Monday, 24 April 2017

புத்தகமும் நானும்.......உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு

புத்தகமும் நானும்.......உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு

                  புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் 'பொன்னியன் செல்வன்' புத்தகத்தை எடுத்துக்கொண்டு,சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்கார்ந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஒரு அடி அடித்து, சாப்பிடாமாக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது. படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்கு சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.

                கல்லூரி படிக்கும் காலத்தில் , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்த அனுபவம், சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது.பெரியாரியல் பட்டயப்பயிற்சிக்காக பேரா.கி.ஆழ்வார் மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது.பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந.இராமநாதன் அவர்களை நேரிடையாகச்சந்தித்ததும்,புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக 'செவியுணர்வுச்சுவையுணர்வோடு 'சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை. காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம்,பொதுவுடமை எனப் பல திக்குகளிலிருந்தும் கிடைத்த புத்தகங்களை வாசிப்பதும் கல்லூரிக் காலங்களில் ஓடிக்கொண்டிருந்தது. தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ' நான் ஏன் காந்தியைக் கொன்றேன் ?' என்னும் புத்தகத்தை உடன் படித்த நண்பன் கொடுக்க அதனைப் படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. அந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை. 

                படித்து முடித்து ,திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது,வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர்.குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார்.1984-85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய்-தம்பி,பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதை புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர்.திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது ,உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர்.நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர். பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான். 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார். பிரபஞ்சனின் 'எனக்குள் ஒருத்தியை ' - நான் படித்ததை உடன் வேலை பார்த்த சேகருக்கு கொடுத்ததும், அவரின் வாழ்க்கை முடிவு மாறியதும் தனிக்கதை.

மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது. 'புதிய காற்று ' எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார் அவர். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தக்ங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும. இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்களின் புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது. 

             மதுரைக்கு வந்த பின்னர், கார்முகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு ,ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.'ஸ்பார்ட்டகஸ் 'போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும் , பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.

              திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், 'நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்துவிடுகின்றேன் 'என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.

 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக 'படித்த பார்ப்பன நண்பரே ' என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் தொகுப்பாக 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது. 

  பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்க தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக்கொண்டிருக்கின்றார். 'புத்தகத் தூதன் ' எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை இன்றும் விற்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் கணேசன்,க.அழகர்,அழகுபாண்டி,மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்க தோழர்களாக இருக்கின்றனர். 

             மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன் எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்....எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை...

எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் தோழர் அகனின் முயற்சியால் 'சூரியக்கீற்றுகள் ' என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. 

          எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடம், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக்கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்...

            மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது.நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது. 

            புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் 'காரல் மார்க்ஸ் நூலகம்' என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். 'எனக்குரிய இடம் எங்கே ' என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும். 45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா.மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்கார்ந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி  பேசினார்.வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார்.  

எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது. எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தை கல்லூரி இளங்கலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் எனது மகள் எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ' நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே ' என்று சொன்ன நேரத்தில் உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால் மனதார அதுதான் உண்மையான சொத்தாக நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,

           எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும்..பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன். 

        எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்..வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு,தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும்.பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது... புத்தகக் கடைகளும்தான்.....

                                     23.04.2017. 

Friday, 21 April 2017

சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை..

 சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை
                         (முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)


உலகமெல்லாம் உள்ள பகுத்தறிவாளர்கள் சந்திக்கும் பிரச்சனை சடங்குகள் மறுப்பு ஆகும்.ஒவ்வொரு மதத்திற்கும் ஓராயிரம் சடங்குகளை வைத்திருக்கின்றார்கள். அந்தச்சடங்குகள் மூலமே தங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் இவர்கள் என அடையாளம் காட்டுகின்றார்கள். காலமெல்லாம் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை ' என முழங்கினாலும் மேலை நாடுகளில் நாத்திகர்களுக்கென தனிக்கல்லறைகள் இல்லை. ஆத்திகர்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறைப் பகுதிகளிலேயே நாத்திகர்களும் அடக்கம் செய்யப்படும் நிலை, ஆத்திகர்களுக்கு கடைசிச்சடங்குகள் செய்யும் மதவாதிகளே நாத்திகர்களுக்கும் செய்யும் நிலை. என்னதான் நாத்திகம் பேசி வாழ்ந்தாலும் கடைசியில் 'இறைவன் இருக்கும் இடத்தில் இவர் சேருவாராக ' என மதக் குருக்கள் நாத்திகர்களுக்கும் சொல்லும் நிலை மேலை நாடுகளில் நிலவுகிறது.அதேபோலவே வாழ்க்கைத்துணை நலம் ஏற்கும் நிகழ்வுகள். மணமக்கள் இருவரும் நாத்திகர்களாக இருந்தாலும் கூட நாத்திக முறைப்படி திருமணம் செய்ய முடிவதில்லை. நாத்திகர்கள் தலைமை தாங்கி நடத்திவைக்கும் திருமணங்கள் செல்லுவதில்லை ., நாத்திகர்கள் நாங்கள், எங்களுக்கு மதச்சடங்குகள் வேண்டாம் என ஒதுக்கினாலும் சட்டத்தின்படி அவை செல்லுபடியாகும் திருமணங்களாக இல்லாத நிலை இன்றைக்கு மேலை நாடுகளில் நிலவுகிறது.

 நீயும் ,நானும் இணைந்திருப்போம், சேர்ந்து வாழ்வோம், சேர்ந்து உறங்குவோம் என்பதற்கு எந்தவிதமான தடைகளும் சொல்லாத மேலை நாடுகள்,ஆணும் பெண்ணும் பழகுவதை ,சேர்வதை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாத மேலை நாடுகள் திருமண ஒப்பந்தம் என்று வரும்போது மட்டும் மதத்தின் அடிப்படையில்தான் இணைய வேண்டும் எனத்தடைகள் விதிக்கின்றன. மதக்குருக்கள் செய்து வைக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என சட்டம் இயற்றி வைத்திருக்கின்றன.

அண்மையில் செண்டர் பார் என்கொயரி(Centre for Inquiry...) என்னும் அமெரிக்காவைச்சார்ந்த மதச்சார்பின்மை அமைப்பு வாழ்வின் முக்கியமான தருணங்களை தலைமை தாங்கி நடத்திவைத்திட பயிற்சி தருகின்றோம் என்று அறிவித்திருக்கிறது.அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், பகுத்தறிவை பரப்புதல், எதையும் காரண காரியங்களோடு மட்டுமே ஏற்றுக்கொள்ளுதல்,மனித நேயத்தை வளர்த்தல் போன்றவற்றை அடிப்படைக்கொள்கையாகக் கொண்ட அந்த அமைப்பு புதுவிதமான ஒரு பயிற்சியை அறிவித்திருக்கிறது. பயிற்சி அளித்து, சான்றிதழ் தருகின்றோம், அவர்கள் மதமறுப்பாளர்களின் இல்ல நிகழ்வுகளை நடத்திவைக்கலாம், அது சட்டப்படியாக செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கின்றது.திருமணம், பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுதல், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடத்திடஇந்த மதச்சார்பற்ற  பயிற்சி பெற்ற வல்லுநர்களைஅழைத்துக்கொள்ளலாம் என அறிவித்து அவர்களின் முகவரியை எல்லாம் இணையதளத்திலே அறிவித்திருக்கின்றார்கள்.. 

ஏன் இப்படிப்பட்ட ஒரு தேவை எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பினர் அவர்களின் இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது 20 சதவீதம்பேர் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும் மதக்குருக்களைத்தான் அழைக்கவேண்டியிருக்கிறது.ஒரு நாத்திகவாதி தனது திருமணத்தில் தான் விரும்பிய மேற்கோள்களை சுட்டிக்காட்டி பேசவோ, அல்லது தனக்கு விருப்பமானவற்றை அச்சடித்து கொடுக்கவோ இப்போதிருக்கும் மத அமைப்புகள் அனுமதிப்பதில்லை.ஏதோ ஒரு மதகுருவை அழைத்து வந்து திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள். 

மதகுருவுக்கு மணமக்களைப்பற்றியோ, மணமக்களின் பெற்றோர் பற்றியோ தெரியாது. மணமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவர் தங்களது திருமணத்தை நடத்திவைக்கவேண்டும் என்று விரும்பினால், அவ்வாறு நடத்திக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. இப்போது அப்படி ஒரு சட்ட வடிவை சில அமெரிக்க மாநிலங்கள் முன்வைத்திருக்கின்றன. பயிற்சி பெற்ற நாத்திகரும் , மணமக்கள் விரும்பினால் அவர்கள் விருப்பப்படி திருமணத்தை நடத்திவைக்கலாம் என்ற சட்டத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நமது வீட்டு நிகழ்வுகள் மதகுருக்கள் இல்லாமல் நடைபெற வேண்டும் அதற்காகவே இந்த ஏற்பாடு என மிக விளக்கமாக விவரித்துள்ளனர். 

இந்த இணையதளத்தின் செய்திகளைப் படித்துவிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள 'சுய மரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும் ' என்னும் புத்தகத்தைப் படித்தேன். ஏற்கனவே படித்த நூல் என்றாலும் இந்த  இணையதளத்தின் செய்திகளைப் படித்தவுடன் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் வரலாற்றையும் படிக்கவேண்டும் எனத்தோன்றியது. மீண்டும் படித்து முடித்தபொழுது  வியப்படைந்தேன்.

 எவ்வளவு பெரிய தொலை நோக்காளர் தந்தை பெரியார் அவர்கள். ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குமுன்னால் மதவாதிகளான பார்ப்பனர்கள் நடத்தி வைத்தால் மட்டுமே செல்லும் என்று சமூகம் இருந்த காலத்தில் , சுயமரியாதைத் திருமணத்தை நடத்திவைக்கத் துணிந்து, அன்றைக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றாலும் ஆயிரக்கணக்கான தோழர்களும், தோழியர்களும் அத்திருமண முறையை ஏற்றுக்கொண்டதும், வாழ்வில் இணைந்து வாழ்ந்ததும் ,தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கன் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வரான உடனே சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாகும் என்பதற்கான சட்டம் இயற்றியதையும் படித்தபொழுது உண்மையிலேயே பெரியாரின் தொண்டன் என்ற வகையில் உவகையும் உற்சாகமும் அடைந்தேன். இன்றைக்கு 2017-ல் மிக முன்னேறிய நாடென சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவினர் யோசிக்கும் செயலை, நடைமுறைப்படுத்திட பல்வகை உத்திகளைக் கைக்கொள்ளும்வேளையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தமிழ் நாட்டில் செயல்படுத்திட்ட தந்தை பெரியாரை எப்படிச்சொல்லி மகிழ்வது நாம்....

இன்றைக்கும்கூட சில திராவிட இல்லத்திருமணங்கள் ஆரியர்களால் நடத்திவைக்கப்படுகின்றன. நம்மை இழிவுபடுத்தும் அந்தத் திருமண மந்திரங்கள் அன்னிய மொழியில் கூறப்படுகின்றன. அவர்கள் கூறுவது என்னவென்று விளங்காமல்தான் நூற்றக்கணக்கான மக்கள் திருமண மண்டபங்களில் உட்கார்ந்திருக்கின்றார்கள். அதிலும் திடீர் பணக்காரரான சிலர் இரண்டு ஆரியர்களுக்குப்பதில் நாலு ஆரியப்பார்ப்பனர்களை அழைத்துக்கொள்கின்றனர் திருமணத்தை நடத்திவைக்க.அன்றைக்கு இந்த இழி நிலையைத்துடைத்திட எண்ணிய தந்தை பெரியார் எத்தனை ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தார். அவரின் வழிவந்த திராவிடர்கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தனை ஆயிரம் திருமணங்களை நடத்திவைத்துக்கொண்டு இருக்கின்றார். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், டாக்டர் கலைஞர் என எத்தனை தலைவர்கள் தலைமையிலே எத்தனை ஆயிரம் சுயமரியாதைத்திருமணங்கள் தமிழகத்திலே நடைபெற்றன, இன்று நடந்து கொண்டிருக்கின்றன.

 இப்படிப்பட்ட திருமணங்களை நடத்திக்கொள்ளவேண்டும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியவர் தந்தை பெரியார், இப்படித்தான் இந்தத் திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் எனத் திசைகாட்டி பயிற்சி அளித்து இந்த மண்ணை பண்படுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா?மேலை நாடுகளில் இன்று சிந்திக்கும் செயலை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சிந்தித்தவர், செயல்படுத்தியவர் தந்தை பெரியார். அதற்கான காரணம் என்ன? தேவை என்ன என்பதனை அறிந்துகொள்ள இந்த 'சுயமரியாதைத் திருமணம்- தத்துவமும் வரலாறும் ' என்னும் நூலைப் படிக்கவேண்டும்.   

இந்த சுயமரியாதைத் திருமணம்-வரலாறும் தத்துவமும் என்னும் நூலை 'அன்புடன்' எனத் தலைப்பிட்டு தனது அன்புத்துணைவியார் அம்மையார் மோகனா அவர்களுக்கு என அர்ப்பணித்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 'மிசா காரணமாக நான் சிறைப்பட்ட காலத்தில் ,வெளியிலிருந்து தனிக்குடும்பச்சிறையை அனுபவித்தும்,கலங்காது எப்போதும் எனது துன்பங்களையும்,துயரங்களையும், அவதூறுகளையும் தனதாக்கிக்கொண்டு, பொதுவாழ்க்கையில் நான் தடையின்றி ,நடைபோட எல்லாச்சுமைகளையும் ஏற்று 39 ஆண்டுகளாக இயக்கமே என் குடும்பம், உலகப்பகுத்தறிவுக் குடும்பமே எனது நெருக்க உறவுக்குடும்பம் என்பதைக் கருதி , நான் நாளும் உழைத்திட, எனக்குத் துணை புரிந்துவரும் எனது அன்புத்துணைவியார் மோகனா அவர்களுக்கு ' என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


 'சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது ' என அறிவிக்கப்படவும் பின்னர் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என நீதிபதிகள் அறிவிக்கவும்  காரணமாக இருந்த வழக்குக்கு உரிய குடும்பத்தினைச்சார்ந்தவர் என்ற வகையில் மட்டுமல்ல தங்கள் தந்தை, தாய் திருமணமே சுயமரியாதைத்திருமணம் செய்ததால் செல்லாது என்று சொல்லப்பட்ட நிலையில் ,தனது திருமணத்தையும் சுயமரியாதைத்திருமணமாக நடத்திக்கொண்டவர் என்றவகையிலும் அம்மையார்  மோகனாவீரமணி  அவர்கள் மிக முக்கியமானவர் இந்தப் புத்தகத்தைப்பொறுத்த அளவில்,சுயமரியாதைத் திருமண வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில்.  

" இது(சுயமரியாதைத்திருமணம்) ஒரு தனித்தன்மையான திருமண முறை அல்லவா? 1992-ல் அகில உலக மனித நேயர்களின் மாநாடு நெதர்லாண்ட் நாட்டின் தலை நகரான ஆம்ஸ்டர்டாமில் 43 நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட அனைத்துலக மாநாட்டில் சில மணித்துளிகள் நமது சுயமரியாதை இயக்கச்சாதனைகள் பற்றி எடுத்துக்கூறும் வாய்ப்புக்கிட்டியபோது ,தந்தை பெரியார் அவர்கள் செய்த இந்த அமைதிப்புரட்சி- சுயமரியாதைத் திருமணங்கள் எப்படிக்கருவாகி,உருவாகி,தவழ்ந்து, எதிர்ப்புக்களை எதிர்கொண்டு,இறுதியில் அவரது சீடர்களால் சட்டவடிவத்திற்கு ஆளாகி வளர்ந்தோங்கி நிற்கிறது என்பதை விளக்கியபோது ,வியந்து பாராட்டி எழுந்து நின்று கரவொலி(Standing Ovation) தந்து மகிழ்ந்தனர் " என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'நூலைப் படிக்கும்முன் ' பகுதியில் குறிப்பிடுகின்றார். 

இந்த சுயமரியாதைத்திருமண முறை கருவாக மனதில் தந்தை பெரியார் மனதில் உருவானதற்குக் காரணம் என்ன என்பதனை 'சுயமரியாதைத் திருமணம் ' புத்தகம் விவரிக்கிறது, 'பெண்ணடிமை நாட்டும் புனிதக்கட்டு' என்னும் தலைப்பில் மிக விரிவாக. தமிழகத்தில் எப்படி இந்த சுயமரியாதைத் திருமண முறை உருவானது என்பதனை சுயமரியாதைத் திருமணத்தத்துவம் என்னும் இரண்டாம் அத்தியாயம் விவரித்துச்சொல்கிறது. 'இனமானமும் பெண்மானமும் ' என்னும் தலைப்பில் எப்படி இந்தத் திருமணமுறை தவழ்ந்தது என்பதனையும், எதிர்ப்புக்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டது இந்தத் தத்துவம்  என்பதனை 'சுயமரியாதைத்திருமணம் சட்டப்படி செல்லாது ' என நீதிமன்றம் அறிவித்ததையும், செல்லுபடியாக்க என்னென்ன முயற்சிகள் நடந்தது , பின் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் முன் தேதியிட்டு இந்தத் தத்துவம் எப்படி வெற்றிபெற்றது என்பதனை எல்லாம் ஆசிரியர் படிப்படியாக சொல்லிச்செல்கின்றார்

.மலேசிய நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் வருகையும், கொள்கை பரப்பும் எப்படி அயல்நாட்டில் 'சுயமரியாதைத் திருமணமும்' அந்த நாட்டின் சட்டப்படி திராவிடர் கழகமும் நடைபெறுகிறது என்பதனை விவரிக்கின்றார்.'தமிழ்த்திருமணம் தமிழர் திருமணம் ஆகுமா?' என்னும் கேள்வியை எழுப்பி  சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்புகளை ஆசிரியர் அவர்கள் பட்டியலிடுகின்றார்

செண்டர் பார் என்கொயரி இணையதளம் சில புத்தகங்களை, கையேடுகளை மனித நேயத்திருமணங்களை நடத்திட விரும்புகிறவர்களுக்கு பரிந்துரைத்திருக்கின்றார்கள். 'Sharing the future' by Jane Wynes Willson, 'Naming Ceremonies ' , A 'A humanist Divorce Ceremony ' 'Funerals Without God ' போண்ற வெளியீடுகளை வெளியிட்டு இருக்கின்றார்கள். வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது, குழந்தைக்கு பெயர் வைப்பது, கடவுள் கருத்து இல்லாமல் இறுதி  ஊர்வலம், மனித நேய விவாகரத்து விழா எனப் பலதலைப்புகளில் வெளியீடுகளையும் கட்டுரைகளையும் கொடுத்திருக்கின்றார்கள்.மதம் வேண்டாம் என நினைப்பவர்கள் இதனைப் பின்பற்றுங்கள் எனக்குறிப்பிடுகின்றார்கள்.


சுயமரியாதைத் திருமணம் புத்தகம் பின்னினைப்பாக ,
பழந்தமிழர் திருமண முறை ஆரியர்களை அழைக்காமல், இழிவு இல்லாமல் நடத்தப்பட்ட வரலாறு கூறப்படுகின்றது.அதற்கு ஆதாரமாக இருக்கும் தமிழ்ப்பெரியோர்கள் கருத்துக்கள்,சுயமரியாதைத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதனை புரட்சிக்கவிஞர் எப்படிச்சொல்கின்றார் என்பதனை விளக்கும் புரட்சிக்கவிஞரின் 'புரட்சித்திருமணத் திட்டம்', சுயமரியாதைத் திருமணங்கள் பற்றிய கருத்துக்கோவை(சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள்),சுயமரியாதைத்திருமணங்கள் பற்றி அறிஞர்தம் கருத்துக்கள் பின்னர் ஆரியர் வகுத்த திருமண முறைகள், ஆரியப்பண்பாடு பற்றி அறிஞர்தம் கருத்துக்கள்,சுயமரியாதைத்திருமண ஒப்பந்த உறுதிமொழிப்படிவம்,பேரறிஞர் அண்ணாவால் இயற்றப்பட்ட சுயமரியாதைத்திருமணச்சட்டம்,சட்டப்படி செல்லுபடியாகும் எனும் தீர்ப்பு,1929-ல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட முதல் சுயமரியாதைத்திருமணம் பற்றிய விவரிப்பு, முதல் சுயமரியாதைத்திருமணத் தம்பதிகளின் பேட்டி,சுயமரியாதை மணமக்களுக்கு தந்தை பெரியாரின் அறிவுரை, புரட்சிக்கவிஞரின் 'சுயமரியாதை எக்காளம்' என்னும் கவிதை, சுயமரியாதைத் திருமணம் பற்றி 'சோ'வின் கேள்விகளுக்கு வீரமணி பதில்,பின்னர் சுயமரியாதைத்திருமணம் வரலாற்றில் நிற்கும் புகைப்படங்கள் என அந்தப் புத்தகம் விரிகின்றது.

சுயமரியாதைத் திருமணத்தால் 'வீட்டுக்கு மட்டுமல்ல! நாட்டுக்கும் ஏற்பட்ட பலன் ' எனப் பக்கம் 120-ல் குறிப்பிடப்பட்டு
1) மற்ற பெரும்பாலான திருமணங்கள் மதமுறைகளைச்சார்ந்தவைகளாக உள்ள நிலையில் சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை(Secularising the Marriage System)யை புகுத்தியதாக அமைந்துள்ளது மூலம் எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. ...6) சாதியின் அடித்தளம் அதிரும் நிலை ! மற்ற மதச்சடங்குகளை அந்தந்த மதவாதிகள்தான் நடத்திட முடியும். சுயமரியாதைத்திருமணத்திற்கு எம்மதத்தவர்,எம்மதமும் சாராதவர்-எவராயினும் தலைமை ஏற்கலாம்-....

தந்தை பெரியாரின் 'மண்டைச்சுரப்பை உலகு தொழும் 'என்றார் புரட்சிக்கவிஞர். அந்த மண்டைச்சுரப்பில் எழுந்த மதவாதிகள் அற்ற வாழ்க்கைத்துணை நல ஒப்பந்தத்தினை,குழந்தைகள் பெயர் சூட்டலை, மதவாதிகளை மறுத்த இறுதி நிகழ்வுகளை- இன்றைக்கு  நடத்துவதற்கு பயிற்சி அளிக்கிறோம் என்னும் மேற்கத்திய நாடுகளின் பகுத்தறிவு அமைப்புக்களின் அறிவிப்புக்களை ஒப்பிட்டு நோக்கும்போது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதனை எண்ணியவர், கருத்தாக உருவாக்கியவர், ஆயிரக்கணக்கான விழா நடத்துநர்களை-தலைவர்களை தனது இயக்கத்தின் மூலமாக உருவாக்கியவர் தந்தை பெரியார் என்பதனை உணர்கின்றபோது மகிழ்கின்றோம்.'மண்டைச்சுரப்பை உலகு தொழும் ' நிலை கண்டு பெருமிதம் கொள்கின்றோம். 
உதவிய இணையதளம் : 

நன்றி : விடுதலை 21.04.2017


Saturday, 15 April 2017

அண்மையில் படித்த புத்தகம் : ஆரியக்கூத்து -அ.மார்க்ஸ்.

அண்மையில் படித்த புத்தகம் : ஆரியக்கூத்து -அ.மார்க்ஸ்
வெளியீடு                   : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, 116 பக்கம்,ரூ 70


                                 ஆரியக்கூத்து

                             முனைவர் வா.நேரு,
                            தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

பகுத்தறிவாளர் கழகத்தோழர்களைப் பொறுத்த அளவில் நல்ல புத்தகங்களைப் படிப்பதும், படித்ததை பகிர்வதும் வழக்க மாக மதுரையில் இருக்கிறது. பகுத்தறி வாளர் கழகப்புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பார்க்கும் நேரங்களில் அவரின் கையில் நல்ல நூல்களைக் கொடுத்தால் அவரளவிற்கு மகிழ்பவர் யாருமில்லை. புத்தகங்களை வாசிப்பதையும் புத்தகங்களை நேசிப்ப தையும் தனது வாழ்வியலாகக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தொண்டர் களுக்கு புத்தக வாசிப்பு என்பது மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு உண்மையை மேலும் மேலும் தெரிந்து கொள்வதற்கு உதவுவதாகும். அண்மையில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் அண்ணன் பெரி.காளி யப்பன் அவர்கள் 'ஆரியக்கூத்து' என்னும் நூலைக் கையில் கொடுத்தார். ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்குமுன் 2009இல் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய புத்தகம். எதிர் வெளி யீடு வெளியிட்டிருக்கும் இந்த நூல் இன் றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்த மாக இருக்கிறது.

‘அந்தணர் வரலாறு எனும் ஆரியக் கூத்து -ஆரிய மொழியினரின் புலப் பெயர்வு குறித்த சமகால விவாதங்கள் பற்றிய ஆய்வு' என்னும் இந்த நூல் நமது தோழர்கள் படிக்கவேண்டிய நூல். மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படவேண்டிய நூல். ஆரியர்கள் பூர்வகுடிமக்கள் என் பதை நிலை நாட்ட இந்துத்துவம் செய்யும் மோசடிகள் அவர்களின் அரசியல் எதிர் காலத்தை நிலை நிறுத்த உதவும் என்பது அவர்களின் எண்ணம். இதற்காகவே கழுதையை குதிரையாக்குதல் போன்ற எல்லாவித புனைவுகளிலும் சிறிதும் வெட்கமின்றி இறங்கியுள்ளனர்... எல்லா வித பெருங்கதையாடல்களையும் வர லாற்றுத் திரிபுகளையும் தோலுரிக்கும் தோழர் அ.மார்க்சுடன் இணைந்து இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம் ' எனப் பதிப்புரையில் எதிர் வெளியீடு  குறிப்பிட்டுள்ளனர்.

'வரலாற்றாய்வு என்ற பெயரில் இந் துத்துவ பாசிசக் கருத்தியலுக்கு வலு சேர்க்கும் ஆபத்தான முயற்சிகளைக் கண்டு மனம் பதைத்து மிக்க பொறுப்புடன் இந்த மோசடிகளைத் தோலுரித்த ஹார் வர்ட் பல்கலைக்கழக  சமஸ்கிருத பேரா சிரியர் மிஷேல் விட்ஸலுக்கும் இந்திய வியல் அறிஞர் ஸ்டீவ்ஃபார்மருக் கும்' இந்த நூல் காணிக்கை எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மதுரை அருகில் உள்ள கீழடியில் தொல்லியல் சார்பாக நடந்த ஆராய்ச்சி யில் மிகப்பழைமையான தொல்பொருட் கள் கிடைத்ததையும் ,அது தொடராமல் இன்றைக்கு உள்ள ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளதையும் கண்டித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்டோர் அறிக்கை விடுத்ததையும், திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் நாம் அறிவோம். தொல்பொருள் ஆராய்ச்சி என்றாலே நமது எதிரிகள் பதறுகிறார்கள்.

முன்னுரையில் ‘சிந்துவெளி அகழ்வு களின் அடிப்படையில் இந்திய வரலாறு குறித்த பல புதிய உண்மைகள் 1932-1933 வாக்கில் மேலுக்கு வந்தன. அதுகாறும் மிகவும் தொன்மையானது எனக் கருதப் பட்ட வேதப்பண்பாட்டிற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாகவே இங்கொரு வளர்ச்சியடைந்த நகரப் பண்பாடு சிறந்து விளங்கியது என்பது பலருக்கு அதிர்ச்சியளித்தது.... கால்டுவெல் லின் திராவிட மொழிக்குடும்பம் குறித்த கருத்துடன் சிந்துவெளி அகழ்வுகள் குறித்த கண்டுபிடிப்புகள் இணைந்து இங்கொரு திராவிடக்கருத்தியல் உருவாவதற்கும் வழிவகுத்தன. இந்நிலையில்தான் அன்று உருப்பெற்று வந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தின் குருஜி கோல்வல்கர் நமக்கான வர லாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்  என்றார் (1939) .அன்று முதல் வரலாற்றுத் திரிபு இந்துத்துவப் பரிவாரங்களின் பிரதான ஆயுதங்களில் ஒன்றாக விளங்குகிறது' என முன்னுரையில் நூலாசிரியர் ஆரியர்களின் வரலாற்றுத் திரிபின் நோக்கத்தை மிகச் சரியாகவே குறிப்பிடுகின்றார்.

இந்த நூலின் முதல்பகுதி ஆரிய விவாதமும் பார்ப்பனப்புரட்டும் என்னும் தலைப்பில் விவாதிக்கிறது. ‘தமிழக அந்த ணர் வரலாறு' என்னும் நூல் திறந்தவுடன் இரண்டு சங்கராச்சாரிகளின் படத்தோடு இருப்பதைச் சுட்டிக்காட்டும் நூலின் ஆசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் இந்த நூல் வெளியிடப்பட்டதன் நோக்கத்தையும் அவாளின் அதீத ஒற்றுமையையும் விரி வாகவே விளக்குகின்றார். அந்தப் புத்தகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் 'நான் ஒரு பிராமணன் 'என்னும் தலைப்பில் எழுதி யுள்ள கட்டுரையில் ‘தங்களுடைய தாழ்வு மனப்பான்மையையும், உழைப்பின்மை யையும் சரி செய்து கொள்ள முடியாத வர்களின் அவலமான குற்றச்சாட்டுதான் பிராமணர்களின் ஆதிக்கம் என்ற புலம்பல். பிராமண எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பவை கலைஞர் திரு.கருணாநிதி ஏற்று நடத்தும் தி.மு.க.வும் திரு.வீரமணி அவர்கள் தலைமையில் நடக்கும் திராவிடர் கழகமும்தான்... இந்தியாவில் பொதுவான சிவில்சட்டமும் பொருளா தாரா ரீதியான நலிந்தவர்களைப் பின் தங்கியவர்களாக அறிவிக்கும் சட்டமும் வரும்வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக்கொள்கை உடையவர்களை முழு மனதாக ஆதரிப்போம்' என்று எழுதியிருப் பதை சுட்டிக்காட்டுகிறார். இன்று மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டங்களாக மேலே ஆரியர்கள் குறிப்பிட்ட திட்டங்களே இருப்பதைக் காணலாம். எப்படியெல்லாம் வரலாறு இல்லாதவற்றை வரலாறு ஆக்குவதற்காக பொய் ஆதாரங்களை உருவாக்குகிறார்கள் என்பது பக்கம் 15 முதல் 22 வரை விளக்கப் படுகின்றது.

ஆரியப்பிரச்சினை என்ற தலைப்பில் ‘இந்தோ-அய்ரோப்பிய மொழிக்குடும்பம்', ‘திராவிட மொழிக்குடும்பம்', ‘சிந்து வெளி நாகரிகம்' என்னும் பிரிவுகளை விவரிக் கிறது. ஆரிய திராவிட வேறுபாடு மொழி யியல் அடிப்படையில் எப்படி நிறுவப் படுகிறது எனக்குறிப்பிடுகின்றார். பின் எனினும் ஆரிய/திராவிட வேறுபாடுகளை மொழியியல் அடிப்படையில் மறுக்கிறவர் களும் சென்ற நூற்றாண்டு தொடங்கி இங்கே செயல்பட்டு வந்துள்ளனர். ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்த வர்களல்லர். அவர்களின் தாயகம் இந்தியாவே. இங்கிருந்தே அவர்கள் பிற மேலை நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இக்கருத்தை முன்வைப்போரில் தொண் ணூற்றொன்பது சதத்தினர் இந்துத்துவாதி களே' எனக்குறிப்பிட்டு இந்துத்துவா வாதிகளின் திரிபுகளை தோலுரிக்கின்றார். தொடர்ந்து 'இந்துத்துவ வெறியுடன் எழுதுகிற டி.என்.ராமச்சந்திரன் போன்ற பார்ப்பனர்கள் மாக்ஸ்முல்லரைத் திட்டித் தீர்ப்பது வழக்கம் ' எனக் குறிப்பிட்டு ஏன் திட்டுகிறார்கள் என்பதனை விவரிக் கின்றார்.

ஆரியர்களின் வருகை ஒட்டுமொத்த மாக படையெடுப்பு என்ற வகையில் இல்லை, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆடு, மாடு மேய்ப்பதற்காக கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியா விற்குள் நுழைந்தனர், இங்கு இருந்த மற்றவர்களோடு (தசர்) அவர்கள் மோதி யும், சமரசம் செய்தும் எப்படி எல்லாம் கலந்தனர் என்பதனை ஆய்வுகளின் அடிப்படையில் விவரிக்கின்றார்.ரிக் வேத கலாச்சாரமும் சிந்துவெளி நாகரிகமும் எப்படி வேறுபட்டவை, சிந்து வெளி நாகரிகம் காலத்தோடு முந்தியது என்ப தனை எப்படியெல்லாம் அழிக்கப்பார்க் கின்றார்கள் என்பதனைக் குறிக்கின்றார். இன அடிப்படையில் இந்திய வரலாறு என்ற கருத்துக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் எடுத்துவைத்த வாதத்தை எப்படி வசதியாக ஆரியர்கள் தங்கள் பொய் வரலாறுகளை எழுதுவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை யும், ஜாதியின் தோற்றம், அகமண முறை, சதிமுறையை உருவாக்கியது பார்ப்பனர் களே என்னும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை எல்லாம் மறைத்துவிட்டு தங்களுக்கு வசதியான ஒரு சில கருத்துக் களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆரியர் கள் திரிபுவாதம் செய்வதை எடுத்துரைக் கின்றார்.

இந்த நூலின் இரண்டாம் பகுதி ‘கழுதை யைக் குதிரையாக்கிய மோசடி ' என்னும் தலைப்பில் கருத்துக்களை விவரிக்கின்றது. "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி " என்கிற சாமுவேல் ஜான்சனின் கருத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவார் பெரியார் ஈ.வெ.ரா. "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் " என்றொரு கருத்தை இங்கு பலரும் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் மேல்ஜாதி அறிவுஜீவிகள் செய்து வரும் வரலாற்று மோசடியைப் பார்க்கும்போது "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் வரலாறு" எனச் சொல்லத்தோன்றுகிறது..... கீழேயுள்ள செய்திகளைப் படிக்கும்போது இதைவிட வும் இவர்களின் மோசடியை சித்தரிப்ப தற்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதை உணர்வீர்கள்.சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்று மோசடியில் இந்துத்துவாதிகளின் நோக்கம் என்ன என்பதுபற்றி முதல்பகுதியில் பார்த்தோம்." ஆரியர்கள் வந்தேறிகளல்லர். வேதகாலத் திற்கு முந்தைய வளர்ச்சியடைந்த உள்ளூர் நாகரிகங்கள் என ஏதும் இருந்திருக்க முடியாது. இதுவரை வரலாற்றாசிரியர் களால் வேதகாலத்திற்கு பல நூற்றாண் டுகள் முந்தியதாகவும் அத்துடன் எந்தத் தொடர்ச்சியும் இல்லை எனவும் நிறுவப்பட்டு வந்த சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் ரிக் வேதகால நாகரிகமே" என நிறுவுவதே அவர்களின் நோக்கம். ஆனால் வர லாற்றாசிரியர்கள் இவர்களின் கருத்துக்கு எதிரான வலுவான ஆதாரங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்திருந்த நிலையில் இந்த முடிவுகளை முறியடிக்க வேண்டுமானால் சில புதிய கண்டுபிடிப் புகளைச்செய்தாக வேண்டிய அவசியம் இந்நூல் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது" என்று குறிப்பிடும் அ.மார்க்ஸ் இதற்காக எப்படி ஒரு பொறியாளர் திடீரென வரலாற்று ஆசிரியராக ஆக்கப்பட்டார் என்பதனைக் குறிப்பிட்டு .சிந்துவெளி முத்திரைகளை தாங்களே ஆய்ந்து அறிந் ததாக வெளியிட்டு செய்த மோசடிகளை விவரிக்கின்றார்.

கணிப்பொறியாளரான ராஜாராம் தனது 'கிராபிக்ஸ்' திறமையைப் பயன்படுத்தி திரைப்பட இயக்குநர் ஸ்பீல்பெர்க் ரேஞ் சில் சிந்துவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் புராணிகமான ஒற்றைக் கொம்பனைக் (ஹிழிமிசிளிஸிவி) குதிரையாக மாற்றியிருந்தது அறிஞர்களால் நிறுவப் பட்டது... நிறைய ஆய்வுப்படங்களையும் வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் 'ராஜாராமனின் மோசடியை வெளிப்படுத்திய அறிஞர்கள் இத்தோடு நிற்கவில்லை. ராஜாராமனின் படத்தை குதிரை என ஏற்றுக்கொண்ட யாரேனும் ஒரு சிந்துவெளி ஆய்வாளரையாவது ஒருவர் காட்டினால் அவருக்கு ஆயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்றொரு அறிவிப்பையும் செய்தனர். யாரும் இப்பரிசைப் பெற முயற்சிக்கவில்லை" எனப் பக்கம் 95இல் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.சிந்து வெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளின் உள்ளடக்கத்தை மாற்று வதற்காக செய்யப்பட்ட வாசிப்பு மோசடிகளை அடுத்த பக்கங்களில் விவரிக்கின்றார்.

ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காகவே இல்லாத சரஸ்வதி நதியை இருப்பதாகக் காட்டுவதற்காக ஆய்வாளர்கள் என்னும் பெயரில் ஆரியர்கள் செய்யும் தகிடுதத்தங்களை இந்த நூலின் ஆசிரியர் பக்கம் 106-107-களில் விவரிக்கின்றார். இன்று மத்தியில் இருக்கும் அரசு சரஸ்வதி நதி என்னும் பெயரில் பலகோடி ரூபாய்களை ஆராய்ச்சி செய்கிறோம் என்னும் பெயரில் செலவழிப்பதை நாம் அறிவோம். இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்காக மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவாகிறது என்பதனை நாம் உணர் வதற்கு இந்த நூல் உதவும்.

நூலின் பிற்பகுதியில் தன்னுடைய கருத்துக்கள் அத்தனைக்கும் ஆதாரமான நூல்களையும், பத்திரிக்கைச் செய்தி களையும், இணையதளங்களையும் தோழர் அ,மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கின்றார். மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு ஏன் வரலாற்று திரிபுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதையும், ஆரியர்கள் எப்படியெல் லாம் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களாக தங்களை ஆக்கிக்கொள்வதற்காக புளுகு கின்றார்கள் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும் நூல் இந்த 'ஆரியக்கூத்து ' என்னும் நூல் எனலாம்

நமது பரம்பரை எதிரிகள் பொய்களை உண்மைகளாக்க ஊடகங்களையும், செய்தித்தாள்களையும் பயன்படுத்து கிறார்கள் என்பதையும் வரலாறு எனும் பெயரில் நடைபெறும் ஆரியக்கூத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘திராவிட' என்னும் சொல்லைக் கேட்டாலே ஏன் ஆரியர்கள் பதறு கிறார்கள், ‘திராவிட' என்ற சொல்லிற்கு எதிராக ஏன் 'தமிழ்' என்று பயன்படுத் துங்கள் என்று சொல்கின்றார்கள் என் பதையெல்லாம் நுட்பமாக அறிந்து கொள்ளவும், பரப்புரை செய்யவும் பரந்துபட்ட நூல்களின் அறிமுகம் தேவைப்படுகின்றது. பகுத்தறிவாளர் கழக கருத்தரங்குகளில், பெரியார் பேசுகிறார், விடுதலை வாசகர் வட்டம் போன்ற நமது நிகழ்வுகளில் ஒரு 15 நிமிடமாவது ஒரு நூலைப்பற்றிய அறிமுகம் என்பது நமது தோழர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியதாக அமையும். ஆரியக்கூத்தினை பொதுமக்கள் எளிதாகப்புரிந்து கொள்ளவும் உதவும்.
நன்றி : விடுதலை ஞாயிறு மலர் 15.04.2017                  

Monday, 10 April 2017

நமது ஊர்கள் இல்லை.....

                   

இழந்து போன
காலங்களை
நினைவில்
நிறுத்துவதாகவே
சந்திப்புகள் பலவும்....

ஆண்டுகள் பல
ஆனபின்பு
பாடித்திரிந்த
பறவைகளை
ஒன்று சேர்த்த
வழக்கறிஞர் அண்ணன்
சொன்னார்.....

பழகிக் கழித்த
நண்பர்களை
முப்பது ஆண்டுகளுக்குப்
பின்பு சந்தித்ததை.....
சந்தித்த வேளையில்
நிரம்பி வழிந்த
நினைவுகளை
சுமந்தபடி
சில நாட்கள்
அலைந்த கதை சொன்னார்....

காட்டில் அலைந்ததை
கையொடிந்து விழுந்ததை
வெடிச்சிரிப்பு சிரித்ததை
சண்டையிட்டதை
சமரசமானதை
சொல்லிச்சொல்லிச்
சிரித்த அவர்
கடைசியில் உறவுகளால்
நிகழ்ந்த
சோகக்கதைகளையும்
சொல்லி சோகமானார்

ஊரை முழுவதும்
உள்ளத்தில் தேட்கிவைத்து
ஊர்ப்பக்கமே வராமல்
இருக்கும் அவரின்
சந்திப்பைச்சொன்னேன்.....

உண்மைதாண்டா தம்பி..
நாம் வளர்ந்த சூழல் இல்லை
அதனை வளர்க்கும்
நிலைமையில்
நமது ஊர்கள் இல்லை

ஆற்றாமைகளை
அள்ளிக்கொட்டியபிறகு
ஆற அமரச்சொன்னார்...
அவர்களோடு
ஒத்துப்போக இயலவில்லை
ஒதுங்கிப்போனால்
அப்படியே ஓடிவிடும்
வாழ்க்கை......
விலகி நிற்கவில்லை நான்
வேறுபாடு தெரிகிறது
இருந்தபோதினும்
அவர்களோடு தொடர்ந்துதான்
போய்க்கொண்டிருக்கிறேன்

நிரம்பி வழியும்
பழைய நினைவுகளோடு
மது அருந்தியவன்
தனை மறப்பதுபோல
சுற்றி இருப்போர்
இன்று செய்யும்
அல்லல்களை நினையாமல்
அற்றைத் திங்கள்
நினைவுகளோடு
கூட்டத்தோடு கூட்டமாய்
நான் போய்க்கொண்டிருக்கிறேன்
என்றார்....

                              வா.நேரு ......10.04.2017