Wednesday 13 March 2013

மயங்கிய அந்த முதிய உயிர் !

எங்கள் ஊரில்
இன்றும் ஒரு
முதிய உயிர்
அரளிக் கொட்டையை
அரைத்துக் குடித்து
அகாலமாய்
விடை பெற்றிருக்கிறது !

நாற்பது வருடங்களுக்கு
முன்னால் கணவனை இழந்த கிழவி !
பிள்ளைகளே உலகம் என
உதிரத்தைக் கொடுத்து
அவர்களை வளர்த்த கிழவி !

பெற்ற இரண்டு
பிள்ளைகளும்
மனைவி சொல்லைத்
த்ட்ட முடியாமல்
பெற்றவளை
முறை வைத்து
மாற்றி மாற்றி
அலைக்கழித்தபோது
சொல்லி அழுத
அந்த முதிய உயிர்
யாரிடமும் சொல்லாமல்
கொள்ளாமல் விடை
பெற்றிருக்கிறது விரக்தியால் !

ஆளுக்கொரு மாதம்தானே
எதற்கு அவள் அதற்குள்
அவள் வீட்டில்
இருந்து வந்தாள் ?
என்று தான் கட்டிய
வீட்டிற்குள் தன்னை
விட மறுத்து இளையவள்
அடம் பிடித்த போது
அரண்டுதான் போனாள் கிழவி பாவம் !
ஆற்றாமையால் நொந்து அழுதாள் !


வெளியூர் போன மூத்த மகனோடு
போகப் பிடிக்கவில்லை என்றாள் கிழவி
எங்கேயாவது போய் அவளை
இருக்கச்சொல்
அல்லது ஏதேனும்
முதியோர் இல்லத்தில்
அவனைச்சேர்க்கச்சொல் !

அவள் இங்கு வந்தாள்
நான் எனது அப்பா வீட்டுக்குப்
போய் விடுவேன்
நீயுமாச்சு ,நீ பெத்த மூணு
பிள்ளையாமாச்சு என்று
அவள் கணவனை
மிரட்டியபோது
தான் கட்டிய வீட்டை
விட்டு வெளியில் வந்து
தெருக்களில் திரிந்த
அந்த முதிய உயிர்
அரளிக் கொட்டையைத் தின்று
அகாலமாய் விடை பெற்றிருக்கிறது !

இளையவள் வீட்டில்
நாயுண்டு நான் பார்த்திருக்கிறேன் !
நாலு வேளைச்சோறுண்டு
அதற்கு அவள் வீட்டில் !

ஒரு வேளைச்சோற்றை எவரிடம்
கேட்க என மானத்திற்கு அஞ்சி
மயங்கிய அந்த முதிய உயிர்
அரளிக்கொட்டை தின்று
சோறு கேட்கா நிலை
எய்துள்ள கொடுமையை
நான் என் சொல்ல !
எவரிடம் சொல்ல !
--------------------------------

எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-03-11 12:19:45
நன்றி : எழுத்து.காம்

No comments: