Monday, 11 July 2016

அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சி! சோம.இளங்கோவன்

அமெரிக்காவில்  தமிழ் வளர்ச்சி!

சோம.இளங்கோவன்


வட அமெரிக்காவில் ஆண்டு தோறும் சூலை 4 (அமெரிக்கா விடுதலை நாள்) விடுமுறையை ஒட்டி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெரும் விழா எடுக்கும். அதில் அமெரிக்கா, கனடா நாட்டுத் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுக் குடும்பங் களாக வந்து மகிழ்வர். இந்த ஆண்டு 29ஆவது ஆண்டு விழாவைப் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் 125ஆவது பிறந்த நாள் விழா, தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்று சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவின் மய்யக் கருத்தே " தமிழ்ப் பள்ளி... தமிழ்க் கல்வி..." என்பதாகும். சுமார் 30 ஆண்டுகட்கு முன்பிருந்தே அமெரிக்காவின் பல நகரங்களிலே சனி,ஞாயிறு நாட்களில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. இன்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களிலே தமிழ்ப் பள்ளி இல்லாத நகரங்களே இல்லை எனும் அளவிற்குச் சிகாகோ போன்ற நகரங்களிலே 7 தமிழ்ப் பள்ளிகள் 200க்கும் மேற்பட்டக் குழந்தைகளுடன் நடக்கின்றன. அழகான தமிழ் பேசி மேடைகளில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். திருக்குறள் போட்டிகள், சங்க இலக் கியப் பாடல்கள் இசைத்தல் என்று வளம் பெற்றுள்ளனர்.
1330 குறள்களையும் எண், அதிகாரம், பொருள், ஆரம்பம், முடிவு என்று பல விதங்களில் சொல்லும் 5 குழந்தைகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண் டனர்.  அய்ந்தாம் வகுப்பே படிக்கும் மின்னிசோட்டா சிவாநந்தனின் மகள் முதல் பரிசைப் பெற்றார் ! அதைவிடச் சிறப்பு அவருக்குக் கிடைத்த 500 டாலர் பரிசை ஹார்வேர்ட் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை நிறுவும் முயற்சிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது அன்னையார்,  அவரும் 1330 குறள் களையும் அறிந்தவர். ஒரு இரண்டு வய துப் பெண் அருமையாகத் திருக்குறள் சொன்னது அனைவரையும் மகிழ்வித்தது.

விழாவிற்கு வந்திருந்த தமிழ்ப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அனைவரும் மேடைக்கு வரவழைக்கப்பட்டுப் பாராட்டப் பெற்றனர்.
பேரவைத் தலைவர் தந்தை பெரியார் பற்றாளர் நாஞ்சில் பீற்றர் அவர்கள் ஒரு உண்மைச் செயல் வீரர். பத்தாவது ஆண்டாக இலக்கிய வினாடி வினா என்று மிகச் சிறப்பான நிகழ்ச்சியை நடத்தினார்.
ஒவ்வொரு அணியிலும் 50 பேர் ஆண்,பெண் சிறுவர் என்று. அவர் களுக்கு முன்பே சங்க இலக்கியம், திருக்குறள், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள், இலக்கிய சமுதாயப் படைப்புகள் என்று குறிப்பிட்டுக் கொடுத்து மூன்று மாதங்கட்கு மேல் குழுவாகப்  படித்து வந்திருந்தனர். ஒரு மணித்துளியில் பதில் சொல்ல வேண்டும். இசையுடன், தமிழகக் காட்சிகளுடன் கூடிய கேள்வி திரையில் தெரியும். அதற்குத் தமிழண்ணல் அணியும், வ.சு.ப. மாணிக்கனார் அணியினரும் பதில் சொன்னார்கள்.
கேள்விகள் முனைவர்களுக்கே கடினமானவை என்று வந்திருந்த தமிழறிஞர்களே சொன்னார்கள். 50 வினாக்களுக்கும் போட்டி கடுமையாகிக் கடைசியில்  இரு அணிகளும் ஒரே மதிப்பெண்  பெற்றனர் என்று பேரா சிரியர் இராமசாமி (முன்னாள்  மனோன்மணி, வார்சா பல்கலை) தலை மையிலான குழு அறிவித்தது.
குழந்தைகட்குத் திருக்குறள் தேனீ  சிறப்பாக நடந்தது. சிறுவர் சிறுமியர் பட்டி மன்றம்  "தனித்தமிழ் குழந்தை களிடம் போய்ச் சேராதிருக்க முக்கிய காரணம் பெற்றோரா? சமுதாயமா?" என்று கடுமையாகவும், சிரிப்பும் சிந்தனையுமாகவும் அழகு தமிழில் குறுகிய நேரத்தில் சிறப்பாகக் கருத்துக்களை வழங்கினர். பெற்றோர் தமிழ் பேசாமை, ஆங்கில மம்மி, டாடி மோகம், தமிழ்ப் புத்தாண்டு தையா, சித்திரையா குழப்பம், தமிழின் பெருமை இலக்கிய வளம் சொல்லித் தராமை என்று அடுக்கினர். சமுதாயம் -_ முக்கிய மாகத் தொல்லைக் காட்சி பத்து மணித் துளி பார்த்தாலே தமிழ் பேசுபவரும் தமில் பேசும் தமிங்கலர் ஆகி விடும் அவலம், அரசு தமிழுக்கும், தமிழில் படிப்போர்க்கும் ஆதரவு தராமை, ஊடகங்களின் அநியாயத் தமிழ்ப் படுகொலை என்று அடுக்கினர்.


மதுரை பேராசியர் இரா.மோகன் அவர்கள் இரண்டு கண்களாக பெற்றோரும், சமுதாயமும் செயல் பட வேண்டும் என்று’’ தீர்ப்பளித்தார்.
பல செயல் வீரர்கள் தமிழுக்காக இணையத்தில் செய்துவரும் பணிகள், தமிழ் பிழை திருத்தி, தமிழ் நூல்கள், இணையத் தொகுப்பு, தமிழ் விக்கிப் பீடியா நிறுவனரின் சொற்பொழிவு, தமிழ் இசைப் பயிற்சி, பயிலரங்கம், என்றும் மற்றும் மாதந்தோறும் நடக்கும்’’ தொலைப்பேசியில் தமிழ் இலக்கிய கருத்தரங்கங்கள் பற்றிய செய்திகளும் பகிர்ந்து கொள்ளப் பட்டன.
அந்தந்தத் தமிழ்ச் சங்கங்களின் திறமைகள் பறை இசையாகவும், சிலம்பாட்டம், கும்மி,கோலாட்டம், மயிலாட்டம், நடனங்கள், நாட்டிய நாடகங்கள் என்றும் காட்டப்பட்டன. சங்கங்களின் சங்கமம் என்று ஒவ்வொரு சங்கமும் ஆட்ட பாட்டங்களுடனும், இசைக் கருவிகளுடன்  பறை அடித்தும்  நடந்த ஊர்வலம் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்திலும், ஒரு பெரிய தமிழ்க் குடும்பம் என்றும் புளகாங்கிதம் அடையச் செய்தது.
கவியரங்கம், கருத்தரங்கங்கள் எப்போதும் போல. இந்த ஆண்டு தனித் தமிழ் இயக்கத் தலைவர்கள் மறைமலை அடிகள், பாவாணர், பரிதிமாற் கலைஞர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ. தந்தை பெரியார் முயற்சிகள் எடுத்துரைக்கப் பட்டன. தமிழ்மண் பதிப்பக இளவழகனார் பாராட்டப் பட்டார். அவரது மறைமலை அடி களார் முழுத் தொகுப்பு வெளியிடப் பட்டது.
முனைவர் பிரபாகரன் தமிழக மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட் டுக் கடைசியில் வேற்றார் உள் நுழையக் காரணமாயினர். மன்னர்களை மயக்கி வடமொழி திணிக்கப்பட்டது. தனித் தமிழ் இயக்கம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந்தது, தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தமிழ் மறு மலர்ச்சியைக் கொண்டு வந்தனர் என்றார்.
பேராசிரியர் இராமசாமி, பேரா சிரியர்கள் இரா.மோகன், இராதா மோகன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், ஆசிரியர்கள் முத்துசாமி (முன்னாள் மேலவை உறுப் பினர்),அன்பில் நாகராசன் ,அனைவரும் தமிழர்களின் மீது திணிக்கப்படும் சமஸ்கிருதத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம், பெரியார் அவர்களின் கொள்கையின் தேவை பற்றி எடுத்துரைத்தனர்.
ஹார்வே பல்கலைக் கழகத் தமிழ் இருக்கை பற்றிய அறிவிப்பும், பொருள் சேர்த்தலும் நடந்தது.
அமெரிக்காவில் இளைய தலை முறை தமிழ் கற்று வருவதும், ஏனையோர் தமிழ் இலக்கியம் கற்று வருவதும், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டு சிகாகோ பல் கலைக் கழகத்துடன் இணைந்து சிகாகோவில் தமிழ்ச் சங்கமும், பேரவையும் நடத்தும் என்ற அறிவிப்பும் அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சியின் நல்ல அறிகுறிகள் !
வாழ்க தமிழ் ! வளர்க பகுத்தறிவும், தனித் தமிழும்! நன்றி : விடுதலை ஞாயிறு மலர் -10.07.16
Sunday, 10 July 2016

எடைமேடை : மாணவர்களும் 'அறிவியல் மனப்பான்மையும்...திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எழுத்துக்கள் எப் போதும் தான் புகழ்பெறவேண்டும் என்ப தற்காகவோ அல்லது தனது பெயர் பரவ வேண்டும் என்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்கள் அல்ல. எப்போதும் போர்க் களத்தில் நிற்கும் போர்வீரனுக்கு கையில் இருக்கும் கேடயம் போல கருத்துக்களத்தில், திராவிடர் இயக்கத்திற்கு எதிராய் பரப்பப் படும் அவதூறுகளுக்கு எதிராக இளை ஞர்கள் கருத்துக்களைத் தேடும் கருத்து அகராதிகள் அவை. கடந்த கால வரலாறு, நிகழ்கால அரசியல் போக்குகள், நிகழ் காலத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு  இணை யான கடந்த கால நிகழ்வுகள், திராவிடர் இயக்க வரலாற்றில் தங்களின் போர்க் குணத்தால், இயக்க செயல்பாட்டால், தங் களின் அணுகுமுறையால், தலைமைக்கும் இயக்கத்திற்கும் காட்டிய விசுவாசத்தால் என்றும் அழியாமல் தங்கள் பெயரை நிலைக்கவைத்து  மறைந்துவிட்ட கருப்பு மெழுகுவர்த்திகளின் தியாகங்களை  தன் னுடைய நெடிய நீண்ட அனுபவத்தால் கண்ணுற்றதில் விளையும் எழுத்துக்கள் அவை. தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசானிடம் கற்றுக்கொண்ட பாடங்களை மீண்டும் மீண்டும் எழுத்துக்களாய், பேச்சுக் களாய் இன்றைய நிலைக்குத் தக்கவாறு உலகெங்கும் எடுத்துச்செல்லும் இணை யற்ற தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.   என்றைக்கும் உயிர்ப்பான எழுத்துக்களாய் அவரின் எழுத்துக்களும், உயிர்ப்பான பேச்சாய் அவரின் பேச்சுக் களும் அமைவதற்குக் காரணம்  உண்மை யும், அதனை எதற்கும் அஞ்சாமல் எழுதும், சொல்லும் திறனும் அதற்கு ஆதாரமாய் அமையும் அவரது நீண்ட நெடிய திரா விடர் இயக்க களப்பணி அனுபவமுமாகும்  என்பது நாம் அறிந்ததே..

அண்மையில் 'மாணவர்களும் 'அறிவியல் மனப்பான்மையும்' என்னும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகம் படித்தேன்.   அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக ஆள்வோரும், அவர்களைச் சார்ந்தோரும் மூட நம்பிக்கை நாட்டிய மாடும் இந்தக் கால கட்டத்தில் அறிவியல் மனப்பான்மை என்றால் என்பதற்கு இலக்கணமாக, இன்றைய காலகட்டத்தில் அதனுடைய தேவை இன்னும் கூடுதலாக ஏன் தேவை என்னும் அடிப்படையில் அமைந்த அருமையான புத்தகமாக அமைந்துள்ளது இந்தப் புத்தகம்.இரண்டு சொற்பொழிவுகளைக் கட்டுரைகளாக வடித்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அணுகு முறை வியப்பிற்குரியது.

இளைஞர்களே, யார் யாரின் வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியவேண்டும் எனப்பட்டியலிடுகின்றார் ஆசிரியர் அவர்கள். "பெரியாரைத் தெரியும் உங் களுக்கு, அதே நேரத்தில் சர்,பிட்டி தியாக ராயர் அவர்களைத் தெரியவேண்டும். டாக்டர் நடேசனார், டி.எம். நாயர் ஆகி யோரைத் தெரியவேண்டும்." (பக்கம் -6) .தொடர்ந்து சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பட்டுக் கோட்டை அழகிரியைத் தெரியவேண்டும் எனக்கூறிவிட்டு 'இவர்களெல்லாம் நமக்கு வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்குகள், பகுத் தறிவு பகலவன் தந்தை பெரியார் என்ற அந்த பகலவனுடைய ஒளிக்கதிர்களாக பல இடங்களில் அவர்கள் திகழ்ந்தவர்கள்' எனக் குறிப்பிடுகின்றார்.

திராவிடர் மாணவர் கழகம் கும்ப கோணத்திலே தொடங்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றார். பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் களப்பணியை ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது  கணிப் பொறியும், இணையமும், ஒலிபெருக்கி களும் இல்லாத காலத்தில் கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு அவர்செய்த களப்பணி வியக்க வைக்கிறது.  எதிரிகள் 10 கழுதைகளை பிடித்து மாலைகளைப் போட்டு கூட்டத்திற்குள் அனுப்பிவிட, கழுதைகளை கட்டிப்போட்டு பட்டுக் கோட்டை அழகிரி அவர்கள் செய்த பிரச்சாரம் நமக்கு ஒரு புதிய யுக்தி முறையைக் கற்பிக்கிறது. கடலூரில் 'செருப்பு ஒன்று வீசினால் சிலை ஒன்று முளைக்கும் ' என்னும் பாடலுக்கு அடித்தள மாக அமைந்த நிகழ்வு, சிவகங்கையில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் ஊர்வலமாக வர , பழைய செருப்புக்களைத் தோரணமாகக் கட்டிவைத்த எதிரிகளிடம் எங்களுக்காக நீங்கள் எவ்வளவு சிரமப் பட்டு பழைய செருப்புக்களைச் சேர்த்திருக் கிறீர்கள் என்று தந்தை பெரியார் பேசிய பேச்சு என பழைய இயக்க வரலாறுகள் பல , பாடமாக இன்றைய இளைஞர்களுக்கு ஆசிரியர் அவர்களால் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது, படிப்பவர்கள் மனதைத் தொடுகின்ற வகையில்.

தபாலில் கருப்புமை தடவும் பழக்கம் நமது முன்னோர்கள் கை நாட்டாக இருந்த காலத்து வந்தது என்னும் வரலாறு, 'வாஸ்து' என்ற பெயரில் இன்று நடக்கும் மோசடி, காலாவதியான மருந்துகள் நாம் எடுக்கக் கூடாது , சரிதான் -அதேபோல காலாவதி யான கருத்துக்களால் நாம் நமது வாழ்க் கையை நடத்தலாமா எனும் கேள்வியைக் கேட்கின்றார். 'படிப்பறிவை யார் வேண்டு மானாலும் பெறலாம், ஆனால் நீங்கள் பகுத்தறிவு பெறுவதுதான் முக்கியமானது' என்னும் அறிவுரை படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் காதுகளிலும் ஒலிக்கவேண்டும்.அதற்கு நாம் ஆவண செய்யல் வேண்டும்.

திராவிடர் கழகத்தின் நோக்கம் என்பது பதவி பெறுவதல்ல, மாறாக ' ஒரு பெரிய பண்பாட்டுப்புரட்சியை உருவாக்குவது தான் இந்த இயக்கத்தி னுடைய நோக்கம் ' (பக்கம் - 31) எனக் குறிப் பிடுகின்றார். மேலும் திராவிடர் கழகம் செய்வது ' சட்டப் படி, அரசியல் சட்டப்படி தேவையான பணியாகும். ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டியது என்னவென்றால் , அறிவியல் மனப்பான்மை. அறிவியல் மனப்பான்மை மட்டுமல்ல,அதைவிட மனித நேயம்; அதைவிட, எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்க வேண்டும். அதற்கும் மேலே சீர்திருத்தம் செய்ய வேண்டும். இது இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கின்ற அடிப் படை கடமையாகும் ' (பக்கம் - 33).
மூன்று காலத்திலும் (காட்டுமிராண்டிக் காலம்,பழைய காலம், நவீன காலம்) வாழ்ந்த, வாழும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள், இடியைக் கண்டு , மழையைக் கண்டு பயந்த மனிதனின் கண்டுபிடிப்புகள், புவீயீர்ப்பு மய்யத்தைக் கண்டுபிடித்த அய்சக் நியூட்டனின் அணுகு முறையைக் குறிப்பிட்டு, ஆதாம் -ஏவாள் கதையில் வரும் பழமும், திரவுபதி கதையில் வரும் மாம்பழமும் மூட நம்பிக்கை பழங்கள், அய்சக் நியூட்டனுக்கு அமைந்த ஆப்பிள் பழம் விஞ்ஞானம் என ஆசிரியர் விவரித்துச்சொல்லும் பாணி தனித்தன்மையானது. பழைய வரலாற்றை சொல்லிக்கொண்டு வரும் ஆசிரியர் அண்மையில் வெளிவந்த'The Upright Thinkers' என்னும் நூலைப் பற்றியும், அதில் வரும் ஆங்கிலக் கருத்தையும் அதன் தமிழாக்கத்தையும் குறிப்பிடுகின் றார். செல்லும் இடமெல்லாம் கிடைக்கும் அரிய நூல்களை ஆசை ஆசையாய்ப் படித்து , அந்த நூல்களின் மேன்மையை, உண்மையை தமிழ்ச்சமூகத்திற்கு அளிக் கும் பணியைத் தொய்வின்றி தொடரும் ஆசிரியர் அவர்கள்  அறிவிய லுக்கும் மூட நம்பிக்கைக்கும் பல நூற்றாண் டுகளாய் நடைபெறும் போராட்டத்தை சாக்ரடீஸ், டார்வின் , அண்மையில் மலாலா வரைக் குறிப்பிடுகின்றார் . முடிவில் மகாமகக் கதையை தோலுரிக்கின்றார் தனது வாதங்களால்.

மருத்துவ ஆராய்ச்சியைக் குறிப்பிடு கின்றார் ஆசிரியர். " மருத்துவத் துறையில் ஒரு ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள். அது என்னவென்றால், நாத்திகர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள். கடவுள் நம்பிக்கையா ளர்கள் குறைவான காலமே வாழ்வார்கள் என்று. ஏனென்றால், நாத்திகர்களுக்குத் தன்னம்பிக்கை உண்டு, தைரியம் உண்டு, எங்கே உங்களுக்குத் தைரியம் இருக் கிறதோ, அங்கே நோய் எதிர்ப்புச்சக்தி உண்டு. இதனை நான் அறிவியல்பூர்வமாக சொல்கிறேன். அந்தத் தன்னம்பிக்கை வரும். நான் நன்றாக இருக்கிறேன். நான் சீக்கிரம் குணமாகி விடுவேன் என்று பகுத்தறிவுவாதி நினைப்பான். ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் நம் கையில் என்ன இருக்கிறது ? " என்று சொல்வார்கள். முப்பதாண்டுகளுக்கு முன்னால் அறுவை சிகிச்சை செய்து, 5 முறை பழுதுபட்ட இருதயத்தை சரியாக்கி, இன்றும் தந்தை பெரியார் வழியில் பீடு நடை போடும், தன்னம்பிக்கைக்கும், தைரியத்திற்கும், நோய் எதிர்ப்புச்சக்திக்கும் வாழும் எடுத் துக்காட்டாகத் திகழும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே இதற்கு உதாரணமல்லவா. இதனைச்சொல்வதற்கு இவரை விட பொருத்தமானவர் வேறு யார் உள்ளார்?

இன்றைய இளைஞர்களுக்கு அறிவி யல் மனப்பான்மை இன்றியமையாதது. ஆனால் அவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வரவிடக்கூடாது என்பதில் போட்டி போட்டிக்கொண்டு ஊடகங்களும், பத்திரிக்கைகளும், திரைப்படங்களும் அஞ்ஞானக் கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத் தடைப்படுத்த வேண்டிய அரசு இயந் திரமோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதோடு சில இடங்களில் அவர்களே மூட நம்பிக்கை பரப்பலுக்கு துணையாக வும், பங்காளிகளாகவும் இருந்து கொண்டி ருக்கின்றார்கள். ஊதிப் பருத்துக் கிடக்கும் மூட நம்பிக்கை பலூனை, அய்யா ஆசிரியர் அவர்களின் 'மாணவர்களும் அறிவியல் மனப்பான்மையும்' என்னும் இந்த நூல் ஊசியாய் குத்தி , மூட நம்பிக்கை பலூனை உடைக்கும் வல்லமை உடைய தாய் கருத்துக்களால், நடையால் செறிவாக உள்ளது. இந்தப் புத்தகத்தினை இளைஞர் களிடத்தில், மாணவர்களிடத்தில் கொண்டு செல்வோம். வெற்றி பெறுவோம்,

முனைவர். வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.
நன்றி : விடுதலை 10.07.2016

Sunday, 3 July 2016

'அப்பா' பற்றி ஓர் அப்பா ......வா. நேரு

                                                          


திரைப்படம் என்பது பார்ப்போரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் ஊடகம். உலகமெங்கும் கேளிக்கைக்கும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், சமூகத்தின் மேன்மைக்காக  எடுக்கப்படும் திரைப்படங்களே காலம் கடந்தும் நிற்கின்றன. அந்த வகையில் நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை மையமாக வைத்து நேர்மறையான மனிதர்களைக் காட்டி மிக அருமையான திரைப்படமாக 'அப்பா' படத்தை எடுத்திருக்கும் நடிகர் , இயக்குநர் சமுத்திரக்கனி அவர்களுக்கு முதலிம் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். வெல்டன் சமுத்திரக்கனி, வெல்டன்.

கல்லூரிகளில் படிக்கும் எனது பிள்ளைகள் 'அப்பா' திரைப்படத்திற்கு போகவேண்டும் என்று சொன்னார்கள். திரையிடப்பட்ட 2-வது நாளே , மதுரை தியேட்டரில் கூட்டம் மிக அதிகம் இல்லை என்றபோதிலும் கூட்டம் இருந்தது. படம் முழுக்க அரங்கில் இருந்தவர்கள் வசனங்களுக்கு கை தட்டியதும் , உற்சாக குரல்கள் எழுப்பியதும் இப்படத்தின் வெற்றியைக் காட்டியது. தனது பிள்ளையின் தனித்திறமையை அறிந்து ஊக்குவிக்கும், வழிகாட்டலோடு நிப்பாட்டிக்கொள்கின்ற அப்பா சமுத்திரக்கனி, பிறப்பதற்கு முன்பே  மகனை மருத்துவராக்கவும், அவனுக்காக தனி மருத்துவமனை கட்டவும்  திட்டமிடுகின்ற அப்பா தம்பி ராமையா, 'இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப்போயிறனும் ' என்று எப்போதும் சொல்லிக்கொடுக்கின்ற அப்பா நமோ நாராயணன்  என்று 3 அப்பாக்களையும் அந்த அப்பாக்கள் வளர்க்கிற பிள்ளைகளைப் பற்றியும் மிக அழுத்தமாகச்சொல்லுகிற கதை.

           மாணவர்கள், மாணவிகள்,அவரது அப்பாக்கள், அவர்கள் படிக்கிற பள்ளிக்கூடங்கள் என விரிவாக பாடம் எடுக்கிற படம். நாட்டுக்கோழியையும் , பிராய்லர் கோழியையும் அரசாங்கப் பள்ளிகளுக்கும், சில தனியார் பள்ளிகளுக்கும் எடுத்துக்காட்டாக பல உரைகளில் கேட்டிருந்தாலும் அதனை தன்னுடைய மகனிடம் தயாளன் சொல்லுமிடம் மிக ஆழமாக பார்ப்பவர் மனதில் பதிகின்றது. அண்ணல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு எனும் புத்தகத்தை திரையில் காட்டுதல், 'புத்தகங்களே மாணவர்களைக் கிழித்து விடாதீர்கள் ' எனும் பொன்மொழியைக் காட்டுவது என பல இடங்களில் மிகக் கவனமாக செதுக்கப்பட்ட சித்திரமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பருவ வயதில் ஏற்படும் அந்த எதிர்ப்பாலின ஈர்ப்பை எப்படிக் கையாளுவது என்பதனை மிக நல்லமுறையில் இந்தப்படத்தில் காட்டியுள்ளார்கள்.நல்ல படிப்பினை பெற்றோர்களுக்கு. 'பிள்ளைகளை நம்புங்கள்' என்பதும் மிக அழுத்தமாக பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் பேஸ்புக்கில் ஒரு போக்கிரி  மார்பிங்க் செய்ததலால் தற்கொலை செய்துகொண்ட அந்தச்சகோதரி எழுதிய கடிதத்தில் ' என்னை எனது அப்பா, அம்மாவே நம்பவில்லை ' என்பதுதான் தனது தற்கொலைக்குக்கு காரணமென எழுதியிருந்தார். 'பெற்றோர்களே',  யார், யாரையோ நம்பும் நீங்கள் 'பிள்ளைகளை நம்புங்களேன்'  என்பதும் இப்படத்தின் மெஸேஜ் எனலாம்.

இடைவேளைவரை கலகலப்பாக படம் செல்வதற்கு வசனம் கைகொடுத்துள்ளது. அதுவும் நேர்மறையாக சமுத்திரக்கனி ஒன்று சொல்ல அதுமுடியும்முன்பே அதற்கு எதிர்மறையாக தம்பி இராமையா சொல்லும் வசனம் அருமை. பெற்றோர்களின் பேராசையே , தனியார் பிராய்லர் கோழிப்பள்ளிக்கூடங்களின் அடக்குமுறைக்கும், அணுகுமுறைக்கும், மாணவர்களின் துன்பங்களுக்கும் காரணம் என்பதனை மாணவனின் தற்கொலை மூலம் காட்டியிருக்கிறார்கள். பிள்ளை சொல்வதைக் கேட்க மறுக்கும் அப்பா, பிள்ளைக்காக அட்டூழியம் செய்யும் பள்ளி நிர்வாகத்திடம் மன்னிப்புக் கேட்டும் அப்பா என திரைக்கதை மிக வலிமையாகவே சொல்லப்பட்டுள்ளது. கல்வி என்பது வியாபாரமாகவும், அந்த வியாபாரத்தில் குறைந்த செலவில் தன் பிள்ளையை மருத்துவத்தில் அல்லது பொறியியலில் சேர்க்க பிராய்லர் கோழிப்பள்ளிக்கூடங்கள்தான் உகந்தது என்று தமிழ் நாடு முழுவதும்  இருக்கும் பெற்றோர்களைப் பார்த்து சுழட்டப்பட்டிருக்கும் 'சாட்டை' இப்படம் எனலாம்.

                 குப்பைகளாக திரைப்படங்கள் வருவது உண்மையென்றாலும், அத்தி பூத்தாற்போல வருகின்ற 'அப்பா' போன்ற படங்களை நாம் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும். சமூகத்தை நோக்கி சமுத்திரக்கனி எழுப்பியிருக்கின்ற அந்தக் கேள்விகள் உண்மையென்று நாம் உணருகின்றபோது, அதற்கு நாம் தருகின்ற சரியான பரிசு, நாம் படத்தைப் பார்ப்பதும் இன்னும் பலரை அந்தப்படத்தை பார்க்கவைப்பதும்தான். பார்க்கின்ற அப்பா, அம்மாக்கள் மத்தியில் உறுதியாக ஒரு மனமாறுதலை ஏற்படுத்தக்கூடிய படம் 'அப்பா'. குடும்பத்தோடு போய் பாருங்கள். வயதான 'அப்பா' க்களுக்கு தான் இப்படி நடந்திருக்கலாமோ என யோசிக்கவைக்கும். நடுத்தர வயது 'அப்பா'களுக்கு இப்படி நடக்க வேண்டும் என வழிகாட்டும், எதிர்கால 'அப்பா'க்களுக்கு எதிர்மறையாக நடக்காமல் இருப்பதற்கு 'பாடம் ' நடத்தும் படம் 'அப்பா'. பாருங்கள், நீங்களும் போய் 'அப்பா' படத்தை.

வா. நேரு, 03.07.2016, மதியம் 2 மணி