Sunday, 22 January 2012

ஏடெழுதும் பார்ப்பனர்களே!

ஏடெழுதும் பார்ப்பனர்களே!
ஏதேனும் ஒருநாளிலாவது
இதயத்தின் ஓரத்திலாவது
உண்மையை எழுதுதல் வேண்டும்
எனும் எண்ணம் உண்டா ?

சிறீரங்கநாதர் சொர்க்கவாசல்
திறப்பன்று விரஜாநதி மண்டபத்தில்
பட்டர்களின்
வேத விண்ணப்பங்களை
கேட்டாராம் !

சொர்க்க வாசல்
திறப்பு பற்றி
பக்கம் பக்கமாய்
பத்திரிகைகளில்
டவுட் தனபாலுக்கு
எந்தவித டவுட்டுமில்லே

தினமணியில்
இது உண்மையா?
சரிதானா? நியாயம்தானா?
இது உங்கள்
கடிதத்திலும் இல்லை!
தலையங்கத்திலும் இல்லை!

சொர்க்க வாசலா!
திறப்பா ! அப்படியா?
என்று மாமிகள் எல்லாம்
செய்தி மட்டும்
விசாரித்துக் கொண்டிருக்க
உண்மைதான் என்று
நம்பி
நாலு மணிக்கு எழுந்து
ஏழு மணி நேரம்
வரிசையில் நின்னு
சொர்க்கவாசல் பார்க்க
கோவிலுக்குப் போய்வந்த
எங்க சின்னாத்தா
காலு ஒடிஞ்சு கிடக்கா
கூட்டத்திலே
மிதிபட்டு

படிக்காத பாமர ஜனங்க மண்டையிலே
ஏத்திட்டிங்கே
எங்க மக்களையெல்லாம்
மரமண்டையா ஆக்கிட்டீங்க

உனது நம்பிக்கை
என்கிறாய்
உருக்குலைக்கிறதே
எனது உறவுகளை
உடலால் உள்ளத்தால்
எப்படி பார்த்துவிட்டு
அது உனது நம்பிக்கை
என நான் எட்டிச் செல்வது

நாங்களும் சொல்லிப்
பார்க்கிறோம்
விடாமல்தான்
அவங்க காதுக்கு
எங்க செய்தி
போகுமுன்னே
எட்டுக் கால் பத்தியிலே
கூசாமல் புளுகுறீங்க !
முதியவர்கள் அப்படியே
வளர்ந்துவிட்டார்கள் !

மூளையிலே ஊனமாகி
விட்டார்கள் !
வருகுது பார் !
இளையோர் பட்டாளம் !
இணையத்திலும்
பேஸ் புக்கிலும் உங்களது
பொய்மைகளை நொறுக்கி!

பெரியார் வழிப்
பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் !
கைகளில் கணினியோடும்
கண்களில் பொய்மை
கண்டு பொங்கும்
வெறியோடும்!
உங்கள் சொர்க்கவாசல்
புரட்டும் இனி
ரொம்ப நாள் தாங்காது !

- வா.நேரு நன்றி - விடுதலை நாளிதழ் -14-1-12

Sunday, 8 January 2012

அண்மையில் படித்த புத்தகம் : கடவுளை பார்த்தவனின் கதை

நூலின் தலைப்பு : கடவுளை பார்த்தவனின் கதை
மூல ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : பாலு சத்யா
வெளியீடு : புக்ஸ் பார் சில்ரன் , சென்னை-18
இரண்டாம் பதிப்பு : 2008
விலை : ரூ 20
மொத்த பக்கங்கள் : 64
மதுரை மைய நூலக எண் : 174037

லியோ டால்ஸ்டாய் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதை நாம் அறிவோம். காந்தியார் தனது வாழ்க்கையில் பாதித்த நூல்களில் ஒன்று லியோ டால்ஸ்டாய் அவர்களின் போரும் அமைதியும் எனக் குறிப்பிடுவோர். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் இந்த "கடவுளை பார்த்தவனின் கதை".புனிதப் பயணம் என்று பணத்தை அள்ளி இரைத்து சென்று வருபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை

இரண்டு பெரியவர்கள், இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு புனிதப் பயணம் போகின்றார்கள் , அதில் ஒருவர் மிக ஏழ்மையோடு சாகக் கிடக்கும் குடும்பத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவுகின்றார். புனிதப் பயணம் போவதற்காக வைத்திருந்த பணத்தை இவர்களுக்கு செலவழித்ததால் , மீதப் பயணத்தை தொடர முடியவில்லை . பயணத்திலிருந்து திரும்பி ஊருக்கு வந்து விடுகின்றார். மற்றொருவர் புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு வருகின்றார். இதுதான் கதை. ஆனால் இதனை லியோ டால்ஸ்டாய் சொல்லும் விதம் அற்புதம். லியோ டால்ஸ்டாய் 1828-ல் பிறந்து 1910-ல் மறைந்தவர். ஏறத்தாழ 150,160 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் இது. கடவுள் இல்லை என்று உரக்க சொல்லவில்லை இதில் ஆனால் மனிதனை நினை என்பது கடவுளை நினைப்பதை விட அதிகத் தேவையானது என்பது மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வா.நேரு - 09-01-2012

Thursday, 5 January 2012

மூன்று செய்திகள்

மூன்று செய்திகள்
30.12.2011 செய்தித் தாள்களில் மூன்று செய்திகள் என் கண்ணில் பட்டன. மூன்றுமே தனித் தனியானவை, ஆனால் கருத்து வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முதல் செய்தி:

குறி சொல்வதாகக் கூறி பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார்

காளையார்கோவில், டிச 30: குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத் காரம் செய்த சாமியாரை, காளையார் கோவிலில் காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகேயுள்ள திருவேங் கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து.

இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார். சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள் எனக் கேட்டுள்ளார். உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன் என சாமியார் கூறியுள்ளார்.

முத்தையாவும் இதை நம்பி, அவரின் மனைவி அழகம்மாளை சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு சாமியார் அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்து கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார்.

மனைவியின் சத்தம் கேட்டு தட்டிக்கேட்ட முத்தையாவை சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன் னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். காவல்துறை யினர் வழக்கு பதிந்து அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமியார் மாரிமுத்துவைக் கைது செய்தனர்.

இரண்டாவது செய்தி மூடநம்பிக் கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்

சென்னை, டிச 30 : மூடநம்பிக்கை களைக் கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் 29.12.2011 நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, அய்ரோப்பாவில், 1600ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை.

முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறு பட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தைக் கண்டு பிடித்து அறிவித்தனர். அறிவியல் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக் கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை உண்மைகளின் அடிப்படையில் சொல்லப் படுபவை.

ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை.

நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவி யல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.

சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக் கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்..

மூன்றாவது செய்தி : அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் விளம் பரம் The Dirctorate of Distance Education, Annamalai University in collaboration with Saptharishi Astrological Sciences Training and Research Academy, Madurai, Offers the Diploma in Astrology Programme during the academic year 2011-2012.
Diploma in Astrology 293, Advanced Diploma in Astrology 450, B.A., in Astrology 820 M.A., in Astrology 821.

மேலே இருப்பது அவர்களுடைய அதிகாரபூர்வமான இணைய வலைத் தளத்தில் இருக்கும் விளம்பரம் படிப்பு இதற்கான கட்டணம் எப்படி விண்ணப் பிப்பது போன்ற விவரங்கள் இருக் கின்றன. இதன் அதாவது சோதிடப் பாடத்தின் பாடத்திட்டமும், பாடப் புத்த கங்களும் தனியார் அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் என அறிவித்திருக்கின்றார்கள்.

முதல் செய்தியைப் பாருங்கள். கிராமத்தைச் சேர்ந்தவர், உழைப்பாளி, குறி சொல் லுதல், சாமியார் மீது நம்பிக்கை உள்ளது.அறியாமையால் சாமியாரை நம்பி அல்லல்படுகின்றார். இப்படி லட்சக் கணக்கான மக்கள் நாட்டில் உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்வதைப் போல அவர்களின் மூளையில் மூட நம்பிக்கை சங்கிலி பூட்டப்பட்டுள்ளது. அதனை உடைத்து சாதாரண மக்களை இந்த சதிகாரர்களான சாமியார்கள், ஜோதிடர்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். இதனைத் தான் நமது அரசியல் சட்டம் கூட அறிவியல் மனப் பானமையை வளர்க்க வேண்டும் என்று கூறுகின்றது. இரண்டாவது செய்தியைப் பாருங்கள். நோபல் பரிசு பற்ற அறிவியல் அறிஞர், ஜோதிடம் பொய் என்று சொல்லி யிருக்கின்றார்.

பிறக்கும் நேரத்தை வைத்தெல்லாம் நமது வாழ்க்கை இல்லை, இதனை நம்பாதீர்கள், கோள்கள், நட்சத்திரங் களை வைத்தெல்லாம் நமது வாழ்க்கை இல்லை. .அறிவியல் பூர்வமாகப் பாருங் கள். மூடநம்பிக்கைகளை விட்டொழி யுங்கள் என்று கூறியிருக்கின்றார்.

இதனை வெளியிட்ட பத்திரிகை, இணைய தளத்தில் பின்னூட்டம் என்ற பெயரில் வெகுவாக இவரைச் சாடியிருக்கிறது. மூன்றாவது செய்தியைப் பாருங்கள். பல்கலைக் கழகத்தில் சோதிடப்பாடமாம். சிரிப்பாய் வரவில்லை.

பல்கலைக் கழகத்தில் திருடுவது எப்படி எனச் சொல்லிக்கொடுக்கலாமா? ஏமாற்றுவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்கலாமா? அறியாமையில் இருக் கும் மக்களிடமிருந்து பணம் பறிப்பது எப்படி எனச் சொல்லிக் கொடுக்கலாமா? மோசடித்தனத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொண்ட சோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில், அதுவும் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் சொல் லிக் கொடுக்கலாமா?

கல்வியாளர்கள் எதிர்க்க வேண்டாமா? மாணவர் அமைப் புக்கள் எதிர்க்க வேண்டாமா? அறிவி யலுக்குப் புறம்பான இந்த ஏமாற்றுத் தனத்தை எப்படிப் பொறுப்பது? களத்தில் இறங்க வேண்டாமா? அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புகழ் பெற்ற பல்கலைக் கழகம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது வாழ்வியல் சிந்தனைகள் நூலில் அதன் பெருமை களை, அதனை நிறுவிய வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்களின் தனித்தன்மைகளை சிறப்பித்து சொல் லியிருப்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் போன்ற பல வரலாற்று நாயகர்களை உருவாக்கிய பல்கலைக் கழகம் . அப்படி பெருமைக்குரிய பல்கலைக் கழகம்தான் ஒரு தனியார் டிரஸ்டோடு சேர்ந்து இதனை சொல்லிக் கொடுக்கிறோம் என்று ஆரம்பித்திருக்கின்றார்கள், இந்தக் கொடுமையைக் கண்டு சும்மாயிருப்பதா?

சோதிடம் என்பது மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது. அதிலும் இந்தியா போன்ற படித்த தற்குறிகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சோதிடம் என்னும் பொய்மை கலக்கப்படுகினறது மிகச் சாதுரியமாய். தினசரி ராசிபலன், வார ராசி பலன், மாத ராசி பலன், வருட ராசி பலன் என்று ஒரு பக்கம், வாஸ்து சாஸ்திரம், பெயர் மாற்றம், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி இப்படி ஏகப்பட்ட மோசடி வித்தைகளால் மக்கள் ஏமாற்றப்படுகின் றார்கள். பல்கலைக் கழகங்கள் கல்வியின் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்து இப்படிப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து மக்கள் விடுபட வழி செய்ய வேண்டும், அதற்கு மாறாக மேலும் மூடத்தனத்தில் மூழ்கும் வண்ணம் பாடத் திட்டம் கொடுக்கலாமா? ஊடகங்கள் செய்ய வேண்டும் சோதிட எதிர்ப்பு பிரச் சாரத்தை?

ஆனால் நம் நாட்டில் தொலைக் காட்சிகளும், செய்தித்தாள்களும் தான் இந்த பொய்மையாம் ஜோதிடத்தைப் பரப்புவதில் முன்னணி வகிக்கின்றனர். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை இன்றைய ராசி, இன்றைய நாள் பலன், இன்றைய நட்சத்திர பலன் என்று ஆரம் பித்து 20 தலைப்புகளில் சோதிட பலன் என்று போட்டிருக்கின்றார்கள்.

எல்லாப் பத்திரிகையும் சோதிட இணைப்புகள் வழங்குகின்றன, விடுதலைதான் இதனை எதிர்த்து உண்மையை எழுதுகின்றது. எது எதற்கோ, சந்தேகப்படும் டவுட் தனபாலு' இதில் மட்டும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் அந்தப் பரிகாரம் செய்யுங்கள், சரியாகும், இந்தப் பரிகாரம் செய்யுங்கள் சரியாகும் எனத் தன் பார்ப்பன இனம் உழைக்காமல் வாழ கைகாட்டிக் கொண்டி ருக்கின்றாரே, தமிழ் இனத்தைச் சார்ந்த வர்களுக்கு உணர்ச்சி வர வேண்டாமா?

தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அதே பத்திரிகை பெயர் வைக்க ஜோதிடத்தின் அடிப்படையில் கொடுத்திருக்கும் எழுத்துக் களைப் பாருங்கள்

இன்று (30.12.11) காலை 11.05 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்துகள்:

கோ (GI) ஸ (SA) ஸி (SI) ஸு (SU) கொ, ஸா, ஸீ, ஸூ

இன்று காலை 11.05க்கு பின் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்துகள்:

ஸே(SE) ஸோ (SO) தா (THA) தி (THI)

இரண்டு எழுத்துக்களைத் தவிர மற்ற எழுத்துக்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? ஜோதிடம் என்னும் பெயரில் மறைமுகமாய் தமிழன் தன் பிள்ளைக்குத் தமிழில் பெயர் வைப்பது தடுக்கப்படு கின்றதே நரித்தனமாய், இது ஈரோட்டுக் கண்ணாடி போட்டவர்களுக்கு பளிச் செனத் தெரிகிறதே , மற்றவர்களுக்குத் தெரியவில்லையா?

பார்ப்பனப் பத்திரிகைகள் ஜோதிடத் திற்கு எதிராக எழுத மாட்டார்கள். அறிவியலின் அடிப்படையில் ஜோதிடம் ஓர் இட்டுக்கட்டிய பொய் என்றாலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்.

பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் பைந்தமிழ்க்கோ சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும் நன்மை யில்லை என்றார் புரட்சிக்கவிஞர். ஆம், ஊடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில்தான் இருக்கிறது.

விடுதலைதான் எழுதுகிறது, அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு நாத்திக பத்திரிகையின் ஆசிரியராய் தொடர்ந்து இருந்து உலக சாதனை படைத்துள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுது கிறார் என்றால் நமது தமிழ் இனமக்கள் இந்த ஜோதிட நம்பிக்கையால் படும் துன்பங்களிலிருந்து விடுபட எழுது கின்றார்.

கல்வி என்பது அறியாமையைப் போக்க வேண்டும், ஆனால் அறியாமை யில் இருக்கும் மக்களை மேலும் அறியா மையில் ஆழ்த்துகின்ற செயலை செய்யும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் கண்டிக்கிறோம். உடனடியாக சோதிடப் பாடப்பிரிவை நீக்கவேண்டும். இல்லை யெனில் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் நீக்க வைக்க வேண்டும்.
நன்றி - விடுதலை 06.01.2012 - 2ஆம் பக்கம் கட்டுரை

Tuesday, 3 January 2012

அண்மையில் படித்த புத்தகம் : சந்தித்ததும் சிந்தித்ததும்

நூலின் தலைப்பு : சந்தித்ததும் சிந்தித்ததும்

ஆசிரியர் : முனைவர் கு.ஞானசம்பந்தன்

வெளியீடு : அமுதம் பதிப்பகம், மதுரை-20

முதல் பதிப்பு : செப்டம்பர் 2011

மொத்த பக்கங்கள் : 76

விலை : ரூ 60


பிள்ளைகள் பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளைத்தான் தொலைக்காட்சிகளில் பார்க்க விரும்புகிறார்கள், செல்லும் பேருந்துகளில் திரைப்படத்திற்குப் பதில் நகைச்சுவைக் காட்சிகளை ஒலிபரப்புகிறார்கள், அந்தளவிற்கு டென்சன் மிகுந்த பர பர உலகில் நகைச் சுவையின் தேவையிருக்கிறது. ஒரு சிறந்த , படிக்கும்போதே நம்மை வாய்விட்டு சிரிக்கவைக்கும் புத்தகமாக 'சந்தித்ததும் சிந்தித்ததும் ' வந்திருக்கிறது.

10 கட்டுரைகளின் தொகுப்பு. கமல் பற்றி, எழுத்தாளர் சுஜாதா பற்றி, பாக்யராஜ் பற்றி, மதுரையில் இருந்த தங்கம் திரையரங்கு பற்றி, சுற்றுலா சென்றது பற்றி, கையில் காசில்லாமல் ஓசியில் தீபாவளிக்கு வேட்டுப் போட அலைந்தது பற்றி என்று பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை கூறியுள்ளார்.

பேச்சில் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல், எழுத்திலும் வந்திருப்பது வியப்புதான். பாராட்டுக்குரியதுதான். அதிலும் இள்வயதில் வைகை அணைக்கு சுற்றுலா கூப்பிட்டுச் சென்றதில் இருக்கும் நகைச் சுவை இருக்கிறதே ,அப்பப்பா.... நேற்று இரவு இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு சிரித்துக்கொண்டே படுத்தேன். இன்று காலை மீதம் இருப்பதை படித்துவிட்டு சிரித்துக்கொண்டே கணினி முன் அமர்ந்திருக்கிறேன்.

கடுமையான வேலைப்பளுவில் இருப்பவர்களிடம் கொடுத்து , கொஞ்சம் படித்து, சிரித்து ,இளைப்பாறுங்கள் என்று கூறலாம்.

வா.நேரு, 4.1.2012