Wednesday, 7 October 2015

அண்மையில் படித்த புத்தகம் : மாற்றத்துக்கான பெண்கள் வாங்காரி மாத்தாய்

அண்மையில் படித்த புத்தகம் : மாற்றத்துக்கான பெண்கள் வாங்காரி மாத்தாய்
வெளியீடு                                        : பூவுலகின் நண்பர்கள், சென்னை 600 026.
இரண்டாம் பதிப்பு                        : மார்ச் 2015, மொத்த பக்கங்கள் 63, விலை ரூ 50.                                    கையடக்கமுள்ள புத்தகம்தான் என்றாலும், விரிந்து எழும் ஆலமரம் ஒரு விதைக்குள் இருப்பதுபோல, மரம் வளர்ப்பதற்கான ஆக்க விதையை மனதில் பசுமரத்தாணியாய் பதியவைப்பதாக இந்தப்புத்தகம் உள்ளது எனலாம். நோபல் பரிசு பெற்ற கென்யா நாட்டைச்சார்ந்த 'வாங்காரி மாத்தாய் ' பற்றி தமிழில் ஆதி வள்ளியப்பன்(3 கட்டுரைகள்), அறச்சலூர் செல்வம், இரா.செந்தில்(நோபல் பரிசு வழங்கியவர்கள் உரை),கவிதா முரளிதரன்(நோபல் பரிசு உரை),சிவஞானம் ஆகியோரின் கட்டுரைகளின் தொகுப்பு. அருமையான நூலாக உள்ளது.

வாங்காரி மாத்தாய் யார் என்பதற்கு " சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் புதைந்திருக்கும் அரசியல், ஜன நாயக உரிமைகள், பெண் உரிமைகள், பெண் கல்வி என அனைத்து தொடர்புகளையும் புரிந்துகொண்ட பெண்மணி" (பக்கம்  22) என்று சொல்வதோடு தந்தை பெரியாரோடு ஒப்பிட்டு " பெரியார் தீண்டாமை ஒழிப்பு, கலப்பு மணம், பெண்கள் கல்வி, பெண்ணுரிமை, தாய்மொழிக்கல்வி,தமிழ் எழுத்துச்சீர்திருத்தம், தமிழர் நலன் எனப்பல தளங்களில் வேலை செய்தாலும் மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு மட்டுமே பரவலாகத் தெரிந்ததோ, அது போல வங்காரி மாத்தாய்க்கும் நடந்தது. " எனக் கூறும் செய்தி எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது.

மணவாழ்க்கை முறிந்த போது வாங்காரி மாத்தாயின் மன நிலை " நான் என் மணவாழ்வு உடைந்து போவதை விரும்பவில்லை. நிலை குலைந்தேன். என் குழந்தைகளைத் தனியாக வளர்க்க விரும்பவில்லை. சம்பவங்கள் எதிர்மறையாகி நிற்கும்போது , நீ மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழ்க்கை முழுவதும் புலம்பிக்கொண்டிருக்கக்கூடாது. ' எழு, நட, தொடர்ந்து நட, எதிர்வரும் பாதை மோசமானதாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் நட ' என்ற பாடத்தை என் மணவாழ்வின் முறிவு எனக்கு வழங்கியது " என்பதாக இருந்தது என்ற விவரிப்பு  (பக்கம் 25) அருமை.

இந்த நூல் சுற்றுச்சூழலுக்கும் அமைதிக்குமான உறவை விவரிக்கிறது. வளங்களை சரிசமமாக பங்கிட்டுக்கொள்வதற்கும் அமைதிக்குமான உறவினைச்சுட்டுகிறது. பெரு நிறுவனங்களின் கொள்ளை அடிக்கும் போக்கால் நிலை குலையும் ஏழைகளின் வாழ்வினைப் பற்றிய துயரமே மாத்தாயின் தொடர் செயல்பாட்டிற்கான அடிப்படை என்பதனை கட்டுரைகள் விவரிக்கின்றன.


நோபல் பரிசு வாங்கிக்கொண்டு வங்காரி மாத்தாய் ஆற்றிய உரை மிகத் தெளிவாக அவரின் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிறது. யார் யாரெக்கெல்லாம் இந்த பரிசால் பெருமை ,அங்கீகாரம் என்பதனைக் கூறுகின்றார். "நோபல் விருது பெறும் முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்கிற அடிப்படையில் கென்ய மக்களின், ஆப்ரிக்க மக்களின் சார்பிலும் உலகத்தின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களும் பெண் குழந்தைகளும் இப்போது அதிகம் என் கவனத்தில் இருக்கிறார்கள். தங்கள் குரல்களை உயர்த்தவும் தலைமைத்துவத்தில் மேலும் அதிக இடத்தை  கோரவும் இது அவர்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். இளைஞர்களும் முதியவர்களுமான எமது ஆண்களுக்கும் இந்த அங்கீகாரம் பெருமையைத் தரும். ஒரு தாயாக, இந்த விருது இளைஞர்களுக்கு தரக்கூடிய உந்துதலை நான் போற்றுகிறேன். தங்களது கனவுகளை துரத்துவதற்கு இளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....

1977ல் நான் பசுமை வெளி இயக்கத்தை (Green Belt Movement) தொடங்கியபோது, கிராமப்புறப் பெண்களின் தேவைகளாக இருந்த விறகுகள், சுத்தமான குடிநீர், சரிவிகித உணவு, உறைவிடம், வருமானம் ஆகியவற்றின் பற்றாக்குறைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.....

ஆப்ரிக்கா எங்கிலும் பெண்களே குடும்பத்துக்கு முக்கியமான பொறுப்பாளர்களாக இருந்தார்கள். நிலத்தை உழுவது, குடும்பத்துக்கு உணவு உற்பத்தி செய்வது என்று முக்கியமான பங்கு வகித்தார்கள். அதன் விளைவாக,  குடும்பம் தழைக்க உதவும் இயற்கை ஆதாரங்கள் அழிந்து போகுமளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் போது பெண்கள்தான் அதை முதலில் உணர்கிறார்கள்.

எங்களுடன் இணைந்து பணிபுரிந்த பெண்கள், முன்பு போல அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்றனர். இதற்கு காரணம், அவர்களது சுற்றுச்சூழல் தொடந்து மோசமாக பாதிக்கப்படுவதுடன் உணவுப்பயிர்களுக்கு மாற்றாக வணிகரீதியிலான விவசாயத்தின் அறிமுகமும்தான். சிறு விவசாயிகளின் விளைபொருட்களின் வணிகத்தையும், ஏற்றுமதியையும் சர்வதேச வணிக நிறுவனங்களே தீர்மானிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான தேவையான வருமானம் நிச்சயமில்லை. நமது சுற்றுச்சூழல் அழியும்போது, அது சுரண்டப்படும்போது அது சரிவர கையாளப்படாத போது நமது வாழ்க்கைத்தரத்தை, நமது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை சேதப்படுத்துகிறோம்....." மிகத் தீவிரமான சிந்தனையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பிரகடனமாக அவரின் நோபல் பரிசு உரை இருக்கிறது.

"ஒரு குழி தோண்டி, அதில் மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டால், நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றே பொருள். நீங்கள் வாய்ச்சொல் வீரர் தான். 'நீங்கள் உங்கள் குரலை உரக்க ஒலிக்கா விட்டால் உங்களது சுற்றுச்சூழல் ஆர்வத்தால் எந்தப்பயனும் கிடையாது. அது வெறும் சந்தர்ப்பவாதமாகவோ ஒப்புக்கு ஒட்டிக்கொண்டதாகவோ தான் இருக்கும்" வாங்காரி  மாத்தாய் என பக்கம் 63-ல் குறிப்பிட்டுள்ள வாசகம் எத்தனை மரம் வளர்த்தோம் இந்த நாள் வரை என்னும் சிந்தனையைத் தூண்டுகிறது.

வாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது?' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, " உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்", என்றார். என்பதும் ஈர்ப்பாக இருக்கும் வாக்கியம். ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு தீவிரமாக இயங்குபவர்களை நிறுத்தி வைக்கும் ஆற்றல் எதற்கும் இல்லை என்பதுதான் பல சாதனையாளர்களின் வரலாறு. படிக்க வேண்டிய புத்தகம் , பரிசளிக்கத்தக்க புத்தகம். 

Thursday, 1 October 2015

வலைப்பூ உலகத்திற்குள் வாருங்கள் ! .....வானகத்தில்
மழை நேரத்தில்
வில்லின்
வண்ணங்கள்
விரிந்து எழுவது போல்
எண்ணச்சிறகுகளை
இணையத் தமிழில்
வலைப்பூக்களில் அச்சிட்டு
எவர் படிப்பார் ?
எந் நாட்டில் படிப்பார் ?
படித்தபின்பு
பாராட்டா
இடித்துரைப்பா
எனும்
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
எழுதுகின்றார் உலகமெங்கும்
தமிழர்களில் ஒரு சிலர் ....

செத்து விடும் என்பான் தமிழை
சில பேர் ...
பட்டு விடும் என்பான் தமிழை
சில  பேர் ....
சாகா நிலை பெற்ற
நடப்பு உலக மொழி
என் மொழி தமிழ் என்பதால்தான்
இக்கட்டில் வாழும் இடத்திலும்
இணையத்திலும் எழுதி எழுதிக்
குவிக்கின்றார் எம் தமிழர் ....

அடிமை விலங்கை உடைக்கும்
ஆயுதங்கள் வலைப்பூக்கள்
எமக்கு எனப் பெண்கள் சிலர்
வரையத் தொடங்கியபின்புதான்
கைவிலங்கை உடைக்க
இப்படியும் ஓர் ஆயுதமா ?
என உணரத் தொடங்குகிறது உலகம் !

வலைப்பூ எழுத்தாளர்கள்
வங்கதேசத்தில்
இன்னுயிரை இழந்திருக்கின்றார்கள்
இன்னும் பல உயிரை
பலியிடவேண்டும் எனப்
பழமைவாதிகள் துடிக்கிறார்கள்..
விழும் ஒவ்வொரு தலைக்கும்
ஈடாய் ஓராயிரம்
தலை முளைக்கும்
பழமையின் பத்தாம்பசலித்தனங்களை
உடைத்து நொறுக்கும்

விரிந்து கிடக்கிறது பிரபஞ்சம் !
பரந்து கிடக்கிறது
வீட்டில் இடத்தை
அடைக்காத
இணைய தள வலைப்பூக்கள் !
வாருங்கள் இளைஞர்களே!
வாருங்கள் மாணவர்களே !
உங்களை உங்களாகவே
உலகம் உணர்ந்து கொள்ள
அறிவியல் தந்த
அரிய வாய்ப்பு! வாருங்கள்!
வலைப்பூ உலகத்திற்குள்
வாருங்கள் !


கொட்டுகின்ற வார்த்தைகள்போல்
தட்டுகின்ற வார்த்தைகளால்
வலைப்பூவை அலங்கரித்து
வந்தவர்க்கு
கருத்து தந்தவர்க்கு
நன்றி கூறி
எழுதி   எழுதித்   தினமும்
சேர்ந்தாரை எல்லாம்
ஒன்றிணைத்து
வலைப்பதிவர் திருவிழாவென
பெயரிட்டு
முத்து நிலவு
ஒருங்கிணைக்க
புதுக்கோட்டையில்
இணையப் படை அமைக்கும்
 தோழர்களே  ! தோழியர்களே  !
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

                                வா. நேரு , 01.10.2015