Sunday 3 June 2018

நாடி நரம்புகளில் ஓடுவது......

                          கடந்து போன காலங்கள் 16


அதிகாலை எழுந்து
பள்ளிக்கு கிளம்பல் வேண்டும்....
யாரும் பள்ளிக்கு வராத நேரத்தில்
மரங்களைப் பார்த்து
பேசிக்கொண்டிருத்தல் வேண்டும்...
இல்லையெனில் பள்ளி
ஆரம்பித்தபின்னே அரைமணி நேரம்
தாமதமாகச்செல்லல் வேண்டும்....
அப்படித்தான் பேருந்து இருந்தது
எனது கிராமத்தில் இருந்து
தே.கல்லுப்பட்டிக்கு
நான் +2 படிக்கும் காலத்தில்

சில நாட்கள் அம்மா கட்டிக்கொடுக்கும்
பழைய சோற்றோடு
அதிகாலைப் பேருந்து....
சில நாட்கள் பழைய சோறு இல்லைடா
இரு இரு சுடுசொறு ஆக்கிவிடுகின்றேன்
என்று அம்மா சொல்ல
தாமதமாகப் பள்ளிக்கு பேருந்தில் சென்று
கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்
அடியோ.. திட்டோ வாங்கியதும் உண்டு.....

அதிகாலை 6.30க்கு பேருந்து
இல்லையெனில் 8.50 மணிக்குத்தான்
கல்லுப்பட்டிக்கு எமது ஊரிலிருந்து
பேருந்து எனும் நிலையில்
இடைப்பட்ட நேரத்தில்
ஏதேனும் பேருந்து எமது
ஊருக்கு வராதா ? என
ஏங்கியிருந்த வேளை.....

பாராளுமன்றத்திற்கு பெரியகுளம்
மக்களைவைத் தொகுதியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முறுக்கு மீசை அய்யா
கம்பம் நடராசன்
எங்கள் ஊராம் சாப்டூருக்கு
நன்றி சொல்ல வந்திருந்தார்.....

11-ஆம் வகுப்பு படிக்கும்
மாணவன் நான் !
பல பேரிடம் கையெழுத்தினை வாங்கி
அன்றைய எங்கள் ஊரின்
தி.மு.க.செயலாளர்
அய்யா ஜோதி அவர்களிடம் கூறிவிட்டு
எங்கள் ஊருக்கு கூடுதலாக
பேருந்து வரல் வேண்டும்
நாங்கள் பள்ளி செல்ல
மிகவும் வாய்ப்பாக அமையும்
என மேடையில் ஏறிப் பேசி
மனுவினைக் கொடுத்தேன்.....

இன்றைக்கும் கூட அந்த நிகழ்வு
கனவு போலத்தான் இருக்கிறது....
மனுவினை வாங்கிய நாலைந்து நாட்களில்
தே.கல்லுப்பட்டிக்கு செல்லும்
அரசு டவுன் பேருந்தோடு
ஊருக்குள் வந்தார் அய்யா
கம்பம் நடராஜன்......
காலை 7.30 மணிக்கு
அருமையாக வந்துசென்றது
அந்தப் பேருந்து.........
எங்கள் கவலை தீர்ந்தது ....

திராவிட இயக்கத்தினை
புரிந்து கொண்டவர்களின்
நாடி நரம்புகளில் ஓடுவது
படிப்பதற்கு உதவி செய்தல்...
படிப்பதற்கு வசதி செய்தல்......



2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

முனைவர். வா.நேரு said...

அய்யா,உண்மை. அவருடைய இளவல் கம்பம் இராமகிருஷ்ணன் அவர்களை திராவிடர் கழகத்தினைச்சார்ந்த கூடலூர் ஜனார்த்தனம் அவர்களின் இல்லத்தில் சில மாதங்களுக்கு முன் சந்தித்தபொழுது , இந்த நிகழ்வினைச்சொன்னேன். நாங்கள் படிப்பதற்கு மிகப்பெரிய உதவியினை உடனே செய்தார்கள் என்றேன். அய்யா கம்பம் நடராஜன் அவர்களின் ஆளுமையை அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.நன்றி...