Wednesday 28 June 2023

'இந்தியக் குடிசை ' நூல் விமர்சனமும் தமிழ் மரபு அறக்கட்டளைக் குழு-விவாதங்களும்

 

தமிழ் மரபு அறக்கட்டளை(https://tamilheritage.org/) சார்பாக ஒரு வாட்சப் குழு இருக்கிறது.பல துறையைச்சார்ந்த பேராசிரியர்கள்,உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அறிஞர்கள் இருக்கும் குழு அது.அதில் மெக்காலே கல்வித் திட்டத்தைக் குறை சொல்லி ஒரு பதிவு வந்திருந்தது.மெக்காலே கல்வித்திட்டம் வருவதற்கு முன் இருந்த நம் நாட்டின் சமூக அமைப்பைக் காட்டிடத் துணைசெய்யும், நான் வாசித்து எனது வலைத்தளத்தில் எனது கருத்துகளையும் மதுரை மாநகர் மாவட்டத்திராவிடர் கழகத்தலைவர் அண்ணன் பழக்கடை அ.முருகானந்தம் அவர்களின் கருத்தையும் இணைத்து பதிவு செய்திருந்த ‘இந்தியக் குடிசை ‘ என்னும் நூலின் நூல் விமர்சனத்தை அந்தக் குழுவில் பதிவு செய்தேன்.

http://vaanehru.blogspot.com/2018/10/blog-post.html?m=1

 

அந்த நூல் விமர்சனத்தைப் படித்துவிட்டு ,தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றுநர்,இயக்குநர் தோழர் முனைவர் சுபாஷினி அவர்கள் தன் கருத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார். “மிக அருமையான பதிவு தோழர். பல செய்திகளை முன் வைக்கின்றது இந்தப் பதிவுமிக ரசித்துப் படித்தேன்😊. இந்த நூல் விமர்சனத்தில் நீங்கள் கூறியிருக்கும் சில வரிகளுக்கு தனித்தனியாக சில கருத்துகள் பதிய வேண்டும் என நினைக்கின்றேன்.” என்று பாரட்டியிருந்தார்.

 நான் நன்றி தெரிவித்து கருத்தினை இட்டேன்.

 

தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் தோழர் முனைவர் தேமொழி அவர்கள் ‘இந்தியக் குடிசை’யின் ஆன்லைன் இணைப்புகளை –தமிழ் https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0ld#book1/ஆங்கிலம்https://digitalarchiveontario.ca/objects/381538/the-indian-cottage?ctx=632c740bfc163560ce33ac049e5e892e239b0de1&idx=40#

பிரெஞ்சு https://www.google.com/books/edition/La_chaumi%C3%A8re_indienne/5YsZgMOqd0gC?hl=en&gbpv=1&printsec=frontcoverமொழிகளில் இருப்பதைப் பதிவிட்டார்.இந்தியக் குடியரசுத் தலைவர் கோயிலில் தூரத்தில் நின்று சாமி கும்பிடுவதையும் பதிவிட்டிருந்தார்.


 

தொடர்ந்து அந்தக் குழுவில் இதைப்பற்றிய விவாதம், கருத்துப்பதிவு என மிக ஆரோக்கியமான பதிவுகளாக இருந்தன.அவை உங்களின் பார்வைகளுக்காக..

 

தோழர் சுபாஷினி ://தில் இருக்கும்  20 மெம்பர்கள் உலகம் முழுவதும் போகின்றார்கள். அந்த நாட்டு அரசாங்கம் அதற்கு பண உதவி செய்கின்றது. உலகத்தில் உள்ள எல்லா பகுதிக்கும் போய் ஆய்வு செய்வதுதான் நோக்கம்.// ஐரோப்பியர்களின் இந்த வகை செய்ல்பாடுகள் தான் உலகளாவிய வரலாற்றுச் செய்திகளை பதிந்து வைக்கவும் அவற்றை இன்று நாம் ஆய்வு செய்யவும் அடிப்படையாக அமைந்துள்ளது. சமூகவியல் ஆய்வுகள் மட்டுமல்லாது உலகளாவிய தொல்லியல் அகழாய்வுகளையும் பல நாடுகளில் முன்னெடுத்தவர்கள் ஐரோப்பியர்கள் தான். பிடிக்கின்றதோ இல்லையோ இதுதான் உண்மை!...

 // 90 சாக்குகளில் எடுத்து வந்த ஆவணங்கள் ஏறத்தாழ  9550 பவுண்டுகள் இருக்கின்றன. ஆனால் இவ்வளவு கொண்டுவந்தும் இதில் உண்மை இருக்கிறதா,இல்லையே என்பது அவருக்கு சோர்வைத் தருகின்றது. // உண்மையை காண வேண்டும் என்பதை விட தனது சாதி உயர்வை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணமே பரவி இருப்பது தான் இதற்குக் காரணம்.

 //...3500 கேள்விகள் கொண்டுவந்தால் கிட்டத்தட்ட 17500 பதில்கள். ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. ஒரு கேள்விக்கு 5 பதில்கள்...இதைக்  கொண்டுபோய் இலண்டனில் கொடுத்தால், எத்தனை பேர் வேலையை கெடுப்பது அவர்கள் வேலையைக் கெடுத்து // இது சிரிப்பை வரவழைத்தாலும் கூட இதன் உள்ளே உள்ள செய்தி முக்கியமானது. புராணக் கற்பனையையே வரலாறாக நினைத்து ஆளாளுக்கு தனது ஆரிய உயர்வை மட்டுமே பேசும் போது உண்மை புறந்தள்ளப்படும். அதனைத்தான் இந்த ஐரோப்பிய ஆய்வாளர்கள் நேரடியாக அனுபவித்திருக்கின்றனர்.

 //காசியிலிருந்து கல்கத்தா போய், கல்கத்தாவிலிருந்து ஒரிசாவில் இருக்கும் அந்தப் பூரி ஜெகனாதர் கோவிலுக்குப் பல்லாக்கிலே போகின்றார். // ஒரிசா பூரி ஜெகனாத் கோயில் உண்மையில் ஒரு பழங்குடியினர் கோயில். நான் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கின்றேன். ஆனால் இன்று அந்தணர்கள் கைப்பற்றிக் கொண்ட ஒரு கோயில் இது.   இன்றும் இங்கு சாதிப் பாகுபாடு மிகப் பெரிதாக பாதுகாக்கபப்டுகின்றது.

 //ளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தலைமை அந்தணரிடம் கேள்விகளைக் கேட்கின்றார். முதல் கேள்வி உலகில் எல்லாமே பொய்யாத் தெரியது. அப்ப, உண்மையை எந்த வழியாக அறிந்து கொள்வது ? பதில்: அந்தணர்கள் வழியாகத்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.//  ஒரு வகையில் அந்தணர்களது அறியாமையை  வெளிப்படுத்துகின்றனர் என்றாலும் இதனைத் தானே சாமானிய மனிதர்கள் பலரும் கூட நம்புகின்றனர். நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர்அந்தணர்கள் உயர்வானவர்கள்; அவர்கல் கூறுவதை கடவுள் கேட்பார்; அவர்கள் கூறுவதே உண்மை என நம்பும் மக்கள் இன்றும் இருக்கின்றனர்எவ்வளவு அறிவியல் உயர் கல்வி கற்றிருந்தாலும் கூட இதே சிந்தனை கொண்டோர் இருக்கத்தான் செய்கின்றனர்.

//அடுத்த கேள்வி : .உண்மையை எங்கே போய்த்தேட முடியும் ? பதில் : வேதங்களில்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் அது அந்தணர்களுக்குத்தான் தெரியும்.//  வேதங்களை decode செய்து ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் படித்து விட்டால்.. அட.. இதுதானா.. குதிரை வேண்டும், ஆடுமாடுகள் வேண்டும்.. பொன்னும் பொருளும் வேண்டும்.. என்னைக் காப்பாற்று எனும் துதிப்பாடல்கள் தான் வேதமா .. என்பதை அறிந்து கொண்டால் வேதங்களில் உலக ரகசியம் உள்ளது எற மாயை முதலில் விலகும்!

//கேட்ட பதிலை  யார் கிட்ட சொல்றது? பதில் : யார் கிட்டேயும் சொல்லக்கூடாது. எல்லோருக்கும் உண்மையை தெரிவிக்காத கடவுள் குற்றவாளிதானே ? என்று பண்டிதர் கேள்வி கேட்கின்றார் பதில் இல்லை,பேசாம இருக்கின்றார்கள்.யார் கிட்டேயும் சொல்லாமல் மறைத்து வைத்துத்திருக்கிற அந்தணர்கள் குற்றவாளிகள்தானே என்று கேட்க பண்டிதரை அடிக்க அந்தணர்கள் பாய்கின்றார்கள். தாக்கப்பாய்கின்றார்கள்.குழப்பம் ஏற்படுகின்றது.உடனே தலைமை அந்தணர் பண்டிதரை வெளியேறச்சொல்கின்றார்.//   நால் வேதங்களின்  உள்ளடக்கம் இதுதான் என அறிந்து கொண்டால் வேதங்களைக் கண்டு யாரும் பயப்படப் போவதில்லைஆனால் அதனை சாமானிய மனிதன் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் முக்கியக் கடமை என நினைத்து செயல்படுகின்றனர். அதற்குத்தான் வேதங்களை அந்தணர் அல்லாத மற்றவர் படித்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் என மனுவின் சட்டமும் இயற்றப்பட்டு அதனை தமிழ் நிலத்தில் தமிழ் மன்னர்களும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தினரே.. இதனை என்ன சொல்வது?

 //உண்மையை அறிவைக் கொண்டு தேடாதே .நல்ல உள்ளத்தோடு தேடு. அறிவு உணர்ச்சி வசப்படும். ஆனால் நல்ல உள்ளம் அப்படி உணர்ச்சி வசப்படாது..நல்ல எண்ணத்தோடு கேள்.நல்ல உள்ளத்தோடு தேடு. உண்மை கிடைக்குமென்று சொல்கின்றார். உண்மையை ..எங்கே தேடுறது.?...இயற்கையில்தான் தேடவேண்டும். இயற்கை மட்டும்தான் உண்மை.//      குடிசையில் வாழும் தாழ்த்தப்பட்ட மனிதன் கூறும் வாழ்வியல் தெளிவு - அறிவுக்கு உகந்த உண்மைஇயற்கையே உண்மை. அதில் உலகையும் வாழ்வையும் வாழ்வின் காரணத்தையும் தேடுவது தான் அறிவுக்கு உகந்த பதில். ஆனால் பொது மக்களாகிய நமக்கு இந்த எளிய பதில் பதிலாகத் தெரிவதில்லைமாறாக புராணப் பொய்க்கதையை கூறி உனக்கு ஒன்றுமே தெரியாது.. எனக்குத் தான் தெரியும் என கூறும் அந்தணர் கூறுவதை உண்மை என நம்ப விரும்புபவர்கள் தான் பெரும்பான்மை!

 //மிகச்சின்ன புத்தகம். ஆனால் ஏகப்பட்ட விசயம் உள்ளே இருக்கு. //  இந்தியாவைப்பற்றிய ஐரோப்பியர்களின் ஒவ்வொரு  நூலும் நமக்கு தெளிவுகளைத் தரக்கூடிய நூல்களாகே அமைகின்றனஇந்த  நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழர் @⁨முனைவர்.வா.நேரு👏🏼.

என்று தொடர்ச்சியாக தன் கருத்துகளைப் பதிவு செய்தார்.

 

தோழர் தேமொழி அவர்களின் குடியரசுத்தலைவர் பற்றிய பதிவுக்கு நான் கொடுத்திருந்த பின்னோட்டத்திற்கு தோழர் முனைவர் சுபாஷினி அவர்கள் “//புரியாத *அந்தணர் அல்லாத மக்கள்* மேல் உட்கார்ந்துதான் பார்ப்பனியம் அன்று முதல் இன்று வரை சவாரி செய்கிறது...// இவர்களது செய்ல்கள் தான் சமூகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. . இவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள இவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு குழுவினர் தேவைப்படுகின்றது.   இது உண்மைக்குத் தூரமான உள்வியல் நோய்!” என்றும்


குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவரது இடம் தூரம் தான் என அவர்கள் நினைக்கின்றார்கள்.. நமது எல்லை இவ்வளவுதான் என இவர்கள் நினைக்கின்றார்கள்..  இருவருக்குமே தெளிவு தேவை .. மனிதன் படைத்த இறைவனுக்கு முன் எல்லா மனிதர்களுமே சமம் தான் என்று. !  எவ்வாறு பூரி ஜெகனாத் கோயில், ஒரு எளிய பழங்குடி கோயில் ஆரிய மயமாக்கப்பட்டு இன்று  ஆரிய கோயிலாக மாறியிருக்கின்றது  என்பது ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று! என்றும் குறிப்பிட்டார்.

 இந்த விவாதத்தில் கலந்து கொண்ட குழுவினைச்சார்ந்த சாந்தினி என்பவர் கீழ்க்கண்ட கருத்தினைப் பதிவிட்டார்.”அருமையான பதிவு. சுபா சொல்வதும் உண்மை. இதைப் போன்று ஒரு புத்தகத்தை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பலகலைக் கழகத்தின் நூலகத்தில் நான் படித்திருக்கிறேன் இந்தியா வந்த ஒரு ஆங்கில நண்பர் இங்கிலாந்தில் வாழும் தன்னுடைய மற்றொரு நண்பருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு அதில் சதி -கணவன் இறந்தவருடன் பெண்ணை உயிரோடு எரிக்கக்கூடிய பழக்கமாகிய சதி பற்றிய வெவ்வேறு நிகழ்ச்சிகள் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்ததை சொல்லியிருப்பார் நமது கலாச்சாரம் என்று பெருமை கொள்கின்றோமே அதில் இருக்கும் அத்தனை ஓட்டைகளையும் படம் பிடித்துக் காட்டியிருப்பார். நோய்வாய் பட்டால் வீட்டிற்குள்ளேயே இறப்பது பாவம் என்று அவர்களை கங்கை கரையில் கொண்டு போய் படுக்க வைத்து விட்டு வந்து விடுவார்கள் பச்சிளம் குழந்தைகளை கூட சளி பிடித்தாலும் கூட ஒரு கூடையில் வைத்து கங்கை கரையில் இருக்கின்ற மரத்தில் தொங்க விடுவார்கள் ஒரு தந்தை தன் குழந்தையை பார்த்து கங்கை நீரில் விளையாடுவதாக நினைத்திருக்கும் குழந்தையிடம் இன்னும் சற்று உள்ளே போ இன்னும் சற்று உள்ளே போ என்று சொல்ல அந்த குழந்தை ஜல சமாதியாகும் இதைப் போன்று பல்வேறு நிகழ்ச்சிகளின்  தொகுப்பு அந்த புத்தகம். நான் அலிகர் சென்ற பின் அந்த புத்தகத்தை தேடி எடுத்து மற்ற தகவல்களை பதிவிடுகிறேன்.” அந்தப் புத்தகமும் வந்தால் மிக நன்றாக இருக்கும்." என்று குறிப்பிட்டிருந்தார். இவர் குறிப்பிடும் நூலும் பல உண்மைகளைக் கொண்டிருக்கும் எனத்தோன்றுகிறது. தேடிப்படிக்கவேண்டும்.

 “தென்னைக்கு கீற்றானாலும் வீட்டிற்கு தொடப்பக்கட்டைதான் என்ற சனாதனத்தின் பக்கம் நின்றால் இதுதான் அண்ணா நிலை.”..என்று வாருங்கள் படிப்போம் குழு...அண்ணன் லோ.குமரன் அவர்கள் பின்னோட்டம் இட்டிருந்தார்.

 மொத்தத்தில் ஒரு நூல் விமர்சனம் ,மூல நூலின் மூன்று மொழி ஆன்லைன் புத்தகங்களை அறிந்து கொள்ளவும் ,தொடர்ந்து பல செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த வாய்ப்பாக அமைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.உளமார்ந்த நன்றிகள் தமிழ் மரபு அறக்கட்டளை வாட்சப் குழுவிற்கு,தோழர் முனைவர் சுபாஷினி அவர்களுக்கும்,தோழர் முனைவர் தேமொழி அவர்களுக்கும் மற்றும் குழு விவாதத்தில் கருத்துரைத்த அத்தனை தோழமைகளுக்கும் குறிப்பாக சாந்தினி அவர்களுக்கும் அண்ணன் லோ.குமரன் அவர்களுக்கும்....கருத்துகளை விதைத்துக் கொண்டே இருப்போம், ஒரு நாள்  நிச்சயம் விடியும்.

முனைவர் வா.நேரு,

29.06,2023