Sunday, 12 January 2020

சில்லுக்கருப்பட்டி திரைப்படம்....

சில்லுக்கருப்பட்டி திரைப்படம்


                 இன்று(12.01.2020) விடுமுறை நாள். எனது மகன் அன்புமணி ,அப்பா படத்திற்கு போவோமா என்றான். என்ன படம் என்று கேட்க, சமுத்திரக்கனியின் 'சில்லுக்கருப்பட்டி' என்றான். இருவரும் மதுரையில் உள்ள சண்முகா திரையரங்கில் காலைக் காட்சி சில்லுக்கருப்பட்டி பார்த்தோம் . படம் பார்த்தபின்புதான் தெரிந்தது, இது சமுத்திரக்கனியும் நடித்திருக்கும் படம் என்று.   இதனை அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் ஹலித்தா சமீம் அவர்களின் படம் என்றுதான் அறிமுகப்படுத்தவேண்டும். பெண் திரைப்பட இயக்குநரின் படம். 

குப்பை மேட்டில், பொருள்களைப் பொறுக்கி, பிரித்து எடுக்கும் சிறுவர்கள். குப்பை மேட்டில் அமர்ந்து கேப்பி பர்த் டே கொண்டாடும் சிறுவர்கள் எனப் படம் ஆரம்பிக்கும்போதே இது ஒரு வேறுபட்ட திரைப்படம் என்பது புரிந்தது. அந்தச்சிறுவர்களின் வீடுகள் எனச்சொல்லப்படும் குடிசைகள்,அதில் வசிக்கும் தாய்மார்கள், அதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவி எனப் படம் விரிகின்றது. மேல்தட்டு வீட்டில் வாழும் சிறுமி சாரா தனது வைர மோதிரத்தைத் தொலைத்துவிட அதனை குப்பைகளுக்குள் இருந்து எடுத்து, ஒளிந்து மறைந்து இருந்து அவளிடம் திருப்பித்தரும் சிறுவன் மஞ்சா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகுல், அதன்மூலமாக அந்தப்பையனுக்கு ஒரு ஆரஞ்சு கலர் பையில் பொருள்களை அனுப்பி வைக்கும் சிறுமி சாரா  என நெகிழ வைக்கும் கதை. 12,13 வயதில் இருக்கும் ஒரு சிறுவன், அதே வயதில் இருக்கும் பெண்....இருவருக்குமான புரிதல் என்பதை விட இப்படி குப்பை பொறுக்கும் உலகம்,சிறுவர்கள்,குடும்பங்கள்,ஏழ்மை என்பது  இன்றும் இருக்கிறது என்பதை பார்ப்பவர்களுக்கு காட்சிப்படுத்தி உணர்த்தும் கதை. 

திருமணம் நிச்சயக்கப்பட்ட,ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன்,மணிகண்டன். நிறைய அரசியல் மீம்ஸ் போடும் அந்த இளைஞனிடம் எதிர்க்கட்சிக்காரர் பேரம் பேசுகின்றார். நிறைய இன்னும் மீம்ஸ் போடு,உனக்கு பணம் தருகின்றேன் என்று. நான் எனது விருப்பத்திற்காக மீம்ஸ் போடுகின்றேன்.,பணத்திற்க்காக இல்லை,நான் ஒத்துக்கொள்ளவில்லை என்று வெளியே வரும் அந்த இளைஞன் நிறைய கனவுகளோடு அலைகின்றான். திடீரென அவனுக்கு வலி ஏற்பட, மருத்துவரிடம் காட்ட, கேன்சர் என்று ர்ப்போர்ட் வருகிறது. வாழ்க்கை வெறுத்து, மருத்துவமனைக்கு தினுமும் தாடி வைத்துக்கொண்டு செல்லும் வேளையில், கால் டாக்ஸியில் உடன் வரும் பெண்(நிவேதித்தா சதீஷ்) இவனைக் கவனிக்கிறாள். பேசுகிறாள். நகைச்சுவை சொல்கின்றாள்,வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஊட்டுகிறாள்.காக்கை மீதும் எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் அவளின் அன்பு இவனைக் குணப்படுத்துகிறது....அழகிய ஓவியம் போல அற்புதமாய் சொல்லப்பட்டிருக்கும் மனதை நெகிழ வைக்கும் கதை. யாருக்குத்தான் நோய் இல்லை, நோய் என்று வந்தால் ஒடிந்து விடாதே, ஊக்கமாக இரு, பார்க்கும் அனைவரிடமும் அன்பு செலுத்து. வாழ்க்கை மீது நம்பிக்கை வை என்னும்  இந்தப்பகுதி இந்தப்படத்தில் அற்புதம். எதிர்மறையாகச்சொல்லும் எத்தனையோ படங்கள் வருகின்றன. இது நேர்மறையாகச்சொல்லும் படம்.அதிலும் நேர்த்தியாக காட்சி, காட்சியாக அன்பால் செதுக்கப்பட்டிருக்கும் அற்புதம்.

இளம் பருவத்தில் காதலித்து ஒருவன் ஏமாற்றிவிட, திருமணம் முடிக்காமலேயே லீலா வயதாகி நிற்கின்றார். ஆனால் நம்பிக்கையும்,சிரிப்புமாய், உடன் இருப்பவர்கள் மேல் செலுத்தும் அன்புமாய் குதுகாலமாய் காலத்தைக் கடத்துகிறாளர். பேத்தி மாதிரி இருக்கும் ஒரு சிறுமி பூங்காவில் இருக்கும் சறுக்கில் விளையாட கட்டாயப்படுத்த, சறுக்கி விளையாடுகின்றார். இன்னொரு அபார்ட்மெண்டில் இருக்கும் மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராம் பைனாகுலர் மூலம் இவர்  சறுக்கி விளையாடுவதைக் காண்கின்றார். ஒரு இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இருவருக்கும் வாய்க்கிறது. பகிர்ந்து கொள்கிறார்கள். ஆமை முட்டைகளை சேகரிக்கும் டர்ட்டுள்ஸ் வாக்கிங்க் இருவரும் செல்கிறார்கள். ராமின் ஒரு வார்த்தையால் இருவரும் பிரிகின்றார்கள்.தனியாக இருக்கும் லீலா கீழே விழ, தகவலை ராமிற்கு  தெரிவிக்க இயலாமல் போகிறது. ஆட்டோ டிரைவர் மூலமாக அந்தப்பெண் லீலா  இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றார் ராம்.உறவாகத் தொடர்கின்றார்கள்.. முதியோர் காதல். ஒருவருக்கொருவர் துணையாய்....நிற்போம் என்னும் புரிதல்.....நிறைவாக சொல்லப்பட்டிருக்கிறது.புரட்சிக்கவிஞர் கூட வயதான கணவன் மனைவியின் காதலைத்தான் முதியோர் காதல் எனப்பாடினார் குடும்ப விளக்கில்.ஆனால் 18 வயதில் அரும்பும் காதல் போல 60 வயதில் அரும்பும் காதல் பற்றிச்சொல்கிறது இந்தப்படம். அது எவ்வளவு நியாயமானது என்பதனை பார்ப்பவர்களையும் உணரவைக்கிறது.


படம் இரண்டு மணி நேரம் என்றால், கடைசிப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் கழித்துத்தான் சமுத்திரக்கனி வருகின்றார். மனைவியாக சுனைனா நடித்திருக்கின்றார்.கணவன்,மனைவி, 3 பிள்ளைகள் என இருக்கும் குடும்பம். மனைவிக்கு எப்போதும் வீடு சுத்தமாக இருக்கவேண்டும். நேர்த்தியாக இருக்க வேண்டும். பிள்ளைகளை கவனித்து, புருசனை கவனித்து,பம்பரமாக சுற்றுகின்றார். காலையில் எழுந்ததும் ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கும் சமுத்திரக்கனி மனைவி சொல்வதை காதில் வாங்கிக் கொள்வதில் கவனமில்லாமல் இருக்கிறார், கணவன், மனைவி, சண்டை....அம்மு என்னும் இயந்திர மனிதி..அவள் இவர்களின் பிரச்சனையை எப்படித் தீர்த்து ஒன்று சேரவைக்கிறார் என்பதுதான் கதை. நடுத்தர வர்க்கத்தின் நடப்புக்கதை.குடும்பம் நடத்துகிறவர்களே, கொஞ்சம் காது கொடுத்து இணையர்கள் சொல்வதைக் கேளுங்கள். என்ன பிரச்சனை என்பதனை உளவியல் அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள். சரி பண்ணுங்கள் என்று சொல்கின்ற படம்.

  நான்கு குறும்படங்களை ஒன்று சேர்த்துக்கொடுத்த திரைப்படம் இது என்பதுதானுண்மை  ஆனால் அனைத்தையும் இணைப்பதாக காதலும், மற்ற மனிதர்கள் மேல் காட்டும் அன்பும் பரிவும் இருப்பதால் நிறைவாகத் தெரிகிறது.  படம் முழுக்க சண்டை ஏதுமில்லை. பெரிய ஹீரோத்தனம் ஏதும் இல்லை.வில்லத்தனம் இல்லை. கற்பழிப்பு, கதறல் காட்சிகள் ஏதுமில்லை. ஆனால் உளவியல் ரீதியாக எழும் அன்பு, அதனைப் புரிந்து கொள்ளுதல் என கவிதை போல பேசும் திரைக்கதை,வலிமையான வசனங்கள், இசை, ஒலி & ஒளி என அனைத்துமே நிறைவாக இருக்கும் திரைப்படம். சில நாட்களுக்கு முன்னால் கேரளாவில், ஒரு மலையாளப் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த போது எனது மகன் அன்புமணி 'அப்பா, இங்கு கேரளா சினிமாக்காரர்கள் எதார்த்த சினிமா எடுக்கிறார்கள். இவர்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை..பொய்ப்பிம்பங்களை காட்டுவதில்லை ' என்றான். அதனைப்போல இந்த சில்லுக்கருப்பட்டி படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது நமது தமிழ் சினிமாவும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. நமது தமிழ் ரசிகர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான படங்களும் வந்து கொண்டிருக்கிறது என்னும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இந்தப்படம் இருந்தது. வாழ்த்துகள்....பாராட்டுகள்...

படத்தைப் பார்த்துவிட்டு யூ டியூப்பிற்குள்,கூகுளிற்குள் போனால் நிறைய இருக்கிறது. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் உரையை யூ டியூப்பில் இப்போது பார்த்தேன். பொறுமையாக படத்தைப் போல நேர்மறையாகப் பேசியிருக்கின்றார். இந்தப் படத்தால் சாப்பிடப்போகும் இடத்தில் கிடைத்த தோழி என்று ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் .ஹலித்தா சமீம் ..காட்சி மொழியில் ஒரு கவிதை என ஆனந்த விகடன் பாராட்டியிருக்கிறது. இயக்குநர் ஹலித்தா சமீம் அவர்களின் பேட்டி, அவரின் தாயார்,அக்காவின் பேட்டி என நிறைய இணையத்தில் கிடைக்கிறது. உண்மையிலேயே கொண்டாடப்படவேண்டிய படம்.பாராட்டப்படவேண்டிய படம். நேர்மறை எண்ணங்களை நெஞ்சில் ஏற்றும் படம்.. முக்கியமாக பணம் கொடுத்து தியேட்டரில் போய்ப்பார்க்க வேண்டிய படம்.

படங்கள் உதவி : ஆனந்த விகடன் இணையதளம்