Tuesday, 12 December 2017

ஆறறிவு உடையவர்கள்தானா நாம் ?......பிடிங்குப் போடப்பட்ட
வேரை விடுத்து 
மரத்தின் கிளைகள் மட்டும் 
அங்குமிங்கும் 
அலைவது போன்றொரு
உணர்வு.........

ஒளியும் உணவும்
அளித்து 
வளர்த்தெடுத்த
வேரை 
மரத்தின் கிளைகளே
தங்களுக்குள்
சண்டையிட்டு
பிடிங்கிப் போட்ட
கொடுமை கண்டு மனதில்  
தோன்றும்  அயர்ச்சி....

வேரின் நினைவாய்
திதி என்றும் 
திவசம் என்றும்
அலையும் கிளைகளைப்
பார்க்கையில்
இயல்பாகத்தான்
செத்தனவா 
வேர்கள் எனும் 
கேள்விகளால் 
மண்டைக்குள் எழும்
விநோத ஒலிகள் ......

ஒரேயொரு 
ஊரிலே மட்டும் அல்ல
பல ஊர்களில் 
ஒரு மரத்தின் கிளைகள்அல்ல
இரு மரத்தின் கிளைகள் அல்ல
பல மரத்தின் கிளைகள்
வேர்களை பிடிங்கிப்போட்டு 
அங்குமிங்கும் 
அலைவதைப் பார்க்கையில்
ஆறறிவு உடையவர்கள்தானா
நாம்
எனும் கேள்வி
எழுவதைத் தவிர்க்க இயலா
உள்ளுணர்வு......

                                              வா.நேரு, 12.12.2017

அன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு ....

அன்பெனும் பெயர் கொண்ட மகனுக்கு

21 வயது முடிந்தது
மகனே
முழுமனிதனாகிறாய்
இன்றுமுதல்

எது குறித்தும்
எவர் குறித்தும்
கவலைப்படாமல்
நீயாக முடிவெடுக்கலாம்
முன் செல்லலாம்
முழு மனிதனாகிறாய்
இன்று முதல்

அரிதாக இருக்கும்
இளைஞர்களில்
ஒருவனாயிருக்கிறாய்
எந்த நிலையிலும்
நேர்மையாகவே இருக்க
விரும்புகிறாய்....
உண்மையிலேயே
பெருமையாக இருக்கிறது
உனை பெற்றவனாக இருப்பது...

இப்படியே தொடர்
வாழ்வில் சில இடர்பாடுகள்
வந்தாலும்
நேர்மையாளனாகவே
தொடர்ந்து செல்......

விரிந்த பார்வையோடு
நட்பு கொள்...
நட்புகளிடம் இருக்கும்
குறைகளை
அல்ட்சியப்படுத்து...
நிறைகளை அவர்கள்
இன்னும் நிறைவாக்க
வழிகாட்டு.......
நட்புதான் வாழ்க்கை
முழுக்க வரும்....
நல்லது கெட்டதுகளில்
முழுக்க உடன் இருக்கும்..

உறவுகள் இல்லையேல்
நாமில்லை...
உறவுகள் அப்படியும்
இப்படியுமாகத்தான்
இருக்கும்
மரியாதை கொடு....
மனதில் இருப்பதை
முழுவதையும்
உறவுகளிடம் கொட்டாதே.....
அன்பைக் கொட்டு.....

உனது மனதுக்குள்
நீ எழுதிவைத்த
உனது குறிக்கோள்
நிறைவேறும்
அதனை நோக்கி உழை

நிறைய வாசி.....
படைப்பாளியாய்
எந்த நாளும் இரு....
எழுது.....படி.....
எழுது.....படி.....


முன் செல்லும் ஏராகத்தான்
முடிந்தவரை உனக்கு
நான் சென்றிருக்கிறேன்
இனியும் செல்வேன்....
உனது உடன் பிறந்தவளை
மதிப்பதுபோலவே
உன்னுடன் பழகும்
அத்தனை பெண்களையும் மதி....
அம்மாவும் அப்பாவும்
எதிர்பார்ப்பது
உன் பெயரில் இருப்பது
தவிர வேறு ஏதுமில்லை..

                           அன்புடன் அப்பா
                                வா.நேரு.....
                                                       03.06.2017
                               

Saturday, 9 December 2017

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா.......மு.சங்கையா

அண்மையில் படித்த புத்தகம் : பன்னாட்டுச்சந்தையில் பாரத மாதா
ஆசிரியர்                    : மு.சங்கையா
வெளியீடு                   : வாசிப்போர் களம், மதுரை ,பெறுவதற்கு : 0452-2643003, 9486100 608
முதல்பதிப்பு                 : அக்டோபர் 2017
விலை                      : ரூ 225 / மொத்த பக்கங்கள் 238

                         இந்தப் புத்தகம் அரசியல் அறிவைப் புகட்டும் புத்தகம். நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் குழம்பிப்போய் , ஏன் இப்படி நிகழ்கிறது எனப்புரியாமல் ,பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து அடிவாங்கும் பாமரனுக்கு ,ஏன் இப்படி நிகழ்கிறது,இதற்கு யார் காரணம் என்பதனை மிகத்தெளிவாக பாடம் போல நடத்துகின்ற, வாசிக்க வாசிக்க அறிய வைக்கும் புத்தகம்.

                           கந்து வட்டிக்காரன் அலுவலகம் முழுக்க கடவுள்கள் படம் பல இருக்கும். கந்துவட்டிக்காரனின் முகமும் மதக்குறியீடுகளால் நிரம்பி வழியும் . பேச்சில் முழுக்க கருணை அப்படியே பொங்கும். ஆனால் அவனது செயல்கள் வட்டிக்கு கடன் வாங்கியவனை பரம்பரை பரம்பரையாக எழ முடியாமல் அடி மேல் அடி கொடுக்கும். இப்படித்தான் இன்றைக்கு நமது நாட்டுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் என்பதனை பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்ற புத்தகம். 
அண்மையில் படித்த புத்தகம் : 

                         உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம்,உலக  வர்த்தக நிறுவனம் இப்படியெல்லாம் சொல்லப்படும் நிறுவனங்களின் வரலாறு என்ன ? எதற்காக இவைகளெல்லாம் தோற்றுவிக்கப்பட்டன? எப்படி இவை வளர்ந்தன ? இவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடான அமெரிக்கா எப்படி எப்படி எல்லாம் இந்த நிறுவனங்களை வழி நடத்துகிறது ? போன்ற செய்திகள் அளப்பரிய தகவல் சேகரிப்புகளோடு, புள்ளி விவரங்களோடு தரப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு, உறுமீன் வருமளவு காத்து நின்ற கொக்காக அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் எந்தப்பக்கமும் சேராமல் முதலில் நின்றது, இரண்டு பக்கமும் ஆயுதங்களை விற்பனை செய்தது பின்பு இணைந்து ஜப்பான் நகரங்களின் மீது  அணுகுண்டு வீசி அழித்தது பின்பு உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களை அமைத்தது என வரலாற்றுப் பாடத்தோடு கூடிய பொருளாதாரப்பாடம் எடுத்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர்/ 1970--களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், எண்ணெய் நாடுகளுகளுக்கு கிடைத்த பொருளாதார வளர்ச்சி அதன் விளைவுகள், WTO  என்னும் உலக வர்த்தக நிறுவனத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி என விரிவாகவே பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். 

                        உலக வங்கி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதையும்,பின்னர் நரசிம்மராவ், சந்திரசேகர் காலத்தில் இந்தியாவிற்குள் வந்தமர்ந்து சம்மணமிட்டு கொண்டு என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதையும், டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் இன்றைய மோடியின் ஆட்சியில் எப்படியெல்லாம் கந்துவட்டிக்காரன் போல இந்தியாவிற்கு கடனைக்கொடுத்து ,அவர்கள் சொல்லும் விதத்தில் எல்லாம் இந்திய ஆட்சியாளர்கள் எப்படி சட்டமியற்றுகின்றார்கள் என்பதையும் விரிவாகப்பேசும் புத்தகம் இந்தப்புத்தகம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பதற்கு எதற்காக என்பது மட்டுமல்ல, யாருக்காக என்பதையும் படிப்பவர்கள் எளிதாகப் புரிந்த கொள்ள இயலும் இந்தப்புத்தகத்தின் வாயிலாக.....

                         பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இந்த நூலின் ஆசிரியர் ,பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுகின்றன என்பதையும், தான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் கொண்டுவருவதற்காக அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையெல்லாம் எடுத்தது என்பதையும், எத்தனையோ இன்னல்கள், நய வஞ்சகம் அத்தனையும் தாண்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிலைத்து நின்று வருவதையும், அதன் லாப நட்ட கணக்குகளையும் ,எம்.டி.என்.எல், பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் பற்றிய ஏகப்பட்ட புள்ளிவிவரங்களோடும் ,ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல, எந்தவொரு தொழிற்சங்கவாதியும் மிக ஆழமாகவும், பொறுமையாகவும் படித்து உள்வாங்கி  தன் ஊழியர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பயன்படும் புத்தகம் இது.

                          வளர்ச்சி, வளர்ச்சி என்னும் வார்த்தை நம்மைச்சுற்றி ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை. 'வளர்ச்சியா? வீக்கமா ? எனத்தலைப்பிட்டு' வாராக்கடன்கள் ' எனும் பெயரில் நடக்கும் மோசடிகளை,மல்லையா போன்ற பணக்காரர்களுக்கு வங்கிகள் அள்ளிக்கொடுத்த கடன்களை பின்னர் அவையெல்லாம் வாராக்கடன் என்னும் பெயரில் தள்ளுபடி செய்த வரலாறுகளை எல்லாம் வங்கிப்பெயர்களை குறிப்பிட்டு, ஒவ்வொரு பணக்காரரும் வாங்கிய கடனைக் குறிப்பிட்டு பின்பு தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகளை எல்லாம் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார். படித்தவுடனேயே நமக்கு எல்லாம் அறச்சீற்றம் வரவேண்டும். அவ்வளவு விவரங்களும் விளக்கங்களும் இந்தப்பகுதியில் உள்ளன.. சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு, வால்மார்ட் -ஒரு பொருளாதார புற்று நோய் போன்ற தலைப்புகள் சொல்லும் செய்திகள் படிப்பவர்களுக்கு பளிச்சென புரிகின்றன. பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. வால்ட்மார்ட் என்பதற்கு ஒரு வரையறை தருகின்றார் ஆசிரியர் . "வால்ட்மார்ட் என்றால் விலைக் குறைப்புப்போட்டி, மலிவு விலையில் கொடுத்தல், தொழிலாளர் விரோதப்போக்கு,இவற்றோடு ஊழலும் சேர்ந்து செய்த கலவைதான் வால்ட்மார்ட் " என்பது அந்த வரையறை. இதற்கான ஆதாரங்களை, எத்தனை கம்பெனிகளை தொலையக் காரணமாக அமைந்தது வால்ட்மார்ட் என்பதையும் எப்படி எப்படி எல்லாம் அவர்கள் மற்றவர்களுக்கு இன்னல் செய்து வளர்ந்தார்கள் என்பதையும் பெயர்களோடு நூலின் ஆசிரியர் பகிர்ந்துள்ளார்.தன்னொடு வேலை பார்த்த பாலு என்னும் தோழர் முதன் முதலில் வணிகர்கள் மத்தியில் இந்த வால்ட்மார்ட் பற்றிப்பேசச்சொன்னதும், அதற்காக தான் தயார் செய்ததும் பின்பு அந்த நிகழ்வில் கிடைத்த பாராட்டே இந்தப் புத்தகம் வருவதற்கு காரணம் என்றும் என்னுரையில் நூலின் ஆசிரியர் மு.சங்கையா குறிப்பிட்டுள்ளார்.

                         'தண்ணீர், தண்ணீர் ' எனத் தலைப்பிட்டு,தண்ணீர் எப்படித் தனியார் மயமாகியது என்பதையும், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்தது கூட எப்படி என்பதையும் குறிப்பிடும் நூலாசிரியர் பொலிவியா நாட்டில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த எழுச்சியை, போராட்டத்தை குறிப்பிடுகின்றார். ஆறுகள் விற்பனைக்கு என்னும் தலைப்பில் எப்படி ஆற்று நீர் பன்னாட்டு கம்பெனிகளால் உறிஞ்சப்படுகிறது என்பதையும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்றால் என்ன? நிலம் எப்படி வளைக்கப்படுகின்றது? எப்படி அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளால் நிலம் வாங்கப்படுகின்றது, வனவேட்டை என்னும் தலைப்பில் வனங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன, பழங்குடி மக்கள் எப்படி வனத்திலிருந்து விரட்டப்படுகின்றார்கள் என்பதையும் விரிவாகவே விளக்குகின்றார். ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக பல கிழக்கிந்திய கம்பெனிகள் எப்படி இந்தியாவின் வளத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள், சூறையாடுகின்றார்கள் என்பதையெல்லாம் விளக்குகின்றார். 

                       செல்லாக்காசு எனத் தலைப்பிட்டு, 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்டதன் நோக்கத்தை, சாதாரண மக்கள் பட்ட அவதியை எல்லாம் -நாம் எல்லாம் கண்ணில் கண்டவைதான். அவற்றை எல்லாம் எழுத்தாக ஆக்கி, ஆவணமாக நமது கையில் கொடுத்துள்ளார். இந்த தலைப்பிற்கு 'பித்தலாட்ட பெரும்புள்ளிகள் கட்டாத பணத்தையெல்லாம் வட்டியோடு வசூலிக்கப்பார்க்கிறது பஞ்சைப்பராரிகளிடம் 'எனும் கவிஞர் யுகபாரதியின் கவிதை மிக பொருத்தமாக உள்ளடக்கைத்தை உணர்த்துகிறது. 

                        முடிக்கும் முன் எனும் தலைப்பில் சுதேசி பேசிய விதேசிகள் எப்படி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் " நிலவுகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக சொல்லப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயக்கொள்கைகள் முற்றிலும் தோற்றுப்போய்விட்டது. அதன் எதிர் விளைவுகளாக வறுமை , வேலையின்மை அதிகரித்தது,விவசாயம் அழிந்தது, தண்ணீர் விலைப்பொருளானது,கிராமங்கள் இடம் பெயர்ந்தன....எல்லாச்செல்வங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு ,இந்தியாவைக் கழிவுகளைச்சுமக்கும் குப்பைத்தொட்டியாக மாற்றி விட்டது " என்று ஆசிரியர் குறிப்பிடுவது உண்மைதான். சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் அழுத்தப்படும் மக்கள் அதனைத் தீர்க்க வீதிக்கு வந்து போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனைத் தனது கருத்தாகக் கூறி இந்த நூலின் ஆசிரியர் நூலினை முடிக்கின்றார். 

                      எவ்வளவு அநீதிகள் நிகழ்ந்தாலும் உழைக்கும் மக்கள் ஒன்றிணையாமல் பார்த்துக்கொள்வதற்கு நமது நாட்டில் ஜாதிகள் இருக்கின்றன. மதங்கள் இருக்கின்றன. மாதம் ஒரு திருவிழா, மாதம் ஒரு உற்சவம் என்று உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுப்பதற்கு பார்ப்பனியம் நமது நாட்டில் இருக்கிறது.கார்ப்பரேட் சாமியார்கள் புதுப்புது வேசங்களோடு ,பிரச்சனைகளுக்கு தீர்வு இதுதான் என மக்களை மயக்கிக்கொண்டிருக்கின்றார்கள். எல்லாம் கோள்களின் செயல்கள் என சோதிடத்தைக் காரணம் காட்டிக்கொண்டிருக்கின்றன ஊடகங்களும் பத்திரிக்கைகளும். மூட நம்பிக்கை என்பது உழைக்கும் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது பார்ப்பனியத்தால். இந்த நம்பிக்கைகள் உடைவது என்பது எளிதாக உழைக்கும் மக்கள் ஒன்றுசேரவும், புதிய பாதை அமையவும் வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.மதமும் நம்பிக்கைகளும் எப்படி கார்பரேட் நிறுவனங்களால் வளர்க்கப்படுகின்றன,கார்ப்பரேட் சாமியார்கள் எப்படி, யார் யாருக்கெல்லாம் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள் என்னும் விவரங்களும் மக்களுக்குத் தெரியவேண்டும். அதனை ஒரு அத்தியாயமாக இந்தப் புத்தகத்தில் இணைக்கலாம்.   

                   புத்தகத்தின் கடைசிப்பகுதியில் உதவிய நூல்களின் பட்டியல் இருக்கிறது. இதழ்கள், வலைத்தளங்கள் எனப் பலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டைப்படம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் நுழைவு வாயிலில் உள்ள வெளியீட்டாளரின் உரை என்னும் பகுதியில் சு.கருப்பையா நூலைப் பற்றிய சுருக்கத்தை, நோக்கத்தை மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார்."உலக வங்கியிடம் கடன்பெற்று வீழ்ச்சியடைந்த மெக்சிகோ,பொலிவியா ,மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் கண்ணீர் கதைகளை இந்நூல் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளது" என விவரித்துள்ளார்.  பேரா.டாக்டர். இரா.முரளியின் அணிந்துரை வலியுறுத்த வேண்டியதை மிக அழுத்தமாக எள்ளல் நடையில் வலியுறுத்துகிறது.நூலின் ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்தும் உவமைகள், சொல்லாடல்கள் வாசிப்பவருக்கு மிக எளிதாகக் கருத்தை புரியவைக்கின்றன.உலகவங்கி ஏன் தொற்றுவிக்கப்பட்டது என்பதற்கு 'அமெரிக்காவுக்கு வலி தெரியாமல் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டையைப் போன்ற அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய தேவை எழுந்தது '-பக்கம் 4,'நிதியாதிக்க கும்பல்களின் காட்டிலோ சிரபுஞ்சியில் கொட்டுகிற மழையை விட அதிகமாகப் பண மழை கொட்டுகிறது' பக்கம்21, 'இந்தியா இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் வீழ்ச்சி ஒரு மின்னலைப் போல தாக்கிவிட்டு மறைந்து விடுவதில்லை " பக்கம் 41, "இந்திராகாந்தி ,நேருவால் மெத்தப் புகழப்பட்ட கலப்புப் பொருளாதார பதாகையையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார் ' பக்கம்50, 'திவாலாகிப்போன என்ரானுக்காக ரூ 5250 கோடியை, தூக்கிக்கொடுக்கவேண்டிய பரிதாபகரமான நிலைக்கு பா.ஜ.க.வின் 13 நாள் ஆட்சிதான் காரணமாக அமைந்தது ' பக்கம் 65, 'அரசுத்துறை நிறுவனங்களைப் பெருமாள் கோவில் புளியோதரையைப் போல எண்ணி அள்ளி அள்ளி தனியாரின் கைகளில் திணித்தது' பக்கம் 66. இப்படி புத்தகம் முழுக்க ஏராளமான எடுத்துக்காட்டுகள் அமைந்துள்ளன.

                  மதுரை வாசிப்போர் களத்தின் உறுப்பினர் இந்த நூலின் ஆசிரியர் தோழர் மு.சங்கையா அவர்கள். பணிக்காலம் முழுவதும் தொழிற்சங்கப்பணியில் தீவிரமாக ஈடுபட்ட தோழர். பணி ஓய்வுக்குப் பின்பு தனது இரண்டாவது புத்தகத்தை  நூலாசிரியர் மு.சங்கையா வெளியிட்டுள்ளார். தான் வாழும் வாழ்க்கையை மிகுந்த அர்த்தமுள்ளதாக ஆக்கும் வகையில் அவரின் படைப்பாற்றலை வகுத்துக்கொண்டுள்ளார். மிகுந்த அர்ப்பணிப்போடும், கடுமையான உழைப்பின் விளைவாக விளைந்த புள்ளிவிவரங்களோடும், தரவுகளோடும் ஆக்கியிருக்கும் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் உழைப்பும் , எளிய மக்களின் உயர்வுக்கான விருப்பமும் தெரிகிறது.வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூல்களைப் படைத்திட வேண்டும்.....  

                         

Tuesday, 5 December 2017

எளியவர்களையும் உயர்த்துவார்.....

எளியவர்களையும் உயர்த்துவார்.....

நமது பரம்பரை எதிரிகளைக் கருத்துக் களத்தில் சந்திக்க தயாரிக்கப்படும் ஈட்டிமுனைகள் புத்தகங்கள்.  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கைகளிலே நமது இன எதிரி, நம் இனத்திற்கு  எதிரான புத்தகத்தைக் கொடுத்தபோது அதனை நாகரிகம் கருதி பெற்றுக்கொண்டு கலைஞர் அவர்கள் நமது இன எதிரியிடம் திருப்பிக்கொடுத்த புத்தகம் 'கீதையின் மறுபக்கம் ';.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு கொடுக்கப்பட்ட புத்தகம். இன்றுவரை விற்பனையில் சக்கை போடும் புத்தகம். 

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரை அருகே இருக்கும் ஊர்களுக்கு வரும்போது அவரோடு பயணிக்கும் அனுபவம் மிகப்பெரிய வாய்ப்பு. பயணிக்கும் தோழர்களின் உடல் நிலையை, வீட்டில் உள்ளவர்களின் நலங்கலை விசாரிப்பார்கள். அரிய புத்தகங்கள் பற்றிச்சொல்வார்கள்.கழகப்பணியாற்றி மறைந்த கருப்பு மெழுகுவர்த்திகளைப் பற்றிச்சொல்வார்கள்.

 சில நேரங்களில் உடன் செல்லும் தோழர்கள் வாய்விட்டுச்சிர்க்கும் அளவில் நகைச்சுவையாய் சில கருத்துக்களைச்சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில், கழகப்பணியில், தியாகத்தில் பத்து சதவீதம் கூட இல்லாத தோழர்களிடம் கூட மிகத்தோழமையோடும் அன்போடும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடியவர்கள் அய்யா ஆசிரியர் அவர்கள் .தந்தை பெரியார் அவர்களுக்கு இனிப்பு,பழங்கள்  பிடிக்கும். இயக்கத்தைச்சார்ந்த தோழர்கள் யாரேனும் கொடுத்தால் அதனை அப்பொழுதே கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு , கொடுத்த தோழர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவாராம், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு புத்தகங்கள் பிடிக்கும். இயக்கத்தோழர்கள் புத்தகத்தை கொடுத்தால் பெற்றுக்கொள்வார்கள். மறுமுறை பார்க்கும்பொழுது அந்தப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தைக் கூறுவார்கள். மிக நல்ல புத்தகம் என்றால் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொடுத்தவரின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவார்கள்.

 புத்தகத்தின் மீதிருக்கும் அவரின் காதல் அற்புதமானது.நாம் தலைவர்களின் வரலாறுகளைப் படித்திருக்கின்றோம். தோழர் காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நூலகத்தின் மேல் கொண்டிருந்த காதலை. நூலப் படிப்பதற்காக காலை முதல் மாலை வரை நூலகத்தில் இருந்த வரலாறைப் படித்திருக்கின்றோம் அய்யா ஆசிரியர் அவர்கள் தான் பயணிக்கும் வாகனத்தையே நூலகமாக மாற்றிக்கொள்கிறார். தான் பயணிக்கும் வாகனத்தை  எழுதுவதற்கும் படிப்பதற்கும் எளிதான இடமாக ஆக்கிக்கொண்டு பயணித்துக்கொண்டே இருக்கின்றார். 

.போகக்கூடிய ஊர்களில், நாடுகளில் எல்லாம் பழைய புதிய புத்தகக் கடைக்குப் போகக்கூடியவர். செம்மாந்து நிற்கும் பெரியார் திடலின் பணிகளில் மிகப்பெரிய பணி நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகம். குளிரரூட்டப்பட்ட அறைகளும், பாடப்பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகும், பழைய குடியரசு இதழ்களும், விடுதலை ,உண்மை போன்ற இதழ்களும் பைண்டிங் செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும், இணையத்தில் அவை எல்லாம் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பேருழைப்பும் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் காரியங்கள்.

 ஆசிரியருக்கு புத்தகம் பிடிக்கும் என்பதனை அறிந்த கழகத்தோழர்கள் போகும் இடமெல்லாம் புத்தகம் கொடுப்பதை இப்போது வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். உலகமெல்லாம் தான் போய் வந்த இடங்களில் வாங்கிய புத்தகங்களை, தோழர்கள் கொடுத்த புத்தகங்களை எல்லாம் நமது பெரியார் திடலில் இயங்கும் நூலகத்திற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப்புத்தகங்கள் எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலரும், நூல் எழுத விரும்பும் பலரும் அடைக்கலம் புகும் இடமாக பெரியார் திடல் நூலகம் இருக்கிறது.இந்த நூலகத்தைப் பார்த்தாலே அய்யா ஆசிரியர் அவர்கள் நூல்களுக்கும், நூலகத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எளிதில் புரியும்.  

பெரியார் தொலைக்காட்சி(periyar.tv) வலைத்தளத்தில்  இருக்கிறது. இணையத்தின் மூலமாக எளிதாகப் பார்க்கமுடிகின்றது. தமிழர் தலைவர் அவர்களின் உரையை,கழக முன்னனித்தலைவர்களின் உரைகளையெல்லாம் உடனுக்குடனே கணினி மூலம் கேட்க முடிகின்றது. எங்களைப் போன்றவர்கள் காலையில் நடைப்பயிற்சி போகின்றபோதே பெரியார் தொலைக்காட்சி மூலமாக அய்யா ஆசிரியர் அவர்கள் அண்மையிலே பேசிய பேச்சினைக் கேட்கமுடிகின்றது.நடையும், குளிர்ந்த காற்றும் கொடுக்கின்ற இன்பத்தை விட அய்யா ஆசிரியர் அவர்களின் குரலை, கருத்தை பெரியார் தொலைக்காட்சி மூலமாக கேட்கும் இன்பம் பெரிது. மாட்டு வண்டியில் ஏறி  பயணம் செய்து , ஒலிபெருக்கி இல்லாத இடங்களில் அய்யா ஆசிரியர் பேசியது  அந்தக் காலம் 60,70 ஆண்டுகளுக்கு முன்னால்.அன்றைக்கு அவர் பேசியது ஒரு ஊரின் ,ஒரு பகுதியில் மட்டுமே கேட்டது.  இன்றைய காலகட்டத்தில் அய்யா ஆசிரியர் அவர்கள்  ஒரு இடத்தில் பேசும் பேச்சு பதிவு செய்யப்பட்டு இணையத்தின் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் கேட்கப்படுகிறது. இரண்டு நிலையிலும் தந்தை பெரியாரியலை, தமிழர்களுக்கான விடிவை பேசும் உணர்ச்சிமிக்க குரலாக அய்யா ஆசிரியர் அவர்களின் குரல் இருக்கிறது.அவரின் போர்ப்பரணி எப்போதும் போல் ஒலிக்கிறது. எழுத்தால், உரையால், இணையத்தால்,கல்வி நிறுவனங்களால், பெரியார் புரா போன்ற திட்டங்களால் பெரியார் பணி முடிக்கும் அய்யா ஆசிரியர் அவர்களின் பணி பெரும்பணி.எவரோடும், எதனோடும் ஒப்பிட்டுச்சொல்ல முடியாத அரும்பணி.    

கொள்கைகளின் உறுதியாக இருப்பவர்கள் என்றால் எளிய வாய்ப்பு பெற்ற தோழர்களைக் கூட உயர் பொறுப்பில் வைத்துப்பார்க்கும் அய்யா ஆசிரியரின் அணுகுமுறையால் பயன்பெற்றவர்கள் நாம். தலைமைக்கு கட்டுப்படு, தலைமை சொல்வதைக் கேள், தலைமை சொல்வதைச்செய் என்பதே வாழ் நாள் பெருமையாகப் பெற்றிருக்கும் தோழர்களின் கூட்டத்தில் நாமும் ஒருவர்.தந்தை பெரியாருக்குப்பின், அன்னை மணியம்மையாருக்குப்பின் நமக்கு கிடைத்திருக்கும் அருட்கொடை அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவர் சுட்டும் திசையில் நம் பயணத்தைத் தொடருவோம். இனப்பகையின்  கருத்துருவாக்கத்தை,கருத்தினை வேரறுப்போம். 

வா.நேரு,தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்....

நன்றி : விடுதலை 01.12.2017
(திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)

Sunday, 3 December 2017

மதிக்கும் மாண்பாளர்............

ஏனோ தானாவென்று
எதையும் அவர்
செய்ததில்லை...
எதைச்செய்தாலும்
முன்கூட்டியே திட்டமிடலின்றி
அவர் வந்ததில்லை.....


நோயின் தன்மையை
ஆய்ந்து அறிந்து
அதனை நீக்கும்
மருத்துவத்தில் வல்லாளர்....

மொய்க்கும் நோயாளிகளை
அவர்தம் நோய் தீர்க்கும்
அகச்சுரப்பியல் மருத்துவராய்
மணிக்கணக்கில் பார்த்தபோதும்
இலக்கியத்தெற்கென
மணிக்கணக்காய்
நேரமொதுக்காமல் விட்டதில்லை....

மருத்துவத்தில்
மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை
அவற்றின் முகத்திரைகளை
கிழித்தெறிவதில்
எந்த நாளும் சளைத்ததில்லை.....

திருக்குறளைப் பரப்புவதை
திராவிட இயக்கம்போல
வாழ்நாள் பணியாகச்
செய்தவர் அவர்.....
அழகுற ஆங்கிலத்தில்
திருக்குறளை மொழிபெயர்த்து
அதன் நுட்பங்களை
அந்நிய மொழியிலும்
சொன்னவர் அவர் !

பெரியார் இயக்கம்
செய்யும் பணிக்கெல்லாம்
பெறும் நன்கொடை
அளிக்கும் அருளாளர்....
பெரியாரின் தொண்டர்களை
மதிக்கும் மாண்பாளர்......

தேடித்தேடி
நூல்களை வாசிக்கும் பண்பாளர்....
ஆங்கிலத்தில் வாசித்த
பகுத்தறிவுப் புத்தகங்களை
அழகு தமிழில்
மொழி பெயர்த்த ஆற்றலாளர்......

வயது முதிர்ந்தோர்
வாடிடும் நிலை கருதி
முதியோர் காப்பகம் அமைத்த
முதியோர் காப்பாளர்.....

தனக்கென வாழ்வதே
வாழ்க்கை எனக்கருதாமல்
அடுத்தவர்களையும் நினைத்து
வாழ்ந்தவர் அய்யா
மருத்துவர் கு.கண்ணன் !
தரணியில் என்றும்
அவர் புகழ் ஓங்கும் !.......

                  வா. நேரு .......
(கடந்த 23.11.2017, மதுரையில் மறைந்த புகழ்பெற்ற அகச்சுரப்பியல்,நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், எழுத்தாளர், பேச்சாளர் அய்யா கு.கண்ணன் அவர்களின் நினைவாக )     


 

Saturday, 2 December 2017

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்......

                                                                  தமிழர் தலைவர் வாழியவே......
திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2.
இந்த 85 ஆண்டில், இவர்தம் பொதுவாழ்வின் அகவை 75. இந்த விகிதாசாரம் இவரேயன்றி, தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வாய்த்திராத ஒன்றே - தனித்தன்மையே!
பத்து வயதில் தந்தை பெரியாரைப் பார்த்த அந்தத் தருணம் முதல் அவர் வைத்த கண் - வரித்த கொள்கையில் எவ்விதப் பிசிறுக்கும் இடமேயில்லை - மேலும் மேலும் உறுதிப்பாடும், உத்வேகமும், உற்சாகமும் மேலிட்டே வந்திருக்கிறது.
வெறும் பேச்சாளராக, எழுத்தாளராக, நிர்வாகியாக மட்டும் அமைந்திடாமல், சிறுவயதில் அவர் மேற்கொண்ட களப்பணி இயக்கம் மற்றும் பொது வாழ்வில் உரமேற கால்கோலாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
அவருக்கு அமைந்த சூழல் மிகமிக அருமையானது. பள்ளிப் பருவத்தில் ஊன்றப்படும் விதை என்பது விருட்சமாக ஓங்கி வளரக்கூடியது என்பதற்கு அவரே உதாரணம்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதனை மிக அழகாக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘‘இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!
பாடிக் கைவீசிப் பலருடன் உலவி
வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை அவன் பாற்
காண்கிலேன் அன்றும் இன்றும்
உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!’’
- எத்தகைய சரியான படப்பிடிப்பு இது!


திராவிட மாணவர் கழகத்தில் ஏராளமானவர்கள் இருந்த னர் - பல்கலைக் கழகங்களில் பயிலவும் செய்தனர். அந்தப் பட்டியலில் இவருக்கு உள்ள தனிச் சிறப்பு கல்வியில் பட்டொளிவீசிப் பறந்ததாகும். இதில் இவருக்கு நிகர் இவரே!
பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக தங்கப் பதக்கத் துக்குரிய தங்கமாக ஒளிவீசினார் - மாணவராக இருந்தபோதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்ற வர். விடுமுறை நாள்களில் கடலூர் வீரமணியாகப் பட்டிதொட் டியெல்லாம் சுழன்று பிரச்சாரப் பேரிகை கொட்டியவர்.
தந்தை பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை பெற்றதிலும் முதல்வராக இருந்தவரும் இவரே! இதனைத் தந்தை பெரியார் அவர்கள் எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ததன்மூலம் நன்கு அறிய முடியும்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்திய பாங்கு, இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், பிரச்சார யுக்திகள், ஏடுகளை, இதழ்களை எழிலார்ந்த முறையில் நவீனத்துவத்துடன் மேம்படுத்திய நேர்த்தி, இயக்க நூல்களை எண்ணற்ற முறையில் வெளியிட்டு கடைகோடி மனிதனுக்கும் கழகக் கருத்துகள் போய்ச் சேருவதற்கான வழிமுறைகள் - வெளிநாடுகளிலும் இணைய தளத்தின்மூலம் முதன்முதலாகக் கொண்டு சென்ற சாதனை, பன்னாடுகளிலும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்ற வெற்றி என்பதெல்லாம் எமது ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்.
இடை இடையே அரசுகளின் இடையூறுகள், இயக்கத்தில் சிறுசிறு பிளவுகள், தூற்றல் படலங்கள், தமிழக அரசியலில் தலைதூக்கும் விபீடணர்களின் திசை திருப்பும் பிரச்சாரங்கள், பார்ப்பனர்களின் ஊடக விஷமங்கள், இருட்டடிப்புகள் இன்னோரன்ன இடையூறுகள், தடைகளையெல்லாம் தாண்டி இயக்கத்தை மட்டுமல்ல - இனத்தின் உரிமை மீட்பில் தளகர்த் தராக இருந்து வெற்றி அறுவடைகளைக் குவித்தது சாதாரண மானதல்ல.
சமூகநீதி என்னும் தாயின் செல்வமான திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலே இருந்தபோதே இட ஒதுக்கீட் டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து குழப்பத் தைத் திணிக்கவில்லையா? வேறு யார்? எம்.ஜி.ஆர்.தான்.
அதனைப் புறம்கண்டு, தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத எம்.ஜி.ஆருக்கே தண்ணீர் காட்டினாரே தமிழர் தலைவர்.
69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வில்லங்கம் வந்தபோது, பார்ப்பன முதலமைச்சரையே பயன்படுத்தி, அதனைக் கட்டிக்காக்க தனி சட்டத்தையே எழுதிக் கொடுத்து நிறைவேற்ற செய்தது சாதாரணமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால், 76 ஆம் சட்டத் திருத்தம் வந்தது தந்தை பெரியாரின் மாணாக்கர் ஆசிரியர் வீரமணி அவர்களால் அன்றோ!
மத்திய அரசில் இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டை மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வைத்ததன்மூலம் சாதித்துக் காட்டினாரே!
அதன் பலன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற் றில் பாலை வார்த்தாரே!
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் களத்தில் அனேகமாக வெற்றியின் முனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவை அரற்றும் இந்துத்துவா மதவாத அரசியலுக்கு - அதிகாரத்துக்கு முடிவு கட்டுவதிலும், அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் தளபதியாக, தலைவராக இன்றைய தினம் விளங்கிக் கொண்டிருப்பவர் மானமிகு வீரமணி அவர்களே!
85 வயதை எட்டும் ஆசிரியர் எண்ணற்ற ஆண்டுகள் மேலும் வாழ்ந்து தந்தை பெரியார் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி முகட்டில் பறந்திடப் பாடுபடுவாராக! அப்பணிக்கு அர்ப்பணிப்போடு துணை நிற்போமாக!
வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் சித்தாந்தம்!
நன்றி : விடுதலை தலையங்கள் 02.12.2017

Wednesday, 29 November 2017

உடலின் தசைகள் ரோடெங்கும் சிதறி......

உடலின் தசைகள் ரோடெங்கும் சிதறி......
            வா.நேரு


கண்ணிமைக்கும்
நேரத்தில்
கண்முன்னே
நிகழ்ந்தது அது !

உடலின் தசைகள்
ரோடெங்கும் சிதறி
உதிரம் அங்கே
ஆறாய் ஓடி
ரோட்டின் நடுவே
அந்த இளைஞன்

இறங்கியவர்கள்
சென்றவர்கள்
வந்தவர்கள் எல்லாம்
108-ல் தொடர்புகொண்டு
உடனே வரச்சொல்லி
இடத்தின் அடையாளம்
சொன்னார்கள்

இன்னும் சிறிது
நேரத்தில்
இவனுக்க்காக
எவரெல்லாம் வரக்கூடும்

பெற்று வளர்த்தவர்கள்
பெயர் சூட்டி
அழைத்தவர்கள்
கல்லூரிக்குப் போய்வர
எமகா வண்டியை
வாங்கிக் கொடுத்தவர்கள்
வரக்கூடும் அழுது
அரற்றியபடி

எவர் பெற்ற
பிள்ளையோ தெரியவில்லை!
ஏன் இப்படி
எனவும் புரியவில்லை
வலிய சென்று மோதி
இப்படி சிதைந்து
சின்னா பின்னமாகி
உயிருக்குத் துடிக்கிறாயே!
இளைஞனே! அவ்வளவு
அவசரமாய்
எங்கேடா போனாய் ?

மின்னல் வேகத்தில்
என்னை முந்தினாய்
புயலெனவே
வளைவில் சுழன்று
சுழன்று சென்றாய்!
சொல்ல நினைக்கும்முன்பே
சொல்ல முடியாதபடி
சென்றாயே !
என் செய்வேன்!
என் செய்வேன் 1

சிறிது நிதானித்து
ஓட்டிருந்தால்
நீடித்து
வாழ்ந்திருக்ககூடும்
சில ஆண்டுகளில்
செய்ய நினைத்தவற்றை
செய்திருக்கக்கூடும்

எவரெல்லாம்
எனக்காக அழுவார்களோ
அவர்களுக்கெல்லாம்
நான் என்ன செய்தேன்
என இறக்கும்போது
நினைக்கிறாயோ !
ஓட்டும்போது
நினைத்திருந்தால்
இக்கோரம் இல்லையடா!

தலையிலே கவசமில்லை!
தலை தெறிக்க
ஓட்டுகிறோமே எனும்
நினைப்பும்
தலையில் இல்லை !
மரமண்டை போல்
வேகம் காட்டி
இப்படி மண்டை
உடைந்து கிடக்கிறாயே !
என் செய்வேன்!
என் செய்வேன்!

இளைய சமூகமே!
வேகத்தை வேலையில்
காட்டுங்கள் !
வாகனங்களில்
காட்டாதீர்!
வளர்த்த பெற்றோரை
வதைக்காதீர்
அணு அணுவாய் !

             24.11.2011 நவம்பர் 24-ல்'எழுத்து ' இணையதளத்தில் எழுதி வெளியான கவிதை. எனது பேஸ்புக் பக்கத்தில் இந்தக் கவிதையை பேஸ்புக் நினைவுபடுத்தியது. பேஸ்புக்கில் பகிர்ந்ததைப் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
அன்புடன்
வா.நேரு, 30.11.2017

Tuesday, 28 November 2017

ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை - திருக்குறளின் பாயிரம் ......

ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை - திருக்குறளின் பாயிரம்                                                                                                              (முனைவர். வா.நேரு)

திருக்குறள் தமிழர்களின் வாழ்வியல் இலக்கியம். 'மனத்துக்கண் மாசிலன் ஆகி' வாழும் வழிமுறை சொல்லும் மக்கள் இலக்கியம். 'கற்க...நிற்க அதற்குத் தக ' எனக் கற்பதற்கும் வாழ்வதற்குமான 'தொட்டனைத்தூறும் மணற்கேணி'யைச்சுட்டிக் காட்டிய இலக்கியம். 20 நூற்றாண்டுகள் கடந்த பின்பும் கற்பவரை எல்லாம் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் அறிவுக் காந்த இலக்கியம். திருக்குறளை கற்றறிந்தோர் 'தாமின்புறுவது உலகின் புறக்கண்டு ' மனம்மகிழ்பவராக, தாம் இன்புற்ற குறளின் கருத்தை மற்றவர்களுக்கும் எழுதவேண்டும், சொல்லவேண்டும் எனும் வேட்கை கொள்கின்றனர். அறிஞர் ஜி.யூ.போப்,செக்கோஸ்லாவாக்கிய மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுபலவில் ,வீரமாமுனிவர் எனக் கற்றறிந்த பல வெளிநாட்டினவரை சுண்டி இழுத்த,இன்றும் இழுக்கும் அறிவுப்பெட்டகம் திருக்குறள். பல வெளி நாட்டவரெல்லாம் கண்டுகொண்ட அறிவுப்பெட்டகத்தை தமிழகத்தில் இருக்கும் தமிழர் பலர் அறியாமல் இருக்கின்றனரே, அவர்களிடத்தில் இதனை கொண்டு போய் சேர்ப்பது எங்ஙனம் எனச்சிந்திக்கும், செயலாற்றும் பல அறிஞர்கள் தமிழகத்தில் உண்டு. அவர்களில் ஒருவர் நான் அறிந்த வேளாண் பொறியியல் அறிஞர் க.சி. அகமுடை நம்பி அவர்கள். கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக திருக்குறள் கருத்தரங்கங்களை தன்னுடைய வேப்பந்தோப்பில் நடத்தி, பின்னர் பங்களித்தோரின்  கருத்துக்களைக் கட்டுரைகளாக கொண்டுவரும் அரும்பணியை 'கைமாறு வேண்டா, கடப்பாடு மாரி மாட்டு ' செய்து வருகின்றார். இந்த வருடம் அவர் தேர்ந்தெடுத்துக்கொடுத்த தலைப்பு 'முப்பாலின் முன்னுரை-பாயிரம் என்பதாகும்.
                      'ஒரு நூலுக்கு இன்றைய காலங்களில் முன்னுரை என அமைவதுபோல பாயிரம் என்பது திருக்குறளுக்கு முன்னுரை எனக்கொள்ளலாம்' என்பார் சுப.வீரபாண்டியன் தனது 'குறள் வானம் ' என்னும் நூலில். முன்னுரை என்பது நூலின் முதல்பாகமாக நிற்பது. ஆனால் பாயிரம் என்பது அறத்துப்பாலின் ஆரம்ப அத்தியாயங்கள்.இப்பாயிரம் அறத்துப்பாலுக்கு மட்டுமல்ல, பொருட்பாலுக்கும் காமத்துப்பாலுக்கும் இதுவே பாயிரம் என்பர்.  திருக்குறளின் பாயிரமாக  நான்கு  அதிகாரங்கள், 40 குறள்கள்  திருக்குறளில் இருக்கின்றன. சில உரையாசிரியர்கள் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்து என எழுத புலவர் குழந்தை 'இறை நலம்' என்று சொல்கின்றார். சிலர் 'இறை வாழ்த்து','கடவுள் வாழ்த்து '  எனவும் எழுதுகின்றனர்.

முப்பாலின் இரண்டாம் பாலாகிய பொருட்பாலின் முதல் அதிகாரம் 'இறைமாட்சி'. பொருட்பாலின் மற்ற அதிகாரங்களுக்கு முன் உள்ள இறைமாட்சி அதிகாரம் முன்னுரை போல  இறை என்று சொல்லப்படும் அரசன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது.அரசன் ஏறுபோல் ஆட்சி நடத்துவதற்கு 'படை,குடி கூழ், அமைச்சு, நட்பு,அரண் ' தேவையென இந்த அதிகாரத்தின் முதல் குறள் வரையருக்கின்றது.அரசனுக்கு 'அஞ்சாமை, ஈகை, அறிவு,ஊக்கம்,தூங்காமை,கல்வி,துணிவு ' போன்ற குணநலன்கள் வேண்டும் என அடுத்தடுத்த குறள்களில் பட்டியல் இருக்கின்றது..'அறனிழுக்காது அல்லவை நீக்கி ' அரசாட்சி அமைய வேண்டும் எனத் தன விருப்பத்தை திருவள்ளுவர் இந்த அதிகாரத்தில் சொல்கின்றார். 'இயற்றல்,ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல் ' அரசின் கடமை என்று சொல்கின்றார்.அரசன் 'காட்சிக்கு எளியவனாய், கடுஞ்சொல் அல்லனேவனாக, இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லவனாக, ' இருந்தால் என்னென்ன சிறப்புகள் என்பதனை இந்த 'இறைமாட்சி 'அதிகாரத்தில் கூறுகின்றார். 'செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன்' இப்படிப்பட்ட அரசனாக இருந்து 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' மக்களால் இறை என்று போற்றப்படுவான் என்று சொல்கின்றார். இந்த அதிகாரம் முழுவதும் பார்த்தால் ஓர் அரசன் இறைவன் என்று போற்றப்படுகின்ற அளவிற்கு புகழ் பெற வேண்டுமானால் அவனுடைய குணநலன்கள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையெல்லாம் விளக்கி கூறுகின்ற திருவள்ளுவர் அரசனையே இறை என்றும், தெய்வம் என்றும் மக்கள் கருதுவார்கள் என்னும் கருத்துப்படவும் சொல்லியிருப்பதைக் காணமுடிகின்றது. இந்த 'இறைமாட்சி ' என்னும் அதிகாரத்தின் தொடர்ச்சியாக பொருட்பாலில் உள்ள ' செங்கோன்மை' , 'கொடுங்கோன்மை', 'வெருவந்த செய்யாமை ' என்னும் அதிகாரங்களையும் நாம் பார்க்க வேண்டும்.அரசனின் கடமையை வலியுறுத்தி, நல்ல நாட்டின் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது 'செங்கோன்மை ' அதிகாரம். ஒரு கொடுங்கோளனிடம் நாடு மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்பதனை 'கொடுங்கோன்மை' அதிகாரமும், 'வெருவந்த செய்யாமை ' அதிகாரமும் வலியுறுத்துகிறது. 

முப்பாலின் முதல்பாலாகிய அறத்துப்பாலில் முதல் அதிகாரம் 'இறை வாழ்த்து ' ஆகும். .கடவுள் என்று ஒருவர் இருக்கின்றார். அவர் கையில் ஒரு மிகப்பெரிய சூப்பர் கணினி  வைத்திருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள சுமார் 600 கோடி மக்களும் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையெல்லாம் கணினி  திரையில் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். மனிதர்கள் பிறப்பதை, இறப்பதை அவர்தான் முடிவு செய்கின்றார். ஒருவன் இப்பிறப்பில் எப்படி பிறப்பது என்பதை சென்ற பிறவியில் அவன் என்னென்ன செய்தான் என்பதை கணினி மெமெரியில் இருந்து எடுத்து முடிவு செய்து மனிதனாகவோ, பன்றியாகவோ,கழுதையாகவோ, மாற்றுத்திறனாளியாகவோ பிறக்கவைக்கிறான் என்று மதவாதிகள் உலகில் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்கின்றார்கள். எல்லாம் வல்லவன் என்று சொல்கின்றார்கள்,தாங்கள் செய்யும் பாவத்தையெல்லாம், குற்றத்தையெல்லாம் கணினித் திரையில் கடவுள் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார், அதனால் அந்தப்பாவத்திலிருந்து தப்பிப்பதற்கு பரிகாரங்கள் செய்தால், பாவ மன்னிப்பு கேட்டால், புனித யாத்திரை போனால் தங்களுடைய குற்றத்தையெல்லாம் கடவுள் மன்னித்து விடுவார், அதனை எல்லாம் சூப்பர் கணினி மெமரியில் இருந்து முழுவதுமாக அழித்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.அதற்காகவே கடவுள் இருப்பதாகச்சொல்லப்படும் மத வழிபாட்டுத்தலங்களுக்குச்சென்று கதறுகின்றார்கள், கண்ணீர் வடிக்கின்றார்கள், அழுது புலம்புகின்றார்கள். அழுவதனால்,புலம்புவதனால்,அரற்றுவதால்,கெஞ்சுவதால் தங்களின் குற்றங்களையெல்லாம் கடவுள் மன்னித்துவிடுவார் என நம்புகின்றார்கள்.இன்னும் சிலர் கடவுளுக்காக என விலங்குகளை வெட்டிப் பழி கொடுக்கின்றார்கள். யாகங்கள் எனத் தீயை வளர்க்கின்றார்கள்.விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் உட்பட பலவற்றையும் தீயுக்குள் இட்டு பொசுக்கின்றார்கள். தாங்கள் இப்படி எல்லாம் செய்தால், சடங்குகள் செய்தால் கடவுள் தனக்கு அருள் பாலிப்பார் என நம்புகின்றார்கள். .

ஆனால்   திருவள்ளுவர் தனது இறை வாழ்த்து அதிகாரத்தில் சமூகத்திற்கு தலைவன்  என்று ஒருவன் இருந்தால்,அவன் இறைவன் என்ற அளவிற்கு அழைக்கப்பட வேண்டுமென்றால்  அவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும், என்னென்ன பண்பு நலன்களைப்பெற்றிருக்கவேண்டும் எனப்பட்டியலிடுகின்றார். எப்படி பொருட்பாலில் ஒரு மன்னன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என வரையறைத்துச்சொல்கின்றாரோ அப்படி அறத்துக்கு தலைவனாக ஒருவன் இருந்தால் அவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் எனச்சொல்கின்றார்.பொருட்பாலில் திருவள்ளுவர் சொன்ன குணங்களைக் கொண்ட மன்னன் எவரும் எந்த நாட்டையும் ஆண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தனது மனக்கண் முன்னால் ஒரு மன்னன் எப்படிப்பட்ட குண  நலங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்கின்றாரோ அப்படித்தான் அவர் சொல்லியிருக்கும் அறத்தலைவன்  என்ற  ஒருவனின் பண்பு நலன்களையும் சொல்லியிருக்கின்றார் எனக்கொள்ளலாம்." கடவுள் வாழ்த்து என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கும் இவ்வத்தியாயம் கடவுளைக் குறிக்கவோ, கடவுளை வாழ்த்தவோ அல்லாமல் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைக் குறிப்பதேயாகும். இதை ஆத்திகர்கள் பொருள் உணராமலும் கடவுளைப்புகுத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்டும் இந்த அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று பெயர் கொடுத்து பொருத்தமில்லாத தன்மையில் கடவுளை இழுத்துப்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது என் கருத்து " எனும்  தந்தை பெரியாரின் கருத்து இங்கு நோக்கத்தக்கதாகும்.  தந்தை பெரியார் முதல் அதிகாரத்தை 'பண்பு நலன் ' என்று எழுதுகின்றார். முதல் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு குறளும் எப்படி பண்பு நலனைக் குறிக்கிறது என விவரிக்கின்றார்.இதனை விரிவாக வேண்டுவோர் பெரியார் களஞ்சியம் 37 -திருக்குறள் வள்ளுவர் என்னும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.

திருக்குறளின் பெருமையே அது உலகப்பொது மறை என்பதுதான். எல்லா மதத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கொண்டாடும் வாழ்வியல் நூல் திருக்குறள். ஆனால் ஒவ்வொரு மதத்தைச்சார்ந்தவர்களும் தங்கள் மதக்கருத்தை ஏற்றுவதற்கு 'கடவுள் வாழ்த்து; அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். பொதுவாக சொல்லப்பட்டிருக்கும் சில சொற்களை தங்கள் மதக்கடவுளைக் குறிக்கும் சொற்கள் என ஏற்றுக்கொண்டு , அதற்கேற்ப விளக்கம் அளிக்கின்றார்கள். அதனால்தான்
"வள்ளுவர்க்கு நிறமில்லை மதமும் இல்லை
மதங்கட்கப் பாலிருந்தே குறள் செய்துள்ளார்
உள்ளசிறு மதங்குறிக்கும் சொற்கள் கொண்டே
உவகையோடு தத்தமது மதத்தில் சேர்த்துத்
தெள்ளிவைத்த நீறிடுதல் திருமண் சார்த்தல்
செழும்பிண்டி அமர்ந்தானைச் சேர்ந்தான் என்னல்
தள்ளிவைத்த மரபென்று பேசல் யாவும்
சரியென்று தோன்றவில்லை என் கருத்தில் " என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.நமக்கும்தான் சரியென்று தோன்றவில்லை.வாஸ்து சாஸ்திரம் என்னும் மூட நம்பிக்கைக்கு ஆதரவாக ஒருவர் கடவுள் வாழ்த்துக்குறட்பாக்களைப் பயன்படுத்தி இருப்பதை இணையத்தில் பார்த்தேன்.புரட்சிக்கவிஞர் கவிதைதான் நினைவில் வந்தது.இப்படி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தும் அதிகாரமாக இந்த 'இறை வாழ்த்து' அதிகாரம் இருக்கின்றது,  

மனித வாழ்க்கைக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்பது என் போன்றோர் கருத்தாகும். உலகம் முழுவதும் நல்லவனாக வாழ்வதற்கு, வாழ்க்கையில் மனமகிழ்ச்சியோடு நிம்மதியாக வாழ்வதற்கு  கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்ற கருத்து இன்றைக்கு மேலோங்குகின்றது. திருவள்ளுவரும் நீ இந்தக் கடவுளை கும்பிட்டால்தான், இந்தச்சடங்கை செய்தால்தான் நீ நன்றாக வாழ்வாய்,இல்லையென்றால் நரகத்திற்குப் போவாய் என எந்தக் குறளிலும் சொல்லவில்லை. இல்லாத கடவுளைத் தேடி , இருக்கும் மனிதர்கள் துன்புறுவதும், இல்லாத கடவுளுக்காக இருக்கின்ற மனிதர்கள் எனது கடவுள் பெரிது,எனது மதம் பெரிது  எனத் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதும்,மண்டையை உடைத்துக்கொள்வதும் நம்மை இன்று வேதனைப்படுத்தும் நடவடிக்கைகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதனைப்போல சண்டையிருந்திருக்கும், மண்டை உடைதல் இருந்திருக்கும்.அதனை நீக்குவதற்கு எண்ணிய திருவள்ளுவர் அறத்திற்கு என ஒரு தலைவன் இருந்தால், அவன் இறைவன் போன்றவன் என்று போற்றப்படவேண்டுமென்றால் இந்த இந்தக் குணங்கள் வேண்டும் என்று பாடியதாகத்தான் திருக்குறளின் 'இறை வாழ்த்து ' இருக்கின்றது. திருவள்ளுவர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை என்பது போலவே இருக்கின்றார் என்றும் சொல்லவில்லை என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாயிரத்தின் இரண்டாவது அதிகாரமாக 'வான் சிறப்பு ' இருக்கிறது. மழை பொய்த்துப்போனதால் ஏற்பட்ட கொடுமைகளை இன்றைக்கு நாம் நம்முடைய வாழ்வில் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். குடிப்பதற்கும் ஏன் குளிப்பதற்கும் கூட மதுரையின் பல பகுதிகளில்  பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக்கொண்டிருக்கின்றோம். 'தண்ணீர், தண்ணீர் ' எனப் பொதுமக்கள் காலி குடங்களுடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் காட்சியை மதுரையிலும் அதனைச்சுற்றி இருக்கும் கிராமங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏன் மழை பெய்யவில்லை ? என்னும் கேள்வி எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. தோப்பாக நடப்பட்ட தென்னை மரங்கள்,மாமரங்கள், கொய்யா மரங்கள்  எல்லாம் தண்ணீர் இல்லாமல் கருகிக் காட்சி தரும் நிலை நமக்கெல்லாம் கண்ணீரை வரவழைக்கிறது.தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன. மரங்கள், விலங்குகள், மனிதர்கள் எனத் தமிழ் நாடே தண்ணீருக்காக அலையும் நிலையில் 'வான் சிறப்பு ' என்னும் அதிகாரத்தைப் படிக்கின்றபொழுது அய்யன் திருவள்ளுவர் 20 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படிச்சொல்லியிருக்கின்றார் என வியக்க முடிகின்றது.'வான் நின்று உலகம் வழங்கி வருவதால்தான்' உலகம் இயங்குகின்றது என முதல் குறளிலேயே சொல்கின்றார்.மழை இல்லையெனில் 'வியனுலகத்து உள் நின்று உடற்றும் பசி' , ' ஏரின் உழாஅர் உழவர்', 'பசும்புல் தலை காண்பது அரிது ' எனப் பல குறள்களில் என்னென்ன நிகழும் என்பதனை நமது மனக்கண் முன்னே நிறுத்துகின்றார்.

மழை ஏன் பெய்யவில்லை என்பதற்கு அறிவியல்முறையிலான ஆராய்ச்சிகள் காடுகளின் அழிப்பும், மரங்களின் குறைப்பும் காரணம் எனச்சுட்டுகின்றன. ஓசோன் படல ஓட்டையும்,கரியமில வாயுவின் அதிகரிப்பும் மழை பெய்வதைத் தடுக்கின்றன என விவரிக்கின்றன. ஆனால் 21-ஆம் நூற்றாண்டில் மழை பெய்யவில்லை என்பதற்காக அவரவர் கடவுளுக்கு அந்தந்த மதத்தைச்சார்ந்தவர்கள் தங்கள் பிரார்த்தனை மூலம் கோரிக்கை வைக்கின்றனர். சிலர் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்னும் மூட நம்பிக்கை வளர்த்து அதனால் தங்கள் வயிற்றை வளர்க்கின்றனர். ஆனால் நம்மைப்பொன்றவர்களுக்கு மழை பெய்யாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்தாலும், மழை பெய்ய வைப்பதற்கான வழிமுறைகள் தெரிந்தாலும் திடீரென்று சென்னையில் சென்ற ஆண்டு கொட்டித்தீர்த்ததுபோல கொட்டித்தீர்க்கும் மழையை நிறுத்தும் வழி தெரியவில்லை. எதிர்காலத்தில் மின்சுவிட் மூலம் மின் விளக்கை நிறுத்துவது போல ஏதோ ஒரு கருவியால் கொட்டும் மழையைத் தடுத்து நிறுத்த வழி காணக்கூடும். அல்லது மழை பெய்யென கருவி மூலம் அறிவியல் அறிஞர்கள் கட்டளை இட்டவுடன் பெய்யக்கூடும். ஆனால் இன்றைய நிலையில் ஆக்குவதும் மழையாய், அழிப்பதும் மழையாய் உலகில் இருக்கிறது. அதனைத்தான் வள்ளுவர் 'எல்லாம் மழை ' எனச்சொல்கின்றார் எனக்கொள்ளலாம்.

மனிதனின் உடம்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது என்று சொல்கிறது மருத்துவ அறிவியல். உடல் இயங்க, உலகம் இயங்க தண்ணீர் தேவை, அதற்கு மழை தேவை.மழை இன்மையால் இன்றைக்கு பயிர்கள் காய்வதும்,காயும் பயிரைப் பார்த்து உழவர்கள் உயிரை மாய்ப்பதும் தொடர்கதையாகத் தொடர்கிறது.ஆட்சியிலிருப்பவர்களின் கடைக்கண் பார்வை கூட விவசாயிகள் பக்கம் திரும்பாத நிலைமையில், தமிழகத்தின் விவசாயிகள் திகைத்துப்போய் நிற்கின்றார்கள். கிராமத்தை விட்டு வெளியேறிப்பிழைப்பதற்கும் வழியின்றி, உழது பயிரிட நீரும் இன்றி,உண்பதற்கும் உணவும் இன்றி தவித்து நமது விவசாயிகள் நிற்கும் நிலைமை மிகப்பெரிய கொடுமையும் அவலமுமாகும்.காவிரி தடுக்கப்படும் நிலையில் , வைகை வறண்டு நிற்கும் நிலைமையில் வானின் சிறப்பை உணர இதனைவிடப் பொருத்தமான, வருத்தமான காலம் அமையப்போவதில்லை. வானின் சிறப்பை உணர்வதோடு வாழ்வு சிறக்க பெய்யும் மழை நீரை சேகரிப்பதும், தடுக்கப்படும் காவிரியை ஒற்றுமையாய் நின்று தமிழகத்திற்கு கொண்டுவருதலும் இன்றைய தேவையாகும்.


'நீத்தார் பெருமை' என்பது பாயிரத்தின் மூன்றாவது இயலாகும். இந்த இயலின் தலைப்பிற்கு 'இல்லற இன்பத்தைத் துறந்து ,பொது நலம் புரியும் பெரியாரது பெருமை கூறுதல் ' என்பார் புலவர் குழந்தை. நல்லொழுக்கத்தில் நின்று தீய ஒழுக்கங்களைத் துறந்தாரது பெருமையே எல்லாப்பெருமைகளிலும் மேலான பெருமையெனக்கொள்வர் எனச்சுட்டுகின்றார் முதல் குறளில். இந்த உலகம் என்பது எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கின்றது. அதில் எத்தனையோ பேர் பிறந்தனர், மறைந்தனர். 'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி ' என ஒரு கவிஞர் பாடியதுபோல மறைந்தவர் எத்தனை கோடி எனக்கணக்கெடுக்க இயாலாது. அதனைப்போல பொது நலம் புரியும் பெரியோரின் பெருமை என்பது உலகில் இறந்தவர்கள் எத்தனை பேர் எனக்கணக்கெடுப்பது போலாகும்,எண்ண இயலாத, கணக்கிட இயலாத பெருமைக்குரியவர்கள் நீத்தார் என வள்ளுவர் சொல்கின்றார்.
'தன் பெண்டு, தன் பிள்ளை ,சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு,தானுண்டு ' எனும் மாந்தர்களைப் பெருவாரியாகப்பெற்றிருக்கும் இன்றைய உலகத்தில் தன்னலம் ஓங்கி நிற்போரே பெரும் விழுக்காடு உள்ளனர். பொது நலம் புரிபவரது எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, தன்னலம் கருதாது பொது நலத் தொண்டு ஆற்ற வருவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது.

சாமியார்கள் என்பவர்கள் வேறு, நீத்தார் என்பது வேறு என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய இந்தியா சாமியார்களின் இந்தியா. கார்பரேட் சாமியார்கள்,காவி உடை உடுத்தியிருந்தாலும் உள்ளத்தால், நடத்தையால் ஆடம்பர விரும்பிகள்.யமுனை போன்ற நதிகளை நாசப்படுத்துபவர்கள். காடுகளை அளித்து, யானைகளைக் கொன்று ,தியானம் செய்ய வாருங்கள் என மலைகளுக்குள் மாளிகை அளிப்பவர்கள். மல்லிகைப் பூக்களைப் பரப்பி அதன் மேல் படுப்பவர்கள். குளீரூட்டப்பட்ட கார்களில் பயணிப்பவர்கள், ஆடம்பரமான பங்களா வாசிகள் தங்கள் இடத்திற்கு வருவதற்காக ஆசை வார்த்தைகளை அள்ளி எறிபவர்கள்.டாலர்களாக வருமானம் பார்ப்பவர்கள்.பணக்காரர்களின் கருப்பப்பணத்தை பதுக்கி வைக்க, பாதுகாத்து வைக்க உதவுபவர்கள்.மனிதர்களாகவே கருதப்பட வேண்டாத கார்ப்பரேட் சாமியார்களை  திருவள்ளுவர் கூறும் நீத்தார்களோடு ஒப்பிடுதல் கூடாது.
துறவறவியலுக்கு முன்னுரையாக இந்தக் குறள் அமைந்திருப்பதை நாம் காணலாம்.
'செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலதார் " என்னும் குறளோடு 'பெரியாரைத் துணைக்கோடல் ' என்னும் அதிகாரத்தின் குறள்களை ஒப்பிட்டு வியந்து பார்க்கலாம். அதனைப்போலவே
'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் " என்னும் குறளோடு 'இன்சொல்','பயனில சொல்லாமை ' அதிகாரங்களின் குறள்களோடு ஒப்பிடுகின்றபோது, நீத்தார் பெருமை அதிகாரம் மற்ற பல அதிகாரங்களின் கருத்துக்களுக்கு முன்னோட்டமாக அமைந்திருப்பதைக் காணலாம்.


அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்திற்கு 'அறத்துப்பாலில் கூறப்படும் பலவகையான அறங்களையும் பொதுவகையில் சிறப்பித்துக்கூறுதல் ' என்பார் புலவர் குழந்தை.அறத்துப்பாலில் இடம் பெற்றிருக்கும் இல்லறவியலுக்கும் துறவியலுக்கும் பொதுவான அறங்களை சிறப்பித்துக்கூறுதல் என எடுத்துக்கொள்ளலாம்.பெரும் உரைக்கு முன்னால் கொடுக்கப்படும் அறிமுக உரை போல அறத்துப்பாலில் சொல்லப்போகும் அறங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தும் இயலாக அறன் வலியுறுத்தல் இருக்கின்றது. அறம் என்று சொல்லுமிடத்து தமிழர்கள் நம் அறமும்,ஆரியர்கள் அறமும் வெவ்வேறு என்பதனை உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும், அப்போதுதான் திருக்குறளின் அறன் வலியுறுத்தலின் மேன்மையும் கருத்து திண்மையும் புலப்படும்.அறம் 'சிறப்பீனுஞ்செல்வமு மீனும் ' என்றும், 'அறத்தினூஉங்காக்கமுமில்லை ' என்றும் 'அறத்தான் வருவதே ' இன்பம் என்றும் அறத்தினால் விளையும் விளையும் விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றார் திருவள்ளுவர். அறம் என்றால் என்ன என்னும் கேள்விக்கு ' மனத்துக்கண் மாசிலன் ஆதல் ' என்றும், 'அழுக்காறு,அவா,வெகுளி, இன்னாச்சொல் ' இந்த நான்கும் இல்லாததே அறம் என்றும் விளக்கம் அளிக்கின்றார். அறத்துப்பாலில்'இன்சொல், பயனில சொல்லாமை,வாய்மை,வெகுளாமை,புறங்கூறாமை, அவாவறுத்தல் ' என்னும் அதிகாரங்கள் மிக விரிவாக ஒவ்வொன்றைப்பற்றியும் விளக்கும் நிலையில் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அழுக்காறு, அவா,வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கு குணங்களும் வெறுக்கப்படவேண்டியவை, அவை இல்லாததே அறம் என்று  தெளிவாக்குகின்றார்.

திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். தமிழகத்தில் புத்த மதம் மேலோங்கியிருந்த காலம் அது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்திய துணைக்கண்டத்தில் ஆரியத்திற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய கலகக்குரல் புத்தரின் குரல். 'புத்தர் காலப் பார்ப்பனர்களும்,பார்ப்பனியமும் கங்கைச்சமவெளியை பெரிதும் நடுக்குற செய்துகொண்டிருந்தது.அதனால் எங்கும் யாகச்சாலைகளும், பர்ணச்சாலைகளும் அதிகரித்தன. சமூக வாழ்க்கை ஸ்தம்பித்து ,ஆட்சியதிகாரம் வர்ணாசிரம சநாதன தர்மத்திற்கு கைகட்டி,வாய் பொத்திச்சேவை செய்தது. ஆகவேதான் சத்தியர்களான மகாவீரரும், புத்தரும் அவரவர் இயக்கத்தைத் தொடங்கினர். இவை சமூக வாழ்வை, அப்போதிருந்த அரசுகளைப் புரட்டிப்போட்டன " எனச்சொல்வார் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசர்.தமிழ் நாடு அன்றுமுதல் இன்றுவரை ஆரியக்கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடுதான்.ஆரியக்கருத்துக்கள் தமிழகத்தில் சிலரால் பரப்பப்பட்டபோது அதற்கு எதிராக மிக வலுவாக எழுந்த இலக்கியம் திருக்குறள் ஆகும்.

ஆரியர்களுக்கு எப்படியெல்லாம் படியளக்கவேண்டும் என மனுநீதி போன்ற நூல்கள் பட்டியலிட்டு அதுதான் அறம், தர்மம் என்று சொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் அறம் என்றால் என்ன என்பதனை அழுத்தம் திருத்தமாக வரையறுத்து அதனை விளக்கி அறத்துப்பாலை அமைத்தவர் வள்ளுவர். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மின்சாரம் இல்லை, புகை வண்டி இல்லை, கணினி இல்லை, விமானம் இல்லை, இன்றைக்கு இருக்கும் பல வசதிகள்  வாய்ப்புகள் அன்று இல்லை. ஆனால் வள்ளுவர் காலத்தில் இருந்த பசியும் பட்டினியும் இன்றைக்கும் இருக்கின்றது. 'நல்லார் கண் பட்ட வறுமை' இன்றைக்கும் இருக்கின்றது,பல மோசடிகள் புரிந்து பணம் ஈட்டும் கயவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். 'மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்பது சிலரிடத்தில் மட்டும்தான் இன்றைக்கு இருக்கின்றது, அன்றைக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.எனவேதான் தான் விரும்பும் உலகம் எப்படி இருக்கவேண்டும் என்பதனை  அத்தனை குறட்பாக்களிலும் இணைத்துக்கொடுத்திருக்கின்றார்.

ஆரியர்கள்,திராவிடர்கள் என்பது கட்டுக்கதை, அப்படி ஒன்று இல்லை என்று சொல்பவர்களுக்கு மறுப்பாக அறிவியல் ஆய்வு விளக்கம் கொடுத்திருக்கின்றது. திராவிட நாகரிகமாகிய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்பு ,வேறு கண்டங்களிலிருந்து வேற்று இன மனிதர்கள் சமஸ்கிருத மொழியோடும், வேறுபட்ட கலாச்சாரத்தோடும்  இந்தியாவிற்குள் புகுந்திருக்கின்றார்கள் என்று டி.என்.ஏ.எனப்படும் அறிவியல் ஆய்வு  நிருபித்திருக்கின்றது.(தி தமிழ் இந்து - நாளிதழ்-03.07.17)  வேற்று கண்டத்திலிருந்தும், வேற்று மொழியோடும் நம் நாட்டிற்குள் புகுந்தவர்கள் கடவுள் என்னும் பெயரால் செய்திருக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. புத்தரும், சித்தர்களும், பெரியாரும் தொடுத்த போர்களைப்போலவே திருவள்ளுவரும் ஆரியத்திற்கு எதிராக போர் தொடுத்திருக்கின்றார் தனது குறள்களால். .தொன்மை மிக்க திராவிடர் இனத்தை, தமிழர்களை தன் வயப்படுத்துவதற்காக யாகங்கள் என்னும் வேள்விகளில் ஆடு, மாடு,குதிரை போன்றவற்றை பலியிட்டு,விலங்குகளை பலியிட்டால் மோட்சம் கிடைக்கும் என்று சொன்ன நேரத்தில், கொல்லாமையை பேசியிருக்கின்றார் திருவள்ளுவர்.

பசுக்கள் எல்லாம் வேள்வியில் சுட்டு திண்பதற்காக ,ஆரியர்களுக்காகத்தான் படைக்கப்பட்டது, வேள்விக்குள் பசுக்கள் போடப்பட்டு, பொசுக்கப்படும்போது, வேகவைக்கப்படும்போது அது பசு வதையல்ல' என்று சொல்லப்படும் ஆரிய அதர்மத்திற்கு எதிராக ,'சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங்கடை ' என்று பாடியவர் திருவள்ளுவர். அவி சொரிதலே மிகப்பெரிய புண்ணியம் தரும் என்று ஆரியர்கள் சொல்லி மன்னர்களை, அரசர்களைத் தங்கள் வயப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் 'ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று ' என்று எழுதியவர் திருவள்ளுவர். இதனைப்போல வேதத்திற்கு மறுப்பாய், மநு நீதிக்கு மறுப்பாக அமையும் பல குறள்களை சுட்டிக்காட்ட இயலும்.

             இன்றைக்கு ஒரு பேராபத்து நம்மைச்சூழ்ந்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்,ஒரே மொழி,ஒரே வரி எனப் பன்முகம் கொண்ட இந்தியத்துணைக்கண்டத்தை ஒற்றையாக்க ஆட்சியதிகாரத்தை வைத்து ஆரிய அமைப்புகள் துடித்து நிற்கின்றனர்,. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கியத்தால் ஆரியத்திற்கு எதிராக போர் தொடுத்த திருவள்ளுவர் கொடுத்த திருக்குறளை கைகளில் வைத்து சபதம் ஏற்போம். எனது மொழி தமிழ் மொழி, எனது பண்பாடு தமிழ்ப்பண்பாடு, எனது இனம் திராவிட இனம். இந்தியத்துணைக்கண்டத்தில் இணைந்து இருப்பதற்காக இவைகளையெல்லாம் இழக்க வேண்டுமென்றால் நாம் யோசிக்கலாம், ஆனால் இனி வரும் தலைமுறை யோசிக்காது, மாற்று இனத்திடம் மண்டியிடாது என்பதனை மட்டும் இன்றைக்கு இருப்பவர்களுக்கு சொல்லி வைப்போம்.அதற்கு உறுதுணையாக திருக்குறள் என்றைக்கும் நிற்கும்.கட்டுரைக்கு உதவிய நூல்கள் :
1) பெரியார் களஞ்சியம் 37- திருக்குறள் வள்ளுவர்-டாக்டர் கி.வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை-7.
2) குறள் வானம்- அறத்துப்பால்- சுப.வீரபாண்டியன், வானவில் புத்தகாலயம், சென்னை-17
3) புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும் - க.திருநாவுக்கரசு ,மீநா பதிப்பகம், சென்னை-2.
4) திருக்குறள் புலவர் குழந்தையுரை, சாரதா பதிப்பகம், சென்னை-14

Thursday, 16 November 2017

அவனொரு பதோபோபு .............

                                              அவனொரு பதோபோபு .............

முற்றும் துறந்த
முனிவர் போல
அவன் முகம்
முழுக்கத் தாடி.....

பற்றற்ற துறவிபோல
எப்போதும் அவன்
உடலில் காவி .....

வாயைத்  திறந்தாலே
தத்துவம்....
வாழ்க்கை எனும்
நிலையாமை....
அமைதியாக வாழ
பிரார்த்தனை
ஒன்றே வழி ........

காயமே இது பொய்யடா...
காற்றடித்த பையடா....
புஸ்ஸென்று ஒரு நாள்
உயிர் போய்விடும்.....
ஆன்மிகவே உங்கள்
மனதைச்
செம்மைப்படுத்தும்
செழுமைப்படுத்தும்...

எப்போதும் அமைதி
தழுவுவது போல
அவன் முகத்தில் பாவனை....

எதிர்முகாம்காரன் என்றாலும்
ஏதோ ஒழுக்கமாக
வாழ்பவன் போலும்
என எண்ணியிருந்த வேளை

உடன் பயிலும் தோழி சொன்னாள்
" நாங்கள் அந்த ஆளுக்கு
வைத்திருக்கும் பெயர் "பதோபோபு "
என்றாள்
புரியவில்லை என்றேன் நான்

விரிவாக்கம் அவள் சொல்ல
அவனது உடைகளைப்
பார்த்த பின்னும்
அவனது உரைகளைக்
கேட்டபின்புமுமா
இப்படி ஒரு பெயர் என்றேன்

" போங்க சார்,
அவர் என்ன உடை
வேண்டுமானாலும் உடுத்தட்டும்
அந்த ஆள் உதிர்க்கும்
வார்த்தைகள் உன்னதமாகக்
கூட இருக்கட்டும்
ஆனால் உண்மையைச்
சொல்வது கண்கள்

எங்களுக்குத் தெரியும் சார்
வாழ்க்கையில் எத்தனை
ஆண்களைப் பார்க்கின்றோம்
எத்தனை பேரோடு
அலுவலகத்தில் பழகுகின்றோம்....
சத்தியமாச்சொல்றேன் சார்
இந்த ஆள் நல்லவன் இல்லை " என்றாள்

பொதுவில் இருக்கும்போது
தத்துவமா பேசுகிறான்
தனியாக மாட்டிக்கொண்டால்
சே,சே,அசடு வழியுறான்....
தனிமையாய்ப் பார்க்கும்போது
கண்கள் பார்த்துப்பேசுவதில்லை
வெறிபிடித்த ஏதோபோல
அங்குமிங்கும்
உடல் முழுக்க அவனது
கண்கள் அலையும் .....

பரபரக்கும் அந்த ஆளின்
உடல் மொழிகள்
உண்மை சொல்லும் எங்களுக்கு
மனது முழுக்க அழுக்கு
அதை மறைக்க
போடும் வேசமும்
வீசும் வார்த்தைகளும்
எங்களுக்குத் தெரியும் சார்
அவனொரு பதோபோபு
அதுதான்
பசுந்தோல் போர்த்திய புலி " என்றாள்....

                                                                               வா.நேரு,
                                                                               17.11.2017,காலை 9.00மணி


Friday, 3 November 2017

யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!.......

                                               
                                             

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (5)

28.10.2017 அன்று வெளிவந்த வாழ்வியல் சிந்தனையின் தொடர்ச்சி....

இவ்வளவு பணமுடையுடன் போராடிய நிலை யிலும், புத்தகங்களை வாங்கும் டாக்டர் அம்பேத் கரின்  விழைவு - விருப்பம் - வேட்கை சற்றும் தணிந்தபாடில்லை!

அவரது அருமைச் சீடரும், நண்பருமான சங்க ரானந்த சாஸ்திரி அவர்கள் டாக்டரைச் சந்திக் கிறார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை (20 டிசம்பர், 1944) அவரே கூறும் ஒரு சுவையான தகவல்.

‘‘என்னுடன் வாருங்கள்’’ என்று டில்லி ஜூம்மா மசூதி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அது ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் பகுதி. அங்கே உள்ள மார்க்கெட் பகுதியில் பல பகுதிகளுக்கு டாக்டர் நடந்தே சென்று பழைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து, எந்தெந்த நூலை எப்படித் தேர்வு செய்யவேண்டும் என்ற முடிவுடன், வெகுநேரம் பழைய புத்தகங்களைத் தேர்வு செய்கிறார் - வாங்குவதற்கு. சங்கரானந்த சாஸ்திரி, ‘‘டாக்டர் மதிய உணவுக்கு நேரமாகிறது’’ என்று சொன்னதையும் அவர் பொருட்படுத்தவே இல்லை!

அப்புத்தகங்கள்மீது படிந்துள்ள தூசியைப் பொருட்படுத்தவே இல்லை - டாக்டர் அம்பேத்கர். இதற்கிடையில், ‘‘அம்பேத்கர் வந்து புத்தகங்களை வாங்குகிறார்’’ இந்த பழைய புத்தக மார்க்கெட்டில் என்ற செய்தி தீபோல மளமளவென்று அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் பரவுகிறது. மக்கள் ஏராளம் கூடிவிட்டனர்!

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சில இராணுவ வீரர்கள், அதிகாரிகளும் சில புத்தகக் கடையில் பழைய புத்தகங்களை விற்கிறார்கள். அங்கு சென்று சில பழைய புத்தகங்களை அவர்களது கடையில், படித்து ஆராய்ந்து தேர்வு செய்கிறார்! இரண்டு டஜன் பழைய புத்தகங்களை வாங்குகிறார். அந்தப் புத்தகக் குவியலில் வரலாற்று நூல்களும், பூகோள நூல்களும் அடக்கம். அதில் அவர் கண்டுபிடித்து வாங்கிய ஒரு முக்கியப் புத்தகம் பேராசிரியர் பி.லட் சுமி நரசு அவர்கள் புத்த மார்க்கம்பற்றி எழுதி வெளி யிட்ட ஒரு அற்புதமான அறிவுக்கருவூலம் ஆகும்.

பேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் சென்னை யில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது ‘‘ஷிtuபீஹ் ஷீயீ சிணீstமீ’’ - ஜாதிகள்பற்றிய ஆய்வு என்ற நூலும், புத்த மார்க்கம்பற்றி அவர் எழுதிய இந் நூலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்!

புத்த நெறி பற்றிய இந்த சிறந்த ஆங்கில நூல் மறுபதிப்பு இல்லை என்பதை அறிந்து, அதன் புதிய பதிப்பிற்கு டாக்டர் அம்பேத்கர் முன்னுரை எழுதி இணைத்து, பம்பாயில் இவரது புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு - தாக்கர் அன்ட் கோவிடம் தந்து, புதிய பதிப்பினை வெளியிடுகிறார்!

டாக்டர் அம்பேத்கரின் ‘‘புத்தமும் தம்மமும்‘’  வெளிவரும் முன்பே, 1911 ஆம் ஆண்டிலேயே அந்தப் புத்தகம் வெளிவந்தது. 1945 இல் மீண்டும் அதன் மீள் பதிப்பை வெளியிட்டு ஒரு முன் னோட்டமாக அவர் செய்தது, புத்தப் பிரியரான இவர் எப்போதோ மாறிவிட்டார் என்பதை நிரூபிப் பதாக உள்ளது!

அது ஒரு முன்னோட்டம் - இந்த புத்தப் பிரியர் - தான் புத்தகப் பிரியராகவே மாறிய நிலையில், பேராசிரியர் லட்சுமி நரசுவின் புத்தகம் ஒரு ஒளி வீச்சாகவே திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டிற்கும், பாபா சாகேப்பிற்கும் உள்ள - பவுத்தப் பிரிய தொடர்பு எப்படிப்பட்டது பார்த்தீர்களா?

நண்பர் சங்கரானந்த சாஸ்திரி அவர்கள் கூறும் மற்றொரு சுவையான தகவல்,

1945 இல் டாக்டர், ‘‘காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்களுக்குச் செய்ததென்ன?’’ என்ற புத்தகத்தை எழுதிக் கொண்டுள்ளார்.

அவரது அந்த புத்தகத்தில் ஒரு மேற்கோளை இணைக்க விரும்புகிறார் டாக்டர் அவர்கள்; அவர் சங்கரானந்தை, அவருக்குத் தேவைப்படும் குறிப் பிட்ட புத்தகத்தை எடுக்கச் சொல்லிவிட்டு எழுதிக் கொண்டுள்ளார்.

இவர் அந்த நூலைத் தேடுகிறார், அவரது நூலக அலமாரியில்; சற்று காலதாமதம் ஆனது. டாக்டர் எழுந்து வந்து, இவர் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு, (குட்டு என்று வைத்துக் கொள்ளலாம்) அவரே, இவர் தேடும் புத்தகத்தை உடனே எடுத்து விட்டுச் சொன்னார், ‘‘என்னிடம் நீங்கள் வரும்போது ஏராளம் புத்தகங்களைப் படிக்கிறீர்கள். என்ன பயன் - இதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே? என் முன்னே நின்று உங்கள் நேரத்தை ஏன் வீணாக் குகிறீர்கள்?’’ என்று ‘செல்லமாகக்‘ கடிந்துகொள்ளு கிறார்!

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் டாக்டர் அவர்களே அலமாரியில் உள்ள புத்தகங்கள் ஒவ் வொன்றையும் தூசி தட்டி துடைத்து வைப்பதை தனது முக்கிய வேலைகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டார்!

புத்தகங்களை வாங்குவதோ, படிப்பதோ, அடிக் கோடிட்டு விட்டு படித்து முடிப்பதோ, முக்கியம் என்றாலும், அதைவிட முக்கியம் அப்புத்தகங்களைத் தூசி அடையாமல் பாதுகாப்பதும், பராமரிப்பதும்கூட!

இதை அவரிடம் அனைத்துப் புத்தகப் படிப் பாளர்களும், புத்தக சேகரிப்பாளர்களும் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டும்!

காரணம், பற்பல நேரங்களில் புத்தகங்கள்மீது, எழுதுகிறவர்களைவிட, வாங்கிப் படிப்பவர்கள் மிகுந்த ‘காதல்’ - பேராசை கொண்டு புத்தகங்களை அப்படியே விழுங்குபவர்களாக இருப்பவர்கள் கரையான்களிடமிருந்து அவைகளைப் பாதுகாக்க வேண்டாமா?

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 29.10.2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (6)

டாக்டர் அம்பேத்கருடன் பல கட்டங்களில் நெருங்கிப் பழகி, உரையாடி பல்வேறு அரிய செய்திகளை அறியும் வாய்ப்புப் பெற்ற நண்பர்கள் வட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் நாம்தேவ் நிம்காடே. இவர் டாக்டர் அம்பேத்கருக்கு அடுத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் - ஆம்! வேளாண் விஞ்ஞானியான இவர் அமெரிக்காவில் பிஎச்.டி., பட்டம் அத்துறையில் எடுத்தவர்.

மாணவப் பருவம் தொட்டு, வெளிநாட்டுப் பட்ட தாரியாகி - ஆய்வாளராகி உயர்நிலைக்குச் சென்ற நிலையிலும், டாக்டருடன் பழகிய அக்கால இளை ஞர்களில் ஒருவர். (இவர் 1920 இல் பிறந்து 2011 இல் மறைந்தவர்).

இவர் ‘ஒரு அம்பேத்கரிஸ்டின் சுயசரிதை ’(The Autobiography of An Ambedkarite) என்று அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட எழுதியுள்ளார்.

அதில் புத்தகங்களை எப்படிப் படித்தார்; பாதுகாப்பதில் எவ்வளவு கவலையாக டாக்டர் அவர்கள் இருந்தார் என்பதை பற்பல இடங்களில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

அம்பேத்கர் புதுடில்லியில் அரசியல் சட்ட வரை வுக் குழுத் தலைவர், பிறகு சட்ட அமைச்சர் நிலை களில் வாழ்ந்த பங்களாவில்கூட, மற்ற அமைச்சர் களின் பங்களாக்களில், அழகுப் பொருள்கள் வர வேற்புக் கூடங்களை அல்லது அலுவலக அறை களை அலங்கரிக்கும்.

ஆனால், டாக்டருடைய அந்தக் கூடங்கள் - அவரது வளமனையில் - புத்தக அலமாரிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அது கண்ணாடி போடப் பட்டு பல இடங்களில் இருக்கும். திடீரென்று, பேருரையாடல்கள் நண்பர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டமாகவோ அல்லது எழுதிக் கொண்டிருக்கையில் தேவைப்படும் நூல்களாகப் பல இருப்பதால், எந்த சூழலிலும் உடனே எடுத்துப் படித்துக் காட்டவோ, குறிப்பெடுக்கவோ அல்லது விவாதத்தில் எழுந்த அய்யப்பாடுகளைக் களை யவோ அது பயன்படும் வண்ணம் ஆங்காங்கே கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட புத்தக அலமாரிகள் இருக்கும்!பம்பாயில் (அப்போது மும்பை பெயர் மாற்றம் கிடையாது என்பதால் இச்சொல் இங்கே பயன் படுத்தப்படுகிறது) உள்ள அவரது ‘ராஜ்கிரகா’ இல்லம்தான் மிகப்பெரிய, அரிய நூல்களைக் கொண்ட மிகப்பெரிய தனியார் இல்ல நூலகம் ஆகும்.

நண்பர் நாம்தேவ் நிம்காடவே, ஒருமுறை கேட்டார்; ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’  என்று.

அதற்கு அம்பேத்கர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். சிறந்த தொகுப்புகள்தான் என்பது உண்மை. பனா ரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திற்கு இதனை அளித்து விடுங்கள் - விலைக்குத்தான் என்னிடம் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்று கூறினார்.

நாம்தேவ் நிம்காடே கூறுகிறார்:

டாக்டரின் நூலகத்தில் பற்பல தலைப்புள்ள நூல் வகையறாக்களும் இருக்கும். எல்லா விஷயங்கள் பற்றியதாக, தெரிந்துகொள்ளும் வகையில்,

Theory of Relational  முதல் புத்த மார்க்கம் - அரசியலில் இருந்து கோழி வளர்ப்புவரை எல்லா விதமான புத்தகங்களும் இருக்கும். அவரிடம் எந்த விஷயம்பற்றியும் உரையாடி விவாதிக்கலாம். நீர்ப்பாசனம் தொடங்கி, அணுமின் சக்தி, நிலக்கரி சுரங்கம்வரை பலதரப்பட்ட தலைப்புகளிலும் ‘பளிச்' சென்று அவர்  படித்த செய்திகளையும் இணைத்துக் கூறத் தயங்கவே மாட்டார் டாக்டர்!

அவரிடம் ஒருமுறை நாம்தேவ் கேட்கிறார்:‘‘அய்யா, நீங்கள் இவ்வளவு சலிப்பின்றி, களைப்பின்றி அதிக நேரம் புத்தகங்களை எப்படி வாசிக்க உங்களால் முடிகிறது?  அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில் சற்று இளைப்பாறிட (Relax)
மாட்டீர்களா?’’

அதற்குப் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்கிறார் டாக்டர்.

‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்திற்கு மாறுவதுதான்’’ என்றார்.

அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியசான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நட வடிக்கைபற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது என்றார்.

இந்தப் பதில் எனக்கு மிகவும் தெம்பூட்டும் பதில்; ஏனெனில், மிக நீண்ட காலம் அம்பேத்கர் முறைபற்றி அறியாமலேயே அதைப் பின்பற்றும் புத்தக வாசிப்பாளன்  நான் என்பது, எனது முறை - இளைப்பாறுதல்தான் ‘மாறிடும் தலைப்பு’ - வழிமுறை மிகவும் பயன்தரக் கூடியதே!

எனவேதான், எனது புத்தகக் கூடத்தில் பலதரப்பட்ட தலைப்பு நூல்கள் - படிக்கவேண்டிய புதிய நூல்களை வைத்துக் கொண்டிருப்பேன் - சிலவற்றை பயணங்களிலும் எடுத்துச் சென்று படிப்பேன். அந்த இளைப்பாறுதல் மிகவும் பயனுறு காலச் செலவீடு அல்லவா?

(நதி  மேலும் ஓடும்)

குத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 31.10.2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (7)

டாக்டர் அம்பேத்கரின் மிக நெருங்கிய நட்புற வுடன் இருந்த சீடரான நாம்தேவ் நிம்காடே ஓர் அரிய தகவலை - டாக்டரின் தனி நூலகம் எப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட அரிய சேகரிப்பு - மேற்கோள் பார்த்து அறியும் ஆய்வகம் போன்றது என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்!

ஒரு பிரிட்டிஷ் கமிஷன் - பிரிட்டிஷ் அரசால் நியமனம் பெற்றது; ஆய்வு செய்து அறிக்கையைத் தரும் பணி செய்யும் கமிஷன் - குறிப்பிட்ட ஓர் அறிக்கை (ரிப்போர்ட்) தேவை என்று இந்திய நாட் டின் நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்கள் எங்கெங்கும் தேடினர்; கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு அக்குறிப்பிட்ட தாங்கள் தேடும் அறிக்கை ஆவணம் டாக்டர் அவர்களது நூலகத்தில் இருக்கக் கூடும்; காரணம், இதுபோல், பல அரியவை களை சேகரித்துப் படித்து,  பின்பு பாதுகாப்புடன் இருப்பது அங்கேதான்; எதற்கும் அங்கு போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று டாக்டரை நாடி வந்து கேட்டனர்.

அவர்களுக்கு ஆச்சரியம்...!

அது அங்கே கிடைத்தது. டாக்டரிடம் கேட்டார் கள். அந்த பிரிட்டிஷ் கமிஷனின் பொறுப்பாளர்கள் - ஆய்வு செய்வதற்காக.

டாக்டர் அம்பேத்கர் உடனே இசைவு தந்தார். (பொதுவாக தனது புத்தகங்களை யாருக்கும் இரவ லாகக்கூட தருகின்ற பழக்கம் டாக்டர் அம்பேத் கருக்குக் கிடையாது). ஏனெனில், அவை திரும்பி வருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் என்றாலும், எதை, எப்போது எடுத்து அவர் ஆராய்வார் என் பதை அறுதியிட்டுக் கூற முடியாதே! தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா? அதனால்தான் புத்தகங் களை இரவல் கொடுப்பது கூடாது என்ற அவரின் கொள்கைத் திட்ட நடைமுறை நமக்கும் ஏற்பு டையதே!

அவர் ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘இந்த அறிக் கையை எவ்வளவு விரைவில் உங்களால் திருப்பித் தர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்‘’ என்பதே அந்நிபந்தனை.

இப்போதுள்ள நகலக வசதிகள் அக்காலத்தில் கிடையாதே!

புத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம் பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில்  அத்துப்படி டாக்டருக்கு. அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது!

தான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் (Reference)
வேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. பிறகு, தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை - நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாண வராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால், குறிப் பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டு பிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்க வில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர், ‘‘எனக்கு Card Catalogue  நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்!

என்னே, யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!

இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்; அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் என்பது அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.

அப்படி படிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!!! சில அமெ ரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க - பேட்டி காண - வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன், நடுநிசி நேரத்தில் சென்று - அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். (இதை நாம்தேவ் நிம்காடே  தனது நூலில் பதிவு செய்துள்ளார்).

‘‘காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டு மென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே!’’ என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு,

பாபா சாகேப், ‘‘காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Luckly Leaders) 
அவர்களைப் பின்பற்று வோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் தூங்குகிறார்கள்.

எனது நிலை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே!’’ என்று கூறினார்.

அவர்கள், டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும், உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்!

அதுமட்டுமா?

டாக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய விபத்து பற்றி கவலையுடன் டாக்டர் அம்பேத்கர், நாம்தேவ் விடம் கூறியதில் பொங்கிய கொள்கை உறுதிப்பாடு - அதிர வைக்கக் கூடியது.

அடுத்துப் பார்ப்போமே!


பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 01.11.2017

அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (8)

டாக்டர் அம்பேத்கரின் நட்புறவு வட்டத்தின் நெருங்கிய சீடரான நாம்தேவ் நிம்காடே, ஓர் நாள் மாலை டாக்டரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். வழமைக்குமாறாக டாக்டர் அம்பேத்கர் சற்றுப் பதற்றத்துடன் கவலையும், அதிர்ச்சியும் உறைந்த நிலையில் உள்ளதைப் புரிந்து கொண்ட நாம்தேவ் "என்ன நடந்தது, ஏன் இன்று இப்படி இருக்கிறீர்கள்?" என்றுகேட்கிறார்.

அதற்கு டாக்டர் பதிலளிக்கிறார். "நேற்று நான் ஒரு விபத்தில் சிக்கி மீண்டேன். புத்தகம் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து நடந்தது;  கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால், சாலைகள் வழுக்கிடும் நிலையில் இருந்திருக்கிறது. அப்படி கார் ஓடும்போது ஏற்பட்ட அந்த விபத்து, கார் வழுக்கிச் சென்று விபத்தை உருவாக்கிடும் பேரபாயம் ஏற்பட்டது; எப்படியோ எனது காரோட்டி (டிரைவர்) மிகவும் சாமர்த்தியமாக ஓட்டி, காரை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து என்னைஅந்த ஆபத்தி லிருந்து காப்பாற்றினார். நான் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். அதோடு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகவும்  தந்தேன். ஒரு வேளை அப்போது அந்த விபத்து ஏற்பட்டு நான் செத்திருந்தால்  என்னவாகும்?"

இப்படி அவர் சொன்னதைக் கேட்கும் எவரும், டாக்டர் தனது உயிரின்மீது எவ்வளவு ஆசை வைத் துள்ளார்; அல்லது சாவு கண்டு எவ்வளவு பயப்படுகிறார் என்றுதான் அவசரப்பட்டு, நம் கருத்தைச் சொல்லி விடுவோம்.

'நான் செத்திருந்தால் என்னவாகியிருக்கும்?' என்பதோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார் அம்பேத்கர்.

'நான் ஹிந்துவாக அல்லவா செத்திருப்பேன்! அதுதான் எனது கவலை!' என்பதுபோல் அப்படிக் கூறியிருக்கிறார்.

அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு தான் செத்திருந்தால் ஓர் ஹிந்துவாகவல்லவா செத்திருப்பேன் என்று கூறியது எவ்வளவு ஆழமான கொள்கை உறுதியையும், சொன்னதை செயலில் நாட்டுவதில் அவருக்கு இருந்த லட்சிய உறுதியையும் அல்லவா இது காட்டுகிறது.

"பிறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். அது எனது விருப்பமோ, அல்லது தேர்வோ அல்ல; ஆனால் இறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகச் சாக மாட்டேன்என்பது உறுதி!" என்று பல மேடைகளில் முழங்கியவர் ஆனபடியால் அதற்குரிய வாய்ப்பு இல்லாமல் விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டிருந்தால், தான் சொன்ன சொல்லை - லட்சியத்தை - காப்பாற்ற முடியாமல் போயிருக்குமே என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து அவருக்கு அவரது உயிரின்மீதிருந்த பற்றைவிட, அவரது கொள்கைப் பிரகடனமான "நான் சாகும்போது ஒருக்காலும் ஹிந்துவாக சாக மாட்டேன்!" என்ற உறுதியைச் செயல்படுத்த முடியாத வரலாற்றுப் பழிக்குத் தான் ஆளாகி விட்டிருப்போமே என்ற கவலை தான் டாக்டரை அதிர்ச்சிக்குரிய தாக்கியது!

உயிரைவிட இலட்சியம் - கொள்கை - சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்றுதல் என்பவை முன் னுரிமை பெற்று முதல் இடத்தில் உள்ளன அவரது வாழ்வில் என்பதைப் பார்த்தீர்களா?

இதைப் படித்தவுடன் அம்பேத்கர் என்ற ஒரு நாணயத்தின் மறுபக்கமான தந்தை பெரியார் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த இதே போன்ற கவலையும், அதிர்ச்சியும் எமது நினைவில் நிழலாடியது!

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கச்சனம் என்ற ஊரில் 1964இல் நடைபெற்ற 'ஜாதி ஒழிப்பு மாநாட்டில்' தந்தை பெரியார் பேசும்போது, (அம்மாநாட்டில் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், பாலதண்டாயுதம் கலந்து கொண்டனர், நானும் கலந்து கொண்டேன்!) "சில வருஷங்களுக்குமுன் எனக்கு நாக்கில் ஒரு புண் வந்து, ரத்தம் சீழ் வடியத் தொடங்கியது. உடனே சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனம் அவர்களிடம் காட் டினேன். அவர் என்னை டாக்டர் ராய் என்பவரிடம் அனுப்பி சிகிச்சை பெற பரிந்துரைத்தார். டாக்டர் ராய்  - எக்ஸ்ரே எடுத்து நோய் வாய்ப் புண்பற்றி ஆய்வு செய்து விட்டு,  'அட உங்களுக்கு இப்படி ஒரு நோயா வர வேண்டும்? இது புற்றுநோய் - நாக்கில் ஏற்பட் டுள்ளது; என்றாலும் சிகிச்சைகளை உடனே துவக்கி விடுகிறோம்' என்று கூறி ஏதோ சிகிச்சைகளை மேற்கொண்டார்.

அப்போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, துன்பம், கவலை ஏற்பட்டு விட்டது.

"நாம் சாவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. வாயில் புற்று நோய் வந்தல்லவா இந்த இராமசாமி நாயக்கன் செத்தான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்த அவனுக்கு கடவுள் என்ன தண்டனை, எப்படித் தந்தார் பார்த்தீர்களா? என்று அல்லவா எதிரிகள் பிரச்சாரம் செய்வர். அதை சிலரும் நம் மக்கள் முட்டாள்களாக இருப்பதால் நம்பித் தொலைப்பார்களே என்று கருதி அப்படி நடப்பதைவிட தற்கொலையாவது செய்து கொள்வது மேல் என்றுகூட நான் யோசித்த துண்டு" என்று கூறினார்.

அவருக்கு மரண பயம் இல்லை; மாறாக அய்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியது - தனது கொள்கைக்கு ஓர் பின்னடைவு பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுமே என்ற கவலைதான் அவரை இந்த ஒரு விபரீத முடிவுக்குக்கூட தள்ளிவிட்டது!

டாக்டர் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி -  மரணத்தைவிட தமது கொள்கை, லட்சிய, வெற்றிக்காக எவ்வளவு கவலையெடுத்தனர், அதற்காக உழைத் துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

இலட்சிய வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களது இலக்கணம் எப்படி என்பது இதன்மூலம் புரிகிற தல்லவா?

இப்படிப்பட்ட அரிய தகவலைக் கூறும் நாம்தேவ் அவர்கள் தனது சைக்கிளில் சென்று, அண்மையில் அம்பேத்கரின் புத்தகம் வெளிவந்திருந்தால் அதைக் கொடுங்கள் என்று (1956 டிசம்பர் 6ஆம் தேதி) காலை குறிப்பிட்ட நாளன்று புத்தக விற்பனையாளரிடம் கேட்கிறார்.

அவர் ஒரு புத்தகத்தை இவருக்கு எடுத்துக் கொடுக் கும்போது, "இந்த நூலாசிரியர் டாக்டர் அம்பேத்கர் இன்று காலை காலமானார் என்று வானொலியில் செய்தி சொல்லப்படுகிறது; தலைவர்களும், மக்களும் அவரது (டில்லி இல்லம்) நோக்கிச் செல்கின்றார்களே" என்று இவரிடம் கூறிட இடி தாக்கியதுபோல உணர்ந்து   - "இருக்காது நிச்சயம், அது உண்மையாக இருக்காது; இருக்கவும் கூடாது" என்று தலையில் அடித்துக்  கொண்டே சென்று செய்தி உறுதியான பிறகு அம் பேத்கர் எழுதிய புதிய புத்தகம் ஒருகையில்; மறுகையில் மாலையும் அவரது சடலத்தின் மீது வைத்து, தேக்கிய கண்ணீர் ஏரியை உடைத்து விட்டுத் திரும்பினார்.

என்னே கொடுமை! இயற்கையின் கோணல் புத்தி.

(நதி மீண்டும் ஓடும்)

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனை கட்டுரை -நன்றி விடுதலை 02.11.2017