Monday 23 September 2013

அண்மையில் படித்த புத்தகம் : இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்..சு.அறிவுக்கரசு

அண்மையில் படித்த புத்தகம் :    இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்
நூல் ஆசிரியர்                               :    சு.அறிவுக்கரசு
வெளியீடு                                       :   நாம் தமிழர் பதிப்பகம் சென்னை -5  செல் : 9790706549
முதற்பதிப்பு                                   : ஆகஸ்டு 2012,176 பக்கங்கள்  விலை ரூ70.

                                                    மதுரையில்  14.9.2013 - சனிக்கிழமை  பி.எஸ்.என்.எல். வாசிப்போர் களத்தில் நான் அறிமுகம் செய்த புத்தகம் . "இந்நூலை எழுதியிருக்கும் திரு.சு.அறிவுக்கரசு அவர்கள் மிகச்சிறந்த திராவிட உணர்வாளர்; சிறந்த பேச்சாளர்; வளமான சிந்தனையாளர்; நினைவாற்றல் மிக்கவர்; கருத்தோட்டமுள்ள எழுத்தாளர்; அரசுப் பணி அனுபவத்துடன் நல்ல நண்பர் குழாத்தை உடையவர் " என நூலாசிரியரைப்பற்றி பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர்.  " பொங்கும் கோபக்கனலோடு , தமது ஆய்வறிவையும் ,ஆழமான இலக்கியச்சிந்தனைகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள மிக அருமையான ஒரு புரட்சி நூல்தான் இது" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல புரட்சிக் கவிஞரைப் பற்றிய புதுமையான நூல் இது.

                                                       'எழுவாய்' என முதல் அத்தியாயம் தொடங்குகிறது. புரட்சிக் கவிஞரைப் பாராட்டிய தந்தை பெரியாரின் வரிகளோடு ஆரம்பித்து, பக்திப் பாடல் எழுதுபவராக இருந்த கனகசுப்புரத்தினம், தேசியப் பாடல் புனைபவராக மாறி , பின்பு 1928-ல் இருந்து சுயமரியாதைக் கவிஞராக மாறிய வரலாறு , கடவுளுக்கு கருணை மனுப்போட்டு முதலில் பாடிய அவர் பின்பு எப்படி ' இல்லை என்பேன் நானடா -அந்தத் தில்லை கண்டு தானடா ' என்று பாடுபவராக மாறினார் என்பதனை விளக்கமாக வரலாற்றுக் குறிப்புகளோடு கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
             
                                                'நம் மொழி பற்றி' என்னும் தலைப்பில் தமிழ் மொழி பற்றி புரட்சிக்கவிஞர் பாடியுள்ள பல்வேறு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார். " இந்தளவுக்குத் தம் மொழியைச் சிறப்பித்து பாடிய கவிஞர்கள் எவரேனும் இருப்பரோ என்பது அய்யமே. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனப்பாடி புலவர் பாரதி இனிமை என்று கூறினார். ஆனால் பாரதிதாசனோ தமிழைத் தமது உயிர் என்றே கூறி விட்டார் " (பக்கம் 25) என்பதனைக் குறிப்பிட்டு, 'தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் ' ,' தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர் ' என்றும் மற்றும் 'தமிழுக்கும் அமுதென்று பேர்...','கனியிடை ஏறிய சுளையும்...' போன்ற தமிழின் பெருமை சாற்றும் கவிதைகள், பின்பு தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை தமிழியக்கமாகப் பாடிய புரட்சிக் கவிஞரின் 'எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்...' போன்ற கவிதைகள் , தமிழ் ,தமிழரின் பற்றிய புரட்சிக் கவிஞரின் ஏக்கம், அந்த ஏக்கம் தவிர்த்திட என்ன செய்ய வேண்டும் என்பதனைச்சொல்லும் அவரின் கவிதை வரிகள் எனப் பல முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கான தரவுகளைப் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கின்றார் நூலாசிரியர் திரு சு.அறிவுக்கரசு. வழிகாட்டியை(பாரதியை) விஞ்சியிருக்கின்றார் தமிழ் மொழியைப் பற்றிப் பாடியதில் வழி நடந்தவர் (பாரதிதாசன் ) என்பதனை ஆய்வேடு போல நிருபித்திருக்கின்றார் இந்த இயலில்.

                                     இயற்கையைப் பாடாத எவரும் தன்னைக் கவிஞர் என அழைத்துக்கொள்ளத் தகுதியில்லை. 'இயற்கை எழில் பற்றி ' என்னும் தலைப்பில் சங்கத்தமிழுக்கு அடுத்து இயற்கை அழகை அழகுத் தமிழில் வடித்தவர் பாரதிதாசன் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் கூறுகின்றார் . 'குயில் கூவிக்கொண்டிருக்கும்....' நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து...'  பொதிகை மலை விட்டெழுந்து சந்தனத்தின் ...' விட்டுவிட்டுக் குழல் ஊதும் மெட்டு வைத்துக் குயில் பாடும் ...' போன்ற கவிதைகளை எடுத்து பாரதிதாசன் பாடியிருக்கும் இயற்கையின் எழிலை எடுத்து இயம்பும் அழகின் சிரிப்பாய் இந்த இயல் அமைந்துள்ளது.

                             'உவமை அழகு' என்பது அடுத்த இயல். உவமை என்றால் என்ன என்பதனை விளக்கிவிட்டு ' அத்தகைய உவமை நயத்தை மிகவும்  அழகுடனும் ஆற்றலுடனும் தம் கவிதைகளில் ஆண்டிருப்பவர் புரட்சிக்கவிஞர் ' (பக்கம் 42)  எனக்கூறும் இந்த நூலின் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் கையாண்டிருக்கும் உவமைகளின் பட்டியலை பட்டியலிட்டுக்கொடுத்துள்ளார். காதலியின் முகம் கண்டு பாடும் கவிஞன் போல , 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேடைதோறும் முழங்குபவர், புரட்சிக் கவிஞரின் பாடல்களிலேயே புழங்குபவர் என்பதாலோ என்னவோ, ஏழை வாழ்வுக்கு, மழலை மகிழ்வுக்கு, மூப்பின் கொடுமைக்கு, பகுத்தறிவைப் பற்றி, சமூகப்புரட்சிக்கு...,எனப் பட்டியலிட்டு 'இருட்டடிப்புச்செய்தாலும் மின்னுகிற ரேடியம் -புரட்சிக் கவிஞர் ' என் முடிக்கின்றார் இந்த இயலை. காதல் குறும்புகள், மானுடப்பற்று, பெண் உரிமை எனும் உள்தலைப்புகளில் புரட்சிக் கவிஞரின் தனித்தன்மையான கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                         உலகக் கவிஞ்ர்களோடு என்னும் தலைப்பில் இந்த நூலாசிரியர் சு.அறிவுக்கரசு அவர்கள் கொடுத்திருக்கும் தரவுகள் முனைவர் பட்டத்திற்கு தமிழ்- ஒப்பியல் இலக்கியத்தில் ஆய்வு செய்வோருக்கு உதவும் கருவூலங்கள். தமிழில் புரட்சிக் கவிஞர் என்பது போல ஆங்கிலத்தில் Poet of revolt என்று அழைக்கப்படும்  பைரனோடு ஒப்பிடுகின்றார். ' தம் காலச்சமுதாயத்தை விமர்சித்துத் தம் கவிதைகளைப் படைத்தவர் என்பதால் இப்பெருமை(பைரனுக்கு) . அத்தகு பெருமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் உண்டு' பக்கம் 75   என்று குறிப்பிடும் நூலாசிரியர் இருவருக்குமான ஒற்றுமைகளைக் குறிப்பிடுகின்றார். அதனைப்போல வால்ட் விட்மனோடு, கிளாட் மெக்கேயுடன், இராபர்ட் பிராஸ்ட்டுடன், வில்லியம் பட்லர் யேஸ்டுடன், செவ்சென்கோவுடன், இயற்கைக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த்துடன் என உலகின் போற்றத்தக்க கவிஞர்களின் கவிதையும் புரட்சிக் கவிஞர் கவிதையும் கருத்தளவில் எப்படி ஒத்துப்போகின்றது என்பதனைக் கொடுத்துள்ளார்.

                                அதனைப் போலவே சங்கம்புழ மற்றும் குமரன் ஆசான் போன்ற  மலையாளக்கவிஞர்கள், வங்காளக் கவிஞர் ஜீவானந்த தாஸ் போன்றவர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டு பிற  மாநிலக் கவிஞர்களோடு என்னும் தலைப்பில் நூலாசிரியர் கொடுத்துள்ளார். வெளி மாநிலங்களில், வெளி நாட்டில் வாழும் தமிழர்கள்  இந்தக் கவிஞர்களின் கவிதைகளையும் , புரட்சிக் கவிஞரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இன்னும் விரிவாக அளிக்கலாம்.

                                 தொழிலாளர் பற்றி என்னும் இயலில் ' கவித்துவத்தூவலில் மானுடப்பற்றை நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள் காலத்தை வென்று நிற்பதைக் காண்கிறோம். ' பக்கம் 115 எனக்குறிப்பிடும் இந்த நூலாசிரியர் தொழிலாளர்களைப் பற்றிய புரட்சிக்கவிஞரின் பாடல்கள் எத்தன்மை வாய்ந்தவை என்பதனைப் படித்து உணருங்கள்  எனச்சொல்லும் வண்ணம் பட்டியலிடுகின்றார். சோசலிசம், கமயூனிசம், கேப்டலிசம் போன்றவற்றிற்கு கவிஞர் தரும் விளக்கங்கள் எவ்வளவு எளிமையானவை , எவ்வளவு நுட்பமானவை   என்பதனைக் கவிதையைச்சுட்டி சுட்டுகின்றார். பொதுவுடமை இயக்கங்கள் பாரதியைக் கட்டி அழுதுகொண்டு, பாரதிதாசனை விட்ட மர்மம் என்ன என்பதனை விளக்கும் இயலாக இந்த இயல் உள்ளது. பொதுவுடமை இயக்கத்தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி இந்த நூலின் இப்பகுதி.

                                   எழுவாய் என இந்த நூலினை ஆரம்பித்த நூலாசிரியர் முடிவாய் எனப்பல செய்திகளைக் கூறி முடிக்கின்றார். பாரதியும், புரட்சிக் கவிரும் வாழ்ந்த வருடங்கள், பாடிய பாடல்களின் உள்ளடக்கங்கள், போன்ற பல செய்திகளைக் குறிப்பிட்டு புரட்சிக் கவிஞர் -பாரதிதாசன் அல்ல,பாரதியை விடப் பல நிலைகளில் விஞ்சியவர் என்பதனை ஆய்வேடு போல நிறுவுகின்றார். தோழர் தா.பாண்டியனே பாரதி தடுமாறும் இடங்களைப் பட்டியலிடுவதை சுட்டியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

                                 " எழுதுவதல்ல கவிதை; ஆழ்மனதில் படிந்து இருக்கும் இலட்சியக் கனல்கங்குகள் எழுவதுதான் கவிதை என்பதை எடுத்துக்காட்டிய எழுதிக்காட்டிய எழுச்சிக் கவிஞர் புரட்சிக்கவிஞர், ..." பக்கம் 167 எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அறிவுக்கரசு அவர்களின் இந்தப் புத்தகம் புரட்சிக் கவிஞரை பற்றி  பத்தோடு பதினொன்றாய் வந்துள்ள புத்தகம் அல்ல. பாரதியின் தாசன் அல்ல புரட்சிக் கவிஞர் , அவர் வேறு இவர் வேறு என்பதனை ஆய்வு நோக்கில் நிறுவும் புத்தகம். மேடைப்பேச்சாளர்கள் தங்கள் கைவசமும், திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் மனதிற்குள் மனனமும் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம். அனைத்து கருத்தோட்டம் உள்ளவர்களும் உண்மையில் பாரதிதாசன் யார் ? என்பதனை உணர்ந்து கொள்ள ,தெரிந்து கொள்ள ,படிக்க வேண்டிய புத்தகம்,. பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல  வேண்டிய புத்தகம். .

                                  இந்தப் புத்தகத்தை வாசிப்போர் களத்தில் அறிமுகம் செய்து விட்டு வெளியே வரும்போது தோழர் மு.சங்கையா, "புரட்சிக் கவிஞர் பாடல்கள் நாடி, நரம்புகளில் ஊடுருவும் தன்மை வாய்ந்தது" என்றார். "படிக்கும்போதே உணர்ச்சி ஊட்டும் கவிதைகள் அவரின் கவிதைகள்" என்றார். ஆம், புரட்சிக் கவிஞரின் பாடல்களில் ஏதேனும் ஒன்றிரண்டாவது படித்து, மனப்பாடம் செய்து பின்பு உங்களுக்கு நீங்களே சொல்லிப்பாருங்கள்.அப்போது நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள், புரட்சிக் கவிஞர்  பாடல் ஏற்றும் உணர்வு ஓட்டத்தை, மனதில் ஏற்படும் அதிர்வுகளை .

2 comments:

anandam said...

மிக நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.//ஏழை வாழ்வுக்கு, மழலை மகிழ்வுக்கு, மூப்பின் கொடுமைக்கு, பகுத்தறிவைப் பற்றி, சமூகப்புரட்சிக்கு...,எனப் பட்டியலிட்டு 'இருட்டடிப்புச்செய்தாலும் மின்னுகிற ரேடியம் -புரட்சிக் கவிஞர் '//ஆனாலும் ஒடுக்கப்பட்டவர்களால் இன்னும் அறியப்படாத ஒளிக்கீற்றாக இருப்பது தான் நமக்கெல்லாம் வேதனை..

முனைவர். வா.நேரு said...

நன்றி