .....

எந்தக் கல்லூரியில் படித்தார்
உங்கள் கடவுள் ராமர் ?
எனக் கேள்வி கேட்கும் துணிவு
அனைத்து அரசியலையும் கடந்து
அடி மனதில் குவித்து வைத்த
பெரியாரியத்தின் வெடிப்பு அது ?

ஆண்களுக்கு மட்டும் என்னடா
சொத்துரிமை ? ஏனில்லை பெண்ணுக்கு
எனக் கேட்ட அய்யாவின் வார்த்தைகளை
ஆழ் மனதில் சேர்த்து வைத்த நினைவால்தானே
அரசுக் கட்டிலைப் பயன்படுத்தி
பெண்களுக்கும் சொத்துரிமை கொடுத்தாய்.....


உனக்கு அஞ்சலி செலுத்துவதென்பது
வெறும் மாலைகள் வைப்பது அல்ல!
உன்னிடத்தில் இருந்த
போர்க்குணத்தை மனதில் வைப்பது....
உன்னிடத்தில் இருந்த
உழைப்பை நினைவில் வைப்பது

ஒவ்வொரு நிலையிலும்
நீ வரலாறாக மாறியிருக்கிறாய்!
எவராலும் மறைக்க இயலாத
சரித்திரமாயிருக்கின்றாய் ....

மறு வாசிப்பு செய்யப்போகிறோம்
தலைவரே! எங்கள் கலைஞரே!
நீ கொடுத்த இலக்கியங்களை
நீ கொடுத்த புத்தகங்களை
மீண்டும் மீண்டும் வாசிக்கப்போகின்றோம்
உனது பதிவு செய்யப்பட்ட
பேச்சுக்களை மீண்டும் மீண்டும்
கேட்கப்போகின்றோம் தலைவரே
எங்கள் கலைஞரே.......அதுதான்
உங்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி

கண்ணீரால் விடை தந்தோம்....
தலைவரே..எங்கள் கலைஞரே
இயற்கை எய்தினாய் ஆனால்
என்றும் தமிழர்கள் மனதில் நிற்பாய் !
உனது புகழ் வாழி! வாழி !

                                                         வா.நேரு,
                                               தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
                                               07.08.2018      இரவு 7 மணி..