Sunday, 22 June 2014

சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி
சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி

சூரியக்கீற்றுகள்..தனது வெளிச்சக் கைளால் உலகை அளந்து,நிலவும் இருளை துளைத்து சிதறடித்து,எங்கும் பரவுகின்ற தன்மையால் சுற்றிலுமிருக்கும் மெய்யை உணரச்செய்யும் தன்மை கொண்டது.

“தோழர் வா.நேருவின் சூரியக்கீற்றுகள் கவிதைத் தொகுப்பும்”,ஆண்டாண்டு காலமாய் அகத்திலே நிலவும் இருண்ட சிந்தனைகளை அகற்றி,தெளிந்த சிந்தனையெனும் புதிய வெளிச்சம் தருகின்றதாய் அமைந்திருக்கிறது.

பொதுவாய் கவிதைகள் எனில்,வாசிப்பவனை வார்த்தை ஜாலங்களுக்குள் சிக்கவைத்து,சொல்லவருவது என்ன என மனதை அலைபாயவைத்து,இறுதிவரை இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது..என்றே புரிந்துகொள்ள முடியாத,வாசகனின் ரசனையை,அறிவை மட்டம் தட்டும் கவிதைகள் இப்போது ஏராளமாய் வந்து கொண்டிருக்கின்றன.

வாசிப்பவன் உணரவேண்டியதை,நேரடியாக உணர்த்தாமல் நிற்கின்ற கவிதைகள்,வாசகனின் மனதிற்குள், கடக்க முடியாமல்,அப்படியே புறவெளியில் நின்று,பின் மறைந்தே போகின்றன.ஆனால், “பேனாவால் எழுதியதை வாளாலும் வெட்டியெடுக்க முடியாது”என்று ரஷ்ய இலக்கியமேதையான மக்சீம் கார்க்கி சொன்னதைப்போல,எளிமையையும், வாழ்வின் யதார்த்தத்தையும் கொண்ட கவிதைகள் காலம்தோறும்,சந்ததிகளோடும் பேசிக் கொண்டே இருக்கின்றன. கவிஞர் நேருவின் வார்த்தைகளிலேயே குறிப்பிடுவதென்றால், “ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும்.”

கவிஞர் வா.நேருவோடு,நேரடியாக பரிச்சயம் இல்லாதபோதே,அவரின் கவிதைகள் மூலம் எனக்குள் நுழைந்து இடம் பிடித்துக் கொண்டவர்.. என்பதை, மிகப் பெருமையோடு இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.இவர் எழுதியுள்ள 51 கவிதைகளைத் தொகுத்து,அழகு மிளிரும் அட்டைப் படத்துடனும், திராவிடர் கழக செயலவைத்தலைவர் திரு சு..அறிவுக்கரசு,மற்றும் தோழர்.அகன் அவர்களின் அணிந்துரைகளோடும், இவரின் இரண்டாவது தொகுப்பாக “சூரியக் கீற்றுகள்” கவிதை தொகுப்பு வந்துள்ளது. இவருடைய முதல் தொகுப்பு “பங்குனி உத்திரமும்,பள்ளிக்கூடமும்..!”

இவருடைய கவிதைகளில் எப்போதும்,மானுட நலன் விரும்பும் சிந்தனைகள் துளிர்த்து நிற்பதோடு,மானுட நலனைப் புறக்கணிக்கின்ற எதனையும் வெறுக்கின்ற போக்கும் நிச்சயம் இருக்கும்.அவ்வாறான காரணிகளில் முதலிடம் பிடித்துக் கொண்டிருப்பது மதமும்,சாதியும்.

தொகுப்பிலுள்ள முதல் கவிதையே,பட்டினி கிடக்கும் பிள்ளைகளுக்காக உணவைத் தேடிச் சென்று, மதவெறியர்களால் பலிவாங்கப்பட்ட,காதர்மைதீனைப் பற்றி உருக்கமாகப் பேசுகிறது.
“எந்தத் தவறும் செய்யவில்லை
எனது பெற்றோர் புகட்டிய
மதத்தினைப் பின்பற்றியதைத் தவிர..!
.. .. .. .. ..
மதவெறியின் கோரதாண்டவத்தினால்,வயிற்றில் குத்துப்பட்டு இறந்துபோன சம்பவத்தை நான் மறக்கவில்லை என,நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ள நினைவுகளையும் பகிர்ந்து சென்றுள்ளார்.


“என்காலில் பட்டு
என்னை அறியாமலேயே
சிற்றெறும்பு ஒன்று
சிதைந்துபோனது போலவே
உனது வாழ்க்கையும்
எனது வாழ்க்கையும்..!

இதில் எதற்கு
சாதிப் பெருமையும்
தற்பெருமையும்..?
முடிந்தால்
எவருக்கேனும் உதவு
இல்லையெனில்
அமைதியாய் முடங்கு..!” - என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர்,தனக்குள் குமுறுகின்ற ஆத்திரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு,மிக நாகரீகமாக,உதவு அல்லது அமைதியாய் முடங்கு..என்று சொல்லும்போது, படியாத பிள்ளையின் தலையில் லேசாக கொட்டு வைப்பதுபோல,அவர் அடக்கிவைத்த வார்த்தை நம் மனதுக்குள்,‘இன்னொரு வார்த்தையாக’வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. ,

சாதியையும் மதத்தையும்
நெஞ்சுநிறைய சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து வைத்த
விருந்தில்.., -அறியாத வயதில் கலந்து கொண்டு,உண்ட உணவு,”இன்னும் செறிக்க மறுக்கிறது”. என்று சொல்லும்போது,சாதிய உணர்வுகள் எந்த அளவிற்கு,ஒரு பக்குவப்பட்ட மனதில் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது..என்பதை துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.இந்த கவிதையை வாசிக்கும்போது,நாமும் அப்படிப்பட்ட விருந்துகளில் ஏதாவது கலந்து கொண்டிருந்தால்..,நமக்கும் குமட்டத்தான் செய்யும்.

மாடாய்த்தான் அலைகிறோமோ..?,நடமாடும் கடவுளாகி விடு,முடநம்பிக்கை நாட்டியம்,எங்கே கடவுள்.? நியாயநாள் தீர்ப்புகள்,ஏடெழுதும் எழுத்தாளர்கள், பசியால் உலர்ந்து.., போன்ற கவிதைகள் சாதி மதங்களை மறுத்து மானுடம் பேசும் கவிதைகளாக இருக்கின்றன.

தன்னை கேள்விக்குள்ளாக்கும் சக்திகளை நசுக்குவதும்,பெரும் வணிகக் குழுமங்களின் போஷாக்கில்,தன்னை வளர்த்து கொள்ளும் முயற்சியில் காலம்,இடம்,சூழல் என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி,அதன் அடிப்படைப் பண்புக்கேற்ப,ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது ஆத்திகம்.

மேலும்,மதத்தையும்,சாதியத்தையும் தமது வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய அய்யா வைகுந்தர்,நாராயண குரு,மற்றும் உலகறிந்த புரட்சிக்காரனான பகத்சிங் மட்டுமின்றி, “சிவசக்தி,பீம்சக்தி, இந்துசக்தி..” என அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் தலித்துகளுக்கு நடுவே முழக்கங்கள் எழுப்பி, அம்பேத்கரையும் மதச் சட்டகத்திற்குள் அடைக்கப் பார்க்கின்ற காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கிறது.

அன்றைய பேரரசுகளின் மறுஉருவமாக இன்று இருக்கும் பெருவணிகக் குழுமங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் வகையில், மதத்தை ஒரு காப்புக் கேடயமாகப் பயன்படுத்தும் முயற்சியே இது என..‘மதம்’ பிடிக்காத சிந்தனையாளர்களும் பொதுமக்களும் அறிவார்கள் என நம்பலாம்.

இந்த நேரத்தில்,தோழர்.வா.நேருவின்,‘சூரியக் கீற்றுகள்’ வெளிப்பட்டு, சாதி, மதங்களின் மென்னியைத் திருகும் கேள்விகளை முன்வைப்பதும் பொருத்தமாக இருக்கிறது. ‘மதம்’பிடித்தவர்கள் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டால்தான் என்ன..? அவர்கள் ஏற்றுக் கொள்ளும்வரை, சொல்லவேண்டியதை சொல்லிக் கொண்டேதான் இருக்கும் இவரது கவிதைகள்.

இதுமட்டுமின்றி,புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்ற கவிதையாக இருக்கும் ‘எழுதுவோம் தினந்தோறும்’ எனும் தலைப்பிலான அவர் கவிதை,

உனது வாசிப்பும்
எனது வாசிப்பும்
ஒரே நேர்கோட்டில் என
அறியும்போது
முகிழ்க்கும் நட்பும்
உதவ நீளும் கரங்களும்
புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல,
மானுடத்தின் வெற்றியாய்..!

உன்னை நானும்
என்னை நீயும்
அறிந்திட
வார்த்தைகளை விட
வலிமையாய்
வாசிக்கும் புத்தகங்களும்
எழுதும் எழுத்துக்களும்
இணைக்கும் பாலமாய்..! –என்று சொல்லியிருப்பது ஒத்த சிந்தனையுடையவர்களுக்கு, உற்சாக டானிக்.

உள்மனதின் ஓசை எனும் தலைப்பில்,அவலங்களைச் சுட்டிக்காட்டி,அதனைக் களைவதற்காக ஏதேனும் செய்வோமா..? என்ற பரிதவிப்பே தனது கவிதையாக முகிழ்க்கிறது என கவிதை பிறக்கும் புள்ளியை சுட்டுகிற கவிஞர்,ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும் என்றும் கவிதைகளின் பொதுவான தகுதிகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

அழகாய் படமெடுத்தாலும் பாம்பு கொட்டப்போவது என்னவோ நஞ்சுதான்.” விளம்பரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறது, அழகாய் படமெடுத்தாலும் கவிதை.!

என்று மாறும் இநத நிலை.?, தேவை அல்ல,மனத்தெளிவே.! என்ற கவிதைகள்,கவிதைச் சிறுகதைகள்.!

புரளிப் பிள்ளையார்..நல்ல நகைச்சுவைக் கவிதை.

இதுமட்டுமின்றி,இன்னும் பல தலைப்புகளில் உள்ள கவிதைகள் அனைத்தும் அரசியல்,சமூகம்,மனிதநேயம், உழைப்பு என தனது பாடுபொருட்களால் நம்மை ரசிக்க வைக்கிறது.

பொதுவாக நமக்கு,கையில் எப்போது,எந்தப் புத்தகம் கிடைத்தாலும் மேலோட்டமாக புரட்டி அங்கொன்றும்,இங்கொன்றுமாகப் படிக்கும்போதே அந்தப்புத்தகம் எதனைப் பற்றிப் பேசுகிறது என்று தெரிந்துவிடும். சிலநேரம் எப்போதும் படித்துச் சலிக்கின்ற விஷயங்கள்.., என அலுப்பும்,கோபமும்கூட வந்துவிடும்.எதைப்பற்றியும் கவலைப்படாத சில ஜந்துக்கள்,எப்போதும் எழுதுகின்ற சில சுயநலத் தன்னுணர்வுக் கவிதைகள் வந்துகொண்டே இருந்தாலும்,தோழர் வா.நேருவின் கவிதைத் தொகுப்பை அவ்வாறு கடந்துவிட முடியாது. காரணம்..,தோழர் நேருவின் கவிதைகள்கள்தான்,எனக்கு முதல் முகவரி.அதற்குப் பிறகுதான் அவரோடான நட்பு.

எப்போது வாசித்தாலும் அந்தக் காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்,தோழர்.நேருவின் கவிதைகளை காலவெள்ளம் எந்நாளும் கரைக்க முடியாது.மாறாக,அவை விதைக்கும் சிந்தனைகளில் இருந்து புதிய விதைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கும்.!..இன்னும்,இன்னும் சிறப்பாய் சொல்ல,இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றதே என்ற தவிப்புடனும்,அன்புடனும்.., பொள்ளாச்சி அபி

தகவலுக்காக..,
புத்தகத்தின் விலை.ரூ 70.
மானமிகு பதிப்பகம்
3ஃ20.ஏ-ஆதிபராசக்தி நகர்,
திருப்பாலை-மதுரை-625014
தொடர்புக்கு- 94433 62300
நன்றி : எழுத்து. காம்

Tuesday, 17 June 2014

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ், டாக்டர் சி.எஸ்.ராஜீ

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ்
ஆசிரியர் : டாக்டர் சி.எஸ்.ராஜீ
பதிப்பகம் : சாய் பப்ளிஷ்ர்ஸ், சென்னை-87
முதல் பதிபபு : 2012, மொத்த பக்கங்கள் : 160, விலை ரூ 120.

                                 இந்த நூல் யாருக்காக ? எதற்காக? எழுதப்பட்டது என்பதனை ஆசிரியர் உரையில் இந்த நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். " ஒன்பதாம் வகுப்பில் இருந்து +2 முடிக்கும் பருவத்தில்தான் பிள்ளைகள் பெரும்பாலான உடல்வளர்ச்சி பெறுகின்றனர். அறியாத குழந்தைப் பருவத்தைத் தாண்டி அறிந்த வாலிபப்பருவத்தை அடைகின்றனர்... அந்த முக்கிய காலகட்டத்தில் பிள்ளைகளை நல்ல திசையில் திருப்பிவிடத்தான் இந்நூல் எழுதப்பட்டது ஆயிரக்கணக்கான பெற்றோர் மற்றும் குழ்ந்தைகளையும் அவர்க்ள் உயர்வு தாழ்வுகளையும் கண்ட அனுபவம்தான் இந்நூலை எழுதத்தூண்டியது.

                                     இந்தப் புத்தகம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பாகம் 1 - சுய ஆய்வும் ஊக்குவிப்பும் என்னும் தலைப்பு கொண்டது. ஒரு கழுகு தன் குஞ்சுகளுக்கு எப்படிக் கூடுகட்டுகிறது.பின்பு குஞ்சு பொரித்து தன் குழந்தை வளர வளர குழந்தையை பயிற்றுவிப்பதற்காக
 எப்படிக் கூட்டைக் கலைத்து முட்களின் மேல் கழுகுக்குஞ்சை உட்கார வைத்து,விழ வைத்து,பயத்தினால் அழ வைத்து,பின்பு அச்சம் போக்கி,பயமற்ற,தானக இரையைத் தேடிக் கொள்ளும் கழுகுக்குஞ்சாக உருவாக்குகிறது என்பதனைச் சொல்லி நீங்கள் கூட்டிலிருந்து வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என வளர் பருவத்திலிருக்கும் மாணவமாணவிகளுக்கு நினைவூட்டுகிறார்."உங்கள் சொந்தக்கால்களிலே நிற்பது உங்களுக்கும் பெருமை,உங்கள் பெற்றோருக்கும் பெருமை.உற்றார் உறவினருக்கும் பெருமை ,உங்கள் சிறகுகள் முளைத்து விட்டன,பறக்க ஆயத்தமாகுங்கள்'.
                                 
                                                        வளர் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளிக்க பெற்றோர்கள் படும்பாடு பெரும்பாடு.பெற்றோர்களை இந்த வயதினர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக்"உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும்  உள்ள பந்தபாசம் "எனும் தலைப்பில் கொடுக்கின்றார்."நீங்கள் மேல்நிலைப்பள்ளி (அ)உயர்நிலைப்பள்ளி,அல்லது கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் எப்பொழுதாவது உங்கள் அப்பா,அம்மா உங்களுக்காக செய்யும் தியாகங்களையும் உங்கள் உயர்வில் எவ்வளவு அக்கறையையும் கொண்டுள்ளார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்ததுண்டா? எனப் பக்கம் 11ல் வினா எழுப்புகின்றார்."உங்கள் பெற்றோர் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பும் பாசமும் அளவிட முடியாதது...இந்த  உலகத்தில் அந்த அன்பிற்கு ஈடு இணையான அன்பே கிடையாது எனக் கூறும் ஆசிரியர் பெற்றோர்கள் செய்யும் தியாகங்களை பிள்ளைகளை வளர்க்க ,படிக்க வைக்க படும்  இன்னல்களை பக்கங்கள் 12,13 ல் குறிப்பிடுகின்றார். "இத்தனை தியாகங்களைச் செய்யும் உங்கள் பெற்றோர் உங்களிடம் எதை   எதிர்பார்க்கின்றார்கள்?... நீங்கள் பெற்றோருக்குச் செய்யும் கைம்மாறு அனைத்தும் உங்கள் படிப்பு வளர்ச்சி ,முன்னேற்றம் தான்.திருவள்ளுவர் ,இந்தக் கருத்தை பின்வரும் குறளிலே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி ,
                            "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி  இவன்தந்தை
             என்நோற்றான் கொல் எனும்சொல்."
என்னும் குறளைக் குறிப்பிடுகின்றார்.

                                          2 கால்களும் 2 கைகளும் இல்லாத திரு.ராஜண்ணா பெங்களூரில் ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருவதையும் ,15 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதையும் முன்னாள் ஜனாதிபதி.டாக்டர்.அப்துல்கலாம் அவர்களிடம் உற்சாகமாக பரிசு பெற்றதையும் குறிப்பிட்டு ,
  
                         என்ன பலம் இல்லை உங்களிடம் ?
                          ஏன் இன்னும் குழம்ப வேண்டும் உங்கள் மனம்?
                          திட்டமிட்டு உழைத்திடுங்கள் தினம் தினம் .
                         வேகமாக உயரும் உங்கள் வாழ்க்கைத்தரம்.

என வளர்பருவ மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமூட்டுகிறார்.மாணவ-மாணவியர்களே நீங்கள் உங்களிடம் செய்துகொள்ள வேண்டிய கூட்டல்,கழித்தல்,பெருக்கல் எனப் பட்டியல்களை அணுகுமுறையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பக்கம் 21,22ன்றில் குறிப்பிடுகின்றார்.

                          சுய ஆய்வு மேற்கொள்ளுங்கள்.பிரச்சனையே இல்லாத  ஒருவர் உலகத்தில் இல்லை .பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்.
"உளிதாங்கும் கற்கள்தானே ; மண் மீது சிலையாகும்
வலிகாணும் உள்ளந்தானே ; நிலையான சுகம் காணும் ;
யாருக்கில்லை போராட்டம் ;கண்ணில் என்ன நீரோட்டம் ;
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ." எனும் கவிஞர் பா.விஜய் அவர்களின் திரைப்படப் பாடலைக் குறிப்பிட்டு பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

                            அதிக பயத்தால் வாழ்வே இருள்மயமாகிவிடும் எனச்சுட்டிக் காட்டும் இந்த நூலின் ஆசிரியர் " எப்பொழுதும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டு உற்சாகத்துடன் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு கவலையும் , பயமும் வளராமல் அடிமட்டத்திலேயே தங்கிவிடுகின்றன " எனப்பக்கம் 42-ல் குறிப்பிட்டு உங்கள் மனதைக் கெடாமல் வைத்திருப்பதற்கு குளிர்சாதனமோ, பணமோ தேவையில்லை, உங்கள் மன உணர்வை ஒழுங்குபடுத்துவதே அதற்கு தீர்வு எனக்குறிப்பிடுகிறார்.

                             முன்னேற்றத்திற்கான தடைகள் அனைத்தும் திட்டமிடாத, செயல்படாத, நேரத்தை வீணாக்குபவர்களின் பாதைகளில்தான் அதிகம்,எனவே திட்டமிடுதலை வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக்குறிப்பிடுகின்றார். களிமண்ணாக இருந்த களிமண் அழகிய டீ  கப்பாக மாறும்வரை அது படும் இன்னல்களைக் குறிப்பிடும் ஆசிரியர் வாழ்வின் பல்வேறு இன்னல்களைத் தாண்டித்தான் உயரத்தை அடைய முடியும் எனும் எதார்த்தத்தை பில்கேட்ஸ், எடிசன், ஐன்ஸ்டீன், கலீல் கிப்ரான், ஏலன் ஸ்டிரிக்,பென்னிப்லெயிர், ஜிக ஜிக்லர், பெஞ்சமின் பிராங்களின் போன்ற 10 மேதைகளின் கருத்துக்கள் என பல்வேறு கருத்துக்களை பாகம் ஒன்றின் முடிவுரையாக கொடுக்கின்றார். 

                                                     இலக்கை நிர்ணயித்தலும் சுயமுன்னேற்றமும் என்பது 2ம் பாகமாகும்.இலக்கு என்றால் என்ன?இன்றைக்கு அல்லது இந்த வாரத்தில் செய்ய வேண்டிய குட்டி இலக்குகள்,இந்த மாதத்தில் செய்ய வேண்டிய சிறு இலக்குகள்.இந்த ஆண்டில் செய்ய வேண்டிய பெரிய இலக்குகள்.வாழ்க்கையில் இலக்கு என்பது எதையாவது ஒன்றைச் சாதிப்பதும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் தான் மகா இலக்குகளை அடைய குட்டி இலக்குகள்,சிறு இலக்குகள்,பெரிய இலக்குகள் அவசியம் எனச் சொல்லும் ஆசிரியர், மார்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்து என

 'உங்களால் பறக்கமுடியவில்லை எனில் ஓடுங்கள்;
  ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்;
 நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள்;
எப்படியாவது இலக்கை நோக்கி முன்னேறி செல்லுங்கள்."குறிப்பிடுகின்றார்.

                 மாணவ மாணவிகளிடம் தங்கள் பலத்தை(strength) பலவீனத்தை பட்டியலிடச் சொல்லுகின்றார்.பலவீனத்தை நீக்கி பலத்தை அதிகரிக்கச் செய்யும் பத்துப் படிகளை சுட்டிச் சொல்லுகின்றார்.10வது படியாக "நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் (பிறர் உங்களைப் பார்க்கும் போதும்,யாரும் பார்க்காத போதும்)முக்கியமானது என்னவென்றால் நீங்கள் நன்னடத்தையிலிருந்து சற்றும் நழுவக்கூடாது.உங்கள் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்றால் யாராவது உங்கள் நடத்தை பற்றி தவறாகச் சொன்னால் கூட யாரும் நம்பக்கூடாது.உங்கள் வாழ்க்கை என்னும் சூப்பர் கட்டடத்தை நேர்மை,நியாயம்,கண்ணியம்,கட்டுப்பாடு,அன்பு ஆகியவை கொண்ட அஸ்திவாரத்தின் மேல் கட்ட வேண்டும் . அப்பொழுதுதான் வாழ்நாள் முழுவதும் உங்கள் மகிழ்ச்சியுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.நன்னடத்தைதான் உங்கள் கிரீடத்தில் பொதிக்கும் வைரக்கல்' எனப்பக்கம் 75ல் குறிப்பிட்டு ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை வேண்டுமெனில் ஒழுக்கம் வேண்டுமென்பதனை பசுமரத்தாணிபோல அடித்துக் கூறுகின்றார்.

              சுய நிர்வாகம் தேவை எனக் குறிப்பிட்டு அதற்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஓரிடம் அந்தந்த பொருள் அந்தந்த இடத்தில், எங்கும் எதிலும் ஒழுங்கு, எங்கும் எதிலும் சுத்தம் என்னும் வழிமுறைகளைக் கூறுகின்றார்.

                   கடுமையான் வெயிலை மறைக்க குடை பயன்படுகின்றது.மற்றவர்கள் செய்யும் கேலிய,கிண்டலை,ஏளனங்களை மறைக்க மனதளவிலே ஒரு குடையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
யாரவது ஏளனம் செய்தால் மனதிற்குள் உருவாக்கிய குடையை விரித்து குரைக்கும் நாய்கள் என அலட்சியமாகச் சொல்லுங்கள்.எனப் பக்கம் 82,83ந்றில் குறிப்பிடுகின்றார்.

                 ஜப்பானில் ஹோண்டா என்ற இளைஞன் சந்தித்த சோதனைகளையும் தன்னம்பிக்கை,விடாமுயற்சி எனும் 2 சாவிகளால் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை ஹோண்டா நிறுவனத்தை நிறுவிய வெற்றி வரலாற்றைச் சொல்லி நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை,விடாமுயற்சி  எனும் சாவிகளை உபயோகிங்கள் உயர்வாக எண்ணுங்கள் .நீங்கள் உயர்வீர்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

          வளர்பருவத்தில் ஆழ்பள்ளத்தில் விழுந்து அவதிப்பட வைக்கும் 3கொடிய பழக்கங்கள் புகைப்பழக்கம்,மதுப்பழக்கம்,போதைப்பழக்கம் இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு வீடாதீர்கள்.இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு இருப்போர்களோடு நட்பு பாராட்டாதீர்கள்,விலகி நில்லுங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

                        நேரத்தை நன்றாக கையாள 10 உன்னத உத்திகள் எனக் குறிப்பிட்டு பக்கம் 96 முதல் 101 வரை விவரிக்கின்றார்."கையில் சரியான நேரத்தைக் காட்டும் கடிகாரம் இருந்தும் குறித்த நேரத்தில் குறித்த வேலைக்கு போகவில்லையென்றால் அவர்கள் கடிகாரம் கட்டிக்கொள்ள தகுதியானவர்கள் அல்ல."

                         பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது பற்றி பக்கம் 103 முதல் 106 வரை விவரிக்கின்றார்..மேடையில்பேசும் வாய்ப்புகள்,உங்களுக்கு தானாக வந்துவிடாது.வாய்ப்புகளை நீங்கள் தான் உண்டாக்கி கொள்ள வேண்டும்.பள்ளிகள்,கல்லூரிகள்,சங்கங்கள்,நற்பணி மன்றங்கள் போன்ற பல இடங்களிலே வாய்ப்புகளை உண்டாக்கிக் கொண்டு நன்கு தயார் செய்து பேசிப்பேசித்தான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

               மாணவப் பருவத்திலே உடல் வளர்ச்சி இருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கிறதே என்று எப்படி வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு  ஒரு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் சுமார் 10 ஆண்டுகளுக்குள் உடல்னலம் கெடுவது நிச்சயம்.என எச்சரிக்கும் ஆசிரியர்.உங்கள் உடல்னலமே முன்னேற்றத்திற்கு பலம் .எனவே முன்னேற்றத்தை கவனியுங்கள் என அறிவுறுத்துகிறார்.

             தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வழிமுறைகள் என்பது 3ம்பாகமாகும் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன "அறிஞனாக தேவை ஒரு சதவீத சுய ஊக்குவிப்பும் 99சதவீத உழைப்பும் தான்.என்பதைக் குறிப்பிட்டு 30 அறிவுரைகளை படிப்பது குறித்தும்,தேர்வுக்கு தயாராவது பயிற்சிகள் குறித்தும் தேர்வுக்கு போகும் முன் தேர்வில் விடைத்தாள்களை கையாளும் முறை.,அதிக மார்க்குகள் வாங்க தேர்வு எழுதுவது எப்படி,மிகவும் கடினமான தேர்வை சந்திப்பது எப்படி!என்பதனைப் பற்றியெல்லாம் விளக்கியுள்ளார்.

              நன்னடத்தைதான் உங்களின் மாபெரும் சொத்து என்பது பாகம் 4 ஆகும்.நல்லவர் சேர்க்கை-நல்லதொரு வாழ்க்கை.பொல்லாதோர் சேர்க்கை-தொல்லைமிகு வாழ்க்கை எனக் குறிப்பிடும் இந்நூல் ஆசிரியர்.If character is lost,everything is lost எனும் ஆங்கில வாசகத்தைச் சொல்லி நன்னடத்தையை வலியுறுத்துகிறார்.

                     உங்கள் மாதாந்திர வளர்ச்சி அறிக்கை என்பது 5ம் பாகம்.இது ஒரு பயிற்சியாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது,வளர்பருவத்தினர் மட்டுமல்ல,நம்மைப் போன்ற பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகம் ,டாக்டர் சி.எஸ்.ராஜி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை நாம் வாசிப்பது மட்டுமல்ல,நமது  பிள்ளைகளையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அவர்கள் மன்ம் உவந்து வாசித்துவிட்டால் வளர் பருவப் பிள்ளைகளின் மனதில் ஒரு மாற்றம் நிகழ் வைக்கும் அளவிற்கு கருத்துக்கள் உள்ள புத்தகம் இது..

( மதுரை, அகில இந்திய வானொலியில் நூல் அறிமுகம் பகுதிக்காக தயாரிக்கப்பட்டது)

 
                      

Friday, 13 June 2014

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்) -க.பஞ்சாங்கம்

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்) 
ஆசிரியர்    க.பஞ்சாங்கம்
வெளியீடு : காவ்யா, சென்னை -24
முதல் பதிப்பு : 2005, மொத்த பக்கங்கள் : 170, விலை ரூ 85

                                       இவ்வளவு  பாதிப்பை உண்டாக்கும் நாவலை அண்மையில் படிக்கவில்லை. படிக்கும்போதும், படித்து முடித்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் கேள்விகளாக மனதில் எழுப்பிக்கொண்டேயிருக்கும் நாவல் இந்த நாவல். நான் , என் என்று தன்னை ஒரு பாத்திரமாக இந்த நாவலாசிரியர் வரித்துக்கொள்ளும் வார்த்தைகளோடுதான் கதை ஆரம்பமாகின்றது. உள்ளத்துக்குள் கொதித்துக்கொண்டிருந்த பெரு நெருப்பை வார்த்தைகளாய் கொட்டி வடிக்கும் வடிகாலாய் இந்த நாவல். ஒரு அத்தியாயம் என்பது 2, 3 பக்கங்களில் ,ஏன் ஒரு அத்தியாயம் (33) சில வரிகளில் என்றாலும், தொடர்ச்சியாய் இழவு வீட்டில் முட்டி முட்டி அழும் ஒரு மன நிலையோடு  , ஏன் இப்படி நிகழ்ந்தது , நிகழ்கிறது என்னும் கேள்விகளோடு கதை நகர்கின்றது

                                    தன்னோடு கல்லூரியில் வேலை பார்க்கும் பாலன், எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாத பேராசிரியர் பாலன், தலித் என்பதாலேயே அவமானப்படுத்தப்படும் பேரா. பாலன், குழந்தைத் தனமான பாலன், போட்டித்தேர்வு எழுதி அதிகாரியாகப் போகும் பாலன், அதிகாரியாக வாழும் காலங்களில் தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் புழுங்கித் தவிக்கும் பாலன்,தன்னுடைய குடும்பம் முழுவதும் தன்னுடைய பணத்தை நம்பி வாழும் சூழ் நிலையால் மனம் குமுறும் பாலன், குடும்பத்து மூத்த மகனாகப் பிறந்ததால் முழுக்க குடும்பத்தை தாங்கும் பாலன்,தன்னுடைய தங்கை வாழ்க்கை திருமணம் என்னும் பந்தத்தால் தலைகீழாகப் போவதைப் பொறுக்காமல் அழும் பாலன், தன்னுடைய மனைவியின் குடும்பத்தினருக்கு தான் சம்பாதித்துக் கொடுக்கும் வீட்டில் கிடைக்கும் மரியாதையும் , மதிப்பும் தன்னுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் அவமானமும், அவமரியாதையும் கண்டு மனதுக்குள் வெம்பி, மனைவியோடு சண்டை போட்டு அடிக்கும் பாலன், இது போன்ற நேரங்களில் பிறப்பால் தலித் இல்லையென்றாலும் தன்னை தலித்தாக பாவித்துக்கொள்ளும் தன்னுடைய நண்பன் கொடுக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பாலன், ஓசோவை படித்து ஆகோ ஓகோவென்று புகழ்ந்து விட்டு, அம்பேத்கரின் புத்தகங்களைப் படித்தபின் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து ஓசோ புத்தங்கங்களை இனித் தொடுவதில்லை என்று சொல்லும் பாலன், நண்பனின் அண்ணல் அம்பேத்கர் பற்றிய புரிதல், ஏன் இந்த சமூகம் இப்படி சாதி வயப்பட்ட சமூகமாக இருக்கிறது என்பதை அண்ணல் அம்பேதகர் புத்தகங்களால் புரிந்து கொள்ள முயலும் நண்பன், ,    தற்கொலைக்கு முயலும் பாலன், கடைசியில் டில்லியில் இறந்து போன பாலன் என்று இந்த நாவல் முழுவதும் பாலன் என்னும் மனிதனின் அகமனமும் அவன் புறச்சூழலும் முரண்படும் இடங்களும் ,முடிவில் பாலன் முடிந்து போவதும் , அவனுக்கு உயிருக்குயிராய் இருக்கும் பிறப்பால் தலித் அல்லாத நண்பனும் , அவனது நடவடிக்கைகளும் என நாவல் விரிகின்றது. 

                                                 
" நாம் ஏன் இப்படிக் கிடக்கிறோம்? நம் வாழ்வைத் திருடியவர்கள் யார் ? இதோ என் முன்னால் நிர்வாணமாக எலும்பும் தோலுமாய் நிற்கிறானே சிறுவன், இவனுக்குச்சேர வேண்டிய உணவையும் துணியையும் திருடிய தீய சக்திகள் யார் ? ஆட்டைத் தொடுகிறான், மாட்டைத் தொடுகிறான், நாயைக் கொஞ்சுகிறான் ; ஆனால் நம்மைத் தொடமாட்டானாம். அந்த அளவிற்கு நம்மைக் கேவலமான பிறவியாய் அருவருக்கத்தக்க ஒரு பொருளாய் ஆக்கிய நாசகாரர்கள் யார் ? இதிலுள்ள சூழ்ச்சிகளை எல்லாம் கொஞ்சமாவது அறிந்தோமா ? சரி, இனி மேலாவது அறிய முயல வேண்டாமா ? நமது அன்றாட வாழ்வையே அலங்கோலமாக்கிய மிருகத்தனங்களை நாம் ஏன் இன்னும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டும் ? பொங்கி எழ வேண்டாமா? எழுந்து இந்த அக்கிரமங்களின் ஆணிவேரையும் சல்லி வேர்களையும் அழித்து ஒழித்து விட்டலவ்வா இப்படித் திருமணம் முடிக்க நினைக்க வேண்டும். ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவனும் இத்தகைய திருமணங்கள் மூலம் , இன்னொரு தாழ்த்தப்பட்டவனைத்தானே இந்தத் திமிர் பிடித்த உயர் சாதியினருக்குப் பெற்று வளர்த்துக் கொடுக்கிறான. எண்ணிப் பார்த்துச்செயல்பட வேண்டாமா ? சரி, திருமணம் முடிக்கிறீர்கள்; பெற்ற பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். அம்பேத்கர் சொன்னது போலப் பிச்சை எடுத்தாவது பிள்ளைகளைப் படிக்கப் போட வேண்டாமா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை 'கல்வி கற்பதில்தான் ' இருக்கிறது  என்பதை அந்த மேதை சொல்லால் சொல்லியதோடு மட்டுமல்லாமல் செயலால் செய்தும் காட்டினாரே ! நான் இந்த மண்விழாவில் மணமக்களுக்குச்சொல்லிக் கொள்ள விரும்பவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் . தாழ்த்தப்பட்ட மக்களாகிய நமக்கு விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கை " போராடுதல் " ஒன்றுதான் . " வாழ்க்கையே போராட்டம் " என்று சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைக் கூட்டம் நூத்துக்கு நூறு நமக்குத்தான் பொருந்தும். இதைப் புரிந்து கொள்ளுங்கள் . கணவன்-மனைவியாய் இணையும் நீங்கள் அதோடு வாழ்க்கையைச்சுருக்கிக் கொள்ளாதீர்கள் . உங்கள் மேல் இந்த ஆதிக்கச்சாதிகள் திணித்திருக்கும் பாரங்களுக்கு எதிராகப் போராட இணைந்திருக்கிறோம் என்று எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; வரலாறு நம்மை விடுதலை செய்யும் ; வாழ்க மணமக்கள்; வளர்க நீடூழி " (பக்கம் 13). ஒரு தி.க.காரரும், பாலனும், நான் என்று வரும் பாத்திரமும் கலந்து கொண்ட திருமணத்தில் பாலன் பேசியதாக கூறப்பட்ட வரிகள்தான் மேலே சொல்லப்பட்டவை.  இதைப் போன்ற பகுதிகள் நாவல் முழுவதும் இருக்கிறன. நியாயமான பல விமர்சனங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.


                                                                 பாலனின் வாழ்க்கையை விவரிக்கும் பகுதி போலவே , பாலனின் டைரிக்குறிப்புகளும் பல்வேறு விவாதங்களை மனதுக்குள் எழுப்புகிறது.     ஏன் இந்த நாவல் பலரின் கவனத்தையோ, பரிசையோ பெறவில்லை என்பது கேள்விக்குரியாய் நிற்கிறது. தடித்த புத்தகங்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்களோ, சமூகத்தில் தடித்துப் போய்க்  கிடக்கும் சாதிக்கொடுமைகளை மிகத் துல்லியமாக, நுண் கண்ணாடிகளால் காட்டும் இதனைப் போன்ற நாவலகள் ஏன் தமிழ் இலக்கிய உலகில் விவாதிக்கப்படுவதில்லை என்னும் கேள்விக்கு சாதி சார்ந்த சமூகம் என்பதுதான் பதிலாக இருக்கும். தந்தை பெரியார் கூறியது போல, " உனது இலக்கியம் சாதியைக் காப்பாற்றும் இலக்கியம், உனது கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள், உனது மதம் சாதியைக் காப்பாற்றும் மதம், உனது மொழி கடவுளைக் காப்பாற்றும் மொழி " என்று கூறியதைப் போல அனைத்தும் சாதிமயமாகிப் போன சூழலில், கலகக் குரலாய் வரும் இதுபோன்ற நாவல்கள் நிராகரிக்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. நாத்திகனாக வாழும் நண்பனை உயிருக்குயிராய் நேசிக்கும் பாலன், தன்னுடைய சடங்குகளை விடாத தன்மையும், மகன் இறந்த நிலையிலும் கூட சடங்குகளை விடாப்பிடியாக விடாத பாலனின் தந்தை என , கவிஞர் இன்குலாப் சொன்னதைப் போல " தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் " விடாது பிடித்துக்கொண்டிருக்கும் சடங்குகளை ஏன் விடாப்பிடியாக ஒடுக்கப்பட்டவர்கள்  பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும் எனும் கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.,

                                சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல் இது. மிகக் கூடுதல் கவனத்தை இந்த நாவல் பெற வேண்டும். நாவலின்  தலைப்பு ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் என்று இருந்தாலும் ஒரு மரணம், ஒரு பேராசிரியர், ஒரு அதிகாரி, ஒரு தலித்தாக இருந்ததனால் ஏற்பட்ட நிகழ்வுகள் என இந்த நாவல் விரிகின்றது. இந்த நாவலைப் படிக்கும்போது நான் மிக நெருங்கிப் பழகிய , பழகும் சில நண்பர்களின் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் பல சுட்டிக் காட்டுப்பட்டுள்ளன.  படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவத்தை இந்த நாவல் அளிக்கக்கூடும் . வாசித்துப்பாருங்கள்.
                                       :

Tuesday, 10 June 2014

வசூலுக்கு வந்த வண்ணம்...

பெண்கள் நாங்கள்
ஊர் தாண்டி
எல்லை தாண்டி
இருட்டுக்குள்தான்
செல்ல வேண்டியிருக்கிறது !
இயற்கை உந்துதலைக்
கழிப்பதற்கு !

கண்மாய்க்குள்
காட்டுக்குள்
பாம்பு கிடக்குமோ
தேள் கிடக்குமோ
தெரியாத கொடுமையினால்

கிராமத்து ரோடுகளில்
அமர்ந்து
வெளிச்சத்தோடு வரும்
வண்டிகளுக்கு
எழுந்து எழுந்து பின்
அமர்ந்து அமர்ந்து
கழிக்கும் அவலம்
தொடரத்தான் செய்கிறது !


பேருந்து கழிப்பறையோ
ஊருக்குள் இருக்கும்
ஒரே ஒரு கழிப்பறையோ
ஏன் பள்ளிக்கூடத்திற்குள்
இருக்கும் கழிப்பறையோ
மூக்கை பொத்திக்கொண்டுதான்
போகவேண்டியிருக்கிறது !
இதில் சுத்தம் சோறுபோடும்
என்னும் வார்த்தைகள் வேறு !


ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே !

கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !
                                                    ------: வா. நேரு------
நன்றி : எழுத்து,காம்

------------------------------------------------------------------------------------------------------------

அருமையான பதிவு. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. இதை எந்த அரசியல் கட்சிகளோ அரசியவல்வாதிகளோ , பெரும் பணக்கார பெருமக்களோ இதை பற்றி கவலைப்படுவதில்லை. சிந்திப்பதும் இல்லை. எனக்கே 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டத்தில் அலுவல் காரணமாக சென்ற பொது , நிறைய பெண்கள் என்னிடம் கிராம பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் மல்க இந்த விடயத்தை சொலும்போது என் நெஞ்சம் வெடித்து.. இதயம் கண்ணீர் சிந்தியது. இது வார்த்தைக்காக , பெருமைக்காக எழுதுவது இல்லை. உண்மை உணர்வை கூறினேன். சில வயதான மூதாட்டிகள் சொல்லும்போதே அழுது விட்டார்கள் .
ஊர் பெயர் நினைவில் இல்லை. லால்குடி தாண்டியவுடன் வரும் அந்த பகுதி. இன்னும் அப்படியேதான் உள்ளது என்று கேள்விப்பட்டவுடன் மனம் நொந்து விட்டேன்.
கோயில்களில் எடுத்து சென்று பணத்தை தெரிந்தும் தெரியாமலும் கொட்டுபவர்கள் , பல வழிகளில் வீண் செய்து விரயம் செய்பவர்கள் தயை செய்து யோசிக்கவேண்டும்.
அடிப்படை வசதி செய்துதராமல் எந்த அரசும் நெடிக கூடாது. ஆனால் இன்று சென்னை மாநகரமே அப்படிதான் உள்ளது. குப்பை கூடாரங்களும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளும் நெஞ்சை உறுத்துகிறது. யார் யாரை சொல்வது ...  பழனிக்குமார் :

----------------------------------------------------------------------------------------------------------
 
மிகவும் அவசியமான செய்தியைக் குறிப்பிட்டு உள்ளீர்கள் தோழரே.!

ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே ! "

கடந்தமுறை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ்.கோவில்களைவிட,கழிப்பறைகள்தான் தற்போது அவசியமாக உள்ளது என்று ஒரு கருத்து தெரிவித்தார்.உடனே சில அமைப்புகள் திரண்டு எழுந்து,கோவில்களை விட கழிப்பறைகள்தான் அவசியம் என்று எப்படி சொல்லலாம்..என்று கூறி,அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்,போராட்டம் செய்தது தங்களுக்கும் நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் அப்படியிருக்கும்போது,
"
கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !.." - இது நடந்தால் நல்லதுதான்.

மேலும் ,இது தொடர்பாக சமீபத்தில் வந்த செய்தி ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
------------------------------------
"தேவை தூய கழிப்பறை."

இரு இளம்பெண்கள் அந்தி வேளையில் ஊருக்கு வெளியே இயற்கையின் அழைப்புக்காக சென்றபோது வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அனைத்து கிராமங்களிலும் கழிவறை வசதிகள் இல்லை என்பது குறித்து அனைவராலும் பேசப்படுகிறது.

இதில் அரசை மட்டும் குறைகூறிப் பயனில்லை என்பதையும், மனிதர்களின் பழக்க வழக்கம் எளிதில் மாறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2012க்குள் அனைவருக்கும் கழிவறை வசதி உருவாக்கப்படும் என்று திட்டம் தீட்டி ஆண்டுதோறும் 35 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டாலும், இத்திட்டம் 2022ஆம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என்று தற்போது அரசு சொல்வதற்குக் காரணம்: மக்கள் இதற்குத் தயாராக இல்லை.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறைகள் 50% பயன்படுத்தப்படவில்லை. அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழாக்கப்பட்டு, சமூக விரோதச் செயல்களுக்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்பாடு இல்லாமல் ஆனதற்குக் கூறப்படும் காரணங்கள், அங்கே தண்ணீர் வசதி இல்லை. இது ஓரளவு உண்மையும்கூட. ஆனால் தண்ணீர் இருக்கும் இடத்திலும், ஆற்றங்கரை மேட்டில் அமைந்துள்ள பொதுக் கழிப்பிடங்கள்கூட பயன்பாடற்றுப் போகக் காரணம் என்ன?

சாலையோர உணவகங்களில் பேருந்துகளை பத்து நிமிடம் நிறுத்துகிறார்கள். நடந்துநர் ஓட்டுநர் இருவர் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். பயணிகளில் மிகச் சிலரே சாப்பிடுகின்றனர். அந்த சாலையோர உணவகத்துக்கு வருவாய் எதில் கிடைக்கிறது? கழிவறையில்.

ஒரு பேருந்தில் வருபவர்களில் குறைந்தது 10 பேர் பயன்படுத்துவார்கள் என்றால், குறைந்தபட்சம் 100 பேருந்துகளுக்கு 1000 பேர் பயன்படுத்துகிறார்கள். கட்டணம் நபருக்கு ரூ.4. ஒரு நாளைக்கு எந்த முதலீடும் இல்லாமல் ரூ.4000 கிடைக்கிறது. மாதம் ரூ.1.20 லட்சம்!

ஆனால் அந்தக் கழிவறைகள் முகம் சுழிக்கச்செய்யும் வகையில்தான் பராமரிக்கப்படுகின்றன. அப்படியென்றால், லாபம் இல்லாத பொதுக் கழிப்பறைகளின் பராமரிப்பு எப்படியிருக்கும்!

ஒரு ஓட்டலில் உள்ள பொதுக் கழிப்பறையில் எழுதப்பட்ட வாசகம்: நீங்கள் இந்தக் கழிப்பறை எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேபோன்று நீங்கள் வெளியே போகும்போதும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிச் செல்லுங்கள்.

இவ்வாறு எழுதக்காரணம், பலரும் தாங்கள் பயன்படுத்தியதோடு முடிந்தது என்று அக்கறை இல்லாமல் போவதால், அந்தக் கழிப்பறையை அடுத்தவர் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆகிவிடுகிறது.

கழிப்பறையைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாத இந்தியர்களே அதிகம். இதில் படித்தவர், படிப்பறிவில்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது.

இவ்வாறு கழிப்பறை குறித்து யாரும் அதிக அக்கறை கொள்வதில்லை என்பதால், இதில் ஊழலும் நாறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கழிப்பறை வசதி குறித்த தகவல்களுக்கும், மத்திய அரசு கட்டியிருப்பதாக சொல்லும் புள்ளிவிவரத்துக்கும் 3.75 கோடி கழிப்பறைகள் வித்தியாசம் இருக்கிறது. அப்படியானால் இந்த 3.75 கோடி கழிப்பறைகள் கட்டப்படாமல் கணக்கு எழுதப்பட்டனவா?

பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில்தான் பொய்க்கணக்குகள் எழுதப்படுவது வழக்கம். அப்படியிருந்தும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் இன்னமும் இருக்கின்றன.

பல கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கழிப்பறை வசதிக்கும் சம்பந்தமே இல்லை. பேருந்து நிலையங்களிலும் இதே நிலைமைதான்! புகழ்பெற்ற பக்தி மணக்கும் கோவில் மதில் சுவர்கள் நாறுகின்றன. வாரச் சந்தை நடைபெறும் பகுதிகள், திருவிழா நடைபெறும் பகுதிகளிலும் முடை வீச்சம்.

சுற்றுச்சூழலால் ஏற்படும் நோய்கள் குறித்து புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை என்று உலக சுற்றுச்சூழல் நாளில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலான நோய் கழிப்பறை வசதி குறைவாக இருப்பதால்தான் பரவுகின்றன.

இந்தியாவில் நாளொன்றுக்கு 10,000 டன் மலஜலக் கழிவுகள் ஆற்றிலும், வாய்க்காலிலும் கலக்கின்றன. இவற்றில் ஒரு கிராம் மலத்தில் ஒரு கோடி வைரஸ்கள், 10 லட்சம் பாக்டீரியா, 1000 தொற்றுக்கிருமிகள், அவற்றின் முட்டைகள் 100 இருப்பதாகச் சொல்கிறது யூனிசெப் நிறுவனம்.

நோயற்ற இந்தியா உருவாக வேண்டும் என்றால், அனைவருக்கும் தூய்மையான கழிப்பறை வசதி வேண்டும். நோயற்ற வாழ்வும் தூய கழிப்பறையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை!
----------------------இணையத்தின் உதவியுடன் பொள்ளாச்சி அபி