Friday, 31 October 2014

திராவிடர் கழகச்செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு பவழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்: :

அறிவுக்கரசு.சு.

நிகழ்வும் நினைப்பும் (25)  -திராவிடர் கழகச்செயலவைத்தலைவர்  அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு பவழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்:  :


                                   திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் , அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் (01.11.2014) இன்று. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் இருந்தபொழுது, நான்  மாநிலப்பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலராக நியமிக்கப்பட்டேன். பின்னர அய்யா குடந்தை தி.இராசப்பா அவர்கள் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் நான் 2005-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டேன். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணிக்கு அடுத்த நிலையில் இருந்த   அய்யா பொருளாளர் கு.சாமிதுரை, அய்யா கு.வெ.கி.ஆசான் போன்றவர்களிடம் மரியாதையும் ,அன்பும் உண்டெனினும், நெருங்கிய  நட்பு ரீதியான தொடர்பு இல்லை. அய்யா சு.அறிவுக்கரசு அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு மூத்த நண்பரைப் போலப் பழகினார்.இப்போதும் பழகுகின்றார்.எனக்கு கிடைத்த மிகப்பெரிய நட்பாக, திசைகாட்டியாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ளின் நட்பு அமைந்தது.

                                         பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பதற்காக, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலில் நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக வரும் சுற்றுப்ப்பயணத்தை அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ள் மேற்கொண்டார். அவரோடு நாகர்கோவிலில் இருந்து நானும் அந்தப் பயணத்தில் உடன்வந்தேன். பல ஊர்களில் கருத்தரங்குகளும் நடைபெற்றன. பல ஊர்களில் நானும் பேசினேன். 2002-03-ல் நடந்த அந்தக் கூட்டங்களில் எனது பேச்சைக் கூரிமையாக கவனித்து பல்வேறு ஆலோசனைகளை அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ள் அளித்தார்கள். " பேச விரும்பினால் நிறையப் புத்தகங்கள் படிக்கவேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு நோட்டுப் போடவேண்டும். 40,50 வருடமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் நான் தயாரிப்போடுதான் போகின்றேன் . தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி,திராவிட இயக்க வரலாறு ...என்று பல தலைப்புக்களுக்கு நோட்டு போட்டு எழுதுகின்றேன். அதனைப்போல் நீங்களும் செய்ய வேண்டும் " என்றார். மிகப்பெரிய வழிகாட்டுதலாக இருந்தது. அவரின் வழிகாட்டுதல்  ஒவ்வொரு முறையும் பேசி முடித்தபின்பு , அன்றைக்கே எனது பேச்சின் நிறை,குறைகளைச்சுட்டிக்காட்டுவார். நான் பேசுவதைவிட, அவர் பேச்சைக்கேட்கப்போகும் கேட்பாளானாக விரைவில் மாறிப்போனேன். தொடர்ந்து பேசிவந்தாலும், முதல் கூட்டத்தில் பேசியதை அப்படியே பேசும் பேச்சாக அவரின் பேச்சு  இருக்காது. ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய புதிய செய்திகள், புதுக்கோணத்தில் பல்வேறு செய்திகளைச்சொல்வதாக அவரின் சொற்பொழிவு இருக்கும் இன்றுவரை அவரின் உரைவீச்சு அப்படித்தான் புதிய கோணத்தில், புதிய செய்திகளைச்சொல்லும் உணர்ச்சிமிக்க உரையாகவே இருக்கிறது. தனது உரையில் புரட்சிக்கவிஞரின் கவிதைகளை பெரும்பாலும் நிறைய இடங்களில் உபயோகப்படுத்துவார்.  எனது பேச்சைக் கேட்கும் தோழர்கள் நிறைய புதிய செய்திகளைக்கூறும் சொற்பொழிவாக எனது சொற்பொழிவு இருந்தது எனக்குறிப்பிடுவதுண்டு. அதற்குக் காரணமாக அமைந்தது அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் தொடர்பும், அறிவுரைகளும். .

                            சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, 'படித்த பார்ப்பன ந்ண்பரே ' என்னும் கவிதையை எழுதி, விடுதலை ஞாயிறு மலருக்கு அனுப்பினேன். அப்பொழுது விடுதலையில்   இருந்த அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் அதனை வெளியிட்டதோடு, 'உங்களுக்கு  இந்தப் புதுக்கவிதை வடிவம் நன்றாக வருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்  ' என்று வழிகாட்டினார். அதிலிருந்து நிறையத் தொடர்ச்சியாக பல கவிதைகளை எழுதி  விடுதலை ஞாயிறு மலருக்கு அனுப்பினேன். வெளிவந்தது. பின்னர் அந்தக் கவிதைகளை எல்லாம் 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் தலைப்பில் வெளியிட்டோம். அந்தக் கவிதை நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை வழங்கினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மதிப்பிற்குரிய அய்யா சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு ஒரு நூலாசிரியர் என்னும்  பெயர்  பெற்றேன். அதனைப்போலவே 'எழுத்து 'இணையதளத்தில் எழுதி வெளிவந்த எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு  நூலான 'சூரியக் கீற்றுகள் 'கவிதைக்கும் அணிந்துரையை பாராட்டுரையாக  எழுதி அளித்தார். அடுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்போகின்றேன். என்றேன். கொடுங்கள், அணீந்துரையை எழுதித்தருகின்றேன் என்றார். மிகவும் உரிமையோடும் தோழமையோடும் தனது இயக்கத்தோழரான எனக்கு,  எனது  புத்தகங்கள்  வெளியீட்டுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் விளங்குகின்றார்.  

                        தனிப்பட்ட வாழ்விலும் என் மேல் மிகப்பெரும் அன்பைச் செலுத்துபவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள்.சில நேரம் எரிமலை போல பொங்கிவிடுவார் , அதனால் பல பேர் அவரிடம் நெருங்கவே பயப்படுவதுண்டு. ஆனால் அவர் ஒரு பலாப்பழம் போல. வெளிப்பார்வைக்கு கரடுமுரடானவர் போலத்  தோன்றினாலும் பொங்கும் அன்பாலும் , அனுபவமிக்க வழிகாட்டுதலிலும் பலாச்சுளையைப் போன்றவர் அவர். எப்போதும் உரிமையோடும் , நட்போடும் ,உணமையோடும் பழகுபவர்களுக்கு அவர் பலாச்சுளைதான். ஆனால் தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் எரிமலைதான்  . புரட்சிக் கவிஞரின் ஊரான புதுச்சேரிக்கு பக்கத்து ஊரான கடலூரைச்சார்ந்தவர் என்பதாலோ என்னவோ புரட்சிக் கவிஞரைப் போலவே பல விசயங்களை நேருக்கு நேராகவே பட்டென்று சொல்லிவிடுவார். 2, 3 ஆண்டுகளுக்கு முன்னால் , அலுவலகப்பணியை விட்டுவிடப்போகிறேன்(வி.ஆர்,எஸ்) என்றேன். எதற்கு என்றார் . சில செய்திகளைச்சொன்னேன். "பையன் படித்து வேலைக்குப் போய்விட்டானா ? பொண்ணு படித்து வேலைக்குப் போய் திருமணம் முடிந்ததா "? " என்றார். எனது குடும்பத்தை நன்றாக அறிந்தவர், என்ன இப்படிக் கேட்கிறாரே என்று நினைத்துக்கொண்டு ".பிள்:ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருக்கின்றார்கள்". என்றேன். "அது தெரியும் எனக்கு, . என்னவோ குடும்ப பொறுப்பு எல்லாம் முடிந்ததுமாதிரி, வி.ஆர்.எஸ்.என்று பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். ஒழுங்காக அலுவலகத்திற்கு சென்று வேலையைப் பாருங்கள்" என்றார். "வேலைக்குப் போய்வந்து மீதமிருக்கும் நேரத்தில் மற்ற வேலைகளைப் பாருங்கள். போதும், போதும்" என்றார். அத்தோடு எனது வி.ஆர்.எஸ். பேச்சு  முடிந்தது. 

                 இன்னும் நிறைய் செய்திகளை எழுதலாம். கடலூரில் உள்ள அவரது வீட்டிற்குப் போயிருக்கிறேன். மாடி முழுவதும் புத்தகங்களாக இருக்கும் . புத்தகம் என்றால் மிக அரிதான புத்தகங்கள், அதிக விலை உள்ள புத்தகங்கள். ஆனால் எல்லாம் ஒழுங்காக இருக்கும் . எளிதில் தேடி எடுக்க வசதியாக இருப்பதாக இருக்கும் . இதனை நான் நடைமுறைப்படுத்தவேண்டும். அதனைப் போல உயர் அரசு அதிகாரியாகப் பணியாற்றியதாலோ என்னவோ, டாக்குமெண்டேசன் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் . பைல் , பைலாக பிரித்து பிரித்து வைத்திருப்பார். சாதாராண தோழரிடமிருந்து வந்த 50 பைசா கடித்த்தைக்கூட மிகக் கவனமாக பைலில் நம்பர் போட்டுச்சேர்த்திருப்பார். மிகப்பெரிய ஞாபகசக்தி உடையவர். பல்வேறு வரலாற்றுத்தகவல்களை, நாள் அன்று என்ன கிழமை என்பதையெல்லாம் கூறுவார். வியப்பாக இருக்கும். ஆங்கிலத்திலும் மிக அருமையாகப்பேசுவார். தொழிற்சங்கத்தில் தமிழகத்தின் தலைவராக திரு.சிவ.இளங்கோ அவர்களுக்குப் பின் இருந்தவர். அவரின் தொழிற்சங்க அனுபவங்களும், விழுப்புணகளும் ஒரு நூலாக ஆக்கும் அளவுக்கு விரிவானவை, நிறைய நகைச்சுவை  உணர்வு கொண்டவர். 

                       தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஊர்க்காரர் என்பது மட்டும்ல்ல, அவரின் மிகப்பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் திகழ்கின்றார். 'பெரியாரின் பன்முகம்' என்னும் நூலில் ஆரம்பித்து இதுவரை 15 நூல்களை ஆக்கியுள்ளார். எல்லா நூலும் பெரியாரியல் அடிப்படையில் அமைந்தவை. படிப்பவனிடம் சுயமரியாதை உணர்வை ஊட்டும் வல்லமை பெற்றவை. பேருக்காக எழுதுபவராக இல்லாமல், பரம்பரைப் பகைவர்களின் போருக்காக எழுதுபவராக இருக்கின்றார்.நவம்பர் 8-ந்தேதி கடலூரில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் 75-ஆம் ஆண்டு பவழ விழா நடைபெறுகின்றது. அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்காக வெளியிடப்படும் மலரில் அவரது எழுத்துக்கள் பற்றிய கட்டுரை- எனது கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. அவரது எழுத்தின் வலிமை , துணிவு பற்றி அதில் விரிவாக எழுத வாய்ப்புக்கிடைத்தது. எழுதியிருக்கிறேன். வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பாருங்கள். 

                       இன்று பவழ பிறந்த நாள் காணும் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் 100 ஆண்டையும் கடந்து வாழவேண்டும். வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்னும் நூல்கள் பல படைக்க வேண்டும் . வய்தாக வயதாக தந்தை பெரியார் குரலைப் போலவே அய்யா அறிவுக்கரசு அவர்களின் குரலும் இருக்கிறது. தந்தை பெரியார் வாழ்ந்த காலம் தாண்டி  அவரின் குரலில் , தந்தை பெரியாரின் கருத்துக்களைப் பரப்புவார். நாம் பார்ப்போம்

                        அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு பவழ பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

                                   வாழ்க தந்தை பெரியார், வாழ்க தமிழர் தலைவர் கி.வீரம்ணி, வாழ்க பவழ விழாக்காணும் அய்யா சு.அறிவுக்கரசு, வாழ்க பகுத்தறிவு. .


                     

5 comments:

Yarlpavanan said...

எமது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
தொடருங்கள்

Unknown said...

பவழ விழாக்காணும் அய்யா அறிவுக்கரசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா.

முனைவர். வா.நேரு said...

நன்றி செந்தில் ...

Thamizhan said...

அய்யா அறிவுக்கரசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!