Tuesday, 25 October 2011

உதைக்கும் கழுதையின்

பூமாதேவி
ஒரு கடவுள்
பன்றி
ஒரு கடவுள்
பன்றியும்
பூமாதேவியும்
போகம் செய்ததால்
நரகாசுரன் பிறந்தானாம்

கதை சொன்னேன்
இந்தக் கதை
எல்லாம் யார்
நம்புகிறார் என்றான்

எந்தக் கதையை
வைத்து சேது
சமுத்தரத் திட்டம்
தடுக்கப்பட்டது
நிறுத்தப்பட்டது என்றேன்

ஆமாம்ல என்றான்
தீபாவளி என்றால்
தீப ஒளித் திருநாள்
அல்லவோ என்றான்

இல்லை இல்லை
இது ஆரியப் பகட்டு
உடன்பிறப்பே உனக்கே
இது புரியவில்லையே என்றேன்

உதைக்கும் கழுதையின்
காலுக்கு உதை வாங்கியோன்
தங்கத்தால் இலாடம் கட்டுவதும்
ஆட்டை அழைத்து
ஓநாய்க்கு விருந்தளி
எனக் கூறுவதும்
கொட்டும் தேளை
எடுத்து கண்ணில்
ஒத்திக் கொளவதும்
தமிழன் தீபாவளி
கொண்டாடுவதும் ஒன்று
என்றார் அண்ணா!

அறிவாயோ !
உடன்பிறப்பே அறிவாயோ!
அண்ணாவின் படத்தோடு
கட்சி நடத்துவோர்
தீபாவளி வாழ்த்துக்
கூறுகின்றார்
அது ஆரியம்
நுழைந்ததால்
விழுந்த ஓட்டை

உனக்கோ பழைய
வரலாறை நூலை
அறியாததால்
வந்த ஓட்டை என்றேன்


தனக்கு ஏற்பட்ட
இழிவைக் கொண்டாடும்
இனமாய் தமிழனை
தர்ப்பைப்புல்காரன்
ஆக்கி வைத்தான்
தடுமாறலாமா ?
உடன்பிறப்பே தடுமாறலாமா?
தடம் மாறலாமா ?
உடன்பிறப்பே தடம் மாறலாமா?

Monday, 17 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக்கவிஞரும் (4)

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நண்பர் சுப.முருகானந்தம் அவர்கள் புரட்சிக்கவிஞரும் சாதி ஒழிப்பும் பதிவுகளைப் படித்துவிட்டு, ஊக்கமூட்டக் கூடிய சில வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கூறியுள்ளார். நன்றிகள் பல அவருக்கு. அவர் கண்ணதாசன் எழுதிய ‘சவாலே சமாளி’ பட்த்தில் வரும் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய முதல்வர் திரு.ஜெ.ஜெயல்லிதா அவர்கள்
கதாநாயகியாக நடித்த படம் , ஆணவத்தின் உச்சியில் கணவரை எதிர்த்துப் பேசித் தொடாதே எனச் சொல்லும்போது திரு சிவாஜி கணேசன் அவர்கள் பாடுவதாக அமைந்த பாடல்.
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது

....
தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்தா
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை - நீ
அந்த கூட்டமே இதில் அதிசயமில்லை

என்னும் வரிகள் அப்படித்தான் அவர்கள் அன்றுமுதல் இன்றுவரை இருக்கின்றார்கள் என்பதனைக்கண்ணதாசன் சுட்டிக் காட்டும் வரிகள்..

ஆலயம் செய்தோம், அங்கே அனுமதியில்லை. சரி ...,அனுமதியில்லாத ஆலயத்தைக் கட்டுவதிலே ஏன் தமிழன் குறியாக இருக்கின்றான்,இன்றைக்கும் கூட நகரின் புற நகர்ப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள் எழும்புவதற்குமுன்பே கோயில்கள் கட்டப்படுகின்றதே எப்படி? கட்டிய பின்பு மணி அடிக்க பார்ப்பான் வந்து மிக எளிதாக அமர்ந்து கொள்கிறானே .. ? தன் வீட்டில் படித்து விட்டு வேலை இல்லாமல் பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பார்ப்பனருக்கு பூசாரி வேலை கொடுப்பதற்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழனே முன்னனியில் இருக்கின்றானே ஏன் ? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் உயர் நீதி மன்றம் ,உச்ச நீதி மன்றம் என்று சென்று பார்ப்பனர்கள் தடுக்கின்றார்களே ! பக்தி தமிழனுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை, பார்ப்பனர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யவேண்டும் எனும் உணர்வு ஏன் வரவில்லை? வராது ! உணர்வு வராது ! கோயிலின் பெயரால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மூளையில் போடப்பட்டுள்ள நுண்ணிய விலங்குகள் சாதாரணமாக கண்களுக்குத் தெரியாது.ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது பளிச்சென்று தெரியும்.

கோயில் கட்டுவது மிகப்பெரிய புண்ணியச் செயல் , நீ என்னதான் பாவம் செய்திருந்தாலும், எவ்வளவு பெரிய கொடுமை செய்திருந்தாலும் கோயில் கட்டினால், குடமுழுக்குச் செய்தால், கோவில் பணிகளுக்கு கொட்டிக் கொடுத்தால் உனக்குச் சொர்க்கம் உண்டு என்று தமிழர்களின் மூளையிலே பார்ப்பனர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். இந்த விலங்கை உடைக்க பகுத்தறிவுச் சம்மட்டி தேவை. தமிழர்கள் கோயில்களில் அர்ச்சகராக வருவதை நீங்கள்(பார்ப்பனர்கள் ) திட்டமிட்டு தடுக்கின்றீர்கள், எனவே பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோயில்களுக்கு வரமாட்டோம், அந்தக் கோயில் உண்டியலுக்கு காசு போடமாட்டோம், அங்கு நடக்கும் சிறப்பு பூசை போன்றவைகளுக்கு பணம் தரமாட்டோம் என்று தமிழர்கள் கூறுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது பார்ப்பனர்கள் வழிக்கு வருவார்களா? இல்லையா? ஏன் சொல்ல மறுக்கிறார்கள் ? ஏன் சொல்ல வேண்டும் என்ற உணர்ச்சி வரவில்லை ?...

பிற்படுத்தப்பட்டவரை கோவில் கருவறைக்குள் வராதே என்று சொல்கின்றான் பார்ப்பான் . தாழ்த்தப்பட்டவரை கோவிலுக்குள்ளே வராதே என்று பிற்படுத்தப்பட்டவரின் மூலமாகச் சொல்லவைக்கின்றான் பார்ப்பான். இருவரும்(தாழ்த்தப்பட்டவரும் பிற்படுத்தப்பட்டவரும்) இணைந்து கருவறைக்குள்ளிருந்தும், கோயிலுக்குள் இருந்தும் ஏன் பார்ப்பனரை வெளியேற்ற இயலவில்லை?

புரட்சிக் கவிஞர் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதைக் குறித்து
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்தில்லையோ ? எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்தில்லையோ .....
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டில்லையோ – நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ ?...
“தாழ்ந்தவர் “என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்த்துவோ ? எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ ?......

மேற்கண்ட புரட்சிக்கவிஞரின் கவிதையில்
“கருவறைக்குள் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் ....”என்றும்
‘தாழ்ந்தவர்’ என்னும் இட்த்தில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் என்னுமிரு .......என்று மாற்றிப் போட்டால் இருவருக்குமே சரியாக வரும் பாட்டுத்தானே 1 தன்னையும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்காதவன் பார்ப்பானே என உணர்ந்து தாழ்த்தப்பட்டோரோடு இணைந்து பிற்படுத்தப்பட்டவன் பார்ப்பனருக்கு எதிராகப் போராடுவதுதானே இயல்பாக இருக்க முடியும். இவன் ஏன் பார்ப்பனரோடு இணைந்து தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் வராதே என்று சொல்கின்றான். பார்ப்பனரின் அடியாளாய் பிற்படுத்தப்பட்டோன் மாறி ஏன் தாழ்த்தப்பட்டோருக்கு கொடுமை இழைக்கின்றான்? வன்கொடுமை செய்கின்றான் ? ...... இந்த நிலை மாற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் உற்றார்கள், உறவினர்கள் , பார்ப்பனர்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு சாதிகளாக கூறு போடப்பட்ட உறவினர்கள் என்பதனை உரத்துச் சொல்லவேண்டும்.இந்த வேலையை எப்படிச் செய்வது? களப்பணிகள் மூலமாக, கருத்துப் பணிகள் மூலமாக ,கலப்புத்திருமணங்கள் வழியாகச் செய்ய்வேண்டும். ஆயிரக்கணக்கான கலப்புத்திருமணங்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டின்மூலமாக , சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றன.இன்றும் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்த கழகத் தோழர் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட கழகத் தோழ்ருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். நான் அறிந்தவரை தங்கள் சொந்த சாதியில் ,உறவுகளில் திருமணம் செய்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு வாழும் தம்பதிகளை விட அருமையாக எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது இன்னும் விரிவாகப் பரவுதல் வேண்டும். சாதி ஒழிப்பு வேண்டும் என்று சொல்பவர் எவரும் தனது சொந்த சாதியில் திருமணம் முடிக்கக்கூடாது,தனது குழந்தைகளுக்கு சொந்த சாதியில் திருமணம் ஏற்பாடு செய்யக் கூடாது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால் எல்லா சாதி அமைப்புக்களும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையில் நாம் ஆண்ட ஜாதி , மீண்டும் நமது ஜாதி ஆளவேண்டும், ஓடி வா, என அழைப்பதைப் பார்க்கிறோம்.

சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். ஒருவன் நம்மீது மாட்டு சாணத்தை எறிந்துவிட்டான். சட்டையில் ஒட்டி அசிங்கிமாகி விட்டால், அய்யோ என ஓடிப்போய் அசிங்கத்தை கழுவ முற்படுவதுபோல சாதி என்னும் அசிங்கத்தை நம்மீது பார்ப்பனர்கள் திட்டமிட்டு தங்கள் பிழைப்புக்காக நம்மீது எறிந்திருக்கிறார்கள் , இந்த சாதி என்னும் அசிங்கத்தை நாம் கழுவவேண்டும், நம்மை விட்டு விரட்ட வேண்டும், நமக்கு இது இழிவு என்பதனை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதற்கு புரட்சிக் கவிஞரைப் படிக்க வேண்டும், பரப்ப வேண்டும்.

Saturday, 15 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்(3)

ஆரியர்கள் எப்படி திராவிடர்களைத் தங்கள் வயப்படுத்தினர் என்பதை அர்த்தமுள்ள இந்துமதம்! எனப் பாகம் பாகமாய் எழுதிக் குவித்த , கோப்பையிலே என் குடியிருப்பு எனத் தன்வாக்குமூலம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் கவிதை வழியாக இன்னும் சிறப்பாகக் காணலாம். நாம் திராவிடர் என்றால் ஆரியர் யார் என்பதனை கண்ணதாசன் கூறுகின்றார் கேளுங்கள் .
“ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;”

நமது எல்லையை ஆடுமாடோடும் ஆரணங்கோடும் தொட்டவர்கள் யார்?இன்றைய சுப்பிரமணிய சுவாமி, சோ, குருமூர்த்தி அய்யர்களின் மூதாதையர்கள் , எத்தனை பேருக்குத் தெரியும் இது ...
“மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;”

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயையில் முதல் பக்கத்தில் வரும் “ பேராசைப் பெருந்தகையே, போற்றி,போற்றி “ பாடலோடு மேற்கண்ட வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர் “

ஈழத்தமிழெருக்கென ஒரு நாடு கிடைத்துவிடக்கூடாது , தமிழனின் கொடி தனி நாட்டில் பறக்கக்கூடாது என்பதற்காக எத்தனை சூழ்ச்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர், ஏனெனில் சொந்த நாடென்றால் என்னவென்றே அறியாதவர்கள் பார்ப்பனர்கள்.

சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்

அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!

வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!

பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!

கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

இந்தக் கவிதையை இன்றைய இளைஞர்கள் கையில் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்லல் வேண்டும். அப்போதுதான் உண்மை வரலாறு அவர்களுக்குப் புரியும் . கடவுள் என்னும் கருத்தாக்கத்தால் எப்படி திராவிடன் ஆரியரின் சாத்திரத் தீக்குழியிடைச் சாய்ந்தனர் என்னும் வரலாற்றை உணர்வர்.
எப்படியெல்லாம் பொய் சொல்லித்தமிழர்களை ஆரியர்கள் ஏமாற்றினார்கள் என்பதனைப் பட்டியலிடும் புரட்சிக்கவிஞர் அதனை வெறுத்த, அந்தக் கடவுள் ,வேதம் என்னும் பொய்மைகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் என்பதனைப் பட்டியலிடுகின்றார்.
தம் சிறு வேதம் ஒப்பாத்
தமிழரை ஆரிய்ர்கள்
நஞ்சென்று கொண்டாரடி...
வெஞ்சிறு வேதம் ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி .....

ஆரியர்தமை ஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி ...
சேரிப் பறையர் என்றும்
தீண்டாதார் என்று சொல்லும்
வீரர் நம் உற்றாரடி “
தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் வீரர்கள் நம் உறவினர்கள் என்பதனை தமிழர்கள் அனைவருக்கும் சமத்துவப்பாட்டில் புரட்சிக் கவிஞர் சொல்வதைக் காண்கிறோம்......... நடைமுறையில் அப்படி இல்லையே ஏன்? எங்கே கோளாறு ?
வா.நேரு – 15-10-2011

Friday, 14 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும் (2)

இந்தியாவில், தமிழகத்தில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிற எவரும் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்துப் பேசவேண்டும். பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் அதனைச் செய்தார். தந்தை பெரியார் அதனைச் செய்தார்,அவரது இயக்கமான திராவிடர் கழகம் இன்றும் செய்கின்றது-ஏனெனில் பார்ப்பனர் பிழைப்பும் சாதி அமைப்பும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. அவ்வளவு எளிதில் பிரிக்கமுடியாதவை. சாதி எனும் அமைப்பு தோன்றுவதற்கும் அது ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் முள்ளாக வளர்ந்து விசச் செடியாய் மண்டிப்போய்க் கிடப்பதற்கும் பார்ப்பனர்களே, அவர்கள் வளர்த்தெடுத்த பார்ப்பனீயமே காரணம்.

இன்றைய நிலையில் இதனை நாம் சொல்கின்றபோது சாதி அமைப்பை பாதுகாக்கின்றவர்களாக பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள், ஆதிக்க வெறியர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதியின் பெயரால் வன்கொடுமை புரிகின்றவர்களாக பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள் என்னும் உண்மை சுட்டப்படுகின்றது. உண்மைதான், இதனை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.வெட்கப்படவேண்டும், வேதனைப்படவேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு என்ன என்பது பற்றி யோசிக்கமுடியும். டாகடர் அம்பேத்கர் அவர்கள் சுட்டிக் காட்டிய ஏணிப்படிகள் போன்ற இந்த சாதி அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்,. சின்னக்குழந்தைகள் சில நேரம் அமர்ந்திருக்கும், பக்கத்தில் வரும் பெரியவன் ஒருவன் அக்குழந்தையின் கன்னத்தில் குழந்தையின் கைகளை எடுத்தே அடிக்க வைப்பான், பார்ப்போருக்கு குழந்தை தன் கன்னத்தில் தன் கைகளாலேயே அடித்துக் கொள்வதுபோலத் தோன்றும்.ஊன்றிக் கவனித்தால்தான் இன்னொருவனின் கைங்கரியம் தெரியும் அதனைப் போல சாதி அமைப்பை ஊன்றிக் கவனித்தால்தான் பார்ப்பானர்களின் சூழ்ச்சியும் தந்திரமும் புரியும். சாதாரண மக்களுக்கு இதனைப் புரிய வைக்கவேண்டும், எளிதில் புரிய வைக்க புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் கையில் வேண்டும்

ஆரியர்கள் வருவதற்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் பெயரால் பேதமில்லை, பெருமிதத்துடன் திராவிடர்களாய் வாழ்ந்தோம் என்பதனை
“ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்
பேரர்க்குப் பேரனே ! பிள்ளையாய் நீ கண்ணுறங்கு “ என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர் ஆண் குழந்தை தாலாட்டில் . வெற்றித் திராவிடரின் பேரனுக்குப் பேரன் எப்படி தாழ்த்தப்பட்டவனானான், பிற்படுத்தப்பட்டவனான், எப்படி நான் மேல் என்றும் நீ கீழ் என்றும் சண்டையிட ஆரம்பித்தான் சொல்கின்றார் புரட்சிக் கவிஞர்.

“ஆண்டார் தமிழர் இந்நா
ட்தன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் –சகியே
ஈண்டுக் குடியேறினார் “ என்று தொடங்கி சமத்துவப் பாட்டில் பார்ப்பனர்கள் எப்படி வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பதனை பட்டியலிடுகின்றார் புரட்சிக் கவிஞர்

“ வெள்ளை யுடம்பு காட்டி
வெறும் வாக்கு நயம் காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி ......”

“மேலே மூலோகம் என்றார்
கீழே மூலோகம் என்றார்
நூலெல்லாம் பொய் கூறினார்...”

“சுவர்க்கத்தில் தேவர் என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத் தாம் சொந்தம் என்றார்...”

அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது. மனிதன் சந்திரனுக்குப் போய் வந்து விட்டான், செவ்வாய்க்குப் போகப் போகின்றான் அண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஆழமாய்ப் போய்க்கொண்டேயிருக்கிறது ஆனால் எவரும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்த்தாகத் தெரியவில்லை,கண்டு பிடித்த்தாகத் தெரியவில்லை. பார்ப்பனர்கள் , சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது, அதில் தேவாதி தேவர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்றால் இந்த உலகில் வாழும் பார்ப்பனர்களுக்கு மாமன் , மச்சி,அண்ணன் ,தம்பி என்று கதை கட்டிய கதையை புரட்சிக் கவிஞர் மேற்கண்ட கவிதையிலே எடுத்துரைக்கின்றார்.....
வா.நேரு -14-10-11

Wednesday, 12 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்

நமது சமூகம் சாதிகளால் ஆன சமூகம். மனிதர்களை சாதியால் மட்டுமே பல நேரங்களில் அடையாளப்படுத்தும் சமூகம். செத்த பின்பும் கூட இன்றும் தனித்தனியாய் சுடுகாடும் இடுகாடும் வைத்து மனிதர்களைப் பிரித்து எரிக்கும்,புதைக்கும் சமூகம். குறிப்பிட்ட மக்களை மனிதர்களாய் மதிக்காது மாடுகளைப் போல மதித்து மனநிலையில் இன்னும் விலங்குகளாய் இருக்கும் கேடு கெட்ட சமூகம். புராதனப் பெருமையுனும் புணுகு பூசி ,சாதியால் அழுகிக்கிடக்கும் சமூகத்தை மணக்க வைக்க முயற்சி செய்யும் சமூகம். இப்போது இருக்கும் நிலையைப் போல நூறு மடங்கு சாதி இறுக்கமாய் இருந்த நேரத்தில்தான் பொது வாழ்வில் தந்தை பெரியார் நுழைந்தார். எனக்குச் சரியெனப்பட்டதைச் சொல்வேன், எனக்குச் சரியெனப்பட்டதை- இந்த சமூகம் மேன்மையுறச் செய்வேன். அதற்காக நீ கொடுக்கும் சிறைத்தண்டனையை ,அவதூறுகளை,அவமானங்களைச் சகித்துக்கொள்வேன். சாதி ஒழிப்பே எனது வாழ்வின் இலட்சியம் எனக்கொண்டு சுழன்று சுழன்று பணியாற்றினார். தனது பணியில் பெரும் வெற்றியும் கண்டார்.

தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் களத்திலே தோளோடு தோள் நின்றவர்கள் பலபேர். தங்களது வாழ்க்கையை, சொத்தை, சுகத்தை அனைத்தையும் துறந்துவிட்டு தலைவா, நீ ஆணையிடு,சாதியை ஒழிக்க நீ ஆணையிட்டு களம் அமைத்தால் சாதாரண சிறை என்ன, கடும் சிறையையே சந்திக்கத் தயார் எனத் தந்தை பெரியாரின் பின்னால் நின்று, சிறையேகி செத்து மடிந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.பதவியா, பணமா, புகழா எதுவும் வேண்டாம் எங்களுக்கு, நம்மைப் பிடித்து ஆட்டும் இந்தச் சாதி செத்துத் தொலையட்டும் என்பதற்காக தங்களைத் தாங்களே கருக்கிக் கொண்ட கருப்பு மெழுகுவர்த்திகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.1957-ல் சாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்ட்த்த்தையே எரித்து சாரை சாரையாய் சிறையேகிய சாதி ஒழிப்புத் தீரர்களின் நாடு இது.

தந்தை பெரியாரின் பெரும்படையில் இணைந்து சாதி ஒழிப்பும் போரில் பணியாற்றிய, பணியாற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள், தோழியர்கள் மேடைப் பிரச்சாரம் என்றாலும், திண்ணைப்பிரச்சாரம் என்றாலும் பயன்படுத்தும் கவிதை வரிகள் சில உண்டு. ரசிய மண்ணைப் பக்குவப்படுத்துவதற்கு தோழர் லெனினுக்கு கிடைத்த மார்க்சிம் கார்க்கி போல தந்தை பெரியாருக்கு கிடைத்த இலக்கியவாதி அவர். போர்க்களத்திலே எதிரிகள் சுற்றி வளைக்கும்போது,போராடும் வீரரின் கையிலே இருக்கும் கத்தி போல, கேடயம் போல ஆண்டாண்டு காலமாய் இந்தச் சமூகத்தை சாதியெனும் சங்கிலியால் கட்டிப்போட்ட சதிகாரர்கள் சுற்றி இருக்கும் நிலையிலே, அவர்கள்தான் நம்மைக் காப்பவர்கள் என்று தமிழர்கள் எண்ணி ஏமாந்து நிற்கும் நிலையிலே அவர்களின் சிந்தையிலே சுருக்கென்று தைக்கும் அளவுக்கு சொல்வதற்கு சில சாதி ஒழிப்புக் கவிதைகள் தமிழில் உண்டு – அந்தக் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் புரட்சிக் கவிஞர்.

பாரதிதாசன் என்று தன்னை அழைத்துக்கொண்டாலும் தமிழன் எவனுக்கும் எந்த நாட்டுக்கும் தாசனாக இருக்கக்கூடாது என்பதற்காகப் பாடிய தமிழ்ப்புலவர் புரட்சிக்கவிஞர். சாதியால் வெந்து, நொந்து புலம்பிக்கொண்டிருந்த தமிழன் கைகளிலே சாதி ஒழிப்பு அணுகுண்டுக் கவிதைகளை கொடுத்த தன்மானப்புலவன். “மனிதரில் நீயுமோர் மனிதன், மீசை முறுக்கு,எழு,விழி, கொலை வாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே” எனத் தீரம் பாடிய செந்தமிழ்க்கவிஞன் .தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை தனக்குப் பின்னால் தமிழை ஆள பரம்பரைக் கவிஞர்களை தந்து சென்ற பாவேந்தன். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் வேறு எவரும் எழுதாத அளவுக்கு 41000 வரிகளை எழுதிக் குவித்த சுயமரியாதைக் கவிஞன். தனது கவிதை வரிகளைப் படிப்பதாலேயே படிப்பவனுக்கு உணர்ச்சியும் மனதிலே அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் எனும் கிளர்ச்சியும் தந்த கவிஞன், தமிழுக்கு கிடைத்த பெரும்கொடையாம் புரட்சிக் கவிஞர் சுயமரியாதை இயக்கத்தவர்களைத் தவிர மற்றவர்களால் புகழப்பட்டாரா? ஏற்றுக் கொள்ளப்பட்டாரா? இல்லை, இல்லை, மறைக்கப்பட்டார், மிகச் சாதுர்யமாக ஒதுக்கப்பட்டார், மிகத் தந்திரமாக முற்போக்கு முகமூடி அணிந்தவர்களால் கூட விலக்கி வைக்கப்பட்டார். ஏன்? ஏன்?....
வா.நேரு 13-10-11

Tuesday, 11 October 2011

வணக்கம் டீச்சர் நூல் அறிமுகம்

வணக்கம் டீச்சர்
மதுரை
வானொலி நிலையம்

ஒலிபரப்பிய நாள்:24.09.11

இன்று நாம் காண இருக்கின்ற புத்தகம் ‘வணக்கம் டீச்சர் ‘ என்னும் புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து ஆவார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் செப்டமபர் 2010–ல் வெளிவந்தது.மொத்தம் 144 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ55 ஆகும்.

இந்த வணக்கம் டீச்சர் என்னும் புத்தகம் 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. கல்வி அதன் நோக்கங்கள் என்னும் முதல் தலைப்பில் எதற்காக கற்க வேண்டும்,ஏன் கற்க வேண்டும் என்னும் கேள்வியைக் கேட்டு கல்வி என்பது எழுதப் படிக்கக் கற்றுத்தர,வேலைக்கோ தொழில் தொடங்கவோ வேண்டிய தகுதிகளைப் பெற,சிந்தனைத்திறனை சீர்படுத்த, வாழ்க்கைக்கான வலிமையான அஸ்திவாரத்தை அமைத்து தர,வருங்கால சவால்களை சந்திக்க, பிறந்த நாட்டை சிறந்த நாடாக்கும் குடிமக்களை உருவாக்க எனப் பட்டியல் இடுகின்றார் இதன் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து. கல்வியின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருப்பதால் மீண்டும் உங்களுக்கு வணக்கம் டீச்சர் எனக் கூறுகிறார்.
ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் உண்டு எந்த முகத்தை எவரிடம் எப்போது காட்டுகிறோம் என்பதுதான் வெற்றியின் அடிப்படை என்பர்.இந்த நூலின் ஆசிரியர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய சில முகங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.ஆசிரியர் என்பவர் பாடம் சொல்லித் தருகிறவர்,இரண்டாவது பெற்றோர்,முதல் நண்பன்,குரு,மாணவன் என்னும் கல்லில் வேண்டாத பழக்கங்களை நீக்கும் சிற்பி,பாதையைக்காட்டும் வழிகாட்டி,அச்சங்களைப் போக்கும் ஆலோசகர், தனது நடத்தையால் மாணவனுக்கு முன் உதாரணமாகத் திகழும் ஆதர்சன மனிதர்(ROLE MODEL) என பல முகங்கள் ஆசிரியர்களுக்கு வேண்டும் எனக் கூறுகின்றார். இன்றைக்கு மாணவர்களின் ரோல் மாடல்களாக சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே இருக்கிறார்கள் என வேதனைப் படுகின்றார்.

மாணவர்கள் விருப்பத்தோடு சில ஆசிரியர் வகுப்பிலே அமர்கின்றார்கள், சில ஆசிரியர்கள் வகுப்பினில் வெறுப்போடு அமர்ந்திருக்கிறார்கள்.மாணவர்கள் விருப்பத்தோடு அமரவேண்டுமானால் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டியது என சிலபண்புகளை பட்டியலிடுகிறார் இந்நூலின் ஆசிரியர்,ஆசிரியர்களே உங்கள் பணி குறித்து பெருமிதம் கொள்ளுங்கள் என்கின்றார்.முன்னால் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் திண்டுக்கல் வந்து தனது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து மரியாதை செலுத்தியதை குறிப்பிடும் நூலாசிரியர் பெருமிதம் கொள்ளுங்கள் ஆசிரியர்களே பெருமிதம் கொள்ளுங்கள். நேர்த்தியான உடை, நிமிர்ந்த நன்னடை, காந்தமும் கவர்ச்சியும் கொண்ட பார்வை,இனிமையான,அன்பான,தெளிவான பேச்சு போன்றவை ஆசிரியர்களுக்கு தேவை என்கின்றார்.பிறருக்கு எரிச்சல் ஊட்டும் படியான மூக்கை நிமிண்டுதல் தாடையைத் தடவுதல், தலையைச் சொரிதல் போன்ற பழக்கங்களை கைவிடல் வேண்டும் என்கின்றார்.ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகிற மனோபாவங்களாக உயர்ந்த சுயமதிப்பு, தன்னம்பிக்கை, பொறுமை,கனிவு,உற்சாகம் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகின்ற திறமைகளாக சுவையூட்டும் திறமை,கவுன்சிலிங்க் திறமை, மனித உறவுத் திறன்,நேர நிர்வாகத் திறன்,ஊக்கப்படுத்தும் திறன் போன்றவற்றை பட்டியலிடுகின்றார்.கற்றுக் கொண்டே இருப்பவர் தான் நல்ல ஆசிரியர்களாக விளங்கமுடியும் என்பர் அவ்வகையில் கூடுதல் அறிவுகளாக பொது அறிவு,கணினி அறிவு,உளவியல் அறிவு போன்றவற்றை ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதனைப்பற்றி நான்காம் அத்தியாயம் ஆன கற்பித்தல்- அடிப்படை அம்சங்கள் என்னும் பகுதியில் விவரிக்கின்றார்.ஆசிரியருக்குப் புரிந்தால் தான் மாணவனுக்கு புரியும்படி நடத்த முடியும்.பாடத்தை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக ஆசிரியர் ஏற்றால்தான் மாணவனுக்கு மகிழ்ச்சியாக நடத்த முடியும்.கற்பித்தலில் ரசனை கலந்து இருக்க வேண்டும்,உயிரோட்டம் இருக்க வேண்டும், ஆன்ந்தம் இருக்க வேண்டும்.கற்பித்தலில் அன்பும் நட்பும் அடிப்படையானவை கற்பித்தலில் ஏற்கனவே தேவைப் படுகின்ற ஒன்று ஒத்திகை, ஒத்திகை என்று ஒன்று இருந்தால் தானே நாடகமும் சினிமாவும் மிகச் சிறப்பாக அமைய முடிகிறது.ஆக ஆசிரியர்கள் தங்களின் அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும்,கற்பிக்கும் திறனை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் ஹோம் ஒர்க் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றார்.ஏற்கனவே தயாரிப்பு இருக்கும் பொழுது எந்த வேலையும் செய்வது எளிது.

மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்றால் கல்வியை அவர்கள் முதலில் விரும்ப வேண்டும்.விரும்பாவிட்டாலும் பரவாயில்லை கல்விமீது அவர்களுக்கு எந்த விதமான வெறுப்பும் வந்து விடக் கூடாது.அதற்கு பள்ளிக்கூடச் சூழல், வகுப்பறை சூழல்,கற்பிக்கும் உபகரணங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை கற்பித்தல் சில தேவைகள் என்னும் தலைப்பில் இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன அறிவியலின்,உளவியலின் அடிப்படையில் கூறுவது நன்று.

வயலில் விதைப்பதற்க்கு முன் மண்ணை பக்குவப் படுத்துவது போல மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன் அவர்களின் மனங்களைப் பக்குவப்படுத்தல் அவசியம்.அதற்கு சில யுக்திகளைக் கூறுகின்றார்.கல்வியினால் அவர்கள் அடையப் போகும் நன்மைகளை அதாவது வருமானம், சமூகத்தில் மதிப்பு, உயர் பதவி, குடும்ப நிலை உயர்வது, வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றை மாணவர்களின் மனங்களிலே பதிய வைக்கலாம்.மாணவர்களைப் பேச விடுங்கள்,ஆசிரியரே பேசிக் கொண்டிருப்பது அதாவது சொல்லிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு நீண்ட வறட்டு உரை நிகழ்த்துவது ஒரு நல்ல ஆசிரியருக்கு அடையாளம் அல்ல.அதை ஒரு டேப் ரெக்கார்டர் அழகாக செய்யும். அதற்குப் பெயர் கற்பித்தல் அல்ல என்கின்றார். கற்பித்தலில் திறமை முழுமை எப்படி வரும் என்பதற்கு நூலாசிரியர் சொல்லக்கூடிய சுவையூட்டுதல், நடித்தல், வீட்டுப் பாடங்கள், செய்முறை வேலைகள், வெளியுலக தொடர்பு போன்ற தலைப்புகளில் சொல்லும் ஆலோசனைகள் வரவேற்கத்தக்கவை. பெற்றோர்களிடம் எப்படி பேசுவது,பெற்றோர்களின் நேர்மறை சக்தியை ஆசிரியர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதெல்லாம்,நடைமுறை வாழ்வியலை அடிப்படையாக்க் கொண்டு அமைந்திருக்கிறது.

கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பலவகை.ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளில் மாணவர்கள் பலவகை. பலவகையான மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி கையாளுவது.கையாளுவதில் அதிகாரவழியைப் பயன்படுத்துவதா, அன்பு வழியைப் பயன்படுத்துவதா என்பதனை பக்கங்கள் 104 முதல் 111ம் பக்கம் வரை விவாதிக்கின்றார்.சில தீர்வுகளைக் கூறுகின்றார்.பிரச்சனைக்குரிய மாணவன் என்று யாரும் கிடையாது, பிரச்சனை உடைய மாணவர்கள் தான் உண்டு.பிரச்சனையைத் தீர்த்துவிட்டால் மாணவர்களால் பிரச்சனையில்லை.மாணவர்களை முறையாக திறமையாகக் கையாளுவது ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்களில் ஒன்று எனக் கூறுகின்றார்.

தோட்டத்திலே நல்ல பூச்செடிகளை வளர்ப்பதர்க்கு சில வழிகளைப் பயன்படுத்துவதைப் போல மாணவர்களை மேம்படுத்துவதற்கு சில வழிமுறைகளை இந்நூலின் ஆசிரியர் கூறுகின்றார். தேவையற்ற பயம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறை எண்ணம்,கூச்சம் போன்றவற்றை மாணவர்களிடமிருந்து நீக்க ஆசிரியர்களே முயற்சி செய்யுங்கள் நல்ல வாழ்க்கைக்கான சில கொள்கைகளைச் சொல்லுங்கள்,நல்ல கொள்கைகளுடன் வாழ்ந்த சில தலைவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.ஆசிரியருக்கென்று ஒரு தனிமரியாதை இன்றும் இருக்கிறது அந்த மரியாதை வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்கு கிடைப்பதேஇல்லை.படிப்புடன் வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களிலும் மாணவர்களின் சிந்தனையை செலுத்தி அவனை வல்லவனாக,நல்லவனாக உருவாக்குவதற்கு அக்கறை காட்டுகின்ற ஆசிரியர்களுக்குத்தான் அந்த மரியாதை கிடைக்கிறது ஆசிரியர்களே அந்த மரியாதையை ஏன் விட்டுத் தருகிறீர்கள் இன்று கிடைக்கும் மன நிறைவையும் நாளைகிடைக்கப் போகும் மதிப்பு மரியாதையையும் ஏன் இழக்க நினைக்கிறீர்கள் முயற்சி செய்யுங்களேன் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.

நல்ல ஆசிரியர்களை உருவாக்க கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பக்கம் 117-ல் இருந்து 124 வரை எடுத்துக் காட்டுகளோடு விவரிக்கின்றார். அரசின் பங்குபற்றி 11வது அத்தியாயத்தில் பல்வேறு யோசனைகளை குறிப்பிடுகின்றார்.அவை,ஆசிரியர்களை கற்பிபதைத் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை குறைக்க வேண்டும் தவிர்க்க வேண்டும். சிறப்புப் பயிற்சிகளை அவ்வப்போது ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.ஸ்போக்கென் இங்க்லிஷ் கென்று வாரம் ஒரு வகுப்பாவது ஒதுக்கும்படி பாடத்திட்டம் அமைப்பது போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.கடைசித்தலைப்பாக வணக்கம் டீச்சர் எனக் குறிப்பிட்டு ஆசிரியர் பணியின் மேன்மையை,உயர்வை குறிப்பிடுகின்றார்.உங்கள் வகுப்பில் நாளைய குடியரசுத் தலைவர் இருக்கிறார்,நாளைய ஆளுநர் இருக்கிறார்,நாளைய மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். “இந்த ஆசிரியரிடம் இந்த நல்ல விசயத்தைக் கற்றுக்கொண்டேன்,இந்த நல்ல குணத்தைப் பெற்றுக் கொண்டேன் இந்த அணுகுமுறையைத் தெரிந்து கொண்டேன்” என்று உங்கள் பெயரை குறிபிட்டுச் சொல்லி “என்னை உயர்த்தியவர்களில் அவரும் ஒருவர்” என்று நாளைக்கு அவர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பார்கள் நீங்களும் படிக்கத்தான் போகிறீர்கள் என்று இந்நூலாசிரியர் ஆசிரியர்களுக்கு ஊக்கம் ஊட்டுகிறார்.

(“A GOOD TEACHER TEACHES; A BETTER TEACHER COACHES; THE BEST TEACHER INSPIRES; AN EXCELLENT TEACHER MOTIVATES” ) என நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆசிரியர் தினமான செப்டம்பர்5-ல் பிறந்த டாக்டர்.இராதகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுவார்.ஊக்கப்படுத்துகிற அருமையான ஆசிரியராக திகழ்வதற்கான வழிமுறைகளை,பல்வேறு யோசனைகளை வணக்கம் டீச்சர் என்னும் இந்த நூலின் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து கொடுத்திருக்கிறார்.கற்பித்தல் என்னும் கடல் பயணத்திற்கு நிச்சயமாக இது ஒரு பாதுகாப்பான நல்ல தோணி என்னும் நூலாசிரியரின் கூற்று உண்மைதான்.படித்துப் பாருங்கள் பயன் பெறுங்கள்.

‘வணக்கம் டீச்சர்‘ என்னும் இந்தநூலின் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து ஆவார்.கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் செப்டம்பர் 2010–ல் வெளிவந்தது.மொத்தம் 144 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ55 ஆகும்.
நன்றி வணக்கம்

இவர்தான் பெரியார் நூல் அறிமுகம்

இவர்தான் பெரியார் நூல் அறிமுகம்
மதுரை
வானொலி நிலையம்


ஒலிபரப்பிய
நாள்:17.09.11


இன்று நாம் காண இருக்கின்ற புத்தகம் ‘இவர்தான் பெரியார்‘ என்னும் புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் மஞ்சை.வசந்தன் ஆவார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் மார்ச் 2011–ல் வெளிவந்தது.மொத்தம் 216 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ75 ஆகும்.

பெரியாரின் வாழ்வும் சிந்தனைகளும் முழுமையாக அடங்கிய நூல் என முகப்பில் கூறப்பட்டுள்ள இந்த நூல் பெரியாரைப்பற்றி விவரித்துக்கூறுகின்ற ஒரு நூலாகும்.முன்னுரையில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் “முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய எழுத்தாளர் தோழர் மஞ்சை வசந்தன் அவர்கள்...இவர்தான் பெரியார் என்ற இந்நூலின் மூலம் அறிவுலக ஆசான், நம் அனைவருக்கும் விழி திறந்த வித்தகர்,தொண்டு செய்து பழுத்த பழம் அய்யாவைப் பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.எவரும் எளிதில் தந்தை பெரியார் வாழ்க்கை,தத்துவங்கள் இவை இரண்டினைப் பற்றியும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ளார் மிகவும் சுருக்கமான குளிகைகள் மூலம் (capsules)மூலம் பல முக்கிய சம்பவங்களையும், விளக்கங்களையும் அருமையாக தந்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றார்.

இந்நூலின் ஆசிரியர் மஞ்சை வசந்தன் அவர்கள் தனது உரையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் முழுவதையும் அறிந்தவர்கள் சிலரே, சுமார் பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல் அவர்கூறிய கருத்துக்களை பலரும் படித்தறிவது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பதையும் எதையும் சுருக்கமாக அறிந்து கொள்ள முயலும் இன்றைய உலகின் உள நிலையையும் கருத்தில் கொண்டு பெரியாரின் வாழ்வை 80 பக்கங்களிலும், அவரது சிந்தனைகளை 140 பக்கங்களிலும் பிழிந்து தந்துள்ளேன் எனக் கூறுகின்றார்.

மொத்தம் 29து தலைப்புகளில் இந்தப் புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.பெரியாரின் பெற்றோர் பற்றியும்,அவரது பிறப்பு பற்றியும் ,அவரது திருமணம் பற்றியும் சொல்வதாக முதல் தலைப்பான ‘பிறப்பும் பிள்ளை வெறுப்பும்’ எனும் தலைப்பு அமைகிறது.1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம்தேதி பெரியார் பிறந்தார் என்பதும் அவரது திருமணம் 1898ம் ஆண்டு நாகம்மையாரோடு நடைப்பெற்றது போன்ற வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன.பெரியார் துறவு பூண்டு காசிக்குச் சென்றதும் அங்கு நடைபெற்ற செயல்களால் வெறுப்புற்று ஈரோட்டுக்குத் திரும்பியதும் வியாபாரம் செய்ததும் அடுத்து விவரிக்கப்பட்டுள்ளன. “சாதி வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுடனும் அன்போடு பழகினார்.எல்லா சமூதாய மக்களின் விழாக்களிலும் கலந்து கொண்டார்....பிளேக் நோய் ஈரோட்டில் பரவியபோது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க பெரிதும் உழைத்தார்”என பக்கம் 21-ல் குறிப்பிடுகின்றார்.

காங்கிரசில் பெரியார் சேர்ந்த சூழல் விவரிக்கப்படுகிறது “பெரியார் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து வந்தாலும் ,1919ம் ஆண்டுதான் காங்கிரசில் உறுப்பினரானார்.இவ்வாண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் கொடுமையைக் கண்டு கொதித்த பெரியார் .,ஆங்கில ஆட்சியை ஒழித்தே தீர வேண்டும் என்று உறுதிகொண்டு காங்கிரசில் சேர்ந்தார்.ஈரோடு நகரசபைத் தலைவர் பதவி உள்ளிட்ட அவர் வகித்த 29 பதவிகளை துறந்தார்” என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

பெரியாரின் பணியைக்கண்டு மகிழ்ந்த காந்தியார் கதர் இயக்கத்துக்கு பெரியாரை பொறுப்பாளராக நியமித்தார். இதனை பெரியாரே “ நான் எதிலும் தீவிரமாகவும் உண்மையாகவும் உழைக்கக் கூடியவன் என்கிற கருத்து காந்திக்கு இருந்ததால் கதர் இயக்கத்துக்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்தார்” என்று குறிப்பிட்டதைக் குறிப்பிடுகின்றார்.கள்ளுக் கடை மறியலில் முதன் முதலாக ஒருமாத சிறைதண்டனையை பெரியார் பெற்றதையும் அவரது குடும்பத்துப் பெண்களான மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் மறியலில் ஈடுபட்டு சிறைபட்டதையும் கள்ளுக் கடை மறியலை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பொழுது காந்தியார்
“மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கையில் உள்ளது அவர்களைக் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டதை கூறுகின்றார் இன்று கூட பெண்கள் மறியலில் ஈடுபட்டு சிறை செல்வது அரிதாகவே உள்ளது.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு என்பது ஒரு கொள்கையை தான் பின்பற்றுவது மட்டுமல்ல, அதற்காக தான் சிறை செல்வது மட்டுமல்ல, தன் குடும்பத்துப் பெண்களையும் சிறை ஏற்கச் செய்தது என்பது வரலாற்று நிகழ்வு.

“ஒடுக்கப்பட்ட தோழன் நெஞ்சில் ஒளிச்சிலையாய் வாழ்கின்றார் பெரியார் “ என்பார் கவிஞர் கலி.பூங்குன்றன்.ஏன் என்பதனை வைக்கம் சென்றார் வழி திறந்து வென்றார் என்னும் தலைப்பில் நூலாசிரியர் விவரிப்பதைப் படித்தால் அறியலாம். அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கே தூண்டுதலைக் கொடுத்த போரட்டமாக இப்போராட்டம் அமைந்தது என்கின்றார். சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடியாக பெரியார் நடத்திய .சேரன்மாதேவியின் குருகுலத்து ஜாதி வேற்றுமை எதிர்ப்பு போராட்டமும், இட ஒதுக்கீட்டிற்காக போராடி போராடி பின்பு முடியாமல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தையும் தொடர்ந்து குறிப்பிடுகின்றார்.

“ வெண்தாடியின் வெப்ப மின்னல்கள் என்னை இருட்டின் ஈசான்ய மூலையிலிருந்து இழுத்து வந்துவிட்டன” என்று கவிஞர் தாமரை பெரியாரை குறிப்பிடுவார்.பெண்களால் மாநாடு கூட்டப்பட்டு பெரியார் என்னும் பெயரை பெண்களால் கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகின்றார். “பெண்களுக்காக உழைத்தவர்களில் பெரியார் தான் உலகிலேயே முதலிடம் பெற்றவர் அந்த அளவிற்கு யாரும் சிந்தித்தும் இல்லை போராடியதும் இல்லை” .அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய இளம் வயது திருமணம்,விதவைக் கொடுமை, பெண்களுக்கு சொத்துரிமை இன்மை, கல்வியின்மை போன்ற கொடுமைகளை களைய எவ்வாறு போராடினார்.என்பதனை பல்வேறு புள்ளி விவரங்களொடு எடுத்துரைக்கிறார்.காலம் காலமாக அழுத பெண்களின் கண்ணீரை துடைத்த பெரியாரின் பணி, பெண்ணடிமை ஒழிப்பில் எவ்வாறு இருந்தது எனபதனை அறிய இன்றைய தலைமுறை ஆண்களும் பெண்களும் இதனை படிக்க வேண்டும். 

“ஆண்களுடன் பெண்கள் நெருங்கிப் பழகவும் சேர்ந்து படிக்கவும் இடம் கொடுத்துவிட்டால், கண்டிப்பாய் இன்றைய தினம் பெண்களுக்கு உள்ளது போன்ற அடிமை நிலை,அடுப்பூதும் நிலை,குழந்தை வளர்ப்பு,கும்மி,கோலாட்டம்தான் ஏற்றது என்ற நிலை பறந்தோடிப் போய்விடும்.

“பெண்கள் யாவரும் படிக்க வேண்டும்.அரசங்காத்தின் உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்துத் தயாராய் இருக்க வேண்டும்.படித்த பெண்களையே ஆண்கள் மணக்க விரும்புவதாலும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்”.

“பெண்களுக்கு கும்மியும் கோலாட்டமும் கற்றுத்தருவதை ஒழித்துவிட்டு ஓடவும்,குதிக்கவும்,தாண்டவும் கைக்குத்து,குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து ஒரு ஆண்பிள்ளைக்கு உரிய பலம்,தைரியம்,உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாகும் படியாகச் செய்ய வேண்டும்.”

ஆண்களுக்கு ஏற்ற கலை வேறு, பெண்களுக்கு ஏற்ற கலை வேறு என்று சொல்லும் புத்தியை அறவே ஒழிக்க வேண்டும்.

ஆண்கள் படிக்காவிட்டாலும்கூட முதலில் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்.பெண்கள் படித்து விட்டால் ஆண்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள்.ஆண்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருப்பதற்குக் காரணம் பெண்கள் படித்து அறிவு பெறாமலிருப்பதுதான்” என்று பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பெரியார்,

பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமென்றால் மூன்று காரியங்கள் உடனே செய்யப்பட வேண்டும் முதலில் அடுப்பங்க்கரையை விட்டு அவர்கள் வெளியே வர வேண்டும்,இரண்டாவதாக நகைப் பற்றை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும்,மூன்றாவதாக தற்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.பெண்கள் பதவிகளில் அமர்ந்துவிடுவார்களேயானால் மேற்குறிப்பிட்ட மூன்றும் தாமே படிப்படியாக நிறைவேறிவிடும்.பெண்களுக்கு எல்லாவிதமான வேலையும் கிடைக்கும்படியாக அரசாங்க விதிகளைத் திருத்த வேண்டும் என பெரியார் குறிப்பிட்டதை எல்லா வேலைகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என பெரியார் வலியுறுத்தியதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். “அவர்தந்த சிந்தனைகள் ஒற்றடைக் கொம்புகள் எங்கள் மூளைகளின் மூலை எல்லாம் மூடி மறைத்திருந்த நூலாம்படையை அந்த கம்போன்றோ அடித்தது”என்று கவிஞர் அப்துல் ரகுமான் கூறுவதைப் போல பெண்ணடிமை என்னும் நூலம்படையை பெரியார் எப்படியெல்லாம் நீக்கினார் என இந்நூல் மூலம் அறியலாம்.

உண்மையைக் காண வேண்டும் என்ற உணர்வோடும் சரியானதையே ஏற்க வேண்டும் என்ற முடிவோடும் சமுதாய பொறுப்போடும் கடவுள் உண்டா?என்ற ஆய்வை பெரியார் நிகழ்த்தி அதன்முடிவுகளை உலகுக்கும் எடுத்துக் கூறினார்.கடவுள் இல்லை என்பதனையும் கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் சீரழிவையும் நுட்பமாக ஆய்வு செய்து பெரியார் விளக்கியுள்ளார்.அவருடைய ஆய்வு அறிவு பூர்வமானது பிடிவாதமோ விதண்டாவாதமோ அவரிடம் இல்லை என பக்கம் 127-ல் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.புராண ஆய்வில் புகழ்பெற்ற பெரியார் என்னும் தலைப்பில் தன்னுடைய பிரச்சாரத்தில் பெரியார் பட்ட துன்பங்களை விளக்குகிறார்.அழுகிய முட்டை,செருப்பு,பாம்பு ஆகியவை அவர்மீது வீசப்பட்டன அப்போதுகூட பெரியார் அவர்களின் அறியாமையைக் கண்டு வருந்தினாரே அவர்களின் செயல்களுக்காக வருத்தப்படவில்லை. “ஆக்காத நூலில்லை ஆய்ந்து தேர்ந்து அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக தாக்காத பழைமையில்லை தந்தை நெஞ்சில் தழைக்காத உவமையில்லை தமிழ் நிலத்தில் நீக்காத களை இல்லை” என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதைப் போல களைகளை நீக்க பெரியார் பட்டபாடுகள் விரிவாக நூலாசிரியரால் கூறப்படுகின்றன.

சிறிது காலத்திற்கு மக்கள் தொடர்ச்சியாக திருக்குறளைப் படித்து மனதில் ஆழப்பதியவைத்து வருவார்களானால் நம் நாட்டில், நம் மக்கள் வாழ்வில் ,நம் மக்கள் உள்ளத்தில் ஒரு புதிய உணர்ச்சி உறுதியாக ஏற்படும் என்பது என் கருத்து.மேலும் திருக்குறள் ஒன்று போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க,ஒழுக்கத்தை உண்டாக்க வேறு மத நூல்கள் தேவையில்லை என்று கூறிய பெரியார் திருக்குறளை அச்சேற்றி மலிவு விலையில் எல்லோரும் படிக்கும்படி செய்தார்.திருக்குறளைப் பரப்ப பல மாநாடுகளை நடத்தினார்.பண்டிதர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த திருக்குறளை பாமரனும் படித்து பயன் பெறும் படி செய்த பெருமை பெரியாரைச் சாரும் என பக்கம் 170-ல் குறிப்பிடுகின்றார்.

இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு ஏற்கப்பட்டபின் முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது.பெரியாரின் போராட்டத்திற்காக இடஒதுக்கீட்டிற்காக என்பது இந்திய வரலாற்றின் ஒரு சிறப்பிற்குரிய பெருமையாகும் என பக்கம்203-ல் குறிப்பிடுக்கின்றார். போராடு புரட்சிப்பாதை ஈரோடு என்னும் தலைப்பில் பெரியார் நடத்திய போராட்டங்களும் பெற்ற சிறைத்தண்டனைகளும் வரிசையாக்க் குறிப்பிடப்பட்டுள்ளன. “எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக்கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடியொலியாய் இன உணர்வு தீப்பந்தப் போராளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடு வாளாய்... எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்” என கலைஞர் அவர்கள் கூறியதைப் போல பெரியார் வாழ்ந்திட்டார் என்பதனை வரிசைப்படுத்துகிறார் நூலாசிரியர்.

இன்னல்களுக்கிடையே இறுதிவரை என்னும் தலைப்பில் பெரியாருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளையும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிங்கமென மேடைகளில் இறுதிவரை முழங்கியதையும் குறிப்பிடுகின்றார். “தமிழ்நாட்டின் சமூக விழிப்பு ஏற்பட பெரியார் ஆற்றிய பணி அவர் வகித்தப் பாத்திரம் மிகப் பெரியது.அவர் ஒரு மாபெரும் தேசபக்தர்” என்று பெருந்தலைவர் காமராசர், “ பெரியார் நயமிக்கதோர் தலைவர்,வீரமிக்கதோர் போராட்டக்காரர் “ என அன்றைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி, “ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கருத்துக்களை எதிர்த்து அறைகூவி நின்றவர் பெரியார்” என அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, “பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி,மூட நம்பிக்கைகளை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர், இந்தியாவில் அவரைப் போன்று ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது” கொடுமைக்கு எதிராய் பெரும்போர் தொடுத்தவர்“ என ஜெயப்பரகாஷ் நாராயணன், “தமிழர் சமுதாயம் தனது பாதுகாவலரை –இன மொழி உயர்வுகளுக்காக அரசியல் பொருளாதார விடுதலைக்காகப் போராடி ,போராட்டத்திலேயே தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழ்ந்துவிட்ட்து “ என எம்.ஜி.ஆர் எனத் தலைவர்கள் தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு திசம்பர் 24-ம் நாள் மறைந்தபொழுது விடுத்த அறிக்கைகளை கடைசிப்பக்கங்களில் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

“நின் அடையாளம் தாடியும் தடியும், நீதான் எங்கள் அடியும் முடியும்” என்பார் பெரியார் பற்றி கவிஞர் வைரமுத்து. அப்படித் திகழ்ந்த தந்தை பெரியாரின் வாழ்வை முழுமையாக அறிய படித்துப்பாருங்கள் !சமூகத் தொண்டாற்றும் விழிப்புணர்வு பெறுங்கள்!
நூலின் பெயர் “இவர்தான் பெரியார்”, ஆசிரியர் மஞ்சை வசந்தன் . கோவை விஜயா பதிப்பகம் , பக்கம் 216. விலை ரூ75. .

எங்கள் முத்தான புரட்சிக் கவியே !

கோவில் பல கட்டும் தமிழர்கள் பலர் கல்வித்தந்தைகளாகவும் இருக்கின்றார்கள் . கல்லூரிகளில் விளக்குபூஜை நடத்துகின்றார்கள், ஏன் சில கல்லூரிகளில் யாகம் கூட நட்த்துகின்றார்கள். இந்திய அரசியல் சட்டத்திற்கு நேர் விரோதமான செயல் என்றாலும் கூட இதனை நடத்துகின்றார்கள். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டிய கல்விக்கூடங்கள் இவர்களைப் போன்றவர்களால் பாழ்படுத்தப்படுகின்றன. சில கல்விக்கூடங்களில் கோவில் கட்ட சித்தாள்களாக மாணவ , மாணவியர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் .ஏதோ ஒரு கோவிலைக் கட்டி விட்டால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதைப் போல பெருமைப்பட்டுக்கொள்கின்றார்கள். இவர்களைப் பற்றி, இன்று இவ்வளவு சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் கூட இவையெல்லாம் புற்றீசல் போல வராத காலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாடுகின்றார் பாருங்கள்

“ நேர்மையின்றிப் பிறர்பொருளில்
தம் பெயரால் கல்லூரி
நிறுவிப் பெண்ணைச்
சீர்கெடுத்தும் மறைவழியாய்ச்
செல்வத்தை மிகவளைத்தும்
குடி கெடுத்தும்
பார் அறியத் தாம் அடைந்த
பழியனைத்தும் மறைவதற்குப்
பார்ப்பான் காலில்
வேர் அறுந்த நெடுமரம்போல்
வீழ்ந்தும் அவன் விட்டதுவே
வழியாம் என்றும்”
கூறுகின்றார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி என்பது தனிச்சொத்து என்பார் தந்தை பெரியார். ஒருவனுக்கு பக்தி இல்லாவிட்டால் சமூகத்திற்கு நட்டமில்லை, ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் சமூகத்திற்கு கேடு என்பார்.

பார் அறியத் தாம் அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில் வேர் அறுந்த நெடுமரம் போல வீழ்கின்றார்கள் ‘கல்வித்தந்தைகள்’ என்று சொல்கின்றார் . கணிதத்தில் நேர்விகிதம் (directly proportional) என்று சொல்வார்கள். அதைப் போல ஒழுக்கக்கேடு என்பது பக்திக்கு நேர் விகிதம் என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர். திரு. கிருபானந்தவாரியார் அவர்கள் “ பக்தி வளர்ந்திருக்கிறது, ஆனால் ஒழுக்கம் வளரவில்லை” என்று சொல்லியதை இங்கு நினைவு கூறலாம். பக்தி வளர்ந்தால் ஒழுக்கம் வளராது, குறையத்தான் செய்யும், ஒழுக்கம் வளரவேண்டும் என்று சொன்னால் பக்தி குறைய வேண்டும நாட்டில் .ஒழுக்கக்கேட்டை மறைக்கப் பயன்படும் முகமூடிதான் பக்தி என்னும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும்.

தமிழ்ச் சொற்களை
பார்ப்பன எதிர்ப்பின்
ஆயுதங்களாய்
வார்த்தெடுத்த
முதல் கவியே !
எங்கள் முத்தான
புரட்சிக் கவியே !

காட்டாற்று வெள்ளமாய்
கரை புரளும் உனது
கவிதைப் பரப்பில்
இரு கரைகளாய்
தமிழ் உணர்வும்
தன்மான உணர்வும்

புத்துணர்வு பெறுகின்றேன்
ஒவ்வொரு முறையும்
உனது
கவிதைகளைப் புரட்டும்போது
புதிய உணர்ச்சியும்
மகிழ்ச்சியும் பெறுகின்றேன்
ஒவ்வொரு முறையும்
உனது கவிதைகளை
மனப்பாடமாய்
மனதில் கொள்ளும்போது!

வா.நேரு – 12-10-2011

Sunday, 9 October 2011

புரட்சிக் கவிஞர் பாடல்

இந்த வாரம் படித்து மனப்பாடம் செய்த புரட்சிக் கவிஞர் பாடல்
“ கோவில் பல கட்டுகின்றீர்
குளங்கள் பல வெட்டுகின்றீர்
கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுறிஞ்ச நெடுந்தறிகள்
வாய்ப்பச்செய்தீர்
தாயிலும் பன்மடங்கு அன்போடு
மக்கள் நலம் நாடுகின்றீர்
ஆயினும் தமிழ் நாட்டில்
செயத்தக்க இன்னதென்று
அறிகிலீரே “ என்று சொல்கின்றார்.

புரட்சிக்கவிஞர் பாடி ஏறத்தாழ 60,70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கும் தமிழர்களுக்கு தமிழ் வளர, தமிழ் வளர்க்க என்ன செய்வது என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கின்றார்களா?

நாங்கள் ஒரு பெரிய பணக்காரப் பெரியவரை பள்ளிக்கூடம் கட்டப் பணம் வேண்டும் என்று கேட்டச்சென்றபோது , எந்தவித தயக்கமும் இல்லாமல் பளிச்சென்று கூறினார், “ நான் கோவில் கும்பாவிசேகம் மற்றும் கோவில் திருப்பணிகள் தவிர வேறு எவற்றுக்கும் பணம் தருவதில்லை “ என்றார். பேசிப்பார்த்து பின்பு எந்த நன்கொடையும் அவரிடமிருந்து வாங்கமுடியாமல் திரும்பிவந்தோம். அவர் பார்ப்பனர் அல்ல, பரம்பரை பணக்காரர் அல்ல ,உழைப்பால் முன்னேறி பணம் பெற்றவர்தான் . வாய்ப்பு வசதிகள் வந்தவுடன் அது கடவுளாள்தான் வந்தது,எனவே அதைத்தவிர வேறு எவற்றுக்கும் பணம் கொடுக்க்க்கூடாது என நம்புகின்றார்.

அதைத் தகர்ப்பது எப்படி ? கடவுளுக்கு கொடுப்பது என்றால் பார்ப்பனருக்கு கொடுப்பது , அதனால் தமிழ் வளருமா? தமிழ் நாடு வளருமா?

“ தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவு உயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒரு நாடும் தன்
மொழியில் தாழ்ந்தால் வீழும்”
கோவிலுக்கு கொடுப்பதால் தமிழர் நிலை உயருமா? உறுதியாக உயராது
அப்போது என்ன செய்ய வேண்டும் ?

தமிழுக்குப் பொருள் கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவிடுங்கள்
தமிழ்ப்பள்ளி, கல்லூரி
தமிழ் ஏடு பலப்பலவும்
நிலைப்பச்செய்வீர் “ என்று அறிவுறுத்துகின்றார் புரட்சிக்கவிஞர். செய்தோமா?

தமிழுக்குப் பொருள் கொடுங்கள் என்றால் , நமது ஆள் கம்பன் புகழ் பாடும் கழகங்களில் போய் விழுகின்றான் , மீண்டும் அந்த பார்ப்பன வளையத்துக்குள் எளிதாக மாட்டிக்கொள்கின்றான். கொஞ்சம் பேசத்தெரிந்த ஆட்களெல்லாம் கம்பன் புகழ் பாட, பெரிய புராணம் பற்றி விரிவுரையாற்ற கிளம்பி விடுகின்றான்.கொஞ்சம் பெயர் வெளியே பிரபலமாகின்றது, பேசப்போனால் பணம் கிடைக்கிறது, விளம்பரம் கிடைக்கின்றது.பின் தமிழ் எப்படிப்போனால் என்ன? தமிழ்நாடு எப்படிப்போனால் என்ன?

தமிழறிஞர் கழகங்கள் எப்படி இருக்கின்றன? திருவள்ளுவர் கழகம் என்று பெயர் இருக்கின்றது, சரி அங்கு திருக்குறளின் பெருமை பேசப்படுகின்றதா? திருக்குறளுக்கு நுட்பமான விளக்கங்கள், விரிவுரைகள்,மேலை நாட்டு இலக்கியங்களோடு ஒப்பிடல் இவையெல்லாம் நடக்கிறதா என்றால் இல்லை, இல்லை. அங்கும் நமது ஆள் கம்பராமாயணத்தை பற்றியும், பெரியபுராணம் பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

படித்தவர்களைச் சுற்றியும் பணக்கார்ர்களைச்சுற்றியும் பார்ப்பனர்கள் மிக நுட்பமான பதுங்குகுழிகளை அமைத்திருக்கின்றார்கள்.தமிழர்களை எளிதாக அதில் பதுங்கிக்கொள்ள பார்ப்பனர்கள் பழக்கிவிடுகின்றார்கள் .பேச்சாளன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வரமறுக்கின்றான், பணக்காரன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வர மறுக்கின்றான். அவர்களை அதனைத் தாண்டி வர பழக்கவேண்டும் அதற்கு புரட்சிக்கவிஞரைப் படிக்கச் சொல்லவேண்டும்.

வா.நேரு – 08.10.2011

அழகாய் படமெடுத்தாலும்

உண்ணாவிரதம்
இருப்போர் எல்லாம்
காந்தியல்ல !

பந்தல் போட்டு
பட்டினி இருப்பதாலேயே
பத்தரை மாற்றுத்
தங்கமல்ல !

ஊடகங்கள் காட்டும்
செயற்கை வெளிச்சத்தில்
உண்மைகள் பொய்யாகும்
இருட்டெல்லாம் நிலவாகும்
நின்று யோசி !
பாம்பு
அழகாய் படமெடுத்தாலும்
கொட்டப்போவது
என்னமோ நஞ்சுதான் !