தியான்காங்
(முனைவர் வா.நேரு)
இனி வரும் பிரபஞ்சத்தில் பூமி இருக்குமா? பூமி இருக்கும் ,ஆனால் மனிதர்கள் வாழ முடியாத சூழல் உண்டாகும்.அந்த அளவிற்கு இந்தப் பூமியின் சுற்றுச்சூழல் என்பது மாசு அடைந்திருக்கிறது. ‘மனித குலம் அழிவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் வேறு ஏதாவது கிரகத்திற்குக் குடி போகவேண்டும் ‘ என்று மறைந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கெடு விதித்தார்.
வேற்றுக் கிரகத்தில் மனிதன் வாழ வேண்டுமென்றால், காற்று(ஆக்ஜிஜன் ) வேண்டும். நீர் வேண்டும். உணவு வேண்டும்.உணவு வேண்டும் என்றால் விவசாயம் வேண்டும். பயிர்கள் பயிரிடப்படவேண்டும். இல்லையென்றால் காட்டுமிராண்டி காலத்து மனிதர்கள் மாதிரி விலங்குகளின் இறைச்சிகளை மட்டும் உண்டு மனிதர்கள் வாழ முடியும். ஆனால் அந்த விலங்குகள் வாழ்வதற்குத் தாவரங்கள் வேண்டும்.அப்போதுதான் தாவர உண்ணி விலங்குகள் இருக்கும்.அந்த விலங்குகளை உண்ணும் விலங்குகள் இருக்கும். இவற்றை உண்ணும் மனிதர்கள் இருக்கமுடியும்.
மனிதனின் நாகரீக வளர்ச்சியில் விவசாயத்திற்கு மிகப்பெரும் பங்கு உண்டு.அமெரிக்கா போன்ற புதிய கண்டங்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது ,தங்களின் விவசாய முறையை வெள்ளைக்காரர்கள் அந்த மண்ணில் புகுத்தினார்கள்.அதன் மூலம் உணவுப்பொருட்களைப் பெறும் அளவில் விளைவித்தார்கள். விளைவித்த பொருளை அந்த நாட்டிற்கு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருக்கும் மனிதர்களும் பயன்படுத்தும் வண்ணம் வியாபாரம் செய்தார்கள்.செய்கிறார்கள்.
மனிதர்கள் வேற்றுக் கிரகத்தில் வாழ வேண்டுமென்றால் விவசாயம் வேண்டும். விவசாயத்தின் மூலமாகப் பயிர்கள் வளர்க்கப்படவேண்டும்.அதன் மூலமாகத்தான் மனிதர்கள் வாழ முடியும் .எனவே பூமிக்கு மேலே பயிர்களை வளர்க்கமுடியுமா? வளருமா? தாவரங்கள் பூக்குமா? காய்க்குமா?பழுக்குமா? பழுப்பதன் மூலமாகக் கிடைக்கும் புதிய விதைகள் மூலமாக மீண்டும் பயிரிட முடியுமா ? என்பது போன்ற ஆராய்ச்சிகள் விண்வெளியில் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.
இந்த ஆராய்ச்சியில் முன்னோடியாகச் சீன நாடு விளங்குகிறது.சீனா வெற்றிகரமாக விண்வெளியில் நெல்லை வளர்த்து, அறுவடை செய்து சாதனையைப் படைத்திருக்கிறார்கள். தியான்காங் என்பது சீனாவின் அதி நவீன விண்வெளி ஆராய்ச்சிமையம்.சீன மொழியில் தியான்காங் என்றால் விண்வெளி அரண்மனை என்று பொருள். விண்வெளியில் ஓர் அரண்மனையைப் போன்று அமைத்திருக்கும் அதி நவீன ஆராய்ச்சி மையத்தில்தான் சீனர்கள் நெல் பயிரை நட்டு,வளர்த்து அறுவடை செய்திருக்கிறார்கள். இந்த விண்வெளி விவசாயம் செய்த மூன்று சீன விண்வெளி வீர்ர்களின் பெயர்கள் ஜூ யங்சு,ஜியான்,லய் கா-யிங் நிலவில் முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க் என்று சொல்வதுபோல ,முதன்முதலில் விண்வெளி விவசாயம் செய்தவர்கள் இவர்கள் என்று எதிர்காலம் சொல்லும் சாதனையைச் செய்திருக்கிறார்கள்.
இந்த விண்வெளி அரண்மனை பூமியிலிருந்து 350- 450 கி.மீ உயரத்தில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது.நாம் பூமியில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தாலும் பூமி சூரியனைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.சுற்றும் பூமிக்குள் நாமும் சுழன்று கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை.அதுபோல உயரத்தில் அவர்கள் இருந்தாலும் ஓரிடத்தில் இருப்போதுபோலவே இருந்து சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.கடந்த மே மாதம் 24ம் தேதி ஒரு விண்கலம் மூலமாக விண்வெளி அரண்மனையில் இருப்பவர்களிடம் விதை நெல் கொடுக்கப்பட்டது. நாம் வீட்டு மாடியில் செடி வளர்ப்பதுபோல,அவர்கள் அந்த விண்வெளி மையத்தில் நெல்லை விதைத்து, வளரவிட்டு.முதிர்ந்த பின்பு அறுவடை செய்திருக்கிறார்கள்.
மாடித்தோட்டம் போலத்தானே என்று நினைக்கிறீர்களா ,இல்லை. விண்வெளி அரண்மனையில் மண் இல்லை.காற்றைத் தரும் மரங்கள் இல்லை.புவியீர்ப்பு விசை முழுவதுமாக இல்லை.இருந்தபோதும் அங்கு எப்படி நெல் வளருகிறது என்பதை அருகில் இருந்த அந்த மூவரும் பார்த்திருக்கிறார்கள்.விதைந்த நெல்லை எடுத்து மறுபடியும் அங்கேயே விதைத்திருக்கிறார்கள்.அந்த நெல்லும் விளைச்சலைக் கொடுத்திருக்கிறது.பூமியில் விளைந்த நெல்லையும் அங்கு விதைத்திருக்கிறார்கள். அதுவும் அங்கு வளர்ந்து விளைச்சலைக் கொடுத்திருக்கிறது. அங்கேயே வளர்ந்த விதை நெல்லின் பயிரும், இங்கிருந்து நேரிடையாகக் கொண்டு செல்லப்பட்ட நெல்லின் விதையால் விளைந்த பயிருக்கும் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
இது நமது சூரிய வளி மண்டலத்தில் நடைபெறும் ஆராய்ச்சி.இதைப்போலவே நிலாவைப் பற்றி ,செவ்வாய் கிரகத்தைப் பற்றிய் தொடர்ச்சியான ஆய்வுகள் நடந்து வருகின்றன.நிலாவில் நீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தனது ஆராய்ச்சிக்கு தந்தை பெரியாரின் கருத்துகள் அடிப்படையாக இருந்தது என்று குறிப்பிட்ட செய்தியை ,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்மையில் நடைபெற்ற வல்லம் பெரியாரியல் பயிற்சி முகாமில் குறிப்பிட்டார்கள்.அறிவுக்கு எல்லை இல்லை.தனது வாழ்க்கை முழுவதும் எதையும் ஆராய்ந்துபார், ஆராய்ந்து பார் என்று சொல்லிக்கொண்டே இருந்தவர் தந்தை பெரியார்.அந்த வகையில் அறிவியல் அறிஞர்கள் நமது சூரிய மண்டலத்திற்கு உட்பட்ட கோள்களைத் தாண்டி பிரபஞ்சத்தில் இருக்கும் வேறு நட்சத்திரங்களை,அதற்குள் இருக்கும் கோள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
“நமது சூரிய வளி மணடலத்தைத் தாண்டி “ தொலைதூர நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வரும், பூமியைப் போன்ற பாறைத்தன்மை கொண்ட கோள் ஒன்றின் வளிமண்டலத்தை விஞ்ஞானிகள் முதன் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.அந்தப் புறக்கோள்,அது சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து உயிரினங்கள் வாழத் தகுந்த மண்டலத்தில்(habitable Zone) அமைந்துள்ளது. நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாலும் பூமியைப் போன்ற உயிர்கள் வாழ ஏதுவான சூழலைக் கொண்ட இருக்கக்கூடும் என்பதற்கு இதுவரை கிடைத்துள்ள மிக வலுவான சான்று இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த புறக்கோளின் வளிமணடலத்தில் ஹீலியம் வாயு இருக்கிறது… இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் கால்லின் ,இந்தக் கண்டுபிடிப்பை ‘மிகவும் முக்கியமானது ‘ என்று விவரித்திருக்கிறார். ‘சூரியனல்லாத மற்றொரு நட்சத்திரத்தின் உயிரன்ங்கள் வாழத்தகுந்த மண்டலத்தில் இருக்கும் பாறைத்தன்மை கொண்ட ஒரு கோளில் வளிமண்டலம் இருப்பது கண்டறியப்படுவது இதுவே முதல்முறை ‘ என்று அவர் தெரிவித்திருக்கிறார்..(பிபிசி தமிழ் செய்தி)
அந்தப் புறக்கோளுக்கு LHS 1140b என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இது பூமியில் இருந்து சுமார் 48 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.இந்தக் கோள் நமது சூரியனை விட அளவில் மிகச்சிறியதாகவும் குளிச்சியாகவும் இருக்கும் ஒரு சிவப்பு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஒளி ஆண்டு என்பது விண்வெளித் தூரத்தைக் கணக்கிட உதவிடும் ஓர் அலகு. ஒளியின் வேகம் நொடிக்குச் சுமார் 3,00,000(மூன்று இலட்சம்) கி.மீ.ஆகும் ஒரு வருடம் என்பது 365 நாட்கள். ஒரு நாளைக்கு 86,400 நொடிகள். எனவே 365*86400*3,00,000 தோராயமாக ஓர் ஒளி ஆண்டு என்பது 9.46 டிரில்லியன் கிலோமீட்டர்கள். அதாவது 9,46,97,30,47,258 (94697 கோடியே முப்பது இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து இரு நூற்றி ஐம்பத்தெட்டு) கி.மீ. 48 ஒளி ஆண்டுகள் தூரம் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள தூரத்தை 48 எனும் எண்ணால் பெருக்கி வரும் விடையாகும்.
பூமியிலிருந்து இவ்வளவு தூரத்தில் இருக்கும் ஒரு கோளைக் கண்டுபிடித்து, அது இன்னொரு நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதையும் அதற்கும் சூரியனுக்கும் புதிய நட்சத்திரத்திற்கும் என்ன வேறுபாடு என்பதையும் , நமது பூமியைப் போலவே அங்கும் வளிமண்டலம் இருக்கிறது என்பதையும் அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கு, நிலாவிற்குச் சென்று மனிதர்கள் குடியேறும் நாள் நெருங்கி வருகிறது என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். நிலாவில் பிளாட் போட்டிருக்கிறோம். இன்ன விலை என்று இணையத்தில் செய்திகள் வெளியிடுகிறார்கள். ஆனால் வான்வெளியில் தனியார் எவரும் இடம் எல்லாம் வாங்கு முடியாது,அதனைச் சர்வதேச விண்வெளிச் சட்டம் அனுமதிக்காது என்றும் செய்திகள் வருகின்றன. ஆனால் அப்படி ஒரு குடியேற்றம் வரும் காலம் மிகவும் நெருங்கி வருகிறது என்பதைத்தான் அறிவியல் ஆய்வுகள் நிருபிக்கின்றன.
சூரியன் மிக வெப்பமாக இருக்கிறது.அதன் அருகில் செல்ல முடியாது என்பதுதான் இன்றைக்கு வரை இருக்கும் அறிவியல் உண்மை. நாளை அது மாறலாம்.நிலா,செவ்வாய் கிரகத்திற்குப் போவதுபோல ,சூரியனுக்கு அல்லது சூரியனைத் தாண்டி இருக்கும் மற்ற நட்சத்திரங்களுக்குச் செல்லும் காலம் இன்னும் சில நூற்றாண்டுகளில் நிகழலாம்.அப்போது நிலாவுக்குச் செல்வது, செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது எல்லாம் இன்றைக்கு அமெரிக்காவிற்குச் செல்வதுபோல கனடா நாட்டிற்குச் செல்வதுபோல இயல்பாக ஆகியிருக்கலாம்.
அறிவியல் ஆராய்ச்சி ஒரு பக்கம் விண்ணளவு நடந்து கொண்டிருந்தாலும்,சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது.’எல்லோரும் சமம்.உலகத்தில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் சம உரிமை, சம உடமை கிடைக்கும் காலம் வரவேண்டும்’ என்ற தந்தை பெரியாரின் கொள்கை நிறைவேறுகிறபோதுதான், இப்படிப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளின் பலன் உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்கும்..



No comments:
Post a Comment