Tuesday, 31 December 2013

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். சாதிகள் ஒழிந்த, மதங்கள் மறைந்த, கடவுள்கள் காணாமல் போன ஆனால் மனித நேயம் மிக்க, உலகம் நோக்கி நடக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். வாழ்த்துக்கள், 
 http://2.bp.blogspot.com/-3o2aR6Xrdwc/UsK9YVxl5FI/AAAAAAAAAOk/B93G3_-1LnU/s1600/download.jpg


 வா. நேரு

பாராட்டும், விருதுப்பட்டயமும் நண்பர்களின் பார்வைக்காக.

இணையதளப் படைப்பாளிகள் பேரவை , புதுச்சேரி சார்பாகவும் "எழுத்து" இணையதளத்தின் சார்பாகவும் எனக்கு "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " என்ற விருதினை அளித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பொதுவாக விருதுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. வாங்கப்படும் சில விருதுகளை நான் அறிவேன் என்றாலும் இந்த விருதுப்பட்டயத்தில் கையெழுத்திட்டிருக்கும் நால்வரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அமைப்பாளர் திரு. அமிர்தகணேசன் என்னும் அகன் அவர்கள் மிகப்பெரிய ஊக்கமூட்டக்கூடியவர். புதிய எழுத்தாளர்களை எழுத்து இணையதளத்தில் அற்புதமாகப் பாராட்டக்கூடியவர். , வழி நடத்தக்கூடியவர். முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் 'யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் ' என்னும் தொகுப்பில் எனது 'மத்த்தின் அளவு மட்டுமே ; என்னும் கவிதையை தனது முன்னுரையில் பாராட்டியிருந்தார். யார் என்று தெரியாதபோதும், எவரென்று நேரில் அறியாதபோதும் படைப்புக்களின் தரத்தை மட்டுமே வைத்து அளவிடும் தோழர்களின் , பெரியோர்களின் பாராட்டுக்களை, விருதினை ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் நிறைய பகுத்தறிவு படைப்புக்களை ஆக்கு என இந்த விருதின் மூலம் கட்டளையிட்டு இருக்கின்றார்கள் . தொடர்வேன் என்னும் உறுதிமொழியோடு , அவர்களின் பாராட்டும், விருதுப்பட்டயமும் நண்பர்களின் பார்வைக்காக. 
விருதுகள்-2013 பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013

தோழர்களே...

வணக்கம் ..

ஒரு படைப்பாளி ,
அவன் சார்ந்த சமூகத்தின் கண்ணாடி.
தூய்மை செய்யும் துப்புரவாளி...
சினங்கொண்டு எழும் சீர்கேடழிக்கும் போராளி...
எல்லாவற்றிக்கும் மேலாக சரி என்பதை சார்ந்து நின்று சான்றுகளோடு தவறுகளை சுட்டிக்காட்டி அழித்தொழிக்கும் ஆயுதம் கொண்ட அவதாரம்...

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இல்லையெனில் தமிழனின் நிலை இன்றுள்ள நிலையை விட மோசமாகி இருந்திருக்கும்...பெண்களுக்கு சொத்துரிமை எனும் ஆயுட்கால அருமருந்தை போராடி பெற்று அளித்து சென்றவர் அவர் எனவே அவரும் ஒரு படைப்பாளியே...!!!

தேர்தல் அரசியலை விரும்பாதவர் பெரியார்...அரசியலில் பங்கு ஏற்க விரும்பாதவர்.: மறுத்தவர் என்றாலும் அவரில்லாமல் தமிழகத்தில் ஓர் அரசியல் இருந்திருக்க இயலவில்லை...தமிழர் கலாச்சார விழுமியங்களில் மூடத்தன மடமைகளை வெளிக்கொணர்ந்து பகுத்தறிவு பாடம் புகட்டியவர்...அவர் கோட்பாடுகள் மூலம் இறைமையை மையப்படுத்திய மூடத்தனங்களை அழிக்க பல நிலைகளிலும் பாடுபட்டார்.

முக்கியமாக தமிழ் இலக்கிய மரபின் மூலமாகவும்
கற்பனை செய்திகள் வழியாகவும் பழக்கவழக்கங்கள் எனும் போர்வையிலும் தமிழர் சமுதாயம் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அவதியுறும் நிலை மாறிட படைப்பாளிகள் எழுத்தைப் பயன்படுத்தி குமுகாய
தொண்டாற்றுவதும் ஒரு படைப்பாளியின் பணியாகும்.

இந்நிலையில் நமது தளத்தில் பகுத்தறிவு ஆக்க வரிகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தனது படைப்பு மற்றும் கருத்துக்களால் அளித்து வரும் இவர் 2014ஆன் ஆண்டின் முதல் விருது என "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " எனும் விருது பெறுகிறார்.

யார் அவர் ?
*******************************************************************
$$$$$ "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " $$$$


எனும் விருது பெறும்

@@@@@ தோழர் .முனைவர் வா. நேரு @@@@@--------------------------------------------------------------------------------------------
திரு அகன் அவர்கள் - எழுத்து இணையதளத்தில் எழுதியது.


http://eluthu.com/kavithai/165294.html

Sunday, 29 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா -ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்                                         : இரா. நடராசன்
முதல் பதிப்பு                                : ஏப்ரல் 2005           16-ஆம் பதிப்பு : 2013
வெளியீடு                                      : Books for Children
விற்பனை உரிமை                      : பாரதி புத்தகாலயம், சென்னை -18 .
விலை                                             : ரூ 15 மொத்த பக்கங்கள் : 24

                                                  மிகச் சுருக்கமாக அமைந்த ஆபிரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை போல , வீரியமிக்க குறு நாவலாக இந்தச்சிறிய  நூல் அமைந்துள்ளது.கனவு ஆசிரியர் என்னும் புத்தகத்தில் தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக் காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்ப்தனை ' எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரையாக எழுதிய.இரா. நடராசன்  வாசிக்கும் எந்த ஆசிரியருக்கும், ஏன் எந்த மனிதருக்கும்  அறிவியல் மன்ப்பான்மை வரக்கூடிய அளவிற்கு வலிமையாக எழுதியுள்ள குறு நாவலாக 'ஆயிஷா ' அமைந்துள்ளது.  குறும்படம்,நூல் மதிப்புரை என இணையத்தில் இந்த நூலைப் பற்றிய செய்திகள் பல உள்ளன என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படவேண்டிய புத்தகம் இந்தப் புத்தகம்  என உணர்கின்றேன். 

                         பள்ளிக்கூடங்களும் , ஆசிரியர்களும் எப்படி இருக்கின்றார்கள் எனும் உண்மையை உடைத்துப்போடும் கதை, 1995-ல் வந்த புத்தகம் என்றாலும், இன்றும் நாளையும் பொருந்தும் கதை. கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துவதுதான் கல்வி, ஆனால் கேள்வி கேட்கும்   மாணவி ஆயிஷா எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறாள், அவமானப்படுத்தப்படுகிறாள் ஆசிரியர்களால் என்பதுதான் கதை. இன்றைய சூழலில் எதையும் கேட்காதே, நம்பு , நம்பு என்று சொல்லும் பள்ளிக்கூடங்கள்,எதையும் வாசிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத ஆசிரியர்களிடம் சிக்கிக்கொள்ளும்  மாணவ், மாணவிகள், அதுவும் கேள்வி கேட்கும் மனப்பான்மை இருந்தால் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை நாம் இக்கதையின் மூலம் ஊகிக்கலாம்.  ஒரு ஆசிரியை " ஆயிஷாவின் உறவில்தான் நான் உணர ஆரம்பித்தேன் எவ்வளவு தூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழ்ந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம் என்று.நான் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகிறோம். அறிவும் வளருவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை ? " கையைக் கட்டு ... வாயைப் பொத்து ...:ப்க்கம் 17 "  உணர்வதாக , ஆயிஷாவால்  தனது பணியை, படிப்பை புதிப்பதாக வரும்  பகுதி  அருமை. வகுப்பறைகள் மாறினால் , நாடே மாறும். இன்று வகுப்பறைகள் எல்லாம்  பெரும்பாலும் அஞ்ஞானத்தை பரப்பும் இருட்டறைகளாக உள்ள நிலையில் வெளிச்சத்தைக் கொடுக்கும் மெழுகுவர்த்தியாய் இந்தப் புத்தகம் , ஒரு நம்பிக்கை அளிக்கிறது.
ஆனந்த விகடன் பேட்டியில் இந்த நூலின் ஆசிரியர் அளித்த பதில்

''ஆயிஷா உருவான கதையைச் சொல்கிறீர்களா?''

''என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா’வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா’வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'

இன்று இந்தப் புத்தகம் 1 இலட்சம் பிரதிகள் விற்றுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் அதிகம் விற்கக்கூடும். நம்மைப் போன்றவர்கள் இந்த நூலின் பிரதியை தெரிந்த மாணவ, மாணவிகளிடம் ,ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். 'ஆயிஷா ' புத்தகம் படித்துள்ளீர்களா எனத் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். வெறும் 15 ரூபாயில் கிடைக்கும் மாற்றுச்சிந்தனை, ஆக்கச்சிந்தனை  புத்தகம் இந்தப் புத்தகம. படிக்காதவர்கள் தய்வுசெய்து வாங்கிப்படியுங்கள். பரப்புங்கள்.

Saturday, 21 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்
ஆசிரியர்                   : கெளரி ராமஸ்வாமி
வெளியீடு                  : ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-4
இரண்டாம் பதிப்பு             : 2008,  விலை ரூ 23.00 மொத்த பக்கங்கள் 104

                                 தொலைபேசி, செல்பேசி, உள்ளூர் இணைப்பு, வெளியூர் இணைப்பு, வெளி நாட்டு இணைப்பு என்னும் சொற்கள் காதுகளில் விழுந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் தொலைபேசி சார்ந்து கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புப்பெற்று பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் 1871- ல் தான் , அ.கி.பெல் தன்னுடைய உதவியாளர் வாட்ஸனுடம் முதன் முதலில் தொலைபேசி மூலம் பேசியிருக்கின்றார். 134 ஆண்டுகளில் உலகத்தை , உலக நடப்பை தலைகீழாக மாற்றிய தொலைபேசியைக் கண்டுபிடித்த அ.கி.பெல்லினைப் பற்றிய சுவையான தகவல்களைத் தரும் புத்தகம் இந்தப் புத்தகம்.

                                    "முன்னோர்கள், இளமைப்பருவம், குடும்பத்தில் சோகம், பிராண்ட போர்ட், பாஸ்டன், 'மிஸ்டர் வாட்ஸன்-இங்கு வாருங்கள்- நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்', நூற்றாண்டுக் கண்காட்சி, தொலைபேசிப் பரிசோதனைகள், சாதனைக்குப் பிறகு, பெல்லின் குடும்பம், பெல்லின் கண்டுபிடிப்புகள், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் - ஒரு கணிப்பு " என்னும் 12 தலைப்புகளின் அ.கி. பெல்லின் வாழ்க்கையும், அவரது கண்டுபிடிப்பிற்காக அவர் பட்ட பாடுகளும், அறிவியல் அறிஞரான அவர் விற்பனைத் திறன் இல்லாமையால் பொருளாதார ரீதியாக நலிந்ததையும் ஆனால் மனித நேயமிக்க மனிதராக வாழ்ந்ததையும் இப்புத்தகம் நேர்த்தியாகக் கூறுகின்றது.

                             நாடகமும், இலக்கியமும் அ.கி.பெல்லை, அவரது தந்தை மெல்வில் பெல்லை, அவரது தாத்தா அலெக்ஸாண்டர் பெல்லை (செருப்புத் தைக்கும் தொழிலாளி ) எவ்வளவு தூரம் ஈர்த்தது என்பதும், குறிப்பாக சேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதை ஒரு கலையாக மூன்று தலைமுறையாக செய்து வந்தனர் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. 'இருப்பதா? இறப்பதா ? " என்னும் சேக்ஸ்பியரின் வசனமே , தொலைபேசி முன்னோட்டச்சோதனைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்பதும் புதிய தகவல் .

                                  பல சமயங்களில் ஒரே வேலையைச்செய்யும் திறமை பெற்றவராக அ.கி.பெல் இருந்ததும், மனித நேயத்தை தனது வாழ் நாள் முழுவதும் கடைப்பிடிப்பவராக,ஊமை, செவிடுகளாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்காக தனது வாழ்வு முழுமையும் அர்ப்பணித்தவராக இருந்ததும் விவரிக்கப்படுகின்றது. தொலைபேசி மட்டுமல்ல, 16 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்பதும், தனது 29-ம்  வய்திலேயே தொலைபேசியை அவர் கண்டுபிடித்து விட்டாலும், பகட்டாக- சோம்பேறியாக அந்தப் பணத்தை செலவழிப்பவராக இல்லாமல், தனது வாழ் நாள் முழுவதையும்  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செல்வ்ழிப்பவராக  அவர் வாழ்ந்ததும் சொல்லப்பட்டுள்ளது. .

                      " நிறையப் பொதுமக்கள் டெலிபோனைப் பற்றிப் பலவிதங்களில் நினைத்து பயந்தார்கள். 'டெலிபோன் வைத்துக்கொள்வது வீட்டுக்குள் ஒரு ஒற்றனை வைத்துக்கொள்வது போல' என்றார்கள். ...'கம்பி மூலம் மின்சாரம் போகிறது, அப்படி நோய்களும் போய்ப் பரவி விட்டால்...' என்று மற்றொரு பயம். டெலிபோனால் காது செவிடாகுமா? மன நிலை பாதிக்குமோ ?" என்ற கவலைகள் வேறு. இவற்றைத் தவிர 'கடவுள் டெலிபோன் பற்றி என்ன நினைப்பார் ' என்ற விசாராம் வேறு! கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளில் 'டெலி போனை உயபோகிக்க்க்கூடாது ' என்று எழுதியிருப்பதாக ஆதாரத்துடன் காட்டவும் சிலர் இருந்தனர்! இந்தக் கருவி கண்டுபிடிப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இதை உபயோகிக்ககூடாது என்று பைபளில் எழுதி வைத்திருக்கிறதாம் " பக்கம்-56-57 . மேலை நாட்டில் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடும் இயந்திரமாக கிறித்துவ மதம் இருந்திருக்கின்றது  என்பதும், பல அறிவியல் அறிஞர்கள் மதவாதிகளுக்கு அஞ்சியே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாறு. அதற்கு அ.கி.பெல்லும் விதி விலக்கு அல்ல போலும். டெலிபோனில் முதலில் கரகரவென்று குரல் கேட்டதும் 'சாத்தான் க்ம்பி வழியாகப்பேசுகிறது' என்றும் மக்களிடம் பரப்பி விட்டார்கள் என்பதும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 2014 ஆம் ஆண்டு பிறக்கப்போகும் இப்போதும்கூட , சிலர் சொர்க்கம் என்றும் நரகம் என்றும், சாத்தான் என்றும் பிதற்றிக்கொண்டிருக்கும் வேளையில் 1880-களில் மக்கள் நம்பியதில் என்ன வியப்பு இருக்கின்றது. அதையெல்லாம் மீறித்தான் அ.கி.பெல் வெற்றி பெற்றிருக்கின்றார்.

                   அ.கி.பெல் தன்னுடைய காதலி, பின்னால் மனைவியாகிய மேபெல் ஹப்பரிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்(மனைவியிடம் அலெக் பெல் கொண்ட அன்பு, இலக்கியத்தில் பொறிக்கத்தக்கது ,இருவரும் மிக அந்நியோன்யமாக, ஒருவருடன் மற்றவர் ஆதரவோடு இணைத்துக்கொண்டு இறுதிவரை வாழ்ந்தார்கள் (பக்கம்102))  என்பதும், அதனைப் போல உலக்ப் புகழ்பெற்ற சாதனையாளர் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அ.கி.பெல்லின் உதவி(அலெக் பெல்லை சந்தித்ததுதான் தனக்குத் தன்னம்பிக்கையை  கொடுத்து 'இருட்டிலிருந்து வெளிச்சத்துக் கொண்டு போனது; தனிமையிலிருந்து நட்புக்குக் கூட்டிப்போனது ' என்று எழுதியிருக்கின்றார் (பக்கம் 102) )என்பதும் சுட்டப்பட்டுள்ளது. ' நேஷனல் ஜியாகிரபிக் ' பத்திரிக்கையை வாங்கி , பல புதுமைகளைப் புகுத்தி , தனது மருமகனான கில்பர்ட் கிராஸ்வீனர் என்பவரை ஆசிரியராக நியமித்து, அதன் வளர்ச்சியில் அ.கி.பெல்லின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                                             செவிடர்களுக்கு காது கேட்க வைக்க முடியுமா? என்பதற்காகவே தனது தந்தை உருவாக்கிய பார்க்கும் பேச்சை, ஒலி கேட்கும் தன்மையை, காதின் அமைப்பை, அதில் ஒலி கேட்கும் தன்மையை சிறுவய்திலேயே ஆராய்ந்திருக்கின்றார். எம்பதி என்று சொல்வார்களே, அதனைப் போல காது கேளாதவர்களின் துன்பத்தை தனது துன்பமாக ,உணர்ந்ததே தொலைபேசி கண்டுபிடிப்பிற்கு அடிப்படை. " இவர் மனம் அவர்கள்பால்(காது கேளாதவர்கள் ) மிகவும் இரங்கியது. 'என்னுடைய உணர்வுகளும் இரக்கமும் ஒவ்வொரு நாளும் பொங்குகிறது. இந்தக் குழ்ந்தைகள் படும் துயரைப் பார்த்து என் இதயம் வலிக்கிறது ' என்று ..குறிப்பிட்டார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பருடன் பேசுகையில் 'செவிடர்களின் தனிமையை யாரால் கற்பனை செய்து பார்க்க முடியும் ? நாம் கிராமத்துக்குப் போய், வயல்களில் நடக்கும்பொழுது , தனிமையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால் ஒரு புத்திசாலியான செவிட்டு மனிதன் , ஒரு சந்தோசமான கூட்டத்தின் மத்தியில் , மற்றவர்களுடன் பேசவோ, கேட்கவோ முடியாமல் இருக்கும்போது உணரும் தனிமைக்கு முன் எம்மாத்திரம்? " என்று வேதனையுடன் குறிப்பிட்டார்( பக்கம் 100),... உலகம் முழுவதும் இருக்கும் செவிடர் பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதுடன் நின்று விடாமல் , தன் பெயரையும் ,செல்வாக்கையும் உபயோகித்து ,அவர்கள் துயரைக் களைய பல திட்டங்களையும் ,அமைப்புகளையும் ஏற்படுத்தினார். மனித குல உயர்வுக்காக இன்னும் என்ன புதிய கண்டுபிடிப்புகளைச்செய்யலாம் என்பதே அவர் வாழ்வின் குறிக்கோளாக இருந்தது.(பக்கம் 104).

                 ஒரு அறிவியல் அறிஞரின் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை விவரிப்பதோடு நின்று விடாமல், அவரின் மனித நேய மறுபக்கத்தை மிக இயல்பாக, படிப்பவர்க்கு ஆர்வம் ஏற்படும் வகையில் இந்தப் புத்தகத்தை இந்த் நூலின் ஆசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இளைஞர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய புத்த்கம் இந்தப்புத்தகம். 

Friday, 20 December 2013

நிகழ்வும் நினைப்பும்(11) : ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய் ....

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இணையம் இணைப்பு பி.எஸ்.என்.எல்-ல்லில் வேண்டும் என்றார். விவரங்கள் பல கேட்டார். இணைப்பையும் வாங்கினார். எத்தனையோ பேர் இணைய இணைப்பு வாங்கி , என்ன செய்வது , எப்படி அதனைத் தனக்கும் , சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவது என்று இன்றும் கூடத் தெரியாது இருக்கும் நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு வாங்கி , ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்த அந்த நண்பர், மிகப்பெரிய பணக்காரர் இல்லை, பெரிய வாய்ப்பு வசதிகள் இல்லை, ஆனால் ஆழமான புரிதல் பெரியாரியலில் உண்டு.தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கே உரித்தான கடுமையான உழைப்பு உண்டு.  தொடர்ந்து , தொய்வில்லாமல், எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக தொடர் உழைப்பினைக் கொடுக்கும் அந்த இனிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்கள். தமிழ் ஓவியா என்னும் பெயர் தமிழ் மணம் மற்றும் தமிழ் திரட்டிகளில் மிகவும் புகழ்வாய்ந்த பெயர்.அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளித்தரும் வலைத்தளமாய், தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, புரட்சிக் கவிஞர் பாவேந்தரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை, திராவிடர் இயக்க கொள்கையை இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் , தெவிட்ட தெவிட்ட  தெரிந்து படிக்கலாம் என்ற வகையில் அமைந்திட்ட வலைத்தளமாய் தோழர் தமிழ் ஓவியாவின் வலைத்தளம்.

                        

                                      பல ஆண்டுகள் தொடர்ந்து காலை 4 மணி முதல் காலை 6 மணிவரை இணையத்தில் தகவல்களை ஏற்றும்  தோழர். விடுதலையில் , உண்மையில் , பெரியார் பிஞ்சுவில் வரும் செய்திகளை, தனது வலைத்தளத்தில் தரும் தோழர். ஆரம்பித்த காலத்தில் , பரம்பரைப் பகைவர்கள், பொய்ப்பெயர்களில் வந்து திட்டிக் குவித்தபோதும், ஆபாசமாய் அர்ச்சித்த போதும், தனது பணியைத் தொடர்ந்து செய்தவர். பழகுவதற்கு மிகவும் இனியவர்.  சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்.நண்பரின் இணையர் தமிழரசி, மேல் மெய்ஞ்ஞானபுரத்து திராவிடர் கழகக்  குடும்பத்தினைச்சேர்ந்தவர். ஒத்த மனதினராய், ஒருமித்த கருத்தினராய், தந்தை பெரியாரின் கருத்துக்க்ளை தரணி எங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க இணையருக்கு ஆக்கபூர்வமாய் ஒத்துழைக்கும் அன்புத் தங்கை தமிழரசி அவர்கள். பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவர் , மதிப்பிற்குரிய சிகாகோ டாக்டர் சோம்.இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் , மிகப்பெரிய பணி, தமிழ் ஓவியாவின் பணி, அவரை அறிவீர்களா எனக்கேட்டார். நன்றாக அறிவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய அளவிலே பாராட்டினார்கள். இன்றைக்கும் உலகத்தில் இருக்கும் பெரியார் தொண்டர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின்  தலைமையைஏற்றுச்செல்பவர்கள் எல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் , அன்பிற்குரிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்களின் பணி அமைந்துள்ளது. இயக்க ரீதியாக என்னைச்சுற்றி இருக்கும் பல தோழர்களைப் பார்க்கிறேன், வியக்கின்றேன். என்ன எதிர்பார்ப்பு வாழ்வில் அவர்களுக்கு, தந்தை பெரியார் சொன்ன மனித நேயக்கொள்கை வளரவேண்டும் என்பதனைத் தவிர. , தன் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,தன் சொந்தக் காசை செலவழித்து பொதுத்தொண்டு ஆற்றும் பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து பல நேரம் வியந்திருக்கின்றேன்.  . பழனி மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்த்லைவராக பணியாற்றக்கூடிய அருமையான தோழர் அவர். அவரின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடைய உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன். "19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி " என்று தன்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருக்கின்றார் தமிழ் ஓவியா . இதுவரை அவரது வலைத்தளத்திற்குள் செல்லாதவர்கள் சென்று பாருங்கள் . http://thamizhoviya.blogspot.in/. வியந்து போவீர்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்- தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள். .