Monday, 29 March 2021

தேர்தல் பாதை வேண்டாம் என்றவர்களும்...

தேர்தல் பாதை 

வேண்டாம் என்றவர்களும்

களத்தில் ஆதரவாக

நிற்கின்றார்கள்....


தமிழகம் ஒருமுகமாக

நிற்கின்றது...

வேண்டாம் இவர்கள் என

மேலும் கீழும ஆள்பவர்களை

அடிமனது வெறுப்போடு

ஒதுக்கி வைத்து நிற்கிறது...


ஆள்பவர்களின் ஆட்கள்

வீடு வீடாக 

வருகிறார்கள்...

எத்தனை ஓட்டு 

உங்கள் வீட்டில் எனக்

கணக்கெடுத்து போகிறார்கள்...

எதற்கு எனக் கேட்டால்

வெகுளியாகச் சிரிப்பதுபோல

சிரிக்கிறார்கள்.....


கொடுத்தால் வாங்கிக்

கொள்ளுங்கள் ...

மறுக்காதீர்கள்...ஆனால்

மறக்காமல் எங்களுக்கு 

ஓட்டுப்போட்டு விடுங்கள்

என ஒருவர்

பேசி இருக்கிறார்....


இதில் எனக்கு 

உடன்பாடு இல்லை...

உழைப்பவர்கள் உண்மையிலேயே

ஒன்றும் அறியாதவர்கள்...

கையில் பணத்தைப் 

பெற்று விட்டால்

கொடுத்தவனுக்குத்தான் ஓட்டுப்

போடல் வேண்டும் 

எனும் மனநிலையில் உள்ளவர்கள்..


வெட்கமாகத்தான் இருக்கிறது..

இந்த ஜனநாயகம் என்னும்

பணநாயகத்தை நினைக்கையில்...

அடித்து வைத்த பணத்தில்

ஒவ்வொரு ஓட்டுக்கும்

ஐந்தாயிரம் எனப் பெரும்போக்கு

காட்டுகிறதாம் பெரும்புள்ளி ஒன்று


தெருவுக்குத் தெரு

எதிர்க்கட்சிகள் நில்லுங்கள்...

பணம் கொண்டுவருபவனை

அப்படியே அமுக்குங்கள்...

பணம் தருவதற்கு 

பதுக்கி வைக்கும் இடத்தைக் 

கண்டு பிடியுங்கள்...

விதவிதமாய் யோசித்து 

பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள்..

வைக்கோல் படப்புக்குள்

ஒரு கோடி ரூபாய் புதுக்கோட்டையில்....


தேர்தல் என்பது 

பரப்புரை மட்டுமல்ல....

எதிரி பதுக்கி வைத்திருக்கும்

பணத்தை

செல்லாத பணமாக்குவதில்தான்

வெற்றி இருக்கிறது....


என்னவும் செய்வோம்

இறுதியில் பணத்தைக் 

கொடுத்து வெல்வோம் 

எனும் இறுமாப்பை உடைத்திட

இளைஞர்களே ஒன்று சேருங்கள்...


உங்கள் தெருக்களைக் கண்காணியுங்கள்...

உள்ளே வருபவர்களை 

உற்று நோக்குங்கள்.....

மே இரண்டை வெற்றி நாளாக

ஆக்குங்கள் உடன் பிறப்புகளே..

                                                                      வா.நேரு,29.03.2021

  

Saturday, 27 March 2021

நூல் மதிப்புரை : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

வண்ணப் படத்தோடு வாசிக்க ....வல்லினச்சிறகுகள் இதழில் படிக்க இதனைச்சொடுக்குங்கள்...
நூல் : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

நூல் ஆசிரியர் :இளவரசி சங்கர்

வெளியீடு : சாதரசி சங்கர் பதிப்பகம்,புதுச்சேரி-605 005

முதற்பதிப்பு : ஜனவரி 2021

மொத்த பக்கங்கள் :180  விலை ரூ 180.


நூல் ஆசிரியரின்  முதல் புதினம்'மாண்புமிகு மதிவாணன்'. இந்தப் புதினத்தின் முதல் பகுதியில் நூல் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தமிழ் இலக்கியம்,ஆங்கில இலக்கியம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் நிலை சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றுபவர்.நாடகத்தில் நடிப்பவர்.பறை இசை அடிப்பவர், கரகாட்டம் ஆடுபவர்,பட்டிமன்றம்,பாட்டரங்குகளில் சொற்பொழிவு ஆற்றுபவர்,மொழி பெயர்ப்பவர்,வானொலி,தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்பவர்.தான் இறந்த பிறகு தனது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு அளிக்கப்படவேண்டும் என உடல்கொடையை எழுதிக்கொடுத்துள்ளவர் என இவரைப் பற்றிய பல குறிப்புகள்… இவரின் பன்முக ஆற்றலை  உணர்த்துகிறது.


“இன்றைக்குப் புதினம் என்பது அரிதாகவே படைப்பாளர்களால் படைக்கப்படுகிறது. எப்படி கவிஞர்கள் காப்பியத்தின் பக்கம் செல்லாமல் தவிர்க்கிறார்களோ அப்படிப் பிற படைப்பாளிகள் இன்று புதினத்தை விருப்பத்துடன் ஈடுபட்டுப் படைப்பதைப் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்..”என்று முனைவர் அ.உசேன் அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. எழுத வருகிறவர்கள் எல்லோராலும் புதினம் படைக்க இயலுவதில்லை. ஆனால் அப்படி புதினம் எழுதி வெற்றி பெற்ற பல எழுத்தாளர்களைக் கொண்ட்து தமிழ் இலக்கியம். இன்றைய பெண் புதினப்படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால்கூட பாமா,திலகவதி,சிவகாமி,அம்பை,மலர்வதி எனப்பலர் உணடு.அவர்களில் ஒருவராக,புதிதாக  இளவரசி சங்கர் இணைந்திருக்கிறார்.


முனைவர் சுந்தரமுருகன் அவர்களின் மகிழ்வுரை,முனைவர் அ.உசேன் அவர்களின் அணிந்துரை , அரிமதி இளம்பரிதி அவர்களின் அன்புரை,  பாவலர் ஆறு செல்வன் அவர்களின் கருத்துரை,புதுவை யுகபாரதி அவர்களின் வாழ்த்துப்பா எனப் புதுச்சேரியின் புகழ் மிக்க  தமிழ் இலக்கிய ஆளுமைகளால்  நூலின் முதல் 30 பக்கங்கள் கருத்துகளால் நிரம்பி நிற்கிறது.


“ஒரு மனிதனின் நற்பண்புகளையும்,அதீத திறமைகளையும்,சிறப்புத்தன்மைகளையும்,அறிவாற்றலையும்,புத்திக்கூர்மையையும்,தொண்டுள்ளத்தையும்,உழைப்பையும்,வெற்றிகளையும் அவர் வாழும் காலத்திலேயே மெச்சவேண்டும்,போற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்ட்துதான் இந்த ‘மாண்புமிகு மதிவாணன் “ என்னும் புதினம் “ என்று என்னுரையில் குறிப்பிடும் இந்த நூலின் ஆசிரியர் இளவரசி சங்கர்  மேலும் ‘இந்தப் புதினம் என்னுடைய முதல் முயற்சி.சோதனைகளும் சாதனைகளும்  நிறைந்த மதிவாணன் அண்ணனின் வாழ்க்கையைச் சிறிது புனைவுகளுடன் படைப்பாக்கம் செய்துள்ளேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வாழும் மனிதரின் கதை,சில புனைவுகளோடு என்று நாம் புரிந்துகொள்கிறோம்.


இந்தப் புதினத்தின் இரண்டாம்பக்கமே, இந்தப் புதினத்தின் நாயகன் இறந்து விட்டதாகப் பரப்பப்படும் ஒரு பொய்யான செய்தி..அதன் மூலமாகத்தான் கதை நகர்கிறது.`போகும் வழியில் ஒரு மனிதன் இறந்துவிட்டாரா? இல்லையா? என்பதை உறுதி செய்வதற்கு முன்பாகவே மனிதர்கள் இந்தச்செய்தியைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள் என்ற வேதனையோடு …


`இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை ` ஆகிவிட்டது என எனக்குள் ஏதோதோ புலம்பிக்கொண்டே என் இருக்கையை வந்தடைந்தேன் …` என விவரிக்கும் நூல் ஆசிரியர் ..`யார் இந்த மதிவாணன் ? `என்னும் கேள்வியைப் புதினத்திலேயே கேட்கிறார். பின்பு அவரைப் பற்றிய செய்திகளை கதையாகச்சொல்லிச் செல்கிறார்.


புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் என்று ஒற்றை வரியில் சொல்லாமல் முதலில் தான் வசிக்கும் புதுச்சேரியின் பெருமைகளை,சிறப்புகளைப் பட்டியலிட்டு சொல்கின்றார்.`ஓயாமல் அலையோசை கேட்டுக்கொண்டிருக்கும் வங்கக் கரையோரம் அமைந்துள்ளது அழகிய புதுச்சேரி ` என்று ஆரம்பித்து புதுச்சேரியை வர்ணிப்பது ஒரு கவிதை போல செல்கிறது.முடிவில் இத்தனை சிறப்புகளையும் கொண்ட புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது `ஜிப்மர் `மருத்துவமனை ` என்று முடிக்கும்போது ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் சுற்றுப்புற அழகையெல்லாம் காட்டி முடிவில் காட்ட வேண்டிய காட்சியை பெரிதாகக் காட்டுவது போல  சிறப்பாக உள்ளது.அந்த ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் எனக் காட்டுகிறார். புதினம் முழுவதுமே இப்படி ஒரு செய்தியைச் சொல்வதை அழகியலோடும் ,விறுவிறுப்பாகவும் சொல்லிச்செல்வதே இந்த நூலின் வெற்றி எனலாம்.


மதிவாணன் தனக்கு அறிமுகம் ஆன விதம், அவர் தனக்கு உடன் பிறவா அண்ணனாகச்செய்த உதவிகள், அவருடைய சொந்த ஊர் என விவரித்துச்சொல்லிச்செல்லும்  நூல் ஆசிரியர்,மதிவாணனே தன்னை அழைத்து, தனக்கு மலக்குடல் புற்று நோய் வந்திருப்பதை சொன்ன நிகழ்வை,அதனால் தான் கலங்கியதை,பின்பு அவரே தனக்கு ஆறுதல் சொன்னதை எல்லாம் நம் கண் முன்னே அப்படியே காட்சிப் படிமமாக நிறுத்தியிருக்கிறார்.அப்படி புற்று  நோயால் பாதிக்கப்பட்டு ,மருத்துவமனையில் இருக்கும்போதுதான் அவர் இறந்துவிட்ட்தாக சிலர் பரப்பிய செய்தியை எழுதியிருக்கிறார்.பின்பு அவர் அந்த நோயை வென்ற விதம்,தனக்கு ஏற்பட்ட இன்னலைப் பொறுத்துக்கொண்டே மற்றவர்களுக்கு உதவிய விதம் என்று புதினத்தின்  நாயகன் மதிவாணனைப் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கதையாகச்சொல்லிக்கொண்டே செல்கிறார் நூல் ஆசிரியர்.


வாழ்க்கையின் அனுபவங்களை பல்வேறு இடங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. சுடுகாடு காட்டும் படிப்பினை தனித்தன்மையானது. ஆனால் நோய் வாய்ப்பட்டு,மருத்துவமனையில் நோயாளியாக படுத்துக்கிடக்கும்போது கிடைக்கும் படிப்பினை அனைத்திலும் மேலானது. மருத்துவமனை,உயிர் காக்கும் மருத்துவர்கள், நோயாளிகளைக் குழந்தைகளைப் போலக் கவனிக்கும் செவிலியர்கள் என அந்த உலகம் தரும் அனுபவம் மற்ற எந்த இடமும் தராத மேன்மையான் அனுபவம்.அதிலும் உயிர்க்கொல்லி நோயாக அறியப்பட்டிருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும்போது கிடைக்கும் அனுபவத்தையும்,அதனை மன அடிப்படையில்,மருத்துவ அடிப்படையில் வென்ற கதையை இந்தப்புதினம் பேசுகிறது. மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு வரும் நோயைப் பற்றிய விழிப்புணர்வு  இன்றைய தேவை.அதனை இந்தப் புதினத்தின் வாயிலாக நூல் ஆசிரியர் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.


கன்னடத்தில் பி.வி.பாரதி அவர்கள் எழுதியதை தமிழில் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் தலைப்பில் கே.நல்லதம்பி அவர்கள் மொழி பெயர்த்த நூல் கூட அண்மையில் வாசித்தேன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தக் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் நூல் ' ஒரு அனுபவக்கதை' என்று தலைப்போடு சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. மார்பகப் புற்று நோய் வந்த ஒரு பெண் அதனை எதிர்கொண்டு ,சிகிச்சை எடுத்து வெற்றி பெற்ற அனுபவக்கதை அது. அது போல மதிவாணன் அவர்கள் மலக்குடல் புற்று நோயில் இருந்து சிகிச்சையால் குணமடைந்ததை சொல்லும் அனுபவக் கதையாக இந்த நூலினை எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அந்த நோய், தன் தாய்க்கு வந்த போது அதனை எதிர்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைய இந்த அனுபவம் எப்படி ஊக்கம் கொடுத்தது என்பதையும் நூல் ஆசிரியர்  புதினத்தின் மூன்றாம் பாகமாக சுட்டிச்செல்கிறார். மதிவாணன் புற்று நோயிலிருந்து விடுபட்டது மட்டுமல்லாமல் ,அவரின்  நேர்மை,பணி புரியும் இடத்தில் சிறப்பான சேவை புரியும் தன்மை, அவர் பிறந்த ஊரின் சிறப்பு, நூல் ஆசிரியர் பிறந்த ஊரின் சிறப்பு என்று பல தகவல்களை எடுத்துக்கொண்டு அவற்றை இணைத்து,கற்பனையான விருதான 'மாண்புமிகு மதிவாணன்' என்னும் விருது அளிப்பு நிகழ்வு  பற்றியும்  வாசிப்பவருக்கு அலுப்பு தட்டாமல் ,விறுவிறுப்பாக அமைந்துள்ள புதினமாக இந்த நூல் உள்ளது.


இந்தப் புதினத்தில் எதிர்மறை சிந்தனை உள்ள கதாபாத்திரங்களே இல்லை. பொதுவாக  புதினம் என்பது சிக்கல்கள் பின்பு சிக்கல்களைத் தீர்த்து வெற்றியாகவோ அல்லது சிக்கல்களைத் தீர்க்க இயலாத தோல்வியாகவோ அமையும். இந்தப் புதினம் இந்த இரண்டு தன்மையும் இல்லாமல் ஒரு வேறுபட்ட நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது.

மதிவாணன் என்னும் கதாபாத்திரத்தின் இலக்கியப் படைப்புகளையும் இந்தப் புதினத்தில் அறிமுகப்படுத்துகிறார்.'புழுதி மண்' என்னும் சிறுகதைத் தொகுப்பு,நோய்வாய்ப்பட்ட நேரத்திலும்கூட அந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எப்படி உருவாகின என்பதனை விளக்கும் 'கதைகளின் கதை' என்னும் குறிப்புகள்,'நிலா முற்றத்தில் கவிதைகள்'என்னும் கவிதைத் தொகுப்பு,விருது அளிக்கும் விழாவில் 'புற்று நோய்த் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுத்தூதர்' என்னும் மதிப்புறு பணி,ஏற்புரையாக மதிவாணன் ஆற்றுவதாக வரும் உரை...அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை அவரே சொல்வதாக விவரிப்பது போன்றவை  நூலில் மிக நன்றாக அமைந்துள்ளது.


உலகம் முழுவதும் இருக்கும் பெண் எழுத்து ஆளுமைகள் பங்கு பெறும் ,வாசிக்கும் 'வல்லினச்சிறகுகள்' இதழில், புதினம் எழுத விரும்புகிறவர்கள் இப்படியும் கூட் எழுதலாம் என்று ஒரு புதிய பாதையை, தன்-பிறர்  வரலாறையே புதினமாக எழுதும் பாதையைக் காட்டியிருக்கும் நூலாக இந்த  'மாண்புமிகு மதிவாணன்'நூலைப் பார்க்கிறேன்.'இந்த நூல் ஆகச்சிறந்த புதிய முயற்சி.நானறிந்தவரையில் தமிழுலகம் அறியாத புது முயற்சி' என அன்புரையில் அரிமதி இளம்பரிதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல புது முயற்சி இது. நீங்களும் கூட இந்த நூலை ஒருமுறை வாசித்துப்பார்க்கலாம்.இதனைப் போல நமக்கு நன்றாகத் தெரிந்த  மேன்மையானவர்களை புதினமாக எழுதலாமா எனச் சிந்திக்கலாம்.


நன்றி : வல்லினச்சிறகுகள் மார்ச்-2021
Tuesday, 16 March 2021

தரவுகளே இன்றைய சொத்து....

தரவுகளே இன்றைய சொத்து

(முனைவர் வா.நேரு)


25 ஆண்டுகளுக்கு முன்னால் ,மதுரைக்கு வந்த புதிதில், நான் மதுரைக்கு புதியவன்.நிறைய அறிமுகமில்லை. ஒரு வாடகை புத்தக நிலையத்தில் இணைந்து புத்தகங்கள் எடுத்துவந்தேன்.ஒரு 25 புத்தகங்கள் எடுத்த நிலையில், ஒரு நாள் அந்தப் புத்தக கடைக்குச்சென்றேன். புதிதாக உட்கார்ந்திருந்த ஒருவர் என்னோடு கொஞ்ச நேரம் பேசவேண்டும் என்றார் "நீங்கள் யார்?" என்றேன்." நான் இந்தக் கடையின் உரிமையாளர்..எப்போதும் இருக்கும் பணியாள் இன்று வரவில்லை." என்றவர் "நீங்கள் எடுத்தப் படித்த 25 புத்தகங்கள் பட்டியலைப் பார்த்தேன். அதனால் உங்களோடு பேசவேண்டும் என்று நினைத்தேன்" என்றார். பேசினோம்.நண்பர்கள் ஆனோம்.


நான் எடுத்துப்படித்த 25 புத்தகங்கள் பட்டியலைப் பார்த்து ஒருவருக்கு என்னைப்பற்றி ஒரு முடிவு செய்ய முடிந்திருக்கிறது..இவரோடு நட்பு பாராட்டலாம் என்று நினைக்கத் தோன்றியிருக்கிறது. இன்றைக்கு நாம் பயன்படுத்தக்கூடிய முக நூல் என்னும் சமூக ஊடகத்தை நினைத்துப்பாருங்கள். அனைத்தையும் நாம் அதில் பதிவிடுகிறோம். நாம் என்ன படிக்கிறோம்,பார்க்கிறோம்,கேட்கிறோம், யாரோடு நாம் நட்பாக இருக்கிறோம். யாருடைய கருத்திற்கு எதிராக இருக்கிறோம். நமக்கு பிடித்த உணவு என்ன,நமக்குப் பிடிக்காத உணவு என்ன, எந்த விசயங்களில் நாம் பலவீனமாக இருக்கிறோம் அல்லது சில விசயங்களை கண்டு கொள்ளாமல் செல்கிறோம் என்று அனைத்தும் ,புத்தகக் கடைக்காரர் நோட்டில் பதிந்து வைத்துள்ள பட்டியல்போல முக நூல் பதிந்து வைத்துக்கொண்டுள்ளது.முக நூல் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் நம்மைப் பற்றிய அத்தனை செய்திகளையும் சேகரித்து வைத்துக்கொண்டே இருக்கிறது.


முக நூலை நாம் பயன்படுத்துகிறோம். அதற்கு கட்டணமில்லை,இலவசமாகப் பயன்படுத்துகிறோம். பின்பு எதற்கு நம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் சேர்த்து வைக்கிறார்கள். நமக்கு இலவசமாக அவர்கள் கொடுக்கிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு கட்டணம். நாம் கட்டணமா? என்றால் ஆம்,நாம்தான் அவர்களுக்கு கட்டணம். நாம் என்ன படிக்கிறோம், என்ன பார்க்கிறோம், என்ன விரும்புகிறோம், என்ன சாப்பிடுகிறோம்,எங்கு இருந்து எங்கு போகிறோம்? என நம்மைப் பற்றி நாம் கொடுக்கும் நமது தரவுகள்தான் அவர்களுக்கு கட்டணம். அதனை அவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு விற்கின்றார்கள்.அந்த நிறுவனங்கள் நமக்கு இணையதளம் மூலமாக விளம்பரத்தைக் கொடுக்கிறார்கள். அதன் மூலம் முக நூல் நிறுவனமும், வியாபார நிறுவனங்களும் பயன் பெறுகின்றன..


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் 2016-அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவர் உறுதியாக தோல்வியடைவார் என்றுதான் உலகம் எதிர்பார்த்தது.ஆனால் அவர் வெற்றி பெற்றார்.எப்படி? 2016 அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஸ் அனலிடிகா என்னும் நிறுவனம் முக நூல் பயனாளிகள் 5 கோடி பேரின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அமெரிக்க நாட்டின் குடிமக்கள் பயன்படுத்திய முக நூல் பயன்பாட்டை வைத்து அந்த நாட்டின் தேர்தல் முடிவையே மாற்றுவதற்கு முக நூல் விவரங்கள் பயன்பட்டிருக்கிறது.இப்போது புரிந்திருக்கும் முக நூலின் வலிமை...


2018-ல் மித்ரன் என்னும் இயக்குநர் இயக்கிய 'இரும்புத்திரை' என்னும் திரைப்படம் வெளிவந்தது.அதில் மனிதர்களின் அந்தரங்க தகவல்களை சேகரிப்பதன் மூலம் எப்படி எல்லாம் குற்றங்களைச்செய்ய முடியும் என்பதனை விரிவாக விளக்கியிருப்பார். சாதாரண மக்கள் கைகளில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன்களால் எப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் வரலாம் என்பதனை அந்தப் படம் விவரிக்கும். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இன்று தேவை மனிதர்களைப் பற்றிய விவரங்களே(தரவுகளே) என்று அந்தப் படத்தில் வில்லன் வசனம் பேசுவார்.ஆம் தரவுகளே இன்றைய சொத்து.


வாட்சப் முக நூல் போன்று அல்ல. அதனை ஆரம்பிக்கும்போதே ,இருவருக்கு இடையிலான உரையாடல்களை நாங்கள் கண்காணிக்க மாட்டோம்,சேகரிக்க மாட்டோம்,சேமிக்க மாட்டோம். அதனை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்று தான் ஆரம்பித்தார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள்.வாட்சப் செயலி நன்றாக அனைவருக்கும் அறிமுகமாகி, புகழ் அடைந்தவுடன், அதனை முக நூல் நிறுவனம் விலைக்கு வாங்கியது.ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய்க்கு அல்ல ,1900 கோடிக்கு வாட்சப் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முக நூல் நிறுவனம்.


இப்போது வாட்சப், தன்னைப் பயன்படுத்துவோரின் தரவுகளை எல்லாம் முக நூலுக்கு கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.முக நூலுக்கு மட்டுமல்ல மற்ற மூன்றாம் நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். " நீ உன்னைப் பற்றி என்னென்ன சொல்கிறாயோ, அதையெல்லாம் அடுத்தவர்கள்கிட்ட நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். உனக்கு விருப்பமுன்னா சொல்லிக்கிட்டே இரு, இல்லையின்னா போ" என்று ஒருவன் அடுத்தவனிடம் சொல்வதை நினைத்துப்பாருங்கள். அப்படித்தான் இப்போது வாட்சப் சொல்கிறது. உன்னைப் பத்திய எல்லா விவரத்தையும் அடுத்தவங்க கிட்ட நான் கொடுப்பேன்..விருப்பமுன்னா வாட்சப்ல இரு, இல்லையென்னா போ...


என்னதான் நடக்கிறது?...வாட்சப் இல்லாமல் இருக்கும்போது நிறைய குறுஞ்செய்திகள்(SMS) பயன்படுத்தினோம்.வாட்சப் வந்தபிறகு குறுஞ்செய்திகள் அனுப்புவது நின்றது. குறுஞ்செய்திகள் பயன்படுத்தியதுபோலவே மின்னஞ்சலும் நிறையப் பயன்படுத்தினோம் வாட்சப்,முக நூல் வருவதற்கு முன்னால்.இப்போது அதுவும் குறைந்து போனது.நம்மை வாட்சப்பிற்கும் முக நூலுக்கும் நன்றாகப் பழக்கப்படுத்தி விட்டார்கள்.காலையில் எழுந்தவுடன் வாட்சப் செயலியைப் பயன்படுத்துவதுதான் முதல் வேலையாக இருக்கிறது. கழிப்பறைக்கு செல்வது கூட அடுத்துத்தான்..அவ்வளவு தூரம் அந்தச்செயலிகளுக்கு நாம் பழக்கமாகிவிட்டோம்..இப்போது 'இருந்தா இரு,இல்லைன்னா போ " என்று சொல்கிறார்கள்...என்ன செய்வது என்று பல பேருக்கு குழப்பம்.பலர்,வாட்சப் நமக்கு வேண்டாம்,நாம் சிக்னல், டெல்கிராம் என்னும் செயலிகளுக்கு மாறிவிடுவோமா? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சிக்னல் செயலியும் வாட்சப் போலத்தான்.வாட்சப் ஆரம்பிக்கும்போது சொன்னதுபோல சிக்னல் இப்போது சொல்கிறார்கள்.நாளைக்கு அவர்களும் வாட்சப் போல மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன அடிப்படை? அப்போ எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவோமா? செல்பேசியைத் தூக்கி எறிந்து விடுவோமா? வேண்டாம் என்று மறுத்து விடுவோமா?இல்லை,அப்படி எல்லாம் முடிவு செய்ய இயலாது....


" ஒவ்வொன்றுக்கும் 'ஏன்' என்ற கேள்வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது.மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகின்றது. இதற்காகத்தான் நாம் உழைக்கின்றோம் " என்றார் தந்தை பெரியார்.முக நூல், வாட்சப் போன்றவை நமது கையில் இருக்கும் கத்தி போன்றவை. கையில் இருக்கும் கத்தியை வைத்து,காய்கறியை நறுக்கி,சுவையான உணவைச்சமைத்தும் பரிமாறலாம். அடுத்தவருக்கு காயம் ஏற்படுத்துவதற்கும் கத்தியைப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்டதுதான் இந்த முக நூல்,வாட்சப் போன்ற பல்வேறு செயலிகள்.இந்தச்செயலியைப் பயன்படுத்துபவர்களில் நல்லதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,கெட்டதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.


ஒரு செய்தி படித்தேன்."வாட்சப் குழு அமைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி ,2020ல் மதுரை அருகில் உள்ள அலங்கா நல்லூரில் கஞ்சா விற்பனை செய்வதற்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட வாட்சப் குழுவில் இணைந்து, வாடிக்கையாளர் போல் நடித்து அந்தக் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை, அவருக்கு உதவிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தது பற்றிய செய்தி படித்தேன்.இதைப் போன்ற ஆயிரக்கணக்கான சமூக விரோத செயல்களுக்கு இந்த வாட்சப்,முக நூல் குழுக்கள் பயன்படுகின்றன.


அதனைப் போல அற்புதமான பல நல்ல செயல்களுக்கு வாட்சப்,முக நூல் குழுக்கள் பயன்படுகின்றன. எத்தனையோ பேருக்கு படிக்க,மருத்துவ செலவிற்கு உதவிகளை இந்தக் குழுக்கள் செய்கின்றன.பழைய நண்பர்களோடு தொடர்பு கொள்ளவும், பல புதிய செய்திகளை தெரிந்து கொள்ளவும் என முகநூல், வாட்சப் குழுக்களின் பயனைப் பல நூறு பக்கங்கள் எழுதலாம்.


சரி,முக நூல்,வாட்சப் போன்றவை கத்தி போல.நல்லதிற்கு பெரும்பாலும் பயன்படுகிறது. தீமைக்கும் பயன்படுகிறது. சரி, இந்தக் கத்தி போன்ற முக நூல், வாட்சப்,கூகுள் போன்ற செயலிகளை உருவாக்குபவர்களின் நோக்கம் என்ன? பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது என்பதாக இருக்கிறது.அவர்களைப் பயன்படுத்துபவர்கள் ஆட்சியிலிருப்பவர்களாக இருக்கிறார்கள். 


அறிவியலையும் உளவியலையும் இணைத்து, சமூக ஊடகங்கள் மூலமாக சிலர் மட்டும் வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகிறார்கள்.சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் உழைப்பதற்கு அடிமைகள் தேவைப்பட்டார்கள் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டுவதற்கு. இன்றைக்கு சமூக ஊடக அடிமைகள் தேவைப்படுகிறார்கள்,முதலாளிகள் பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு. முதலாளிகள் கோடி கோடியாய் உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளை லாபம் அடிப்பத்ற்கு வழிவகுக்கிறார்கள்.இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொடங்கியவுடன்,முழுவதுமாக இலவசமாக பேசவும்,டேட்டாவும் கொடுத்ததை நினைத்துப்பாருங்கள்.இந்தியாவில் அதானியும் அம்பானியும் ஆட்சியாளர்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். 


கணினி மூலமாக பெரும் பணக்காரர் ஆகலாம் என்பதனை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தவர் பில்கேட்ஸ்தான்.தன்னுடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் உலகின் முதல் பணக்காரராக பல ஆண்டுகள் இருந்தவர். லினக்ஸ் என்னும் ஆப்ரேசன் சிஸ்டம்(OS) உருவாக்கியவர் அதனை இலவசமாக அறிவித்தார். யார் வேண்டும் என்றாலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் எம்.எஸ்.டாஸ்,எம்.எஸ்.வின்டோஸ் என்னும் ஆப்ரேசன் சிஸ்டம்களை உருவாக்கிய பில்கேட்ஸ் அதனை விற்பனை செய்தார்.ஒரிஜினில் இல்லாமல் நகல் எடுத்து பயன்படுத்தியவர்கள் மீது அந்த நிறுவனம் வழக்கு தொடுத்தது. பயந்து போய் அனைவரும் அந்த நிறுவனத்திடம் பணம் கொடுத்து வாங்கினார்கள்.உலகின் முதல் பணக்காரர் ஆனார்.கீழே இருக்கும் பட்டியலைப் பாருங்கள்.


உலகின் இரண்டாவது பணக்காரர் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிஜோஸ்(Jeff Bezos),உலகின் மூன்றாவது பணக்காரர் மைக்ரோஜாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ்,உலகின் 5-வது பணக்காரர் பேஸ் புக் நிறுவனத்தின் மார்க் ஜீக்கர்பெர்க்( Mark Zuckerberg),உலகின் ஏழாவது பணக்காரர் கூகுள் நிறுவன பங்குதாரர் லேரி பேஸ் Larry Page....பட்டியலை மீண்டும் பாருங்கள் எல்லாமே கணினி,இணைய,சமூக ஊடகங்கள் அடிப்படையில் அமைந்த நிறுவனங்கள். உலகத்தின் சொத்துகள் அனைத்தும் இவர்கள் கையில் உள்ளது.இந்தியா அம்பானி,அதானி கைகளில் இருப்பது போல, உலகம் இந்த அமேசான்,பேஸ் புக்,மைக்ரோ ஜாப்ட்,கூகுள் நிறுவன அதிபர்களின் கைகளில் இருக்கிறது.ம்னித இனம் முழுவதுமாக வறுமை இல்லாமல் ஆவதற்கு இவர்கள் நினைத்தால் செய்ய முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.பணக்காரர்களுக்கு மேலும் மேலும் பணக்காரர் ஆக வேண்டும் என்று தோன்றுமே தவிர, எல்லோரும் ஒன்று போல் வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது. ஆனால் நாம் அவர்களை அப்படி நினைக்க வைக்கவேண்டும்.


" நாம் உலகம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்கின்றோம். நம் இயக்கம் உலக இயக்கம்.உலக இயக்கம் என்றதும் மனிதன் மலைப்பான்;இவர்கள் இங்கிருந்து கொண்டுதானே பேசுகின்றார்கள் என்று.முற்காலத்தில் மனிதனுக்கு 25 மைலுக்கு அப்பால் உள்ளதே மலைப்பாக இருக்கும்.அன்றைக்கு உலகத்தினை உணர அவனுக்குச்சாதனங்கள் இல்லை..." என்றார் தந்தை பெரியார்.உலகத்தை வாட்சப்,முக நூல் போன்ற சமூக ஊடகங்கள் ஒன்றாக ஆக்கி வைத்திருக்கிறது.ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற வெளி நாட்டில் இருப்பவர்களோடு பேசுவதற்கு நிறையப் பணம் செலவழித்து,பலமணி நேரம் காத்திருந்து பேசவேண்டியிருந்தது.ஆனால் இன்றைக்கு எளிதாக நினைத்தவுடன் பேசமுடிகிறது.தொடர்பு கொள்ள முடிகிறது.இதனைப் போன்ற பல முன்னேற்றம் இவைகளால் ஏற்பட்டிருக்கிறது.உலகத்தினை உணர்வதற்கு அற்புதமான சாதனங்களாக வாட்சப்,முக நூல் போன்ற செயலிகள் உள்ளன.


."எல்லா மக்களுக்கும் எல்லாவிதமான சவுகரியமும் ஏற்படத்தான் போகின்றது;ஏற்பட்டே ஆகவேண்டும்.நாம் நமது சில்லரை எண்ணங்களை மாற்றிக்கொண்டு,உலகம் எல்லாம் ஒன்றாக வேண்டும் என்பதற்கும் ஏற்ப நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.மக்கள் எல்லாம் ஒன்றாக ஆக,பேதங்களை ஒழிக்க வேண்டும்; பேதம் இனி நிலைக்கவும் முடியாது,பொருளாதார பேதமும்,சாதி பேதத் தன்மையும் ஒழிக்கப்பட்டு விடுமானால், மற்றுள்ள பேதங்கள் எல்லாம் நிலைக்கமாட்டா; உலகம் ஒன்று என்ற தன்மைக்குத்தான் வந்துவிடும்".('விடுதலை' 14-11-1972) என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதைப் போல எல்லா மக்களுக்கும் எல்லாவிதமான சவுகரிகயமும் ஏற்பட சமூக ஊடகங்கள் பயன்படல் வேண்டும்.


.வாட்சப்,முக நூல் போன்றவை தேவையா?தேவையில்லையா என்று இன்று நாம் பேசமுடியாது. முக நூல்,வாட்சப் போன்றவை தவிர்க்க இயலாதவை.ஆனால் லாப வெறிகொண்டு தனி மனித அந்தரங்கங்களை மதிக்கமாட்டோம் என்று சொன்னால் அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வாட்சப் நிறுவனம் ஐரோப்பா நாடுகளுக்கு கொடுத்துள்ளதுபோல இந்தியாவிற்கும் தனிப்பட்ட விதிகளை உருவாக்க கேட்க வேண்டும்.


"மக்கள் மன்றம் அனைத்தையும் விட மேலானது" என்பார் திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள்.ஆம், .மக்கள் மன்றத்தில் இந்த செயலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயன் படுத்துபவர்கள் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அறிவுக்கு முன்னுரிமை கொடுத்துப்  பயன்படுத்தவேண்டும்.மனிதம் மேம்படவும், மனித இனம் மேம்படவும் இந்தச்செயலிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் வாட்சப், முக நூல் போன்ற செயலிகள் " நல்லவனுக்கு நல்லவன் ' மட்டுமல்ல 'கெட்டவனுக்கும் நல்லவன்''.என்பதப் புரிந்து கொள்வீராக...


நன்றி :உண்மை மார்ச் 16-31,2021Sunday, 7 March 2021

மார்ச் 8ல்.......

 பெண்களால்

பெரியார் எனப் பெயர் சூட்டப்பட்ட

பெருந்தகையே!

உலக மகளிர்

தினம் என்றவுடன்

உன் நினைவுதான்

எங்கள் முன்னால்ஆனால் சிலர்

மகளிர் நாள்

எனச்சொல்லி

மார்ச் 8ல்

கோலப்போட்டி

நடத்திக்

கொண்டிருக்கிறார்கள்நல்ல

பட்டுப்புடவை

ஒன்றுபோல் எடுத்து

பெண்கள் எல்லாம்

மார்ச் 8ல்

அலுவலகத்திற்கு

கட்டிவர வேண்டுமாம்

சில மாமிகள்

அலுவலகத்தில்

ஆணையிட்டுக்

கொண்டிருக்கிறார்கள்சிலர் கோயில்

பிரசாதங்கள்

வழங்க

பட்டியல்

தயாரிக்கின்றார்கள்

மகளிர் தினத்தை

முன்னிட்டு

எந்த நாளையும்

மாமிகள்

விடுவதாயில்லை

இந்துமத

வளையத்துக்குள்

கொண்டு வருவதிலேயே

குறியாய் இருக்கிறார்கள்பெண்ணுரிமை

எனும் பேச்சு

வரும் இடமெல்லாம்

பெரியார் எனும்

பெயர் நினைவில் வரும்

நம் எதிரிகளுக்கும்ஆதலால்

என்ன செய்யலாம்

இந்நாளில்

பெரியார் பெயர்

வராமல் இருக்க ?

யோசித்து யோசித்து

பாரதியை

முன்னிறுத்துகின்றார்எங்கள்

ஈரோட்டுச்சூரியனே

தன்னிகர் இல்லா

பெண் விடுதலைக்

கருத்துகளை

தரணியில் எவரும்

சிந்திக்கா நிலையில்

கனலாய் கக்கிய

எரிமலையே!

மண்ணில்

ஆணுக்கு

என்னென்ன

உரிமை உண்டோ

அத்தனையும்

பெண்ணுக்கு

வேண்டுமெனக்

கேட்டவர் நீ !


மதம்

தோற்றுவிக்கப்பட்டதே

பெண்களை

அடிமைப்படுத்த என்றாய்

கடவுள் எனும்

வார்த்தையே

பெண்விடுதலை

எனும் சொல்லுக்கு

எதிர்ப்பதம் என்றாய்!


கற்பு என்ற

சொல்லே பெண்ணை

வீட்டுக்குள்ளே

பூட்டிவைக்க சிலர்

சொல்லிவைத்த

வார்த்தை என்றாய்

கர்ப்பப்பையை

கழற்றி எறி என்றாய்


எனக்கு தாலி என்றால்

உனக்கு என்னடா

அடையாளம்?

எனக்

கேட்கச் சொன்னாய்

பெண்ணை விதவை என்றால்

விதவன் எனப்பெயர் ஏன்

ஆணுக்கு இல்லை?

வினவச் சொன்னாய்


ஆரியப் பார்ப்பான்

மனுவைச் சொல்லி

அடங்கிப் போ என்றான்

கல்வியை

ஆயுதமாக்கு!

துணிச்சலை

துணையாகக் கொள்!

மனு தர்மத்தை

பொசுக்கு என்றாய்

நடுங்கித்தான் போனது

பார்ப்பனியம்பெண் ஏன்

அடிமையானாள்?

எண்பது ஆண்டுகளுக்கு

முன்னால் நீ

சொல்லிய வார்த்தைகளை

திருப்பிச் சொல்வதற்கே

பயம்

நிறைய முற்போக்குகளுக்கு

இன்றைக்கும்எங்கள் முன்னால்

எனது தங்கையும்

எனது துணையும்

நன்றியோடு

உனை நினைத்து

புகழ்கிறார்கள்!

மண்ணில் மகளிர்

சுயம்ரியாதையாய்

வாழ வழிகாட்டியவர்

நீங்கள் என்பதால் ...


                வா.நேரு....

எனது 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்' என்னும் கவிதை நூல் தொகுப்பில் இருந்து 


Saturday, 6 March 2021

ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8

                                                   ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8

                                                           (முனைவர் வா.நேரு)


மார்ச் 8 -சர்வதேசப் பெண்கள் தினம். இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களால்,பார்ப்பனக் கருத்தாக்கம் கொண்டவர்களால் இது ஒரு கொண்டாட்ட நாள் என்பது போல கட்டமைக்கப்படுகிறது. கோலப்போட்டி நடத்துவது,சமைக்கும் போட்டி நடத்துவது என்று பெண்களை வைத்தே சர்வதேசப்பெண்கள் தினத்தை கொச்சைபடுத்தும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ,சர்வதேசப்பெண்கள் தினம் என்பது ஒரு போராட்ட நாள். பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வோம்,வெற்றிபெறுவோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளும் நாள்.உலக அளவில் இருக்கும் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான பிரச்சனைகள்,அதற்கான  தீர்வுகள் பற்றி பேசும் நாளாக இந்த மார்ச்-8க் கருதுகிறார்கள். நாமும் அப்படித்தான் கருதுகிறோம்.


பெண்களுக்கான உரிமைகள் என்று வருகின்றபோது மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்.பெண்களுக்கான உரிமைகள் என்று வருகின்றபோது பல ஆண்கள் அந்தக் கருத்துக்கு எதிராக இருப்பது போல பல பெண்களும் இருக்கிறார்கள்."மக்கள் மனதிலும் 'இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரட்சணையிலும் இருக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் " என்கின்ற உணர்ச்சி அடியோடு மாறியுமாக வேண்டும்.அந்த உணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்குப் பெரிதும் முதலில் மாறவேண்டியதாக இருக்கின்றது.ஏனெனில் ,அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும் ,ஏதாவது ஓர் ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது.ஆதலால் அது முதலில் மாறவேண்டியது அவசியமாகின்றது " என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள்.


தந்தை பெரியார் நமக்கு வியப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அவரது எழுத்துகளை வாசிக்க,வாசிக்க..திரும்பத் திரும்ப படிக்க,படிக்க அந்த வியப்புக் கூடுகிறது.'பெண் விடுதலை' என்னும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளும் எழுத்துகளும்( கால வரிசைப்படி) தொகுக்கப்பட்டு திராவிடர் கழக(இயக்க) வெளியீடாக,பெரியார் திடலில் இருந்து 2019-ல் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு நூல் வியப்பிலும் வியப்பைத் தருகிறது.எப்படி இவ்வளவு முன்னோக்குத் தன்மையில்,பல ஆண்டுகளுக்குப் பின்னால்  வரும் பெண் விடுதலையை முன் நோக்கி அய்யா பெரியார் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பே. இதற்கு என்ன காரணம்?.இந்த நூலின் தொகுப்பாசிரியரின் பதிப்புரை என்னும் பகுதியில் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அதற்கான விடையைச்சொல்லுகிறார்.


" தந்தை பெரியார் அவர்கள் மனித குலத்தையே ஒட்டு மொத்த பார்வையால் அளந்தவர்- அறிந்த பிறகு மருத்துவம் பார்ப்பது போல்,தீர்வுகளை எளிமையாகச்சொன்னவர்...மனித குலத்தில் சரி பகுதியாக உள்ள பெண்கள்,பயன்பாடற்ற 'பண்டங்களைப்" போல்- மனித ஜீவன்களாகவே மதிக்கப்படாமலும்,சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படாவிட்டால் எவ்வளவு கேடு சமூகத்திற்கும்-ஏன் மனித குலத்திற்குமே பயனற்றுப்போகிறதே என்று பெரிதும் கவலைப்பட்டார்.

கல்வியை உலகத்தவர் -அண்மைக்காலமாக "மனித வள மேம்பாட்டுத்துறை "என்று அழைக்கின்றனர்.மக்கள் அனைவரும் -சரி பகுதியான பெண்கள் உட்பட மனித வளம் ஆகவேண்டுமென்றும்,அவர்கள் முழு விடுதலை பெற்றும்,மானமும் அறிவும் பெற்றவர்களாக,ஆண்களைப் போலவே சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்றால்தானே முடியும் என்று கேட்டார் தந்தை பெரியார்.வெறும் எழுத்து பேச்சுகளுடன் நின்று விடாமல் அதற்காகப்போராடி பல களங்களிலும் வெற்றி பெற்று பெண்களை மேலே உயர்த்தியவர்.அதனையே தனது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகக் கொண்டு ,இறுதிவரை தனது இலட்சியப்பயணத்தை வீறு கொண்டு தொடர்ந்தார்;வெற்றியும் பெற்றார் " என்று குறிப்பிட்டு, " வெளி நாட்டு பெண் உரிமைப் போருக்கும் ,நம் நாட்டுப்பெண் விடுதலைப் போருக்கும் ஓர் முக்கிய அடிப்படை வேறுபாடு உண்டு " என்பதனை சுட்டிக்காட்டி வர்ணாசிரம அடிப்படையில் சாதியின் அடித்தட்டில் பெண்கள் எப்படி நிறுத்தப்பட்டனர் என்பதனை அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்..


பரம்பரைப் போர் இன்றும் தொடர்கிறது.ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான பரம்பரைப் போரில் 'பெண் ' குறித்த பார்வை மிக முக்கியமானது. ஆரியம் அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் 'அடுப்பங்கரைக்கும் படுக்கையறைக்கு மட்டுமே "என்று கருதுகிறது. அதனை மனு(அ)தர்மம் போன்ற நூல்களில் எழுதிவைத்திருக்கிறது..எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஏன் பார்ப்பனப்பெண்ணாக இருந்தாலும் அவரை சூத்திர ஜாதியாகத்தான் ஆரியம் கருதுகிறது.கோட்பாடுகளை வகுத்து வைத்திருக்கிறது.இந்த ஆரியத்திற்கு எதிரான கருத்துப்போரை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இன்றும் அந்தப்போர் தொடர்கிறது.அந்தக் கருத்துப்போரின் இன்றைய தளபதியாம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்தப் 'பெண் விடுதலை " என்னும்  தொகுப்பினை ஆக்கி நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். கருத்துப்போரில் பங்கு பெறும் நம்மைப் போன்றவர்களுக்கு ,ஒரு மிகப்பெரிய கேடயமாக  இந்தப் 'பெண் விடுதலை " என்னும் நூல் எனக்குத் தென்படுகிறது.


மொத்தம் 336 தலைப்புகளையும்,பெரியார் பேருரையாளர் அய்யா பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் எழுதிய 'பெரியாரும் பெண்ணினமும் 'என்னும் ஆய்வுக்கட்டுரையை பின் இணைப்பாகவும் கொண்டு மொத்தம் 752 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் இது. பெரிய நூல் என்பது உருவத்தால் மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள உள்ளடக்கத்தாலும் மிகப்பெரிய நூலே இது.


சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடும் நமக்கு நமது பெண்களின் சென்ற நூற்றாண்டு வாழ்வு தெரியவேண்டும். பத்து வயதுக்கு உட்பட்ட பெண் விதவைகளின் கணக்கினைப் படிக்கும்போது கண்ணீர் வருகிறது. ஆரியத்தின் அட்டூழியத்தால் தங்கள் வாழ்வை,இருந்தும் இறந்துபோனது போன்ற வாழ்க்கை வாழ்ந்த விதவைகளின் வரலாற்றை இந்த நூல் சொல்கிறது.'துன்பத்தில் துயருறும் பெண்களே வீட்டை விட்டு வெளியேறுங்கள் ' என்று தந்தை பெரியார் 1929களில் சொன்ன செய்தி இந்த நூலில் உள்ளது.கர்ப்பத்தடை ஏன் வேண்டும் என்று தந்தை பெரியார் பேசியதையும்,"அடிமைத் திருமணம் ஆனந்தம் தருமா?" என்று தந்தை பெரியார் கேட்டதையும் இந்த நூல் விவரிக்கிறது.'சொந்தக் காலில் நில்லுங்கள் ' என்று பெண்களுக்கு அய்யா அறிவுறுத்தியதை,'பெண்ணடிமை நீக்குவதே நமது குறி' என்று பெண்ணடிமை ஒழிப்பையே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட தந்தை பெரியாரின் அன்றைய பேச்சுகள் அத்தனையையும் படிக்கும்போது பெண்கள் தினத்தின் பெருமையும்,அதன் முக்கியத்துவமும்,அதில் நமது கடமையும் தெளிவாகத் தெரிகிறது.


தந்தை பெரியாரின் உழைப்பால், திராவிட இயக்கங்களின் ஆட்சியால் தமிழகத்தில் பெண்களுக்கான சொத்துரிமை உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளன.விதவை மறுமணம்,விவாகரத்து,விவாகரத்துக்குப்பின் மறுமணம் போன்றவை மிக இயல்பானவைகளாக  மாறியிருக்கின்றன, பெண் கல்வி,பெண்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்கிறது.'பெண் ஏன் அடிமையானாள் " என்னும் தந்தை பெரியாரின் புத்தகம் பல இலட்சம் விற்பனை ஆகியுள்ளது.பல இலட்சம் பேர் அந்த நூலைப் படித்துள்ளனர். இன்றைய நவீன கணினி,இணையை வசதிகளைப் பயன்படுத்தி "பெண் ஏன் அடிமையானாள்" என்னும் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் இந்த நூல் வெளியாகி விற்பனையிலும் விளக்கத்திலும் சாதனை படைத்துக்கொண்டுள்ளது. அந்த நூல் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் மேல் பாகம் என்றால் ,இந்தப் பெண் விடுதலை என்னும் நூல் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் அடிப்பாகம் எனலாம்.பெண் விடுதலை ஏன் வேண்டும், எப்படி நிகழ வேண்டும், எதுவெல்லாம் பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது? என்று வெகு விளக்கமாக விவரிக்கும் நூலாக இந்தப் பெண் விடுதலை என்னும் நூல் இருக்கிறது.


பெண் விடுதலை என்று பேசும் பெண்கள், முற்போக்கு இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்று தங்களைச்சொல்லிக் கொள்பவர்கள் கட்டாயம் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும்..நமது இயக்கத் தோழர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் இந்தப் 'பெண் விடுதலை ' என்னும் தொகுப்பு நூலை வாங்கி வைத்துக்கொண்டு, ஒரே நாளில் படிக்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பாகப் படித்தால் மிகப்பெரிய பயனைத்தரும்.இன்றைக்குக் கூட அய்யா சொல்லும் சில செய்திகள் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது.இதனை அய்யா 70,80 ஆண்டுகளுக்கு முன்னால் கூறியிருக்கிறார்.மக்களிடத்திலே பேசியிருக்கிறார்.பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் பெண்களிடம் இருக்கும் மனப்பான்மையை உடைத்து நொறுக்கும் வல்லமை கொண்டதாக இந்தப் "பெண் விடுதலை " என்னும் தொகுப்பு நூல் இருக்கிறது. சர்வதேசப்பெண்கள்  தினத்தில் ஈரோட்டுக் கண்ணாடியின் துணையோடு  'பெண் விடுதலை'யைப் புரிந்து கொள்வது எளிது. புரிந்து கொள்வோம். பகிர்ந்து கொள்வோம். அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துகள். 


நன்றி : உண்மை இதழ் மார்ச்(1-15,2021)