Sunday, 23 June 2013

அணமையில் படித்த புத்தகம் : லண்டன் (ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம் )

புத்தகத்தின் தலைப்பு    :        லண்டன் (ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம்)

எழுதியவர்                          :  மு.சங்கையா

வெளியீடு                           :   வாசிப்போர் களம், மதுரை ,   , 160 பக்கங்கள் , விலை ரூ 100 .

                                                                          எத்தனையோ தமிழர்கள் வெளி நாடுகள் போகின்றார்கள், சொந்த காரணங்களுக்காக. ஆனால் சென்ற இடங்களை , பார்த்த இடங்களை  பதிய வேண்டும் என்ற எண்ணம் சில பேர்களுக்கு மட்டுமே வருகின்றது. அதுவும் பார்த்த இடங்களைத  தான் நம்பும் கொள்கைப் பார்வையோடு பார்ப்பதும், பதிவதும் மிகவும் அரிது. அவ்வகையில் இந்தப் புத்தகம் புதுமையான முயற்சி எனலாம்.

                                                                          அணிந்துரையில் " இந்த நூல் இலண்டனை மட்டுமல்லாது இங்கிலாந்தின் அரசியல் பொருளாதார நிலைகளைப் புதிய கோணத்தில் விளக்கி நம்மைச்சிந்திக்க வைக்கிறது உண்மை. : என்று வாசிப்போர் களத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.கருப்பையா சொல்வது உண்மைதான். புதிய கோணத்தில் , புதிய பார்வையில் ஒரு பயண நூல் எனலாம்.

                                                                              " 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மைச் சுரண்டிக் கொழுத்த ஒரு சாம்ராஜ்யம்தான் பிரிட்டன், அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இறுகிப்போயிருந்த இந்திய சமூகக் கட்டமைப்பிற்குள் ஒரு அதிர்வையும், சலனத்தையும் ஏற்படுத்தியதும் 'உடன் கட்டைக்கு ' கொள்ளி வைத்ததும் இதே பிரிட்டன் தான் " என்று முன்னுரையில் பிரிட்டனின் இரண்டு முகங்களைக் காட்டும் நூலாசிரியர் மு.சங்கையா , நூல் முழுக்க பிரிட்டனின் முரண் முகங்களைச்சுட்டிக் காட்டிச்செல்கின்றார் இயல்பாக.

                                                                         மொத்தம் 31 தலைப்புகளில் தனது இலண்டன் பயணத்தை, இலண்டன் பற்றிய வரலாற்றுக்குறிப்புகளை, இலண்டனில் தான் கண்ட பல்வேறு இடங்களை நூல் ஆசிரியர் பதிவு செய்திருக்கின்றார். " பிரிட்டன் ஒரு மதம் சார்ந்த நாடாக தன்னை அறிவித்துக்கொண்டாலும் , ஒரு மதச்சார்பற்ற நாடு போல ஜனநாயகப்பூர்வமாகவே இன்று நடந்து கொள்கிறது. முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சி , மதததைக் கொஞ்சம் தள்ளி வைக்க உதவியிருக்கிறது " (பக்கம் 16 ) என்று குறிப்பிடுகின்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச்சேர்ந்த ஒரு தோழர் இலண்டன் சென்று வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது "நமது நாட்டில் பக்தியின் பெயரால் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கின்றபொழுது , இவை மறையாதா, மக்களிடம்  இந்த பக்தி மனப்பான்மை மறாதா என்ற வருத்தம் ஏற்படும் . ஆனால் இலண்டன் சென்று சர்ச்சுகளுக்கு செல்ல விருப்பம் இல்லாத, பக்தி மனப்பான்மை இல்லாத பல பேரைப்பார்த்த பொழுது ஒரு நம்பிக்கை வந்தது. மதம் விரைவில் முதலாளித்துவ உலகில் கூட  காணாமல் போகும் எனும் நம்பிக்கை வந்தது "என்றார். இந்தியாவில் மக்கள் மாறி விடுவார்களோ என்னும் பயத்தில்தான் ஊடகங்கள் கோயிலையும் , கும்பாவிசேகத்தையும் ஒலிபரப்பிக் கொண்டு அலைகின்றார்கள் போலும்.

                                                        'தோழர் மார்க்ஸின் கல்லறையில்  என்னும் கட்டுரை நூல் ஆசிரியர் மு.சங்கையாவின் உறுதிப்பாட்டையும் கொள்கையையும் காட்டுவதோடு, மார்க்ஸிப்பற்றி தெரியாதவர்கள் அவரைப் பற்றி அறிய இந்தக் கட்டுரை உறுதியாகத் தூண்டும். வோர்ட்ஸ் ஒர்த்தையும் , புரட்சிக் கவிஞரையும் ஒப்பிட்டு (பக்கம் 79 ) நூல் ஆசிரியர் பேசுகின்றார். " பாரதிதாசனின் அழகின் சிரிப்பு கூட வோர்ட்ஸ் ஒர்த்தின் பாதையிலேயே பயணிக்கிறது என்றாலும் அதையும் தாண்டி , சமூகத்தின் மீது பாவேந்தர் பாரதிதாசனின் பார்வை ஆழமாய்ப் பதிகிறது " என்று குறிப்பிடுதல் நல்ல ஒப்புமை.

                                                        மிக விரிவாக இலண்டனைப் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம் , நூல் ஆசிரியரின் முதல் புத்தகம் என்றாலும் , நூல் ஓட்டம் மிக அருமையாக உள்ளது. வாசிப்பதில் எந்த இடத்திலும் தடங்கள் இல்லாது நீரோட்டமாக செல்கின்றது. வெளி நாடுகளில் உள்ள தமிழர்களும், வெளி நாடு சென்று வரும் தமிழர்களும், வெளி  நாட்டைத் தெரிந்து கொள்ள விரும்புவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் .  .

Saturday, 22 June 2013

மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி .....நோயாளிகளை
வலுக்கட்டாயமாய்
வெளியேற்றிவிட்டு
ஆரோக்கியமானவர்களை
மட்டுமே
வைத்துக்கொள்ளும்
மருத்துவமனைகளோ
பள்ளிக்கூடங்கள் ?

நானூற்றி அறுபதுக்கு
குறைவாய் மதிப்பெண்ணா ?
மிதியாதீர் எங்கள்
பள்ளியின் வாசலை
வாங்காதீர் மாணவர்
சேர்க்கை விண்ணப்பங்களை
கட்டளையிடும் பள்ளிகளுக்கு
முன்னால் இரவும்
பகலுமாய் காத்திருக்கின்றார்கள்
பெற்றோர்கள் ?

படிக்க இயாலதவனை
படிக்க வைக்கத்தான்
பள்ளிக்கூடம் என நினைத்தோம்
நன்கு படிக்கும்
மாணவனை மறைமுகமாய்
கழுவேற்றி
நகலெடுக்கும் எந்திரமாய்
அவனை மாற்றி
வென்றெடுத்தோம்
முதலிடத்தை என
செய்தித்தாளில் மார்தட்டி
பணம் குவிக்கும்
மதுக்கடைகளாய்
பள்ளிக்கூடங்கள் மாறிப்போன
மர்மம் என்ன ?

மதுக்கடைக்கு முன்
குவியும்
குடிகாரர்கள் போல்
செய்தித்தாளில் வரும்
பள்ளிகளுக்கு முன்
குவியும் பெற்றோர்கள் காரணமோ?
அரசுப் பள்ளிகளை
அல்ட்சியப்படுத்தும்
ஆட்சி முறை காரணமோ ?
ஏன் இந்த நிலை எனும்
காரணத்தை அறிவோமோ ?
களைந்திடவே இணைந்து
நாம் ஏதேனும் செய்வோமோ ?


நீயாக யோசிக்காதே !
மற்ற எதையும் வாசிக்காதே !
வகுப்பறைக்கு வெளியில்
கூடப்பேசாதே !'
எவரோடும் பேசிச்சிரிக்காதே !
பள்ளி சொல்வதைக் கேள்
மனனம் செய் ! மனனம் செய் !
பிள்ளைகள் மனதால்
நொந்தாலும் வெந்தாலும்
பரவாயில்லை
என நினைக்கும் பெற்றோரே
உள்ளத்தால் மாறுங்கள் !

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை !
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர் எல்லாம் ஜெயித்ததில்லை !
ஜெயித்தவர் பலபேர்
நன்கு படித்ததில்லை !
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல் !

எழுதியவர் : வா. நேரு
நன்றி : எழுத்து.காம்

Tuesday, 18 June 2013

மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேருவின் தாயார் நினைவாக

சாப்டூரில் முத்துகிருஷ்ணம்மாள் பெயரில் படிப்பகம் அமைக்கவேண்டும்


படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை
மதுரை, ஜூன் 17-  மதுரை மாவட் டம் சாப்டூரைச் சேர்ந்த நினைவில் வாழும் திரு. க.வாலகுரு (ஆசிரியர்) அவர்களின் துணவியாரும், பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களின் தாயா ருமான திருமதி சு.முத்துக் கிருஷ்ணம் மாள் (தலைமை ஆசிரியர், பணி நிறைவு) அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு  16.06.2013 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள மாயத்(தேவர்) திருமண மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழ கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன்  தலைமையேற்றார். படத் தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் திறந்து வைத்தார். பொன்னாடை அணிவித்து பாராட்டு!
17 ஆண்டுகள் திருமதி சு.முத்துக் கிருஷ்ணம்மாளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமிகு டாக்டர் வி.என். இராஜசேகரன் அவர்களுக்கும், வா. நேருவின் தலைமை ஆசிரியராக சாப் டூரில் இருந்தவரும், அவரைப்போன்ற பல மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பம் வரக்காரணமாக இருந்து கற்பித்தவருமான ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வி.வீரி செட்டி அவர்களுக்கும் தமிழர் தலை வர் அவர்கள் பொன்னாடை அணி வித்து பாராட்டினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, வா. நேருவின் தாய்மாமா புலவர் தங்கமுத்துராசா (தலைமை ஆசிரியர் ஓய்வு, அறந்தாங்கி), தொலைத்தொடர்பு தொ.மு.ச. சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் அ.செல்லப்பாண்டியன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங் கோவன், அமைப்புச்செயலாளர் பேரா.பூ.சி.இளங்கோவன், தொலைத் தொடர்பு தொ.மு.ச. சங்கத்தின்  அகில இந்தியத் துணைத் தலைவர் டி.மகேஸ் வரி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.கும ரேசன்  ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். மருத்துவர் சோம.இளங்கோவனின் இரங்கல் செய்தி
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன்
அவர்கள் முக நூலில் அனுப்பிய இரங்கல் செய்தியை பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் சுப.முரு கானந்தம் வாசித்தார். தொடர்ந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். தமது உரையில், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா. நேருவும், பொதுச்செயலாளர் வீ.கும ரேசனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள், பகுத்தறி வாளர் கழகப் பணியாற்றக் கூடியவர் கள்.  வா. நேருவின் உறவினர் தங்க முத்து ராசா இளமைக்காலத்தில் கிராமத்தில் இருந்த கூட்டுக் குடும்ப முறை பற்றியும், பகிர்தலைப் பற்றியும் குறிப்பிட்டார். ஒரு சிறிய கிராமமான சாப்டூரில் பிறந்து, ஆசிரியராகப் பணியாற்றி, மிகக்குறைந்த வயதில் கணவரை இழந்தபோதும் தனது 5 குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, தம்பிகள் படிப்பதற்கும் மிகச் சிறந்த ஊக்கச் சக்தியாக இருந்தது ஆச்சரியமளிக்கிறது.   இன்றைக்கும் கூட சதிமாதா எனச்சொல்லி இராஜஸ் தான் போன்ற இடங்களில், கணவன் இறந்தவுடன் அவர்களைத் தீயில் தள்ளி கொல்லும் அவலம் இருக்கிறது; ஆனால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார். மற்ற மதங்களில் விதவைகள் உண்டு; ஆனால் அர்த்தமுள்ள இந்து மதம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தில்தான் விதவைத் தன்மை என்பது உண்டு, விதவைகள் என்பதற் காக பல்வேறு வகைகளில் அவர்களை அவமானப்படுத்தும் தன்மை உண்டு.
திருமணம் போன்ற நிகழ்வுகளில் அவர்களை ஒதுக்கிவைத்து மனதைப் புண்படுத்தும் தன்மை உண்டு. நேரு வின் துணைவியார் நே.சொர்ணம் பல்வேறு வகையில் அவருக்கு உறு துணையாக இருந்தார். நேரு, தன்னுடைய தாயாரின் நினை வாக சாப்டூரில் அவரது பெயரிலேயே படிப்பகத்தை உருவாக்கவேண்டும். அதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்று குறிப்பிட்டு உரையாற்றினார். வா. நேரு நன்றியுரையாற்றினார்.  திருமதி மோகனா  அம்மையார், திரா விடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன் ராசா, சிவகங்கை வழக்கறிஞர் ச.இன்ப லாதன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் புதுச்சேரி மு. ந. நடராசன், விருதுநகர் க. நல்ல தம்பி, தர்மபுரி ஊமை.ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை  க.அறிவொளி, விருதுநகர் தி.ஆதவன், நெல்லை சு.நயினார், திருமாவளவன்,  எழுத்தாளர் க.சி.அகமுடைநம்பி, சாப் டூர் சு.கோபாலகிருஷ்ணன், சு.இராதா கிருஷ்ணன், துணைக் கல்வி அதிகாரி சு.பாலகிருஷ்ணன், ஆசிரியர் வா.சாரதா, தொலைத்தொடர்பு தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் எஸ்.கருப்பையா, சூரியன், சவுந்தர், விஜயரெங்கன், ந.முருகன், அன்பழகன், மு.சங்கையா, செந்தில்குமார் உள்ளிட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்கள், தொழிற்சங்கப் பொறுப் பாளர்கள், சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் பங்கேற்ற நிகழ்வாக இந்த நினைவேந்தல் நிகழ்வு அமைந்தது. திராவிடர் கழகத்தின் மதுரை மண்டலத் தலைவர் வே.செல்வம் நிகழ்ச்சியையும், நிகழ்ச்சிக்கான முன் னேற்பாடுகளையும், தோழர்களையும்  ஒருங்கிணைத்தார்.

நன்றி;விடுதலை 17/06/2013 8ம் பக்கம்

Wednesday, 12 June 2013

சொல் போதும் எனக்கு !

பல்கலைக் கழகங்கள்
பல தருகின்ற
'மதிப்புறு முனைவர்'
பட்டங்கள்
எனக்கு வேண்டாம் !
பசித்திருக்கும் ஒருவன்
என் செயலால் பசியாறி
'நன்றி அய்யா '
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு !

சாத்னையாளன்
நான் எனச்
சட்டைக் காலரைத்
தூக்கிவிட்டுத்
திரிதல் வேண்டாம் !
சக மனிதன் என்னை
'மனிதன் இவன் '
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு !

முற்றும் துறந்தவன்
எனச்சொல்லி
முனிவரைப் போல் வேடமிடல்
வேண்டாம் எனக்கு !
உடன் வேலைபார்க்கும்
சக மனுசி
ஆபத்தில்லை இவரால்
என்று அகம் மகிழ்ந்து
சொல்லும் சொல்
போதும் எனக்கு !

மாட மாளிகையும்
பவனி வரக் காரும்
பவுசும் வேண்டாம் எனக்கு !
நல்ல மகன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
என்று எனது
உறவுகள் சொல்லும் சொல்
போதும் எனக்கு !

  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 6-Jun-13, 9:46 pm
  • nantri: eluthu.com

Wednesday, 5 June 2013

'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே'-சிறுகதை - எழுதியவர். வா. நேரு

சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சுகின்ற அளவில் பிரமாண்டமாய் அந்தக் கட் அவுட் இருந்தது. கிளம்பும்போதே என் மகன் முத்துவிடம் ," டேய், உன்னுடைய  பிரண்டு வீட்டு விசேசத்துக்கு போகணும்னு சொன்னியே, தெருப்பெயரைக் கேட்டாயா? மண்டபம் பெயர் கேட்டாயா? " என்று  கேட்டபோது முத்து சிரித்துக்கொண்டே " அப்பா, அந்தப் பகுதிக்கு போய் விட்டாலே , வரிசையாக கட் அவுட் இருக்குமாம் , ஈஸியா கண்டுபிடித்து விடலாம் " என்று சொன்னான் , உண்மைதான், கட் அவுட்டுகள்தான் கண்டுபிடிக்கும் கருவிகள் போலிருக்கிறது.

                                   வரிசையாய் கட் அவுட்டுகள். அனைத்திலும் முத்துவின் நண்பன்  சின்னச்சாமி, அவனது அப்பா, அம்மா சிரித்துக்கொண்டும், கைகூப்பி வரவேற்றுக் கொண்டும், பல்வேறு வண்ணங்களில், சைசுகளில் கட்-அவுட்டுகள்.. ஒரு கட அவுட்டில்  சின்னச்சாமி அப்படியே பறந்து கொண்டு இருந்தான், ஒன்றில் குதித்த வண்ணம், ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வண்ணம்,ஒன்றில் செல்போனில் பேசிய வண்ணம். அப்பப்பா ! ஆச்சரியமாக இருந்தது. முத்துவின் நண்பன் சின்னச்சாமி ஒன்றும் பெரிய பணக்கார வீட்டுப்பையன் அல்ல. அன்றாடங்காய்ச்சிக்கு கொஞ்சம் மேலே, அவ்வளவுதான். அவனது அப்பா ஓட்டுவது வாடகைக் கார்தான். அம்மா சத்துணவில் வேலை பார்ப்பதாகச்சொன்னான். சின்னச்சாமியின் அப்பா வாடகைக் கார் ஓட்டுவதில் நல்ல பெயர் எடுத்திருந்தார். எல்லாரோடும் நல்ல பழக்கம் வைத்திருப்பார் போலும்,. மண்டபத்திற்கு முன் ஏகப்பட்ட வண்டிகள் நின்றிருந்தன. வண்டியைப் பார்த்து நிப்பாட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எனக்கு. மண்டபத்திற்குள் நுழைந்த போது மண்டபம் நிறைய ஆட்கள் இருந்தார்கள்.

                                ம்ண்டபத்திற்குள் ஏற்கனவே எனக்கு அறிமுகம் ஆன  ஆட்கள் நிறைய இருந்தார்கள். மார்க்கெட்டில் தக்காளி விற்பவரின் மனைவி, கீரை விற்பவர், கொய்யாப் பழக்கடைக்கார அக்கா, சோயா பீன்ஸ் கடைக்காரி என்று பலரும் அறிமுகம் ஆனவர்கள், மார்க்கெட்டில் 5 ரூபாய் , பத்து ரூபாய் என்று காய்கறி விற்பவர்கள், சில் நேரம் யோசித்துப்பார்ப்பதுண்டு. ஒரு கிலோ தக்காளிக்கு 2 ரூபாய் லாபம் கிடைத்தால்கூட 100  கிலோ விற்றால்தான் 200 ரூபா கிடைக்கும்,. ஆனால் அரசாங்க சம்பளத்தில் ஒரு நாளைக்கு 1000 ரூயாய் என்பது எல்லாம் மிகக்குறைந்த சம்பளம் என்று. கூட வேலை பார்க்கும் ஒருவர் ஒரு நாள் கோபித்துக்கொண்டார், எனக்குத் தெரிந்து " அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் அதிகம், குறைத்துக் கொடுக்க வேண்டும், சாதாரண தொழிலாளிக்கும் அரசாங்க ஊழியருக்கும் நிறையச் சம்பள வித்தியாசம் இருக்கக்கூடாது என்று சொன்ன தலைவர் ஒருவர்தான், அவர் பெரியார்தான் " என்று சொன்ன போது கோபித்துக்கொண்டு போன ஆள் 10,20 நாளாக என்னோடு முகம் கொடுத்தே பேசவில்லை. உழைக்கும் கூட்டமாய் நிறையப்பேர் அந்த விசேச வீட்டில் இருந்தார்கள்.

                                மண்டபம் முழுக்க நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தது. மேடையில் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. இறந்துபோன ஜாதித் தலைவர்கள் போல் வேடமணிந்த இருவர் மேடையில் தோன்றினர். விசில்கள் பறந்தன, வேடமணிந்த  தலைவர்கள் அங்கும் இங்கும் நடந்து  ஆசிர்வதித்தனர். தலைவரைப் போற்றும் சினிமாப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. வேடமணிந்த தலைவர்களைச்சுற்றி 4, 5 பேர் நடனம் ஆடினார்கள். இடை இடையே தலைவர் வேடமணிந்தவர்கள் கூட்டத்தைப் பார்த்து  கும்பிட்டார்கள். ஜாதி உணர்வு எப்படி தலைக்கேறுகின்றது இளைஞ்ர்களுக்கு என்பது எளிதாகப் புரிந்தது எனக்கு.

                                  வரவேற்கும் இடத்தில் நாலு அண்டாக்கள் இருந்தன. மஞ்சள் துணியை கட்டி, நடுவில் பெரிய ஓட்டை போட்டு அண்டாவை மூடி வைத்திருந்தார்கள். வரவேற்ற முத்துவின் நண்பன் சின்னச்சாமி ' அங்கிள் , சாப்பிடப் போங்க" என்றான். கொஞ்ச நேரம் ஆகட்டுமே என்றேன், "இல்லை , வர, வர ஆட்கள் போய்க்கொண்டேதான் இருக்கின்றார்கள், நீங்கள் தான் பார்மாலிட்டி எல்லாம் பார்க்காதே ஆள் ஆச்சே, போங்க " என்றான். முத்துவோட படித்த பல நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த உற்சாகத்தில் முத்து உட்கார்ந்து கொள்ள, நான் மட்டும் சாப்பிடப்போனேன்.

                                  சாப்பிடும் இடத்திலும் கூட்டம்தான். சாப்பிடும் இடத்தில் ," என்னமா, இவன் கெடாயைக் கின்னு வெட்டாம, வெறும் சாம்பார் சோத்த போட்டுக்கிட்டு இருக்கான். " என்றாள் ஒருத்தி. "எல்லாம் மொய் வாங்குறத்துக்கு நடத்துகிற விசேசம்தானே, இவன் ஏற்கன்வே வீட்டைக் கட்டி, 3 மாசத்துக்கு முன்னாடியே குடி போயிட்டான், இப்போத்தான் விசேசம்ன்னு வச்சு, சாம்பார் சோத்தைப் போட்டுக்கிட்டு இருக்கான் : " என்றாள் ஒருத்தி. "ஏய், இப்போ எல்லாம் எல்லா வீட்டிலும் மினரல் வாட்டர் - பாட்டில் தண்ணீர்தான் வைக்கிறாங்க. இங்கே கார்ப்பரேசன் தண்ணீரை மோந்து மோந்து ஊத்துராங்கே " என்றா:ள் இன்னொருத்தி. கவனித்துக்கொண்டே சாப்பிட்டிக் கொண்டிருந்தேன். சாப்பாடு ஒன்றும் விளங்கவில்லை, ஏதோ பெயருக்கு சாப்பிட்டு விட்டு கீழே வந்தேன்.

                            இப்போது மேடையில் தலைவர்களைப் போல வேடமணிந்த்வர்களைக் காணோம். குத்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. கிராமத்தில் சிறு வயதில் பார்த்த ரிக்கார்டு டான்ஸ்.  வயசுக்கு மீறிய அத்து மீறல்கள் , ஆபாச சைகைகள், ஆபாச நடனம் என அரசாங்கம் ரிக்கார்டு டான்ஸ்சுகளைத் தடை செய்தது ஞாபகத்தில் இருந்தது. ஆனால் அரசாங்கம் தடை செய்த ரிக்கார்டு டான்ஸ் , மண்டபத்திற்குள் விசேசம் என்னும் பெயரில் நடந்து கொண்டிருந்தது. முக்கல், முணங்கல் பாடலகள். ஒரு பாடலுக்கு ஆடிய ஒருவன், கூட ஆடிய பெண்ணைத் தூக்கி அப்படியே நெஞ்சோடு சேர்த்து கொஞ்ச நேரம் வைத்திருந்தான். கைதட்டலும், விசிலும் அரங்கத்தை வேறு எங்கோ கொண்டு போய்க்கொண்டிருந்தது. நடிகர் விஜயகாந்த் போலவே தோற்றம்ணிந்த ஒருவர் 'அக்கா மகளே ' எனப் பாட்டு பாடினார் ஒரு பெண்ணோடு. பாக்யராஜ் போல, சூரியா போல, விஜய் போல எனப் பல நடிகர்களின் வேடங்களில் டூயட் பாடல்களைப் பெண்களோடு பாடினார்கள். ஆடிய பெண்களும் சளைத்தவர்களாக இல்லை, அவிழ்த்துப்போட்டு ஆடாததுதான் பாக்கி.. எரிச்சலாக இருந்தது எனக்கு. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? என்று கூட்டத்தில் தேட ஆரம்பித்தேன். ஊகும், எல்லோரும் ரிக்கார்டு டான்சில் ஒன்றிப்போயிருந்தார்கள்.

                                                                 தொடர்ந்து வாசலில் தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டது. உசிலம்பட்டியில் வேட்டுப்போட தடை போட்டதும், சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் நேற்றும் 10 பேர் வெடித்துச்சிதறி செத்ததும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. " காலையில் தீப்பெட்டி / ஒட்டப்போன குழ்ந்தை / மாலையில் / சவப்பெட்டியில் வந்தது " என்னும் கவிஞர் ஜீவாவின் கவிதையும் மனதிற்குள் ஓடியது." டேய், டான்சை , பாட்டை நிப்பாட்டுங்கப்பா , தாய் மாமன் சீர் வருது "என்று சொல்லிக்கொண்டே ஒருவர் உள்ளே ஓடி வந்தார். ஆடல் பாடல் அரைகுறையாய் நிறுத்தப்பட்டாலும் வெளியில் வேட்டுச்சத்தம் தொடர்ச்சியாக 20 நிமிடத்திற்கு மேலாக ஒலித்தது. வெடி வெடிப்பது, அதுவும் எவ்வளவு நேரம் வெடிக்கிறது என்பது ஒரு ஸ்டேட்டஸ் அடையாளம் என்றான் பக்கத்தில் ஒருத்தன். போன வாரம் இதே மண்டபத்திலே விசேசமப்பா, முக்கால் மணி நேரம் தொடர்ச்சியா வெடிகளை வெடிக்கவச்சு, அவுங்க தாய்மாமங்காரங்கே அசத்திட்டாங்கப்பா என்றான் இன்னொருத்தன்.

                                       வெடியை வெடித்து விட்டு வரிசையாக உள்ளே வந்தார்கள். அணடாக்கள்,பானைகள், த்ட்டுகளில் வைத்து கொண்டு வரப்பட்ட சீர் பொருட்கள் எல்லாம் மேடையில் வைத்தார்கள் . எல்லோரும் பார்க்கும்படியாக சீர் பொருட்கள் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப்பட்டது. மேடையில் முத்துவின் நண்பன், அவனது அப்பா, அம்மா நின்றார்கள் கைகளைக்கூப்பியவாறு. ஒரு மிகப்பெரிய ரோசா மாலையை , இரண்டு ,மூன்று மலைப்பாம்புகளை இணைத்தால் வரக்கூடிய சைசில் மேடைக்கு கொண்டு வந்தார்கள். சின்னச்சாமியின் தாய்மாமா, சின்னச்சாமி- அவனது அப்பா, அம்மா ஆகியோருக்கு அந்த ரோசா மாலையை அணிவித்தார். போட்டாக்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டன். இந்தக் கூத்து எல்லாம் முடிந்தவுடன், நிஜக்கூத்து- ரிக்கார்டு டான்ஸ் மறுபடியும் நடக்க ஆரம்பித்தது. அஜீத் பாட்டைப் பாடு என்று சில இளைஞர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.....மொய்ப் பானைகள் நிரம்பிக்கொண்டிருந்தன.  அதற்கு மேலும் உட்காரமுடியவில்லை, முத்துவும் நானும் வீட்டை நோக்கி வந்து விட்டோம்.

                                                                                      மறு நாள் காலை மார்க்கெட்டிற்கு போனபோது, " என்னன்னே , நேற்று விசேச வீட்டிற்கு வந்திருந்தீங்க, தெரிஞ்சவங்களா, சொந்தக்காரங்களா " என்றாள் தக்காளி கடைக்கார அக்கா. தெரிஞ்சவங்கதா, என்று சொல்லி விட்டு, "நாலு அண்டா நிறைய மொய் விழுந்துகிட்டு இருந்துச்சே, எவ்வளவு வந்ததாம் , மொய் " என்றேன்.  "நாற்பத்தைந்து இலட்சம் வந்துச்சாம்" என்றாள் , எனக்கு மயக்கம் வராத குறைதான், மொய்ப் பணம் 45 இலட்சம் எப்படி ? என்றேன்." நானே ஐம்பதாயிரம் செஞ்சேன், நம்ம தெருக்கார 20 பேர் ஐம்பாதியிரம், ஐம்பாதியிரம் செஞ்சாங்க, அதுவே பத்து இலட்சம் ஆச்சு  , அப்புறம் மத்தவங்க, தாய்மாமங்கே, பழக்கத்துக்காரங்கன்னு மொத்தம் 45 இலட்சம் மொய்" என்றாள்

                                                    எனக்குப் பக்கென்றது. தக்காளி விக்கிற ஆள் செய்யும் மொய் ஐம்பதானயிரமா? எப்படி இது ? என்று யோசித்துக்கொண்டே அடுத்த கீரைக்  கடைக்காரரிடம் வந்தேன். இங்கும் மொய்ப்பேச்சு தொடர்ந்தது. எல்லாம் இப்போ கோடிக்கணக்கிலேதான் மொய், 1/2 கோடி,1 கோடி, 2 கோடி என்றார் என்னதான் முத்துவோட நண்பன் சின்னச்சாமி வீட்டில் ஆடம்பரமாக செலவழித்திருந்தாலும் , செலவு உறுதியாக  3, 4 இலட்சத்தைத் தாணடாது. மீதி 40, 41 இலட்சம் லாபம்தானே, இதை வைத்து நன்றாகப் பிழைத்துக்கொள்ளலாமே, தொழில் செய்யலாமே என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.

                                                    மார்க்கெட்டை சுற்றி வந்தபோது எப்போதும் தேங்காய் விற்ப்வரைக் காணாம்.போன வாரம் வந்த போது இருந்தாரே, இப்போ காணாமே என்று பக்கத்து கடைக்காரரிடம் விசாரித்தேன். " ஏண்ணே, அந்தக் கொடுமையைக் கேக்குறீங்கே, தேங்காய் கடைக்காரர், அவரு பொண்டாட்டி, இரண்டு பச்சை பிள்ளைங்க எல்லாரும் மொத்தமா விசத்தைக் குடிச்சு செத்துப்போனாங்க " என்றார். தேங்காய்க்கடைக்காரர் எப்போதும் சிரித்த முகமாய் இருப்பார். நல்ல தேங்காய்களை எப்போதும் பொறுக்கித் தருவார். என்னவாயிற்று , அவருக்கு , என்று ஆச்சரியத்தோடு அவரிடம்  விசாரிக்க ஆரம்பித்தான்.

                                                   போன வருசம் , பிள்ளைங்களுக்கு மொட்டை போட்டு , காது குத்தி விசேசம் வச்சாரு, மொய் மட்டும் 30 இலட்சம் வந்துச்சு. மொய்யி எனக்கு 30 இலட்சம் வந்திருக்கு, வந்திருக்குன்னு சந்தோசமா சொல்லிகிட்டு அலைஞ்சாரு. மொய்யின்னா எண்ணன்ணே, மிந்திதான் அது வட்டியில்லா கடன், இப்போ அது வட்டியோடு இருக்கிற கடன். வந்த மொய்யைப்பூராம் அப்படியே ஒருத்தனை நம்பி ரியல் எஸ்டேல போட்டாரு, அவன் ஏமாத்திட்டான், ரியல் எஸ்டேட் விசயமா மனுசன் அங்கும் இங்குமா அலைஞ்சுக்கிட்டே இருந்தார். கையில பணம் இல்லே, போன மாசம் நடந்த நாலஞ்சு விசேசத்திற்கு இவரு போகல." கொஞ்சம் இடைவெளி விட்ட பக்கத்து கடைக்காரர் தொடர்ந்து ஆரம்பித்தார். " இப்போ மொய்யி வட்டியோடு இருக்கிற கடன்னு ஏன் சொன்னேன்னா, மொய்யி 50000 செஞ்சிருந்தான்னா  , நாம 60000 அல்லது 70000 செய்யனும். அப்பத்தான் மரியாதை. அதே அளவிலே செஞ்சாவே முறைப்பாங்கே, இந்த மனுசனால 50000 செஞ்சவனுக்கு 10000 மே செய்ய முடியாத நிலைமை, நாலைஞ்சு விசேசத்துக்கு இவரு போகலை, போன வாரம் விசேசம் வச்சிருந்த வீட்டுக்காரி , வீட்டில வந்து தாறுமாறா வார்த்தையாலே கிழிச்சிட்டா, " ஏண்டா, நோலி மவனே, செஞ்ச மொய்க்கு இரண்டு மடங்கா, மூணூ மடங்கா ஜனங்க வந்து செய்யுதுக, நீ நான் செஞ்ச மொய் 50000 யாவதுசெய்ய வேணாமா? ஏதும் சடவு சத்தம் இருந்தாக்கூட , செஞ்ச மொய்யை மட்டுமாவது கொடுத்து விடுறாங்க! நீ தே....மகனே, செஞ்ச மொய்யை செய்யாம ஓழிஞ்சிகிட்டா தெரியுற " என்று அவள் கொடுத்த கொடுப்பில் மனுசன் உக்கி, வெக்கி ரொம்ப நேரமா உக்காந்துகிட்டே இருந்திருக்கிறாரு. பிறகு போய் மருந்து வாங்கிட்டு வந்து  மொத்தமா குடிச்சு  செத்துப்போயிருச்சுக குடும்பத்தோடு என்றார். மனம் கனத்தது.

                                                             "வைகாசி பிறந்திருச்சு, இனி வரிசையா விசேசம்தான். மொய்யை வாங்கி அதை உருப்படியாக்கி பிழைக்கிறவன், 100க்கு 5 அல்லது 10 பேர்தான். மீதி 90 , 95 பேர் கதை இப்படித்தான். அதுவும் கொஞ்சம் குடி, பொம்பளை, சீட்டு பழக்கம் இருக்கிறவனல்லாம் சொல்ல வேண்டாம். மொய்யை வாங்கிட்டு பின்னர் மொத்தமா அசிங்க்ப்பட்டு சாக வேண்டியதுதான். இது வந்து , வம்படியா கொடுக்கிற கடன் தம்பி, எவன் மொய்யை வேணாம்ன்னு சொல்றான், ஒருத்தர் ,இரண்டு பேர்தான் தைரியமா வேணாம் என்று சொல்கின்றான். மத்தவனல்லாம் கந்து வட்டிக்கு கடன் வாங்கிட்டு மாட்றவன் மாதிரி மாட்டிக்கிட்டு  முழிக்கிறான் தம்பி என்றார்" மேலும்  அவர்.

                                                  மார்க்கெட்டை விட்டு வெளியே வந்தபோது  பக்கத்து வீட்டில் விசேசம் போலிருக்கிறது. ;'சீரு சுமந்த சாதி சன்மே ' எனப்பாட்டு பாடிக்கொண்டிருந்தது ஒலிபெருக்கியில். இந்தப் பாட்டை எழுதியவரைக் கூப்பிட்டு 'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே ' என்று திருத்தி பாட்டை எழுதுய்யா என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

வெளியிட்ட எழுத்து.காம் இணையதளத்திற்கு நன்றி !