Sunday 31 May 2020

செய்ய வேண்டியன செய்தலுக்காய்....

அய்ம்பத்து ஆறு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கிறது...
அய்ம்பத்து ஏழு இன்று
பிறந்திருக்கிறது....

அய்ம்பத்து ஆறில் வாழ்வில்
நிகழ்ந்த பெரும் நிகழ்வு
விருப்ப ஓய்வு எனும் நிகழ்வு...

சென்ற வருடப் பிறந்த நாளில்
துளி கூட எண்ணமில்லை...
அடுத்த பிறந்த நாளில் நாம்
விருப்ப ஓய்வில் இருப்போமென்று...

மறைமுக அரசின் அழுத்தங்களும்
பணிச்சுமை தந்த அழுத்தங்களும்
இணைந்து விருப்ப ஓய்வு எனும்
முடிவினைத் தந்தது....எனினும்
மகிழ்ச்சி தரும் முடிவே இது....

இருக்கும் வாழ்வை
குடும்பத்தினருக்கு கூடுதல் நேரமும்
இயக்கத்திற்கும்
வாசிக்க எழுத என
உள்ளத்திற்கு உகந்தவை
அனைத்தும் செய்திட விருப்பம்....

முப்பத்தாறு ஆண்டுகள் பணியை
முழுவதாய்ச்செய்ததாக மன நிறைவு...
எத்தனை மனிதர்கள்..
எத்தனை தொழில் நுட்பங்கள்...
ஒரு நாவலுக்குள் அடக்கமுடியாத
அத்தனை அத்தியாயங்களும்
மனதுக்குள் ஓடும் பணி நிகழ்வுகள்...

சிறந்த ஊழியன் எனப் பெற்ற
தங்கப் பதக்கம் சான்றிதழைவிட
மனதார வாழ்த்திய வாடிக்கையாளர்களால்
நிறைவாக பணிக்காலம் முடிந்தது...

சராசரி இந்தியனின் வாழ்விற்கு
சில வருடங்களே இன்னும் பாக்கி..
அதற்குள் செய்ய வேண்டியன
செய்தலுக்காய் திட்டமிடலும்
செயல்படுத்தலுமே மீத வாழ்க்கையாய்..
                                                                         வா.நேரு...31.05.2020



Monday 25 May 2020

நானும் புத்தக வாசிப்பும்.....வா.நேரு

நானும் புத்தக வாசிப்பும்
Posted on : Friday 22nd May, 2020

எனக்கு வயது இப்போது 55. புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. நான் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் ‘பொன்னியன் செல்வன்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு, சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்காரந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஒரு அடி அடித்து, சாப்பிடாமக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது.

உயர் நிலைப் பள்ளி படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் கூட பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.

கல்லூரி படிக்கும் காலத்தில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்துக்கொண்டே நூலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதனால், அப்போது மெஸ் கட்டணம் கட்ட பணம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு.  சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது. 1983-& 84-ல் பெரியாரியல் பட்டயப் பயிற்சிக்காக எனது பேரா.கி. ஆழ்வார் அவர்கள்  மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது. பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந. இராமநாதன் அவர்களை நேரிடையாகச் சந்தித்ததும், புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக ‘செவியுணர்வுச் சுவையுணர்வோடு ‘சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை.  தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்னும் புத்தகத்தை படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. படித்து முடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை.

படித்து முடித்து, திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது, வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்காரந்து வேலை செய்துகொண்டிருந்தனர். குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார். 1984 & 85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய் – தம்பி, பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதை புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர். கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றையும் வாசிப்பது என்பது அப்போது முடிவுக்கு வந்தது. திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது, உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர். நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர். பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான். 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார்.

1991-ல் மதுரைக்கு மாறுதல். மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது. ‘புதிய காற்று ‘ எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. ந.முருகன் வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தகங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும். பல கண்ணோட்டமுள்ளவர்கள் குழுவில் இருந்தனர். இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும்  புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

மதுரைக்கு வந்த பின்னர், காரமுகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு, ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.’ ‘ஸ்பார்ட்டகஸ்’ போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும், பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், ‘நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்து விடுகின்றேன்’  என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.

 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக ‘படித்த பார்ப்பன நண்பரே’ என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்’ என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது.

பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்கத் தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார். ‘புத்தகத் தூதன்’ எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை  விற்று பெருமை சேர்த்தவர். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் நா.கணேசன், க.அழகர், அழகுபாண்டி, மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்கத் தோழர்களாக இருக்கின்றனர்.

மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன், இந்து பத்திரிக்கை மேலாளர் முரளி, துணை ஆசிரியர் அண்ணாமலை  எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்….எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை…மதுரையில் கணினி பயிற்சியகம் வைத்திருந்த தோழர் ஓவியா, அவரின் கணவர் ஏ.பி.வள்ளிநாயகம் இருவரும் படிப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருந்தனர். புதுக்கோட்டை கவிஞர் ந.முத்து நிலவன் அறிமுகம் கிடைத்தது.இப்படி பல திசைகளிலிருந்தும் புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள், படைப்பவர்கள் என அறிமுகமாயினர்.

எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் பாண்டிச்சேரி தோழர் அகனின் முயற்சியால் ‘சூரியக்கீற்றுகள்’’ என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

எனது முதல் சிறுகதைத்தொகுப்பு ‘நெருப்பினுள் துஞ்சல் ‘‘சென்னை எமரால்டு பதிப்பகத்தால் 2019-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.சிறுகதைகளைப் படித்துவிட்டு பாராட்டுவது, கதைகளைப் பற்றித் தங்கள் கருத்துக்களை நண்பர்கள் தோழர்கள் பதிவு செய்வது மிகப்பெரிய ஊக்க சக்தியாக அடுத்தடுத்து எழுதுவதற்கு துணை செய்கிறது.

எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். 80 வயது கடந்தவர்.படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடமும், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக் கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்…

மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது. நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது.

புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் ‘‘காரல் மார்க்ஸ் நூலகம்’’ என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். ‘‘எனக்குரிய இடம் எங்கே’’ என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும் நான் என்றார்.மிக நல்ல புத்தகம் அது.  45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா. மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்காரந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி அவர்கள்  பேசினார். வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார். 

எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது.எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தை கல்லூரி முதுகலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் எனது மகள் சொ.நே.அறிவுமதி எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘ நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே’ என்று சொன்ன நேரத்தில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால், மனதார அதுதான் உண்மையான சொத்தாக,எனது பிள்ளைகளுக்கு நான் அளிப்பது  என நான் நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,

மதுரையில் அய்.ஏ.எஸ். அதிகாரி திரு.உதயசந்திரன் அவர்கள் முயற்சியால் புத்தகத் திருவிழா ஆரம்பமாகியது.தொடர்ந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.ஆயிரம் திருவிழாக்கள் மதுரையில் நடைபெற்றாலும் நம்மைப்போன்றவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் திருவிழா புத்தகத்திருவிழாதான். பல நகரங்களில் தமிழகத்தில் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறவது மகிழ்ச்சிக்குரியது.

 எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும். பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன்.

எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் (vaanehru.blogspot.in) அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு, தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும். பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. புத்தகக் கடைகளும்தான். நாட்டில் மாற்றம் வருவதற்கு புத்தகங்களே அடிப்படை.புத்தகங்களை நேசிப்போம். வாசிப்பை நேசிப்பாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற முயற்சிகள் செய்வோம்.

வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.


நன்றி : கைத்தடி 


இந்தக் கட்டுரை 22.05.2020 அன்று கைத்தடி வலைத்தளத்தில் வெளியானது. இதன் பல பகுதிகள் ஏற்கனவே விடுதலையில் வெளியானது,எனது வலைத்தளத்திலும் வெளியானது.படித்ததை மீண்டும் படிப்பதாக தோன்றினால் பொறுத்துக்கொள்க

Tuesday 12 May 2020

முதல் கட்டுரைக்குப் பாராட்டு.... வா.நேரு






விடுதலை 11.05.2020-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர்,கல்வி அதிகாரி அண்ணா சரவணன் அவர்கள் எழுதிய 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' என்னும் கட்டுரை படித்தேன். மிக நன்றாக இருந்தது. ஆற்றொழுக்கு நடையில், 'படித்ததில் பிடித்தது' என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கு பெற்றபோது, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் இந்தக் கரானோ காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த நிறைய இயக்க புத்தகங்களைப் படியுங்கள், படித்ததோடு நில்லாமல், 'படித்ததில் பிடித்தது ' என்னும் தலைப்பில் விடுதலைக்கு எழுதி அனுப்புங்கள் என்று அறிவுறுத்தியதை திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.அண்ணா சரவணன் அவர்கள் பேசியபோது, 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' புத்தகம் படித்ததைப் பற்றிப் பேசினார். நானும் அண்ணன் குமரேசன் அவர்களும் அதனை அப்படியே எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள் என்று அண்ணா சரவணனிடம் வலியுறுத்தினோம்.

நேற்று(11.05.2020) மாலை விடுதலையில் கட்டுரையைப் படித்துவிட்டு , அண்ணா சரவணனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினேன். "அய்யா, நீங்களும் அய்யா குமரேசன் அவர்களும் சொன்னீர்கள். ஆனால் மிகுந்த தயக்கத்தோடுதான் விடுதலைக்கு அனுப்பினேன். இதுதான் எனது முதல் கட்டுரை " என்றார். "இது ஏதோ ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர் எழுதியதுபோல அவ்வளவு நன்றாக, கோர்வையாக இருக்கிறது உங்கள் திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் அய்யா வி.ஜி.இளங்கோ, அவரது இணையர் கவிதா அவர்களை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.நமது இயக்கத்தோழர்களுக்கு, பொறுப்பாளர்களுக்கு அவர்களைப் பாராட்டி விடுதலையில் வரும் சொற்களுக்கு கூடுதலான பரிசு இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கிறது ? வாழ்த்துரை அளித்த சிங்கப்பூர் தமிழறிஞர்கள் வை.திருநாவுக்கரசு,டாக்டர் சுப.திண்ணப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.  இந்தப் புத்தகத்தை அருமையாக கொண்டுவந்த அய்யா சிங்கப்பூர் எம்.இலியாஸ் அவர்களின் உழைப்பை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். அவர் முன்னுரையில் அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதை மிகச்சிறப்பாக வகைப்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்புத்தகம் கிடைக்கவில்லை. மறுபதிப்பு போடவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றீர்கள். நானே இந்தப்புத்தகம் படித்ததில்லை. தங்களின் கட்டுரை மூலமாக புதிய பதிப்பில் நாங்கள் எல்லாம் படிக்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது " எனக்குறிப்பிட்டேன்.

அன்பிற்கினிய தோழர்களே, " தட்டுத்தடுமாறி முதன்முதலாக இப்படி எழுதுகிறேன். " என்று அண்ணா சரவணன் இந்தக் கட்டுரையில் எழுதுகின்றார். அண்ணா சரவணன் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள், எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.ஆனால் நாம் எழுதினால் வெளியிடுவார்களா? நம்மால் எழுத முடியுமா என்னும் தயக்கம்தான் பலரையும் தடுக்கிறது. முதலில் இந்தத் தயக்கத்தை தூக்கி வங்களா விரிகுடாக் கடலில் எறியுங்கள். புதுக்கோட்டையைச்சார்ந்த மறைந்த கவிஞர் பாலா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். " புதுக்கவிதை எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் எழுதட்டும். தமிழகத்தில் ஏழரைக் கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், ஏழைரைக் கோடிப்பேரும் எழுதட்டும். அதனால் என்ன கெட்டு விடும். எது நிற்கிறது, எது கால வெள்ளத்தில் கரைந்து போகிறது என்பதனை காலம் தீர்மானிக்கும். எல்லோரும் எழுதுகிறார்கள், அதனால் நான் எழுதவில்லை என்று சொல்லாதீர்கள். எழுதுங்கள்,எழுதுங்கள் " என்று சொன்னார். அதனைப்போல நமது தோழர்கள் ஒவ்வொருவரும் 'படித்ததில் பிடித்ததை' எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள். எது வெளியிடத்தகுந்தது என்பதனை விடுதலை முடிவுசெய்து வெளியிடும்.அதனைப் போல ஆங்கிலத்தில் எழுத விருப்பம் உள்ளவர்கள், ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் ஒவ்வொரு பக்க கட்டுரையாக கூட தி மாடர்ன் ரேசனலிஸ்டு பத்திர்க்கைக்கு எழுதி அனுப்புங்கள். அண்ணா சரவணன்  " நம் குடும்பத்தலைவர் எல்லா வ்கையிலும் நம்மை பயிற்றுவித்து வருகிறார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு ' என்று சொல்வதைப் போல நம் ஒவ்வொருவரையும் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதுவதை நமது தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பயிற்றுவிக்கிறார்.முயற்சி செய்ய அழைக்கிறார்.களத்தில் நின்று பணியாற்றுவது போலவே நமது போராட்டங்களை,அனுபவங்களை, எண்ணங்களை காகிதத்தில் எழுதி பதிந்து வைப்பதுவும் மிகவும் முக்கியம்.எழுதுங்கள் தோழர்களே,எழுதுங்கள்.

முனைவர் வா.நேரு,
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

நன்றி : விடுதலை 12.05.2020...ஆசிரியருக்கு கடிதம்:

Thursday 7 May 2020

மிஸ்டர் இரக்கசாமி.......(சிறுகதை)... வா.நேரு

                                                   மிஸ்டர் இரக்கசாமி....(சிறுகதை)... வா.நேரு

” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ,இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகவும் தாராள குணம். எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது என்று மனதிற்குள் ஒரு பெரிய வைராக்கியம். ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாகப்பிறந்து ,பெற்றோர்கள் நிறையச்சம்பாரித்து வைத்து அதனை செலவழிக்கும் ஒரு தாராள மனம் படைத்த பிள்ளையாய் மிஸ்டர் இரக்கசாமி இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை….

ஆனால் மிஸ்டர் இரக்கசாமி பிறந்ததிலிருந்தே அட்ட தரித்திரம். கன்னங்கரேர்ன்னு பிறந்திருக்கான்னு உறவுகள் எல்லாம் பிறந்தவுடனேயே பார்த்து முகத்தைச்சுழிக்க, சுத்தியிருந்த உறவுகள் எல்லாம் பழிக்க படாரென்னு மண்ணில் வந்து விழுந்தவுடனேயே வாங்கிக் கட்டிக்கொண்டவர் மிஸ்டர் இரக்கசாமி. சின்ன வயசிலியே அப்பனை முழுங்கிவிட்டான்… அதற்கு இந்த இரக்கசாமியின் முதுகில் இருக்கும் மொக்கப்பய மச்சமே காரணம்ன்னு ஒரு சோம்பேறி சோசியக்காரப் பயல் சொல்லிவைக்க ,அப்பா இல்லாமல் ஆளாகி வருவதற்குள் படாத பாடு பட்டு வளர்ந்து வந்தவர்தான் மிஸ்டர் இரக்கசாமி.

எவராவது பிரச்சனை என்று சொல்லி கடனாக பணம் கேட்டு வந்து விட்டால் அப்படியே உருகிவிடுவார் மிஸ்டர் இரக்கசாமி.சின்ன வயதில் பணத்திற்காக தான் துன்பப்பட்டது,துயரப்பட்டது, அல்லல்பட்டது,அசிங்கப்பட்டது என அத்தனையும் இரக்கசாமியின் மனதிற்குள் ஓடும்.எவராவது தன்னிடம் பணம் கேட்டு வந்து விட்டால் உடனே தன்னை அந்தப் பணம் கேட்டு வந்தவன் இடத்தில் நிறுத்திப்பார்ப்பார். அய்யோ, இவனுக்கு இந்த நேரத்தில் நாம் உதவவில்லையெனில் மனிதனாகத் தான் பிறந்து, வாழ்ந்து,வளர்ந்து என்ன பயன் என்று எண்ணிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்.

சில நேரங்களில் சிலருக்கு பணத்தைக் கொடுப்பதற்கு முன்பே இப்ப கொடுக்கும் பணம் திரும்ப வராது என்று தெரியும் மிஸ்டர் இரக்கசாமிக்கு.எழுத்தாளர் பிரபஞ்சன் தனது ‘நேற்றைய மனிதர்கள் ‘சிறுகதைத்தொகுப்பில் எழுதிய ஒரு சிறுகதையின் கதாபாத்திரம் போல, திரும்ப வராது என்று தெரிந்தே கடன் கொடுப்பார் மிஸ்டர் இரக்கசாமி.

இப்படி பவுன் 1000 ரூபாய் விற்கும் காலத்திலேயே 1000,2000 என்று மிஸ்டர் இரக்கசாமியிடம் கடன் வாங்கியவர்கள் பலவகையில் அறிமுகமானவர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள், உறவுக்காரர்கள் ,இலக்கியவாதிகள் எனப் பெரிய பட்டியலே மிஸ்டர் இரக்கசாமியிடம் உண்டு. பலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியும்.சிலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியாது.ஆனால் கொடுத்த எவரிடமும் அழுத்தி,அழுத்திப் பணத்தைக் கேட்டு திரும்பி வாங்கும் பழக்கம் இரக்கசாமியிடம் இல்லை.கொடுத்தவரிடம் ஒரு முறை இவர் கேட்கும் தோரணையிலேயே கடன் வாங்கிய ஆளுக்குத்தெரிந்துவிடும் இந்த ஆளுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று.


மிஸ்டர் இரக்கசாமி சில நேரங்களில் தனது தாராள குணத்தால் சிக்கலிலும் மாட்டத்தெரிந்தார் என்றாலும் தனது தயாள குணத்தை அவரால் மாற்ற இயலவில்லை.அப்படித்தான் ஒரு போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிகழ்ந்தது.

மிகுந்த உயர்பதவிக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நிறுவனம் அது. மிஸ்டர் இரக்கசாமி பெரும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார்.அரசு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் இரக்கசாமி,பகுதி நேரமாக அந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். பகுதி நேரம் என்றால் பகுதி நேரம்தான். பத்துபைசா வருமானம் வராத பகுதி நேர வேலை,இருந்தாலும் தான் எப்போதோ படித்ததை,பகிர்ந்து கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணி ,மிஸ்டர் இரக்கசாமி அந்த நிறுவனத்தில் போய் பாடங்கள் நடத்திக்கொண்டு இருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமி போலவே அந்த நிறுவனத்தில் ‘வரலாறு ‘ பாடம் எடுக்க திரு.காந்தி வந்து கொண்டிருந்தார்.’காந்தி ‘என்று சொன்னால் அவர் காந்திதான் என்று மிஸ்டர் இரக்கசாமிக்குத் தோன்றியது. எப்போதும் மிக எளிமையான உடையில் வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றார்.உணவு விடுதியில் வேண்டியதைச்சாப்பிடுங்கள் என்று சொன்னபோது, காந்தி மட்டும் 4 இட்லிமட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். மிஸ்டர் இரக்கசாமி மற்றும் உடன் இருந்தவர்கள் எல்லாம் ஸ்பெஷல் தோசை,சோளாப்பூரி என்று வித விதமான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , காந்தி மட்டும் 4 இட்லி போதும் என்று சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் மிஸ்டர் இரக்கசாமி. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காந்தியைப் பற்றிய மதிப்பீட்டில் மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் போட்டுக்கொண்டார் மிஸ்டர் இரக்கசாமி.

திரு. காந்திக்கு வயது 50க்கு மேல் இருக்கும் . இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடிக்கு அருகில் சொந்த ஊர் என்றாலும் மதுரையில் தங்கியிருந்தார். மதுரையின் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடத்தில் நிரந்தர ஆசிரியர் வேலை.அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் வரும் சம்பளத்தில் எண்பது சதவீதம் ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டு விடுவதாக அன்றொரு நாள் சொல்லிக்கொண்டிருந்தார்.தன்னைப் போலவே மாணவர்களின் நலனுக்காக தனது சொந்தப்பணத்தை செலவழித்து மிஸ்டர் காந்தி வந்து போய்க்கொண்டிருக்கிறாரே என மிஸ்டர் இரக்கசாமி நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்திவிட்டு வெளியில் வந்த போது , திடீரென மிஸ்டர் இரக்கசாமிக்கு முன்னால் வந்து நின்றார் காந்தி. அவசரமாக ஒரு 20,000 ரூபாய் கடன் வேண்டும் என்றார் மிஸ்டர் இரக்கசாமியிடம் .உடனே இரக்கசாமி ‘ எதற்காக உங்களுக்குப் பணம் கடனாக வேண்டும் ? ‘ என்று கேட்டார்.

‘கிறிஸ்துமஸ் பண்டிகை சீக்கிரம் வரப்போவதையும், தனக்கு குடும்பம் இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எப்போதும் தூத்துக்குடியில் இருக்கும் தனது தங்கையின் வீட்டுக்கு கிறிஸ்துமஸ்ஸிற்கு போவதாகவும், போகும்போது எப்போதும் தங்கையின் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்பு வாங்கிச்செல்வது வழக்கம் என்றும், இந்த வருடம் பணத்திற்காகப் பள்ளியின் மூலம் ஜி.பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் கொடுத்ததாகவும், அது வர தாமதமாகிறது, ஆனால் கிறிஸ்துமஸ் வரப்போவதால் பணம் தேவைப்படுகிறது என்றும்,ஜி.பி.எப். பணம் வந்தவுடன் ஓரிரு வாரத்தில் கொடுத்துவிடுவதாகவும் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு மிஸ்டர் இரக்கசாமியிடம் கோரிக்கை வைத்தார் காந்தி.

மிஸ்டர் இரக்கசாமி உடனே தன்னைக் காந்தியின் இடத்தில் வைத்துப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஆனாலும் மிஸ்டர் இரக்கசாமியிடம் பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்றும், உடனடியாக ரூ 20,000 தருவது தன்னால் இயலாத காரியம் என்பதையும் காந்திக்கு மிஸ்டர் இரக்கசாமி எடுத்துச்சொன்னார்.ரூ 10,000 மாவது தரும்படி காந்தி மறுபடியும் கேட்க, தன்னிடம் ரூ 500 கூட இப்போது இல்லை என்றும் ,ரூ 10,000 என்பது பெரிய தொகை, தன்னால் இயலாது, தன்னை மன்னிக்கும்படியும், உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போன காரணத்தையும் மிஸ்டர் இரக்கசாமி காந்தியிடம் விளக்க முற்பட்டார்.

காந்தி உடனே மிஸ்டர் இரக்கசாமியின் பேச்சினை இடைமறித்தார். யாரிடமாவது வட்டிக்குக்கூட ரூபாய் 10,000 வாங்கித்தரும்படியும் ,ஓரிரு வாரத்தில் வட்டிப்பணத்தைத்தருவதோடு அசலையும் தானே கட்டிவிடுவதாகவும் தனக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டுமென்றும் , சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள தன்னால் கீழே இறங்கிச்சென்று கடன் வாங்க இயலவில்லையென்றும் , தான் கடந்த 20,25 வருடங்களாக தனது தங்கைக்கும் அவளது வீட்டிற்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்குச்செய்யும் உதவியைத் தொடர உதவி செய்யும் படியும் மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார் காந்தி. சரி,நான் கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார் இரக்கசாமி.

மிஸ்டர் இரக்கசாமி வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அவரிடமிருந்து தள்ளியே இருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. காந்திக்கு எப்படியாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அலுவலகத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. சரி, வட்டிக்கு கொடுப்பவரிடம் கேட்டுப்பார்த்தாவது காந்திக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரக்கசாமிக்கு தோன்றியது.

மிஸ்டர் இரக்கசாமி வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் சந்திரனிடம் சென்று, இப்படித்தனக்கு தெரிந்தவர் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் ,ஜி.பி.எப். பணம் வரவேண்டியது பாதித் தூரத்தில் நிற்பதாகவும்,வந்த உடன் அவர் கொடுத்து விடுவார் என்றும் அவருக்கு ரூபாய் 10,000 கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டார். சந்திரன் மிகத்தெளிவாக, காந்தியைத் தனக்குத் தெரியாது என்றும், உங்களை நம்பி வேண்டுமென்றால் நான் தருகின்றேன், நீங்கள்தான் எனக்கு வட்டி கட்டவேண்டும், அசல் கட்டவேண்டும், நோட்டும் நீங்கள்தான் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும் சொன்னபோது, மிஸ்டர் இரக்கசாமி மற்றவற்றிற்கு ஒப்புக்கொண்டு, நோட்டு மட்டும் காந்தியையே எழுதித்தரச்சொல்கிறேன் என்றார்.சந்திரன் மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் காந்தியிடம் உங்கள் பெயருக்கு ஒரு நோட் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். நான் பணம் கொடுப்பது உங்களிடம்தான். எனக்கு நீங்கள்தான் நோட்டு எழுதிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

மறு நாளே, அலுவலகத்திற்கு வந்த காந்தியை சந்திரனிடம் மிஸ்டர் இரக்கசாமி அறிமுகப்படுத்தினார். சந்திரன் கண்டுகொள்ளவில்லை.அவருக்கு முன்னாடியே சந்திரனின் மனைவி பெயருக்கு மிஸ்டர் இரக்கசாமி ரூ 10,000 க்கு நோட் எழுதிக்கொடுத்தார். மிஸ்டர் இரக்கசாமி பெயருக்கு,அலுவலக முகவரிக்கு ரூ 10,000 க்கு நோட்டை காந்தி எழுதிக்கொடுத்தார். சந்திரன் ரூ 10,000த்தில் முதல் மாத வட்டி 300 ரூபாயை எடுத்துக்கொண்டு ,மீதம் 9,700 ரூபாயை மிஸ்டர் இரக்கசாமியிடம் கொடுத்தார். இரக்கசாமி அந்தப்பணத்தை அப்படியே காந்தியிடம் கொடுத்தார்.மிக்க நன்றி,மிக்க நன்றி,வாழ்க்கையில் இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே காந்தி மிஸ்டர் இரக்கசாமியிடம் விடை பெற்றுக்கொண்டார்.மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகப்பெரும் நிறைவு காந்திக்கு உதவி செய்தது குறித்து

இரண்டு மாதம் சரியாக 2-ந்தேதி வட்டிப்பணத்தைக் கொடுத்தார் காந்தி.அப்படியே அந்தப்பணத்தை வாங்கி அலுவலகத்தில் சந்திரனிடம் கொடுத்து வந்தார் மிஸ்டர் இரக்கசாமி. ஜி.பி.எப். பணம் வந்துவிட்டதா என்று ஒரு வார்த்தை மிஸ்டர் இரக்கசாமி கேட்பதற்கு முன்பே ஜி.பி.எப். இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்று காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.. மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி காந்தி வரவில்லை. 10-ந்தேதி வரை அவர் வரவில்லை. சந்திரனுக்கு வட்டிப்பணத்தை மிஸ்டர் இரக்கசாமியே கொடுத்துவிட்டார்.அந்த மாதம் முழுவதும் காந்தியைப் பார்க்கமுடியவில்லை.போட்டித் தேர்வுக்கு பாடம் நடத்தும் நிறுவனத்திற்கே காந்தி வரவில்லை.தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போதே மூன்று மாதங்கள் வட்டிப்பணத்தை சந்திரனுக்கு மிஸ்டர் இரக்கசாமி கட்டியிருந்தார்.

காந்தி போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனத்திற்கு மூன்று மாதங்களாக வரவில்லை என்றதும் ஏதோ தப்பாகப்போவது போல தெரிந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. அங்கிருந்த காந்தி வேலை பார்த்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு காந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு மிஸ்டர் இரக்கசாமி போனார். அங்கிருந்தவர்களிடம் காந்தியைப் பற்றிக் கேட்டவுடனேயே , நீங்கள் ஏதும் கடன் கொடுத்து இருக்கிறீர்களா? எனக்கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனார் மிஸ்டர் இரக்கசாமி. அவர்கள் காந்தியைப் பற்றி சொல்லச்சொல்ல கிறுகிறுப்பு வந்தது போல ஆகிவிட்டது மிஸ்டர் இரக்கசாமிக்கு...

காந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 20-க்கு மேற்பட்டவர்களிடம் இப்படி 10,000ம் 20,0000ம் என்று கடன் வாங்கியிருக்கிறார். ஒருவரிடம் வாங்கியது அடுத்தவருக்குத் தெரியாமலேயே கைமாத்து,அவசரம், மருத்துவம் எனப் பல பொய்களைச்சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். வேறு கெட்ட பழக்கம் இல்லாதவரே என்று ஆசிரியர்கள் தீர விசாரித்தபோது, மதுரையில் பெரிய பணக்காரர்கள் பலர் விளையாடும் சீட்டாட்டக்கிளப்பில் மெம்பராக இருப்பதும்,சீட்டு விளையாட்டில் பயங்கர மோகம் கொண்டு பணம் கட்டி இழப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆசிரியர்கள் மாற்றி மாற்றி கடனைக் கேட்டபோது, ஒன்றுமே சொல்லாமல் பள்ளிக்கும் வராமல் இரண்டு மாதங்களாக பள்ளிக்கூடத்திற்கும் வராமல் இருப்பது தெரியவந்தது. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வராததை,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் தற்காலிக பணி நீப்பில் இருக்கிறார் என்பது தெரிந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை மிஸ்டர் இரக்கசாமிக்கு. ரூபாய் 300 மாதாமாதாம் வட்டி கட்டுவதை வீட்டில் மனைவியிடம் சொல்லவில்லை. அவராகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு நாள் பணம் கட்டுவது? சந்திரனுக்கு அசலும் வட்டியும் கட்டினால்தான் புரோ நோட்டைத் தருவார் …என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார். வட்டிப்பணத்தை மட்டும் சந்திரனுக்கு கட்டி வந்தார்.

திடீரென்று ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது மிஸ்டர் இரக்கசாமிக்கு தூத்துக்குடியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘மிஸ்டர் இரக்கசாமியா?’ என்று வினவியவரிடம் ‘ஆமாம் ‘என்றார். தான் காந்தியின் வக்கில் என்றும் அவர் நிறையக் கடன் பட்டு வாழ்க்கையில் நொந்து விட்டார் என்றும்,விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, சொத்துக்கள் ஏதும் இல்லாததால் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டார் என்றும் ,உங்கள் வீட்டு முகவரி வேண்டும் சில தகவல்கள் அனுப்ப என்றும் கேட்டபோது வீட்டு முகவரியை மிஸ்டர் இரக்கசாமி தொலைபேசியிலேயே கொடுத்தார்.

மறு நாள் வீட்டிற்கு வந்தவுடன் மனைவி கலா அந்தக்கடிதத்தைக் கொடுத்தவுடன் படித்துப்பார்த்து அரண்டு விட்டார் மிஸ்டர் இரக்கசாமி. “மிஸ்டர் இரக்கசாமி, நீங்கள் அரசு வேலை பார்க்கிறீர்கள் ? எப்படி வட்டிக்கு பணம் கொடுத்தீர்கள்?” என்று விளக்கம் கேட்டு காந்தியின் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். மனைவி கலாவிடமும்,மகன் கென்னடியிடமும் முழுக் கதையையும் சொன்னார் மிஸ்டர் இரக்கசாமி. முதலில் கோபப்பட்ட கலா பின்பு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

” இளிச்சவாயென்னு ” …” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

நன்றி : எனது சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம்(sirukathaigal.com) இணையதளத்திற்கு