Wednesday 24 April 2013

நியாய நாள் தீர்ப்புக்காக‌ !

நியாய நாள் தீர்ப்புக்காக‌
காத்திருக்கும் நண்பர்களே!
உங்கள் பார்வையில்
எங்களுக்குத் தண்டனையுண்டு
அந்த நாளில் !
பெற்றுக் கொள்கிறோம்
அப்படி ஒரு நாள் இருந்தால் !
நீங்கள் நம்பும்
ஆண்டவன் அங்கிருந்தால் !

இவ்வுலகின் இன்னல்கள்
பலவும்
மதமென்னும் மாயையில்
மாட்டிக்கொண்ட மனிதர்களால்
எனும் எங்கள் கருத்தையும்
சொல்ல இடம் கொடுங்கள் !

கடவுள் இல்லை என்றாலே
கழுத்தை முறிக்கும்
மன்னர்கள் ஆட்சிபோல‌
கணினி யுகத்திலும்
கடுமை வேண்டாம் !
மனிதத்தை நம்புங்கள் !
நீங்கள் நம்பும்
நியாய நாள் தீர்ப்பை எண்ணி
அமைதியாயிருங்கள் !

ஒரு கடவுளை நம்பும்
ஒரு பிரிவினர்
கடவுளைத் தொழும் வேளை
அதே கடவுளின்
மற்றொரு பிரிவால்
குண்டு வெடிக்கிறதே !
மனித உடல்கள்
வெடித்துச் சிதறி
நூறு அடி தூரம் முழுவதும்
இரத்தமாய் கொட்டிக்கிடக்கிறதே !
பக்கத்து நாட்டில்
பலமுறை நடக்கிறதே !
இது எதன் பேரால்
நடக்கும் இன்னல் நண்பா ?
ஆண்டவர் பெயரால் தானே !

நாலு வகை வர்ணம் பிரித்து
நாலாயிரம் சாதி வகுத்து
இன்றும் கூட தர்மபுரிகள்
எரிகின்றதே !
பார்க்காதே ! தீண்டாதே 1
அண்டாதே எனும் அநீதி
இன்றும் கூட தொடர்கிறதே
கடவுளின் பெயரால் !

என் கடவுள் இருக்கிறது!
உன் கடவுள் இல்லை !
எனும் போராட்டம்தானே
ஆயிரம் ஆண்டு
சிலுவைப்போர்கள் !
எத்தனை உயிர்கள்
அழிந்தன !
செத்தது மனிதம்தானே !

உழைப்பவன் உணவுக்கு
அலைவதும்
உழைக்காதவன் உண்டு
கொழுப்பதுவும் கடவுள்
ஆணை என்று சொல்லி
நம்மைப் பிரித்துவைக்க
சிலர் செய்த சூழ்ச்சி
கடவுள் என்பதும்
அது போட்ட குட்டி
மதம் என்பதுவும்

பட்டினாய் கிடப்பவன்
அப்படிக் கிடப்பது
கடவுளின் தண்டனை
என்று கதைப்போர்க்கு
மத்தியில்

உலகில் உள்ள எல்லோரும்
உண்ணவும் உறங்கவும்
உடுக்கவும் பொருள்
வேண்டும் என்போர் எல்லாம்
உரக்கச்சொல்லும் வார்த்தை
"எவரின் கடவுளும்
இல்லை,இல்லை,
இல்லவே இல்லை "
என்பதுதான்

எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-04-23 21:05:55
நன்றி : எழுத்து.காம்

No comments: