7.7.2013 , ஞாயிற்றுக்கிழமை , காலை 10 மணியளவில் திருச்சி உறையூரில் உள்ள கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாழ்க்கைத்துணை ஏற்பு விழா மனதிற்கு மிக நிறைவு தந்த விழாவாக அமைந்தது. அகில இந்திய நாத்திகக்கூட்டமைப்பின் தலைவர் பேரா. ந்ரேந்திர நாயக் அவர்களின் உதவியாளர் -தமிழகத்திற்குள் நரேந்திர நாயக் வரும் நேரமமெல்லாம் அவரோடு இருந்து, அவரின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியையும் கற்றுக்கொண்டு செய்து , மூட நம்பிக்கை ஒழிப்பில் பணியாற்றும் தோழர் திருச்சியை சேர்ந்த செ.காளிமுத்து. . அவரின் திருமணம் எனது (வா. நேரு ) தலைமையிலும் பேரா. நரேந்திர நாயக் அவர்களின் வாழ்த்துரையோடும் நடைபெற்றது. திவ்யா- இளவரசன் இணைந்து வாழ முடியாத ஒரு கேடு கட்ட சமூகம் சார்ந்த சூழலில் , அந்தச்சமூகத்தை எதிர்த்து நடைபெற்ற திருமணம். பிற்படுத்தப்பட்டவரும் தாழ்த்தப்பட்டவரும் மணமக்களாக மன்றத்தில் இணைந்து பல பேர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட திருமணம். ஆதியிலே இல்லையடா இந்த சாதி, பாதியிலே வந்த கேடு இது என்பதனையும் தாழ்த்தப்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் மணமக்களாக இணைந்து வாழக்கூடாதா? எத்தனை தோழர்கள் எடுத்துக்காட்டாக வாழ்கின்றார்கள் என்பதனை மன்றத்தில் எடுத்துச்சொல்ல வாய்ப்பாக அமைந்த துணை ஏற்பு விழா .
தோழர் காளிமுத்துவின் தாயார் மட்டும் விழாவில் பங்கேற்றார். தந்தை பங்கேற்கவில்லை. தோழியர் கல்பனாவின் தாயும் தந்தையும் விழாவில் , மேடையில் பங்கேற்றனர். வரவேற்புரையை தோழர் ஸ்டாலின் முடித்தவுடன் தலைமை உரையாக எனது உரை ஏறத்தாழ 40 நிமிடங்கள் அமைந்தது. தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய சுய மரியாதைத்திருமணம் வரலாறு என்னும் புத்தகத்தின் பகுதிகளை, சாதி என்னும் சகதியில் இன்னும் உழல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்த நிலை -மாற வேண்டாமா ? என்பதனை எல்லாம் சொல்ல வாய்ப்பாக அமைந்தது. தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாங்கள் , சொல்பவர்கள் மட்டுமல்ல, சொல்வதை செய்பவர்கள் நானும் என் துணைவியார் நே.சொர்ணமும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோம், 20 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள்தான் சனிக்கிழமை நடத்தி வைத்தார்கள் . . நானும் என் துணைவியாரும் எதில் குறைந்து போனோம், எவருக்குத் தாழ்ந்து போனோம் ? எனக்கேட்டு தர்மபுரி ஊமை ஜெயராமன்- தகடூர் தமிழ்ச்செல்வி சாதி மறுப்புத்திருமணம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் செய்து கொண்டார்கள், பிள்ளைகள் எல்லாம் டாக்டராக பெரிய பதவிகளில், எத்தனை பேருக்கு கிராமத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் கல்வி மற்றும் உதவி அளிக்கப்படுகின்றது. தாங்களும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவும் இவர்களைப் போன்றவர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தவறா? இதைப் போல ஆயிரக்கணக்கான கறுப்புச்சட்டைத் தோழர்கள், தோழியர்கள் ,பொது உடமை இயக்கத் தோழர்கள் களப்போராளிகளாக, ஜாதி ஒழிப்புப்போராளிகளாக இருந்தார்கள், இருக்கின்றார்கள்,இருப்பார்கள். . அதில் இன்று தோழர் செ.காளிமுத்துவும் ,ந. கல்பனவும் இணைந்திருக்கின்றார்கள் போன்ற செய்திகளையும் சொல்லி ஜாதகம், சோதிடம் போன்ற மூடத்தனத்தின் முடை நாற்றம் ஊடகங்கள் வாயிலாக ,தொலைக்காட்சி வாயிலாக வீட்டிற்குள் வரும் கொடுமைகளைச்சொல்லி சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்பதனை எடுத்துக்கூற முடிந்தது.
மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை எளிய முறையில் பேரா. நரேந்திர நாயக் அவர்கள் மன்றத்தில் செய்துகாட்டினார்.அவர் செய்து முடித்த போது ஆச்சரியமாகப் பார்த்த கிராமத்து மக்கள், அது எப்படி நிகழ்ந்தது என்னும் விளக்கத்தைக் காட்டியபோது கைதட்டி வரவேற்றனர். சாய்பாபா செய்த அற்புதங்கள், மாதா அமிர்ந்தானந்த மாயி , சூடாமணியாக இருந்தவர் எந்த தந்திரத்தின் மூலம் பிரபலமானார் போன்ற பல செய்திகளைக் கூறி மந்திரமா ,தந்திரமா நிகழ்ச்சிகளை செய்து காட்டினார். மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக இருந்தவர், விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு மாநிலம் மாநிலமாக தொடர்ச்சியாக பயணித்து, பல மொழிகளைக் கற்றுக்கொண்டு (கன்னடம், ஆங்கிலம் ,இந்தி, மலையாளம், தெலுங்கு,தமிழ் ....) அந்தந்த மக்களின் மொழியில் நிகழ்ச்சிகளை நடத்தும் தோழர். திரு நரேந்திர நாயக் அவர்கள் . ஏறத்தாழ 1400 கி.மீ(போக-வர ) பயணம் செய்து இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. தொடர்ந்து தோழர்கள் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கொராடாச்சேரி ஒன்றியச்செயலாளர் தோழர் கா.ஜெயபால், , திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் த்லைவர் மு.நற்குணம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ம.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை மணமக்களுக்குச்சொல்லி, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா தாலியில்லாத, வரதட்சணை இல்லாத, நல்ல நேரம், ஜாதகம் பார்க்காத சாதி மறுப்புத் திருமணம் என்பதனைச் சொல்லி தோழர் செ.காளிமுத்துவை, தோழியர் ந.கல்பனாவை அவரது பெற்றோரைப் பாராட்டினர்.
வாழ்க்கைத் துணை ஒப்பந்த உறுதி மொழியினை நான் கூற , அதனைத் தொடர்ந்து கூறி தோழியர் ந.கல்பனாவும்(பெற்றோர் மு.நடராசன்-அஞ்சம்மாள்,மணக்கால்,திருவாரூர் மாவட்டம்) தோழர் செ.காளிமுத்துவும்(பெற்றோர் அ.சென்னிமலை- நாச்சம்மாள், இடையன்வலசு திண்டுக்கல் மாவட்டம்) மாலை மாற்றி வாழ்க்கைத் துணைவர்களாக ஆகிக் கொண்டனர். இரண்டு மூன்று நிமிடத்தில் முடிந்த வாழ்க்கைத்துணை உறுதி ஏற்பு விழா. இந்தத் திருமண முறையை தொடங்கியவர் தந்தை பெரியார், சட்டப்படியாக செல்லுபடியாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்க்ள். அவர்கள் இருவருக்கும் நன்றி கூறி , மணமக்களை வாழ்த்தி அன்பும் , தொண்டறமும் உடையவர்களாக வாழுங்கள் என வாழ்த்தினேன்.
முடிவில் தோழர் காளிமுத்து நன்றியுரை வழங்கினார். எனது உறவினர்கள், தந்தை முதலியோர் வராதது எனக்கு வருத்தம்தான். ஆனால் வரமாட்டேன் என்று சொல்கின்றார்கள் என்பதற்காக நான் பின் வாங்குவதில்லை என்று முடிவு செய்தேன். அய்யா நேரு போன்றவர்கள் எங்க்ளைப் போன்றவர்களுக்கு அதில் முன் உதாரணம் எனக்குறிப்பிட்டு நெகிழ்வான நன்றியுரை வழங்கினார். நன்றாக வாழ்ந்து காடடுவதுதான் சரியான பதில் என்பதனை வாழ்த்திய அனைவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். வாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக என உறுதி கூறினார். மொய் வாங்காதது மட்டுமல்ல, மொய்க்கவரோடு வந்த பலரை, தயவு செய்து மொய்யைத் திருப்பிக்கொண்டு போய்விடுங்கள் எனத் திருப்பி அனுப்பியது இந்த ஒப்பந்த விழாவின் கூடுதல் சிறப்பு. என்னைச்சுற்றி அலுவலகத்தில் இருக்கும் பல தோழர்கள், தோழியர்கள் சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டவர்கள்,சிலர் மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அம்மி பார்த்து, அருந்ததி பார்த்து சொந்த ஜாதியில் திருமணம் முடிதத பல பேரை விட ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் நன்றாகத் தான் இருக்கின்றார்கள். இன்னும் கேட்டால் சொந்த ஜாதியில் மணம் முடித்த பல பேர் , ஜாதியை விடுத்து வேறு ஜாதியில் திருமணம் முடித்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் நன்றாக படிக்கின்றார்கள் , நல்ல வேலைக்கு போகின்றார்கள் என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றேன் .
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங்கோவன், திருச்சி மாநகர மாவட்ட பகுத்தறிவாளர் கழக்த் தலைவர் ப.லெ.மதிவாணன், மு.குத்புதின்(தனது பெண் குழந்தைக்கு தஸ்லிமா நஸ்ரின் எனப் பெயர் வைத்துள்ளவர்), ஜோ.பென்னி(பகுத்தறிவாளர் கழக நகரச்செயலாளர்), பெரியார் பெருந்தொண்டர் அ.கணபதி, பெரியாரின் உதவியாளராக இருந்த சி.மகாலிங்கம், பி.மலர் மன்னன், திருச்சி நகர தி.க. தலைவர் அ.ஜெயராஜ், நகர அமைப்பாளர் விடுதலை செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் தீன தயாளன், எஸ்.மணியன், எஸ்.பி. கனகராசு, ஆறுமுகம் எனத் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழக்த் தோழர்கள், ந.கல்பனாவின் தந்தை மு. நடராசன் , ஊராட்சி மன்றத் தலைவர், மணக்கால்,- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பொதுவுடமை இயக்கத்தோழர்கள் செ.காளிமுத்துவின் நண்பர்கள் கூட்டம் ,உறவினர்கள் என அரங்கம் முழுமையாக இருந்து சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஆதரவு அளித்த விழா. வாழ்க மணமக்கள் !.
1 comment:
வாழ்த்துக்கள் தோழர்களுக்கு
https://www.facebook.com/thamizharuravinmurai
சாதியற்ற சமுதாயம் படைக்க இணைவீர்
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களும் அவர்களின் வாரிசுகளை மட்டும் இணைக்கும் முகநூல்
நன்றி வணக்கம்
Post a Comment