Tuesday, 5 July 2022

எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்

எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி – 2022

விதிமுறைகள்:
¤ சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
¤ எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.
¤ சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2022.
¤ வெற்றி பெற்ற சிறுகதைகளுக்குத் தந்தை பெரியார் பிறந்தநாளான 2022 செப்டம்பர் 17 அன்று பரிசு வழங்கப்படும்.
¤ யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.
¤ எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனை பெயர் பயன்படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.
¤ கதையைத் தட்டச்சு செய்து அஞ்சல் மூலமும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைகளை அனுப்பவும்.
¤ கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.
¤ தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் தொகுக்கப்பட்டு தனியே புத்தகமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தால் அச்சு வடிவிலும், கிண்டிலிலும் வெளியிடப்படும்.
¤ கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களுக்கே! தொகுப்புப் புத்தகத்தின் காப்புரிமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சேர்ந்தது.
நிபந்தனைகள்:
¤ கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக இருக்கவேண்டும்.
¤ சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
¤ புதிதாக எழுதப்பட்ட கதைகள் எனில், இதுவரை எங்கும் (இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட) பிரசுரிக்கப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் உறுதிமொழி அளிக்கவேண்டும்.
¤ 2021, 2022ஆம் ஆண்டில் ஏதேனும் இதழில் வெளியான சிறுகதை என்றால், எந்த இதழில், எப்போது வெளியானது என்று குறிப்பிட்டு சிறுகதை வெளிவந்த இதழின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
¤ கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ, போட்டியை நடத்துபவர்களுடனோ எவ்விதத்திலும் கடிதப் போக்குவரத்தோ, தொலை-பேசித் தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.
¤ நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசுகள்:
முதல் பரிசு: 5000
இரண்டாம் பரிசு: 3000
மூன்றாம் பரிசு: 2000
பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிற கதைகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.500 பரிசளிக்கப்படும்.
“எமரால்டு எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி-2022” என்று தலைப்பிட்டு கதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: rationalistwriters@gmail.com
அஞ்சல் முகவரி:
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

Monday, 4 July 2022

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு

 வரலாற்றுச் சிறப்புமிக்க, பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு 19.6.2022 அன்று செஞ்சியில் நடைபெற்றது. கொரோனாவால் உரிய காலத்தில் நடத்தமுடியாமல் தள்ளிப்போடப்பட்டு, இப்போது நடத்தப்பட்டது.

தொடக்க விழா

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் காலை 9:00 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது. முதலில் புதுவை குமாரின் மந்திரமா தந்திரமா நிகழ்வும், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி அவர்களின் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அடுத்து தொடக்க விழாவில், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. முனைவர் க.பொன்முடி அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம்
அடுத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் பகுத்தறிவு – அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்ற, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஆர்.டி.சபாபதிமோகன் தொடக்கவுரை யாற்றினார். அதனைத் தொடர்ந்து அறிஞர் பெருமக்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உரையாற்றினர்.உரை வீச்சு

“சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்ற தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், “கடவுளை மற – மனிதனை நினை” என்ற தலைப்பில் முனைவர் ப.காளிமுத்து, “வெல்க திராவிடம்!” என்ற தலைப்பில் ஆ.வந்தியத்தேவன், “சமூகநீதி காப்போம்” என்ற தலைப்பில் கோ.கருணாநிதி, “பெண்ணுரிமை காப்போம்” என்ற தலைப்பில் சே.மெ.மதிவதனி, “அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மை” என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு, “அறிவியலும் மூடநம்பிக்கையும்” காட்சிகள் மூலம் விளக்கி டாக்டர் கணேஷ் வேலுசாமி ஆகியோர் உரையாற்றினார்கள். அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சமுதாயத்திற்கு மிகவும் தேவையான – உடனடியாகச் செய்யப்பட வேண்டிய  13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி

சரியாக மாலை 4:30 மணிக்கு மாநில மாநாடு நடைபெற்ற வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்திலிருந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி புறப்பட்டது.

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் க.மு.தாஸ் இளம்பரிதி பேரணிக்குத் தலைமை வகித்தார். விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தோழர்கள் நால்வர் நால்வராக அணிவகுத்து மூட நம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை முழங்கியவாறு அணிவகுத்துப் புறப்பட்டனர்.

கருஞ்சட்டைப் பேரணி பெருத்ததோ – செஞ்சி சிறுத்ததோ என்கிற அளவுக்குப் பேரணி பெருவெள்ளமாக செஞ்சிக்குள் பாய்ந்தது. கட்டுப்பாட்டுடன் பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை அணிவகுத்தது செஞ்சி வாழ்பெருமக்களைச் சிந்திக்கச்செய்தது.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் – பேரணியும், அதில் இடம்பெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புக் காட்சிகளும் விழிப்பை ஏற்படுத்தின.

பேரணியின் வருகையை ஒலிபெருக்கிமூலம் அறிவித்துக் கொண்டே சென்றார் வழக்குரைஞர் அமர்சிங்.

பெண்கள் தீச்சட்டி ஏந்தி, ‘தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?’ என்று முழக்கமிட்டு வந்த காட்சி பொதுமக்களை – குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் ஈர்த்தது, வியப்பில் ஆழ்த்தியது, சிந்திக்கச்செய்தது.

சென்னை வழக்குரைஞர் வீரமர்த்தினி, ஒசூர் செல்வி செல்வம், திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி, சென்னை பசும்பொன் செந்தில்குமார், சென்னை மரகதமணி, சென்னை க.சுமதி, திருப்பத்தூர் வெண்ணிலா, முகப்பேர் செல்வி, தாம்பரம் உத்ரா, அம்பத்தூர் சரோஜா, மத்தூர் ஜான்சிராணி, ஆவடி பத்மினி, புதுச்சேரி இளவரசி, சென்னை ஆற்றலரசி, திருவள்ளூர் லோகநாயகி, ஷீப்னா முதலிய வீராங்கனைகள் தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வீர நடை போட்டு வந்தனர்.


வீர விளையாட்டுகள்

கறம்பக்குடி முத்து தலைமையில் சுருள்வாள் வீச்சு, சிலம்பம், தீப்பந்தம் விளையாட்டு, பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி கடவுள் சக்தியைப் பார்த்தீர்களா என்று கேலியாக அறிவூட்டினர். ஊர்வலப் பாதையெல்லாம் கடவுள் இல்லை என்று சொல்லி, தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி வந்த காட்சி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆத்தூர் சுரேஷ் முக்கியமாக அதை செய்து காட்டினார். சிறுவர்களே சூடம் கொளுத்தி கையில் ஏந்தி, நாக்கில் வைத்துக் காட்டி விளக்கினர். மூடநம்பிக்கையை விளக்கினர்.

அரிவாள் மீது ஏறி நின்று, கடவுள் இல்லை என்று முழங்கி, பேராவூரணி தோழர் நீலகண்டன் மக்கள் கூடிக் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் அந்தக் காட்சியைச் செய்துகாட்டி அசத்தினார்.

அலகுகுத்தி கார் இழுத்தல்

கோவில் திருவிழாக்களில் சிறு தேரை முதுகில் அலகு குத்தி இழுத்துக்காட்டி, இதுதான் கடவுள் சக்தி என்று பேசுவதுண்டு. இது கடவுள் சக்தியால் அல்ல, இதோ கடவுள் இல்லையென்று சொல்லியபடி அம்பாசிடர் காரையே இழுத்துக்காட்டுகிறோம்’ என்று செயல்படுத்திக் காட்டினர் கமலம்பாக்கம் தேவராஜ் (திண்டிவனம்), ஜெ.பா.மாரிமுத்து (சின்ன சாட்டிரான்பாக்கம்), திண்டிவனம் சுரேஷ் ஆகியோர்.

கடவுள் மறுப்புப் பாடல்களை பாடி ஆடினர். தோழர்கள் திண்டிவனம் பன்னீர்செல்வம், ஒசூர் சித்தார்த்தன், கிருட்டினகிரி பர்கூர் ஞானசேகரன் ஆகியோர் செடல் காவடி எடுத்து வந்தனர்.

கழகக் கொடிகள் அணிவகுப்பு

பெரியார் பிஞ்சுகள், மகளிர், மாணவர் கழக, இளைஞரணியினர், பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தின் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகப் பகுத்தறிவு முழக்கமிட்டனர்.

பகுத்தறிவு ஆசிரியரணியினரும், பகுத்தறிவாளர் களும் பெரியார் பொன்மொழி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர்.

சடையார்கோவில் நாராயணசாமி குழுவினர் நடத்திய பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம் வெகு சிறப்பாக இருந்தது.

பாடகர் கோடையிடி கோவிந்தன், ந.அன்பரசு (துறையுண்டார் கோட்டை), கு.திலீபன் (சடையார் கோவில்), தவில் இசைக் கலைஞர் முனியாண்டி, பம்பை இசைக் கலைஞர் முத்து காளி மற்றும்

20 மாணவர்கள் (பெரியார் பிஞ்சுகள்) பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் மார்பளவு உருவச்சிலையுடன் ஊர்வலத்தில் தலைவர்களின் பெருமைகளை முழங்கியபடி சென்றனர்,

கடலூர், கிருட்டினகிரி, திருப்பத்தூர், திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சார்பில் பதாகைகளுடன் இளைஞர்கள், பொறுப்பாளர்கள் எழுச்சி முழக்கமிட்டபடி சென்றனர்.

புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை சிந்தனை விருந்தான கலைநிகழ்ச்சியுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின.

கொட்டும் மழையிலும் அலகு குத்தி மூடநம்பிக்கையை முறியடித்து காரை இழுத்த திண்டிவனம் தோழர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

ஒலிபெருக்கியில் முழக்கம்

யாழ் திலீபன், மதிவதனி, பா.மணியம்மை, த.சீ.இளந்திரையன், குடந்தை சங்கர், ஆத்தூர் பழனிவேல், உரத்தநாடு மனோகரன், காரைக்குடி வைகறை, டாக்டர் காஞ்சி கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கி மூலம் விளக்கி வந்தனர்.

தாம்பரம் பெரியார் பிஞ்சு கோவன் சித்தார்த்தன் சிலம்பம் நிகழ்வு சிறப்பாக இருந்தது.

செக்கடிகுப்பம் காத்தவராயன் குழுவினர் கழகப் பாடல்களைப் பாடினர்.

தலையில் வாழைக்காயை வைத்து அரிவாளால் வெட்டிக் காட்டும் சாதனையை – விஜயேந்திரன் (பெரம்பலூர்) செய்துகாட்டினர்.

தருமபுரி இயற்கை கலைக் குழுவினர் பறையிசை நிகழ்வை பகுத்தறிவாளர் கழகக் கலைப் பிரிவு செயலாளர் மாரி கருணாநிதி தலைமையில் சிறப்பாகச் செய்தனர்.

பேரணி வழித்தடம்

மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தேசூர்பாட்டை சாலை, மாதாகோவில், சிங்கவரம் சாலை, குளத்தங்கரை, காந்தி பஜார், திருவண்ணாமலை சாலை வழியாக மாநாட்டு மேடையில் முடிவடைந்தது.

நிறைவு விழா

மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டம் மழையின் காரணமா திறந்த வெளியில் நடக்காமல் வள்ளி அண்ணாமலை திருமண அரங்கத்தில் கெடார் நடராசன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சி சிரிப்பும், விழிப்பும் ஊட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. வரவேற்புரையை விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை. திருநாவுக்கரசு ஆற்றினார்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. கே.எஸ்.மஸ்தான் வாழ்த்துரை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சே.கோபண்ணா, விழுப்புரம் மாவட்டக் கழக தலைவர் ப.சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

படங்களைத் திறந்துவைத்து

தலைவர்கள் உரை

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் தந்தை பெரியார் படத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் படத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிஞர் அண்ணா படத்தையும், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் படத்தையும், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் படங்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சாவித்திரி புலே படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

செஞ்சி மஸ்தான் அவர்களின் சிறப்பான பங்களிப்பு

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டை செஞ்சியில் நடத்தினால், அதைச் சிறப்பாக நடத்தித் தருவேன் என்று உறுதியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், சொன்னவாறே சாதித்துக் காட்டினார். மாநாடு இவ்வளவு சிறப்பாகஅமைய அவரது பங்களிப்பு மகத்தானது.

ஆசிரியரின் நிறைவுரை

மாநாட்டு நிறைவுரையை ஆசிரியர் வழங்கினார். மாநாடு சிறக்கப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார். இணைப்புரையை திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்க, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் நன்றி கூற மாநாடு சரித்திர சாதனை படைத்து நிறைவடைந்தது.


நன்றி: உண்மை ஜீலை 1-15,2022. அய்யா மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரையில் ஒரு பகுதி

Friday, 1 July 2022

'எண்ணம் பிறந்த மின்னல்' நூல் மதிப்புரை...


'எண்ணம் பிறந்த மின்னல்' நூல் மதிப்புரை இன்று...

பகுத்தறிவு எழுத்துகள் காலைத்தை கடந்து நிற்பவை.எதிர்காலத்திற்கும் பயன்படும் நோக்கில் அமைந்தவை. 'மெய்ப்பொருள் காணும் அறிவை' வாசிக்கும் வாசிகனுக்கு கடத்தும் வல்லமை மிக்கவை. பகுத்தறிவாளர்கள் எழுதிய நூல்கள் அணி வகுக்கப் போகிறது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30.க்கு...வாருங்கள் தோழர்களே,தோழியர்களே...இன்று முதல் நிகழ்வு... 


 

Wednesday, 29 June 2022

'சுயரூபம்' என்னும் கு.அழகிரிசாமி அவர்களின் கதை

                            சுயரூபம் என்னும் கு.அழகிரிசாமி அவர்களின் கதை பற்றி எனது விமர்சனம்.தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் கு.அழகிரிசாமி. அவரின் மிகச்சிறப்பான கதைகளில் ஒன்று சுயரூபம்." வேப்பங்குளம் கிராமத்தில் இரு நூறு வீடுகள் உண்டு.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம்பெருமை உண்டு." என்றுதான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. 'அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் 'உண்டு 'என்று சொல்லுவதற்கு அந்தப் பழம் பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது' என்று விவரிக்கும்போதே நக்கலும் நையாண்டியும் கதையில் ஆரம்பிக்கிறது.'பசி வந்தால் பத்தும் போகும் ' என்பது பழமொழி. பழம்பெருமை படைத்த வீ.க. மாடசாமித்(தேவர்) என்றுதான் இந்தக் கதையின் நாயகன் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

மாடசாமிக்குத்  தன் தாத்தாவின் பேரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுவதில் இருக்கும் பெருமை,தன்னுடைய தாத்தாவின் தீரத்தையும் வைராக்கியத்தையும் சந்திக்கும் ஒவ்வொரு இரண்டு கால் பிறவியிடத்திலும்(கவனிக்க இரண்டு கால் பிறவிகள்- மனிதர்கள் அல்ல) சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் தன்மை என்று நையாண்டி தொடர்கிறது.பழம்பெருமை வாய்ந்த மாடசாமியை அவர் பிறந்த சாதியைச்சார்ந்த முத்தையா பார்த்து ,கடனைக் கேட்கும்போது 'நான் என்ன உமக்குப் பயந்து ஒளிஞ்சுக்கிட்டு அலையறேன்னு சொல்லுறீரா..." என்று சொல்லும் போது பழம்பெருமை வாய்ந்த கடன்காரர் மாடசாமி என்பது நிருபிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ல 'மத்தியானம் காசு வந்து சேருது, பாரும் ...' என்று சொல்லும்போது பழம்பெருமை வாய்ந்த வாய்ச்சவுடால் பேர்வழி மாடசாமி என்பதைக் கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கதையின் நடுவில் 'சென்னை மாநகரிலிருந்து கன்னியாகுமரிவரையிலும் செல்லும் ' சாலையும் அந்தச்சாலையில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவில் இருக்கும் ஒரு விலக்கும் அந்த இடத்தில் இருக்கும் முருகேசப்(பிள்ளை) என்பவரின் பலகாரக்கடையும் நையாண்டித்தனமாகத்தான் அறிமுகம் செய்யப்படுகிறது.அந்தப் பலகாரக்கடையால் முருகேசன் பெற்ற வளர்ச்சியையும் போகிற போக்கில் கதை ஆசிரியர் சொல்லிச்செல்கிறார்.அந்த முருகேசனின் பலகாரக்கடைக்கு மாடசாமி வந்து சேர்கிறார்.

அந்தக் கடையில் மாடசாமியைக் கவனிக்காதமாதிரி முருகேசன் இருப்பதையும்,கடைக்கு வருகிறவர்களைக் கவனிப்பதையும்,'இடையிடையே ஏதேதோ பேச்சுக்கொடுத்துப் பார்த்தாலும் 'மாடசாமியைக் கண்டு கொள்ளாமல் முருகேசன் நடந்து கொள்வதையும் கதாசிரியர் விவரிக்கும் பகுதி நல்ல உளவியல் உத்திகள் சார்ந்த பகுதி.மீண்டும் மீண்டும் படித்து சிரிக்கலாம்.சிந்திக்கலாம்.

அதைப்போல நாலுவடம் முத்துமாலை பற்றிய உரையாடலில் உதட்டில் வரும் சொல்லுக்கும் ,உள்ளத்திற்குள் ஓடும் எண்ணத்திற்குமான இடைவெளியை மிகச்சிறப்பாக விவரித்து 'கும்பி கூளுக்கு அழுததாம்,கொண்டை பூவுக்கு அழுததாம் ' என்று நினைப்பதாக விவரிக்கும் பகுதியும் கூட மனிதர்களைப் புரிந்துகொள்ள உதவும் பகுதிதான்.

முருகேசன் சாப்பிடும்போது மாடசாமி  தன்னைப் பற்றி 'முந்தா நாள் சரியாகச்சாப்பிடாமலும் நேற்று அறவே சாப்பிடாமலும்,இன்று வெறும் பசியேப்பம் விட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு மனிதன் ' என்று சொல்லும்போது நமக்கும் மாடசாமி மேல் ஓர் அனுதாபம் ஏற்படுகிறது. காலை முதல் இரவு வரை இட்லிக்காக அந்தப் பழம் பெருமை வாய்ந்த மாடசாமி படும் பாட்டைப் பார்க்கின்றபோது நமக்கு உண்மையிலேயே மாடசாமி மீது பரிதாபம் உண்டாகிறது. 'வயிற்றுக்கொடுமை அவரை இப்படியெல்லாம் ஆட்டி வைத்தது ' என்று நூலாசிரியர் விவரிக்கும்போது பழம்பெருமை பசியைப் போக்காது என்பதை மிக அழுத்தம் திருத்தமாக சொல்வதுபோல் இருக்கிறது.

இருக்கும் முருகேசன் நான் கீழே கொட்டினாலும் கொட்டுவேன் என்னும் பாணியில் நடப்பதையும்,இல்லாத மாடசாமி எத்தனையோ வகைகளில் முயன்று அந்த இட்லியை வாங்க நினைப்பதையும் விவரித்து முடிவில் இருவரும் சண்டையிட்டு மல்லுக்கட்டுவதையும்,கடைசியில் தானமாக இட்லியை முருகேசன் கொடுத்தாலும் அவமதிப்பால் அதனை மாடசாமி வாங்க மறுப்பதையும்  அதன் தொடர் நிகழ்வுகளையும் கதையாசிரியர் சொல்லிச்செல்கிறார்.

இந்தக் கதையைப் படித்தபோது எனக்கு இலங்கைதான் நினைவுக்கு வந்தது. மொழியால்,மதத்தால்,இனத்தால் மக்களைப் பிரித்து ஆள்பவர்கள் சொகுசாய் வாழ்ந்ததையும் ,முடிவில் அடுத்த வேளைக்குக் குடிக்க கஞ்சிக்கு வழியே இல்லை என்னும் நிலை வந்தபோது மக்கள் தங்களுடைய பழம்பெருமையாக நினைத்தவற்றையெல்லாம் புறந்தள்ளி, மனிதர்கள் மனிதர்களாக இணைந்து ஒன்று திரண்டு அந்த நாட்டின் பிரதமர் ஓடி ஒளியும் நிலைக்கு மக்கள் போராடியதையும் நினைத்துப்பார்க்கத் தூண்டியது. இந்திய நாட்டில் இருக்கும் சாதி,மதப்பெருமை எல்லாம் பசியோடு இருக்கும் மனிதர்களுக்கு இல்லை.அந்தப் பழம்பெருமைகள் பசிப்போருக்குத் தேவையில்லை.எல்லோருடைய பசியைப் போக்கும் வழி ஏதாவது இருந்தால் செய்யுங்கப்பா என்று சொல்வதாகத்தான் நான் இந்தக் கதையைப் பார்க்கிறேன்.


வா.நேரு. 

Tuesday, 28 June 2022

ஒரே ஒரு பூமிதான் ....

                                                      ஒரே ஒரு பூமிதான் ....

                                                     முனைவர் வா.நேரு


“பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து” என்றார் தந்தை பெரியார். இந்தப் பூமி என்பது அனைவருக்கு-மான பொதுச்சொத்து. இந்த உலகில் வாழும் 790 கோடி மனிதர்களுக்கு மட்டும் சொந்த-மானது அல்ல இந்தப் பூமி, ஒரு செல் உயிரில் தொடங்கி பல ஆயிரம் கோடிக்கணக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவாகி இருக்கும் பல்லுயிர்களுக்கும் சொந்தமானது இந்தப் பூமி. ஆனால், மனிதர்களின் பேராசையால், ஒழுக்கமின்மையால், பக்தி என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்படும் காட்டுமிராண்டித்தன-மான நடைமுறைகளால் இந்தப் பூமி விரைவில் அழிந்துவிடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டிருக்-கின்றது.

1974-ஆம் ஆண்டு முதல் ஜூன்- 5ஆம் தேதி என்பது சுற்றுச்சூழல் தினமாக அய்க்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘ஒரே ஒரு பூமிதான்’ (Only one Earth) என்பதாகும்.

நாம் உயிரோடு வாழ்வதற்கு ஓர் உடல் இருக்கிறது. அப்படித்தான் இந்த உலகில் இருக்கும் உயிர்கள் எல்லாம் வாழ்வதற்கு இந்தப் பூமி இருக்கிறது. நாம் வாழ்வதற்கு என இருக்கும் வீட்டிற்கு ஆபத்து என்றால் நாம் அலறுகிறோம், பதறுகிறோம், பாதுகாக்கத் துடிக்கிறோம்.


அப்படித்தான் கோடிக்கணக்கான நட்சத்திரக் குடும்பங்கள் இருந்தாலும், அதில் கோடிக்கணக்கான கிரகங்கள் இருந்தாலும், சூரியக் குடும்பத்தில் நிறையக் கோள்கள், துணைக்கோள்கள் இருந்தாலும் நாம் (மனிதர்கள்) வாழ்வதற்கான ஒரே இடம் நாம் வாழும் இந்தப் பூமிதான். மனிதர்கள் மட்டுமன்றி, கோடிக்கணக்கான விலங்குகளும், தாவரங்களும் என பல்லுயிர்களும் வாழும் இந்தப் பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

உலகளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்து-கிறவர்கள் பெரும்முதலாளிகள், பெரும்-பணக்காரர்-கள்-தாம் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. “மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள மேட்டுக்குடியினர் இந்த உலகை மாசுபடுத்தும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்” என்கிறார் ஆக்ஸ்ஃபாமை சேர்ந்த நஃப்டோகே டாபி. “பணக்காரர்களின் மிதமிஞ்சிய உமிழ்வுகள்தாம் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தூண்டி, புவி வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளைப் பாதிக்கின்றன” என்கிறார் அவர். உலகின் வசதியான 1 சதவிகிதம் பேர் வெளியிடும் கார்பன் அளவு, 50 சதவிகிதம் உள்ள ஏழைகள் வெளியிடும் கார்பன் அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது என ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. பணக்காரர்கள் வெளிப்படுத்தும் கார்பன் அளவு இந்தப் பூமியை அழிக்கும் அளவிற்கு இருக்கிறது. அய்ரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனமான ஸ்டாக்ஹோம் என்விரோன்மென்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல உண்மைகளைக் குறிப்பிடுகிறது.


“பல வீடுகள், தனி ஜெட் விமானங்கள், சொகுசு யாக்ட் கப்பல்கள் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் இந்த சராசரி அளவைவிட பல மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள். சில பிரபலங்கள் மேற்கொண்ட விமானப் பயணங்களை அவர்களது சமூக ஊடகங்கள் மூலம் பரிசீலித்த ஓர் அண்மைக்காலத்திய ஆய்வு அவர்கள் ஆண்டுக்கு 1000 டன்னுக்கு மேல் கார்பனை வெளியிடுவதாகக் கூறுகிறது. அந்த 1 சதவிகிதம் பணக்காரர்கள் என்பவர்கள் பில்லியனர்கள் மட்டுமல்ல, மில்லியனர்கள்கூட அந்தப் பட்டியலில்தான் வருகிறார்கள். உலகின் 10 சதவிகிதப் பணக்காரர்கள் பட்டியலையும் இந்த ஆராய்ச்சி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அவர்களுக்கு உரிய பங்கைவிட 9 மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள்” என்று அந்த ஆய்வு விரிவாக, இந்தப் பூமியையே அழிக்கக்கூடிய வேலையை வசதி வாய்ப்புகள் என்னும் பெயரில் பணக்காரர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் சுற்றுச்-சூழலை மாசுபடுத்துவதில் முன்னனியில் நிற்கின்றனர். மூட நம்பிக்கைகளை மக்களின் மனதிலே புகுத்துவதற்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். பார்ப்பனப் பண்டிகைகளான _ தீபாவளி போன்ற பண்டிகைகள் ஏற்படுத்தும் சுற்றுச்-சூழல் மாசு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுவைக் கட்டுப்-படுத்துவது என்பது மிகப்பெரிய சவால். “2019ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாயின. இது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால், நாடு ரூபாய் 2,60,000 கோடிக்கு மேல் இழப்பையும் சந்தித்துள்ளது” என்னும் தகவலை ஒன்றிய அரசின் அமைப்பான அய்.சி.எம்.ஆர். தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. கொரோனா தொற்று என்னும் பேரிடர் நிகழ்வதற்கு முன்னமே நிகழ்ந்த நிகழ்வு இது.

அரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பிகார் போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் மழைக்காலம் நீங்கலாக மற்ற காலங்களில் மாசுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாசுபாட்டின் அளவைக் குறிக்கும் பி.எம்.குறியீடு 50-க்குள் இருக்க வேண்டும். ஆனால் புதுடெல்லியில் எப்போதும் 300க்கு மேல் இருக்கிறது. இதே பி.எம்.25 குறியீடு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 17, நியூயார்க்கில் 38, பெர்லினில் 20, பெய்ஜிங்கில் 59 ஆகும்.


இந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஆபத்து எவ்வளவு தீவிரமானது என்பதை உணர ஒரு புள்ளி விவரத்தைக் கூறலாம். 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சாலை விபத்துகள், தற்கொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகம்.

நீங்கள் சிகரெட், பீடி போன்ற புகைப்பழக்கம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், நீங்கள் டெல்லியில் வசித்தால் புகைப்பழக்கம் உள்ளவரை விட மோசமாக உங்கள் நுரையீரல் பாதிக்கப்படும். எப்போதும் டெல்லியில் பி.எம்.25 குறியீடு 300க்கு மேல் இருக்கிறது. அப்படி என்றால் டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 15 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். டெல்லியில் ஒரு குழந்தை பிறந்தால், பிறந்த நாளிலிருந்து 15 சிகரெட் குடிக்கும் அளவிற்கான பாதிப்பைத் தன் நுரையீரலுக்குத் தருகிறது. 30 வயதில் நுரையீரல் புற்று நோய் போன்ற பாதிப்பு-களுக்கு உள்ளாகின்றது என்று குறிப்பிடு-கின்றனர்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 177வது இடம் கிடைத்திருக்கிறது. திருவிழாக்கள், கும்பமேளா போன்று இந்தியாவில் நடைபெறும் விழாக்களில் பக்தி என்னும் பெயரில் பல இலட்சம் பேர் ஒரே இடத்தில் கூடுகின்றனர். பிளாஸ்டிக் போன்ற பொருள்களைப் பயன்-படுத்துவதோடு நீரையும் பாழ்படுத்தி சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றனர். இந்தியாவில் நீர் மாசுபாட்டுக்கு மிகப்பெரிய காரணம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். கழிவு நீரும் மலமும் இணைந்து பல ஆறுகளைப் பாழ்ப்படுத்தி, கழிவு நீரைச்சுமந்து செல்லும் குழாய்கள் போல ஆறுகளை மாற்றுகின்றது. புனித நதி என்று சொல்லப்படும் கங்கை நதி மோசமான கழிவுகளால் மாசு அடைந்திருக்-கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பண்டிகை என்னும் பெயரில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிகளை வெடித்து காற்றில் கார்பன் அளவை அதிகரிக்கச் செய்கின்றனர். பக்தி சார்ந்த செயல்பாடுகள் சுற்றுச்சூழலைக் கெடுத்து, காற்றில், நீரில் மாசு ஏற்படக் காரணமாகின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பது, இவற்றைத் தவிர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிப்பேசும் பலர், கவனமாக இந்தப் பண்டிகைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதி பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

பகுத்தறிவாளர்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களும் இக்கேடுகள் பற்றி விளக்கி, பரப்புரை செய்ய வேண்டும். இந்தியாவின் பக்தி என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கே கேடு விளைவித்து அழிக்கக்கூடியது என்பதை மக்களிடத்தில் பரப்புவோம்


நன்றி ஜீன் 16-31-2022, உண்மை மாதம் இருமுறை இதழ்

Sunday, 26 June 2022

எங்கிருந்து தொடங்குவது அ.வெண்ணிலா நூல் மதிப்புரை

 


முழுமையாக வல்லினச்சிறகுகள் இதழைப் படிக்கசங்கப் பலகை
நூல் மதிப்புரை
நூலின் தலைப்பு: எங்கிருந்து தொடங்குவது
நூல் ஆசிரியர்  அ.வெண்ணிலா
வெளியீடு   அகநீ,வந்தவாசி
வெளியிடப்பட்ட ஆண்டு : 2017 மொத்த பக்கங்கள் 142 விலை ரூ 100

குடும்பம் என்றாலே புனிதம். குடும்பத்தில்  இருக்கும் குறைகளைப் பேசக்கூடாது என்ற மனப்பான்மை புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தில் நான் பேசுகிறேன் என்று முன்வந்து அ.வெண்ணிலா பேசியிருக்கும் நூல் 'எங்கிருந்து தொடங்குவது'. இந்த நூல் 25 கட்டுரைகளின் தொகுப்பு.ரெளத்திரம் மாத இதழில் 25 மாதங்களாக தொடராக வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.ஒரு ஆணும் பெண்ணுமாக இணைந்து வாழும் குடும்பத்தின் சிக்கல்கள் பற்றி மிக விரிவாகப் பேசும் நூலாக இந்த நூல் இருக்கிறது.தமிழ் நாடு அரசின் விருதினைச்,சென்ற ஆட்சிக்காலத்தில் இந்த நூல் பெற்றிருக்கிறது.

குடும்பம் என்ற அமைப்பு, எப்படி உருவானது,எப்படி கட்டமைக்கப்பட்டது என்ற சமூகவியல் வரலாற்றை இந்த நூல் பேசுகிறது.ஒரு ஆசிரியராகப் பணியாற்றும் வெண்ணிலா,தன்னைச்சுற்றி நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்கி அதன் ஊடாகக் குடும்பம் என்ற அமைப்பின் போலித்தனத்தை மிக உண்மையாக எடுத்து வைத்து,தீர்வு என்ன என்று சிந்திக்க வைக்கிறார்..

வெளியில் எல்லோரோடும் சிரித்துப் பேசி நல்லவனாக இருக்கும் மனிதன் ஒருவன் வீட்டில் கெட்ட வார்த்தை பேசி மனைவியோடு சண்டையிடும் மனிதனாக இருப்பதை,அவனது மகன் மூலம் அறிந்து கொண்ட நிகழ்வை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.ஏன் மனிதர்களுக்கு வீட்டிற்குள் ஒரு முகமாகவும் வெளியில் ஒரு முகமாகவும் இருக்கிறது என்னும் கேள்வியை எழுப்புகிறார்.

குடும்ப வாழ்க்கை ஏன் ‘வாழ் நாள் யுத்தமா’க இருக்கிறது என்னும் கேள்வியை எழுப்புகிறார்.’பிராய்லர் கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுவதைப் போலவே பெண்கள் திருமணத்திற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறார்கள் ‘என்று குறிப்பிடும் வெண்ணிலா அதனைப் போலவே ஆணும் திருமணத்திற்கு தயாரிக்கப்படுவதை நமக்கு சுருக்கெனத் தைக்கும் வண்ணமே குறிப்பிடுகிறார்.’ஆணும் பெண்ணும் இவ்வளவு பெரிய முன் தயாரிப்புகளுடன் வளர்க்கப்பட்டும்,இருவர் இணைந்து வாழும் குடும்ப வாழ்க்கை ஏன் இவ்வளவு முரண்பாடுகளோடு இருக்கிறது என்னும் கேள்வியைக் கேட்கிறார்.

குடும்பம் என்ற அமைப்பு  நமது தமிழ்ச்சமூகத்தில் எப்படி இருக்கிறது  என்பதனை விளக்கமாக எடுத்துச்சொல்லும் நூல் ஆசிரியர் “மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற நிறுவனம் கூடுதல் சுதந்திரத்துடன் இருக்கின்றது.அங்கு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியோடு வாழ்வதே முதன்மை.பிடிக்கும் காலம்வரை ஒன்றாக இருப்போம் என்ற புரிதலுடன்தான் அவர்கள் இணைகிறார்கள்.என்ன நடந்தாலும் பிரியக்கூடாது என்ற கட்டாயத்துடன்தான் நாம் ஒன்றிணைகிறோம்.அவர்களுக்கு குடும்பம் என்ற நிறுவனம் முக்கியமில்லை.நமக்கு நிறுவனம் மிக முக்கியம்” மேற்கத்திய நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பு எப்படி இருக்கிறது என்பதனைப் பார்க்கும் வாய்ப்பு இன்று வெளி நாட்டில் வாழும் நம் நாட்டுப்பெண்களுக்கு(வல்லினச்சிறகுகள் வாசகர்களுக்கு) இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுக் கூட இந்தக் கட்டுரைக்கு பின்னோட்டம் இடலாம்.குடும்பம் என்னும் அமைப்பின் நிறை,குறைகளை வெளி நாட்டோடு ஒப்பிட்டுப் பேசலாம்.

இருவர் குடும்பமாக சேர்ந்து வாழும் வாழ்க்கை,அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக அமையாமல் தடுப்பது எது என்பது பற்றி நம்மை யோசிக்க வைக்கிறார்.“ இங்கு ஒரு தம்பதியின் வாழ்க்கை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல.  அவர்களின் வாழ்க்கையோடு மதம்,சாதி,பரம்பரை பெருமை ,வட்டாரத்தின் பழக்கவழக்கங்கள் என அசைக்கமுடியாத கனத்த பல சங்கிலிகள் பிணைக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். நம் நாட்டைப் பொறுத்த அளவில் குடும்பம் என்ற நிறுவனம் குலைந்து விடக்கூடாது என்பதில் காட்டப்படும் அக்கறை ,குடும்பமாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதில் காட்டப்படுவதில்லைதானே?.
“குடும்பம் நம்மை கட்டுப்படுத்துகிறதா ? நம்மை சுதந்திரமாக்குகிறதா?” என்னும் கேள்வியைக் கேட்டு அதைப் பற்றி விரிவாகப் பேசுகின்றார்.அதுவும் பெண்களைப் பொறுத்த அளவில் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்,அவளின் விருப்பங்களைத் தவிடு பொடியாக்கும் ஒரு நிறுவனமாக குடும்பம் இருப்பதைச்சுட்டிக் காட்டுகிறார்.'கல்லானாலும் கணவன்,புல்லானாலும் புருசன் ' என்றும்,குடும்பம் என்றால் அப்படி இப்படியாகத்தான் இருக்கும்,அனுசரித்து அல்லது அடங்கிப்போ என்பதுதானே பெரியவர்களின் அணுகுமுறையாக இருக்கிறது.

“குடும்பம் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு.மேலடுக்கு எல்லோரும் பார்க்கும் பூச்சுகள் நிரம்பிய அடுக்கு.கீழடுக்கு கணவன் மனைவி என்ற இரண்டு பேருக்கு மட்டுமே தொடர்புடைய அகவுலகம் தொடர்பானது “ என்று கூறும் நூல் ஆசிரியர் மேலடுக்கு செயற்கையான நடவடிக்கைகளால்,சொற்களால் எப்போதும் நன்றாக இருப்பது போலக் காட்டப்படுகிறது. ஆனால் கீழடுக்கில் உள்ள கீறல்களைக் கவனிக்கவேண்டாமா? என்று கேட்கின்றார். கீழடுக்கில் உள்ள கீறல்கள் ,கணவன்,மனைவி இருவருக்கு மட்டுமே தெரியும்.ஊடலாக இல்லாமல்,பெரும் மன இடைவெளியோடு கீழடுக்கில் இருப்பவர்கள் பெரும் சதவீதத்தினர்.அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும் இல்லை,நிம்மதியும் இல்லை. வெறும் நிர்ப்பந்தத்தால் இணைந்து ஒரு வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்பதனை நமக்கு உணர்த்துகின்றார்.

“ ஆணும் பெண்ணும் அன்பாய் இருக்கப்பழக்கப்படுத்துவதற்குப் பதில் ,ஒருவரை ஒருவர் இழை அளவு கூட தனித்திருக்க விடமால்,தனித்தன்மையை மதிக்கத்தெரிந்து கொள்ளாமல் குடும்பங்களை அமைத்துவிடுகிறோம்.அதனால்தான் மனைவியை கண்காணிப்பது கணவன் வேலையாகவும்,கணவனை கண்காணிப்பது மனைவி வேலையாகவும் இருக்கிறது “ என்று குறிப்பிட்டு,தனது அனுபவ நிகழ்வுகளைக் குறிப்பிட்டு குடும்பத்திற்குள் இருக்கும் போலித்தனங்கள் பற்றியும் கண்காணிப்புப் பற்றியும் பேசுகிறார். விலங்குகளுக்கு குடும்பம் என்ற நிர்ப்பந்தம் இல்லை.அவைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதா,நீ எந்தவகையில் குடும்ப அமைப்பினால் உயர்ந்தவன் என்று கேட்பதுபோல கேட்கின்றார்.

“ஆழமாக யோசித்தால் குடும்பத்தைப் போல் வன்முறைகள் நிரம்பிய சமூக அமைப்பு வேறொன்றும் இல்லை”,” என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர்,சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால் குடும்பத்திற்குள்ளேயே நிகழும் வன்முறைகளைக் குறிப்பிடுகிறார்."Men Are from Mars, Women Are from Venus" என்ற ஆங்கிலப்புத்தகத்தில் அதன் ஆசிரியர் ஜான் கிரே(John Gray) குறிப்பிடுவதைப் போல குடும்பத்தில் இருக்கும் ஆணுக்கான எதிர்பார்ப்புகளும்,பெண்களுக்கான எதிர்பார்ப்புகளும் வெவ்வேறாக இருப்பதை குறிப்பிடும் நூல் ஆசிரியர் பெண்ணிற்கான  வேலையாக சமூகம் கட்டமைத்திருக்கும்  வீட்டிற்கு வெளியே வாசலைக் கூட்டுதல் போன்ற வேலைகளை ஆண்கள் செய்யக்கூடாது என்பதை சமூகம் மறைமுகமாக வலியுறுத்துகிறது என்று சுட்டுகின்றார்.பெண்ணிற்கான வேலைகள்,ஆணிற்கான வேலைகள் எனும் பாகுபாடு சிறுபிள்ளையாக இருக்கும்போது ஆரம்பித்து கடைசிவரை அப்படித்தானே தொடர்கிறது...

"இங்கு குடும்பங்கள்  விளையாடும் பகடைக்காயில் குழந்தைகளே வெட்டுவாங்க முன்னிறுத்தப்படும் பிஞ்சுக் காய்கள் " எனக் குறிப்பிட்டு குழந்தைகள் படும் பாட்டை ,எதார்த்த நிலையை சுட்டுகின்றார். கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் ஈகோ போட்டியில்,பிள்ளைகளைத் தங்கள் பக்கம் இழுக்க பெற்றோர்கள் செய்யும் பலவிதமான முயற்சிகளை தனது அனுபவத்தின் அடிப்படையில் விவரிக்கின்றார்.'குடும்பம் தன் உறுப்பினர்களின் இயல்பை திருடிக்கொள்கிறது " என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் முற்போக்கு பேசி,காதலித்து,திருமணத்தில்  இணையும் இணையர்கள் கூட மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை.இது அவர்களின் குற்றமல்ல. குடும்பம் என்னும் நிறுவனத்தின் குற்றம் என்று சொல்கின்றார்.

 உலகமும் வாழ்க்கையும் எவ்வளவு நவீனமாகிப் போனாலும் ,கொஞ்சமும் நவீனமாகாமல் புராதன நொடியில் திணறிக் கொண்டிருப்பவை குடும்பங்களே”, “ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி நடவடிக்கைகளைத் தள்ளி நின்று தீவிரமாக்க் கண்காணித்தால்,நம் உறவுகள் எவ்வளவு மோசமாக,அன்பற்ற அன்பினால் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வரும்.ஓர் ஒப்பந்த்த்தில் சேர்ந்து வேலை செய்கின்ற அலுவலர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச புரிதல் கூட குடும்பங்களில் இல்லை.” என்று சுட்டிக் காட்டி ,குடும்பத்தைப் பற்றி இந்திய சமூகம் கட்டிவைத்திருக்கும் பிம்பத்தை டொம்மென்று போட்டு உடைக்கின்றார். ஏய்,எல்லோரும் வேசம் கட்டி நல்லா நடிக்கிறீங்கப்பா என்று சொல்வது போல இருக்கிறது அவரின் கூற்று.

பல ஆண்டுகளுக்கு முன் வந்த  திரைப்படம் ‘மனசு ரெண்டும் புதுசு ‘என்னும் திரைப்படம்,மனமொத்த கணவன்,மனைவிக்கிடையே  உறவுகள் எப்படி பிரிவினை உண்டாக்குகிறார்கள் என்பதனை உறவுகளின் உரையாடல்,நிகழ்வுகள் மூலம் காட்டுவார்கள்.அதைப்போல உறவுகள் கூட நிகழும் உரையாடல்களை நூல் ஆசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறார்.“வீடுகளில் நடைபெறும் உரையாடல்கள் எப்பொழுதுமே எல்லைகளுக்கு உட்பட்டவை.வரையறுக்கப்பட்டவை.சுவராசியம் அற்றவை.ஆபத்தானவை.பக்கவிளைவை உண்டாக்கக் கூடியவை.கணவன்,மனைவி,மாமியார்,மாமனார் உறவுகளுக்கிடையே கத்தி மேல் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் போலவே கவனமுடன் பேசவேண்டும்.” கவனத்துடன் பேசவேண்டும்,கவனத்துடன் பேசவேண்டும் என்று சிந்தித்து சிந்தித்தே,பெண்கள் சில நேரங்களில் ஊமைகளாகிப் போய் விடுகிறார்கள்.ஆண்கள் அடங்கி ஆமைகளாகி விடுகிறார்கள்.ஏன் உறவுகளோடு இயல்பாக நம்மால் நண்பர்களோடு பேசுவது போல பேச முடியவில்லை?. உண்மைதான், நாம் உறவுகளோடு பேசும்போது மிகவும் யோசித்து யோசித்துத்தான் பேசுகின்றோம்.அதுவும் நாள் முழுவதும் நமது வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியில் ஓடும் சீரியல்களைப் பார்த்தால்,பயமாக இருக்கிறது.ஒரு சொல்லை வைத்து உறவுகள் எப்படி ஒருவரை பந்தாடுகிறார்கள் என்பதைத்தானே நமது தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள்..

“சாதி ஒழிய நாம் வேலை செய்கிறோம்.ஆனால் சாதியைப் பாதுகாக்கிற வேலையை ஒரு நிறுவனமாக குடும்பம் மிகச்சரியாகச்செய்கிறது என்று சொல்கிறார்."பெற்ற மகளையே ,நெருப்பு வைத்துக் கொல்லும் அளவிற்கு,ஒரு தாயால்,ஒரு பெண்ணால் எப்படி முடியும் ?...சாதியைப் போன்ற ஒரு கொடூர மிருகத்தைப் பார்க்க முடியுமா? சாதியின் விஷப்பற்களால் கடிபட்ட குடும்ப உறுப்பினர்களும் விஷத்தையே கக்குகிறார்கள்.மனிதன் தோன்றிய காலம் முதல் நாமெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறோம்.உரு மாறியிருக்கிறோம்.நாகரிகமாகியிருக்கிறோம்.அறிவில் மேம்பட்டிருக்கிறோம்.கல்வியில் பண்பட்டிருக்கிறோம்.தொழில் நுட்பத்தில் முன்னேறியிருக்கிறோம்.வசதிகளைப் பெருக்கியிருக்கிறோம்.ஆனால் சாதியின் பிடிக்குள்,சாதியின் அடிமைபோல் நாம் இருக்கும்வரை,நாம் பண்பாடுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது .சாதி,பண்பாடற்றவர்களையே உருவாக்குகிறது"என்று தெளிவாக சாதியின் தீமையைப் பற்றிச்சொல்லும் வெண்ணிலா,குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிட்டால்,இந்தச்சாதி என்னும் தீமை எப்போதோ நம் சமூகத்தை விட்டு மறைந்திருக்கும் என்று சொல்கின்றார்.

குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கு அடிப்படையிலான பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பவை…உறவில் வெளிப்படைத் தன்மையும் உண்மையும் இல்லாமல் போவதுதான்.”,”குடும்பத்திற்குள் இருக்கும் போலித்தனம் சமூகத்தின் பல சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது….சமூகத்தில் மேலோங்கி இருக்கும் பல குற்றங்களுக்கான ஊற்றுக்கண் குடும்பங்களில் இருக்கிறது.இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதும்,செரிப்பதும் நமக்குக் கடினமாக இருந்தாலும் ,முதலில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவாவது   நாம் தயாராக வேண்டும்.அப்பொழுதுதான் குடும்பங்களின் புனரமைப்புப் பற்றி நாம் யோசிக்க முடியும்" என்று குறிப்பிடுகிறார்."குடும்பங்கள் முன்னிறுத்தும் கடவுள் சாதி அடிப்படையிலான கடவுள்..." என்று குறிப்பிட்டு குலசாமி வழிபாடு,சிறுதெய்வ வழிபாடு பற்றிய விமர்சனங்கள் மிகவும் காத்திரமானவை.

"குடும்பம் அடிப்படையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது.பழமைவாதத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.சாதிய உணர்வை ஊட்டுகிறது. மத நம்பிக்கையை வளர்க்கிறது.தான்,தன் குடும்பம் என்ற சுய நலத்தை வலியுறுத்துகிறது." என்று வரிசையாகக் கூறும் நூல்; ஆசிரியர் "எத்தனைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் குடும்பம் தரும் சுகத்திற்கு ஈடான ஒன்றை கூற முடியுமா ?ஆணும் பெண்ணும் இணைந்து வாழ குடும்பம் போன்ற பாதுகாப்பான இடம் வேறுண்டா? குடும்பம் தரும் இனிமை எல்லோருக்கும் வேண்டியுள்ளது " என்று குறிப்பிடும் நூலாசிரியர் ,குடும்பம் என்ற அமைப்பு முற்றிலுமாக அழிந்து போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை.ஆனால் இப்போதைய குடும்ப அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்."இன்பம் தரும் குடும்ப அமைப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால்,குடும்பம் என்பதற்கான வரையறைகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.ஒட்டுமொத்தமாக குடும்பம் என்ற அமைப்பைச்சிதைப்பதை விட்டு,குடும்பத்திற்கு புதிய பொருள் தரவேண்டும்.திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக ஒன்றிணையும் ஆண் பெண் சேர்ந்து வாழ்வது மட்டுமே குடும்பம் அல்ல,குடும்பத்திற்கான அங்கீகாரம் எளிதாகும்போது,அங்கு உண்மைத் த்னமை வரும்." என்று குறிப்பிடுகின்றார்.

ஒரு வேறுபட்ட புத்தகம்.ஒரு வேறுபட்ட கோணத்தில் குடும்பத்தைப் பார்க்கும் கட்டுரைகளின் தொகுப்பு.படித்துப்பாருங்கள்.அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விழாவில் தான் எழுதிய புதினத்திற்காக 'கலைஞர் பொற்கிழி' விருது பெற்றிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்  அ.வெண்ணிலா அவர்கள். விருது பெற்ற அவருக்கு வல்லினச்சிறகுகள் மின்னிதழ் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார்.தனது மனதிற்கு சரியெனப்பட்டதை நம் முன்னால் வைக்கிறார். நமக்கு சரி என்று பட்டால் எடுத்துக்கொள்ளலாம்.வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். ஆனால் இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் எழுகின்ற கேள்விகள் உண்மையை நோக்கி நம்மை உறுதியாகப் பயணிக்க வைக்கும்


நன்றி : வல்லினிச்சிறகுகள் மின் இதழ் ஏப்ரல்-மே 2022
Tuesday, 14 June 2022

நிகழ்வும் நினைப்பும் : தினமணி நாளிதழில் ஆழினி நாவல் விமர்சனம்

https://www.dinamani.com/specials/nool-aragam/2022/jun/13/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-3861252.html 
நிகழ்வும் நினைப்பும் : தினமணி நாளிதழில் ஆழினி நூல் விமர்சனம்

நேற்று (13.06.2022) காலையில் நகைச்சுவைத்தென்றல்,பட்டிமன்றப்பேச்சாளர்,பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்,செல்பேசியில் அழைத்தார். அவர் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச்சென்று அண்மையில் திரும்ப தமிழ் நாட்டிற்கு வந்திருந்தார். அவரிடம் செய்தித்தாட்களில் நீங்கள் அமெரிக்கா சென்று வந்ததைப்  பார்த்தேன்,மிக்க மகிழ்ச்சிங்க அய்யா என்றேன். அமெரிக்கப் பயணம் பற்றி என்னிடம் பேசிவிட்டு ,'இன்றைய தினமணி நாளிதழ் பார்த்தீர்களா? என்றார்.' ,இல்லைங்க அய்யா' என்றேன்.உங்கள் மகள் அறிவுமதி எழுதிய ஆழினி நாவல் பற்றி நூல் அரங்கம் பகுதியில் மிக அருமையாக வந்துள்ளது. வாழ்த்துகள்.வாங்கிப் பாருங்கள் என்றார்.அவர் அந்த நூலுக்கு அற்புதமான ஓர் அணிந்துரை அளித்து,இளம் எழுத்தாளர் சொ.நே.அறிவுமதியை ஊக்கப்படுத்தியவர்.'மகிழ்ச்சி,பார்க்கிறேங்க அய்யா,மிக்க நன்றி ' எனச்சொல்லிவிட்டு கடைக்குச்சென்று தினமணி நாளிதழை வாங்கி வந்து பார்த்தேன்.மிக நன்றாகவே நூல் மதிப்புரை எழுதியிருந்தார்கள்.நூல் மதிப்புரை இணைப்பு அருகில்...தினமணி நாளிதழுக்கு மனமார்ந்த நன்றி.

என்னோடு வேலைபார்த்த துணைக்கோட்ட அதிகாரி ஜெயக்குமார் அவர்கள் என்னிடம் செல்பேசியில் அழைத்து ஆழினி நாவல் ஒரு பிரதி வேண்டும் என்றார்,தினமணி பத்திரிக்கையில் பார்த்தேன். நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. படிக்க வேண்டும் என்றார்.மாலையில் அவரது மகள் சிந்துஜா அவர்களின் ஹோமியோபதி மருத்துவமனையில் ஜெயக்குமார் அவர்களிடம் இந்தப்புத்தகத்தை கொடுத்து வந்தேன். வாருங்கள் படிப்போம் உறுப்பினர் வழக்கறிஞர் சித்ராதேவி வேலுச்சாமி அவர்கள்,ஏற்கனவே ஆழினி நாவலை வாங்கி வைத்திருந்தார்.இந்த நூல் அரங்கம் பகுதி விமர்சனத்தைப் பார்த்தவுடன் ,படிக்க ஆரம்பித்துவிட்டேன்,65 பக்கங்கள் படித்து விட்டேன் அண்ணா  என்று பகிர்ந்திருந்தார்.


Monday, 13 June 2022

நாடு பூராம் அலையுது...

                                     நாடு பூராம் அலையுது...இரவெல்லாம் தூக்கமில்லை..

ஏனிந்தக் கொடுமை எனும்

நினைப்பால் உறக்கமில்லை...


திட்டு திட்டாய்ப் 

பரவிக் கிடந்த இரத்தம்...

ஆடுகள் போல 

அறுத்துப்போடப்பட்ட இரு உயிர்கள்..

ஆணவத்தின் உச்சத்தால்

அநியாயமாக உயிர் இழந்த

புதுமணத் தம்பதிகள்....நான் சொன்னவனை விட்டுவிட்டு

வேறு ஒருவனை மணம் முடிப்பாயா?

நம்ம ஜாதியை விட்டு விட்டு

வேறு ஜாதியில் திருமணமா

உடன் பிறந்த அண்ணனாலேயே

கொலை செய்யப்பட்ட சரண்யா

அவரோடு கொலை செய்யப்பட்ட மோகன்


அறிவியலில் என்னன்னமோ நடக்குது...

இழவு பிடித்த இந்த நாட்டில்

எல்லாமே ஜாதிமயமா இருக்குது...


வெறிபிடித்த கூட்டம் ஒன்னு

சனாதனம் வேணும்

ஜாதிமுறை வேணும் என்று

சங்கிகளாய் அலையுது...


வீட்டுக்குள்ளதான் பொண்ணு இருக்கணும்

அவ நம்ம சொல்ற பையனைத்தான்

திருமணம் முடிக்கணும்...

இல்லையின்னா அவளைக் கொல்லணும்

என்று ஒரு கொலைவெறிக்கூட்டம்

நாடு பூராம் அலையுது...

அதுக்கு பார்ப்பனியக் கூட்டம்

ஆதரவைக் கொடுக்குது..... இன்னும் உரக்க நாம்

பெரியாரின் கொள்கைகளைச்

சொல்ல வேண்டிய அவசியம் இருக்குது...

ஏணிப்படியாய் அமைந்திட்ட

ஜாதிமுறையை அழித்தொழிக்கும்

வேலைக்கு இன்னும் 

தீவிரமாய்த் திரள்வோம் தோழர்களே...


                  வா.நேரு

                  14.06.2022...
Thursday, 9 June 2022

திராவிடப்பொழில் ஏப்ரல்-ஜீன் 2022 இதழ் ஆய்வு

 பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக திராவிடப்பொழில் ஏப்ரல்-ஜீன் 2022 இதழ் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. திராவிடப்பொழில் இதழின் சிறப்பு ஆசிரியர்  திருமிகு முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் அறிமுக உரை ஆற்ற இருக்கிறார்.உலகம் அறிந்த நற்றமிழ் அறிஞர் இவர். உலகம் முழுவதும் இருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடு தொடர்பில் இருப்பவர்.'அறியப்படாத தமிழ் மொழி' போன்ற மிக அரிய புத்தகங்களை ,எதார்த்தமான நடையில் எழுதிப் புகழ் பெற்றவர்.பன்மொழி அறிந்த தமிழ்ப் பேராசிரியர்.
இந்த நிகழ்வில் ஆய்வு உரையினை தோழர் ஜெயாமாறன் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார். எடுத்துக்கொண்ட தலைப்பை,மிகத்தெளிவாகவும் அதில் இருக்கும் உட்கருத்துகளை கேட்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறுவதில் வல்லவர்.இவரால் நம் நூல் அல்லது கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று படைப்பவர்கள் நினைக்கும் அளவுக்கு தனித்திறன் மிக்கவர். 

அதனைப்போல இளைஞர்,ஆங்கிலத்தில் வல்லமையும் எடுத்துக்கூறுவதில் தனித்தன்மையும் உள்ள அமரன் அவர்களும் ஆய்வு உரை நிகழ்த்த இருக்கின்றார்.தோழர் சுதாகர் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க இருக்கின்றார்.நன்றியுரையை தோழர் ரவிக்குமார் அவர்கள் நிகழ்த்துகிறார்.


திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர்.பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர்,எந்த நாளும் பெரியாரியலையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கருதி தன்னலம் கருதாமல் உழைக்கும்  அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.எல்லா விளக்குகளும் எரிவதற்கு இணைப்பாக இருக்கும் மின்சாரம் போலத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,இந்த நிகழ்வுக்கு தோழர் இளமாறன் அவர்கள் சிறப்பாக நடைபெறத்  துணை நிற்கிறார். அதைப்போல பெருமதிப்பிற்குரிய தோழர் அருள் அவர்கள்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் திரு.துரைக்கண்ணு துரைஎழில்விழியன் அவர்கள்,இணைப்பு உரைகளை தனித்தன்மையாகத் தருகின்ற இளையதோழர் அறிவுப்பொன்னி அவர்கள்,திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர் குழுவில் உள்ள முன்னாள் துணைவேந்தர் அய்யா பேரா.ஜெகதீசன் அவர்கள், பேரா.அய்யா பேரா.ப.காளிமுத்து அவர்கள்,சிங்கப்பூர் அய்யா பேரா.சுப.திண்ணப்பன் அவர்கள்,பேரா.நம்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். திராவிடப்பொழில் இதழுக்கு கட்டுரை அளித்த கட்டுரை ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.11.06.2022 சனிக்கிழமை இரவு 7.30க்கு தொடங்கி 9.00 மணிக்குள் நிகழ்வு நிறைவுறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப்பேராசிரியர்களே,இருபால்ஆய்வு மாணவர்களே,தோழர்களே,தமிழ் அறிஞர்களே,திராவிட இயக்கப் பற்றாளர்களே,கலந்து கொள்ளுங்கள்.,கலந்து கொள்ளுங்கள்.


                 வா.நேரு,09.06.2022

Monday, 6 June 2022

இலக்கியம் படைக்கும் இராணுவ வீரர்

 வாருங்கள் படிப்போம் ,வாருங்கள் படைப்போம் என்னும் குழுக்கள் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறது. நல்ல புரிதல் உள்ள நண்பர்க்ள் இருபால் நண்பர்கள் நிறையப் பேர் அறிமுகம் ஆகின்றனர். நாளடைவில் நல்ல நண்பர்களாகவும் மாறுகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரைச்சார்ந்த வினோத் பரமானந்தன் அவர்களும் அவர்களில் ஒருவர்.இன்று 06.06.2022 மதுரையில் அவரைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நிறையப் பேசிக்கொண்டிருக்க இருவருக்கும் நேரமும் கிடைத்தது.சில வாரங்களுக்கு முன் வாருங்கள் படைப்போம் குழுவில் படைப்பாளியாய் அவர் கலந்து கொண்டதையும்,மிக அருமையான கேள்விகளை முன்வைத்து அண்ணன் குமரன் அவர்கள் கேள்வி கேட்டதையும் அதற்கு வினோத் அவர்களின் நல்ல பதில்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இராணுவத்தில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி தன் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். இலக்கியம் படைப்பதிலும் படிப்பதிலும் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் பகிர்ந்து கொண்ட வினோத் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விவாதித்தார்.. இந்த சந்திப்பு பற்றி 
"அன்பிற்கினிய தோழர்

நேரு ஐயா அவர்களை..

இன்று

சங்கம் வைத்து தமிழ்

வளர்த்த மதுரையில்

சந்தித்தேன்...


அன்புடன் என்னைக்

காண வந்து..

"ஆழினி " உடன் இன்னும்

பல நூல்கள் தந்து...

காபி குடி...

நிறைய புத்தகம் படி

என்றே

உரைத்து..

உறவாடிச் சென்றார்..


காணொளியில்

கண்டவரை..

காபியோடு

கண்ணருகே

கண்டதில்

பெரும் மகிழ்ச்சி." என்றும் வாட்சப் குழுக்களில் வினோத் பரமானந்தன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். 

கூடலூரில் வாழ்ந்து மறைந்த அவரின் பெரியப்பா மானமிகு.பரமானந்தன் அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டர்,திராவிடர் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்னும் செய்தியையும் பகிர்ந்து கொண்டார். நான் பெரியகுளம் பகுதியில் பணியாற்றியபோது,கூடலூர் அய்யா ஜனார்த்தனம் அவர்களைச்சந்திக்க வரும்போது ,அவரைச்சந்தித்த நினைவு இருக்கிறது என்று சொன்னேன். மிக மகிழ்ச்சி தந்த சந்திப்பு. 
என்னுடைய மகள் சொ.நே.அறிவுமதி எழுதிய 'ஆழினி 'நாவல், என்னுடைய கவிதைத் தொகுப்புகளான 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', அண்மையில் வெளிவந்த 'சொற்களின் கூடுகளுக்குள் 'கவிதை தொகுப்பு மற்றும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பான 'சங்கப்பலகை'யையும் அளித்து மகிழ்ந்தேன்.உறுதியாகப் படிப்பார்கள்,படித்து கருத்து சொல்வார்கள் என்பவர்களிடன் புத்தகங்களைக் கொடுப்பதைவிட மகிழ்ச்சி தருவது எது?.

Sunday, 22 May 2022

நினைவோடையில் தேங்கிக் கிடந்த

 நினைவோடையில் தேங்கிக் கிடந்தஏழு வயதில் அப்பாவை

இழந்த மகனை 

ஏதேனும் ஒரு 

வேலைக்கு அனுப்பியிருக்கலாம்...


விறகு வெட்டவோ

கலப்பை பிடிக்கவோ

மண்ணை வெட்டவோ

ஏதேனும் ஒரு வேலைக்கு

அனுப்பியிருக்கலாம்...


ஏதேனும் ஒரு வேலைக்கு

குழந்தை தொழிலாயாய்ச்

சென்றிருந்தால் 

அச்சச்சோ பாவம் என

உறவுகள் உச்சுக் கொட்டியிருப்பார்கள்...

அய்யோ பாவம் அவன் தலைவிதி

அப்பன் செத்ததால் 

வேலை செய்கிறான் என்று 

அண்மையில் இருப்பவர்கள் பேசிக்

கலைந்து போயிருப்பார்கள்...


ஆனாலும் அம்மா நீ 

என்னை படி படி என்றாய்...

நம் அல்லல் தீர்க்கும் 

அருமருந்து கல்வி ...

அதனால் இரவும் பகலும்

உணர்ந்து படி படி என்றாய்....


விழுவதும் எழுவதும் இயற்கை..

விம்முவதும் புலம்பவதும் செயற்கை

செயற்கை விடுத்து

இயற்கை வழி நட என்றாய்...


படிக்கட்டாய் நீ இருந்து

நாங்கள் உயர ஏறிட

உழைப்பைக் கொடுத்தாய்...

படித்தோம் உயர்ந்தோம்..

பணியில் அமர்ந்தோம்..

பொருளாதாரத்தில் நிமிர்ந்தோம்...நினைவோடையில் தேங்கிக் கிடந்த

நினைவுகள் எல்லாம்

நினைவு நாளில் மேகமாய்

ஒன்று திரண்டு 

கண்ணீர் மழையில் 

குளிப்பது போல் 

கதறத்தான் தோன்றுகிறது அம்மா... 


                          வா.நேரு ,23.05.2022.

Saturday, 14 May 2022

மே தினம் : உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வோம்!...

                          மே தினம் : உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வோம்! 

தாராளமயம், தனியார் மயம், உலக மயம் வந்தால் பாலும் தேனும் தெருக்களிலே ஓடும் என்றார்கள் சிலர். ஆனால், உண்மை என்னவோ வேறு மாதிரியாக இருக்கிறது. இலங்கை மாபெரும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. “இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்துத் தட்டுப்பாடானது தலைவலி மாத்திரையிலிருந்து அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வரை நிலவுகிறது. இந்த நிலைமையும் இதன் விளைவுகளும் பன்னாட்டு ஊடகங்களில் காட்டப்படுவதில்லை.


ஆய்வுக்கூட இயந்திரங்கள் வேலை செய்யவும், அறுவை சிகிச்சைகள் செய்யவும் தேவையான பொருள்களோடு மின்சாரமும் இல்லை. அவசரத்துக்கு அவசர ஊர்தி, ஜெனரேட்டர்களை இயக்க டீசல் இல்லை. குடிக்கவோ சுத்திகரிக்கவோ தேவையான தண்ணீர் இல்லை’’ என்பன போன்ற செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகளிலேயே இந்த நிலை என்றால் மற்றவை?…


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மொழி, இனம், மதம் வேறுபாடுகளை எல்லாம் கடந்து உழைக்கும் மக்கள் எல்லோரும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று இலங்கைத் தலைநகர் கொழும்புவிலே கூடி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை கொத்து கொத்தாக அழித்த கொடிய ராஜபக்சேயும், அந்தக் குடும்பமும் விழி பிதுங்கி, வெளிநாட்டிற்கு ஏதாவது தப்பித்து ஓடி விடலாமா என்று சிந்திக்கும் அளவுக்கு அங்கு நிலைமை இருக்கிறது.

“ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்

 உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்

 ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

 ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!”

என்ற புரட்சிக்கவிஞர் வரிகள் நடைமுறைக் காட்சியாகிவிட்டது. வளரும் நாடுகள் பலவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. நேபாளத்திலும், பாகிஸ்தானிலும் இலங்கை அளவிற்கு மோசமில்லை என்றாலும் அங்கும் பொருளாதார நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் தொடர்ந்து விலைவாசி உயர்ந்துகொண்டே வருகிறது. அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியா இருளில் மூழ்கும் என்று செய்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ஒன்றிய மோடி அரசு, எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்து அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. மிகப் பெரிய லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்.அய்.சி.-யை) தனியாருக்குக் கொடுத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.


அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்காமல், ஜியோ நிறுவனம் லாபம் அடைவதற்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கிறது. எல்லாம் இலவசம் என்று ஆரம்பித்து மற்ற நிறுவனங்களில் இருந்த வாடிக்கையாளரைத் தன் பக்கம் இழுத்தது. குறைந்த விலைக்கு டேட்டாவை அறிவித்ததன் மூலமாக மற்ற நிறுவனங்களையும் குறைந்த விலைக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தியது. அதனால் போட்டியிட முடியாமல் சில நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.


டெலிகாம் துறையை ஜியோ ஆக்கிரமித்துக் கொண்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஜியோ நிறுவனம் மட்டுமே டெலிகாம் துறை என்றாகி விடும். பங்கு மார்க்கெட்டில் நடந்த ஊழல்களெல்லாம் நமக்குத் தெரியும். எப்படி அவை மூடி மறைக்கப்படுகின்றன. அதனால் பலன் பெற்ற பணக்காரர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாகத் தெரியாதவண்ணம் மறைக்கப்படுகிறது.


இப்படி ஒரு சில பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கான வழி வகைகளை ஒன்றிய அரசே அமைத்துக் கொடுக்கிறது. இதனைத்தான் இந்த தாராள மயம், தனியார் மயம், உலக மயம் செய்திருக்கிறது. வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரும் அளவில் குறைந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வாங்கிக் கொடுத்த சமூக நீதியை ஒழிப்பதற்கான வழியாகவும் ஒன்றிய அரசு அனைத்தையும் தனியார் மயமாக்கி, இட ஒதுக்கீடே இல்லை என்னும் நிலைமையைக் கொண்டுவர நினைக்கிறது. அனைத்தையும் தனியார் மயமாக்குவதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. அதனையே நடைமுறைப் படுத்துகிறது ஒன்றிய அரசு.


கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் ஒன்றிய அரசு, ஏழை மக்களை, தொழிலாளர்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கிறது. பாகுபாடு காட்டுகிறது. உத்தரப்பிரதேசத்திலும், டில்லியிலும் காவலர் படையை வைத்து சாதாரண தொழிலாளர்களின் வீடுகளை ஆணவத்தோடு இடிக்கிறது. மத வெறி ஊட்டுகிறது. இனவெறி ஊட்டி இராஜபக்சே இலங்கையை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்தது போலவே இங்கும் நடைபெறுகின்றது. கண்ணுக்குத் தெரியாமல் நடைபெறும் பொருளாதார மாற்றங்கள் ஒரு நாள் இந்தியாவையும் இலங்கை நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்முன் உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும். நம்மைப் பிரிக்கும் ஜாதி, மத வேறுபாடுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால், இதனை இன்றைய ‘மே’ தினம் கொண்டாடும் கம்யூனிச இயக்ககங்கள் முழுதாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா? எனும் கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.


‘கடவுள் என்ற கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்’ என்றார் புரட்சிக்கவிஞர். கடவுள் என்ற கற்பனையை வைத்துக்கொண்டு மிக எளிதாக உழைக்கும் மக்களைப் பிரித்துவைத்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் பெரும் பணக்காரர்களும் அவர்களுக்கு ஆதரவான பிறவி முதலாளிகளான பார்ப்பனர்களும். ஜாதியும், மதமும் கடவுள் என்னும் கற்பனை பெற்றெடுத்த குழந்தைகள்தானே. உலக மெல்லாம் உழைப்பாளர்கள் கொண்டாடும் தினமான ‘மே 1’ வருகின்றது. உழைக்கும் மக்கள் ஏழைகளாகவும், உழைக்காமல் இருக்கும் பெரும்பணக்காரர்கள் மேலும் பணக்காரர்-களாகவும் ஆவதற்கு ஓர் அமைப்பு முறைதான் இன்றைக்கும் இருக்கிறது. இது மாறவேண்டும்.


“தோழர்களே, கம்யூனிஸ்ட் கட்சி நமது நாட்டில் வளரவேண்டிய அளவுக்கு வளர-வில்லை. மிகவும் உன்னதமான கொள்கை-யினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொதுவுடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன காரணம்?

கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர். கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் பற்றோ ,மதப் பற்றோ, சாஸ்திரப் பற்றோ, ஜாதிப் பற்றோ, நாட்டுப் பற்றோ, மொழிப் பற்றோ கூட இருக்கக் கூடாது. லட்சியப் பற்று மட்டும்தான் இருக்க வேண்டும்.

நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்னின்ன மாறுதல்கள் பண்ணியது என்று சொல்ல முடியவில்லையே! இராமாயாணத்திலும், பாரதத்திலும், பழைய இலக்கியங்களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிஸ்ட்டாக முடியும்?


விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசமும் பேசுபவர்கள் எப்படி உண்மை கம்யூனிஸ்டாக முடியும்? கம்யூனிஸ்ட்களுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்ட்டுக்கு நாட்டுப் பற்றுதான் எதற்கு? அவனுக்கு நாடே கிடையாதே. அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்க வேண்டும்” (‘விடுதலை’, 2.2.1966) என்று தந்தை பெரியார் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.


‘காணும் பொருளெல்லாம் தொழிலாளி செய்தான், அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத் தகுந்தது பொறுமையா?’ என்றார் புரட்சிக்கவிஞர். அவன் வறுமையில் வாடினாலும் பொறுமையைப் பூணுவதற்கு கடவுள், மதம், ஜாதி, விதி என்னும் கற்பனைகள் எல்லாம் தொழிலாளியின் மூளையில் உட்கார்ந்து ஆட்சி செய்து கொண்டிருப்பது தான் காரணம். அந்தப் பாசி படர்ந்த மூளை விலங்கை உடைத்து எறியும் கருத்துகளை தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான ‘மே’ தினம், ‘அனைவர்க்கும் அனைத்தும்’ என்னும் அற்புதமான திராவிட மாடலில் அமையும் ‘மே’ தினம் அமையும். அப்படிப்பட்ட ‘மே’ தினம் அமையும் நாளை நோக்கிய பயணத்திற்கு அடித்தளமாக இந்த ‘மே’ தினம் அமையட்டும். அனைவர்க்கும் உழைப்பாளர் தினமான, மே தின வாழ்த்துகள்.

                                                               

                                                                                                  முனைவர் வா.நேரு


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 01.05.2022

Tuesday, 26 April 2022

டோட்டோசான்- ஜன்னல் ஓரத்தில் ஒரு சிறுமி


23.04.2022 அன்று டோட்டோசான்- ஜன்னல் ஓரத்தில் ஒரு  சிறுமி  என்னும் நூலைப் பற்றி வாருங்கள் படிப்போம் குழுவில் பேசிய உரை எனக்கே மன நிறைவாக இருந்தது. பலரும் பாராட்டிய நிகழ்வாகவும் அமைந்தது..அந்த உரை யூடியூப்பில்.ஒரு மணி நேர நிகழ்வு. நேரம் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். நன்றி.


https://youtu.be/Oiq-fGsuMuY 

Saturday, 23 April 2022

கல்வி : தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை!.. முனைவர் வா.நேரு

 திராவிட மாடல் என்பது இன்று தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவிலும் உலக அளவிலும் பேசப்படும் ஒரு கருத்தியலாக மாறியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அடைய முடியாத உயர் கல்வி சதவிகிதத்தை (50 சதவிகிதம்) தமிழ்நாடு அடைந்ததும் அதிலும் பெண்களின் உயர் கல்வி 50 சதவிகிதத்தைத் தொட்டிருப்பதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதைப்போல திராவிட மாடலில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகையில்  சரிபாதியான  பெண்கள், உள்ளாட்சிப் பதவிகளிலும் 50 சதவிகிதத்தைப் பெற்றிருக்-கிறார்கள். இது வேறு எந்த நாட்டிலும், எங்கும் நிகழாத நிகழ்வாகும்.காலையில் படி, கடும்பகல் படி, மாலை இரவு முழுவதும் படி படி என்னும் முழக்கம் திராவிடர் இயக்கத்தின் முழக்கமாகும்.படிப்பினால் உயர்வுபெற்ற இந்தத் தலைமுறை, தங்களது பிள்ளைகளின் படிப்பிற்கு கழுத்தில் கத்தியாகத் தொங்கி நிற்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டு மிரண்டு நிற்கும் வேளையில், இருட்டைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல, இருட்டை எதிர்ப்பது  மட்டுமல்ல, நாங்கள் இருட்டுக்கு மாற்றாக வெளிச்சத்தைக் காட்டும் விளக்குகளை ஏற்றுபவர்கள் என்ற வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ் நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கடந்த ஆண்டு அமைந்து இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பொழுதே மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும். அதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்-பட்டது.

கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்-பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்-கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு  சுய அறிவோடு வாழத் தகுதியுடையவனாக வேண்டும் என்றார் பெரியார். தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை குழுவினரைப் பார்க்கும்போது நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.


தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராக முன்னால் தலைமை நீதிபதி த.முருகேசன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் வெறுமனே கல்வியாளர்கள் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள், இசைக் கலைஞர், விளையாட்டு வீரர் எனப் பலரும் இடம் பெற்றிருக்கிறனர். எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், முன்னால் பேராசிரியரும் எழுத்தாளருமான ச.மாடசாமி, முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர் நேசன், கணினி இயல் பேரா.இராமானுஜம், பேரா.சுல்தான் இஸ்மாயில், பேரா.இராம. சீனுவாசன், யூனிசெப்பின் முன்னாள் கல்வி அலுவலர் அருணா ரத்னம், கல்வியாளர் துளசிதாஸ், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, அகரம் ஜெயஸ்ரீ தாமோதரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பாலு என இந்தக் குழுவின் பட்டியல் நமக்கு ஆர்வம் ஊட்டுகிறது.

'டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி' என்ற புத்தகம் மிகப் புகழ் பெற்ற புத்தகம். தான் சிறுவயதில் படித்த 'டோமாயி' என்னும் பள்ளி பற்றிய அனுபவத்தை டெட்சுகோ குரோயா நாகி  என்பவர் ஜப்பானிய மொழியில் எழுதிய புத்தகம். தந்தை பெரியார் சொன்னதைப் போல சுதந்திரத்தோடு - சுய அறிவோடு வாழ்வதற்கான களப்பணிக் கல்வியைக் கொடுத்த பள்ளிக்கூடமாக 'டோமாயி' என்னும் அந்தப் பள்ளியைப் படிப்பவர் யாரும் உணரமுடியும்.


கூடாரம் அமைத்துப் பள்ளியில் தங்கியது, விளையாட்டின் மூலமாக கல்வியைக் கற்றது, விரும்பிய கதையை ஒரு மாணவனோ, மாணவியோ எவ்வளவு நேரம் சொன்னாலும் அதைப் பொறுமையாக ஆசிரியரும் மற்ற குழந்தைகளும் கேட்பது, விரும்புவதைப் பாடுவது, விரும்பிய பாடத்தை அதிக நேரம் படிப்பது, இசையோடு கூடிய உடற்பயிற்சி, புதுமையான விளையாட்டுகள் என்று கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டதை டெட்சுகோ குரோயாநாகி விவரித்திருப்பார். விடுமுறை விட்டு விட்டால் பள்ளிக்கூடம் எப்போது திறக்கும், நாம் பள்ளிக்குச் செல்ல எனக் குழந்தைகள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருப்பதையெல்லாம் அந்த நூலாசிரியர் எழுதியிருப்பார்.தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ள இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா,’’ கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் இல்லை. அது ஒரு முழுமையை நோக்கிய நகர்வு. அதில் எல்லா விஷயங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். அது கலையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம். இவையெல்லாம் கல்விக்குள் இருக்க வேண்டுமென பல கல்வியாளர்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார்கள். படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் ஆகியவை வேண்டு-மென்றால், சமத்துவம், சமூகத்தை ஏற்றத் தாழ்வின்றிப் பார்க்கும் பார்வை ஆகியவை வேண்டுமென்றால் இம்மாதிரியான பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய குழு முக்கியம். இந்தக் குழுவில் கலை, விளையாட்டு ஆகியவற்றுக்கு இடம் கொடுத்திருப்பது மிக முக்கியமான நகர்வு’’ என்று குறிப்-பிட்டிருக்கிறார்.


ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற நோக்கங்களை முன்வைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள், தனது 89-ஆம் வயதில், கடும் வெயிலில் கன்னியாகுமரி தொடங்கி சென்னைவரை பரப்புரை செய்யும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசின் இந்தப் புதிய கல்விக்கொள்கை குழு அமைப்பு அறிவிப்பு நமக்கு உற்சாகம் அளிக்கிறது. திராவிட மாடலுக்கு அடிப்படை கல்வியும் சுகாதாரமும்தான். அந்த வகையில் இன்னும் வலுவாக கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் அமைய இந்தப் புதிய குழு அறிக்கையை அளிக்கட்டும். மேலும்  பகுத்தறிவும் பண்பு நலனும் பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் கற்று, உலகம் முழுவதும் பரவி, திராவிட மாடலைப் பறைசாற்ற இக்குழு வழிவகை செய்யட்டும்..

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ்- ஏப்ரல்16-30


புத்தகமும் நானும்......23.04.2022 - .உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு

 


புத்தகமும் நானும்......23.04.2022 - .உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு


           இன்று புத்தக நாள்.தோழர்கள் அனைவருக்கும் புத்தக நாள் வாழ்த்துகள். வாருங்கள் படிப்போம் என்னும் குழுவில் 'டோட்டாசான்-' என்னும் ஜப்பானிய புத்தகம் பற்றிப் பேச இருக்கிறேன். புத்தக நாளில் ஒரு புத்தகம் பற்றி 45 நிமிடம் பேசப்போவது உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வருடம் 2022-ல் எனது 4-வது புத்தகமான 'சொற்களின் கூடுகளுக்குள் ' என்னும் கவிதைத் தொகுப்பும், 5-வது புத்தகமான'சங்கப்பலகை ' என்னும் நூல் விமர்சனங்கள் அடங்கிய நூலும் வெளிவர இருக்கிறது..இந்த இரண்டு புத்தகங்களும் அன்புத்தோழர் அகன் அவர்களின் முயற்சியால் சென்னையில் வெளியிடப்படவும்,அந்த நூல்களைப் பற்றி கவிஞர்கள் வித்யா மனோகர் மற்றும் பிரேமா இரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றவும் இருக்கிறார்கள்.


எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி ' நாவல் சென்ற மாதம் சென்னையில் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது.திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் அந்தப் புத்தகத்தை வெளியிட்டு ,ஒரு அருமையான பாராட்டுரையை அறிவுமதிக்கு அளித்தார்.வாருங்கள் படிப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா.மகேஸ்வரி அவர்கள் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.


ஒரு விருது போட்டிக்காக வந்த புத்தகங்களைத் தோழர் அகன் அனுப்பியிருந்தார். பல  நூல்களைப் படித்து அதற்கு மதிப்பெண் அளித்து ,அனுப்பும் வேலை. மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்தேன். புத்தம் புதிய புத்தகங்கள். கரும்பு தின்னக் கூலியா வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதுகிறார்கள்.அதுவும் பெண் எழுத்தாளர்கள் மிக நன்றாக எழுதுகிறார்கள்.


வாருங்கள் படிப்போம் என்னும் வாட்சப் குழு மிக அருமையான குழுவாக இருக்கிறது.அதில் நானும் எனது பிள்ளைகள் எழுத்தாளர்கள் சொ.நே.அன்புமணியும்,சொ.நே.அறிவுமதியும் இணைந்திருக்கிறோம். வாரம் 2 நாட்கள் 2 புத்தகங்கள் பற்றிய அறிமுகம். பேரா.உமா மகேஸ்வரி அவர்கள் இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து அருமையாக ஒருங்கிணைப்பு செய்கின்றார்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் இதன் இயக்குநர்.எழுத்தாளர்கள் அர்ஷா மனோகரன்,சுனிதா ஸ்டாலின், அண்ணன் குமரன்,அண்ணன் இளங்கோ என ஒரு பெரிய குழு இந்த நிகழ்வுக்காக வேலை செய்கிறார்கள்.பல அருமையான புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

வாருங்கள் படிப்போம் குழு போலவே வாருங்கள் படைப்போம் என்னும் குழுக் கூட்டம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும்.இதில் படைப்பாளர்களின் நேர்முகம்.மிக ஆரோக்கியமான,திறந்த மனதுடன் கூடிய உரையாடலாக இந்த நிகழ்ச்சி அமைகிறது. படைப்பாளர் என்ற முறையில் என்னை எழுத்தாளர் அர்ஷா மனோகரன் நேர்காணல் செய்தார்.நேர்காணலுக்குப் பின் நடைபெறும் கேள்வி பதில் மிகவும் குறிப்பிடத்தக்கது.இதன் ஒருங்கிணைப்பாளராக தோழர் வினிதா மோகன் அவர்கள்.அற்புதமாக,நிறைய முன்னேற்பாடுகள் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக அண்ணன் கோ.ஒளிவண்ணன்,கவிஞர் உமா மித்ரா,கவிஞர் தீபிகா சுரேஸ்,அண்ணன் இளங்கோ என ஒரு குழுவினர் ஒத்தாசையாக இருக்கின்றனர். 


உண்மையில் கடந்த பல மாதங்களாக கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். நடப்பு சார்ந்த,பெரியாரியல் நோக்கில் அமைந்த கட்டுரைகள்.திராவிடப்பொழில் என்னும் அற்புதமான ஆய்விதழ் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மூலமாக வெளிவருகிறது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதழின் புரவலராக இருந்து வழி நடத்துகிறார்.ஆய்வுக் கட்டுரை என்றால் என்ன?அது எப்படி அமைய வேண்டும்?, ஆய்வுக் கட்டுரை எழுதும் ஓர் எழுத்தாளரின் இடம் என்பது எவ்வளவு உயர்ந்தது..போன்ற பல்வேறு படிப்பினைகளை இந்த திராவிடப்பொழில் இதழ் எனக்குக் காட்டுகிறது. இதன் ஆசிரியர் குழுவில் பாரிஸ் பல்கலைக் கழகப்பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர்,சிங்கப்பூர் பேரா.சுப.திண்ணப்பன், முன்னாள் துணைவேந்தர் அய்யா பேரா.ஜெகதீதன்,பேரா.ப.காளிமுத்து,பேரா.நம்.சீனிவாசன் என்னும் மிகப்பெரும் ஆளுமைகளோடு இணைந்து பணியாற்றுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.


புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 'சில புத்தகங்கள் சொல்லும் பெரியாரியல் ' என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றிப் பேச வாய்ப்பு அளித்தார்கள். புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்களும் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தலைவர் நடராசன் அவர்களும் தொடர்ந்து எனக்கு பேச வாய்ப்பளித்து 19 முறை காணொளி வழியாகப் பல புத்தகங்களைப் பற்றிப்பேசுவதற்கு வாய்ப்பு அளித்தார்கள்.பேசிக்கொண்டே இருக்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.


அதனைப்போலவே சென்னை அறிவுவழிக் காணொலி நிகழ்ச்சியிலும் பல புத்தகங்களைப் பற்றி மதிப்புரை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அய்யா சேரலாதன் அவர்களும் தாமோதரன் அவர்களும்,மோகன்ராசு அவர்களும் இணைந்து நடத்தும் காணொலிக் குழு இது.


வாசிப்போர் களம் என்னும் குழுவில் இருக்கும் சிலரின் வாசிப்பு என்னைத் திகைக்க வருகிறது. குறிப்பாக எனக்கு அதிகாரியாக இருந்த திரு எஸ்.சுப்பிரமணியம்,கோட்டப்பொறியாளர் பி.எஸ்.என்.எல்.அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை,அதுவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இணைந்து நிறைய இருக்கிறது.தோழர் சங்கையா அருமையான நூல்களை இயற்றும் ஆசிரியராக மாறியிருக்கிறார்.


                  இதோடு இன்னும் கொஞ்சம் பழைய நிகழ்வுகளும் சில திருத்தங்களுடன். ஏற்கனவே படித்தவர்கள் கடந்து போகலாம்.


                  புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் 'பொன்னியன் செல்வன்' புத்தகத்தை எடுத்துக்கொண்டு,சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்கார்ந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஜெயராஜு  ஒரு அடி அடித்து, சாப்பிடாமாக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது. படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்கு சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.


                கல்லூரி படிக்கும் காலத்தில் , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்த அனுபவம், சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது.பெரியாரியல் பட்டயப்பயிற்சிக்காக பேரா.கி.ஆழ்வார் அவர்கள் மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது.பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந.இராமநாதன் அவர்களை நேரிடையாகச்சந்தித்ததும்,புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக 'செவியுணர்வுச்சுவையுணர்வோடு 'சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை. காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம்,பொதுவுடமை எனப் பல திக்குகளிலிருந்தும் கிடைத்த புத்தகங்களை வாசிப்பதும் கல்லூரிக் காலங்களில் ஓடிக்கொண்டிருந்தது. தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ' நான் ஏன் காந்தியைக் கொன்றேன் ?' என்னும் புத்தகத்தை உடன் படித்த நண்பன் கொடுக்க அதனைப் படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. அந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை. 


                படித்து முடித்து ,திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது,வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர்.குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார்.1984-85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய்-தம்பி,பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர்.திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது ,உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர்.நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர்.இன்று மிக உயர்ந்த நிலையில் தன்னுடைய வாசிப்புகளை வைத்திருக்கும் கருப்பையா அண்ணனின் வாசிப்பு வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும்.பொன்னுசாமி வெகு காலத்திற்கு முன்பே விடை பெற்றுக்கொண்டு விட்டார். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான்.ஏனோ ஆங்கிலக் கதைக் கரு எனக்கு ஒட்டவில்லை. 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார். பிரபஞ்சனின் 'எனக்குள் ஒருத்தியை ' - நான் படித்ததை உடன் வேலை பார்த்த சேகருக்கு கொடுத்ததும், அவரின் வாழ்க்கை முடிவு மாறியதும் தனிக்கதை.


மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது.இன்று அவர் எனது நினைவில் வாழ்பவராக மாறிவிட்டார். அற்புதமான வாசிப்பாளர். 'புதிய காற்று ' எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார் அவர். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தக்ங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும. இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்களின் புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது. 


             மதுரைக்கு வந்த பின்னர், கார்முகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு ,ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.'ஸ்பார்ட்டகஸ் 'போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும் , பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.


              திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், 'நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்துவிடுகின்றேன் 'என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.


 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக 'படித்த பார்ப்பன நண்பரே ' என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் தொகுப்பாக 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது. 


  பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்க தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக்கொண்டிருக்கின்றார். 'புத்தகத் தூதன் ' எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை இன்றும் விற்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் கணேசன்,க.அழகர்,அழகுபாண்டி,மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்க தோழர்களாக இருக்கின்றனர். 


             மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன்,இந்து பத்திர்க்கை ஆசிரியர் அண்ணாமலை,மேலாளர் முரளி  எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்....எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை...இன்றைக்கு எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்கள் இல்லை.


எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் தோழர் அகனின் முயற்சியால் 'சூரியக்கீற்றுகள் ' என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. 


          எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடம், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக்கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்...


மதுரையில் கணினிப் பயிற்சி நிலையம் வைத்திருந்த தோழர் ஓவியா அவர்களும் அவரின் கணவர் வள்ளி நாயகம் அவர்களும் புத்தகத்தால் எனக்கு அறிமுகம் ஆயினர். தோழர் வள்ளி நாயகம் தன்னுடைய உழைப்பால்,அற்புதமான தலைவர்களைப் பற்றிய நூல்களை எழுதினார்.அதை என்னிடத்தில் படிக்கக் கொடுத்தார். இன்று அவர் இல்லை. தோழர் ஓவியா அவர்கள் இப்போது எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார். தொடர்ந்து புத்தகங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


            மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது.நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது. 


            புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் 'காரல் மார்க்ஸ் நூலகம்' என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். 'எனக்குரிய இடம் எங்கே ' என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும். 45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா.மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்கார்ந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி  பேசினார்.வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார்.  


எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது. எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தில் முதுகலை முடித்திருக்கும் எனது மகள் 'ஆழினி' என்னும் நாவலை எழுதியிருக்கிறார். எனது மகள் எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது,எழுதி புத்தகங்கள் வெளியிடுவதும்,அதனால் பாராட்டுப் பெறுவதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ' நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே ' என்று சொன்ன நேரத்தில் உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால் மனதார அதுதான் உண்மையான சொத்தாக நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,


           எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும்..பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன். 


        எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்..வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு,தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும்.பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது... புத்தகக் கடைகளும்தான்.....