Thursday 30 January 2014

புத்தகப் பார்வை -1

புத்தகப் பார்வை என்னும் பகுதியில் "நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல் " என்ற தலைப்பில்  பிப்ரவரி -1-15, 2014 -இதழில் வெளியிட்ட உண்மை மாதம் இருமுறை இதழுக்கு என் நன்றி .  


நூலின் தலைப்பு : திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே !
                   தந்தை பெரியார் கருத்துகள் பற்றி  ஓர் ஆய்வு
நூல் ஆசிரியர்     :   சு.அறிவுக்கரசு
வெளியீடு             :    விழிகள் பதிப்பகம், சென்னை-41 -9444265152/9444244017
முதல் பதிப்பு       :    2013      பக்கங்கள்           :     256  விலை ரூ 160 

                              

       திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு புதிய நோக்கு என இந்த நூலைசொல்லலாம். நூலின் உள்ளடக்கம் பதிமூன்று தலைப்புகளில் உள்ளது. 'திராவிடர் ' என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை 'தொடங்கும் முன்' விளக்கும் இந்த நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக் எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை  தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டிய்லிடுகின்றார். 'தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை , பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? ' அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56 ) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை  ,மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை  'தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில் ,திருமணம் ,நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை '  எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.
                                 வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படி திருப்பம் அடைந்தது என்பதனை 'திருப்பு முனை ' என்னும் அத்தியாயத்திலும், தந்தை பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரித்து ' பார்ப்பனரல்லாதாருக்காக, சுயமரியாதைச் சமதர்மக்காரராக, நீதிக்கட்சிக்காரராக, திராவிடராக ' எப்படியெல்லாம் அவரின் கொள்கை நோக்கும் அதற்கான நடைமுறை ஆதரவும் எதிர்ப்பும்  அமைந்தது என்பதனை ஆதாரப்பட்டியல்களோடு அடுக்குகின்றார், விளக்குகின்றார் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள். காமராசர் ஆட்சிக்கு தந்தை பெரியார் கொடுத்த ஆதரவை , அன்றைய நிலைமையை 'முதல் எட்டு ஆண்டுகளில்' என்னும் தலைப்பில் விளக்குகின்றார். 'அண்ணாவின் வெற்றி' என்னும் தலைப்பில் 'தேனிலவு முடிந்து விட்டது' என்று ராஜாஜி சொன்னதையும். 'ஆம்,குடும்ப வாழ்க்கை தொடங்கிவிட்டது ' என்று அண்ணா சொன்னதையும் குறிப்பிட்டு , அண்ணாவிற்கு தந்தை பெரியார் தந்த ஆதரவை, அன்றைய நிகழ்வுகளை விரிவாகக் கொடுத்து, இன்றைய தலைமுறைக்கு ஆவணங்களாகக் கொடுத்துள்ளார். 'பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917-ல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (Principles) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச்செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமது நடைமுறைகளை ,அணுகுமுறைகளை,செயல்திட்டங்களை(Polices) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச்சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கயாண்டார் . சமூக நீதிக்காக- பார்ப்பனர் அல்லாதார் சமுகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செய்ல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர - உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச்செல்வதற்காக மாற்றினாரே தவிர- அவர் மாறவே இல்லை! " பக்கம் 239 -ல் நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக  இந்த நூல் அமைந்துள்ளது. பின் இணைப்பாக சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும், மத்திய திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி தலைவர் வேதாசலம் அவர்களும் விடுவித்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளின் உண்மைத் தன்மை, இன்று 67 ஆண்டுகளுக்குப் பின்னாலும் படிப்பவர்களையும் சுடுகின்றது. 
                              'திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி ' என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து , தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான் ,இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி ,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலை நிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால- மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவரது ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை,,குழப்புவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோர்க்கும்  தருவதாக அமைந்துள்ளது......

                         படித்துப் பயன்பெற வேண்டியவர்கள் இன்றைய இளைஞர்களும் , இனி வரும் தலைமுறையும்.
சிறப்பாகப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி, திராவிடர் சமுதாயத்தின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அதற்குப் பெரியாரின் சிகிச்சை எந்தெந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை மிக அருமையாக விளக்கும் தொண்டுக்கு நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ' என்று திராவிடர் கழகத்தின் தலைவர் , அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் வைரக்கற்களாய் பதித்துள்ள சொற்கள் ,நூலின் மேன்மையை, நூலாசிரியரின் தொண்டினை சிறப்பிக்கின்றன.

                             'யானை பள்ளத்தில் விழும்போது தவளை கூட ஓர் உதை உதைக்கும் ' என்றார் இங்கர்சால். திராவிடர்கள் என்னும் யானை பார்ப்பனர்கள் விரித்த  மூடப்பள்ளத்தில் விழுந்ததால் மொழியால், இனத்தால் வீழ்ச்சியுற்று, பார்ப்பனத்தவளைகள் எல்லாம் உதைக்கும் ஓர் இனமாய் , ஏமாற்றப்படும் இனமாய் இருந்தோம்.. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் , நாம் யானை பலம் கொண்டவர்கள் என்பதனை உணர்த்திய தந்தை பெரியாரின் உழைப்பை, உண்மையை, அர்ப்பணிப்பை,தியாகத்தை, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றிய அடலேறுத் தன்மையை   இன்றைய்  தலைமுறை உணர்ந்து கொள்ளும். . இன்றைய தலைமுறையும் ,இனிவரும் தலைமுறையும் தந்தை பெரியாரின் இயக்கத்தை, திராவிடர் கழகத்தை  உணர்ந்து கொள்ள உதவும் ஆய்வேடு இந்தப் புத்தகம். படியுங்கள், பரப்புங்கள் தோழர்களே.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் படிக்கின்றேன் ஐயா

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா !

தமிழ் ஓவியா said...

மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று அய்யா, நூல் விமர்சனம் மிகச் சிறப்பு. நன்றி

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே ! .