Tuesday, 12 December 2017

ஆறறிவு உடையவர்கள்தானா நாம் ?......பிடிங்குப் போடப்பட்ட
வேரை விடுத்து 
மரத்தின் கிளைகள் மட்டும் 
அங்குமிங்கும் 
அலைவது போன்றொரு
உணர்வு.........

ஒளியும் உணவும்
அளித்து 
வளர்த்தெடுத்த
வேரை 
மரத்தின் கிளைகளே
தங்களுக்குள்
சண்டையிட்டு
பிடிங்கிப் போட்ட
கொடுமை கண்டு மனதில்  
தோன்றும்  அயர்ச்சி....

வேரின் நினைவாய்
திதி என்றும் 
திவசம் என்றும்
அலையும் கிளைகளைப்
பார்க்கையில்
இயல்பாகத்தான்
செத்தனவா 
வேர்கள் எனும் 
கேள்விகளால் 
மண்டைக்குள் எழும்
விநோத ஒலிகள் ......

ஒரேயொரு 
ஊரிலே மட்டும் அல்ல
பல ஊர்களில் 
ஒரு மரத்தின் கிளைகள்அல்ல
இரு மரத்தின் கிளைகள் அல்ல
பல மரத்தின் கிளைகள்
வேர்களை பிடிங்கிப்போட்டு 
அங்குமிங்கும் 
அலைவதைப் பார்க்கையில்
ஆறறிவு உடையவர்கள்தானா
நாம்
எனும் கேள்வி
எழுவதைத் தவிர்க்க இயலா
உள்ளுணர்வு......

                                              வா.நேரு, 12.12.2017

அன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு ....

அன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு

21 வயது முடிந்தது
மகனே
முழுமனிதனாகிறாய்
இன்றுமுதல்

எது குறித்தும்
எவர் குறித்தும்
கவலைப்படாமல்
நீயாக முடிவெடுக்கலாம்
முன் செல்லலாம்
முழு மனிதனாகிறாய்
இன்று முதல்

அரிதாக இருக்கும்
இளைஞர்களில்
ஒருவனாயிருக்கிறாய்
எந்த நிலையிலும்
நேர்மையாகவே இருக்க
விரும்புகிறாய்....
உண்மையிலேயே
பெருமையாக இருக்கிறது
உனை பெற்றவனாக இருப்பது...

இப்படியே தொடர்
வாழ்வில் சில இடர்பாடுகள்
வந்தாலும்
நேர்மையாளனாகவே
தொடர்ந்து செல்......

விரிந்த பார்வையோடு
நட்பு கொள்...
நட்புகளிடம் இருக்கும்
குறைகளை
அல்ட்சியப்படுத்து...
நிறைகளை அவர்கள்
இன்னும் நிறைவாக்க
வழிகாட்டு.......
நட்புதான் வாழ்க்கை
முழுக்க வரும்....
நல்லது கெட்டதுகளில்
முழுக்க உடன் இருக்கும்..

உறவுகள் இல்லையேல்
நாமில்லை...
உறவுகள் அப்படியும்
இப்படியுமாகத்தான்
இருக்கும்
மரியாதை கொடு....
மனதில் இருப்பதை
முழுவதையும்
உறவுகளிடம் கொட்டாதே.....
அன்பைக் கொட்டு.....

உனது மனதுக்குள்
நீ எழுதிவைத்த
உனது குறிக்கோள்
நிறைவேறும்
அதனை நோக்கி உழை

நிறைய வாசி.....
படைப்பாளியாய்
எந்த நாளும் இரு....
எழுது.....படி.....
எழுது.....படி.....


முன் செல்லும் ஏராகத்தான்
முடிந்தவரை உனக்கு
நான் சென்றிருக்கிறேன்
இனியும் செல்வேன்....
உனது உடன் பிறந்தவளை
மதிப்பதுபோலவே
உன்னுடன் பழகும்
அத்தனை பெண்களையும் மதி....
அம்மாவும் அப்பாவும்
எதிர்பார்ப்பது
உன் பெயரில் இருப்பது
தவிர வேறு ஏதுமில்லை..

                           அன்புடன் அப்பா
                                வா.நேரு.....
                                                       03.06.2017
                               

Saturday, 9 December 2017

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா.......மு.சங்கையா

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா
ஆசிரியர்                    : மு.சங்கையா
வெளியீடு                   : வாசிப்போர் களம், மதுரை ,பெறுவதற்கு : 0452-2643003, 9486100 608
முதல்பதிப்பு                 : அக்டோபர் 2017
விலை                      : ரூ 225 / மொத்த பக்கங்கள் 238

                         இந்தப் புத்தகம் அரசியல் அறிவைப் புகட்டும் புத்தகம். நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பிப்போய் , ஏன் இப்படி நிகழ்கிறது எனப்புரியாமல் ,பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து அடிவாங்கும் பாமரனுக்கு ,ஏன் இப்படி நிகழ்கிறது,இதற்கு யார் காரணம் என்பதனை மிகத்தெளிவாக பாடம் போல நடத்துகின்ற, வாசிக்க வாசிக்க அறிய வைக்கும் புத்தகம்.

                           கந்து வட்டிக்காரன் அலுவலகம் முழுக்க கடவுள்கள் படம் பல இருக்கும். கந்துவட்டிக்காரனின் முகமும் மதக்குறியீடுகளால் நிரம்பி வழியும் . பேச்சில் முழுக்க கருணை அப்படியே பொங்கும். ஆனால் அவனது செயல்கள் வட்டிக்கு கடன் வாங்கியவனை பரம்பரை பரம்பரையாக எழ முடியாமல் அடி மேல் அடி கொடுக்கும். இப்படித்தான் இன்றைக்கு நமது நாட்டுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பதனை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்ற புத்தகம். 
அண்மையில் படித்த புத்தகம் : 

                         உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம்,உலக  வர்த்தக நிறுவனம் இப்படியெல்லாம் சொல்லப்படும் நிறுவனங்களின் வரலாறு என்ன ? எதற்காக இவைகளெல்லாம் தோற்றுவிக்கப்பட்டன? எப்படி இவை வளர்ந்தன ? இவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடான அமெரிக்கா எப்படி எப்படி எல்லாம் இந்த நிறுவனங்களை வழி நடத்துகிறது ? போன்ற செய்திகள் அளப்பரிய தகவல் சேகரிப்புகளோடு, புள்ளி விவரங்களோடு தரப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு, உறுமீன் வருமளவு காத்து நின்ற கொக்காக அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் எந்தப்பக்கமும் சேராமல் முதலில் நின்றது, இரண்டு பக்கமும் ஆயுதங்களை விற்பனை செய்தது பின்பு இணைந்து ஜப்பான் நகரங்களின் மீது  அணுகுண்டு வீசி அழித்தது பின்பு உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களை அமைத்தது என வரலாற்றுப் பாடத்தோடு கூடிய பொருளாதாரப்பாடம் எடுத்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர்/ 1970--களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், எண்ணெய் நாடுகளுகளுக்கு கிடைத்த பொருளாதார வளர்ச்சி அதன் விளைவுகள், WTO  என்னும் உலக வர்த்தக நிறுவனத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி என விரிவாகவே பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். 

                        உலக வங்கி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதையும்,பின்னர் நரசிம்மராவ், சந்திரசேகர் காலத்தில் இந்தியாவிற்குள் வந்தமர்ந்து சம்மணமிட்டு கொண்டு என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதையும், டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் இன்றைய மோடியின் ஆட்சியில் எப்படியெல்லாம் கந்துவட்டிக்காரன் போல இந்தியாவிற்கு கடனைக்கொடுத்து ,அவர்கள் சொல்லும் விதத்தில் எல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் எப்படி சட்டமியற்றுகின்றார்கள் என்பதையும் விரிவாகப்பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பதற்கு எதற்காக என்பது மட்டுமல்ல, யாருக்காக என்பதையும் படிப்பவர்கள் எளிதாகப் புரிந்த கொள்ள இயலும் இந்தப்புத்தகத்தின் வாயிலாக.....

                         பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இந்த நூலின் ஆசிரியர் ,பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுகின்றன என்பதையும், தான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் கொண்டுவருவதற்காக அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையெல்லாம் எடுத்தது என்பதையும், எத்தனையோ இன்னல்கள், நய வஞ்சகம் அத்தனையும் தாண்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிலைத்து நின்று வருவதையும், அதன் லாப நட்ட கணக்குகளையும் ,எம்.டி.என்.எல், பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் பற்றிய ஏகப்பட்ட புள்ளிவிவரங்களோடும் ,ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல, எந்தவொரு தொழிற்சங்கவாதியும் மிக ஆழமாகவும், பொறுமையாகவும் படித்து உள்வாங்கி  தன் ஊழியர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பயன்படும் புத்தகம் இது.

                          வளர்ச்சி, வளர்ச்சி என்னும் வார்த்தை நம்மைச்சுற்றி ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை. 'வளர்ச்சியா? வீக்கமா ? எனத்தலைப்பிட்டு' வாராக்கடன்கள் ' எனும் பெயரில் நடக்கும் மோசடிகளை,மல்லையா போன்ற பணக்காரர்களுக்கு வங்கிகள் அள்ளிக்கொடுத்த கடன்களை பின்னர் அவையெல்லாம் வாராக்கடன் என்னும் பெயரில் தள்ளுபடி செய்த வரலாறுகளை எல்லாம் வங்கிப்பெயர்களை குறிப்பிட்டு, ஒவ்வொரு பணக்காரரும் வாங்கிய கடனைக் குறிப்பிட்டு பின்பு தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகளை எல்லாம் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார். படித்தவுடனேயே நமக்கு எல்லாம் அறச்சீற்றம் வரவேண்டும். அவ்வளவு விவரங்களும் விளக்கங்களும் இந்தப்பகுதியில் உள்ளன.. சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு, வால்மார்ட் -ஒரு பொருளாதார புற்று நோய் போன்ற தலைப்புகள் சொல்லும் செய்திகள் படிப்பவர்களுக்கு பளிச்சென புரிகின்றன. பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. வால்ட்மார்ட் என்பதற்கு ஒரு வரையறை தருகின்றார் ஆசிரியர் . "வால்ட்மார்ட் என்றால் விலைக் குறைப்புப்போட்டி, மலிவு விலையில் கொடுத்தல், தொழிலாளர் விரோதப்போக்கு,இவற்றோடு ஊழலும் சேர்ந்து செய்த கலவைதான் வால்ட்மார்ட் " என்பது அந்த வரையறை. இதற்கான ஆதாரங்களை, எத்தனை கம்பெனிகளை தொலையக் காரணமாக அமைந்தது வால்ட்மார்ட் என்பதையும் எப்படி எப்படி எல்லாம் அவர்கள் மற்றவர்களுக்கு இன்னல் செய்து வளர்ந்தார்கள் என்பதையும் பெயர்களோடு நூலின் ஆசிரியர் பகிர்ந்துள்ளார்.தன்னொடு வேலை பார்த்த பாலு என்னும் தோழர் முதன் முதலில் வணிகர்கள் மத்தியில் இந்த வால்ட்மார்ட் பற்றிப்பேசச்சொன்னதும், அதற்காக தான் தயார் செய்ததும் பின்பு அந்த நிகழ்வில் கிடைத்த பாராட்டே இந்தப் புத்தகம் வருவதற்கு காரணம் என்றும் என்னுரையில் நூலின் ஆசிரியர் மு.சங்கையா குறிப்பிட்டுள்ளார்.

                         'தண்ணீர், தண்ணீர் ' எனத் தலைப்பிட்டு,தண்ணீர் எப்படித் தனியார் மயமாகியது என்பதையும், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்தது கூட எப்படி என்பதையும் குறிப்பிடும் நூலாசிரியர் பொலிவியா நாட்டில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த எழுச்சியை, போராட்டத்தை குறிப்பிடுகின்றார். ஆறுகள் விற்பனைக்கு என்னும் தலைப்பில் எப்படி ஆற்று நீர் பன்னாட்டு கம்பெனிகளால் உறிஞ்சப்படுகிறது என்பதையும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் என்ன? நிலம் எப்படி வளைக்கப்படுகின்றது? எப்படி அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளால் நிலம் வாங்கப்படுகின்றது, வனவேட்டை என்னும் தலைப்பில் வனங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன, பழங்குடி மக்கள் எப்படி வனத்திலிருந்து விரட்டப்படுகின்றார்கள் என்பதையும் விரிவாகவே விளக்குகின்றார். ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக பல கிழக்கிந்திய கம்பெனிகள் எப்படி இந்தியாவின் வளத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள், சூறையாடுகின்றார்கள் என்பதையெல்லாம் விளக்குகின்றார். 

                       செல்லாக்காசு எனத் தலைப்பிட்டு, 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதன் நோக்கத்தை, சாதாரண மக்கள் பட்ட அவதியை எல்லாம் -நாம் எல்லாம் கண்ணில் கண்டவைதான். அவற்றை எல்லாம் எழுத்தாக ஆக்கி, ஆவணமாக நமது கையில் கொடுத்துள்ளார். இந்த தலைப்பிற்கு 'பித்தலாட்ட பெரும்புள்ளிகள் கட்டாத பணத்தையெல்லாம் வட்டியோடு வசூலிக்கப்பார்க்கிறது பஞ்சைப்பராரிகளிடம் 'எனும் கவிஞர் யுகபாரதியின் கவிதை மிக பொருத்தமாக உள்ளடக்கைத்தை உணர்த்துகிறது. 

                        முடிக்கும் முன் எனும் தலைப்பில் சுதேசி பேசிய விதேசிகள் எப்படி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் " நிலவுகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக சொல்லப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயக்கொள்கைகள் முற்றிலும் தோற்றுப்போய்விட்டது. அதன் எதிர் விளைவுகளாக வறுமை , வேலையின்மை அதிகரித்தது,விவசாயம் அழிந்தது, தண்ணீர் விலைப்பொருளானது,கிராமங்கள் இடம் பெயர்ந்தன....எல்லாச்செல்வங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு ,இந்தியாவைக் கழிவுகளைச்சுமக்கும் குப்பைத்தொட்டியாக மாற்றி விட்டது " என்று ஆசிரியர் குறிப்பிடுவது உண்மைதான். சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் அழுத்தப்படும் மக்கள் அதனைத் தீர்க்க வீதிக்கு வந்து போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனைத் தனது கருத்தாகக் கூறி இந்த நூலின் ஆசிரியர் நூலினை முடிக்கின்றார். 

                      எவ்வளவு அநீதிகள் நிகழ்ந்தாலும் உழைக்கும் மக்கள் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்வதற்கு நமது நாட்டில் ஜாதிகள் இருக்கின்றன. மதங்கள் இருக்கின்றன. மாதம் ஒரு திருவிழா, மாதம் ஒரு உற்சவம் என்று உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுப்பதற்கு பார்ப்பனியம் நமது நாட்டில் இருக்கிறது.கார்ப்பரேட் சாமியார்கள் புதுப்புது வேசங்களோடு ,பிரச்சனைகளுக்கு தீர்வு இதுதான் என மக்களை மயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். எல்லாம் கோள்களின் செயல்கள் என சோதிடத்தைக் காரணம் காட்டிக்கொண்டிருக்கின்றன ஊடகங்களும் பத்திரிக்கைகளும். மூட நம்பிக்கை என்பது உழைக்கும் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது பார்ப்பனியத்தால். இந்த நம்பிக்கைகள் உடைவது என்பது எளிதாக உழைக்கும் மக்கள் ஒன்றுசேரவும், புதிய பாதை அமையவும் வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.மதமும் நம்பிக்கைகளும் எப்படி கார்பரேட் நிறுவனங்களால் வளர்க்கப்படுகின்றன,கார்ப்பரேட் சாமியார்கள் எப்படி, யார் யாருக்கெல்லாம் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள் என்னும் விவரங்களும் மக்களுக்குத் தெரியவேண்டும். அதனை ஒரு அத்தியாயமாக இந்தப் புத்தகத்தில் இணைக்கலாம்.   

                   புத்தகத்தின் கடைசிப்பகுதியில் உதவிய நூல்களின் பட்டியல் இருக்கிறது. இதழ்கள், வலைத்தளங்கள் எனப் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டைப்படம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் நுழைவு வாயிலில் உள்ள வெளியீட்டாளரின் உரை என்னும் பகுதியில் சு.கருப்பையா நூலைப் பற்றிய சுருக்கத்தை, நோக்கத்தை மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார்."உலக வங்கியிடம் கடன்பெற்று வீழ்ச்சியடைந்த மெக்சிகோ,பொலிவியா ,மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் கண்ணீர் கதைகளை இந்நூல் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளது" என விவரித்துள்ளார்.  பேரா.டாக்டர். இரா.முரளியின் அணிந்துரை வலியுறுத்த வேண்டியதை மிக அழுத்தமாக எள்ளல் நடையில் வலியுறுத்துகிறது.நூலின் ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்தும் உவமைகள், சொல்லாடல்கள் வாசிப்பவருக்கு மிக எளிதாகக் கருத்தை புரியவைக்கின்றன.உலகவங்கி ஏன் தொற்றுவிக்கப்பட்டது என்பதற்கு 'அமெரிக்காவுக்கு வலி தெரியாமல் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டையைப் போன்ற அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய தேவை எழுந்தது '-பக்கம் 4,'நிதியாதிக்க கும்பல்களின் காட்டிலோ சிரபுஞ்சியில் கொட்டுகிற மழையை விட அதிகமாகப் பண மழை கொட்டுகிறது' பக்கம்21, 'இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சி ஒரு மின்னலைப் போல தாக்கிவிட்டு மறைந்து விடுவதில்லை " பக்கம் 41, "இந்திராகாந்தி ,நேருவால் மெத்தப் புகழப்பட்ட கலப்புப் பொருளாதார பதாகையையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார் ' பக்கம்50, 'திவாலாகிப்போன என்ரானுக்காக ரூ 5250 கோடியை, தூக்கிக்கொடுக்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு பா.ஜ.க.வின் 13 நாள் ஆட்சிதான் காரணமாக அமைந்தது ' பக்கம் 65, 'அரசுத்துறை நிறுவனங்களைப் பெருமாள் கோவில் புளியோதரையைப் போல எண்ணி அள்ளி அள்ளி தனியாரின் கைகளில் திணித்தது' பக்கம் 66. இப்படி புத்தகம் முழுக்க ஏராளமான எடுத்துக்காட்டுகள் அமைந்துள்ளன.

                  மதுரை வாசிப்போர் களத்தின் உறுப்பினர் இந்த நூலின் ஆசிரியர் தோழர் மு.சங்கையா அவர்கள். பணிக்காலம் முழுவதும் தொழிற்சங்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்ட தோழர். பணி ஓய்வுக்குப் பின்பு தனது இரண்டாவது புத்தகத்தை  நூலாசிரியர் மு.சங்கையா வெளியிட்டுள்ளார். தான் வாழும் வாழ்க்கையை மிகுந்த அர்த்தமுள்ளதாக ஆக்கும் வகையில் அவரின் படைப்பாற்றலை வகுத்துக்கொண்டுள்ளார். மிகுந்த அர்ப்பணிப்போடும், கடுமையான உழைப்பின் விளைவாக விளைந்த புள்ளிவிவரங்களோடும், தரவுகளோடும் ஆக்கியிருக்கும் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் உழைப்பும் , எளிய மக்களின் உயர்வுக்கான விருப்பமும் தெரிகிறது.வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூல்களைப் படைத்திட வேண்டும்.....  

                         

Tuesday, 5 December 2017

எளியவர்களையும் உயர்த்துவார்.....

எளியவர்களையும் உயர்த்துவார்.....

நமது பரம்பரை எதிரிகளைக் கருத்துக் களத்தில் சந்திக்க தயாரிக்கப்படும் ஈட்டிமுனைகள் புத்தகங்கள்.  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கைகளிலே நமது இன எதிரி, நம் இனத்திற்கு  எதிரான புத்தகத்தைக் கொடுத்தபோது அதனை நாகரிகம் கருதி பெற்றுக்கொண்டு கலைஞர் அவர்கள் நமது இன எதிரியிடம் திருப்பிக்கொடுத்த புத்தகம் 'கீதையின் மறுபக்கம் ';.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு கொடுக்கப்பட்ட புத்தகம். இன்றுவரை விற்பனையில் சக்கை போடும் புத்தகம். 

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரை அருகே இருக்கும் ஊர்களுக்கு வரும்போது அவரோடு பயணிக்கும் அனுபவம் மிகப்பெரிய வாய்ப்பு. பயணிக்கும் தோழர்களின் உடல் நிலையை, வீட்டில் உள்ளவர்களின் நலங்கலை விசாரிப்பார்கள். அரிய புத்தகங்கள் பற்றிச்சொல்வார்கள்.கழகப்பணியாற்றி மறைந்த கருப்பு மெழுகுவர்த்திகளைப் பற்றிச்சொல்வார்கள்.

 சில நேரங்களில் உடன் செல்லும் தோழர்கள் வாய்விட்டுச்சிர்க்கும் அளவில் நகைச்சுவையாய் சில கருத்துக்களைச்சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில், கழகப்பணியில், தியாகத்தில் பத்து சதவீதம் கூட இல்லாத தோழர்களிடம் கூட மிகத்தோழமையோடும் அன்போடும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடியவர்கள் அய்யா ஆசிரியர் அவர்கள் .தந்தை பெரியார் அவர்களுக்கு இனிப்பு,பழங்கள்  பிடிக்கும். இயக்கத்தைச்சார்ந்த தோழர்கள் யாரேனும் கொடுத்தால் அதனை அப்பொழுதே கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு , கொடுத்த தோழர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவாராம், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு புத்தகங்கள் பிடிக்கும். இயக்கத்தோழர்கள் புத்தகத்தை கொடுத்தால் பெற்றுக்கொள்வார்கள். மறுமுறை பார்க்கும்பொழுது அந்தப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தைக் கூறுவார்கள். மிக நல்ல புத்தகம் என்றால் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொடுத்தவரின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவார்கள்.

 புத்தகத்தின் மீதிருக்கும் அவரின் காதல் அற்புதமானது.நாம் தலைவர்களின் வரலாறுகளைப் படித்திருக்கின்றோம். தோழர் காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நூலகத்தின் மேல் கொண்டிருந்த காதலை. நூலப் படிப்பதற்காக காலை முதல் மாலை வரை நூலகத்தில் இருந்த வரலாறைப் படித்திருக்கின்றோம் அய்யா ஆசிரியர் அவர்கள் தான் பயணிக்கும் வாகனத்தையே நூலகமாக மாற்றிக்கொள்கிறார். தான் பயணிக்கும் வாகனத்தை  எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிதான இடமாக ஆக்கிக்கொண்டு பயணித்துக்கொண்டே இருக்கின்றார். 

.போகக்கூடிய ஊர்களில், நாடுகளில் எல்லாம் பழைய புதிய புத்தகக் கடைக்குப் போகக்கூடியவர். செம்மாந்து நிற்கும் பெரியார் திடலின் பணிகளில் மிகப்பெரிய பணி நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகம். குளிரரூட்டப்பட்ட அறைகளும், பாடப்பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகும், பழைய குடியரசு இதழ்களும், விடுதலை ,உண்மை போன்ற இதழ்களும் பைண்டிங் செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும், இணையத்தில் அவை எல்லாம் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பேருழைப்பும் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் காரியங்கள்.

 ஆசிரியருக்கு புத்தகம் பிடிக்கும் என்பதனை அறிந்த கழகத்தோழர்கள் போகும் இடமெல்லாம் புத்தகம் கொடுப்பதை இப்போது வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். உலகமெல்லாம் தான் போய் வந்த இடங்களில் வாங்கிய புத்தகங்களை, தோழர்கள் கொடுத்த புத்தகங்களை எல்லாம் நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகத்திற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப்புத்தகங்கள் எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலரும், நூல் எழுத விரும்பும் பலரும் அடைக்கலம் புகும் இடமாக பெரியார் திடல் நூலகம் இருக்கிறது.இந்த நூலகத்தைப் பார்த்தாலே அய்யா ஆசிரியர் அவர்கள் நூல்களுக்கும், நூலகத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எளிதில் புரியும்.  

பெரியார் தொலைக்காட்சி(periyar.tv) வலைத்தளத்தில்  இருக்கிறது. இணையத்தின் மூலமாக எளிதாகப் பார்க்கமுடிகின்றது. தமிழர் தலைவர் அவர்களின் உரையை,கழக முன்னனித்தலைவர்களின் உரைகளையெல்லாம் உடனுக்குடனே கணினி மூலம் கேட்க முடிகின்றது. எங்களைப் போன்றவர்கள் காலையில் நடைப்பயிற்சி போகின்றபோதே பெரியார் தொலைக்காட்சி மூலமாக அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையிலே பேசிய பேச்சினைக் கேட்கமுடிகின்றது.நடையும், குளிர்ந்த காற்றும் கொடுக்கின்ற இன்பத்தை விட அய்யா ஆசிரியர் அவர்களின் குரலை, கருத்தை பெரியார் தொலைக்காட்சி மூலமாக கேட்கும் இன்பம் பெரிது. மாட்டு வண்டியில் ஏறி  பயணம் செய்து , ஒலிபெருக்கி இல்லாத இடங்களில் அய்யா ஆசிரியர் பேசியது  அந்தக் காலம் 60,70 ஆண்டுகளுக்கு முன்னால்.அன்றைக்கு அவர் பேசியது ஒரு ஊரின் ,ஒரு பகுதியில் மட்டுமே கேட்டது.  இன்றைய காலகட்டத்தில் அய்யா ஆசிரியர் அவர்கள்  ஒரு இடத்தில் பேசும் பேச்சு பதிவு செய்யப்பட்டு இணையத்தின் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் கேட்கப்படுகிறது. இரண்டு நிலையிலும் தந்தை பெரியாரியலை, தமிழர்களுக்கான விடிவை பேசும் உணர்ச்சிமிக்க குரலாக அய்யா ஆசிரியர் அவர்களின் குரல் இருக்கிறது.அவரின் போர்ப்பரணி எப்போதும் போல் ஒலிக்கிறது. எழுத்தால், உரையால், இணையத்தால்,கல்வி நிறுவனங்களால், பெரியார் புரா போன்ற திட்டங்களால் பெரியார் பணி முடிக்கும் அய்யா ஆசிரியர் அவர்களின் பணி பெரும்பணி.எவரோடும், எதனோடும் ஒப்பிட்டுச்சொல்ல முடியாத அரும்பணி.    

கொள்கைகளின் உறுதியாக இருப்பவர்கள் என்றால் எளிய வாய்ப்பு பெற்ற தோழர்களைக் கூட உயர் பொறுப்பில் வைத்துப்பார்க்கும் அய்யா ஆசிரியரின் அணுகுமுறையால் பயன்பெற்றவர்கள் நாம். தலைமைக்கு கட்டுப்படு, தலைமை சொல்வதைக் கேள், தலைமை சொல்வதைச்செய் என்பதே வாழ் நாள் பெருமையாகப் பெற்றிருக்கும் தோழர்களின் கூட்டத்தில் நாமும் ஒருவர்.தந்தை பெரியாருக்குப்பின், அன்னை மணியம்மையாருக்குப்பின் நமக்கு கிடைத்திருக்கும் அருட்கொடை அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவர் சுட்டும் திசையில் நம் பயணத்தைத் தொடருவோம். இனப்பகையின்  கருத்துருவாக்கத்தை,கருத்தினை வேரறுப்போம். 

வா.நேரு,தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்....

நன்றி : விடுதலை 01.12.2017
(திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)

Sunday, 3 December 2017

மதிக்கும் மாண்பாளர்............

ஏனோ தானாவென்று
எதையும் அவர்
செய்ததில்லை...
எதைச்செய்தாலும்
முன்கூட்டியே திட்டமிடலின்றி
அவர் வந்ததில்லை.....


நோயின் தன்மையை
ஆய்ந்து அறிந்து
அதனை நீக்கும்
மருத்துவத்தில் வல்லாளர்....

மொய்க்கும் நோயாளிகளை
அவர்தம் நோய் தீர்க்கும்
அகச்சுரப்பியல் மருத்துவராய்
மணிக்கணக்கில் பார்த்தபோதும்
இலக்கியத்தெற்கென
மணிக்கணக்காய்
நேரமொதுக்காமல் விட்டதில்லை....

மருத்துவத்தில்
மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை
அவற்றின் முகத்திரைகளை
கிழித்தெறிவதில்
எந்த நாளும் சளைத்ததில்லை.....

திருக்குறளைப் பரப்புவதை
திராவிட இயக்கம்போல
வாழ்நாள் பணியாகச்
செய்தவர் அவர்.....
அழகுற ஆங்கிலத்தில்
திருக்குறளை மொழிபெயர்த்து
அதன் நுட்பங்களை
அந்நிய மொழியிலும்
சொன்னவர் அவர் !

பெரியார் இயக்கம்
செய்யும் பணிக்கெல்லாம்
பெறும் நன்கொடை
அளிக்கும் அருளாளர்....
பெரியாரின் தொண்டர்களை
மதிக்கும் மாண்பாளர்......

தேடித்தேடி
நூல்களை வாசிக்கும் பண்பாளர்....
ஆங்கிலத்தில் வாசித்த
பகுத்தறிவுப் புத்தகங்களை
அழகு தமிழில்
மொழி பெயர்த்த ஆற்றலாளர்......

வயது முதிர்ந்தோர்
வாடிடும் நிலை கருதி
முதியோர் காப்பகம் அமைத்த
முதியோர் காப்பாளர்.....

தனக்கென வாழ்வதே
வாழ்க்கை எனக்கருதாமல்
அடுத்தவர்களையும் நினைத்து
வாழ்ந்தவர் அய்யா
மருத்துவர் கு.கண்ணன் !
தரணியில் என்றும்
அவர் புகழ் ஓங்கும் !.......

                  வா. நேரு .......
(கடந்த 23.11.2017, மதுரையில் மறைந்த புகழ்பெற்ற அகச்சுரப்பியல்,நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், எழுத்தாளர், பேச்சாளர் அய்யா கு.கண்ணன் அவர்களின் நினைவாக )     


 

Saturday, 2 December 2017

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்......

                                                                  தமிழர் தலைவர் வாழியவே......
திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2.
இந்த 85 ஆண்டில், இவர்தம் பொதுவாழ்வின் அகவை 75. இந்த விகிதாசாரம் இவரேயன்றி, தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வாய்த்திராத ஒன்றே - தனித்தன்மையே!
பத்து வயதில் தந்தை பெரியாரைப் பார்த்த அந்தத் தருணம் முதல் அவர் வைத்த கண் - வரித்த கொள்கையில் எவ்விதப் பிசிறுக்கும் இடமேயில்லை - மேலும் மேலும் உறுதிப்பாடும், உத்வேகமும், உற்சாகமும் மேலிட்டே வந்திருக்கிறது.
வெறும் பேச்சாளராக, எழுத்தாளராக, நிர்வாகியாக மட்டும் அமைந்திடாமல், சிறுவயதில் அவர் மேற்கொண்ட களப்பணி இயக்கம் மற்றும் பொது வாழ்வில் உரமேற கால்கோலாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
அவருக்கு அமைந்த சூழல் மிகமிக அருமையானது. பள்ளிப் பருவத்தில் ஊன்றப்படும் விதை என்பது விருட்சமாக ஓங்கி வளரக்கூடியது என்பதற்கு அவரே உதாரணம்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதனை மிக அழகாக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘‘இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!
பாடிக் கைவீசிப் பலருடன் உலவி
வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை அவன் பாற்
காண்கிலேன் அன்றும் இன்றும்
உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!’’
- எத்தகைய சரியான படப்பிடிப்பு இது!


திராவிட மாணவர் கழகத்தில் ஏராளமானவர்கள் இருந்த னர் - பல்கலைக் கழகங்களில் பயிலவும் செய்தனர். அந்தப் பட்டியலில் இவருக்கு உள்ள தனிச் சிறப்பு கல்வியில் பட்டொளிவீசிப் பறந்ததாகும். இதில் இவருக்கு நிகர் இவரே!
பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக தங்கப் பதக்கத் துக்குரிய தங்கமாக ஒளிவீசினார் - மாணவராக இருந்தபோதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்ற வர். விடுமுறை நாள்களில் கடலூர் வீரமணியாகப் பட்டிதொட் டியெல்லாம் சுழன்று பிரச்சாரப் பேரிகை கொட்டியவர்.
தந்தை பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை பெற்றதிலும் முதல்வராக இருந்தவரும் இவரே! இதனைத் தந்தை பெரியார் அவர்கள் எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ததன்மூலம் நன்கு அறிய முடியும்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்திய பாங்கு, இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், பிரச்சார யுக்திகள், ஏடுகளை, இதழ்களை எழிலார்ந்த முறையில் நவீனத்துவத்துடன் மேம்படுத்திய நேர்த்தி, இயக்க நூல்களை எண்ணற்ற முறையில் வெளியிட்டு கடைகோடி மனிதனுக்கும் கழகக் கருத்துகள் போய்ச் சேருவதற்கான வழிமுறைகள் - வெளிநாடுகளிலும் இணைய தளத்தின்மூலம் முதன்முதலாகக் கொண்டு சென்ற சாதனை, பன்னாடுகளிலும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்ற வெற்றி என்பதெல்லாம் எமது ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்.
இடை இடையே அரசுகளின் இடையூறுகள், இயக்கத்தில் சிறுசிறு பிளவுகள், தூற்றல் படலங்கள், தமிழக அரசியலில் தலைதூக்கும் விபீடணர்களின் திசை திருப்பும் பிரச்சாரங்கள், பார்ப்பனர்களின் ஊடக விஷமங்கள், இருட்டடிப்புகள் இன்னோரன்ன இடையூறுகள், தடைகளையெல்லாம் தாண்டி இயக்கத்தை மட்டுமல்ல - இனத்தின் உரிமை மீட்பில் தளகர்த் தராக இருந்து வெற்றி அறுவடைகளைக் குவித்தது சாதாரண மானதல்ல.
சமூகநீதி என்னும் தாயின் செல்வமான திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலே இருந்தபோதே இட ஒதுக்கீட் டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து குழப்பத் தைத் திணிக்கவில்லையா? வேறு யார்? எம்.ஜி.ஆர்.தான்.
அதனைப் புறம்கண்டு, தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத எம்.ஜி.ஆருக்கே தண்ணீர் காட்டினாரே தமிழர் தலைவர்.
69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வில்லங்கம் வந்தபோது, பார்ப்பன முதலமைச்சரையே பயன்படுத்தி, அதனைக் கட்டிக்காக்க தனி சட்டத்தையே எழுதிக் கொடுத்து நிறைவேற்ற செய்தது சாதாரணமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால், 76 ஆம் சட்டத் திருத்தம் வந்தது தந்தை பெரியாரின் மாணாக்கர் ஆசிரியர் வீரமணி அவர்களால் அன்றோ!
மத்திய அரசில் இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டை மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வைத்ததன்மூலம் சாதித்துக் காட்டினாரே!
அதன் பலன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற் றில் பாலை வார்த்தாரே!
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் களத்தில் அனேகமாக வெற்றியின் முனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவை அரற்றும் இந்துத்துவா மதவாத அரசியலுக்கு - அதிகாரத்துக்கு முடிவு கட்டுவதிலும், அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் தளபதியாக, தலைவராக இன்றைய தினம் விளங்கிக் கொண்டிருப்பவர் மானமிகு வீரமணி அவர்களே!
85 வயதை எட்டும் ஆசிரியர் எண்ணற்ற ஆண்டுகள் மேலும் வாழ்ந்து தந்தை பெரியார் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி முகட்டில் பறந்திடப் பாடுபடுவாராக! அப்பணிக்கு அர்ப்பணிப்போடு துணை நிற்போமாக!
வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் சித்தாந்தம்!
நன்றி : விடுதலை தலையங்கள் 02.12.2017