Monday 19 December 2016

திருச்சி: ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் முத்தரப்பு மாநாட்டில் முத்தான மூன்று தீர்மானங்கள்

தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 திட்டத்தை இம்மாநாடு முற்றிலுமாக நிராகரிக்கிறது-
‘நீட்’ தேர்வை அறவே கைவிடுக - இல்லையெனில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தேவை
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து
மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!
திருச்சி: ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் முத்தரப்பு மாநாட்டில்  முத்தான மூன்று தீர்மானங்கள்

திருச்சி, டிச.19- தேசிய புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி மூன்று முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சிராப்பள்ளி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை மற்றும் ‘நீட்’ எதிர்ப்பு மாநாட்டில் (தமிழ்நாடு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முத்தரப்பு மாநாட்டில்) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1:
முன்மொழிந்தவர்: பி.சரவணன், மாநிலப் பொரு ளாளர், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.
தேசிய புதிய கல்விக் கொள்கையை கைவிடுக!
‘‘தேசியக் கல்விக் கொள்கை - 2016 சில உள் ளீடுகள்’’ என்ற பெயரால் (Some Inputs for Draft National Education Policy - 2016)  வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை என்பதை இம்மாநாடு முற்றி லுமாக நிராகரிக்கிறது!
மத்திய அரசின் இந்தத் தேசிய கல்விக் கொள் கையை முற்றாக நிராகரிப்பதற்கான காரணங்கள்:
1.பெரும்பாலான பொதுமக்களின் கருத்தை அறிந்து கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருப்பது உண்மைக்கு மாறானதாகும்.
2.இக்கல்வித் திட்டம், கல்வியாளர்களைக் கொண்டுதயாரிக்கப்பட்டதல்ல.பச்சைஆர்.எஸ்.எஸ். காரரான ஜெ.எஸ்.ராஜ்புத் என்பவர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அய்ந்தாம் வகுப்புவரை, தேர்வு முறையில்லை; அதற்குப் பின் தேர்வு உண்டு. அதில் இரண்டு முறைக்குமேல் தேர்ச்சி பெறவில்லையெனில், தொழில் பயிற்சிக்கு அந்த மாணவர் அனுப்பப்படுவார். அந்த மாணவனைப் பொறுத்தவரையில் அதிகபட்சக் கல்வி என்பது வெறும் அய்ந்தாம் வகுப்பே!
தொழிற்பயிற்சிக்கு மாணவர் அனுப்பப்படுவார் என்று  கூறப்பட்டு இருப்பது - அனுபவத்தில், யதார்த்தத்தில் மாணவரை, பெற்றோரைச் சார்ந்த குலத்தொழிலுக்கு அனுப்புவதே. இது குழந்தைத் தொழிலாளர் தன்மையை ஊக்குவிப்பதாகும்.
1952-1954 இல் அன்றைய சென்னை மாநில முதல மைச்சர் சி.சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் (ராஜா ஜியால்) கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன மறுபதிப்பே இத்திட்டமாகும்.
தமிழ்நாடு, தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்து நின்று அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது மட்டுமன்றி ராஜாஜியையே பதவியை விட்டு விலகும்படிச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
4. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் என்பது - இந்தியாவின் பன்முகத்தன்மை, மொழி, பண்பாடு, தட்பவெட்பம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஏக இந்தியா - ஒரே மொழி, ஒரே தேசியம், ஒரே கலாச்சாரம் என்னும் இந்துத்துவா கலாச்சாரத்தைக் கல்வி மூலமாகத் திணிப்பதே!
5. வேதக் கல்வியையும், குருகுலக் கல்வியையும் முன்னிறுத்துகிறது.
இதன் பொருள் இந்து மதத்தின் பிறப்பின் அடிப் படையிலான வருணாசிரம தர்மத்தைப் புதுப்பிப்பதாகும்.
6. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான மதச் சார்பின்மை, சிறுபான்மை மக்களின் உரிமை - இவற்றைப் புறக்கணிக்கிறது.
7. கல்விக் கூடங்களில் யோகாவைக் கட்டாயப்படுத்துவது, சமஸ்கிருதத்தைத் திணிப்பது - தாய்மொழிக் கல்விக்கு இடமில்லாத நிலை.
செத்தமொழியான சமஸ்கிருதமே இந்த நாட்டின் பண்பாட்டுக்கும், உயர்கல்வி வளர்ச்சிக்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று கூறும் இந்தக் கல்விக் கொள்கை உயர்தனிச் செம்மொழியான தமிழை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
8. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்தி, கல்வியில் மாநிலத்தின் சிந்தனை, பங்களிப்புக்குச் சிறிதும் இடமின்றி, மத்திய அரசின் கொள்கையை மாநில அரசுகள் செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற ஆதிக்க நிலைப்பாடு.
9. ஆசிரியர்களை கல்வியை விற்பனை செய்யும் முகவர்களாகவும், முதல்வர், துணைவேந்தர் எல்லோருமே இனி முதன்மைச் செயல் அதிகாரிகள் என்றும் அழைக்கப்படும் நிலை.
மாநிலப் பள்ளி, கல்லூரி துறை நிர்வாகத்துக்கு அகில இந்திய தேர்வின்மூலம் இந்திய அரசுக் கட்டுப்பாட்டியல் (MHRD Cadre Control)  முறையில் அலுவலர்கள் நியமனம்.
10. ஆசிரியர்களின் ஒழுங்கு அவர்கள் மீதான நடவடிக்கை, விருதுக்குப் பரிந்துரைத்தல், அவர்களின் தரத்தை மதிப்பிடுதல் அனைத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (SMCS- School Management Committees) அமைத்து, அதன் ஆதிக்கத்தில் விடுவதால், கல்வித் துறையை விட பள்ளி மேலாண்மைக் குழு அதிகாரம்மிக்கதாக வளர்ந்துவிடும் ஆபத்து.
ஆசிரியர்களின் பதவி உயர்வு, தலைமையாசிரியர் / முதல்வர் நியமனம், அவர்களைத் தேர்ந்தெடுத்தல், அவர்களின் பொறுப்புக் காலம் அனைத்தும் வெளிப்படைத் தன்மையற்றவையாதல்.
ஆசிரியர்களின் திறன் அய்ந்தாண்டுக்கு ஒருமுறை கணிக்கப்படும் என்பதும், அதனடிப்படையிலேயே பணி உயர்வும், ஊதிய உயர்வும் அமையும் என்பதும் முற்றிலும் முறையற்றதும், ஆசிரியர்களை சிறுமைப்படுத்துவதும் ஆகும்.
11. கல்விக் கூடங்கள் அனைத்தும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் நிகிஜிஷி GATS (General Agreement on Trade in Service)   விதிகளுக்குக் கட்டுப்படுத்தப்படும் தன்மை.
12. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட அளவுகோலுக்கு விரோதமாக அனைத்துச் சமூகத்தையும் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்வி உதவித் தொகை வழங்குவது என்ற திட்டம்; சமூகநீதி என்ற சொல்லாக்கம் எந்த இடத்திலும் கிடையாது.
13. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குதல். வெளிநாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களை உள்ளே புகுத்தி இங்குள்ளவர்களை வெளியேற்றும் சூழ்ச்சி!
14. பத்தாம் வகுப்புக்கு நாடு முழுவதும் ‘ஏ’ லெவல், ‘பி’ லெவல் என்று தேர்வுகள் நடத்தப்படும். ‘ஏ’ லெவலில் கணிதப் பாடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம். ‘பி’ லெவலில் கணிதம் எடுத்துப் படிக்க முடியாதவர்களுக்கானது. (15 வயதுக்குள் ஒரு மாணவனை இந்த வகையில் தேர்வு செய்வது என்பது இயலாத ஒன்று என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்).
15. 1968 ஆம் ஆண்டில் கோத்தாரி கல்விக் குழு கல்விக்கு 6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று கூறியது.
48 ஆண்டுகளுக்குப் பிறகும் - டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அதே ஆறு சதவிகித நிதி ஒதுக்கீட்டுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
16. உயர் கல்விக்கு அரசு செலவழிக்கக் கூடாது. நிதி தன்னாட்சியை (Financial Autonomy) 
அதாவது மாணவர்களிடையே கட்டணத்தை வசூலித்துக் கொள்ளவேண்டும்.
இதன் பொருள் ஏழை, எளிய மக்களுக்கும், முதல் தலைமுறையாக மேற்படிப்புப் படிக்க விரும்புவோருக்கும் கதவை சாத்தும் சமூக அநீதி!
17. இருபால் மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தடை!
18. பிளஸ் டூ தேர்ச்சிக்குப் பின், கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு.
19. கல்வி நிறுவனங்கள்மீதான புகார்கள் இனி நீதிமன்றங்களில் விசாரிக்கப்படாது; மாறாக கல்வி தீர்ப்பாயத்தில்தான்  (ணிபீuநீணீtவீஷீஸீணீறீ ஜிக்ஷீவீதீuஸீணீறீ) விசாரிக்கப்படும். (அரசின் கட்டுப்பாட்டில்தானே இது இருக்கும் - நியாயம் எங்கேயிருந்து கிடைக்கப் போகிறது?).
20. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைத்துக் கொள்ளத் தடை.
மேலே கூறப்பட்ட தேசிய புதிய கல்வித் திட்டம் என்பது வெகுமக்களுக்கு விரோதமான- குலக்கல்வித் திட்ட அடிப்படையிலும், வருணாசிரமதரும தன்மையிலும், சமூகநீதிக்குக் குழிபறிக்கும் நோக்கத்திலும், குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பார்வையிலும், மாநில உரிமைகளை நசுக்கும் நச்சு எண்ணத்துடனும்,. கல்வியை சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ள பார்ப்பனிய, முதலாளித்துவக் கண்ணோட்டத்தோடு திணிக்கப்படும் தேசிய புதிய கல்வித் திட்டத்தை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முத்தரப்பு மாநாடு முற்றாக ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகப் பிரகடனப்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசும் இந்த அடிப்படையில் மத்திய அரசுக்குக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
முன்மொழிந்தவர்: இலா.தியோடர் ராபின்சன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
நீட்’ தேர்வு கூடாது
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள தன்மையில், மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது சட்ட விரோதமும், நியாய விரோதமும், சமூகநீதி விரோதமானதுமாகும்.
இந்த ‘நீட்’ தேர்வுமூலம் சமூகநீதிக்கு உலை வைக்கப்படுகிறது. கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த முதல் தலைமுறையாக  படிக்க முன்வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களை வஞ்சிக்கும் ஏற்பாடாகவே ‘நீட்’ தேர்வை இம்மாநாடு கருதுகிறது.
மாநிலங்களின் நிதியில் நிருவகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை, மத்திய அரசு, தானடித்த மூப்பாக அகில இந்தியாவுக்குக் கொண்டு சென்று, நுழைவுத் தேர்வு வைத்துப் பங்கு பிரிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத அநீதி என்றும் திட்டவட்டமாகத் அறிவித்து இம்மாநாடு மத்திய அரசுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை என்று நிலைநாட்ட வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கடமை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
69 சதவிகித இட ஒதுக்கீட்டை தனிச் சட்டம்மூலம் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து திராவிடர் கழகத் துணையுடன் பாதுகாத்ததுபோலவே, ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது - தேவையில்லை என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய வகையில் மத்திய அரசை வலியுறுத்தி - ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் கட்டிக் காத்து வந்த சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு இதில் விதி விலக்கு அளிக்கப்படுவது அவசியம் என்று  இம்மாநாடு உறுதியாக வற்புறுத்துகிறது.
ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் ஆங்காங்கே புதிய கல்விக் கொள்கை, ‘நீட்’ தேர்வு இவற்றின் தீங்குகளை ஒல்லும் வகைகளில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் வெகுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அதற்கான முயற்சிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 3:
முன்மொழிந்தவர்: கி.மகேந்திரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் மன்றம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக்
கொண்டு வருக!
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும், ஒன்றிணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி பெறுவதுதான் கல்வி தொடர்பான இடர்ப்பாடுகளிலிருந்து மீட்சிபெற ஒரே வழி என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு ஆவன செய்யுமாறும் அனைத்துக் கட்சிகளையும், தமிழ்நாடு அரசையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
(பலத்த கரவொலிக்கிடையே இம்மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன).

நன்றி : விடுதலை 19.12.2016


No comments: