சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யம்போல நாம் கவனிக்கவேண்டிய நூலகம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாகும். இந்த நூலகம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது ஒரு தனிப்பட்ட நபரின் வாசிப்பு ஆர்வமும், அவர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழித்துச் சேகரித்த புத்தகங்களும் ஆகும். அவரது பெயராலும் அவர் வைத்திருந்த நிறுவனத்தின் பெயராலும் இந்த நூலகம் அமைந்திருப்பது சிறப்பாகும்.
ஆம், அவரது பெயர் முத்தையா.1926ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர்.சொந்த ஊர் இப்போதுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர்.
திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் நடத்திய இதழ்கள் மற்றும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களையெல்லாம் வாங்கிச் சேகரித்து வைத்திருந்திருக்கிறார். இவர் சேர்த்து வைத்ததில் இரண்டு இலட்சம் சிறுகதைகள்,5 இலட்சம் செய்தித் துணுக்குகள், ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5000 கட்டுரைகள், அவருக்குக் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் என்று இவர் சேமிப்பைப் பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது.
https://rmrl.in/ta/visit என்னும் இணையதளம் மிக விரிவான தகவல்களைத் தருகிறது. இந்த நூலை எதற்கு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.” தமிழ்ப் பண்பாட்டின் பல அம்சங்களைக் காட்சிப்படுத்தி வருகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இதன் முக்கியச் செயல்பாடுகள் நூல் சேகரித்தல், நூல்பட்டியலிடுதல், எணினிமயமாக்கல், நூல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கண்காட்சி வடிமைத்தல் முதலியவையாகும்.
தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதி, தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் தாங்கள் சேகரித்து வைத்திருந்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கியவர்கள் பற்றியும், அவர்கள் வழங்கிய நூல்கள் பட்டியலும் உள்ளது.அந்த வகையில் முனைவர் வசந்ததேவி மற்றும் பலர் வழங்கிய நூல் பட்டியல் தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதியில் இருக்கிறது.(இந்தக் கட்டுரை எழுதி அனுப்பும்போது தோழர் பேரா வசந்ததேவி அவர்கள் இருந்தார்கள்.இந்தக் கட்டுரை வெளிவரும்போது அவர்கள் இல்லை.தன் வாழ் நாளிலேயே தான் சேகரித்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா நூலகத்திற்கு அளித்த தோழர் பேரா வசந்ததேவி அவர்களுக்கு வீரவணக்கம்...வா.நேரு)
இந்த நூலகத்தில் சிந்துவெளி ஆய்வு மய்யம் என்னும் தனிப்பிரிவு இருக்கிறது. அய்ராவதம் மகாதேவன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு மய்யத்தின் தற்போதைய தலைவர் திரு.ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆவார். “சிந்துவெளி ஆய்வு மய்யம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், சென்னை கணித அறிவியல் நிறுவனம், சியாட்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற உலகெங்கிலும் உள்ள முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இத்துடன் ஓர் ஆய்விதழையும் ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.
அய்ராவதம் மகாதேவன் வெளியிட்ட சிந்துவெளித் தொடரடைவை (1977) இணையச் செயலியாக மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் indusscript.in என்னும் தளத்தில் வெளியிட்டுள்ளது. இது சிந்துவெளி அறிஞர்கள், ஆர்வமுள்ள நபர்களுக்கு சிந்துவெளி எழுத்துகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் திறந்தநிலை இணையக் கருவியாகச் செயல்படுகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் அனைத்து அறிஞர்களுக்கும் சிந்துவெளி ஆய்வு மய்யம் எப்போதும் உதவுதற்குத் தயாராக இருக்கும்.அய்ராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துகளை எங்கள் மின்நூலகத்தில் வாசிக்கலாம்.” என்று அதன் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஆலமரமாய், திராவிட மாடல் அரசினை நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு நிதியுதவிகளைப் பெறும் நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்வதுடன், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் எல்லாம் விரும்பி வரும் நூல்களின் வேடந்தாங்கலாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
நூலகத் தொடர்புக்கு : 914422542551
செல்பேசி : 8015312686
நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்டு 1-15,2025