Thursday, 26 September 2019

எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்......

                                 எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்

இனிய தோழர், பார்க்கும் நேரமெல்லாம் அகம் மலர முகம் மலர 'அண்ணே ' என்று அழைத்து பாசம் பொழியும் அன்புத் தம்பி, மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் (27.09.2019). ஆசிரியராகப் பணியாற்றியவர்.மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றியவர்.வீட்டிலிருந்து பக்கத்தில் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்,  வேகமாக வண்டியை ஓட்டி வந்த ஒரு மடையனால் மோதப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டு இரு நாட்கள் மருத்துவமனையில் இருந்து , நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்திய  நாள்.

"அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணை காக்கப்படுவதுதான் " என்றார் ரஸ்ஸல்.அப்படி வாழ்ந்து காட்டியவர் தம்பி சுப்பிரமணியன் அவர்கள். . உறவுகள் இழப்பைவிட எனக்கு எனது தோழர்களின் இழப்பு அதிக வருத்ததை தருவது எப்போதும். தன் வாழ்வு, தன் குடும்பம் என்று போய்க்கொண்டிருப்பவர்களுக்கு நடுவில் சமூகம் எனச்சிந்தித்து அதற்காக நேரத்தை, உழப்பை, பணத்தை செலவழிக்கும் எனது தோழர்களின் இழப்பு எப்போதும் அழியாத வருத்தத்தைத் தருகிறது. 

தம்பி ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் மதுரையில் விடுதலை பத்திரிக்கையின் முகவராகப் பணியாற்றியவர். வீடு வீடாகச்சென்று விடுதலையைக் கொண்டு சேர்த்தவர். மதுரை அருகில் உள்ள திருமங்கலம் நகராட்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தினை  அரசாங்கப்பள்ளியை, தனியார் பள்ளிக்கு உரிய தரத்தோடு நடத்தியவர்.அந்த அரசுப்பள்ளியினை பலரின் உதவியோடு பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை,ஒரே மாதிரியான பை எனப் பல வசதிகளை செய்துகொடுத்தவர் அவர்.சென்ற ஆண்டில் கொட்டும் மழையில் இதே நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள் வரிசையாக கண் முன்னே ஓடுகின்றது.மிகுந்த துயரத்தோடு இருந்தாலும் கறுப்பு உடையை அணிந்து அவரின் துணைவியார் கிருஷ்ண வேணி, அவரது மகன் சு.சித்தார்த், அவரது மகள் சு.யாழினி ஆகியோர் எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என உறவினர்களைக் கேட்டுக்கொண்டது,.அவரது உடல் எந்த விதமான மூடச்சடங்குகளும் இன்றி ஹார்வி பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு வேனில் எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது,.இறுதியாக தனது துணைவரின் முகத்தைப் பார்த்து ,ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணவேணி அவர்கள்' " நீங்கள் கடைப்பிடித்த கொள்கையை நாங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிப்போம். நான் எனது பிள்ளைகள் என்றும் பெரியார் கொள்கை வழிப்படி நடப்போம் " என பெருத்த குரலோடு உறுதிமொழி எடுத்தது என அனைத்தும் நினைவில் நிற்கின்றன. இறுதி நிகழ்வாய்   அஞ்சலிக் கூட்டம் நடந்ததும் அதில் அவரால் பலன் பெற்ற மாணவர் சரவணன் உட்பட பலர் பேசியதும் நினைவில் வருகிறது.

'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்பார் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உண்மைதான் ஏற்றுக்கொண்டு இன்னும் வேகமாக சமூகத்திற்கு உழைப்பதுதான் தம்பி சுப்பிரமணியன் போன்றவர்கள் நினைவைப் போற்றும் உண்மையான வழி.தொடர்வோம், தொண்டறம்-பகுத்தறிவுப் பணியினை.திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களின் ஜெ.சுப்பிரமணியன் நினைவுக் கவிதை

பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!

Saturday, 21 September 2019

மதம் தேவய்தானா ?....தி.கோரா....
இன்று(21.09.2019 ) மின் நூலாக திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் வெளியிடப்படும் 'மதம் தேவய்தானா ? ' என்னும் நூலிற்கு நான் எழுதிய அணிந்துரை:


முனைவர் வா.நேரு,
தலைவர்,
மாநில பகுத்தறிவுஎழுத்தாளர் மன்றம்,தமிழ் நாடு.

.

புத்தகத்திற்குள்  புகுவதுற்கு முன்,
                                 வணக்கம்.
பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையின் மூலம் எனக்கு வியப்பையும் , ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கான வாழ்க்கை முறையையும் அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.அந்த வகையில் சென்னையில் வாழும் திரு.தி.கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தான் மட்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக மற்றும் அல்ல , தனது குடும்பத்தையே பெரியாரியலை ஏற்றுக்கொண்டவர்களாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பீடு நடை போடும் பெரியாரியல் குடும்பம் அவரது குடும்பம். எனக்கு மதுரையில் கிடைத்த அருமையான நண்பர் திரு.கோரா அவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மத்திய அரசுத்துறையில் , பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.மத்திய அரசுப்பணியில் இருக்கும்போதே எப்போதும் கருப்புச்சட்டைதான் போட்டிருப்பார்.மத்திய அரசுப்பணி என்பதே பெரும்பாலும் பார்ப்பனர்களை அதிகாரிகளாகக் கொண்டிருக்கும் பணி. அந்தப் பணியில் கருப்புச்சட்டை மட்டுமல்ல, கருப்புச்சட்டையில் கடவுள் இல்லை " NO GOD " என்னும் வாசகம் எழுதிய கருப்புச்சட்டையோடுதான் வலம் வருவார்.


மதுரையில் இருந்து சென்னைக்குப் போய் பணி நிறைவு பெற்றார்.பணியில் இருந்தபோதும் சரி,ஓய்வுக்குப்பின்னும் சரி பெரியாரியல்தான் வாழ்க்கை.பேச்சு,மூச்சு எல்லாம் அய்யா பெரியாரும்,ஆசிரியர் அய்யா வீரமணியும்தான்.இவர் பிறப்பால் தெலுங்கு பேசும் வாய்ப்பு  பெற்றவரல்ல, ஆந்திராவில் வேலை பார்த்தபொழுது தெலுங்கைத் தானாகக்  கற்றிருக்கிறார்.தெலுங்கினைப் பேசவும் எழுதவும் அதன் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாத்திகர்கள், பகுத்தறிவாதிகள் பல பேரை தெலுங்கு மூலம் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஏற்படும்போது தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பொறுத்த அளவில் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுபவர்கள் அல்ல. அதற்கு மாற்றாக தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னது போல 'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொண்டு ' தொடர்ந்து உற்சாகமாக பயணிப்பவர்கள்.சமூகத்திற்கு பயனளிப்பவர்கள்.  


இந்த மின் புத்தகம் கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தெலுங்கிலிருந்து  தமிழில் மொழி பெயர்த்த தொகுப்புகள். இந்த மொழி பெயர்ப்பில் கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறுகதை இருக்கிறது. பல தலைப்புகள் குறித்து கட்டுரைகள் இருக்கிறது.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.எல்லாமே தெலுங்கு இதழ்களில் கடந்த சில மாதங்களாக வெளிவந்தவை.திடீரென உடல் சீர்கெட்டது.படுத்த படுக்கையாகவே நீண்ட நேரம் படுத்திருக்க வேண்டிய சூழல்.அவரது அன்பு இணையர் திருமதி ஹேமா கோரா அவர்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.தடைகள் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல தந்தை பெரியாரின் தொண்டர்கள்.மாறாக தங்கள் மன உறுதியின் மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் பெரியார் இயக்கத்தவர்கள் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு திரு.கோரா அவர்கள்.படுத்த படுக்கையாக இருந்தாலும் தொடர்ச்சியாக தெலுங்கில் இருந்து  மொழி பெயர்த்து அதனை தனது மகள் தமிழரசியிடம் தட்டச்சு செய்யச் சொல்லி, அதனை வாட்சப்பில் எனக்கு  அனுப்பிக்கொண்டிருக்கிறார். பல நாட்களாக எனக்கு வந்த பின்பு இதனை ஒரு தொகுப்பாக ,புத்தகமாக ஆக்கினால் என்ன ? என்னும் கேள்வி பிறந்தது. அருமைத்தோழர் பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களிடம் அந்தக் கேள்வியைப் பகிர்ந்து கொண்டபோது அவரும், பெரியார் திடல் தோழர் எழுத்தாளர் உடுமலை அவர்களும் உற்சாகமாக மின் புத்தகமாக இதனைக் கொண்டுவரலாம் என்று உற்சாகம் அளித்தனர்.அதன் விளைவாக இந்த மின் புத்தகம் தங்கள் கைகளில்........

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இவரது மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுக்கின்றன.தான் யாருடைய கட்டுரையை,கருத்தை மொழியாக்கம் செய்கின்றேன் என்பதனை கட்டுரையின் துவக்கத்திலேயே மொழி பெயர்ப்பாளர் கோரா அவர்கள் கொடுத்து விடுகின்றார். இடை இடையே தனது கருத்துக்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கின்றார்.புத்தகத்தை அச்சிடாமல ,அதே நேரத்தில் விரும்புகிறவர்கள் படிக்கும் வண்ணம் இந்த மின் புத்தகம் என்னும் ஆக்கம் அமைந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் கணினியால் வந்த விளைச்சல் இது. படித்து தாங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாம்.

                                                                                                                                                                        அன்புடன்
                                                                                                                                                                        வா.நேரு,11.08.2019


Monday, 16 September 2019

தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள்....பொறியாளர் மு.முத்தையா
"தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள்" என்னும் நூல் பொறியாளர் மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்டதாகும்.இன்று (16.09.2019)  மதுரை கே.எம். மஹாலில்  நடைபெற்ற வாழ்க்கை இணை ஏற்பு(கோ.பிரதாப்-இரா.துவி நிஷா)  விழாவில் நூல் அறிமுகம் செய்யப்பட்டதோடு, வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்த நூலும்,அய்யா மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்ட 'உழைப்பிற்கு வயது இல்லை "என்னும் நூலும் வழங்கப்பட்டது. 

நூலைப் பற்றிய விவரங்கள்:
நூலின் தலைப்பு : " தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள் "
ஆசிரியர்        : பொறியாளர் மு.முத்தையா ( பகுத்தறிவு-சமூக நீதி-வகுப்புரிமை-சிக்கனம்-இலக்கியம்) கட்டுரைகள்.
கிடைக்கும் இடம்: 86 A/1,ஜீவா தெரு,பசும்பொன் நகர்,பழங்காநத்தம்,மதுரை-625003.,9080761630
மொத்த பக்கங்கள் :  183, விலை ரூ 135 /-


       
                                                     அணிந்துரை
 
வணக்கம்.
"தந்தை பெரியார் சிந்தனைகளின் தனித்தன்மைகள் "என்னும் இப்புத்தகமானது ,மதுரையில் இப்போது வசிக்கும் பெரியார் தொண்டர் மானமிகு.பொறியாளர் மு.முத்தையா அவர்களால் எழுதப்பட்டதாகும்.சிறுவயது முதலே பகுத்தறிவுச்சிந்தனையோடு எதையும் சிந்தித்து செயல்படுபவராக தனது வாழ்க்கையைஅமைத்துக்கொண்டவர் அய்யா மு.முத்தையா அவர்கள்.87 வயது பெரியாரியல் இளைஞர்.எப்போதும் அமைதியாகவும் ஆனால் மிக ஆழமாகவும் தனது கருத்துக்களை, எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடியவர்.அவர் தனது 'என்னுரையில்' தன்னைப் பற்றியும் ,தன் குடும்பச்சூழல் பற்றியும் கல்வி கற்க முடியாமல் வறுமையால் இரண்டு ஆண்டுகள் கல்வி தடைபட்டதையும், பின்பு தொடர்ந்து பொறியாளர் படிப்பை முடித்து அரசுப்பணியில் சேர்ந்ததையும் சுவைபட எழுதியிருக்கின்றார்..

'பெரியார் ' என்னும் பெயர் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பெயராக விளங்குகின்றது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒடுக்கப்படுபவர்கள் தங்களது தலைவராக கொள்ளத்தக்கவராக, தனது வாழ்க்கை சொல்லும் செய்தியால் போற்றப்படுவராக தந்தை பெரியார் விளங்குகின்றார். 'பெரியாரியல் 'என்பது வாழ்வியல் நெறி.அது பரப்பப்படவேண்டியது மட்டுமல்ல,கொள்கையைப் பரப்புகின்றவர்களின்,பின்பற்றுபவர்களின் வாழ்க்கை நெறியால்,வாழும் முறையால் மற்றவர்களையும் ஈர்த்து வழிகாட்டும் நெறி. அப்படி பண்பட்ட பெரியாரியல் வாழ்க்கையினை வாழ்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழக்கூடியவர் அய்யா மு.முத்தையா அவர்கள்.

தந்தை பெரியாரின் தொண்டர்கள் சொந்த வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படாதவர்கள்.ஆனால் அதே நேரத்தில் கொள்கைக்காக எதற்கும் துணிந்தவர்களாக வாழ்க்கையில் திகழக்கூடியவர்கள். நெருக்கடி கால கொடுமைகளை நாம் அறிவோம்.அரசு ஊழியராகப் பணியாற்றிய நிலையில் ,நெருக்கடி காலத்தில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை குடும்பத்துடன் சந்தித்து 'அறிவுரைகள் 'பெற்று வந்ததையும் அந்த நேரத்தில் தான் ஆற்றிய இயக்க செயல்பாடுகளையும் விவரிக்கும்போது நமக்கு இவரின் துணிவு புலப்படுகின்றது. மற்ற இயக்கங்களில் 'பேச்சில் வல்லவர்களெல்லாம் ' அஞ்சி தங்களது தலைவர்களைச்சந்திக்காமல் தவிர்த்த நேரத்தில் ,தந்தை பெரியாரின் முதல் தொண்டராய் விளங்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இந்தப் புத்தக ஆசிரியர் சந்தித்ததும் இயக்க செயல்பாடுகளில் முன்னின்றதும் பாராட்டுக்கு உரியதாகும் .

'தந்தை பெரியாரின் சிந்தனைகளின் தனித்தன்மைகள்' என்னும் இந்தப்புத்தகத்தின் உள்ளடக்கம் 'இனிப்பில் எதிரி 'என்னும் இதழில் வெளிவந்தவையாகும். மதுரை மனித நேய மருத்துவர், பகுத்தறிவு நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக ஆதரவு தரும் மறைந்த மருத்துவர் கு.கண்ணன் அவர்களால் நடத்தப்பட்ட இதழ் 'இனிப்பில் எதிரி 'ஆகும்..அந்த இதழில்  எழுதியவையும் மற்றும் சில கட்டுரைகளையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்தப்புத்தகம் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் அவரது தனித்தன்மைகளையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்ற புத்தகமாகும்.

'இவர்தான் பெரியார் 'என்னும் அறிமுகமே தந்தை பெரியாரைப் பற்றிய கவிஞர் கண்ணதாசன்,புரட்சிக்கவிஞர் அவர்களின் பாடலோடு தந்தை பெரியாரின் உருவத்தோற்றத்தை சாமி சிதம்பரனார் அவர்கள் விவரிக்கும் பாங்கினை விவரித்து உருவத்தாலும், தத்துவத்தாலும் எப்படி தனித்தன்மையோடு பெரியார் விளங்குகின்றார் என்பதனை நமது படிப்போர் மனதில் பதிய வைக்கின்றார். சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் என்ன? என்ன? செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார்.அதற்கென எப்படி தனித்த வியூகத்தோடு செயல்பட்டார் என்பதனை சாதி ஒழிப்பு என்னும் பகுதியில் விவரிக்கின்றார்.

பல பொதுவுடமைக்காரர்களுக்கு 'பொது உரிமை ' என்றால் என்ன என்பது இன்றும் கூட விளங்குவதில்லை.தந்தை பெரியார் பொது உரிமை ஏன் பொதுவுடமையோடு வேண்டுமென விரும்பினார் என்பதனை விளக்கும் பகுதியும் தந்தை பெரியாரின் வாதத்திறமை பற்றி கேள்வி கேட்டவரையே கேள்வி கேட்டு எப்படி மடக்கினார் என்னும் பகுதியும் தனித்தன்மையாக இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின், தமிழகத்தின் பொருளாதாரம் அகல பாதாளத்தில் ஆள்வோர்களால் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் தந்தை பெரியாரின் பொருளாதாரக்கொள்கைகள் எப்படி தனித்தன்மையானது  என்பதனை விவரிக்கின்றார். இது பெரும் ஆய்வுக்கு உரிய தலைப்பாகும்.

" ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கின்றார்கள் .நாட்டில் அறிவும் ,ஒழுக்கமும்,நாணயமும் வளர்ந்து வந்திருக்கின்றது என்பதற்கு அடையாளம் என்ன? என்றால் நாட்டின் எல்லாத்துறைகளிலும் சமதருமம்,சம ஈவு,சம உடமை, சம ஆட்சித்தன்மை, சம நோக்கு,சம நுகர்ச்சி,சம அனுபவம் இருக்க வேண்டும் .ஏற்பட வேண்டும். ஏற்படுத்தப்பட வேண்டும்.ஏற்பட்டாக வேண்டும் 'என்று பெரியார் கூறியதைக் குறிப்பிட்டு விளக்கியிருக்கும் பகுதி தனித்தன்மையாக உள்ளதாகும்.வகுப்புரிமையைப் பற்றி மிக விரிவாகவும் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் எழுதப்பட்டுள்ளது. அதைப்போலவே தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகளும் சிறப்பாக இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது .

60 ஆண்டுகளாக உற்ற துணையாக இருந்த தனது துணைவியார் மானமிகு நாகூரம்மாள் அவர்கள் நோய் வாய்ப்பட்டதையும் பின்பு இயற்கை எய்தியதையும் அய்யா பொறியாளர் மு.முத்தையா குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் அன்னை நாகம்மையார் மறைந்த போது எழுதிய இரங்கல் உரைத் தலையங்கமே தனக்கு ஆறுதல் அளித்து துன்பத்தைப் போக்கிற்று என்று எழுதுகின்றார்.இன்பத்திலும் துன்பத்திலும் பெரியாரியல் உற்ற துணையாக தனது வாழ்வில் இருக்கிறது என்பதனை பதிவு செய்திருக்கின்றார்.அன்னை 'நாகம்மையார்  காலமானதும் பெரியார்  மேற்கொண்ட நடைமுறைகள் கவனிக்கத்தக்கவை.மற்றவர்களும் பின்பற்றி நடக்க வேண்டிய நடைமுறைகளாக உள்ளன எனக்குறிப்பிட்டு அதன் தனித்தன்மைகளை விரிவாக விவரித்திருக்கின்றார்.அதைப்போல தனது தாயார் 'சின்னத்தாயம்மாள் 'மறைந்த போது தந்தை பெரியார் அவர்களின் இரங்கலுரை எப்படி உண்மைகளை பெரியார் போட்டு உடைப்பவர்,  தனித்தன்மை வாய்ந்தவர் என்பதனை நாம் சிரித்துக்கொண்டே படிக்க இயலும்.

சில அய்யங்களுக்கு விடைகள் என்னும் பகுதியும் தனித்தன்மை கொண்டதாக இந்தப்புத்தகத்தில் விளங்குகிறது.மொத்தத்தில் இந்தப்புத்தகம் தந்தை பெரியாரின் தனித்தன்மைகளைப் பேசுவதோடு புத்தக ஆசிரியர் பொறியாளர் முத்தையா அவர்களைப் பற்றியும் நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ் நாளெல்லாம் பெரியாரியல் படி வாழும் , ஏறத்தாழ 75 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் தொண்டராக வாழும் இந்த நூலின் ஆசிரியரின் சிறந்த படைப்பாக இந்த நூல் வெளி வருகின்றது.வாழ்த்துகளும்,பாரட்டுகளும்....இன்னும் பல நூல்கள் தந்தை பெரியாரின் தொண்டர் பொறியாளர் மு.முத்தையா அவர்களால் படைக்கப்படவேண்டும் என்னும் இந்த விருப்பத்தினை தெரிவிப்பதோடு, இந்த நூலினை வாங்கி வாசித்து வாசகர்கள் ஆதரவு தர வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

                                                                                                                                                     தோழமையுடன்
                                                                                                                                                      முனைவர்.வா.நேரு,
                                                                                                                                                      தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.
                                                                                           10.09.2019
Sunday, 8 September 2019

முரண்பட்ட மனப்போக்கு

                                               முரண்பட்ட மனப்போக்கு

                                                    முனைவர்.வா.நேரு
                                தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்


இந்த நூற்றாண்டு தொழில் நுட்பங்களின் நூற்றாண்டு. தொழில் நுட்பங்கள் வளர,வளர குறிப்பாக தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வளர,வளர மூட நம்பிக்கைகள் குறையும் அல்லது முற்றிலும் ஒழிந்து போகும் என்பது பகுத்தறி வாளர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு மாறான நிகழ்வுகள் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.40 ஆண்டுகளுக்கு பின் னால்  குளத்திற்குள் இருந்து வந்த ஒரு தெய்வம் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றார்கள்.ஆடி அமாவாசைக்கு இறந்து போன  தங்கள் பெற்றோருக்கு திதி கொடுக்க என்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொன்னால் இத்தனை நாளாக குடிக்காதவர் இன்றைக்கு மட்டும் எப்படி குடிக் கின்றார் என்ற கேள்வி எதுவும் கேட்காமல் பால் வாங்கி பிள்ளையாருக்கு ஊற்ற என்று  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மக்கள் ஓடுகின்றார்கள்.ஜெபத்தினால் நோய் சரியாகும் என்று சொல்லும் கூட்டத்திற்கும் குறைவில்லாமல் கூட்டம் சேர்கிறது. சரியில்லாத சாமியார் என்று தெரிந்தும் அந்தச்சாமியாரை தரிசனம் செய்ய என்று உயர் மட்ட பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் வருகின்றார்கள்... உணவின்றி மக்கள் பசியால் வாடி வதங்கும் நிலையில் யாகம் என்று சொல்லி உணவினை நெருப்பில் போட்டு தீயில் வீணாக்கு கிறார்கள்... அப்படி வீணாக்கும் நிகழ்வுக்கு மாணவ - மாணவிகள் படிக்கும் கல்லூரியில் இடம் கொடுக் கிறார்கள்....? மழை பெய்யவில்லை, அதற்காக யாகம் நடத்துகிறோம் என்று சொல்லி அரசின் அற நிலையத்துறை நடத்துகிறது.... நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகள் நமக்கு சில நேரங்களில் சோர் வைத் தருகிறது ...அறிவியல் மனப்பான்மை என் பதே மக்களிடம் அற்றுப்போய் விட்டதா? என்னும் கேள்வி மிகத்தீவிரமாக நமக்கு எழுகின்றது...

ஆனால் நாம் பகுத்தறிவுவாதிகள். ஒவ்வொரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு என்பதனை நம்புகிறவர்கள்.நோய் விரைவாகப் பரவுகிறது என்றால் நோய் எப்படி பரவுகிறது? அதனை எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது தான் ஒரு மருத்துவரின் சிந்தனையாக இருக்க முடியும்.நோய் பரப்பும் கிருமிகள் அடர்த்தியாக வளர்கிறது என்பதற்காக அமைதியாக பார்த்துக் கொண்டிருப் பவர் நல்ல மருத்துவர் ஆக இயலாது. அந்த வகையில் பரவும் இந்த மூட நம்பிக்கை  நோய் தானாகப்பரவவில்லை, ஆட்சியா ளர்களின் அனுமதியோடு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த உலகில் நிகழ்ந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் அறிவியல்தான் அடிப்படை. நாம்  நீண்ட நாள் வாழ்வதற்கு, நமக்கு வந்த நோய்களை உலகை விட்டு விரட்டியதற்கு, விரைந்து செல் வதற்கு, உலகம் முழுவதும் ஒரு நொடியில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு என இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்திற்கும் அறி வியலே,தொழில் நுட்பங்களே  அடிப்படை. இன்றைய உலகில் வாழும் மக்கள் அறிவியலால் விளைந்த அற்புதங்கள் அனைத்தையும்  அனுப விக்கிறார்கள்,  பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அறிவியல் மனப்பான்மையை மனதிற்குள் ஏற்றிக் கொள்வதற்கு மறுக்கிறார்கள் .... ஏன் ? பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மை ஏற்படாமல் செய்வதற்கு என்றே ஒரு கூட்டம் நமது நாட்டில் திட்டம் போட்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அதனைப் பெரும்பான்மையான நமது மக்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

முதுகலைப் பட்டம் பெற்று பணியாற்றும் ஒருவருக்கு உடல் நிலைக் கோளாறு ஏற்பட்டது. அவரைப் பார்க்கப் போயிருந்தோம். தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதிற்கு தனது தம்பியும், அவரது மனைவியும்தான் காரணம் என்று சொல்கிறார். எப்படி என்று கேட்டபோது, அவர்கள் பக்கத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று எனக்கு செய்வினை செய்து விட்டார்கள். அதனால் தான் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னார்.அவரது மனைவி இன்னும் ஒரு படி மேலே போய் செய்வினை வைத்தவர்களுக்கு நாங்களும் செய்வினை வைக்கப்போகிறோம் என்று சொன்னார்.கணவன், மனைவி இருவருமே நன்றாகப் படித்தவர்கள்.நல்ல வேலையில் இருப்பவர்கள்.ஆனால் மனதளவில் அவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லை. ஒரு பக்கம் உடல் நிலைக்கோளாறுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம் செய்வினை என்னும் மூடத்தனம் அவர்களின் எண்ணத்தைப் பாழாக்கியிருக்கிறது. கட்டாயம் அவர்களது உறவுகளுக்குள்  இந்தப் பேச்சு, இந்த எண்ணம் மிகப்பெரிய பிரிவினையை உண்டாக்கும்.அவர்களின் மனப்பான்மை எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.அருகில் இருந்த நண்பர் சொன்னார், இன்றைக்கு தொலைக் காட்சிகளில் ஒலிபரப்பாகும் தொடர்களில் 90 சதவீதம் அறிவியல் மனப் பான்மைக்கு  எதிரான 'பில்லி, சூனியம், மந்திரம், வசியம் ' போன்றவை ஒளி பரப்பப்படுகின்றன. அது பார்ப்பவர்களின் எண்ணத்தில் அவர்கள் அறியாமலேயே நஞ்சைக் கலக்கின்றன என்று சொன்னார். இவர்கள் முதுகலை வரை படித்த படிப்பு அறிவியல் மனப் பான்மையை துளி கூட இவர்களுக்கு கொடுக்க வில்லையே, இவர்கள் படித்த படிப்பால் சமூகத் திற்கு என்ன பலன் என்னும் கேள்வியும் ,இவர்களே இப்படி என்றால் தொலைக்காட்சியில் காட்டுவதை எல்லாம் உண்மை என்று நம்பும் படிக்காத மக்களின் கதி என்னாவது என்கிற எண்ணம் மனதில் ஓடியது.

ஒரு நல்ல சமூகம் அமைவதற்கு அடிப்படை அச்சமற்ற சூழல்...புறச்சூழல் அச்சமற்று இருப்பது போல அகச்சூழலும் அச்சமற்று இருந்தால்தான் நல்ல சமூகம் அமையும்.ஆனால் உள்ளத்து அளவில் பயமுறுத்துவதற்கான விதைகளை  மதவாதிகள் குழந்தையாக இருக்கும் போதே, குழந்தைகளின் மனதில் விதைத்து விடுகின்றார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடலை மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் " வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு ,விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க, அந்த வேலையற்ற வீணர்களின் மூளையற்ற பேச்சுதனை விளையாட்டாகக் கூட நம்பி விடாதே, நீ வீட்டுக்குள்ளே பயந்து முடங்கி விடாதே " என்று பட்டி தொட்டி எங்கும் பரப்பினார். ஆனால் அவரின் வழி வந்தவர்கள்  என்று சொல்லிக் கொள் பவர்கள் செய்யும் அபத்தங்களுக்கு அளவில்லை.

அண்மையில் வந்த ஒரு கட்செவி(வாட்சப்)யில் ஒரு பெண் காவலர், கோவில் விழாவிற்கு பாதுகாப்பிற்கு போனவர், காக்கி சீருடையோடு  திடீரென சாமியாடுகிறார். எனது தாயார் ஆசிரிய ராக இருந்தவர், தனது சொந்தக்கார பெண்கள் யாராவது இப்படி சாமியாடினால், அப்படி சாமியாடிகிட்டே போய் கரண்டு கம்பியைப் பிடி பார்ப்போம் என்பார். சாமியாடும் அந்த பெண் காவலரை ஒரு குறைந்த மின் அழுத்தம் பாயும் கரண்டு கம்பியை பிடிக்கச்சொல்லி கரண்ட் அடிக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம். ஒரு ஜெபக்கூட்டத்தில் பேயாடும் ஒரு பெண் பேயாடிக் கொண்டே கலைந்து போய்க்கிடக்கும் தனது மாராப்பை சரி செய்கிறார். பேய்க்கு மாராப்பு திறந்து கிடக்கிறது என்னும் கவலை ஏற்படுமா? என்ன?  இப்படிக் கூத்தாய் நடந்து கொண்டி ருக்கிறது. இப்படியான நிகழ்வுகளுக்கு உடனடியாக அரசு தண்டனை கொடுக்க வேண்டும்.தற்காலிமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.அந்தப் பெண் காவலரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.அரசுப் பணியில் உள்ள ஒருவர் அறிவியல் மனப் பான்மைக்கு எதிராக நடக்கிறார் என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது அனைத்து மதங்களைச் சார்ந்த அரசுப் பணியாளருக்கும் பொருந்தும். அரசமைப்பில் உள்ளவர்கள் அறி வியல் மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்புச்சட்டத்தின் விதிகளில் ஒன்று. அதற்கு நேர்மாறாக நடக் கிறார்கள் என்றால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் இந்த நாட்டில் நட வடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்ப வர்களே அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன விலை ? என்று கேட்பவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "மூடநம்பிக்கைகள் நிலைத் திருப்பதற்கு அடிப்படை எவை எவை? எனக் கேட்டு அதற்கு விடையாக  "1.பயம்  2.குருட்டு நம்பிக்கை 3.பகுத்தறிவுப்படி ஆராயாமை 4.பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப் போக்கு (Attitude)" (ஜனவரி 16-31, 2017.. உண்மை இதழ்) எனக்குறிப்பிடுவார்.இந்த பகுத்த றிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கு என்பது மாற்றப்படவேண்டியது என்பதனை புரிந்து கொண்டாலே அறிவியல் மனப்பான்மை வந்து விடும். ஆனால் அந்த மனப்பான்மை வர விடாமல் இன்றைய ஊடகங் களும் மதவாதிகளும் பார்த்துக் கொள்கிறார்கள்.

சாமியாடுவதை கேலி செய்யும் ஒரு மதத்தினர் தங்கள் மதத்தில் பேயாடுதல் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏன் இப்படி படித்தவர்கள் பேய் ஆடுவதாக ஆடுகிறார்கள் என்று கேட்டால் மற்ற மதத்தவர் சாமியாடுவதை நீங்கள் கேட்பதில்லை என்று சொல்கிறார்கள். சாமியாடுபவர்கள் பேயாடு வதை நீங்கள் சொல்வதில்லை என்று சொல் கிறார்கள். இந்த இருவரும் சேர்ந்து கடவுளுக்கு என்று சொல்லி தங்கள் உடம்பை கத்திகளால் கிழித்துக் கொள்கிறார்கள்,  அவர்களை நீங்கள் ஒன்றும் சொல்வதில்லை என்று சொல்கிறார்கள். நமது கருத்து எல்லா மதங்களும் மூட நம்பிக்கை கூடாரங்கள் என்பதுதான். எல்லா மதங்களும் அடிப்படையில் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது என்பதுதான். ஆனால் மதவாதிகள் தங்கள் மதத்தில் உள்ள அறிவியல் மனப் பான்மைக்கு புறம்பான கருத்துக்களை, செயல் பாடுகளை களைய வேண்டும் என்பதில் கருத்து கொள்ளாமல் அடுத்த மதத்தில் உள்ளவற்றை சுட்டிக்காட்டுவதன் மூலம் தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைக்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொண்டால் எளிதாக அறிவியல் மனப்பான்மை மக்கள் மத்தியில் பரவும்.

''மக்களின் சுதந்திரத்தை மன்னர் தீர்மானித்த இருண்டகாலத்தில் நாம் வாழ்ந்து கொண் டிருக்கவில்லை. இந்தியா போன்ற மாபெரும் நாடு ,விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர,மதங்களை நோக்கி அல்ல. மதங்களை நோக்கி முன்னேறுவது நிச்சய மாக இந்தியாவின் நிலைத் தன்மையையும்,மத ரீதியான பதற்ற நிலை காரணமாக பல பெரிய தொழிற் சாலைகள் இந்தியாவை விட்டு வெளி யேறிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருப்பதும் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் இளம் பகுத்தறி வாளர்களின் கரங்களிலேயே உள்ளன" இது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அவர்களின் கருத்து.

பகுத்தறிவுக்கு நேர்மாறான முரண்பட்ட மனப்போக்கோடு இருக்கும் ஆட்சி யாளர்களின் காதுகளில் இந்தக் கருத்து  எட்டுமா? இளம் மாணவர்கள் அறிவியல் மனப் பான்மை யோடு வார்க்கப்படவேண்டும் என்பது  புரியுமா? நரேந்திர தபோல்கர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஆகஸ்டு 21.அவர் இந்துத்துவா தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு ஆண்டுகள் பல ஆனபின்பும் இன்னும் கொலை யாளிகள் கைது செய்யப்படவில்லை.அவரது இறப்பிற்குப்பின் அவர் விரும்பிய மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்பது மகாராட்டிரா அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருநாடக மாநிலத்திலும் கொண்டு வரப்பட்டது.மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் இந்தியா முழு மைக்கும் கொண்டு வரப்பட வேண்டும். உடன டியாக  தமிழ் நாட்டில்  கொண்டு வரப்படவேண்டும். பில்லி, சூனியம், ஜோதிடம், சாமியாடுதல், பேயாடுதல் போன்றவை தடை செய்யப்பட வேண்டும். மந்திரவாதிகள் என்று சொல்லப்படு பவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விசா ரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  மூட நம்பிக்கைகளை ஒலிபரப்பும் தொலைக் காட்சித் தொடர்கள் போன்றவை தடை செய்யப்பட வேண்டும். இதற்கு தமிழகத்தில் இந்த உணர்வு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக மக்களவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்களும் குரல்  கொடுக்க வேண்டும்.'திட்டம் போட்டு மூட நம்பிக்கையை பரப்பும் கூட்டம் பரப்பிக்கொண்டே இருக்குது, நமது நாட்டில் அதனைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய கூட்டமும் அமைதி யாக இருக்குது.." இதனை மக்களுக்கு உரத்த குரலில் சொல்ல வேண்டிய கடமையும், அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

                                                                                                            நன்றி :விடுதலை                                                                                                                                      02.09.2019