Saturday, 20 July 2013

அணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல்)-கவிஞர் யுக பாரதி

அணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல்)

ஆசிரியர்                     கவிஞர் யுக பாரதி
பதிப்பகம்                   : நேர் நிரை வெளியீடு ,முதல் பதிப்பு மார்ச் 2006                        :
மொத்த பக்கங்கள்    96           :    
விலை                           45                          :

                                                             கவிஞர் யுகபாரதியின் கவிதைத் தொகுப்பு .பத்தாயம் என்றால் என்ன என்பதற்கு நூலின் முன்பகுதியில் விளக்கம் உள்ளது. " பத்தாயம் -பண்டைய வீடுகளில் தானியக் குதிர்களாகப் புழங்கப்பட்டு- இன்று பழுதுபட்டும் புழுதி மண்டியும் கிடக்கின்ற ஒரு நினைவுச்சின்னம்." மதுரைப் பக்கங்களில் சொல்லப்படுகின்ற சால் என்று நினைக்கின்றேன். சேமிக்கப் பயன்படும் பழைய காலத்து சின்னக் கிட்டங்கி. பழைய நினைவுகளைச்சொல்லும் பத்தாயம் போல கிராமத்து நினைவுகளை எதார்த்தமாகச் சொல்லிடும் கவிதைத் தொகுப்பாய் இக்கவிதை நூல்.   குட்டிக் குட்டி கவிதைகள்., சில நீள் கவிதைகள்,  பல்வேறு தளங்களில் தன்னுடைய கிராமத்து அனுபவங்களை எழுதியிருக்கின்றார்.  யுக பாரதி ஒரு பொதுவுடமை இயக்கவாதியின் மகன். இயங்கிக் கொண்டேயிருந்த அப்பாவைப்  பற்றியும் அவருடைய இயக்கத்தைப்ப்ற்றியும் குறிப்பிடும் கவிதை 'வண்க்கம் காம்ரேட்'   இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த கவிதை

"வீட்டுக்குள் நுழையும் போதே / அப்பாவிடம் சொல்வார்கள் / வணக்கம் காம்ரேட்/
வசந்தி / வந்தவங்களுக்கு காபி கொடு / அரக்க பரக்க அம்மா / அடுத்த வீட்டுக் கதவு தட்டுவாள் /
வர்ற ஆறாம் தேதி / செய்ற்குழு / மறக்காம வந்திடுங்க/
ஐந்தாம் தேதியே / அம்மாவின் நகைகள் / அடகுக் க்டையில் /
பத்தாம் தேதியும் /அப்பா உறுதியோடு இருந்தார் / புரட்சி வரும் /
இதே போன்றொரு கனவோடு / ஐம்பது ஆண்டுகளாய் / பக்கத்து வீட்டுக் /கிறிஸ்துவத் தாத்தாவும் /

சொல்லிக் கொண்டே இருந்தார் /
இயேசு வருகிறார்/ இயேசு வருகிறார்/ இதோ இதோ/
வணக்கம் காம்ரேட்
.  ". 

அதே மழையில் என்னும் தலைப்பில் முன்னுரை போல யுகபாரதியின் நண்பர் அபிவை சரவணன் , யுகபாரதி பற்றி எழுதியுள்ளார். கவிதைத் தொகுப்பின் இறுதியில் ' மிக நுட்பமான அழகான கவனிப்பு " என்று ஞானக்கூத்தனும், 'கூட்டை உடைத்துக்கொண்டு ' என்று இராஜேந்திர சோழனும் இக்கவிதைகளைப் பற்றிய தங்கள் விமர்சனப் பார்வையை பதிந்துள்ளார்கள்

                    " அறிந்த கழிப்பறைகள் /அத்தனையிலும் /உடைந்தே கிடக்கும் /நீரள்ளும் குவளைகள் " நமது மனப்பான்மையை வெளிப்படுத்தும் கவிதையெனலாம். அது மட்டுமல்ல  பல பொது இடங்களில்  பேனாக்கள் நூலினால் கட்டித்தான் வைக்கப்பட்டிருகின்றன. பல இடங்களில் இன்னும் டம்ளர்கள் இரும்புசங்கிலிகலால் கட்டப்பட்டே தண்ணீர் குடிக்கப் பயன்படுகின்றன. இதனைப் போல பல கவிதைகள் ஒரு கருத்தைச்சொல்லி அதன் தொடர்பாய் பல கருத்துக்களைத் தூண்டும் வண்ணம் உள்ளன.'க்ல்லெறிதல், எலியின் நகங்கள், ஆகக்கூடி  அவள் பேர்' போன்ற கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் வேறுபட்டதாய், மாறுபட்டதாய் உள்ளத்தைத் தொடும் வண்ணம் . பின் அட்டையில் " யுக பாரதி -ஜிலு ஜிலு வர்த்தக எழுத்திற்கும் ,உண்மையான இலக்கியத்திற்குமான வேறுபாட்டை புரிந்திருப்பவர். தானறிந்த வாழ்வை சபைமுன் வைக்கும் தைரியமான நேர்மையானவர் " என்று வித்யாஷங்கர் சொல்வது உண்மைதான் என்பது வாசித்துப்பார்க்கும்போது எளிதாகப் புரிகின்றது.

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம் தோழர் நேரு.
எப்பவாச்சும்தான் எழுதுறீங்க... ஆனா உருப்படியா எழுதுறீங்கய்யா
மனப்பத்தாயம், யுகபாரதி திரைப்படத்திற்குப் போகுமுன், கணையாழியில் உதவிஆசிரியராக இருந்தபோது வெளிவந்தது. அதன் பிறகு மூன்று தொகுப்புகள் வந்துவிட்டதாக அறிகிறேன். அருமையான கவிஞன். ஆனால், “ஒற்றை நாணயம்“தான் அவரை வெளிக்கொண்டுவந்தது. பிறகு வந்த “மன்மத ராசா“ எங்கேயோ கொண்டுபோய்விட்டது... இன்னொரு வைரமுத்துவாக வரக்கூடும், இன்னும் வற்றாமல் இருப்பது கூடுதல் பலம். தங்கள் பதிவுக்கு நன்றி.

முனைவர். வா.நேரு said...

வணக்கம். தோழரே! தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும். "உருப்படியா எழுதுறீங்கய்யா" -ஊக்கமூட்டும் வார்த்தைக்கள்,நன்றி. தோழரே !..