Friday, 12 June 2026

அண்மையில் படித்த புத்தகம் : அத்தினி (புதினம்)

 



              அண்மையில் படித்த புத்தகம் : அத்தினி (புதினம்)

ஆசிரியர் : சித்ரா சிவன்

வெளியீடு பிறகு பிரசுரம்,சென்னை-40.

முதல் பதிப்பு : 2024,மொத்த பக்கங்கள் 229 ,விலை ரூ 280

இந்தப் புதினத்தின் அட்டையே கவரும் விதத்தில் அமைந்துள்ளது. ‘ஸீரோ டிகிரி இலக்கிய விருதுமூன்றாம் பரிசுஎன அட்டைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டையின் மேற்பரப்பில் பறவைகள் பறப்பதையும் அதைப் பார்த்துக்கொண்டே  ஒரு பெண்  நடப்பதுபோலவும் வரையப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தைப் படித்துமுடித்துவிட்டு மீண்டும் இந்த அட்டையைப் பார்த்தபொழுது ரிச்சர்டு பக் எழுதிய ஜொனாத்தன் லிவிங்ஸ்டன் சீகல் என்னும் நாவல்தான் நினைவுக்கு வந்தது.ஜொனாத்தன் என்னும் கடற்பறவை ,தன் உடன் வாழும் மற்ற பறவைகளைப் போல வாழாமல் தனித்துவமாய் எப்படி உயர உயரப் பறக்கிறது,அதன் இலட்சியத்தை எப்படி அடைகிறது என்பதுதான் அந்த நாவல் சொல்லும் கதை.அதைப்போல அத்தினி  நாவலின் கதாநாயகி பவித்ராதேவி எப்படி ஒரு சராசரி பெண்ணாக வாழாமல் ,தனக்கென ஒரு பாதையை, இலக்கை வைத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பதைச் சொல்லும் நாவல் இந்த நாவல்.





சித்ரா சிவன் அவர்களின் முதல் நாவல் இது. வியப்பாகத்தான் இருக்கிறது, முதல் நாவல் இவ்வளவு சிறப்பாக வெளிவந்திருப்பது.எழுத்தாளர் இமையம் அவர்களின்கோவேறு கழுதைகள்போல முதல் நாவலே பலரும் பாரட்டும் வண்ணம் அமைந்துள்ளது.வாருங்கள் படிப்போம் குழுவில் அண்ணன் முனைவர் கோ.ஒளிவண்ணன் இந்தப் புதினத்தை  நூல் அறிமுகம் செய்தார். இந்த நாவல் கையில் கிடைத்த ஒரே நாளில் படித்து முடித்தேன்.ஒரு பெண்ணின் வேறுபட்ட பாய்ச்சலை இந்த  நாவலில் பார்க்க முடிந்தது.படிக்கும்போது அவ்வப்போதுபெண் ஏன் அடிமையானாள்? ‘ என்னும்  நூலில் தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கும் கருத்துகளும் மனதில் நிழலாடின.

சித்ரா சிவன் பற்றிய குறிப்பு புத்தகத்தின் கடைசிப்பக்கத்தில் உள்ளது. பெரியகுளத்தைச் சேர்ந்தவர் என்பதும், ,ஊடகவியலாளர் என்பதும் இதற்கு முன் இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் புனைபெயரில் வெளியிட்டுள்ளார்,அவரது கணவர் மற்றும் மகன்கள் பற்றிய  செய்திகள் உள்ளிட்ட  பல அதில் உள்ளன.நான் வேலை பார்த்த ஊர்களில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் பெரியகுளம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த ஊரிலிருந்து ஒரு காத்திரமான எழுத்தாளர் வெளிப்பட்டிருக்கிறார் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மனிதர்கள் நாம் அகவயமான மற்றும் புறவயமான நினைவுகளின் தொகுப்பாக இருக்கிறோம்.பெண் ஒரு படி மேலே நினைவுகளோடு எண்ணங்களின் தொகுப்பாகவும் இருக்கிறாள்.நான் இந்த நாவலின் வாயிலாக,பெரும் வாழ்வொன்றை வாழ்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.என் மனுசிகள் எனக்குள் நீக்கமற நிறைந்து கிடந்த்தார்கள்.எனது மனதின் ரகசிய முடிச்சுகிளில் கட்டுண்டு கிடந்தவர்களின் வெளியேற்றம் என்றும் கொள்ளலாம் “ என்று பெருவெளி சித்திரங்கள் என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் தனது என்னுரையில்  நூல் ஆசிரியர் சித்ரா சிவன் குறிப்பிடுகிறார்.

புதினத்தில் பெண்களின் கதாபாத்திரங்கள்தான் மிக அதிகம். எலும்பும் சதையுமாய் நம் கண்முன்னே அந்தக் கதாபாத்திரங்கள் வாசிக்க ,வாசிக்க உலாவுகிறார்கள். உரையாடுகிறார்கள்.உமையாள்,பவித்ராதேவி,இவர்களின் தந்தை சேதுராமன், தாய் அன்னக்கொடி, அவரது மரணம் அதன் விளைவாக உமையாள்,பவித்ராதேவி அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் எனக் கதை முதல் பக்கத்திலிருந்தே எதார்த்தமாகவும் நடப்பியலாகவும் சூடு பிடித்துக்கொள்கிறது.பின்னர் கதைக்குள் வரும் பூங்கொடி,மல்லிகா,வசந்தமுல்லை,வாசவத்தை என வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் அவலங்களுக்கு விடையை அவர்களே கண்டுபிடித்து நடைமுறைப்படுத்துகிறார்கள். பெண்களின் வாழ்க்கையில் சில்  நேரங்களில் மரணங்கள் கூட மகத்தான விடுதலையையும் நிம்மதியையும் கொடுத்துவிடுகின்றன என்பதைக் கதை நன்றாகச்சுட்டிக் காட்டுகிறது.

அண்மையில் ஒரு பேட்டியில் எழுத்தாளர் பாவண்ணன் ‘தீராத துன்பத்தை எழுதிக் கடக்கலாம் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.தனது துன்பங்களை எப்படி எழுத்தின் மூலம் கடந்தேன் என்பதை விவரித்திருந்தார்.அப்படித் தன்னைச்சுற்றி இருக்கும் தீராத துன்பமுடைய பெண்களின் துயரத்தை எரிக்கும் சொற்களால் எழுதி,வாசிக்கும் பெண்களும் அந்தத் துயரங்களைக் கடப்பது எப்படி என்பதற்கு வழிகாட்டுவதுபோல எழுதியிருக்கிறார் இந்தப் புதின ஆசிரியர்.

திருமணத்தை மதச்சடங்காக நடத்தாமல், தமிழ் அறிஞர் புலவர் இளங்குமரன் அவர்கள் தலைமையில் தமிழ் முறைப்படி நடத்துவது, அப்புறம் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்குப் புலம்பாமல், கடவுளிடம் சென்று தீர்த்துவை என்று கோரிக்கை வைக்காமல் தாங்களே தீர்த்துக்கொள்வது என்று பல நேர்மறையான செய்திகள் இந்தப் புதினத்திற்குள் இருக்கின்றன.

இந்தப் புதினத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் . எதையும் எதிர்கொள்கிறார்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். கூடுகிறார்கள். கும்மாளமிடுகிறார்கள். தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான களத்தைத் தாங்களே அமைத்துக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இப்படிப் பல. படிக்கும் பழமைவாதிகள் பலருக்கும் தூக்கிவாரிப்போடும்.

அண்மையில் கெட்ட வார்த்தை இருக்கிறது என்று சொல்லி கல்லூரிகளில் பாடமாக வைப்பதற்கு,ஒரு படைப்பை மறுத்துவிட்டார்கள் என்று எழுத்தாளர் தோழர் பெருமாள்முருகன் எழுதியிருந்தார்.இந்தப் புதினம் பல கல்லூரி,பள்ளி மாணவிகளிடம் சென்று சேரவேண்டும்.அப்படி அவர்கள் வாசிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அதற்குப் புதினத்திற்குள் இருக்கும் ஒரு சில சொற்களை நீக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

“மனிதர்கள் மறந்தே போய்விட்ட தாய்வழிச்சமூக அமைப்பை இன்றுவரை பின்பற்றுவன யானைகள். எனவேதான் யானையைப் போன்ற பலம்பொருந்திய பெண்களின் உலகைப் பேசும் இந்தப் புதினத்திற்கு ‘அத்தினி’(பெண் யானை) என்று தலைப்பிட்டேன்” என்று  நூல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.மிகப் பொருத்தமான பெயர். மிகச்சிறப்பான புதினம். வாழ்த்துகள் தோழர் சித்ரா சிவன் அவர்களுக்கு. படித்துவிட்டு அவரோடு செல்பேசியிலும் பேசி வாழ்த்தினைத் தெரிவித்தேன். ஓர் அருமையான புதினத்தை வாசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ‘வாருங்கள் படிப்போம்’ குழுவிற்கும் ,அண்ணன் முனைவர் கோ;ஒளிவண்ணன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றிகள்.கிழியட்டும் பெண்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் பழம் பஞ்சாங்கங்கள்.

 

வா.நேரு,

12.06.2026 @மதுரை.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

 


5 comments:

எழுத்தாளர் ரெஜினா சந்திரா said...

சிறப்பான புத்தகம். அருமையான மதிப்புரை. Must read book.

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க மேடம்...(வாருங்கள் படிப்போம்
. வாட்சப் குழுவில் கருத்தினை பதிவிட்டிருந்தார்...)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சித்ரா சிவன் said...

மிக்க நன்றி தோழர்

முனைவர். வா.நேரு said...

மிக்க மகிழ்ச்சி தோழர்.