Sunday 1 May 2016

01.05.2016 மே தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி.'நீயா ? நானா ? '


01.05.2016 மே தினத்தை முன்னிட்டு விஜய் டி.வி.யில் கோபிநாத் ஒருங்கிணைத்த போராட்டங்களை பற்றிய 'நீயா ? நானா ? ' விவாதத்தை பார்த்தோம். போராட்டங்களை ஆதரிக்கின்றவர்கள் ஒருபக்கமும், போராட்டங்கள் தேவையில்லை என எண்ணுகிறவர்கள் ஒரு பக்கமும் நடைபெற்ற விவாதம் எதார்த்தமாகவும், விறு விறுப்பாகவும் இருந்தது மகிழ்ச்சியளித்தது.

'அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போடாது , அநீதி களைய முடியாது ' என்பது போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கம். ஆனால் அநீதியைக் கண்டாலும் அமைதியாக போவதற்கான வழிகளை எப்படியெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதனை  பங்கு பெற்றவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
               தான் படித்த பொறியியல் பட்டம் கொடுத்த நம்பிக்கையும், நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது பறி போய்விட , பள்ளியில் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கைதான் பெட்டிக்கடையை வைத்து பிழைப்பதற்கோ, விவசாயம் செய்து பிழைப்பதற்கோ நம்பிக்கை தருகிறது என்று சொன்ன ஒருவரின் உடல் மொழியோடு கூடிய விவாதம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்படவேண்டியது.

மூன்று தொழிற்சங்கங்கள் தங்களது பிரச்சனைகளைத் தீர்க்காத நிலையில் , கேரளா தேயிலைத்தோட்ட தமிழ்ப்பெண்களின் போராட்டமும் ,அதில் பங்குபெற்ற கோமதி அவர்களின் பங்களிப்பும் மற்றும் அந்தப்போராட்டத்தை ஒட்டி விஜய் டி.வி. தனியாக காண்பித்த கிளிப்பிங்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. பாராட்டுக்கள் விஜய் டி.வி.க்கு. படிக்காத பெண்களின் ஒருங்கிணைப்பும் தன்னிச்சையான அவர்களின் எழுச்சியும் போராட்டமும்,. நான் இன்று செத்தால்கூட கவலையில்லை, எனக்கு பின்னால் வருகின்றவர்கள் நன்றாக இருப்பார்கள் என்ற அந்தப் போராட்ட பெண்மணி கோமதி அவர்களின் கூற்றும் மே தினத்திற்கு மிகச்சரியான அடையாளம் காட்டுவதாக அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

பேஸ்புக், டுவிட்டரில் லைக் போடுவதால் மாற்றம் வராது, களத்திற்கு வந்து நிற்கும்போதுதான் மாற்றம் வரும் என்ற செய்தி சொல்லப்பட்டது. ஆனால் களத்திற்கு அழைத்து வருவதற்கே சமூக ஊடகங்களின் பங்களிப்பை பல்வேறு நாட்டு நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன.பேஸ் புக்கும், டுவிட்டரும் இன்னும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கைகளுக்குப் போகவில்லை.

அண்ணல் அம்பேத்கர் இந்தியாவில் சாதிகள் இருக்கும்வரை புரட்சி சாத்தியமில்லை என்றார். இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும் வர்க்கமும் ஊடகங்களின் துணையோடு ஊதிப்பெருக்கும் ஜாதி,மத வேறுபாடுகளால் மிக எளிதாக தொழிலாளர்களைப் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அதிலும் உழைத்து மட்டுமே வாழும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதிலே வலது சாரி எண்ணம் கொண்டவர்களும உயர் ஜாதிக்காரர்களும்  மிகத்தெளிவாக இருக்கின்றார்கள் . சாதியை, சாதி உணர்வைச்சாகடிப்பதற்கான வேலைகளை தொழிற்சங்கங்கள் கையிலெடுக்கவேண்டும்.

நிகழ்வில் பேசிய கருத்தாளர் ராஜி அவர்கள், தான் 5 கண்டங்களில் வாழ்ந்திருப்பதாகவும் , புரட்சி நிகழ்வதற்கான அத்தனை ஏற்றத்தாழ்வுகளும் , வேற்றுமைகளும் இந்தியாவில் இருப்பதாகவும், ஆனால் 'விதி' க் கோட்பாடு அதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். உண்மைதான். விதியில் நம்பிக்கை கொண்டவர்கள்தான் ஆட்சியாளர்களாய், ஆட்சிக்கு துணை புரிபவர்களாய் இருக்கும் இந்த இந்திய துணைக்கண்டத்தில் புரட்சி என்பது அவ்வளவு எளிதாக நடக்க இயலும் காரியமல்ல.

 எழுத்தாளர் ஓவியா பேசும்போது தொழிற்சங்கங்கள் வெறும் கூலி உயர்வு மட்டுமே பேசி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாதது , இன்றைக்கு எதிர்வினை ஆற்றுகிறது எனக்குறிப்பிட்டார். அமைப்பு சார்ந்தவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு பெற்றதோடு திருப்தி அடைந்து கொள்வது தொடர்கிறது ஆனால் 85 % தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்கள், அவர்களை திரட்டுவதுதான் அடிப்படையை மாற்றும் என்ற நோக்கில் அவரது உரை அமைந்திருந்தது.

முதலாளிகள் வேலையில்லாத கூட்டத்தை வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்போதுதான் போராட்டங்கள் பலவீனமாகும் என்ற கருத்தை சொன்ன இன்னொரு சிறப்பு விருந்தினர் மார்க்கசிய அடிப்படை கோட்பாட்டிலிருந்து பேசினார்.  காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களின் நிலைமையைப் பற்றியும் மிக விரிவாக இந்த விவாதம் பேசியது.

தந்தை பெரியார் மே தினச்சிந்தனையில் ' உண்மையிலேயே இன்று யாரெல்லாம் தொழிலாளியாக இருக்கிறார்கள் என்றால் யார் சாதி,மதம், கடவுள், சாத்திரம் என்பதன் பேரால் சூத்திர மக்களாய்க் கீழ்ச்சாதிப் பிறவிகளாய் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள்தானே தொழிலாளர்களாக இருக்கிறார்கள் ' என்றார். உண்மைதான். இன்றைக்கும் 85 சதமாக இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் 99 சத வீதம் பேர் தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச்சார்ந்தவர்கள். பெரும்பாலும் கல்வி அறிவு அளிக்கப்படாதவர்கள் . ஆனால் மே தினத்தன்று நடந்த இந்த விவாதம்,  அமைப்பு சாரா தொழிலாளர்களான கேரளா தேயிலைத் தோட்ட பெண்களின் போராட்டம் ஒரு புதிய எழுச்சியைக் கொடுத்திருக்கின்றது.களத்தில் நின்ற கோமதி போன்ற பெண்களின் மன உறுதி ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கின்றது. அதனை ஊடகத்தின் வாயிலாக பரப்பிய 'நீயா ? நானா ? ' நிகழ்ச்சிக்கும் ஒருங்கிணைப்பாளர் கோபி நாத்திற்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ஒரு ஆள் கடைசிவரை போராட்டங்கள் தேவையில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவர் தோற்றமே 'விதி'யின் மேல் மிகு நம்பிக்கை கொண்டவர் போலத் தெரிந்தது. இப்படிப்பட்ட மனப்போக்குகளையும் அம்பலப்படுத்தியதும் நன்று. பாராட்டுக்கள்.   

No comments: