அண்மையில் படித்த புத்தகம் : ஒரு வார்த்தையின் பொருள் (மிகச்சிறந்த வங்க மொழிச்சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்(வங்காளம்) : ப்ரஃபுல்லா ராய்
தமிழில் மொழிபெயர்ப்பு : புவனா நடராஜன்
வெளியீடு : அம்ருதா பதிப்பகம், சென்னை-116
தொலைபேசி 044-22522277
மொத்த பக்கங்கள் : 248, விலை ரூ 160 /-
மதுரை மைய நூலக எண் : 198066
நூல் ஆசிரியர்(வங்காளம்) : ப்ரஃபுல்லா ராய்
தமிழில் மொழிபெயர்ப்பு : புவனா நடராஜன்
வெளியீடு : அம்ருதா பதிப்பகம், சென்னை-116
தொலைபேசி 044-22522277
மொத்த பக்கங்கள் : 248, விலை ரூ 160 /-
மதுரை மைய நூலக எண் : 198066
"வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ப்ரஃபுல்ல ராய் 1934-ஆம் வருடம் வங்க நாடு பிரியாமல் முழு வங்க நாடாக இருந்த காலத்தில் டாக்கா நகரத்தில் பிறந்தவர்" என இந்த நூலின் ஆசிரியரைப்பற்றிய குறிப்புகளோடு இந்தப் புத்தகம் தொடங்குகின்றது.பதிப்பாளர் உரை, மொழி பெயர்ப்பாளரின் அறிமுகயுரை என எதுவும் இல்லாமல் சிறுகதைகளின் தலைப்புகளோடு இந்தப்புத்தகம் தொடங்குகின்றது. மொத்தம் 12 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் இன்னொரு சிறுகதைக்குப் போட்டி என்பதுபோல அத்தனை சிறுகதைகளும்(ஒன்றைத் தவிர) அமைந்துள்ளன.சிறுகதைகளின் ஊடாக ஓடும் மனித நேயமும், பாத்திரங்களின் படைப்பு வழியாக எழுத்தாளர் எடுத்துக்காட்டும் உலக நடப்பு இயலும் சும்மா படித்தோம் என்று சிறுகதைகளைத் தாண்டிச்செல்ல இயலவில்லை.
முதல் சிறுகதையான படகோட்டி, பஜல் என்னும் படகோட்டி பற்றியது. தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் இவ்வளவு பணம் வேண்டுமென கட்டாயம் செய்யும் தனது காதலியின் தகப்பனை திருப்தி செய்வதற்கு இரவும் பகலுமாய் படகோட்டும் பஜல், கடைசியில் சேர்த்து வைத்த பணத்தை இன்னொருவருக்கு ஏன் அளிக்கிறான் என்பதுதான் கதை. கதையின் வர்ணனைகளும்,உரையாடல்களும் உயிரோட்டமாய் உள்ளன. ஒரு வேற்றுமொழி சிறுகதையைப் படிக்கின்றோம் என்னும் நெருடலே இல்லை.
தேர்தல் என்னும் தலைப்பில் அமைந்த சிறுகதை இன்றைக்கும், நமக்கும் கூடப் பொருந்தும். தேர்தலில் நிற்கும் ஒரு பெரிய மனிதர் கிராமத்திற்கு வந்து, கிராமத்து பொறுப்பாளரிடம், ஒவ்வொரு ஓட்டுக்கும் இவ்வளவு பணம் என்று சொல்லி விட்டுப்போக, பிச்சையெடுத்து சாப்பிடும் ஆனால் அந்த ஊரில் உள்ள சிலருக்கு உறவினரான வயதான மனிதருக்கு வாய்ப்பு அடிக்கின்றது. அவரை நீ, நான் என்று கவனிக்க, கடைசியில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வயதான மனிதர் செத்துப்போவதாக கதை. கிராமம், கிராமத்து நடப்பு, பணக்கார பெரிய மனிதரின் தோரணைகள், திடீரென்று கரிசனம் காட்டப்படுவதால், ஆச்சரியப்படும் வயதானவர், கவனிப்பவர்களிடமே என்னப்பா என்னை இப்படிக் கவனிக்கின்றீர்கள், என்ன விசயம் என்று கேட்பது என்று எள்ளி நகையாடும், பணத்திற்காக என்ன என்ன செய்கின்றார்கள் என்பதனை விவரிக்கும் சிறுகதை
இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமைந்திருக்கும் ஒரு வார்த்தையின் பொருள் என்பது மூன்றாவது சிறுகதை. வேலையில்லாமல் தவிக்கும் இளம்தம்பதிகள், ஆனால் வேலை தேடும் இடத்தில் தங்களை தம்பதிகள் என்று சொல்லிக்கொள்ளாமல் வேலை தேடுபவர்கள்.தன் துணைவிக்கு மட்டும் வேலை கிடைக்க கடைசியில் இவன் வேலை கிடைக்காமல் அலைகின்றான். தனது துணைவியை, வேலை பார்க்கும் இடத்தின் மேலாளரோடு காரில் பார்க்க நேரிட, அதனைத் தன் துணையிடம் வீட்டிற்கு அவள் வந்தவுடன் கேட்கிறான். உனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, எனக்கு இப்போதுதான் சில மாதங்களாக வேலை கிடைத்திருக்கிறது, கொஞ்சம் அட்சஸ்ட் பண்ணிப்போங்கள் என்று அவள் சொல்ல, அந்த வார்த்தையால் நொந்து போகும் அவனின் உள்ளக் குமுறல்களை சொல்லும் கதைதான் ஒரு வார்த்தையின் பொருள்.
திருவிழாவிற்கு 'புலி' வேசம் போட்டு நோன்புரா கிராமத்தில் பரிசும், பணமும், புகழும் பெறும் கூன்ராம், ஒருவன் உண்மையான புலியோடு வந்து கிராமத்தில் வித்தை காட்ட, புலி வேசம் போடும் கூன்ராமிற்கு கூட்டமும் இல்லை, பணமும் இல்லை என்று ஆகிப்போகின்றது. கடைசியில் நிஜப்புலி அல்ல, செத்த புலி என்று சண்டையிட்டு புலியின் கூண்டிற்குள்ளேயே போய் செத்துப்போகும் புலிவேசக்காரனின் கதை மனதை உருக்கும் கதை.
நாய்களைப் பிடித்துவந்து கொல்லும், வேட்டையாட ஒலிஎழுப்பி மனிதர்களை காட்டுக்குள் அழைத்துச்செல்லும் 'பீட்டர்' பரோஸ்லால், அவனின் மனித நேயம், அறியாத கர்ப்பிணிப்பெண்ணைத் தோளில் தூக்கிச்சுமந்து காப்பாற்றும் பின்பு தன் வழியில் செல்லும் பரோஸ்லால் பற்றிச்சொல்லும் 'மனிதன் ' என்னும் கதை 'பிறருக்காக கண்ணீரும், பிறருக்காக செந்நீரும் சிந்தும் எவனோ ,அவனே மனிதன் ,மனிதன் ' என்னும் பாடலை மனதிற்குள் என்னைப் பாடவைத்தது.
ஒவ்வொரு கதையையும் அவ்வளவு விரிவாக எழத முடியும் . அவ்வளவு அழுத்தமான, ஆழமான விவாதங்களை எழுப்புகின்ற கதைகளாக இருக்கின்றன. 'கடைசியில் ' என்னும் கதையில் நொந்து போன நிலையில் பாட வரும் பாடகனிடம் கடவுள் பாட்டெல்லாம் இங்கே பாடாதே என்று சொல்லிவிட்டு, காதல் பாட்டுக்களின் சில வரிகளைச்சொல்லிவிட்டு, " இது மாதிரி கத்துக்கிட்டு வா.சாமி எங்க வீடுகளுக்குள் வராது. நாங்க வரவிட மாட்டோம். ஏன் வரவிடணும். சொல்லு பார்க்கலாம்? சாமி எங்களுக்கு என்ன கொடுத்தது? நரகத்தில் எங்களைக் குடியேத்தி வச்சிருக்கிது. நரகத்துக்குள்ளே வந்தாச்சு.அப்ப இங்க இருக்கிற மாதிரிதானே நாங்களும் இருக்கணும் " எனும் பத்மாவின் வார்த்தைகள் எதார்த்தம்.தந்தை பெரியார் சொல்வார் " உயர் ஜாதிக்காரன், பணக்காரன் கடவுளைக் கும்பிடுகிறான். அவனுக்கு கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். நமக்கு நல்லது செய்திருக்கிறான். அதனால் கடவுளைக் கும்பிடவேண்டுமென்று நினைக்கின்றான். ஆனால் அடுத்த வேளைக்கு சாப்பிட வழியில்லை. நம்மைத் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட சாதியாக ஆக்கி வைத்திருக்கிறான். அதற்கு கடவுள்தான் காரணம் என்றால் அந்தக் கடவுளைக் கும்பிடத்தோணுமா?ஆனால் நம்மால் கும்பிடுகிறானே? வர்ற கொஞ்சக்காசையும் அந்தக் கடவுளுக்கு கட்டி அழுகின்றானே ......" என்னும் பொருளில் பேசியிருப்பார். சிவப்பு விளக்குப் பகுதிக்கும் பின்னால் ஒரு பணக்காரனின் வைப்பாட்டியாகவும் ஆக்கப்பட்ட பாத்திரமான பத்மா வெகுண்டு பேசுவது எனக்கு தந்தை பெரியாரின் சொல்லை நினைவுபடுத்தியது.உயிரோடு இருக்கும்போது கேட்ட அவளுக்கு பாடமுடியாமல் அவளின் இறுதி ஊர்வலத்தில் பாடிச்செல்லும் அவனின் நிலை எவரையும் உருக்கும்.
அதிகமாக என்னைப்பாதித்த கதை 'ஏன் அழுதாள் ' என்னும் கதை. மிகப்பெரிய அளவிற்கு பதவி,கல்வி வாய்ப்புகள் இருந்தபோதும், அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இயக்கப்பணிக்கும், தொழிற்சங்கப்பணிக்கும் வரும் சுபநய், அவரின் தியாகம், பொதுப்பணி-அதனால் மக்களிடம் அவருக்கு கிடைத்த மரியாதை,புகழ் எனப் பலவும் விரிவாகவே நூலாசிரியர் விவரிக்கின்றார். தூரத்து உறவினராக வந்து தன் கட்சி அலுவலகத்தில் தங்க, அவரின் வேலைக்கு சிபாரிசு செய்யச்சொல்லி தன்னுடம் இருக்கும் தோழர் சொல்ல, சுப நய் மறுக்க அவரை வலியுறுத்தி கடிதம் வாங்கி,உறவினரை வேலைக்கு சேர்த்துவிடும் உடன் இருக்கும் தோழரின் உண்மை முகம் கதை முடியும் நேரத்தில்தான் நமக்குத் தெரிகின்றது. புகழோடும், மரியாதையோடும் இருக்கும் சுபநய்வை வந்தனா என்னும் இயக்கத்தோழியரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அந்த தோழியே சொல்ல உடைந்து நொறுங்கும் சுபநய்வின் அழுகுரலை, ஆற்றாமையை,வேதனையை விவரித்துச்செல்லும் நூலாசிரியர் கடைசியில் சுபநய் இறந்த அன்று இறுதி மரியாதை செலுத்த வரும் வந்தனாவின் வார்த்தைகளால் கதையை முடிக்கின்றார். " சுபி நய் அண்ணா இப்படி செத்துப்போக வேண்டும் என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை.ஒரு நாளும் நினைத்ததில்லை." அவள் உதடுகளும் தொண்டைப்பகுதியும் நடுங்கின..... நான் எதுவும் பதில் சொல்லவில்ல... " சுபி நய் அண்ணா கட்சிக்குத் துரோகம் செய்து விட்டார்.கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று என்னிடம் எல்லோருமே சொன்னார்கள். மனம் கொதித்துப்போய் கெட்ட பெயரையும் பொருட்படுத்தாமல் சுபிநய அண்ணாவிற்கு மிகப்பெரிய கெடுதல் செய்துவிட்டேன். கட்சியின் நன்மையில் நான் என் உயிரையே வைத்திருந்தேன்.கொள்கை,துரோகம் என்று எதுவுமே காரணம் இல்லை. சுபி நய் அண்ணாவை விலக்கிவிட்டு ,வேறு ஒருவர் அந்த இடத்தைப்பிடித்துக்கொள்ள விரும்பினார் என்பதுதான் காரணம் என்பது எனக்குத்தெரியாமலே போயிற்று" நான் எதுவும் பேசவில்லை.வந்தனாவின் இந்த விளக்கத்தைக் கேட்க அண்ணா இன்று உயிரோடு இல்லை. மரணம் வந்து அவரைத் தழுவும் முன்பே அவரை எல்லாரும் அடித்து விட்டார்களே.அவருக்குப் புரிந்திருக்கவா போகிறது ?....என்று முடியும் இந்தக் கதையை பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கதை....
'எதிர்காலத்தின் குரல்' என்னும் கதை மட்டும் கனவு, அது நினைவாவது அதனால் புது மணப்பெண் தற்கொலை செய்துகொள்வது என்று கொஞ்சம் மாறுபட்ட கதையாகத் தெரிகின்றது. மற்ற கதைகள் அனைத்தும் மனித மனங்களை உரசும் சொற்கோவைகளாக, நிகழ்வுகளை கண் முன் நிறுத்தும் காட்சிகளாக இவரின் எழுத்துக்கள் இருக்கின்றன. 'உயிருடன் இருப்பதற்காக' என்னும் கதை பசியின் கொடுமைக்காக, உணவுக்காக என்னென்ன செய்கின்றார்கள் என்பதைச்சொல்கிறது என்றால் மனிதன் பணத்தால் எடைபோடப்படுவதை 'தலையெழுத்தும்' விவரிக்கின்றன. 'உறவு ' என்னும் கதை ஒரு வேறுபட்ட கோணத்தில் பெண்ணின் மனதைப் பேசுகின்றது.
பின் அட்டையில் வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு இந்த சிறுகதைத்தொகுப்பை மொழிபெயர்த்த புவனா நடராஜன் அவர்களைப் பற்றி அவரின் படத்தோடு குறிப்பு போட்டிருக்கின்றார்கள். மொழி பெயர்ப்புக்கு என சாகித்ய அகாதமியின் விருதைப்பெற்றவர் எனப்போட்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே மிக நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இவ்விருதைக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதனை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரமுடியும்.அருமையான மொழி பெயர்ப்பு.எந்த இடத்திலும் தடங்கல் இல்லை, பொருள் மயக்கமோ,சொல் மயக்கமோ இல்லை. வாழ்த்துக்கள் மொழிபெயர்ப்பாளருக்கு.நல்ல ஒரு மொழிபெயர்ப்பு நூலைக் கொடுத்த அம்ருதா பதிப்பகத்திற்கு.வாழ்த்துக்கள்.... படித்துப்பாருங்கள், வாய்ப்பு இருப்பவர்கள்.
2 comments:
நன்றி ஐயா
உங்கள் ஊர் நூலகத்திலும் புதிதாக வந்த புத்தகங்களில் இந்தப்புத்தகம் இருக்கும். எடுத்து படித்துப்பாருங்கள் அய்யா, மிக நன்றாக உள்ளது.
Post a Comment