Thursday, 30 April 2020

எல்லைக் கோடுகளை பெரிதாக்கி.........வா.நேரு,


உழைக்கும் தோழர்களுக்குள்
ஓராயிரம் பிரிவு...
அதனை ஊதிப்பெருக்கும்
கடமையே சாதிமதப்பிரிவு....

அனைத்து சாதியும்
ஆளுக்கொரு நாள்
மலக்குழியில் இறங்கி
சுத்தம் செய்ய ஆணையிடுங்கள்
உடனடி இயந்திரம்
உடனே தயாராகும்...
இனமுரசு சத்யராஜின் முழக்கம்...

எவர் எவரோ
ஆள்பவர்களாத் தோன்றினும்
ஆள்பவர்கள் முதலாளிகளின்
ஏவல் ஆட்களே.....
வாராக் கடனும் அவர்களால்...
வங்கிகள் திவாலும் அவர்களால்...

உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராய்
சாதியால் மதத்தால்
மக்களைப் பிரிக்கும்
சதிகாரர்கள் ஆட்சிக்கட்டிலில்....
இங்கு மட்டுமல்ல உலகெங்கும்...

உழைப்பவனை அடிமையென
எண்ணும் உலுத்தர்களே
உலகெங்கும் ஆட்சிக்கட்டிலில்...
பிழைப்பதற்கு டெட்டால் ஊசி
போடப் பரிந்துரைக்கும் மேதாவிகள்...

நாட்டைப் பிரிக்கும்
எல்லைக் கோடுகளை பெரிதாக்கி
உழைக்கும் மக்களின்
வயிற்றுப்பசியினை சிறியதாக்கி
தேசபக்தி புலம்பல்கள் உலகெங்கும்..

தொழிலாளர்கள் பங்குதாரர்களாய்
ஆகும் தொழிற்கூடங்களே
வேண்டும் என்ற தோழர் பெரியார்

எட்டுமணி நேர வேலையை
எல்லாருக்கும் உறுதியாக்கிய
சட்டம் தந்த  தோழர் அம்பேத்கர்

உழைக்கும் தோழர்களின்
விடியலுக்காய் புதிய கீதம்
பாடிய தோழர் மார்க்ஸ்
இவர்களின் கருத்துக்களே
உழைக்கும் தோழர்களே !
நம்மை ஒருங்கிணைக்கும்!
விடியலுக்கு வழி வகுக்கும் !

இருட்டைக் கண்டு பயம் வேண்டாம்!
கரனா இருட்டும் ஒரு நாள் விடியும் !
சாதி மத இருட்டும் ஒரு நாள் ஒழியும்!
நம்பிக்கையோடு சொல்வோம்...
உலகத்தொழிலாளர்களே ஒன்றிணைவோம்!
ஒரு மித்த குரலில் ஓங்கிச்சொல்வோம்
வாழ்க! வாழ்க ! மேதினம் வாழ்க !
செவ்வானமாய் உலகம் ஒரு நாள் சிவக்கும்!
அந்நாளில் எல்லோருக்கும் எல்லாமுமாய்
புதிய உலகு விடியும் !
வாழ்க ! வாழ்க ! தொழிலாளர் தினம் வாழ்க!

                                           வா.நேரு,01.05.2020. 

Tuesday, 21 April 2020

கைதட்டச்சொன்னது போதும்...வா.நேரு.

என் உடலில் இருந்த இதயத்தை
எடுத்து தனியே வைத்தார்கள்...
என் உடலில் உயிர் இருக்க
செயற்கை இதயம் பொருத்தி
நாடியைத் துடிக்கவிட்டார்கள்...
தனியே எடுத்த இதயத்தில்
இருந்த  வால்வை
எடுத்து புது வால்வை வைத்தார்கள்..
எனக்கு புது வாழ்வை அளித்தார்கள்...

கடவுளை மறுக்கும் எனக்கு
கடவுளாய் எனக்கு அந்த
அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தான்
அன்று கண்ணில் தெரிந்தார்கள்....
இன்றும்கூட சென்னை அப்பலோ
மருத்துவர்கள் செங்கோட்டுவேலும்
ஸ்ரீதரும் வழிகாட்டிய மருத்துவர்
அய்யா சோம.இளங்கோவனும்
மனதில் நிற்கிறார்கள்..
என்றும் மனிதத்தின் உருவாக
மனதில் நிற்கிறார்கள்...


கரனா நோய்தொற்றால்
மறைந்த மருத்துவருக்கு
சுடுகாட்டில் இடமில்லை என
சிலர் கலாட்டா செய்த செயல்
என்ன சொல்லி நொந்து கொள்வது?
எப்படி இவர்களைத் திருத்துவது?
கரோனோவால்  தேவையில்லா பயம்
தெருவெங்கும் தொற்றிக்கொண்டதா?
மனித இனம் மறுபடியும்
காட்டுமிராண்டி காலத்தை
வரித்துக்கொண்டதா?


கரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க
அரசு மரியோதையோடு அடக்கம் செய்யுங்கள்...
கண்ணுக்குத் தெரியாத கிரிமிகளோடு
போராடும் மருத்துவர்கள்,நர்சுகள்
சுகாதாரப்பணியாளர்கள் எல்லாவகையிலும்
தேசம் காக்கும் போர்வீரர்களே...
கரோனா களத்தில் இருப்போர்க்கு மரியாதையும்
கரோனா களத்தில் இறப்போருக்கு அரசு மரியாதையும்
உறுதிப்படுத்துங்கள் அரசுகளே....
கைதட்டச்சொன்னது போதும்...அவர்களை
மனிதராக மதிக்க சட்டம் செய்யுங்கள்....

                                   .வா.நேரு.....21.04.2020

Sunday, 19 April 2020

அண்மையில் படித்த புத்தகம் : மாணவத்தோழர்களுக்கு....ஆசிரியர் கி.வீரமணி

அண்மையில் படித்த புத்தகம் : மாணவத்தோழர்களுக்கு
நூல் ஆசிரியர்               : ஆசிரியர் கி.வீரமணி
வெளியீடு                   : திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,பெரியார் திடல் ,சென்னை-7.
முதல் பதிப்பு                : ஜீலை 2018, மொத்த  பக்கங்கள் 24, விலை ரூ 15/-


உருவத்தில் மிகச்சிறிய புத்தகமாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் நிறைய செய்திகளை,கருத்துக்களைக் கொடுக்கக்கூடிய புத்தகம் இந்தப்புத்தகம் . 'மாணவத்தோழர்களுக்கு ' என்று மாணவர்களை அழைக்கும்விதமாகத் தான் புத்தகம் தொடங்குகிறது. 'குடந்தை மாநகரில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் உடைக்கப்பட்ட ஒரு தண்ணீர்ப்பானை ஒரு இயக்கத்தை உருவாக்கியது அதுதான் 8.7.2018-ல் பவள விழாக்காணும் திராவிட மாணவர் கழகம் என்ற சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு அமைப்பு '  என்னும் வரலாற்றுச்செய்தியோடு புத்தகம் தொடங்குகிறது.அன்று உடைந்தது வெறும் பானை அல்ல, எதைக்கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரர்களுக்கு கல்வியைத் தராதே என்ற மனு சாஸ்திரச்சட்டம் எழுதிவைத்த பார்ப்பனியத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது அந்த பானை உடைப்பின் மூலம் என்று விவரிக்கின்றது.  

திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கிடும் நிலையில் தந்தை பெரியார் கொடுத்த அறிக்கையும் அதற்கு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுக்கும் விளக்க உரையும் அடுத்து இடம் பெற்றுள்ளன.அந்த அறிக்கையில்தான் தந்தை பெரியாரின் புகழ்பெற்ற வாசகமான ' விழியுங்கள்,எழுந்திருங்கள்.ஆழ்ந்து சிந்தியுங்கள்.உங்கள் தனிப்பட்ட வாழ்வைக் காரித்துப்புங்கள் .உங்கள் இனத்தை மனிதத்தன்மையதாக்குங்கள்.நம் நாட்டை மேன்மையும் வீரமும் பொருந்திய நாடாக்குங்கள். நாடு நகரம் பட்டி தொட்டி எல்லாம் தன்மானக் குரலெழுப்புங்கள் " என்னும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 


திராவிட மாணவர் கழகத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட தன்மை உடையவர்களாக, குணங்கள் உடையவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதனை தந்தை பெரியாரின் , " ....மாணவர்கள் தங்கள் புத்தியை,தங்கள் சக்தியை கண்ட இடத்தில் எல்லாம் செலுத்தாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் ' என்னும்  அறிவுரைகளை மேற்கோள்களாகச்சுட்டிக்காட்டி " இதில் கண்ட இடத்தில் என்பதற்குப் பெரியார் காலத்தில் கடவுள் பக்தி,ஜாதி வெறி,மித மிஞ்சிய உல்லாசம்,கேளிக்கை,பதவி வெறி,சினிமா போதை இவை மட்டுமே இருந்தது. இப்போது அது மேலும் விரிவடைந்து SOCIAl MEDIA என்ற தொலைக்காட்சி ,கைத்தொலைபேசி மற்றும் முக நூல்,வாட்ஸ் அப்,டுவிட்டர் போன்றவை எல்லாம் சதா சர்வகாலமும் பயன்படுத்தக்கூடாத நேரத்திலும் நாம் பயன்படுத்தினால் மீண்டும் திரும்பாத அரிய காலத்தை வீணாக்குகின்றன" என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். உண்மைதான். எதை இழந்தாலும் திரும்பப்பெற இயலும்,.அரிய நேரத்தை வீணாக்கினால் திரும்பப்பெற இயலாது. அதிலும் மாணவப்பருவத்தில் வெட்டியாக பொழுது போக்கிவிட்டு பின்னால் வருந்துபவர்களை நிறையவே பார்த்திருக்கிறோம். 

மாணவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் ? இதோ பெரியார் சொல்கின்றார்..கேட்போம். " நீங்கள் உங்களைச்சாதாரண மனிதர்களாக நினைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கைச்சவுகரியங்களை எவ்வளவு குறைத்துக்கொள்ளவேண்டுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு மிக மிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிக மிக தன்னலமற்றவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும்....நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக்கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்க வேண்டும்? ..மனிதத்தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான் " ..இவற்றையெல்லாம் மாணவர்கள் மனதில் மிக ஆழமாகப் பதியவைத்துவிட்டால் பாதிப் பிரச்சனை தீரும். 

திராவிட மாணவர் கழகத்தில் இணைந்தால் இலாபம் கிட்டாது, நட்டமே கிட்டும் என்று சொல்லி 'சூத்திர பஞ்சம்,அடிமை இழிவுப்பட்டம் ஒழியும் ' என்று ஆரம்பித்து ஒழியும் 8 நட்டங்களை பட்டியலிடுகின்றார் ஆசிரியர். பின்பு திராவிட மாணவர் கழக இயக்கத்தில் இணைந்த "மாணவத்தோழர்கள், இதன் விளைவாக செழிப்போடு வளரும் பகுத்தறிவு விளைச்சல்கள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் படிப்பை சமூக மாற்றத்திற்குரிய கருவியாக்கி மகிழ்வீர்கள். அறிவியல் மனப்பான்மை உங்களுள் பெருகும்,அதன் விசாலப் பார்வையால் விரிபயன் அடைவீர்..சமத்துவம் ,சுய மரியாதையால் சொக்கத்தங்ககளாவீர்...மான வாழ்வு பெற்ற மனிதம் உங்களிடையே மலரும்." என்று பயன்களை அடுக்குகின்றார் ஆசிரியர். திராவிட மாணவர்கள் என்று ஏன் சொல்லவேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கம் அடுத்தடுத்த பக்கங்களில் கிடைக்கிறது இந்தப் புத்தகத்தில்.திராவிடத்திற்கும் ஆரியத்திற்குமான 11 வேறுபாடுகளை வகைப்படுத்திக்கூறுகின்றார் ஆசிரியர் .இதனை மட்டுமே தனியாக முக நூல் போன்றவைகளில் பதிவிடலாம். நறுக்கென்று வேறுபாட்டை உணர்த்தும். 

அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான ஆட்சியாளர்கள், இன்றைக்கும் தொடரும் போராட்டம்,புரட்டர்களின் புகலிடமாக வரலாறு மாற்றப்படுதல் என இன்றைய செய்திகள் என விரியும் இந்தப்புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் வெங்கிட்ட இராமகிருஷ்ணன் சொன்ன கருத்தான " நான் ஏதாவது கருத்துச்சொன்னால், என்னை மேற்கத்திய சிந்தனைக்கு அடிமையாகி விட்டவன் என்பார்கள்.அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, தான் எல்லாம் அறிந்தவன் என்ற மயக்கம்தான் என்பார் ஹாக்கிங்.அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்னும் கருத்து மிக ஆழமான கருத்து. இன்றைக்கும் உயர் ஜாதி பார்ப்பனர்கள் சாதாரண மக்களுக்கு கல்வி கிடைக்கக்கூடாது, சமூக நீதி நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதற்காக செய்யும் செயல்களையும் அதனை எதிர்த்து திராவிடர் கழகம் எப்படிப்பட்ட முயற்சிகளின் மூலம் முறியடித்தது என்பதையும் வரிசையாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.புரட்சிக் கவிஞரின் பாடலோடு இந்தப்புத்தகம் நிறைவு பெறுகிறது. முடிவில் (08.07.2018-ல் குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை) எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு நானும் அந்த உரையைக் கேட்டவன் என்றாலும் ,உரையை நூலாகப் படிக்கும்போது வியப்புதான் மேலிடுகின்றது.படிக்க வேண்டிய புத்தகம். மாணவர்களிடம் பரப்ப வேண்டிய புத்தகம். 


Saturday, 11 April 2020

கரோனாவும் திராவிட இயக்கமும் ......நன்றி : இன்றைய(11.04.2020) விடுதலை

சாதாரண எழுத்தில் படிப்பதற்காக

"தற்போதைய சூழலில் ,கொரனாவுக்கு எதிரான ஒரே நம்பிக்கைச்சொல் கம்யூனிஸ்ட் நாடான கியூபா.அதனால்தான் ,இந்தக் குட்டித் தீவு நாட்டின் உதவியை உலகின் வல்லரசுகளும் நாடியிருக்கின்றன. இத்தாலி உள்ளிட்ட 59 நாடுகளில் ,கியூபாவின் 29 ஆயிரம் மருத்துவர்கள் கொரனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....தங்களது மருத்துவர்களை உலக நாடுகளுக்கு அனுப்புவதன்மூலம்,ஆண்டொன்றுக்கு 6 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் கியூபா,பொருளாதாரத்தில் பின் தங்கிய லத்தீன்அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறது.

வெளி நாடுகளுக்கு இவ்வளவு மெனக்கிடும் கியூபா,உள்நாட்டிலும் சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறது...சீனர்களை தனது இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2பி தடுப்பு மருந்தைக்கொண்டு கொரனாவிலிருந்து குணப்படுத்தியதாக இருக்கட்டும்.மற்ற நாடுகள் மறுத்தபோது கொரணாத் தொற்றுள்ள பயணிகளுடன் கடலில் தத்தளித்த இங்கிலாந்து கப்பலை அனுமதித்து சிகிச்சை அளித்ததாக இருக்கட்டும். மனித நேயத்தால் மிளிர்கிறது கியூபா."ஆயுதங்கள் எதற்கு .நம்மிடம்தான் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களே " என்றார் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ.அவரது இந்த வார்த்தை இன்று உலகுக்கே வழிகாட்டுகிறது...(ச.ப. மதிவாணன்...நக்கீரன்-10-4.2020 மின் இதழ்)".  

1000 பேருக்கு 67 டாக்டர்கள் கியூபாவில்...ஒரு பொதுவுடமை அரசை அமைப்பதற்காக அந்த நாடு பட்ட துன்பங்கள் எத்தனை?துயரங்கள் எத்தனை? பக்கத்திலேயே இருக்கும் பிற்போக்கத்தனத்திற்கு முன்னோடியாகத் திகழும் வல்லரசான அமெரிக்கா எத்தனை இன்னல்களை கியூபாவிற்கு கொடுத்தது ? உலக சுகாதார மையத்தின் (WHO)  புள்ளி விவரங்களின்படி  அமெரிக்காவிலேயே 1000 பேருக்கு 24 டாக்டர்கள்தான்.ஆனால் 1000 பேருக்கு 67 டாக்டர்கள் என்னும் கியூபாவின் சாதனை எவ்வளவு பெரிய சாதனை ?இதனைப் படித்தவுடன் கொரனாவிற்கு மருத்துவமும்  திராவிட இயக்கமும் என எனது சிந்தனை ஓடியது.

உலக சுகாதார மையத்தின் (WHO)  புள்ளி விவரங்களின்படி இந்தியாவை  எடுத்துக்கொண்டால் 1000 பேருக்கு 1 டாக்டர், இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. அதாவது 1000 பேருக்கு 4 டாக்டர்கள்..அதாவது 253 பேருக்கு ஒரு டாக்டர் தமிழகத்தில் இருக்கிறார்.பி.ஜே.பி. ஆளும் ஜார்க்காண்ட் மாநிலத்தில் 8180 பேருக்கு ஒரு டாக்டர் ,அரியானாவில்  6037 பேருக்கு ஒரு டாக்டர் என இருக்கிறார்கள். சுவீடன் நாட்டினைப் போல, நார்வே நாட்டினைப் போல தமிழ் நாட்டில் 1000 பேருக்கு 4 டாக்டர்கள் இருக்கிறார்கள், அதிலும் கிராமப்புறங்களிலும் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறார்கள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது.

தமிழ் நாட்டின் மருத்துவ வசதி என்பது ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறும் திராவிட இயக்க ஆட்சிகளினால் ஏற்பட்ட மாற்றம்.இராமனைத் தினந்தோறும் கும்பிடும் பக்தர்கள் அதிகம் உள்ள ஜார்கண்ட்,அரியானா, உத்தரப்பிரதேசத்தை விட , கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் இராமசாமியின் வழியில் வந்த திராவிட இயக்க ஆட்சிகளால் ஏற்பட்ட மாற்றம் இது. மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என எண்ணிய அறிஞர் அண்ணா அவர்கள் சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.திராவிட இயக்க ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களில் மிக முக்கியமானது மருத்துவம். டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆனவுடன் 1970-களிலேயே தமிழ் நாட்டின் அத்தனை ஒன்றியங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து விட்டது.பெரும்பாலான மாவட்டத்தலைநகரங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகளை டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.  இன்றைக்கு, 35 அரசு மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. இது தவிர அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் இருக்கின்றன.இந்தியாவின் மற்ற எந்தப்பகுதியிலும் இவ்வளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. தமிழ்நாடு  அரசால் ஏற்படுத்தப்பட்ட  மருத்துவ கல்லூரிகள் அனைத்திலும் தமிழ் நாட்டைச்சார்ந்த தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் படித்து மருத்துவர்களாகி இருக்கிறார்கள். எந்த நுழைவுத்தேர்வும் இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள்தான் தமிழகத்தில், இந்தியாவின் பல நகரங்களில், உலகின் பல நாடுகளில் புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரியில் படித்த மருத்துவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ள மனித நேயர்களாகவும் இருப்பது கண்கூடு.

திராவிட இயக்க ஆட்சிகளில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மாநில அரசால் தொடங்கப்பட்டவையே. மத்திய அரசு உதவி செய்யவில்லையென்றாலும் மத்தியில் இருந்த காங்கிரசு அரசு இடைஞ்சல் செய்யவில்லை. 'மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி' என்னும் கோட்பாட்டை முன்வைத்த திராவிட இயக்க முன்னாள் முதல்வர்கள்தான் இதற்கான அடித்தளம் அமைத்தார்கள் என்பது வரலாறு.தமிழ் நாட்டில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு அந்தந்த மாநிலங்களில் மருத்துவக்கல்லூரிகளை துவக்குவதற்கு அந்தந்த மாநில அரசுகள் முன்வரவேண்டும்.அதனை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

ஆனால் மத்திய அரசு அப்படி வழிகாட்டுவதற்கு பதிலாக,நீட் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து தமிழகத்தில் இருக்கும் திராவிட இயக்க ஆட்சிகளில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மற்ற
மாநிலத்தைச்சார்ந்த மாணவர்களை சேர்ப்பதற்கு முயல்கிறார்கள்.எத்தனை விதமான பித்தலாட்டங்கள் நீட் தேர்வில் நடந்திருக்கின்றன என்பதனை செய்திகள் வாயிலாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆள் மாறாட்டாம் பல இடங்களில் நடந்திருக்கிறது.இன்னும் என்னென்ன தில்லுமுல்லுகளோ...நமக்குத் தெரியவில்லை.இந்தியா முழுவதுமே  உயர் ஜாதிக்காரர்களுக்கும்,பணக்காரர்களுக்குமான படிப்பாக மருத்துவத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.

மருத்துவராக வேண்டும் எனும் கனவோடு அல்லும் பகலும் உழைத்து நீட் தேர்வு என்னும் கொடுமையால் உயிர் நீத்த அனிதா போன்றவர்களின் நோக்கம் பணம் ஈட்டுவதல்ல. மருத்துவம் இல்லாமல் எனது அன்னை இறந்தார்.நான் மருத்துவராகி எனது அம்மா போன்ற ஏழைகளுக்கு மருத்துவம் அளிக்கவேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது.மனித நேயத்துடன் மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவம் படிக்க நினைப்பவர்களை வடிகட்டி நிறுத்துகிறது நீட் தேர்வு.நீட் என்னும் கொடுமையான ஒரு நுழைவைத்தேர்வைக் கொண்டு வந்து ,பணக்காரர்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் இலட்சக்கணக்கில் பணம் கட்டி தனிப்பயிற்சியில்  படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்னும் கொடுமையை மத்திய அரசு தனது காட்டுத்தனமான கொள்கையால்  கொண்டு வந்து நுழைத்திருக்கிறார்கள்.

 தமிழக சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் இணைந்து நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்னும் சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசின் மூலமாக அனுப்பி வைத்ததை முதலில் காணாம்(காணவில்லை) என்றார்கள். பிறகு நீதிமன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டது என்றார்கள். தமிழக மக்களின் உணர்வோடும் உயிரோடும் இன்று வரை நீட் தேர்வில் மத்திய அரசில் இருக்கும் சிலர்  விளையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 23-ந்தேதி மத்திய அரசின் அலுவலங்களுக்கும் முன்னால் நீட் தேர்வினை எதிர்த்து நடப்பதாக இருந்த மறியல் போராட்டம் கொரனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.  
நீட் தேர்வு கூடாது ஏன் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜனவரி 20 கன்னியாகுமரியில் ஆரம்பித்து ஜனவரி 31- சென்னைவரை நீட் எதிர்ப்பு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தமிழகம் முழுக்க பிரச்சாரக் கூட்டங்களை பல்வேறு கட்சியினரின்,.பொதுமக்களின் பெருத்த ஆதரவோடு இந்த நீட் தேர்வினை ஒழித்தே தீருவோம்  என்னும் சூளுரையோடு  நடத்தினார். ஒரே  நாளில் மூன்று நகரங்களில் இந்த 87 வயதிலும் மணிக்கணக்கில் உரையாற்றி மக்களுக்கு இந்த நீட் தேர்வின் தீமைகளை எடுத்துரைத்தார்.

"ஒரே தரத்தில் ஒரே முறையில் ஒரே கட்டமைப்பில் நாடு முழுவதும் கல்வி முறையும் பள்ளிகளும் இல்லாத நிலையில் பொதுவான நுழைவுத்தேர்வு எப்படிச் சரியாகும்? நியாயமாகும்? இந்தியாவில் மாநிலப் பாடத்திட்டங்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் முறை என்று பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவப் படிப்பு அனுமதிக்கான நுழைவுத் தேர்வு என்பது எப்படிச் சரியானதாகவும் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்? நகர்ப் பகுதிகளில் தெருவிற்குத் தெரு பயிற்சி மய்யங்கள் உள்ளன. நகர்ப் பகுதி மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆண்டு முழுவதும் அதற்கான பயிற்சிகளை பகுதி நேரத்தில் பெறமுடியும். கிராமப்புற மாணவர்கள் தங்கள் பள்ளித் தேர்வை முடித்து விட்டு வந்துதான் நகரத்தில் மிகக் குறுகிய நாட்கள் தங்கிப் படித்துப் பயிற்சி பெறவேண்டும். பெரும் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்களுக்குதான் இது சாத்தியம். இவர்கள் இருவரையும் ஒரே களத்தில் நிறுத்துவது எப்படி நியாயமானதாகும்?"  என்று அடுக்கடுக்கான கேள்விகளை ஆசிரியர் கி.வீரமணி எழுப்பினாரே அதற்குப் பதில் என்ன ?

.மத்திய அரசின் திட்டங்களில் சுகாதாரத்திற்கென பெரிதாக நிதி ஒதுக்கப்படவில்லை.. புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை  ஒதுக்குயிருக்கிறார்கள்..கங்கையை சுத்தம் செய்கிறேன் என்று சொல்லி பல கோடிகளை ஆற்றிலே கொட்டியிருக்கிறார்கள். ஆனால் சுகாதாரத்துறைக்கு ? தூய்மைப் பணி செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு என எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.3000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை இப்போது பயன்படவில்லை.ஆனால் திராவிட இயக்க ஆட்சியிலே ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும் மக்களின் துயர் துடைக்கும் பணியைச்செய்து கொண்டிருக்கின்றன.

கொரானாவின் காரணமாக ஸ்பெயின் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் தேசியமயமாக்கி  அரசு மருத்துவமனைகளாக மாற்றி உள்ளது அந்த நாட்டின்  அரசு.   இங்கிலாந்து பிரதமர் கொரனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார்.    எல்லோரையும் பாதிக்கும் நோய் இந்தக் கொரனா.   தமிழக அரசுக்கு இன்றைய தேவை என்பது முதுகெலும்பு. தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறுவதாக இருக்கட்டும் அல்லது நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்பதைச்சொல்வதாக இருக்கட்டும். அதனை அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு சொல்லவேண்டிய நேரம் இந்த நேரம்.'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதுதான் திராவிட இயக்க ஆட்சியில் முன்னாள் ஆட்சி செய்த முதல்வர்களின் முழக்கம். அந்த முழக்கத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது என்பதனை தமிழக அரசு உணர வேண்டும். மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும். நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என்பதனை தமிழக அரசு அழுத்தமாகச்சொல்லி அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதோடு இந்தக் கொரனா காலத்தில் மாநிலத்திற்கு தேவையான நிதியைத் தர மத்திய அரசிற்கு அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதே  நமதே கோரிக்கை.

Wednesday, 8 April 2020

'பயன்தரும் மரம் 'போன்ற இந்த 'நட்பெனும் நந்தவனம் ' புத்தகம்......

அண்மையில் படித்த புத்தகம்  : நட்பெனும் நந்தவனம்
நூல் ஆசிரியர்               :  இறையன்பு
பதிப்பகம்                        :  கற்பகம் புத்தகலாயம்,சென்னை-17
முதல் பதிப்பு               :   ஜனவரி-2020 மொத்த பக்கங்கள் 448 விலை ரூ 375/-


                           முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி...2


நட்பு குறித்து எத்தனை தகவல்கள் இந்தப்புத்தகத்தில்..."மன நலத்திலும் உடல் நலத்திலும் அக்கறையோடு நடந்து கொள்வது நட்பின் இலக்கணம்" என்று குறிப்பிடும் நூலாசிரியர் நட்புக்கான இலக்கணத்தை,வரையறைகளை, எல்லைகளை மிக விரிவாகவே குறிப்பிடுகின்றார். "ஒரு வகையில் வாழ்க்கை என்பதே எஞ்சி நிற்கும் நினைவுகள்தாம் "..அந்த எஞ்சி நிற்கும் நினைவுகளை அழகுற வரிசைப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும்தானே இலக்கியம். அந்த இலக்கிய நோக்கினை நிறைவாகவே நிறைவு செய்கிறது இந்தப்புத்தகம்.

காவியங்களில் நட்பு, திருக்குறள் கூறும் நட்பு,சங்க இலக்கியங்களில் தோழியின் முக்கியத்துவம், தோழிகள் எப்படி நட்புக்கான இலக்கணமாக இருந்தார்கள் என்று சொல்வது புதிய கோணமாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு தோழியாக வருபவளை நிறையப் படித்திருக்கிறோம்." சங்க கால இலக்கியங்களில் தோழிகள் முக்கியமான இடத்தைப் பெறுகிறார்கள்.பெண்களுக்குள் நெருங்கிய நட்பு இருக்க முடியும்,எதையும் மனம் விட்டுப் பேசமுடியும், தோழி ஆறுதலாக இருப்பாள்.,அவள் துயர் துடைப்பாள் என்பதை உணர்த்தும் வகையில் தோழியின் பாத்திரம் சங்க கால இலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. ..தோழி பிரதிபலிப்பதில் ஆடி,உடல் நலம் உணர்த்துவதில் நாடி, ரகசியங்களைப் பாதுகாப்பதில் மூடி, பண்பைக் காப்பாற்றுவதில் வேலி,அறிவுருத்துவதில் ஞானி...உயிர்க்குயிரான நட்பாய்,வழி நடத்தும் தாயாய் தோழி தலைவியின் வாழ்வை நிர்ணயிக்கிறாள்  ' எனக்குறிப்பிட்டு அதற்கான சங்க இலக்கியப் பாடல்களை எல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.மேற்கைப் பொருத்தவரை சமமானவர்களே நட்பு பாராட்ட முடியும். ...இந்தியாவிலோ ஒருவர் இளையராகவும்,மற்றவர் பெரியவராகவும் சித்தரிக்கப்படுவதைப் பார்க்கலாம்...காந்திக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இருந்த நட்பு அப்படிப்பட்டது  ..' எனக் கிழக்குக்கும் மேற்குக்குமான நட்பு வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகளோடு சுட்டிச்செல்வதோடு அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து தெரிவித்திருக்கிறார்.குஷ்வந்த்சிங்கின் நாவலைச்சுட்டிக்காட்டி " பஞ்சாபியர்களுடைய கோட்பாடு குழப்பமடையச்செய்துவிடும்.அவர்களுக்கு உண்மை,மானம்,பண விஷயத்தில் நேர்மை போன்றவை சரியானவை.ஆனால் ...நண்பனுக்காக நீதிமன்றத்தில் பொய் சொல்லலாம்.ஏமாற்றலாம். மற்ற பஞ்சாபியர்கள் அவர்களைக் குறை சொல்லமாட்டார்கள்..." எனக்கு புதிய செய்தி இது. சரியா? தவறா ? என்பதைத் தாண்டி பஞ்சாபியர்கள் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குஷ்வந்த்சிங்கின் நாவல் மூலம் விவரித்திருக்கின்றார். 

சரித்திரத்தில் நட்பு என்னும் அத்தியாயம் காரல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ் நட்பு- " மார்க்ஸ் இறந்தபிறகு ஏங்கல்ஸ் 12 ஆண்டு காலம் உயிரோடு இருந்தார்.அந்தக் காலத்தை மார்க்சுக்காகவே வாழ்ந்தார்",ஆபிரகாம் லிங்கன்-ஜோஷ்வா ஸ்பீட் இருவருக்குமான நட்பு- "மனத்தொய்விலிருந்து லிங்கனை மீட்டெடுத்தவர் ஸ்பீட்"- ஃபிடல் கேஸ்ட்ரோ-ஷேகுவாரா நட்பு " ஃபிடல் கேஸ்ட்ரோ- ஷேகுவாரா என்று பலராலும் அறியப்பட்ட எர்ன்ஸ்டோ குவாரா ஆகியோருடைய நட்பு வாசிக்க வாசிக்க சுகம் தருவது ",அக்பர்-பீர்பால் நட்பு,சிந்தனைச்சிற்பி சிங்காரவேலருக்கும்-சிறந்த பொதுவுடமையாகிய விளங்கிய சத்பூரி சக்லத்வாலாவிற்கும் ஏற்பட்ட நட்பு, தந்தை பெரியாருக்கும் -இராஜாஜி அவர்களுக்கும் இருந்த நட்பு என வாசிக்க வாசிக்க சுகம் தரும் சரித்திர நபர்களின் நட்புக்கதைகள்.அதைப்போல இலக்கியவாதிகளின் நட்பு, சாகசத்தில் நட்பு என விரிவான தகவல்கள்.

நண்பெனும் ஆசானே என்னும் தலைப்பில் " சிறந்த புத்தகங்கள் எவை என்பதை சில நண்பர்களிடமும்,மகத்தான உலகத்திரைப்படங்கள் எவை என்பதை சில நண்பர்களிடமும்,எதையும் செம்மையாகச்செய்ய வேண்டும் என்பதை சில நண்பர்களிடமும் ,கடின உழைப்பை சில நண்பர்களிடமும் ,நேர்மையை உறுதிப்படுத்தும் உள்ளத்தை சில நண்பர்களிடமும் ,மன்னிப்பதை சில நண்பர்களிடமும் கற்றுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டு " என் வாழ்க்கையில் ஆசானாகவும்,நண்பர்களாகவும் இருந்த நல்ல இதயங்களை நினைத்துப்பார்க்கிறேன். இன்று இந்த வடிவத்தில் நான் இருப்பதற்கு அவர்களே உளிகளாக இருந்தார்கள்.தூரிகையாகத் துலங்கினார்கள். என்னை அடித்துத் திருத்தி அழகான கையெழுத்தாக மாற்றினார்கள் " என நன்றியோடு குறிப்பிடுகின்றார்..

கிரேக்கத்தில் நட்பு, நட்பு குறித்து சிசரோ-"உண்மைத் தன்மை இருந்தால் மிகப்பெரிய அறிவாளி சாதாரண மனிதருடன் நெருங்கிய நண்பனாக இருக்கமுடியும் ",பேக்கன் படைப்புகளில் நட்பு-" தராதரம் பார்த்துத்தான் நட்பு வைக்கவேண்டும் என்கிற பேக்கனின் கருத்து நட்பின் உன்னதத்திற்கே விரோதமானது ",ஷேக்ஸ்பியர் படைப்புகளில் நட்பு என மேலை நாட்டு இலக்கியங்கள்,இலக்கிய ஆளுமைகள் என அவர்களின் படைப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு அதனை நட்போடு பேசுவது நட்பிற்கு வலுசேர்க்கும் காரணிகளாக இந்தப்புத்தகத்தில் அமைந்திருக்கின்றன.

நீர்க்குமிழி நட்பு என்னும் தலைப்பில் மின்னனுச்சாதனங்களால் உண்டாகும் நட்புகளை விவரிக்கிறார். " நட்பே நம்பிக்கை,அன்பு,பரஸ்பரப் புரிதல்,அந்தரங்கச்செய்திகளைக் கூறுதல் போன்றவற்றின் அடிப்படையில்தான் உருவாக முடியும். மின்னணுச்சாதனங்களால் உண்டாகிற நட்புகளுக்கு அந்தச்சாத்தியக் கூறு இல்லை " என்பதைக் குறிப்பிடுகின்றார். மின்னணு நட்புகளால் " நேர விரயம் ,கண்களுக்குக் கெடுதல்,காசுக்குச்செலவு என்று ஏற்படும் இழப்புகள் அதிகம் ' என்பதனைக் குறிப்பிடுகின்றார்.மின்னணு நட்பு பழைய நட்புகளைத் தொய்வு இல்லாமல் தொடர்வதற்கும், இயக்கரீதியாக அல்லது ஒரு நோக்கத்திற்காகப் பணியாற்றுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது 

ஆளுமையும் நட்பும் என்று வரும்போது " நம்மோடு நெருங்கிப் பழகிய ஒருவருடைய திறன்கள் நமக்குத் தெரியும். அவர் சாதனை புரிந்தால் அல்லது சாதனை புரிய முயற்சி செய்தால் நமக்கும் உந்துதல் ஏற்படும். ", "நண்பர்கள் ஒரே மாதிரி இருந்தால் வாழ்க்கை தோட்டமாக இருக்கும்...பலவித நண்பர்கள் அமைந்தால்தான் பூங்காவாக இருக்கும் " என்பன போன்ற வாசகங்கள் பலவித நண்பர்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. பணியிட நட்பு, ஆண்-பெண் நட்பு,ஆண்-பெண் நட்பு வேறுபாடு  போன்ற அத்தியாயங்கள் உளவியலோடு இணைத்து நட்பியலைப் பேசுகின்றன.போலி நண்பர்கள் என்னும் அத்தியாயம் போலியான நண்பர்களைக் கண்டுகொள்வதற்கான பாடமாக இருக்கிறது. 

ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார் நிபந்தனையற்ற நட்பு என்னும் தலைப்பில் " அண்மைக் காலங்களில் எண் சோதிடத்தைப் பார்த்து இந்த எண் உள்ளவர்கள் இந்த எண் உள்ளவர்களோடுதான் ஆத்மார்த்தமாகப் பழக முடியும் என்று கணிக்கிறார்கள். சிலர் அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதே எண்ணைத் தேடி அலைகிறார்கள்"..சோதிடம் இப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது...உடையப்போகும் நட்பு என்னும் தலைப்பில் 'மனத்தொய்வு ஏற்படுவது நட்பை பாதிக்கும்.மூளையில் உள்ள உயிர் வேதியியல் பொருட்கள் மாறுபடுவதால் மனச்சோர்வும், மனத்தொய்வும் நிகழ வாய்ப்புண்டு ' எனக்குறிப்பிடுகிறார். தன்னுடைய "மூளைக்குள் சுற்றுலா " புத்தகத்தில் இதனைப் பற்றி விரிவாக பேசியிருக்கிறார் நூலாசிரியர்.இங்கு சில குறிப்புகளாக கொடுத்திருக்கின்றார். 

நட்பினை கற்றுக்கொடுக்க வேண்டுமா? ஆமாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதனை இந்த நூலாசிரியர் தெளிவாகச்சொல்கிறார்."பெற்றோர்களைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்... இப்போது நட்பின் தேவை அதிகரித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். நட்பைச்சம்பாதிக்கவும் ,தக்கவைத்துக்கொள்ளவும் பள்ளிப்பருவத்திலிருந்தே சொல்லித்தரவேண்டும்.இலக்கியங்களைப் படிப்பது மற்றவர்களுக்கு நம்முடைய அறிவை எடுத்து விரித்துக்காட்டுவதற்காக அல்ல.அவற்றின் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக.உன்னதமான நட்பை அவை சுட்டிக்காட்டுகின்றன. நாமும் மேன்மையான நண்பர்களாக நடந்துகொள்ளவேண்டும் என்கிற பொறுப்புணர்வு நமக்கு வந்து விட்டால் சென்ற இடமெல்லாம் நண்பர்களால் செழிப்பாகி விடும்...

  நட்பும் போதிக்கப்படவேண்டியதே. நாம் தொடர்ந்து மேன்மையடையும் சாத்தியக்கூறு கொண்டவர்கள்.நம்மிடம் முள்மரமாக வளர்ந்திருக்கிற தேவையற்ற பகுதிகளைக் கத்தரித்துக்கொண்டே இருப்பதன் மூலம் அங்கு பூஞ்செடிகள் வளர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதே மேன்மைக்கான வழிமுறை " நிறைவாக என்னும் முடிவுரைப் பகுதியில் நூல் ஆசிரியர் எழுதுவது.

 "இந்த உலகத்தில் நம்மைச்சூழும் தனிமையை நட்பால் நிரப்புவதைத்  தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது" என இந்த நூலை முடித்திருப்பது தனிமை கடுமையாக பலரைச்சுடும் இந்தக் கொரனா காலத்தில் வாசிப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.உறவுகளை விட நண்பர்களிடம் அதிகமாக பேசிக்கொள்ளும் காலமாக இந்தக் கொரனாக் காலம் இருக்கிறது.மதுரையில் பணியாற்றிய அனுபவம் குறித்து,மதுரையில் கிடைத்த நண்பர்கள் குறித்து மிக விரிவாகவும் நெகிழ்வாகவும் நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நட்புக்கான ஒரு என்சைக்கிளோபடியா என்பது போல இந்தப் புத்தகம் இருக்கிறது.ஆனால் வெறும் தகவல்களின் கோர்வையாக இல்லாமல் உணர்வுகளின் கோர்வையாகவும்,அனுபவங்களின் கோர்வையாகவும் அழகிய நடையில் இருக்கிறது. நல்ல நண்பர்களின் குழுவில் நாமும் ஒரு நண்பராக இருப்பதைப் போல  மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தருவது வேறு எதுவுமில்லை. புத்தகத்தின் முடிவில் இந்தப் புத்தகம் எழுதுவதற்கு பயன்பட்ட தமிழ், ஆங்கிலப்புத்தகங்களின் பட்டியல் கொடுத்திருக்கிறார்.மிகப்பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்.  முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கும் எனது மகளுக்கு  நட்பு பற்றிய ஒரு  பயன்படும்(ரெபரன்ஸ்) நூல்,அரிதான ஒரு புத்தகம் கிடைத்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.   .பலருக்கும் பயன்படும் வள்ளுவர் சொன்ன 'பயன்தரும் மரம் 'போன்ற புத்தகம் இந்த 'நட்பெனும் நந்தவனம் 'என்னும் புத்தகம். படித்துப்பாருங்கள்..நீங்களும் வியந்து பாராட்டுவீர்கள்.விலைக்கு வாங்கி வீட்டில் பயன்படும் நூலாக சேமித்து வைப்பீர்கள். 

Tuesday, 7 April 2020

அண்மையில் படித்த புத்தகம் : நட்பெனும் நந்தவனம்....இறையன்பு

அண்மையில் படித்த புத்தகம்  : நட்பெனும் நந்தவனம்
நூல் ஆசிரியர்               :  இறையன்பு
பதிப்பகம்                   :  கற்பகம் புத்தகலாயம்,சென்னை-17
முதல் பதிப்பு               :   ஜனவரி-2020 மொத்த பக்கங்கள் 448 விலை ரூ 375/-

                       'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறியாளராகக் கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி ஆரம்பித்தபோது 16 நூல்கள் திரு.இறையன்பு அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இன்று நூற்றுக்கு அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கின்றார். இப்போது வரும் அவரின் ஒவ்வொரு புத்தகமும்,ஒரு முனைவர் பட்டம் பெற உதவிடும் வகையில் வருவது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அண்மையில் அவர் எழுதியுள்ள 'நட்பெனும் நந்தவனம் ' என்னும் புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் மிக அருமையாக அமைந்தது. 

                      உறவினர்களை விட நண்பர்களே வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருக்கிறார்கள், நெருக்கடிகளில் உதவுகிறார்கள்,உண்மையாக இருக்கிறார்கள்..நட்பின் மேன்மை தெரிகின்றது, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் வேண்டும் என எண்ணுகின்றோம்.தீய நண்பர்களை வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட வேண்டும் என எண்ணுகின்றோம்.யார் நல்ல நண்பர்கள்..எப்படி கண்டுகொள்வது, நல்ல நண்பர்களை உளவியல் ரீதியாக எப்படி கண்டுகொள்வது?,நல்ல நண்பர்களை சங்க  இலக்கியங்களின் வழியாக எப்படி கண்டுகொள்வது? நல்ல நண்பர்களை திருக்குறளின் வழியாக எப்படி கண்டுகொள்வது ? நல்ல நண்பர்களை மேல் நாட்டு இலக்கியங்கள் வழியாக எப்படி கண்டுகொள்வது ?நல்ல நண்பர்களை நூல் ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தால் எப்படி கண்டுகொண்டார் என்பதையெல்லாம் இணைத்து ஒரு அற்புதமான நட்பியல் பெட்டகமாக வந்திருக்கும் புத்தகம்தான் 'நட்பெனும் நந்தவனம் '.                         இந்த நூலை தன்னுடைய நெருங்கிய நண்பர் திரு,இரத்தினசாமிக்கு காணிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார். நானும் தெரிந்த ஆளுமை திரு. இரத்தினசாமி சார் அவர்கள்.அவருக்கு எனது அன்பான  வணக்கங்கள்.இந்த நூலில் 70 தலைப்புகள் இருக்கின்றன.அனைத்தும் நட்பைப் பற்றி மட்டுமே..." நட்பு குறித்து நிறைய வாசிக்கும்போது விரிவான ஒரு நூலை தமிழில் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.உலக இலக்கியங்கள் காலந்தோறும் கூறி வந்திருக்கும் நட்பு முதல் இன்று சமூக வலைதளம் மூலம் ஏற்படுத்திக்கொள்ளும் அறிமுகம் வரை நட்பைப் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்று வெகு நாட்களாக யோசிக்க நேர்ந்தது. ....எவ்வளவு எழுதினாலும் சலிக்காத பொருண்மை நட்பு. காலப்போக்கில் நட்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும் இதற்கொரு காரணம்.. பல நெருக்கடியான நேரங்களில் கால வெள்ளத்தில் என்னைக் கரை சேர்த்த துடுப்பாக இருந்த பல நட்புகள் பேருருவாக என்முன் தோன்றி சிந்திக்க வைத்தன...மூன்று ஆண்டுகளாக நட்பு குறித்து நான் சேகரித்த தகவல்களையும் ,நூல்களையும் படித்து அசை போட்டு அவை எனக்குள் நன்றாக ஊறிய பிறகே இந்த நூலை எழுதத் தொடங்கினேன்' என நுழைவு வாயிலில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ...நூல் ஆசிரியரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

                         புத்தகத்தில் வந்து விழும் வார்த்தைகள் , குற்றால மழைச்சாரலில் தானாகவே வந்து விழுந்து சிதறும் நீர்த்துளிகள் போல மனதுக்குள் விழுந்து விரிகின்றன.'நட்பின் மகத்துவம் ' என்னும் முதல் அத்தியாயம் 'நல்ல மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் நண்பனாக இருக்கிறான் ' என்னும் காந்தியாரின் பொன்மொழியோடு தொடங்குகிறது. இப்படித் தொடங்குகின்றது அந்த அத்தியாயம் ' நட்பு மனிதத்த்தின் உச்சம்,உறவுகளின் உச்சம். நண்பர்கள் உயரத்தில் இருக்கும்போது மட்டுமல்ல, துயரத்தில் இருக்கும்போதும் துணை வருபவர்கள், புன்னகையை மட்டுமல்ல,கண்ணீரையும் கடன் வாங்கிக் கொள்பவர்கள். உணவை மட்டுமல்ல, உணர்வையும் பகிர்ந்து கொள்பவர்கள்.அழுகிறபோது துடைக்கும் கரங்களாய் நீள்பவர்கள். விழுகிறபோது தாங்கும் விழுதுகளாக இருப்பவர்கள். நல்ல நண்பர்கள் வாழ்க்கையின் வரங்கள் "....இப்படிக் கருத்துக்களோடு சொற்கள் அருவியாக வந்து விழும் அதிசயத்தை 'நட்பெனும் நந்தவனம் ' நூல் முழுவதும் பார்க்கமுடிகிறது. எந்த இடத்திலும் தொய்வு இல்லை, தொடர்ச்சியாய் வந்து விழும் வார்த்தைகள்,அழகிய மாலைகளைப்போல வாக்கியங்களாக மாறுகின்றன. 

                         நட்பை விவரிக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு கவிதையோ அல்லது அறிஞர்களின் பொன்மொழியோ, நிகழ்வுகளோ இடம் பெற்றிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.'உறவுகளின் உச்சம் 'என்னும் இரண்டாவது அத்தியாயத்தின் முடிவில் 'துளியே கடல்/ என்கிறது/ காமம்./  கடலே துளி/ என்கிறது / நட்பு ...என்னும் கவிஞர் அறிவுமதியின் கவிதை இடம் பெற்றிருக்கிறது.இந்த அத்தியாயத்தில் 'நட்பில் விவாகரத்து இல்லை; விவேக ரத்து மட்டுமே உண்டு ' என்னும் வாக்கியம் படிக்கும்போதே நகைப்பை வரவைத்தது. ஆமாம் நட்பை விவாகரத்து செய்ய முடியுமா என்ன ? ஒத்து வரவில்லையென்றால் விவேகமாக ஒதுங்கிக் கொள்ளலாம். விவாகரத்தை விட விவேகரத்து சட்டப்படியாகவும் எளிது.'தொடர்புகளில் முகட்டைத் தொடுவது நட்பாய் இருப்பதே ' உண்மைதானே...நட்புதானே அனைத்து முகட்டைத் தொட வைப்பதற்கான உந்து சக்தி..

                       'பரிணாம வளர்ச்சியில் நட்பு' என்னும் அத்தியாயம் நட்பு எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்திருக்கும் என்பதனைச்சுட்டிக் காட்டும் சமூகவியல் பாடம். பரிணாம வளர்ச்சியில் ' திட்டும் திறன் அல்ல,திரட்டும் திறன் ' இந்தத் திரட்டும் திறன் எப்படியெல்லாம் விசுவாசமான நண்பர்களை தேர்ந்தெடுக்க உதவியது என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றார்.எதற்காக நட்பு என்கிறபோது 'நல்ல நண்பர்கள் இருப்பவர்களுக்கு மனவியல் வல்லுநர்களைத் தேடி அதிகம் போகிற அவசரங்கள்  ஏற்படுவதில்லை...' என்பதைச்சொல்லிவிட்டு 'உடுக்கை இழந்தவன் ...' குறளைக்குறிப்பிட்டு ,இன்னல்களில் எப்படியெல்லாம் நண்பர்கள் கண்ணீரைத் துடைக்கிறார்கள் என்பதனை விளக்கமாகவே கொடுத்திருக்கிறார்.

                    நட்பு எப்படி ஏற்படுகிறது? எத்தனையோ பேர் இருக்க ஒரு சிலரிடம் மட்டும் எப்படி நட்பு ஏற்படுகிறது என்பதனை சமூகவியல் பாடங்கள் மூலம் விளக்குகின்றார். ஆனால் 'விளக்கத்திற்கு அப்பாற்பட்டது நட்பு 'என்பதையும் குறிப்பிடுகின்றார். 'அருகில் இருக்கும்போது ஆனை பலம் வந்ததாக உணர வைப்பதே உன்னதமான நட்பு ' எனக்குறிப்பிடுகின்றார். 'ஒரே மாதிரியான விழுமியங்கள் உள்ளவர்கள் ஒன்று சேர்கிறார்கள் ' என்னும் அறிவியல் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறார்.நட்பினை ஆழப்படுத்திய கடிதப்போக்குவரத்தையும் இன்று மின்னஞ்சலில் மூலம் பெறுகிற கடிதத்தில் சுவையும் இல்லாமல் தொடுதலும் இல்லாமல் அது வெறும் இயந்திரமயமாகிப் போனதையும் குறிப்பிடுகின்றார்.  

                                                                                                ...... தொடரும்

                          

                        
                    

Friday, 3 April 2020

கொரனா சொல்லியிருக்கிறது....வா.நேரு

மரங்களில் பறவைகள்
கூடு கட்டும்.....
மனிதர்கள் கூடு கட்டியிருக்கிறார்கள்
மரங்களில்...
மேற்கு வங்க மாநிலத்தில்

நான் என்னைத் தனிமைப்
படுத்தி கொள்ளல் வேண்டுமே...
ஒரு வேளை எனக்கு கொரனா
இருந்தால் என் உறவுகளுக்கு
பரவிடாமல் இருக்க வேண்டுமே?
ஒரு குடிசைக்குள்
ஏழெட்டு பேர் இருக்கிறோம்
இதில் நான் மட்டும்  எங்கே
தனித்து இருப்பது....
ஆதலால்
மரங்களில் கூடு போல
பலகைகளால் கட்டிப்
படுத்துக் கிடக்கிறார்கள் மக்கள்....

பசி கொன்று விடும் போலிருக்குது
ஏழை மக்களை ...
இந்த முழு அடைப்பு நேரத்தில்
ஒரு நாள் இரு நாள்
தாக்குப்பிடிக்க இயலலாம் அவர்களால்
இரு வாரம் மூன்று வாரம் எங்கனம் ?

நீரைக் கூட காசு
கொடுத்தே வாங்கல் வேண்டும்
குடிப்பதற்கும் குளிப்பதற்கும்....
கொளுத்தி எடுக்கும் வெயிலில்
நீரின்றி எங்ஙனம் வாழ்தல்?

உலை கொதிப்பதற்கும்
உணவுப்பொருள் வாங்குவதற்கும்
அனைத்துக்கும் பணம் வேண்டும்?
அன்றாடங்காய்ச்சிகளாய்
உழைக்கும் மக்களின்
கைகளில் ஏது பணம் ?

வல்லரசாக ஆவதைப்
பின்னால் பார்ப்போம்...
இந்திய நாட்டில் இருக்கும்
ஒவ்வொரு குடிமகனுக்கும்
இருப்பதற்கு இடமும்
குடிப்பதற்கு நீரும் .உண்ண உணவும்
கிடைத்திட  ஏதேனும் செய்யுங்கள்...


இன்றைய தேவை கைதட்டல் அல்ல...
விளக்கேற்றுதலும் அல்ல...
செவ்வாய் கிரகத்திற்கு
ராக்கெட் இப்போது அவசியமில்லை..
அதிவேக புல்லட் ரெயில்கள்
இப்போது தேவையுமில்லை...
தேவையெல்லாம் இந்தியாவின்
அனைத்து மக்களுக்கும் ஒரு வீடு...
இலவசமாய் குடிப்பதற்கும்
குளிப்பதற்கும் நீரு...
உழைப்பதற்கு ஏதோ ஒரு வேலை
அதனால் மூன்று வேளை சோறு...

இத்தாலி நாட்டில்
தெருவெங்கும் பணத்தாட்கள்..
எங்களைக் காப்பாற்றாத
இந்தப்பணம் ...
சாகும்போது எதற்கு ?
தெருவெங்கும் இரைத்திருக்கிறார்கள்
பணத்தை...

4000 கோடிப்பணத்தில் கடலில்
வீடு கட்டி நீ வாழ்ந்தாலும்
பணக்காரா..உன்னையும்
இந்தக்கொரனா துரத்தும்...
ஏழை மனிதர்களை
விலங்குகளாய்க் கூட
மதிக்காத மனிதர்களையும்
ஏழை மனிதர்களின் கொரனா தொற்றும்....
துரத்தி துரத்திக் கொல்லும்....


கொரனா சொல்லியிருக்கிறது....
இனி ஒரு விதி செய்யுங்கள்...
கூடுதலாய் இருப்பவர்களிடம்
இருந்து எடுத்து
ஏழைகளுக்கு பங்கிடுவதற்கு
ஏற்பாடு செய்யுங்கள்....
எல்லோருக்கும் எல்லாம்
கிடைப்பதற்கான ஏற்பாட்டை
செய்யுங்கள்...
இல்லையெனில் ஒட்டுமொத்தமாய்
மனித இனம் செத்துப்போவதற்கு
தயார் ஆகுங்கள்....
                    வா.நேரு....03.04.2020