Sunday 1 March 2015

பசியால் பட்டறிவு.....

     

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
எவரேனும்
வருவார்களா என்று !

மருத்துவமனையில்
நோய்வாய்ப்பட்ட மகளோடு
துணையாய் நான் !
நோயால்
மருள மருள விழிக்கும்
மகளைத் தனியே
விட்டுச்செல்ல மனமில்லாமல்
நெருக்கமான நண்பர்கள்
எவரேனும் வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

நண்பர்கள்
படை உண்டு
வாருங்கள் என்று
சொன்னால் வந்து
குவிவார்கள் என்றாலும்
எவரையும் தொந்தரவு
செய்ய வேண்டாம்
எனும் எண்ணத்தில்
தானாக எவரேனும்
வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

பை நிறையப்
பணம் இருக்கிறது !
பத்து நிமிட தூரத்தில்
உணவு விடுதிகள் இருக்கின்றன
என்றாலும் பட்டினியாய்
பலமணி நேரம்
எவரேனும் வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

எண்ணிப்பார்க்கிறேன் !
எத்தனை நண்பர்களின்
குழ்ந்தைகள் இருந்தனர்
மருத்துவமனைகளில் !
கால்களில் சுடுதண்ணீர்
ஊற்றிக்கொண்டு
சென்றோம் , விசாரித்தோம்
வந்தோம் என்றுதானே
இருந்தோம் !
எப்போதாவது நண்பர்களிடம்
நானும் இருக்கவேண்டுமா
என்றோ
ஏதேனும் குறிப்பிட்ட நேரத்தில்
வந்து இருக்கவேண்டுமா
என்றோ
கேட்டதில்லை இதுவரை !

வயிற்றைக் கடிக்கும்
பசியால் பட்டறிவு கிடைத்தது !
இனிமேல் மருத்துவமனைகளில்
இருக்கும் நட்புகளிடம்
கேட்டல் வேண்டும் !
நேரத்தை நிறைய
ஒதுக்கவேண்டும் !

செயற்கை புன்னகை
உதிர்த்து
நலமடைய வாழ்த்துக்கள்
எனச்சொல்லி வருவதைவிட
நானும் உன்னோடு
இருக்கிறேன்
உனக்கு வரும் இடர்களில்
என்னும் உரிமையோடு
நேரத்தை ஒதுக்கியும்
நட்புகள் இருக்கும்
மருத்துவமனைகளில்
நுழைந்திடவும்
இருந்திடவும் நினைக்கிறேன்....

                                              -- வா.நேரு---

நன்றி : எழுத்து.காம்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா
தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா. பெரும்பாலும் எனது அல்லது எனக்கு மிக நெருங்கியவர்களின் அனுபங்களோடு கொஞ்சம் கற்பனையும் கலந்தவையே எனது படைப்புக்கள்.கவித்துவத்தை விட சொல்ல நினைக்கும் செய்தி சென்றடைந்தால் போதுமானது என்ற எண்ணமும் உண்டு. நன்றி.

Yarlpavanan said...


சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

முனைவர். வா.நேரு said...

நன்றி யாழ்பாவாணன் அவர்களே, தொடர்கிறேன்....