Sunday, 31 May 2015

நிகழ்வும் நினைப்பும்(39 ) : பிறந்த நாளும் பரிசுப்பொருளும்

நிகழ்வும் நினைப்பும்(39 ) : பிறந்த நாளும் பரிசுப்பொருளும்

                                        இன்று எனது 52-வது பிறந்த நாள். சில நண்பர்கள் பேஸ்புக்கிலும் , தொலைபேசியிலும் வாழ்த்துக்களைக் கூறினர். மிக்க நன்றி. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. எனது வாழ்க்கை இணையர் கொடுத்த பரிசு  புதிய உடைகள். ஏற்கனவே நிறைய இருக்கிறது, சட்டை எல்லாம் வேணாம்பா என்று சொன்னாலும் கேட்கவில்லை, நல்ல ஒரு சட்டையை தேர்ந்தெடுத்து கொண்டு வந்து கொடுத்தார்கள். உடுத்திக்கொண்டேன்.தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு , தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலில் , பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக வாழ்வது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு  நம்மால் முடிந்த அளவு உதவுவதும்தானே வாழ்க்கை.அதற்கு பெரியாரியல் மிகப்பெரிய வழிகாட்டல்தான்.


                                      ஒரு வியக்கத்தக்க ஒரு பரிசினை எனது பிள்ளைகள் சொ. நே.அன்புமணியும் , சொ.நே.அறிவுமதியும் கொடுத்தார்கள், தினந்தோறும் காலையில் முகச்சவரம் செய்யப் பயன்படுத்தும் முகம் பார்க்கும் கண்ணாடி ரசமெல்லாம் போய்விட்டது. அதனைத்தான் வைத்து தினந்தோறும் முகச்சவரம் செய்துகொண்டிருந்தேன். புதிய கண்ணாடி வாங்கவேண்டும் என்று சில நாட்களுக்கு முன் நினைத்தேன் , ஆனால் வாங்கவில்லை. எனது மகனும் மகளும் , காலையில் " அப்பா , பிறந்த நாள் வாழ்த்துக்கள் " என்று சொல்லி விட்டு பரிசுப்பொருளைக் கொடுத்தார்கள். பிரித்து பார்த்தபொழுது , ஒரு பேனா, ஒரு பர்ஸ், ஒரு முகம் பார்க்கும் நல்ல பெரிய கண்ணாடி இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவுக்கு எது தேவை என்பதனையும் அதனை பரிசுப்பொருளாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுத்தது. விலை உயர்ந்த பரிசுப்பொருட்களைக் கொடுப்பதை விட , எது தேவையோ அதனைக் கொடுக்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. மனதார நன்றி பிள்ளைகளே எனச்சொன்னேன்.

                                    நான் படித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர்- பண்பாளர், கல்வியாளர் திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால் ஒரு அறக்கட்டளை திருச்செந்தூரில் உள்ளது. நான் பெரியார் கொள்கைக்கு தீவிரமாக வருவதற்கு காரணமாக அமைந்த எனது ஆங்கிலப்பேராசிரியர் திருமிகு. கி.ஆழ்வார் அவர்கள் அந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார். எங்கள் முதல்வர் திரு.டாக்டர் இரா.கனகசபாபதியின் முன்னாள் மாணவர்கள் , அவரோடு பணியாற்றிய பேராசிரியர்கள் ஆகியோர்களின் பங்களிப்பால் நடைபெறும் அந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் ஓர் அற்புதமான வேலையைச்செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அறக்கட்டளை மூலமாக நன்றாக படிக்கக்கூடிய ஆனால் ஏழ்மை நிலையிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு  படிப்பதற்கான உதவியைச்செய்து கொண்டிருக்கின்றார்கள். செய்வது மட்டுமல்ல யார் யார் பணம் கொடுத்தார்கள் என்பதையும் , யார் யார் , எந்தெந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் உதவி பெற்றார்கள் என்பதையும் தெரிவிக்கின்றார்கள். மிக வெளிப்படையாக நடைபெறும் உதவி - திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால். நான் திருமிகு டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களால் பலன் பெற்றவன் என்ற வகையில் , எனது பிறந்த நாள்  நன்கொடையாக ரூ 2000த்தை அந்த அறக்கட்டளைக்கு எனது கணித பேராசிரியர் திரு.சேகர் மூலமாக அளித்தேன்.

                            இப்போதுதான் கல்லூரிக்கு சென்றதுபோலவும், வேலைக்கு வந்தது போலவும் இருக்கிறது. காலம் ஓடிவிட்டது. 51-வயது முடிந்து 52-வது வயது ஆரம்பித்திருக்கிறது. நிறைய வேலைகள் எழுத்து வடிவில், பொது வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. செய்ய இயலும் என நினைக்கின்றேன். நன்றி உறவுகளே, நண்பர்களே, தோழர்களே வாழ்த்துக்களுக்கு... நன்றி எதிரிகளே வசவுகளுக்கு.... 

Thursday, 28 May 2015

நிகழ்வும் நினைப்பும்(38) : மதுரையில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்வும் நினைப்பும்(38) : மதுரையில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அய்யாவின் அடிச்சுவட்டில் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் - 5 அறிமுக விழா


மதுரை, மே 28_ 14.05.2015 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக  தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் அய்யாவின் அடிச் சுவட்டில் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் - 5 அறிமுக விழா பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாட்சி மகால் அரங்கத்தில்  நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் பகுத்தறி வாளர் கழகத்தின் மாவட்டச்செயலாளர் பெரி.காளி யப்பன் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சுப.முருகானந்தம் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் மீ.அழகர்சாமி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

நூல்கள் வெளியீடு

தொடர்ந்து நூல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீட்டுச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன் வெளியிட திராவிடர் கழகத்தின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசாவும் மற்றவர்களும்  பெற்றுக்கொண்டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'வாழ்வியல் சிந்தனைகள் -பாகம் 5' நூலை அறிமுகப் படுத்தியும் அந்த நூலின் சிறப்புக்கள் பற்றியும், நூலின் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களின் சிறப்புக்கள் பற்றியும் எடுத்துக்கூறி பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.

தொடர்ந்து கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர் மறு மலர்ச்சி தி.மு.க.வின் வெளியீட்டுச்செயலாளர் ஆ.வந் தியத்தேவன் அவர்கள் 'அய்யாவின் அடிச்சுவட்டில்' நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அவர் தனது உரையில்: "இன்றைக்கு இரண்டு நூல்கள் இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. ஒன்று வாழ்வியல் சிந்தனைகள் பாகம்-5. அதனை நேரு அவர்கள் இங்கு சிறப்பாக அறிமுகப்படுத்தினார். இன்னொரு புத்தகம் 'அய்யா வின் அடிச்சுவட்டில் பாகம் -1'. அய்யாவின் அடிச் சுவட்டில் என்பது அய்யா ஆசிரியர் அவர்களின் வரலாறு. அவரது வரலாறு மட்டுமல்ல திராவிடர் இயக்கத்தின் வரலாறு. நெருப்பாற்றில் நீந்திய வரலாறு

திராவிடர் இயக்கத்தின் வரலாறு என்பது சாதாரணமானதல்ல. நெருப்பாற்றில் நீந்திய வரலாறு. எதிர்ப்புக்களை எதிர்கொண்ட வரலாறு.  நாம் பகுத் தறிவு பற்றி, கடவுள் மறுப்பு பற்றி, சாதிக் கொடுமை பற்றி பரப்புரை செய்துகொண்டிந்தபொழுது, இவை யெல்லாம் இப்போது தேவையில்லை, கூலி உயர்வு தான், பொருளாதார சமத்துவம்தான் தேவை அதற் காகத்தான் நாங்கள் பரப்புரை செய்வோம் என்று சொன்ன பொதுவுடமைத்தோழர்கள் இப்போது நம்மோடு கரம் கோர்த்து வருகின்றார்கள்.  -

தாலி அடிமைச்சின்னம் என்பதனை எடுத்துக் காட்டும் விதத்தில் திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் நிகழ்விற்கு பொதுவுடமைக்கட்சிகள்  இணைந்து வந்தனர்.  திருமாவளவன் அவர்களின் தலைமையில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு, சுப.வீ அவர்களின் அமைப்பு எல்லாம்  நம்மோடு சேர்ந்து கை கொடுத்தனர். ம.தி.மு.க  பொதுச் செயலா ளர் வை.கோ. அவர்கள் கண்டன அறிக்கை கொடுத் தார். ம.தி.மு.க.  இயக்கத்தின் அதிகாரபூர்வ 'சங்கொலி' ஏட்டில் இது பெரியார் நாடு என்பதனை அழுத்தம் திருத்துமாக தலையங்கம் எழுதினோம். விடுதலை அதனை இரண்டாம் பக்கத்தில் வெளி யிட்டு மகிழ்ந்தது. ஒரு காலத்தில் தலை நகர் டில்லி யில் பெரியார் மய்யம் முந்தைய பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டது. மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ. அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரோடு  இணைந்தார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் அழைத்துக் கொண்டு  அன்றைய அமைச்சர்  அத்வானியை, பிரதமர் வாஜ் பாயை  சந்தித்தனர். அண்ணன் வை.கோ. சொன்னார் "தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் கறுப்புச்சட்டை அணிந்திருக்கின்றார். நான் கறுப்புத்துண்டு அணிந் திருக்கின்றேன். கறுப்பின் சதவீதத்தில் வேண்டு மானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால் இருவரும் ஒரே எண்ணம் உடையவர்கள். எங்கள் தமிழகத்தில் நேருவின் பெயரால், காந்தியின் பெயரால், வட நாட்டுத் தலைவர்கள் பெயரால் பல இடங்கள் இருக்கின்றன. தலை நகர் டெல்லியில் எங்களுக்கு, தந்தை பெரியாருக்கு உள்ள ஒரே ஒரு இடம் பெரியார் மய்யம். அதுவும் எங்கள் சொந்த நிலத்தில், இடத்தில் உள்ள இடம். -அதை இடிப்பது சரியா?" எனக்கேள்வி கேட்டார். அது மட்டுமல்ல "நாங்கள்  தனி நாடு கேட்ட இயக்கம் மீண்டும் எங்களை தனி நாடு கேட்க வைத்து விடா தீர்கள்" என்று எச்சரித்தார். இரண்டு இடத்தில் டில்லியில் பெரியார் மய்யம்
அதன் விளைவாக இன்றைக்கு இரண்டு இடத்தில் டில்லியில் பெரியார் மய்யம் உள்ளது.

அன்றைக்கு நாம் கட்டிய கட்டடத்திற்கு ஆபத்து வந்தது. சரி செய்தோம். ஆனால் நமது  உழைப்பை, உதிரத்தை சிந்தி வளர்த்த நமது கொள்கைகளுக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அண்ணல்  அம்பேத்கருக்கு விழா நாங்கள் எடுக்கிறோம் என்று பி.ஜே.பி.யும் ஆர்.எஸ்.எஸ்.சும் சொல்கிறார்கள். இன்றைக்கு பெரியார் என்பவர் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழு வதும் வழிகாட்டும் தலைவராக, கொண்டாடப்படும் தலைவராக உள்ளார். அவரை இணையதளத்திலே கொச்சைப்படுத்துகிறார்கள். பெரியார்  எதிர்ப்புக்களை சந்திக்காத தலைவர் இல்லை. ஆனால் இன்றைக்கு அவரை கொச்சைப்படுத்துகிறார்கள். தாலி அகற்றும் விழா இன்றுதான் நடத்துகி றோமோ 100 ஆண்டுகள் கண்ட திராவிட இயக்கம். நமது இயக்கம் தோன்றிய காலம் தொட்டு நடக்கக் கூடிய நிகழ்வு தாலி அகற்றும் நிகழ்வு. நமது  இடத் தில் நமது பெரியார் திடலில்,நமது தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் நடத்திய நிகழ்வுக்கு எதிர்ப்பு என்று அரசு இயந்திரங்களின் துணையோடு வரு கின்றார்கள். எதிரிகள் துணிச்சலோடு வருகின்றார்கள். நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய நேரம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.

கோபிசெட்டிப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீர்மானம் போட்டு, நாதுராம் கோட்சேக்கு சிலை வைக்கப்போகிறோம், நகர் மன்றம் அனுமதி கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். காந்தியைச்சுட்டுக்கொன்ற கோட்ஸே சாம்பல் இன்னும் கரைக்கப்படவில்லை. பாதுகாத்து வைத்திருக் கின்றார்கள். அகண்ட பாரதம் கண்டபின்புதான்  சாம்பலை கரைப்போம்  என கோட்ஸே தூக்கிலிடப் பட்ட நாளில்  'சங்கல்பம்' ஏற்போம், உறுதி ஏற்போம் என நிகழ்ச்சி நடத்துகின்றார்கள். காந்தியை சுட்டுக் கொன்றது சரிதான் என்று நியாயப்படுத்துகிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில் எந்த வழியிலாவது இந்துத்துவாவை புகுத்த துடிக்கின்றார்கள்.  அவர் களுக்கு மாற்றாக களத்தில், கருத்தில் சந்திக்கக்கூடிய இயக்கமாக திராவிடர் கழகம் இருக்கின்றது. அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் திராவிடர் கழகத்தோடு நெருக்கமாக இருக்கின்றார்கள். தமிழ்ப்புலிகள்  மாநாட்டைப் பற்றி, அதில் ஆசிரியரின் உரை ஒலிபரப்பியதைப் பற்றி, சு. அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றியதைப் பற்றி நேரு குறிப்பிட்டார். இன்னும் கேட்டால் திராவிடர் கழகம் நடத்தும் வட்டார மாநாடுகளில் தி.மு,க, ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள், பொதுவுடமைக் கட்சிகள் என அனைத்து இயக்கங்களும் பி.ஜே.பி. அ.தி.மு.க. தவிர அனைத்து  பார்ப்பனரல்லாத அமைப்புக்களும் பங்கேற்கிறார்கள். தமிழர் தலைவர் ஒருங்கிணைக் கின்றார்.

நாம் கேள்வி கேட்போம், கேள்வி கேட்க வைப் போம் பழைய திராவிட இயக்கக் காட்சியை எல்லாம் எடுத்துச்சொன்னால் மற்றவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். அதற்கான ஆவணத்தை அய்யா ஆசிரியர் அவர்கள் 'அய்யாவின் அடிச்சுவட்டில்' எனும்  அருமையான புத்தகமாக கொடுத்துள்ளார்கள். அதனைப் பரப்புவோம். படிப்போம். பணி இருக்கிறது நிறைய. அதற்கான பெரியார் அணியை, தமிழ் இன ஒற்றுமை அணியை  வளர்த்தெடுப்போம் என்று சொல்லி முடிக்கின்றேன்" என்று சிறப்பாக உரையாற்றினார்.

கலந்துகொண்டோர்

முடிவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைசெயலாளர் பா.சடகோபன் நன்றி கூறினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, ந.முருகேசன், கனி, எல்.அய்.சி.செல்லக் கிருட்டிணன், ஆட்டோ செல்வம், ம.தி.மு.க. தொழிற் சங்கத் தலைவர் மகபூப்ஜான், அழகுபாண்டி, வழக்கறிஞர் ந.கணேசன், போட்டோ இராதா, மோதிலால், புதூர் பாக்கியம், எரிமலை, பேக்கரி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : விடுதலை - 28.05.2015Saturday, 23 May 2015

நிகழ்வும் நினைப்பும் (37) : எனது தாயாரின் இரண்டாம் நினைவு நாள்

நிகழ்வும் நினைப்பும் (37) : எனது தாயாரின் இரண்டாம் நினைவு நாள்

                               எனது தாயார் திருமதி சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்களின் இரண்டாவது நினைவு நாள் இன்று (23.05.2015). காலம் வெகுவேகமாக ஓடுகிறது. இழப்புக்களை காலம்தான் மறக்கச்செய்யும் என்பார்கள் ஆனால் என்னைப்பொறுத்த அளவில் அவ்வளவு எளிதாக மறக்க இயலாமைதான் உள்ளது.
                              தனது வாழ்க்கை முழுவதும் ஒரு எதிர் நீச்சல் வாழ்க்கையாக வாழ்ந்தவர் எனது தாயார். 8-ம் வகுப்பு படிக்கும்போது , தனது தாய் மாமனான , தன்னை விட 12 வயது மூத்த  எனது அப்பாவிற்கு உறவுகளால் கட்டிவைக்கப்பட்டவர். திருமணத்திற்குப்பின் முதல் மகனைப்பெற்ற பின்பு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியையாகப் பணியாற்றியவர். வரிசையாக 5 குழ்ந்தைகள் நாங்கள் பிறந்த நிலையில் , எனது அப்பா இறந்தபொழுது எனது அம்மாவிற்கு வய்து 30தான்.

                               தைரியம் என்றால் அப்படி ஒரு தைரியம். சண்டை என்றால் சண்டை , சமாதானம் என்றால் சமாதானம் என்று உறவுகளோடு வாழ்ந்தவர். பயப்படாதவர். தோசை சுட்டுக்கொண்டிருக்கும்பொழுதே தோசைக்கரண்டியால் பக்கத்தில் வந்த் பாம்பை வெட்டிப்போடுவார். தன்னுடைய கருத்தை சொல்வதற்கு எப்போதும் பயந்தவரல்ல. ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தில் , மன்றம் என்ற தி.மு.க். தொழிற்சங்கத்தில் பொறுப்புகள் வகித்தவர். ஜாக்டி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்து வந்தவர். நன்றாக சொல்லித்தருவார். படிக்கவில்லையென்றால் நன்றாக வகுப்பில் அடிக்கவும் செய்வார். நானும் அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன்.

                           நான் 6-ம் வகுப்போ , ஏழாம் வகுப்போ படிக்கும்போது , ஒரு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு உறவினர் வீட்டிற்கு , மிகவும் அவர்கள் வருந்தி அழைத்த நிலையில் சென்று வந்த எனது தாயார் அவர்கள் திடீரென்று வீட்டிற்குள் வந்து குமுறிக் குமுறி அழுதார். நான் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் அம்மா ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது, விதவை என்பதற்காக அந்த விசேட வீட்டில் அவமானப்படுத்தப்பட்ட கதையைச்சொன்னார் .நடந்ததை சொல்லிக்கொண்டேகுமுறிக் குமுறி அழுதார்கள்.அதற்கு பின் அப்படி அவர்கள் அழுததை நான் வாழ்க்கையில் பார்க்கவில்லை,  நான் மிகவும் கண்கலங்கிய நேரம் அது. நான் 3-ம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். எனக்கு விவரம் தெரிந்த் நிலையில் எனது  தாயார் அவர்கள் அழுத் அழுகைதான், இந்த சமூகப்பழக்கங்களின் மீது முதன்முதலாக எனக்கு வெறுப்பு தோன்றிய இடம். திருவாரூரில் ஒரு கருத்தரங்கத்தில் நானும் தி.மு.க. முன்னணி பேச்சாள்ர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி சிவா எம்.பி. அவர்களும் கலந்து கொண்டபோது   , தனது தாயாருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அவர் மேடையில் பகிர்ந்து கொண்டார்.பின்பு அவரோடு பேசிக்கொண்டிருந்தபொழுது எனக்கும் சின்னவயதில் எனது தாயாருக்கு ஏற்பட்ட அவமதிப்புதான் திராவிட இயக்கத்தின் மீதான் ஈர்ப்புக்கு தொடக்கம் என்று சொன்னேன்.

                        கடவுளை நம்பாதவராக , கடவுள் நம்பிக்கை இல்லாதவராக எனது தாயார் இருந்தார். சிறுவய்தில் ஏன் இப்படி என்று கேட்டால், 'டேய் , உங்க அப்பா கும்பிடாத கடவுளா, அவருக்கு பட்டப்பெயரே ஊரில் ஆண்டவர்தான் , அவர மாதிரி நல்ல மனுசன் ஊரில் எவண்டா , அப்படி ஒரு அற்ப வயசில் ஏன் செத்தார் , கடவுள் என்றெல்லாம் ஒருவனும் இல்லடா ' என்பார். நான் பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பாளராக ஆன பின்பு வீட்டிற்கு வரும் 'விடுதலை ' பத்திரிக்கையை வரிவிடாமல் படிப்பார். பக்கத்திற்கு பக்கம் இவ்வளவு ஆழமாக இருக்கும் இந்தப்பத்திரிக்கையை வாங்கி நம்ம ஜனங்கள் படிக்க மாட்டேங்கறாங்களே ' என்பார். கோவிலுக்கு வரி, நன்கொடை என்று எவர் வந்தாலும் மறுத்து விடுவார். தரமாட்டார். எவரும் வீட்டிற்கு கேட்டும் வரமாட்டார்கள். சாமி ஆடும் தெருப்பெண்களிடம்-உறவினர்களிடம்தான் வாக்குவாதம் செய்வார். "இவ்வளவு ஆட்டம் ஆடுறியே , அப்படியே ஆடிக்கிட்டே போய் கரண்ட் கம்பியை பிடி பார்ப்போம் " என்பார். சாமி வந்த பெண்கள் அம்மாவைப் பார்த்தால் அடங்கிபோவதை நானே பார்த்திருக்கிறேன்.

                    படிப்பதில் அப்படி ஒரு ஆர்வம் உண்டு அவருக்கு. காலையில் 4 மணிக்கு எழுந்து , மாடுகளுக்கு த்ண்ணீர் வைத்து, பால்காரர்கள் வந்தவுடன் பாலைக்கறந்து பண்ணைக்கு ஊத்திவிட்டு ,பின்பு வீட்டு வேலைகள்,எங்களை பள்ளிக்கு அனுப்புவது, சமையல் செய்வது ,பள்ளிக்கு சென்று பாடம் நடத்துவது பின்பு மாலையில் காட்டிற்கு சென்று புல் அறுத்து வந்து மாட்டுக்கு போடுவது, இரவு சாப்பாடு செய்வது என்று உழைக்கும் உயிராய் எங்களை ஆளாக்குவதற்காக அத்தனை பாடுபட்ட நிலையிலும் கிடைக்கும் சின்னச்சின்ன நேரங்களில் புத்தகங்களைப் படிப்பார். அதிலும் ஜெயகாந்தன் நூல்களை மிக விரும்பிப்படிப்பார். அவருக்காக நூலகம் செல்பவனாக, புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பவனாக
நான்தான் இருப்பேன். எடுத்து வந்து கொடுத்த புத்தகங்களை படித்துவிட்டு விமர்சனம் செய்வார். எனக்கு நன்றாக இருக்கிறது. மாக்சிம் கார்க்கியின் ' தாய் ' நாவலை தொடர்ச்சியாக படித்தார்.படித்துவிட்டு, புத்தகம் நன்றாக இருக்கிறது தம்பி, நம்ம நாட்டுக்கெல்லாம் இது ஒத்து வருமா என்று தெரியவில்லை என்றார். இதைப்போல பல புத்தகங்களின் விமர்சனங்களை அவரிடம் கேட்டிருக்கிறேன். இன்னும் நிறைய நினைவுகள் நீள்கின்றது ..... எனது அம்மாவின் நினைவு நாள் செய்தியை புகைப்படத்தோடு
வெளியிட்ட 'விடுதலை' நாளிதழுக்கு நன்றி. செய்தி கீழே.....
                           

மதுரை மாவட்டம்,பேரையூர் வட்டம்,சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்களின் மனைவியும்,பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.வா.நேரு அவர்களின் தாயாருமாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை(23.05.2015) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம்,சொ.நே.அன்புமணி,சொ.நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது. 
நன்றி : விடுதலை 23.05.2015
       

Wednesday, 6 May 2015

அண்மையில் படித்த புத்தகம் : உயரப்பறக்கும் காகங்கள்(சிறுகதைத் தொகுப்பு)--ஆசி.கந்தராஜா


 அண்மையில் படித்த புத்தகம் : உயரப்பறக்கும் காகங்கள்(சிறுகதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர்                           : ஆசி.கந்தராஜா
பதிப்ப்கம்                                   : மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷ்ன்ஸ் ,சென்னை-24.
முதற்பதிப்பு                              :  டிசம்பர் 2003, மொத்த பக்கங்கள் 144, விலை ரூ 45
மதுரை மைய நூலக எண்       : 156214

                                 தமிழ் ஈழ்த்தைச்சார்ந்த எழுத்தாளர், புலம்  பெயர்ந்து வாழும் நிலையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே  இந்த 'உயரப்பறக்கும் காகங்கள்' . தமிழகத்தைச்சார்ந்த நாம் வாசிக்கும்போது சில சொற்களின் உச்சரிப்புக்கள் புதிதாக இருப்பது போலவே, கதைகளின் களங்கள் சொல்லும் முறை அனைத்துமே இந்தக் கதைகளில் புதிதாக இருக்கின்றது. " இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் யாவும் கோள மயம் தழுவியவை. சுந்தரராஜா என்ற பேராசிரியர் அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகமொன்றில் பணிபுரிவதும் அதனால் உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றமையும் ஆசி.கந்தராஜா என்ற படைப்பாளியைத் தமிழுக்குத் தந்துள்ளது. அவரது சிறுகதைகளுக்கான ஊக்குகை அல்லது இன்ஸ்பிரேசன் தான் பயணித்த நாடுகளில் தரிசித்த ஒழுக்க நெறி சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் அவை மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேசத்தையும் தம் பேசும் பொருளாகக் கொண்டுள்ளன. அதனால் அச்சிறுகதைகள் உள்ளடக்கத்தில் தமிழ் வாசகன் அறியாத கருத்துக்களையும் புதிய அனுபங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. சர்வதேச மானிடத்தினைப் பேசும் ஊடகமாகத் தமிழ்மொழியைப் பரிணமிக்க வைத்துள்ளன. " என்று முன்னுரையில் கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் சொல்வது மிகச்சரியானது என்பதனை இந்தத் தொகுப்பு கதைகளை வாசித்து முடித்தவுடன் தோன்றுகிறது.

                               உலகம் முழுவதும் இந்தக் கதைகளின் களமாக இருக்கிறது.ஆப்பிரிக்காவில் நிகழ்வும் நிகழ்வாக ' துர்காதாண்டவம், வெள்ளிக்கிழமை விரதம், பாலன் பிறக்கிறான் ' என்னும் சிறுகதைகள் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை விரதம் ஒரு மாறுபட்ட வாழ்க்கை முறை, ஆப்பிரிக்காவில் நிகழ்வதைச்சுட்டிக்காட்டுகிறது. வரதட்சணை கொடுத்து பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் நாட்டில் வாழும் நாம், வரதட்சணை பெற்றுக்கொண்டு பெண் வீட்டார் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கம் பற்றியும் அது காதலுக்கும், காதலர்களுக்கும் தடையாக இருப்பது பற்றியும் , தனது தந்தைக்கு தன் காதலன் கொடுக்க வேண்டிய பணத்திற்காக காதலியே  தடம் மாறிப்போவதாகவும் ஆனால் காதலனிடம் உண்மையான காதலோடு இருப்பதாகவும் 'வெள்ளிக்கிழமை விரதம் ' கதை குறிப்பிடுகின்றது. அதைப்போல 'துர்க்காதாண்டவம்' ஆணின் ஆதிக்கத்தையும் பணம் வைத்திருப்பவன் செய்யும் அடாவடிகளையும், 'பாலன் பிறக்கிறான் கதை' ஆப்பிரிக்கச்சமூகத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஆகாது என்னும் மூட நம்பிக்கை பற்றியும் பேசுகிறது. நான் இதுவரை கேள்விப்படாத கருக்களைக் கொண்ட கதைகள் இவை. 

                            ஜப்பான் நாட்டின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக ' தேன் சுவைக்காத தேனீக்கள் " கதை உள்ளது. இறப்பை இறப்பாகக் கூட நினைக்க மறுக்கும் ஒரு அடக்குமுறையும் வாழ்க்கைமுறையும் ஜப்பானில் இருப்பதை இக்கதை சுட்டுகிறது.
 'அந்நியமாதல் ' கதையில் வரும் வங்காளதேசத்து தங்கும் விடுதியின் பணியாள் யூசுப் கதையை வாசித்து முடித்த பின்பும் மனதில் நிற்கின்றார். 
                   
                          ஆஸ்திரேலியாவில் நிகழும் கதைகளாக 'ஒட்டுக்கன்றுகளின் காலம்' , 'முன்னிரவு மயக்கங்கள்', 'உயரப்பறக்கும் காகங்கள்', 'கோபுர தரிசனம் '  என்ற 4 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாமே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் அகம், மற்றும் புறம் சார்ந்த கதைகள். உறவுகளால் ஏமாற்றப்பட்ட பார்வதி அம்மாள் , கோபுர தரிசனத்தை மட்டும் நம்பியே வாழும் அவரின் வாழ்க்கை, சங்கீதா மற்றும் அபி என்னும் இரண்டு மகள்கள், அவர்களின் பெற்றோர்களின் மனப்போக்குகள் பற்றிப் பேசி 'தன் ஜாதி, தன் இனம் ' என்று மட்டும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியாது என்று சொல்லும் ஒட்டுக்கன்றுகளின் காலம் தமிழகத்தில் வாழ்பவர்களும் உணரவேண்டிய கதை. விருந்தும் வேடிக்கையும் ஆடம்பரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதைப் பேசும் முன்னிரவு மயக்கங்கள் , இந்தத் தொகுப்பின் தலைப்பாக உள்ள ' உயரப்பறக்கும் காகங்கள் ' என்னதான் நீ வெள்ளைக்காரிகளோடு பேசினாலும் , மணமுடித்தாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது, அது நமது  இனத்துப் பெண் என்றால்தான் நிம்மதி இருக்கும் என்று சொல்கின்றது. உயர உயரப் பறந்தாலும் காக்கா காக்காதான் என்று சொல்கின்றாரோ எனத் தோன்றுகிறது. ஈழத்து மண்ணை அடிப்படையாகக் கொண்ட 'தவக்கோலங்கள் '   2003-ல் நிகழ்கின்ற சில அவலங்களையும் முன்னர் இருந்த இனிமையான நினைவுகளையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள கதை.

                           இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் பல்வேறு நாட்டு நடப்புக்களை, உணர்வுகளை அறிந்துகொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. சிறுகதை என்பது அழுத்தமான, கனமான கருத்துக்களை நிகழ்வுகளின் மூலம் நமக்கு படம் பிடித்துக்காட்டுவது . அதனை இந்தத் தொகுப்பின் ஆசிரியர் ஆசி.கந்தராஜா மிக நேர்த்தியாகவும் , உள நேர்மையோடும் செய்திருக்கின்றார் எனத்தோன்றுகிறது. ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பை வாசிப்பதற்கான புத்தகத்தை அளித்த மதுரை மைய நூலகத்திற்கு நன்றி.
    

 

Saturday, 2 May 2015

அண்மையில் படித்த புத்தகம் : நதியின் கரையில்.....பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் :  நதியின் கரையில் - கட்டுரைகள்
நூல் ஆசிரியர்                           :  பாவண்ணன்
பதிப்பகம்                                   :  ஏர் இந்தியன் பதிப்பகம் ,சென்னை -600 017               தொலைபேசி : 044-24329283
முதல் பதிப்பு                             :   நவம்பர் 2007, மொத்த பக்கங்கள் 144 விலை ரூ 70
மதுரை மைய நூலக எண்       : 177317
பாவண்ணனின் மொழி எப்போதுமே ஒரு தோழமை மொழி.கண்டதை, கேட்டதை, வியப்புடன்  பகிர்ந்து கொள்ளும் மன நிலையில் இருக்கும் ஒரு குழந்தையின் மொழியாகவும், எல்லாம் துய்த்து , அனுவங்களால் பக்குவப்பட்ட வயதானவர் சொல்லும் மொழியாகவும் இணைந்து இருப்பது பாவண்ணனின் மொழி.நதியின் கரையில் நின்று , ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தை பார்க்கும்போதும் வெறுமனே வரண்டு கிடக்கும் நதியைப் பார்க்கும்போதும் ஏற்படும் மனநிலை போல  எந்த விதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல், கவித்துவ மொழி நடையில் கண்டதையும் , கேட்டதையும் இணைத்து ஒரு நூலாக ஆக்கியிருக்கின்றார்.

நான் மாணவர்களை ஐ.ஏ.எஸ். ஆக்கப்போகின்றேன், ஐ.பி.எஸ். ஆக்கப்போகின்றேன் என்று சொல்லும் ஆசிரியர்களுக்கு மத்தியில் , என்னிடம் படிக்கும் மாணவன் எழுதப்படிக்க கற்றுக்கொண்டால்போதும் , அவன் வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்கோ, படிப்பதற்கோ இன்னொருவரை எதிர்பார்க்காத அளவிற்கு கற்றுக்கொண்டால்போதும் என்று பாடம் நடத்தும் கோபால் ஆசிரியர்  மனதில் நிற்கின்றார். உயர் படிப்பிற்கு இவர்களில் பெரும்பாலோர் போவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. பெரும்பாலும் 5-ம் வகுப்புத்தான் அவர்களின் உயர் கல்வி. அந்த 5-ஆம் வகுப்பிற்குள் மாணவ-மாணவிகள் எழுதப்படிக்கவேண்டும் என்னும் உணர்வு ஏற்படக்காரணமாக அமைந்த தபால் அலுவலகத்தில் 10-வயதுப்பையன் தனது தாய்க்கு செய்தி எழுதுவதற்காக அலைந்த அலைச்சலும், அந்த நிகழ்வு அந்த ஆசிரியரின் மனதில் பதிந்த பதிவும் , அதனைக் குறிப்பிடும் கட்டுரையான 'கோபால் மேஷ்ட்ரூ ' ம் அருமை.
எனது தாயார் , தனது தாத்தாவான  சாப்டூர் திரு.சிட்டுக்குருவி வெள்ளையப்பன் அவர்கள் சொன்னதாக அடிக்கடி சொல்லுவார். " சமத்தனுக்கும் பணம் வேண்டாம், அபத்தனுக்கும் பணம் வேண்டாம். நாம் சம்பாரிச்சு வைக்காவிடினும் ,சமத்தன் சம்பாரித்துக்கொள்வான். நாம் சம்பாரித்து வைத்தாலும் அபத்தன் அளித்துவிடுவான். ஆனால் எழுதப்படிக்க மட்டும் பிள்ளைகளை வச்சுப்புடனும் " என்று சொல்லிவிட்டு, ஒரு நாளைக்கு 50 மைல் , 60 மைல் தூரம் நடந்ததையும் , கொண்டு போகும் கடித முகவரியை படிக்கத்தெரியாமல் திணறியதையும், படித்தவர் எவர் எவர் எனப்பார்த்து அவர்களிடம் கடிதத்தைக் காட்டி படிக்கச்சொல்லி முகவரி கேட்டு தபாலைச்சேர்த்த கதைகளைச் சொல்லுவார் என்று சொல்வார்கள். கிராமத்தில் பெரிய ஆபிசராக ஆவதற்கு என்று படிக்கவைப்பதில்லை. நாலு எழுத்து, எழுதப்படிக்கத் தெரியணும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். இன்றைக்கும் கூட எழுத்தறிவு இத்தனை சதவீதம் என்று சொல்கின்றோம் அதில் ,கூட்டி கூட்டி எழுதி  கையெழுத்துப்போடுபவர்களையும் இணைத்துத்தான்.படிக்கும் ஒவ்வொருவனுக்கும் ஒரு நோக்கம் இருப்பது போல கோபால் ஆசிரியருக்கு இருக்கும் நோக்கம் உன்னதமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

முன்னுரையில் எனி இந்தியன் பதிப்பகம் 'கோபால் ராஜாராம் ' அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல் ' தன் வாழ்வில் கட்டுப்பாடுகளை மீறியும் கூட தன்னைச்சுற்றியுள்ளவர்களை குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் சுப்பக்கா, மனநிலை
சரியில்லாது இருந்தாலும் தன் மீது வக்கிரபுத்திரக்காரன் நடத்தும் வன்முறைக்கு மூர்க்கமாய் எதிர்வினை செய்யும் பெண், ஒரு தனிமனிதனாய் தன் கிராமத்தில் கால்வாய் வெட்டி கிராமத்தின் தலைவிதியை மாற்றிய காம்ப்ளி, கலவரப்பூமியில் கருணையை வெளிப்படுத்தும் முதியவர்கள் என்று மானிடம் இங்கே உயிர் கொண்டு வாழ்கிறது ' என்று குறிப்பிடுவதுபோல மெல்லிய விவரிப்போடு விரியும் நிகழ்வுகளின் தாக்கம் படித்து முடித்த பின்பும் இருப்பதே இந்த நூலின் வெற்றி.


'மலை மீது கட்டிய வீடு' என்னும் கட்டுரையில் வரும்
' மலைமேலே ஒரு வீட்டைக்கட்டிய பின்னர் / விலங்குகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா?
 கடற்கரையிலேயே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் /அலை நுரைகளுக்கு அஞ்சினால் எப்படி ஐயா ? 
 சந்தை நடுவே ஒரு வீட்டைக் கட்டிய பின்னர் / இரைச்சலுக்கு நாணினால் எப்படி ஐயா ? ....." என்னும் பாடலும்
' முதுமையின் கோரிக்கை' என்னும் கட்டுரையில் வரும் நிக்கி ஜியோவன்னி என்னும் அமெரிக்கக் கறுப்பின் பெண் கவிஞர் எழுதிய கவிதையான
' சாயமிழந்த ஒரு துண்டுத்துணி போல / தோற்றுப்போனவன் நான்/
  உணவுப்பொருட்களாலும் சிரிப்புகளாலும் நிறைந்த / உணவு மேசையில் இனி ஒரு போதும் / எனக்கு இடமில்லை/....' என்பதும்  தொடர்ந்து பாவண்ணன்  மொழிபெயர்த்த முதுமையின் கோரிக்கைகளும் ஆழமாக மனதில் ஊடுருவிகின்றன. துயரத்தில் மூழ்குவது பாவண்ணன் மட்டுமல்ல , வாசிக்கும் நாமும்தான்.


தான் கர்நாடகத்தில் சந்திந்த மரங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். 'நான்கு மரங்கள் ' என்னும் கட்டுரை மரங்கள் பாவணனின் மனதில் இடம் பிடித்த விவரங்களை விவரிக்கும் விதமே தனி அனுபவமாக இருக்கிறது. ' ஒரு துளியைச்சேமிப்பது எப்படி ' என்னும் கேள்வியோடு தொடங்கும் கட்டுரை தத்துவ இயல் போலச்சென்று புத்தரில் முடிகின்றது. ' கசப்பில் கரைந்த இளைஞன் ' சாப்ட்வேரில் பணிபுரியும் இளைஞர்களின் உள்ளத்தைப்புரிந்து கொள்ளத்தூண்டும் கட்டுரையாக இருக்கின்றது.

 ஒரு சிறுமி கொடுத்த ஏழு அதிசயங்கள் என பாவண்ணன் கொடுத்திருக்கும் பட்டியல்
' 1. எதையும் அற்பமாகக் கருதாமல் அக்கம்பக்கக் காட்சிகளை ஆழ்ந்து பார்ப்பது முதல் அதிசயம்.
  2. எங்கெங்கும் நிறைந்திருக்கும் இயற்கையின் இசைக்குச்செவி கொடுப்பது இரண்டாவது அதிசயம்
  3. எவ்வித வேறுபாட்டுணர்வுமில்லாமல் தொட்டுப்பேசுவது மூன்றாவது அதிசயம்
  4. கண்ணால் காண்பதையும் வாழ்வில் நடப்பதையும் ஈடுபாட்டோடு சுவைப்பது நான்காவது அதிசயம் 
  5 . திறந்த மனத்துடன் அனுபவங்களை எதிர்கொண்டு ஒவ்வொன்றையும் உணர்ந்தறிதல் ஐந்தாவது அதிசயம் 
  6. மனத்தில் கள்ளமற்று புன்னகைத்தல் ஆறாவது அதிசயம்
  7. எல்லா உயிர்களிடத்தும் அன்போடிருத்தல் ஏழாவது அதிசயம் '
நம்மையும் அதிசயப்படவைக்கின்றது.

 ' தெரிஞ்ச ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒரு விஷயத்தை நோக்கி சட்டென்று தாவிப்போவ முடிவதுதானே படைப்பு ' என்று ஒரு நண்பர் சொன்னதாகச்சொல்லும் பாவண்ணன் இந்த தொகுப்பில் அதனை முயன்று வெற்றியும் பெற்ற தொகுப்பாக இந்த ' நதியின் கரையில் ' என்னும் கட்டுரைத் தொகுப்பு இருக்கிறது. நல்ல முயற்சி. படிக்கும் எவர் மனதையும் தொடும் படைப்பாக வாழ்வின் நிகழ்வுகளால் பாவண்ணன் படைத்திருக்கும் இந்த படைப்பினை சென்ற மாத வாசிப்போர் களம் கூட்டத்தில் நண்பர் திரு. ஆண்டியப்பன் (JAO ) அவர்கள் அறிமுகப்படுத்தி நூல் அறிமுகம் செய்தார். BSNL நிறுவனத்தில் வேலைபார்க்கும் திரு. பாவண்ணன் , சாகித்ய அகாதெமி பரிசு சிறந்த மொழி பெயர்ப்புக்காகப்பெற்றிருக்கிறார் எனத் தொடங்கி பல்வேறு தகவல்களை பாவண்ணனைப் பற்றிக்கூறினார். படித்தால் எவரும் பாராட்டும்  படைப்பு இந்த ' நதியின் கரையில் '. நீங்களும் படித்துப்பாருங்கள்.