குடத்திற்குள்
நிறைந்திருக்கும் நீர்போல
நினைவுகள் முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!
இறந்து விட்டாய்
என்றாலும்
கிராமத்து வீட்டின்
ஒவ்வொரு பொருளும்
ஓராயிரம் நிகழ்வுகளை
உனது நினைவுகளை
அடித்து ஒலிக்கும்
அலாரமாய் எழுப்புகின்றன
அம்மா ! என் மனதில்
எம்.ஏ.தேர்வில் வெற்றி என்றவுடன்
பருத்த உடலோடு
ஓடிவந்து என் கையைப்பிடித்து
வாழ்த்துச்சொன்ன கைகள்
மரத்துப்போய் கிடைக்கும்
நிலையில் மனதில்
மோதும் நினைவுகள்
உனக்காக நூலகத்தில்
புத்தகம் எடுக்கப்போனேன் சிறுவயதில்
பற்றிக்கொண்ட படிக்கும்
பழக்கமே
உயர்ந்தோர் பலரிடம்
பழகும் வாய்ப்பாய் அமைந்தது அம்மா !
ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையுமாய் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல
அருகில் இருந்தபோதும்
தூரத்தில் இருந்தபோதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
நிறைவூட்டினாய்
செறிவூட்டினாய்
என் வாழ்வை அம்மா !
பசுவினை இழந்த கன்றாய்
கதறுகின்ற நிலையிலும்
வருத்தம் தோய்ந்த நிலையில்
நான் அமர்ந்திருந்த நிலையிலும்
நேரிலும் கைபேசியிலும்
ஆறுதல் தந்த உறவுகளும்
தேறுதல் தந்த நட்புகளும்
பிறந்த ஒவ்வொருவரும்
இறப்பது உறுதியென்னும்
நிலையால் ஆறுதல்
அடைகின்றேன் அம்மா !

9 comments:
உண்மையும் உருக்கமும் நிறைந்ததாய் இருக்கிறது! ஒரு சிறந்த பகுத்தறிவாளரை உருவாக்கி, இந்த நாட்டுக்குப் பயன்படத் தந்த அந்த தாய்க்கு எங்கள் வீரவணக்கம்!
நன்றி ,பிரின்ஸ்.
நேரு என்ற நல்ல மனிதனை இந்த உலகிற்கு கொடுத்தமைக்கு நன்றி அம்மா!
அருமை தம்பி நேரு. நான் அருகில் உன் உறவில் இருந்ததால் அறிவேன் உன் ஒவ்வொரு வரியின் வலியை அண்ணன் சாப்டூர சேதுராமன்
நன்றி அண்ணே...
அம்மாவின் மறைவு கண்களில் நீர் கோர்த்தது. பல்வேறு செய்திகள் என்னோடு இணைந்தது.
உண்மையை உரைப்பது என்றால் நம் வளர்ச்சியில் அம்மாவின் பங்கு என்றும் நிறைந்தது. அம்மாவின் இழப்பு ஆறுதல் சொல்ல முடியாத இழப்பாகும். எங்களை முழுவதுமாக உணர்ந்து வழி நடத்தும் ஒரு நல்ல தலைவரை வழங்கிய தாய்க்கு வீரவணக்கம்.
வணக்கம் தோழர் அம்மாவின் இழப்பு யாராலும் ஈடு கட்ட முடியாத ஒன்று அதிலும் அந்தக் காலகட்டத்தில் கணவர் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளோ கடினமான ஒன்று. அப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு தோழரை உங்களைப் போல அவருக்கு வழிகாட்டியாகவும் அறிவுரை கூறும் ஒரு நல்ல தோழராகவும் இயக்கத்தில் ஒரு நல்ல தோழராகவும் நல்ல ஒரு மனிதாபிமானவராகவும் இருக்கின்ற உங்களைப் போல ஒரு தோழரை பெற்ற தாய்க்கு எங்களது வீரவணக்கம்🙏🙏🙏💐💐💐
வணக்கம் தோழர்.நன்றி.
Ungalin ammavin pasanibaivugalukku Nan endrum negilchi adaikiren-N.Sornam
Post a Comment